Showing posts with label நபர்கள். Show all posts
Showing posts with label நபர்கள். Show all posts

Wednesday, 14 May 2008

ஜெயகாந்தன்




நான் ஒவ்வொரு முறை மதுரைக்குப் போகும் போதும் தவறாமல் சர்வோதய இலக்கியப் பண்ணை புத்தகக் கடைக்குச் செல்வேன். எல்லா முறையும் மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்ட ஜெயகாந்தன் அவர்களின் படைப்பு ஏதாவது வாங்கி வருவேன். அது என்னவோ அவரது புத்தகங்களை அங்கே வாங்கினால் தான் ஒரு திருப்தி வருகிறது. இப்போது சென்னையில் இருந்தாலும் எப்போது மதுரை போய் புத்தகம் வாங்குவோம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன்

முன்னுரை படித்துவிட்டு சில நாட்கள் கழித்துதான் கதைக்குள்ளே போவது வழக்கம். காரணமிருக்கிறது. முன்னுரையில் கதையில் சொல்லாத சொல்ல முடியாத ஆனால் கதை வலுப்பெற சொல்லியே தீர வேண்டிய சங்கதிகளை முன்னுரையில் சௌகர்யமாகச் சொல்லலாம் என “பிரம்மோபதேச ” முன்னுரையில் சொல்கிறார்

பிரம்மோபதேசம் வெளியானது 1963ல். அப்போது அவருக்கு வயது 29. நான் பிறக்கவேயில்லை. நான் பிரம்மோபதேசம் முதலில் படித்தது 1994ல் அதாவது அந்த கதை வந்து 31 வருஷம் கழித்து. அப்போது எனக்குக் வயது 26. முதலில் படித்த போது நான் நினைத்துக் கொண்டேன். இந்த மனுஷன் இதை எழுதும் போது சுமார் நம் வயசுதான்; இவருக்கு மட்டும் இப்படி ஒரு பொறி எப்படி என்ற வியப்பு இன்று வரை சாஸ்வதமாய் இருக்கிறது.. பிரம்மோபதேசத்தில் இந்த வரிகளைப் பாருங்கள்,

“ஒரு சிறந்த மனிதன் தன்னைச் சுற்றி தானே அமைத்துக் கொள்ளும் அந்த வேலிக்குள் வளர்ந்து செழிக்கும் அவனது தனித்துவம் தான் பிற்காலத்தில் சமூகத்தையே ஆள்கிறது. சமூகத்தின் அழுகலிலிருந்து காப்பற்றப்படும் அந்த நெறியே பிறகு சமூகத்தின் சொத்தாகிறது”

ஒருவேளை தன்னைப் பற்றிதான் சொல்கிறாரோ எனத்தோன்றும். பிசகில்லை. ஒவ்வொரு அட்சரமும் அவருக்கு பொருந்தவே செய்கிறது

"ஒவ்வொரு கூரைக்கும் கீழே" யின் முன்னுரையில்

“சென்னை போன்ற வளர்ந்து வரும் தமிழகத்துப் பெருநகரங்களில், கூடி வாழ்தல் என்னும் பெரு நாகரிகத்தின் அடிப்படை போன்ற ஒண்டு குடித்தனக்காரர்களின் வாழ்கையை நான் வியந்து பயின்றிருக்கிறேன்”

அவருக்கு வயசாகிவிட்டது என்று சொல்கிறார்கள். இருக்கலாம். அந்த முறுக்கு மீசை இப்போது வெள்ளையாகிவிட்டது. கேசமும் தான்.

ஆனால் அந்த அகலமான கண்ணாடி அப்படியே. அதானால் அவர் பார்வையும் அப்படியே அகலமாய்த்தான் இருக்கும். அவர் இப்போது Active வாக எழுதுவதில்லை சுமார் 15 வருஷம் ஆகிவிட்டது என செய்தியாகச் சொல்கிறார்கள். லாபம் எனச் சொல்லலாம். பின்னே என்ன அவரை விட்டால் அவர் இன்னும் மெருகுடன் எழுதிக்கொண்டிருப்பார் அவருடன் யார் போட்டி போடுவது. அவர் தானாகத்தான், ”போதும் .. இளம் எழுத்தாளர்கள் கொஞ்சம் பயிற்சி எடுக்கட்டும் ” என எழுதுவதற்கு ரெஸ்ட் விட்டிருக்கிறார். ஒய்வில் இருக்கும் சிங்கத்தை ஆதர்சமாக பாருங்கள். சிங்கம் இப்படி நடக்க்கும், இப்படி கர்ஜிக்கும் என நாமும் கர்ஜிப்பது /நடப்பது எப்படி என பழகிப் பார்ப்போம். சிங்கத்தை சீண்டிவிட்டால் அது மீண்டும் வேட்டைக்கு கிளம்பினால்.. மற்றவர்களுக்கு ஏதாவது மிஞ்சுமா?

ஜேகே சார்... ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து கர்ஜித்து காமிங்க சார்

Saturday, 15 March 2008

சுஜாதா நினைவுகள்


குமுதத்தில் "கொலையுதிர் காலம்" வந்த சமயம். அவர் எங்கள் குடும்ப உறுப்பினர் ஆனார். குமுதம் வரும் நாள் மிக கவனமாக தொடரப்படும். அதைக் கொண்டு தரும் நபர் தெரு முனையிலேயே என் அண்ணனால் பெரும்பாலும் மடக்கபடுவார். இப்படி எங்களை ஆக்கிரமித்தவர் வெறித்தனமாக தேடி தேடி படிக்கப்பட்டார். தமிழ் இலக்கியத்தின் மீது எனக்கு இருக்கும் ப்ரேமையின் முகவரியாக சுஜாதா ஆனார். அவரைக்கொண்டே இலக்கிய அறிமுகங்களை செய்ய தொடங்கினேன்.



எனது மூத்த சகோதரி திருமணமாகி பெங்களூர் போனதும் அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு (பனசங்கரி தேர்ட்ஸ்டேஜ் ) சுஜாதா குடி வந்ததும் அவரை நேரில் சந்திக்க திருப்பதி ஸ்ரீ பாலாஜி செய்த கருணை. அந்த வீட்டில் தான் அவரை முதலில் சந்தித்தேன்.



நான், எனது அக்கா , என் அண்ணன் எல்லோரும் போனோம். அப்போது CMC கம்ப்யூட்டர் கம்பெனி அனுப்பிய ஒரு கோர்ஸ் சம்பந்தப்பட்ட தபால் ஒன்றை அவரிடம் காட்டி ஆலோசனை பெற என் அண்ணன் விரும்பினான். அவன் கையில் அந்த கவர்.



சுஜாதா சாரின் மனைவியுடன் ஏற்கனவே என் அக்கா அறிமுகம் ஆகியிருந்தார். ஆகவே அவர் எங்களை சாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். உடனே சார் அது என்ன சி. எம். சி கவர் என கேட்டார். அவரது கவனிக்கும் திறன் !!!. அதுவே கனேஷாக நம்முன் உலாவியது



"விக்ரம் படத்தில் கையாளப்பட்ட சில நையாண்டிகளை சொன்ன போது மெல்லிசாக சிரித்தார்.



"ரத்தம் ஒரே நிறம் " கதையில் காணப்பட்ட சில தகவல்அவரது தேடுதலை அதில் உள்ள தீவிரத்தை சொன்னது. புதுக்கோட்டை சம்பந்தமாக என் அண்ணன் சில குறிப்புகளை அவரிடம் கொடுத்து "இது சம்மந்தமாகவும் கதை எழுதுங்கள் சார்" எனச்சொன்ன போது அதை ஆமோதித்து தலை அசைத்து சிரித்தார்.



விடை பெறும்போது வாசல் வரை வந்து வழி அனுப்பினார்.


அவர் தினமும் அலுவலகம் போகும் நான் பார்ப்பேன். சிரித்து தலை அசைப்பார்



அதன் பிறகு நெடு நாள் கழித்து அவரை சென்னை புத்தக கண்காட்சியில் சந்த்திதேன். பேச முடியவில்லை.



ஆயினும் அவர் எங்கள் வீட்டுக்கு கட்டுரையாக , சிறு கதையாக , நாவலாக , கேள்வி பதிலாக , பாசுரமாக , ஹைக்குவாக, விமர்சனங்களாக வந்த வண்ணம் இருந்தார் . என் புரிந்து கொள்ளும் ஆற்றலின் மூலமே சுஜாதாவின் எழுத்து எனக்கு அளித்த கொடை. நான் பேசும் போது செய்யும் நையாண்டி கேலி ஜோக் எல்லாம் அவர் வசந்தாக தந்துவிட்டுப்போன ஜீவ சுவை.



எனது பத்து வயது மகளுக்கு அவரின் திருக்குறள் உரையிலிருந்தே சொல்லித்தருகிறேன் . அவளின் பல சந்தேகங்களுக்கு அவரின் " ஏன் எதற்கு எப்படியில் " இருந்தே பதில் சொல்லுகிறேன்



எனக்கு அவர் எப்போதுமே ஒரு விந்தை !! அதிசயம் !!.



அவர் தனி மனித ரசனைகளின் பிம்பம்.



அவர் ரசனைகளின் வழி விட்டுச்சென்றது வாசனை அல்ல சில காலம் கடந்த பின் மறைய !!! அவை ஜீவ சுவை !!!. அழிவில்லாத ஊற்று !!!



மனித பிறவியாக , ரங்கராஜனாக அவர் அந்த அரங்கனிடம் போனது நிஜம் . ஆனால் சுஜாதவாக இங்கே பூலோகத்தில் தமிழ் பேசும் எல்லோரிடமும் கலந்துள்ள அந்த வாத்தியாரை அரங்கனால் கவர முடியாது . இது அரங்கனே விரும்பி ஏற்கும் தோல்வி

Tuesday, 4 March 2008

சுஜாதாவும் நானும்

சுஜாதாவும் நானும் - இப்படி சொல்லிக்கொள்ள எனக்கு உரிமை இல்லை ! ஆனாலும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு முறை கணையாழிக்கு தமிழில் palindrome (இட வலமாகவும் வலஇடமாகவும் படித்தால் ஒரே மாதிரி வரும் வாக்கியம்) எழுதி அனுப்பினேன். அதை கடைசி பக்கத்தில் பிரசுரித்து என்னை கௌரவபடுத்தினார். அதனை தமிழில் மிக நீளமான palindrom என சுஜாதா சொன்னது மேலும் சந்தோஷம் !!! எனது கவிதைகளை மரபு உள் வட்டத்தில் சேர்த்துக்கொள்ள உள்ளதாகவும் எழுதியிருந்தார். அந்த கணையாழி இதழை SCAN செய்து அடுத்த போஸ்டிங்கில் வெளியிடுகிறேன்

சுஜாதா ! சுஜாதா !

நம்ப முடியாத செய்தி ! நம்பித்தான் ஆகவேண்டும் ! சுஜாதா காலமானார் ! எழுத்த்துக்களால் நம்மை ஆண்ட அவர் அவரை ஆண்டவரிடம் போய்விட்டார் ! இனி அவரை நினைவு கொண்டு நம் மனசை சமாதான படுத்திக்கணும்.