Saturday 14 February 2009

ஜனகணமன- நூல் விமர்சனம்


சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதம்- காந்தியின் கொலைக்கு புத்தக ஆசிரியர் மாலன் தந்திருக்கும் ஓர் அடைமொழி. ஆனால் சொல்ல மறந்த மொழி ஒன்று உண்டு.

இந்திய சுதந்திரத்துக்காக தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்ட அந்த மனிதன் தலைமையேற்றுப் பெற்றுத் தந்த சுதந்திரம் எந்த அளவில் இருந்தது என்றால், அந்த மனிதனைக் கொன்றவனுக்கும் தன் குரலைச் சொல்ல சந்தர்ப்பம் தந்து மேல் முறையீடு செய்வதற்கும் வாய்ப்பளித்து May It Please Your Honour எனத் தொடங்கி சுமார் 140 பத்திகளுடைய ஒரு நீண்ட வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வாய்ப்பளிக்கும் பொறுமை பெற்றதாய் இருந்த்து அந்த சுதந்திரம். அத்துனை நீளமான வாக்குமூலத்தைப் படித்தபின் கோட்சே நிச்சயம் மூச்சு வாங்கியிருக்க சாத்தியமுண்டு. வாங்கியிருப்பான். சுதந்திர இந்தியாவின் மூச்சுக் காற்று. அந்த 79 வயது கிழவரின் ஆன்ம மூச்சும் அந்தக் காற்றிலே கலந்து இருக்கும். அது கரைந்து போகும் மூச்சல்ல. ஆன்ம மூச்சல்லவா. பெரட்டா வகைத் துப்பாக்கி பிரசவித்த குண்டுகளில் சற்று நேரம் நின்று அந்த தேகத்தினுள்ளே உலாவிக் கொண்டிருந்த்தை துறந்து இந்த தேசத்தினுள்ளே வியாபித்து இன்னும் இருக்கும் மூச்சு. இன்னும் பல யுகம் இருக்கும் மூச்சு.. யுகங்கள் கடந்த் பின்னும் இருக்கும் மூச்சு.

எடுத்துக் கொண்ட வேலை புத்தக விமர்சனம். ஆனால் அதற்கு மேலே சொன்ன வியாஜ்ஜியம் புறம்பாக இருப்பது போலத் தோன்றலாம். ஆனால் ஜனகணமன என்ற நாமகரணம் கொண்ட இந்த குறுநாவல் மாலன் தன் மகன் சுகனுக்குச் சொன்ன பொலிடிக்கல் Fiction என்ற வருணனையோடும், மாலனின் வீட்டார் டைனிங்க் டேபிளில் காந்தியைப் பற்றி செய்த விமர்சனம் கலந்த உரையாடலுமான Preamble போன்றதான முஸ்தீபுகளும் நாமும் கொஞ்சம் அது மாதிரி பீடிகைகளோடு தான் இந்த விமர்சனத்தை தொடங்க வேண்டும் என்ற ஐடியாவை தந்ததையும் நேர்மையாக இங்கே சொல்லி விட வேண்டுமல்லவா அது தான்.


மாலன் தன் மகன் சுகனுக்குச் சொன்ன இந்த பொலிடிக்கல் ஸ்டோரியை மீண்டும் ஒரு கடிதத்துடனே நிறைவு செய்கிறார். ஆனால் தன் மகனுக்கு மட்டுமல்ல. இந்த புத்தகத்தைப் படிக்கும் எல்லோருக்குமே ஒரு தப்பான தகவலைச் சொல்கிறார். அது கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள். மாலன் தெளிவாக நவம்பர் பதினான்காம் தேதி என்று ஸ்பஷ்டமாக எழுதிருக்கார். ஆனால் கோட்சேயும் நாரயண ஆப்தே என்ற இன்னொரு குற்றவாளியும் தூக்கிலிடப்பட்ட்து நவம்பர் 15 1949.

இது ஒரு சின்ன சறுக்கல்தான் ஆனாலும் இந்த பொலிடிக்கல் ஸ்டோரியை சொல்வதற்கு தான் ரொம்பவே முயற்சி எடுத்துக் கொண்ட்தாக மாலன் முன்னுரையில் சொல்வதனால் இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம் எனச் சொல்ல வந்தேன்.

இந்த சின்னத் தகவல் இன்றளவில் கூகிளில் கோட்சே என்று தட்டினால் ஷண நேரத்தில் தகவல் வந்து விழுந்து விடும்.

சரிதான் விமர்சனம் என்றாலே குற்றம் கண்டுபிடிப்பது என்ற இலக்கணத்தில் இருக்கப் போகிறது என்று நினைக்க வேண்டாம்.

கதை இப்படித் தொடங்குகிறது

ரமணன் என்கிற போலிஸ் அதிகாரி ஒரு கனவு காண்கிறார். காந்தி கொல்லப்படுவதாக. தூக்கி வாரிப் போட்டு எழுந்து கொள்கிறார்.

சோம்பேறித்தனமாக இந்தப் புத்தகத்தை கையில் எடுக்கும் என் போன்ற ஆசாமிகளை டக்கென்று கதைக்குள்ளே தள்ளி வேக வேகமாக நகர்த்தி முற்றும் போட்டு நல்லா இருக்கே நடை என்ற திருப்தியுடன்(அந்த ஒரு திருப்திதான்) புத்தகத்தை மூட வைக்கிறார் மாலன்

கதை சொல்லும் சம்பிரதாயங்களில் தியேட்டர் டெக்னிக்கினைக் கையாண்டு கதை பல கோணங்களில் சொல்ல்படுகிறது. இழை துண்டாகமல் ஒட்ட வைத்திருக்கும் லாவகம் பிரமாதம்.


அவருடனே அத்தியாயம் அத்தியாயமாகப் பயணப்படலாம்

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் நடந்த கலவரங்கள். பாகிஸ்தானுக்கு 55 கோடி ருபாஉ இந்தியா தரவெண்டும் அதை முன்னிறுத்தி காந்தியின் உண்ணாவிரதம் இவற்றை சொல்லும் முதல் அத்தியாயம்.
காந்திக்கு 75 வயதாகிறது என்கிறார் மாலன். காந்திக்கு அப்போது வயது 79. காந்தியை ஒரு நாலு வயசு கம்மியாகப் பார்க்க மாலனுக்கு ஆசை.

இந்த 55 கோடி விவகாரத்தைப் பற்றிய சர்ச்சைகள் நிறைய உண்டு. கதை வடிவத்தில் இருப்பதால் அந்த சர்சைகளுக்கு மாலன் இடம் தராமல் கதையை நகர்த்திக் கொண்டு போவதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால் வரலாறு அல்லவா. ஜனவரி 13-1948 தேதியிட்ட இரண்டு அணா விலையிருந்த அன்றைய ”தி டைம்ஸ் ஆஃப் இந்தியா”வின் தலைப்புச் செய்தி

MAHATMA GANDHI STARTING FAST FROM TODAY


ஜனவரி 12 ம் தேதி மாலை காந்தியின் மாலை நேர வழிபாட்டு கூட்டத்தில் அவர் பேசியதை மேற்கோள்காட்டும் டைம்ஸ் அவர் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவே உண்ணாவிரதம் மேற்கொள்வதாகச் சொல்கிறது

காந்தியக் கொல்ல கோட்சே முடிவெடுக்கும் தருணத்தை சுருக்கமாகவும் கொஞ்சம் விறுவிறுப்பாகவும் சொல்லும் இரண்டாம் அத்தியாயம்.


நதுராம் கோட்சே, நாரயண ஆப்தே, மதன்லால், விஷ்ணு கர்க்காரே ஆகியோரைப் பற்றிய சுருக்கமான வரிகளில் சில நறுக் இருக்கவே செய்கிறது. ஆப்தேயைப் பெண் பித்தன் எனசொல்லி விட்டு வேகமாக மதன்லால் பாவா பக்கம் தாவுகிறார் மாலன். மதன்லாலின் பூர்விகத்தைப் பற்றிய சில வரிகளிலேயே இவன் ரொம்பவே தீவிரமான ஆசாமி என புரியவைக்கிறார் மாலன்


விஷ்ணு கர்க்காரே பற்றி ஹோட்டலுக்கு சொந்தக்காரன் என்று நிறுத்திக் கொள்கிறார்

இந்த நாலு பேரும் இன்னொரு முக்கியமான ஆசாமியைச் சந்திக்கும் தருணமும் இந்த அத்தியாயத்தில்.திகம்பர் ராமசந்திர பாட்கே.
“வித்தைக்காரனைப் போல வெளித் தோற்றமும் வேடிக்கைப் பேச்சுமாய் “ பாட்கேவுக்கு பொறுத்தமான வருணனை.
இந்த அத்தியாத்தின் ஹைலைட் நதுராம் கோட்சே காந்தியைக் கொல்ல ஜனவரி 20 1948 என நாள் குறித்துக் கொண்டு அதற்கான பயண ஏற்பாடாகா 17-ஜனவரி 1948 பம்பாயிலிருந்து டெல்லிக்குப் பயணிக்க ஏர் இந்தியாவில் தனக்க்கும் நாரயண ஆப்தேவுக்கும் விமான டிக்கெட் வாங்கும் சம்பவத்துடன் இந்த அத்தியாயம் முடிகிறது . நல்ல விறுவிறுப்புவிமானப் பயணக் கட்டணம் (இரண்டு டிக்கெட் அன்றைக்கு 308 ரூபாய்) வரை மிகச் சரியாக சொன்ன மாலன், கோட்சே தனக்கு S.MARATHE என்றும் நாராயண ஆப்தேவுக்கு DN KARMAKAR என்றும் போலி பெயர் கொடுத்து டிக்கெட் வாங்கியதையும் சொல்லியிருக்கலாம். அந்த டிக்கெட்களின் படம் இங்கே.

பம்பாயிலிருந்து டெல்லிக்குப் புறப்படும் முன்பு நடந்த சில ஆயத்தங்களைச் சொல்லும் மூன்றாம் அத்தியாயம். இங்கேயும் மாலன் சில ஆதாரங்களில் கவனம் செலுத்தவில்லை எனச் சொல்லலாம்.
நாராயண ஆப்தேவும் நதுராம் கோட்சேயும் ஹோட்டல் கிரீன் பேலஸில் ரூம் நம்பர் 212 ல் தங்கியிருந்ததாகச் சொல்கிறார் மாலன். ஆனால் அவர்கள் தங்கியிருந்தது SEA GREEN HOTEL ; அறை எண் 6. அந்த ஹோட்டலின் படம் இங்கே

ஹோட்டலில் நாரயண ஆப்தே தனது கேர்ள் பிரெண்ட் ரேணுவை தருவித்து அவளுடன் சல்லாபித்திருப்பதாக மாலன் சொல்கிறார். அந்தப் பெண்ணின் தந்தை பம்பாய் போலிஸ் இலாகாவில் சர்ஜனாகப் பணி புரிந்த டாக்டர் ஒருவரின் பெண் என்கிற அளவுக்கு விவரம் சேகரித்த மாலன், அந்தப் பெண்ணின் பெயர் MANORAMA SALVI என்பதை எப்படி கவனிக்கத் தவறினார் எனப் புரியவில்லை. பின்னர் நடந்த விசாரணயில் அந்தப் பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலம் இங்கே தந்துள்ளேன்.

ஆப்தே அந்தப் பெண்ணுடன் சல்லாபித்திருந்த தருணத்தில் கோட்சே ஓரியண்டல் லைஃப் இன்ஷூய்ரன்ஸ் கம்பெனியில் தனக்கிருந்த இன்ஷ்யுரன்ஸ் பாலிசிகளுக்கு வாரிசுகளை நியமித்துக் கொண்டிருந்ததாக சொல்கிறார் மாலன். கோட்சே அப்படி நாமினேட் செய்தது ஜனவரி 13-1948.(Reference No:1) அவனும் ஆப்தேயும் சீ கிரின் ஹோட்டலில் தங்கியிருந்தது ஜனவரி 14 முதல் 17 வரை. இங்கேயும் தேதியில் மாலன் கவனம் செலுத்தவில்லை

அத்தியாயம் நான்கு- அத்துனை சுவாரசியமான அத்தியாயமாக இல்லை. கொலையாளிகள் காந்தி தங்கியிருந்த பிர்லா மாளிகைக்கு வருவதில் முடியும் அத்தியாயம் இறுதி வரியில் திகம்பர பாட்கே அங்கே ஒரு ஒற்றைக் கண் மனிதனைப் பார்க்கும் ஒரு திகிலில் முடிச்சிட்டு நிற்கிறது.

கோட்சேயும் அவனது நண்பர்களும் காந்தி மீது 20-ஜனவரி-1948 நடத்திய முதல் கொலைத் தாக்குதலை மிகச் சுருக்கமாக அதே சமயம் விறுவிறுப்பாகவும் மாலன் விவரிக்கும் ஐந்தாம் அத்தியாயம்.
ஒரு ஜன்னல், கொலையாளிகள் கணக்கிட்டதை விட ஜாஸ்தி உயரத்தில் இருப்பதை கணக்கு வாத்தியார் ஆப்தே போட்ட திட்டத்தின் ஆரம்பமே சைபர் என்ற வார்த்தை சிக்கனத்தில் மாலன் சூழ்நிலையினைக் கண்முன்னே கொண்டு வருகிறார்.


கைக் குண்டு வீசி காந்தியைக் கொல்ல நடந்த அந்த முயற்சி, மாற்று ஏற்பாடுகளியும் நிறைவேற்ற இயலாத கொலையாளிகளின் ஏமாற்றம், மதன்லால் பாவா போலிசிடம் சிக்கியது; மற்றவர்கள் தப்பி ஓடியது என்று விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் இந்த சாப்டரை நகர்த்தும் மாலன், மாட்டிக் கொண்ட மதன்லால் பாவா மூலம் தங்களையும் போலிஸ் பிடித்து விடும் என கோட்சேயும் ஆப்தேவும் பயப்படும் ஒரு திகில் முடிச்சுடன் கொஞ்சம் மூச்சு விட நமக்கு சந்தர்ப்பம் தருகிறார்.

மாட்டிக் கொண்ட மதன்லால் பாவாவை போலிசார் விசாரிக்கும் சம்பவங்கள் ஆறாம் அத்தியாயம்.

இங்கே மதன்லால் பாவாவின் பேச்சு மூலம் அன்று நிலவி வந்த சூழலை மாலன் தத்ரூபமாக சொல்லியிருக்கிறார்.

மதன்லால் பாகிஸ்தானியனா என்ற போலிசின் சந்தேகத்திற்கு அவன் பதில், “ காந்தியைக் கொல்கிற அளவுக்கு பாகிஸ்தானிகள் பைத்தியக்காரர்கள் அல்ல. அவர்களுக்கு ஒரு தேசத்தை உருவாக்கிக் கொடுத்ததே அவர்தானே”

இந்தக் குற்றச் செயலில் இன்னும் சில பேர் இருக்கிறார்கள் என்பதை போலிஸ் யூகிக்கும் விதம் மாலனின் லாவகம்

“அரசியல் ? காந்தியைக் நீ கொல்ல விரும்பிய்தற்கு காரணம் அது தானா”

“ஆயிரக்கணக்கான பேர்களின் வயிற்றெறிச்சலை கொட்டிக் கொள்ளும் அவரின் செயல்கள் அரசியல் என்ற பெயருக்கு தகுதியுடைவைஎன்பது உங்கள் அபிப்ராயமானால், அப்படியே வைத்துக் கொள்ளலாம். நாங்கள் அவற்றை அந்த வார்த்தையால் அங்கீகரிக்கவில்லை”

“நீங்கள்?”

வாய்ச் சவடால் பேசப் போய், வார்த்தை தவறிவிட்டதை மதன்லால் உணர்ந்தான். இதோ ஒரு முக்கியமான தகவல் உதிர்ந்துவிட்டது. சே !

மதன்லாலைக் குடைந்த போலிசார், அவன் சகாக்கள் பழைய டெல்லி மெரினா ஹோட்டலில் ரூம் நம்பர் 40ல் தங்கியிருந்ததை தெரிந்து கொண்டு அங்கே விரைந்து போவதற்குள் கொலையாளிகள் திசைக்கொருவராயப் பறந்து விட்டனர் என்ற ஏமாற்றமும் சஸ்பென்சும் கலந்து ஒரு செகண்ட் நிற்கிறது இந்த அத்தியாயம். ஆனால் உடனே ஒரு குதிரை வேகத்தில் தொடர்கிறது. அறை எண் 40 காலி செய்து விட்டனர் கோட்சேயும் ஆப்தேயும். ஆனால் அந்த அறையில் போலிசுக்கு புதிய தடயம் கிடைக்கிறது.
மாலனின் வார்த்தைகள் அந்த தடயத்தை நறுக்கென்று சொல்கின்றன. “ பாகிஸ்தானுக்கு பணம் கொடுக்கச் சொன்ன காந்தியைக் கிழி கிழி என்று கிழித்திருந்த ஹிந்து மஹா சபையின் டைப் செய்த அறிக்கை. கையெழுத்துப் போட்டிருந்தவர் ஆசு தோஷ்லாகிரி. அதிலிருந்து லீட் கிடைத்து போலிசுக்கு ஒரு பத்திரிக்கையின் பெயரும் அதில் சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களின் பெயர்கள் கிடைக்கிறது. பத்திரிக்கை இந்து ராஷடிரா; அதன் ஆசிரியர் நதுராம் கோட்சே; பப்ளிஷர் ஆப்தே. போலிசுக்கு கோட்சேயும் ஆப்தேவும் வெறும் பெயர்களாக ஒரு புகை மூட்டம் போலத் தெரியவரும் இந்த இடத்தில் ஒரு கொக்கி போட்டு நிறுத்தியிருக்கலாம். ஆனால் மாட்டிக் கொண்ட மதன்லாலை கூட்டிக் கொண்டு டில்லி போலிசார் புலனாய்வில் இறங்கியதை இரண்டு நீளமான பாராக்களின் மூலம் சொல்லி கொஞ்சம் தொய்வு உண்டாக்குகிறார் மாலன்
இந்த அத்தியாயத்திலும் மாலன், தகவல் சேகரிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்
பழைய டெல்லி மெரினா ஹோட்டலில் கோட்சேயும் ஆப்தேயும் எம். தேஷ்பாண்டே மற்றும் எம். தேஷ்பாண்டே என போலி பெயரின் அறை எடுத்திருந்ததையும் சொல்லி இருக்கலாம். அதே போல அந்த ஹோட்டலின் மானேஜர் பசேகோ (Reference No:2) இதை விசாரணையில் சொன்னதை சொல்லி இருக்கலாம். அவர்கள் அறை எடுத்த ஹோட்டல் பில் இங்கே படமாக
விசாரணையில் உண்டான போலிசின் ஆயத்த பர்மாலிடிகளை கொஞ்சமாகச் சொல்லும் அத்தியாயம் ஏழு.

சுதந்திரம் வாங்கி சில மாதங்கள் மட்டுமே கடந்திருந்த நிலையில் ஆபிசர்களின் மனநிலையினை சிக்கனமான வார்த்தைகளில் மாலன் ,” வெள்ளைக்காரனுக்கு விழுந்து விழுந்து சலாம் வைத்தவர்கள் சுதந்திர இந்தியனுக்கு பதில் சொல்ல சோம்பல்படுகிறார்கள்”
கொலையாளிகளின் பூர்விகம் மராட்டிய மாநிலம் என்பதை போலிசார் மோப்பம் பிடித்தபின் புலனாய்வின் ஒரு பகுதி பம்பாய்க்கு தாவும் சுவாரசியத்துடன் இங்கே நிறுத்துகிறார் மாலன்
எட்டாம் அத்தியாயம்

காந்தி மீது 20-ஜனவரி-1948 நடந்த் கொலை முயற்சியின் பூர்விகம் மராட்டிய மண்ணில். அங்கே உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய். அவர் இந்த விசாரணையை ஜிம்மி என்ற செல்லப் பெயர் கொண்ட ஜேடி நகர்வாலா என்ற பம்பாயின் டெபுடி கமிஷ்னர் ஆஃப் போலிஸ் வசம் ஒப்படைப்பது வரை சரியாக விசாரித்து எழுதியிருக்கிறார் மாலன். ஆனால் இங்கேயும் இரண்டு தகவல்களில் சின்ன சறுக்கல்.


மொரார்ஜி 21-ஜனவரி-1948 ஜேடி நகர்வாலா என்ற அந்த அதிகாரியிடம் இது பற்றி தனது அலுவலக்த்தில் விவாதித்தது போல் சொல்லியிருக்கிறார் மாலன். ஆனால் மொரார்ஜிக்கு தகவல் பேராசிரியர் ஜெயின் என்பவர் மூலம் தெரியவருகிறது. ஜெயின் மொரார்ஜியைச் சந்தித்து விட்டு கிளம்பியது மாலை 5 மணி. உடனே மொரார்ஜி ஜேடி நகர்வாலாவை அழைத்தார். ஆனால் ஜிம்மி என்ற செல்லப் பெயர் கொண்ட அந்த ஆபிசர் அப்போது பிசி. மொரார்ஜிக்கோ இரவு 8.30 மணிக்கு பம்பாய் செண்ட்ரல் ஸ்டேஷனில் குஜாராத் எக்ஸ்பிரசை பிடிக்க வேண்டும். எனவே அவர் ஜாம்ஷெட் டோரப் நகர்வாலா என்ற நீளமான பெயர் கொண்ட ஜேடி நகர்வாலாவை பம்பாய் செண்ட்ரல் ஸ்டேஷனுக்கு வரச் சொன்னார். மொரார்ஜி , ஜேடி நகர்வாலா சந்திப்பு பம்பாய் செண்ட்ரல் ஸ்டேஷனில் தான் 21-ஜனவரி-1948 நடந்தது. (Reference No 3)அதே போல் இந்த கொலைத் திட்டத்தின் பூர்விகம் மராட்டிய மாநிலம் தான் என்பதை தனக்கு சொன்னது ஒரு டாக்டர் என ஜேடி நகர்வாலவிடம் மொரார்ஜி சொல்வதாக காட்சியமைத்திருக்கிறார் மாலன். மொரார்ஜியிடம் தகவல் சொன்னது டாக்டர் ஜெயின். ஆனால் எம்.பி.பி.எஸ் டாக்டரில்லை. பிஹெச்டி வாங்கிய முனைவர். ஜெயின். ஹிந்தி பேராசிரியர். அவரது வாக்கு மூலத்தின் முதல் இரண்டு பக்கங்கள் இங்கே

எட்டாம் அத்தியாயம் விஷ்ணு கர்க்காரே டெல்லிக்கு வந்தும் தனக்கு துப்பாக்கி கிடைக்கவில்லையே என அங்கலாய்க்கும் வரிகளுடனும் அதற்கு குவாலியர் பக்கம் தானே போய் வாங்கி வரலாம் என்ற சமாதனத்துடனும் முடிகிறது. இங்கேயும் தகவல்களில் முரண்பாடு. இரண்டாவது கொலை முயற்சிக்கு டெல்லிக்கு வரும் ஆப்தேயும் கோட்சேவும் தான் குவாலியர் போகின்றனர் 27-ஜனவரி-1948. அது அவர்களது திட்டத்தில் ஏற்கனவே முடிவான ஒன்று. ஆக இங்கே மாலன் சொல்லும் விஷ்ணு கர்க்காரேயின் புலம்பல் மாலனின் கற்பனனையாகத் தான் இருக்கவேண்டும். எப்படி என்று அத்தியாயம் பத்திற்கான விமர்சனத்தில் சொல்லியிருக்கிறேன்

ஒன்பதாம் அத்தியாயம் போலிசாரின் வலைவிரிப்பு நடவடிக்கைகள் பற்றி அத்துனை சுவாரசியமில்லாமல் நகர்ந்து டக்கென்று முடிகிறது


ஒன்பதாம் அத்தியாயத்திற்கும் பத்தாம் அத்தியாயத்திற்கும் நிறைய இடைவெளி.

பத்தாம் அத்தியாயம் கோட்சே பழைய டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் தூக்கத்திலிருந்து தூக்கிவாரி போட்டு எழுந்திருப்பது போல ஆரம்பிக்கிறார் மாலன்.

கோட்சேயும் ஆப்தேயும் ஏர் இந்தியா விமானம் மூலம் 27—ஜனவரி-1948 என். விநாயக் ராவ், டி.நாராயண் ராவ் என்ற போலி பெயர்களில் பயணித்ததை சொல்லி இருக்கலாம். அவர்கள் பயணித்த டிக்கெட் படம் இங்கே.
அவர்கள் இப்படி போலி பெயரில் பயணித்தனர் என்பதை பின்னர் நடந்த விசாரணையில் 27-ஜனவரி-1948 அந்த விமானத்தில் ஏர்ஹோஸ்டசாக இருந்த லோர்னா வுட்பிரிட்ஜ் என்ற மாதுவை பிப்ரவரி 1948 விசாரித்து போலிசார் ஊர்ஜிதப்படுத்தியதைச் சொல்லியிருக்கலாம்.( Reference No 4)
கோட்சேயும் ஆப்தேவும் தான் 27-ஜனவரி-1948 டெல்லிக்கு விமானத்தில் வந்த உடன் குவாலியருக்கு ட்ரெயின் மூலம் போய் தத்தாத்ரேய பர்சுரே என்பவரிடம் பெரட்டா என்ற இத்தாலிய மாடல் துப்பாக்கியை வாங்கி வந்தனர். இந்த பர்சுரே பெயர் கொலை வழக்கின் தீர்ப்பில் இருக்கிறது

கோட்சே பழைய டெல்லி ரயில் நிலைய ரிடயரிங் ரூமில் நாரயண ராவ் என்ற பெயரில் அறை எடுத்து தங்கியதாகச் சொல்கிறார் மாலன். ஆனால் கோட்சே விநாயக் ராவ் என்ற பெயரில் அறை எடுத்திருந்தான். (Reference No 5)
அத்தியாயம் 11, 12, 13, 14, 15 என வேகமாக தன் நடை வேகத்தால் கதையினை மிக லாவகாமாகக் கையாண்டிருக்கிறார் மாலன்.

காந்தியின் கொலை தவிர்த்திருக்கப்பட்டிருக்கலாம் என்ற போலிஸ் அதிகாரி ரமணனின் வருத்தத்துடன் கதை முடிகிறது. அது ரமணனின் வருத்தம் மட்டுமல்ல. மாலனின் வருத்தம் மட்டுமல்ல. மொத்த இந்தியாவின் வருத்தம்.


கொலை வழக்கை விசாரித்த நீதிபதி ஆத்ம் சரண் தீர்ப்பில் போலிசாரின் மெத்தனத்தை குறிப்பிட்டிருக்கிறார்


I may bring to the notice of the Central Government the slackness of the Police in the investigation of the case during the period between 20-Jan-1948 and 30-Jan-1948. The Delhi Police had obtained a detailed statement from Madanlal Phawa soon after his arrest on 20-Jan-1948. The Bombay Police had also been reported the statement of Dr. Jain that he had made to Hon’ble Morarji Desai on 21-Jan-1948. The Delhi Police and Bombay Police had contacted each other soon after these two statements had been made. Yet the Police miserably failed to derive any advantage from these two statements. Had the slightest keenness been shown in the investigation of the case at that stage the tragedy probably could have been averted

காந்தியின் கொலை மிக சமீபத்திய சரித்திரமே. இதற்கான ஆதரங்களை சேகரிப்பதில் மாலன் அவர்களுக்கு மிகுந்த சிரமம் இருந்தது என்று அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


கதை சொல்வதில், கதை சொல்லும் யுத்தியில் செலுத்திய கவனம் கதைக்கான ஆதரங்களை சேகரிப்பதிலும் அதை சரிபார்ப்பதிலும் காட்டவில்லை என்றே தோன்றுகிறது.


ஆதாரங்கள் சரி பார்க்கப்பட்ட பின்னரே தகவல்க்ள் பயன்படுத்தப்பட்டன என்ற மாலன் அவர்களின் க்ளெய்ம் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட கூற்று. தேதிகளில் முரண்பாடு, பெயர்களில் முரண்பாடு என நிறைய சறுக்கல்கள். திகம்பர பாட்கேவின் வேலையாள் சங்கர் கிஸ்தயா என்ற ஆளைப் பற்றி மாலன் கதையில் எங்கேயும் சொல்லவில்லை. இந்த ஆசாமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் என்ற உண்மை மாலனின் சிரமமான தேடலில் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமே


மாலனின் ஜனகணமன நாவலின் அட்டை, “ கோட்சே என்கிற மனிதனை ரத்தமும் சதையும் உயிரும் உணர்வுமாக இந்நாவல் படம்பிடிக்கும் அளவுக்கு வேறு எந்தப் படைப்பும் செய்த்ததில்லை” என்று சொல்வதும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.


”ஒரே ஒரு இடம் நெருடுகிறது” என இதற்கு முன்னுரை எழுதியிருக்கும் பெருமதிப்பிற்குரிய கல்கி இராஜேந்திரன் அவர்களுக்கு இந்த விமர்சனம் மூலம் நான் சொல்லும் செய்தி “ நிறைய இடஙகளில் இடறுகிறது சார்”

இந்த புத்தகம் கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.

(http://nhm.in/shop/978-81-8368-021-9.html)

நல்ல காகிதம். படிக்க ஏதுவான் நேர்த்தியானஃபாண்ட். அளவான லைன் ஸ்பேசிங்க. பதிப்பகத்தாருக்கு எனது வாழ்த்துகள்.


ஒரு விண்ணப்பமும் : எனது இந்த விமர்சனத்தினை திரு. மாலன் அவர்களுக்கு அனுப்பினால் சந்தோஷப்படுவேன். அவர் அந்தக் கற்பனை ரமணனை வைத்து எமெர்ஜென்சி கால வரலாறு தொடர்பான நாவல் எழுதலாம் எனச் சொல்லியிருக்கார். அந்த நாவல் எழுதும் பட்சம் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கலாம் அல்லவா


மாலன் போன்ற சீனியரான ஒருவரிடம் இத்தனை சறுக்கல்களா என ஆச்சரியப் படுக்கிறேன்


இங்கே இந்த விமர்சனத்துக்காக நான் மேற்கோள் காட்டியிருக்கும் Reference எல்லாம் THE MEN WHO KILLED GANDHI – BY MANOHAR MALGONKAR (Rolli Books ) என்ற புத்தகத்திலிருந்து.


நான் ஜனகணமனவுக்கு விமர்சனம் எழுதப் போகிறேன் எனச் சொன்னவுடன் இந்தப் புத்தகத்தை உடனே எனக்கு அனுப்பிய என் நண்பர் கார்த்திக் சுப்பிரமணியனுக்கு நான் வெறுமனே நன்றி என்று சொன்னால் மட்டும் போதாது


Reference No1: THE MEN WHO KILLED GANDHI PAGE NO: 123
Reference No 2: THE MEN WHO KILLED GANDHI PAGE NO: 190-191
Reference No 3: THE MEN WHO KILLED GANDHI PAGE NO: 198
Reference No 4: THE MEN WHO KILLED GANDHI PAGE NO: 217
Reference No 5: THE MEN WHO KILLED GANDHI PAGE NO: 233

7 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

மிக அருமையான விமர்சனம், அதுவும் தகுந்த தரவுகளுடன். மாலன் இதனைப் படித்து பதிலளிப்பார் என்று நினைக்கிறேன்.


புத்தகத்தை படிக்கும் முன்பே இதனை படித்ததால், புத்தகம் படிக்கையில் (இனிமேல் தான் வாங்கவேண்டும்!) இன்னும் கொஞ்சம் கவனமாக படிக்கத் தோன்றுகிறது.

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

மதுரையம்பதி

பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது.

திரு. மாலன் அவர்கள் தமிழ் ஊடகத் தளங்களில் இயங்கும் ஒரு முண்ணனியாளர் மட்டுமல்ல. மிகுந்த பக்குவம் கொண்டவர் என்பது அவரது ப்டைப்புகளின் வாயிலாக நான் அறிந்த ஒன்று

அவரது கருத்தினை அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன்

VSK said...

வரலாறு சம்பந்தமான நூல்களில் நிகழ்வுகளின் காலம் மிகத் துல்லியமாக இருக்க வேண்டும்.
அதுவும் இந்த நிகழ்ச்சிக்கு அது மிகவுமே அவசியம்.
இது ஒன்றும் ‘பொன்னியின் செல்வன்’ இல்லையே! இஷ்டப்படி மாற்ற.

புத்தகம் படிக்கும் ஆவல் குறைந்துவிட்டது.
அதை ஈடு செய்யத்தான், நீங்களே முக்கியப் பகுதிகளையும் கொடுத்து விட்டீர்களே!

நன்றியும், வாழ்த்துகளும்!

Chitravenkateswaran said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இன்னொரு சுப்புடு உருவாகிரார்......நீ விமர்சனம் எழதும் முன் புத்தகம் படிக்கவேண்டும் என்று நினைத்தேன்.....இப்போது சுவாரசியம் போய்விட்டது....

Anonymous said...

அன்பு மௌலி

வணக்கம்

சென்ற முறை நான் சென்னை வந்திருந்த போது மாலனின் ஜணகனமன வாங்கினேன்

ஒரே நாளில் இன்னும் சொல்லப் போனால் சில மணி நேரங்களிலேயே படித்து முடித்தே. அடடா மாலன் பல ஆதாரங்களைத் திரட்டி எழுதி உள்ளாரே என நினைத்தேன்.

உங்கள் விமர்சனம் படித்தபின் அவர் எத்தனை கோட்டை விட்டிருக்கார் என புரிந்தது

-மும்பை ராஜ சேகர்

rudras prasadams said...

ammaadi... ivvalavu periya vimarsanam ezhutha, mikavum menakkeda vendum... athu ivaraal mudinthirukkirathu... vaazhthukkal....

indha vimarsanappadi parthaal, thagaval pizhai neengalaaga, novel swarasyamaagave irukka vendum endru padugirathu... padikka aavalaaga ullean... ilavasa prathi anuppuvargalukku intha recessionilum veali pogathirukka kadavulai vendikkolkirean....

Unknown said...

இவ்வளவு விஷயங்கள் தவறாக போனது மிகவும் கவலையான விஷ்யம்,ஒரு தவறான தகவலை பதிப்பித்துவிட்டதற்காக அவர் ஏதாவது செய்தாக வேண்டு,

இத்தனை விளக்கமாக விமர்சனம் எழுதியதற்கு நன்றி, கிட்டதட்ட முழு சம்பவமுமே புரிந்தது போல் உள்ளது