Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Saturday, 2 April 2011

சக பயணி- 2


நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் என் சட்டை பாக்கெட்டில் இருந்த பேனாவைப் பார்த்துக்

கொண்டிருந்தார். அந்த பேனாவில் காந்தியாரின் உருவம் பதித்திருந்தார்கள்

" சார் இந்தப் பேனா எனக்கு நான் பணியாற்றிய அலுவலகத்தில் எனக்கு அன்பு பரிசாக வழங்கியது. காந்தி குறித்து நீங்கள் என்னிடம் வினவியதற்கு இந்த பேனா காரணமாக இருக்கும் என யூகிக்கிறேன்"

" உங்கள் யூகம் மிகச் சரியானது. இது போன்ற பரிசுகளில் பெரும்பாலும் சாமி படங்கள் மதப் பெரியவர்களின் படங்கள் இருக்கும். முதன் முறையாக காந்தி படம் பதித்த கிஃப்ட் பேனாவைப் பார்க்கிறேன். உங்களுக்கு காந்தியின் மீது ஈடுபாடு இருக்கும் பட்சத்தில் தான் இப்படி வைத்துக் கொண்டிருக்க முடியும் என யூகித்து உங்களிடம் அப்ப்டி ஒரு கேள்வி கேட்டேன். நீங்கள் பதிலுக்கு என்னைக் கேள்வி கேட்டதால், உள்ளுக்குள் விஷயங்களை கோர்வைப்படுத்திக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன். அதுவுமல்லாது காந்தி சிற்சில விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தாலும் பொதுவில் He is a symbol of good அதனால் உங்கள் மேல் ஒரு நல்மதிப்பு வரும் அதற்காக இதை வைத்துக் கொண்டிருக்கலாம் எனவும் யோசித்துக் கொண்டிருந்தேன்"

"நல்லது சார். நான் உங்களை பதிலுக்கு கேள்வி கேட்டது என்னை நான் தயார் செய்து கொள்ள ஒரு சிறிய அவகாசம்; நீங்கள் யூகம் என சொன்னதை நான் மித் (Myth) என சொல்வேன்.. எனது கருத்து இந்த விஷயத்தில் மிகவும் காரமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு என் வருத்தங்கள் ஆனால் என் கருத்துக்கான விளக்கம் சொல்ல நீங்க்ள் எனக்கு அனுமதி அளிப்பீர்கள் என கருதுகிறேன்"

"தாரளமாக சொல்லுங்கள்"

"யூகம் என்றும் அனுமானம் என்றும் சொல்லப்படுபவை ஒருவரின் நம்பிக்கை கட்டமைப்பில் (Belief Structure) ஒரு ஸ்தானம் எனச் சொல்லுவேன்"

"எனக்கு முழுமையாகப் புரியவில்லை சார்"

"ஒருவரின் நம்பிக்கை கட்டமைப்பு Opinions, Desires, Convictions, Values என அடுக்குகள் கொண்டவை என நான் கருதுகிறேன். இதில் கீழடுக்கு ஒப்பீனியன் எனக் கொண்டால் மேலான அடுக்கு வேல்யூஸ் என பொருள் கொள்ள் வேண்டும்."

"இதை இந்த தருணத்தில் ஏன் சொல்கின்றீர்கள் என தெரிந்து கொள்ளலாமா"

"சொல்கிறேன் சார். காந்தி படம் வைத்துக் கொண்டால் அது நல்லவர் எனும் அடையாளத்துக்கு உதவும் என நீங்கள் யூகிப்பதாக சொன்னீர்கள் அல்லவா. அதன் பொருட்டு இதைச் சொன்னேன்"

"ஆம் அப்படித்தான் யூகித்தேன். இப்போது கோர்ட் ஹாலில் எல்லாம் காந்தி படம் மாட்டப்பட்டுள்ளது. எதற்க்காக ? இங்கே நல்லது நடக்கும் ; உண்மை இருக்கும் என ஒரு உணர்வைத் தோற்றுவிப்பதற்க்காக. அது மட்டுமல்லாது அவர் தேசப் பிதா எனும் அடையாளம் பெற்று விட்டார் என்பதற்க்காவும்; He is mere a convention there என்பது என் எண்ணம்”


"மிக எளிமையாக அல்ல அல்ல மிக சாதாரணமாக சொல்லிவிட்டீர்க்ள். இதில் எனது கருத்தினை பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். எனக்கு உதவியாக இருக்கும் என கருதுவதால் எனது மடிக் கணிணியை உயிர்ப்பித்து உபயோகித்துக் கொள்ளலாமா"

"தாரளமாக சார்.. அதற்கு முன்னால் ஒரு கப் காஃபி அருந்தலாமா"

"செய்யலாம். நான் காஃபியில் சர்க்கரை சேர்த்துக் கொள்வதில்லை.. இதோ காந்திக்கு மீண்டும் வருகிறேன்

உண்மை என்பது வெறும் பொய் தவிர்ப்பது எனும் நிலையில் காந்தியார் இருக்கவில்லை. அதை எப்போதும் தவிர்ப்பது எனும் நிலையில் இருந்தார். நீங்கள் இராகவன் நரசிம்மன் அய்யர் என்பவர் குறித்து அறிந்திருப்பீர்கள்... ?"

"இல்லை சார்"

"இராகவன் அய்யர் எழுதிய The Moral and Political Thought of Mahatma Gandhi நூலில் காந்தியாரை மேற்கோள் காட்டி சொல்லியதை சுட்டினால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்

As truth is the sbstance of morality , man is a moral agent only to the extent that he embraces and seeks the truth. By truth is not merely meant the absstention from lies, not just the prudential conviction that honesty is the best policy in the long run , but even more that we must rule our life by this law of truth at any cost. We must say No when we mean NO , regardless of the consequences

இதில் நீங்கள் ஒன்றைக் கவனிக்கலாம். உண்மை உரைப்பது என மேலோட்டமாக இல்லாமல் உண்மையை தேடுவது என ஆழமாக் சொல்லப்பட்டிருக்கின்றது. இப்படியான தேடலினால் தான் காந்தியார் படம் நீதிமன்ற கூடங்களில் மாட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்"

"காந்தியாரே ஒரு பாரிஸ்டர்.. ஆனால் அவரால் இப்படி ஒரு உண்மைத் தேடலில் வெற்றி கொள்ள இயன்றதா "

"நீங்கள் காந்தியாரை கருப்பு அங்கி அணிந்து கொண்டு. கட்சிக்காரரை சட்டத்தின் பார்வையில் இருந்து காப்பாற்ற அல்லது சட்டத்தின் பார்வையில் வேண்டும் எனும் அளவுக்கு நிவாரணம் பெற்றுத் தரும் வக்கீல் / பாரிஸ்டர் அளவில் பார்த்தீர்கள் என்றால் இந்த சங்கதியினைப் புரிந்து கொள்வதில் சற்று சிரமம் இருக்கும்"

"ஓ அப்படியா .. வேறு எப்படி புரிந்து கொள்ள வேண்டும்"

"மேலும் தொடர்வதற்குள் இதோ காஃபி வந்து விட்டது.. அருந்திய பின் தொடரலாம்"

(பயணம் தொடரும்)

Wednesday, 30 March 2011

சக பயணி-1

சுமார் 400 கி.மீ தூரத்தை பகல் நேரத்தில், இரயில் பயணத்தில் அதுவும் கோடை தொடங்கிய நேரத்தில் பயணித்துக் கடக்க வேண்டிய சந்தர்ப்பம். சக பயணிகள் இது மாதிரியான தருணங்களில் பொழுது போக்க மிகவும் உதவுவார்கள். கையில் வைத்திருக்கும் வார, மாத சஞ்சிகைகள், நாளிதழ்கள் கைமாறும். அரசியல், சினிமா, சமூக அவலங்கள், சமூக அக்கறைகள் என உரையாடல்களும் களம் மாறி மாறி நேரம் நழுவும்.


மிக அருகில் அமர்ந்திருக்கும் ஒரு சக பயணி சமூகம் சார்ந்த அவரது கருத்தை நிறுவிடவும், நாம் அதனுடன் ஒத்துப் போவதும் இல்லை முரண்படுவதுமாக பல சமயம் இலக்கில்லாது., பற்பல சந்தர்ப்பங்களில் உரையாடும் கருத்துக்கு நம் தரப்பிலோ அல்லது அவர் தரப்பிலோ வலுவற்ற சான்றுகள் ஏதுமே இல்லாது உரையாடல் அந்த இரயில் வண்டியை விட வேகமாக பயணிக்கும். முரண்பட்ட கருத்துக்களே ஆயினும் இருவருக்கும் இடையே ஒரு மெல்லிய கண்ணியம் ஒட்டிக் கொண்டிருக்கும். அது ஒருவரை ஒருவர் முதன் முறை அறிந்துள்ளோம் என்பதால்.

எனக்கு இப்படியான பயணத்தில் வாய்த்த சக பயணி., அந்தப் பயணம் முழுமைக்கும் ஒரே சங்கதியைப் பற்றி உரையாடி வந்தது எனக்கான ஆச்சரியம். அவருக்கு 70 வயது கடந்திருக்கும் ஏன் 80 கூட இருக்கலாம். பாசஞ்சர் லிஸ்டில் பார்த்திருந்தால் தெரிந்து இருக்கும்.. அவர் தான் உரையாடலைத் தொடங்கினார்

“உங்களுக்கு காந்தியக் கொள்கைகள் மீது நம்பிக்கை இருக்கின்றதா”

நான் இந்தக் கேள்விக்கு எப்பவுமே உற்சாகமாக ஆமாம் என தலையாட்டி விடுவேன் அன்றைக்கு என்னவோ பதில் கேள்வி கேட்டேன்

“காந்தியக் கொள்கைகள் என திட்டவட்டமாக எதைச் சொல்லுகின்றீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா”

(பயணம் தொடரும்)

Wednesday, 30 April 2008

ஏற்காடு


போனவாரக் கடைசியில் ஏற்காடு போயிருந்தேன். உபயம் நான் வேலை பார்க்கும் கம்பெனி.

நாங்கள் ”பாலா” என்று கூப்பிடும் எங்கள் கம்பெனி டைரக்டர் திரு. பாலமுருகன் இப்படி எங்களை சந்தோஷப்படுத்தி சந்தோஷப்படுவார். அவரும் எங்களுடன் வந்திருந்தார்

இந்த மாதிரி பயணம் கிளம்பும் போது பஸ் டிரைவர் பற்றி கொஞ்சம் புலன்விசாரணை செய்ய வேண்டும் போலும். நாங்கள் போன பஸ் டிரைவர் முன்னால் போகிற வண்டிகளின் பின்புறத்தை தரிசனம் செய்வதில் அபார பிரேமை கொண்டவர் போலும். அந்த வண்டிகாரர்கள், “இந்தாப்பா ஓவர் டேக் செஞ்சுக்கோ “என்று பெரிய மனசாய் கைகாட்டினாலும் எங்கள் டிரவைர் “ ஊஹூம் மாத்தேன் போ “ என்று குழந்தையாக பவ்யமாய் பின் தொடர்ந்தார். பயணத்தின் பெரும்பால நேரம் தார்ப்பாய் மூடிய லாரிகளின் பின்னால் தான்.

ராத்திரிக்குள் போய் சேர்ந்துவிடுவோமா என்ற சந்தேகம்.. ஒருவழியாய் நடு ராத்திரி கொண்டு போய்ச்சேர்த்தார். அந்த நடுநிசியிலும் எங்களுக்காக நிலா, நட்சத்திரம், அடர்த்தியான பனி, நாங்கள் தங்க இருந்த காட்டேஜ் சிப்பந்திகள் எல்லாரும் ஓவர் டைம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

மறுநாள் காலையில் காட்டேஜுக்குள் “கிறீச் கிலுங்”என தொடர் சப்தத்தில் என் தூக்கம் கலைந்தது. சத்தம் வெளியில் இருந்து. ஒரு ஜன்னலை திறந்து பார்த்தேன். அபாரம். காபி தோட்டத்தின் மிக சமீபம். வகை வகையாய் சின்னச் சின்ன பறவைகள். இத்தனை ரகமா !!


”கழனி செந்நெல் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரை கைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும் கனிகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்காற் கொக்கும்
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழுஉக்குரல் பரந்த ஓதையும் “

என கொஞ்சம் சிலப்பதிகாரம் ஞாபகம் வந்தது

நாங்கள் தங்கியிருந்த MM Holiday Inn ஊர்க் கோடியில் . ஜன சந்தடியில்லாத இடம். மேகங்கள் அவ்வப்போது பக்கத்து பள்ளத்தாக்கிலிருந்து புறப்பட்டு போயின

காதலர்கள், புதுசாய் கல்யாணம் ஆனவர்களுக்கு ஏற்காடு ஏரி படகு சவாரி அவ்வளவு உசிதமில்லை. அந்தரங்கமாய் ஒரு இடத்துக்கு படகை அவசரமாய் மிதித்துக் கொண்டுபோய் ஜோடியை வாத்சாயனமாய் வாசனை பார்க்கும் சாத்தியக் கூறுகள் கிஞ்சித்தும் இல்லை. மறைவிடம் என்பதே கிடையாது

ஏற்காடு ஏரி சின்னதுதான். ஊட்டி, கொடைக்கானல் போல அவ்வளவு விஸ்தீரணமில்லை. காக்காய் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் தலையை அசைக்குமே அது மாதிரி தலையை திருப்பினால் போதும். ஏரி முழுக்க பார்வையில் பதிவாகிவிடும். கொஞ்சம் நீட்டி விட்ட டபிள்யூ மாதிரி சைசில் இருக்கிறது.

கரைநெடுக திண்பண்டங்கள் கடை அணிவகுப்பு . அதன் முன் ஜனக் கூட்டம். ஒரு அலுமினியப் பாத்திரக் கடை கூடப் பார்த்தேன். அதன் முன்பும் கூட்டம். ஏற்காடு வந்து அலுமினியப் பாத்திரம் வாங்க வேண்டும் என்று சங்கல்ப்பம் போலும்.

ஏற்காடு ஏரியை உள்ளூர் நிர்வாகத்துடன் சேர்ந்து மதராஸ் அலுமினியம் லிமிடெட் என்ற கம்பெனியும் பராமரிப்பு செய்கிறது. இவர்கள் ஏரிக்கு நடு நாயகமாக ஒரு பவுண்டன் வைத்திருக்கிறார்கள்

பகோடா பாயிண்ட் என்ற ஸ்தலம் ஏற்காட்டில் பிரபலம். இப்படி ஒரு பட்சண லட்சணமாய் காரணப் பெயர் எப்படி வந்தது.

பகோடா என்றால் அடுக்கடுக்கான கட்டட அமைப்பு. ஸ்தூபி மாதிரி. கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் புத்தவிகார கட்டடங்கள் பகோடா வகை. உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர் ” லில்லி மலருக்கு கொண்டாட்டம் “என்று மஞ்சுளாவுடன் பாடிக்கொண்டிருக்கும் போது பாட்டின் கடைசியில் குண்டடிபட்டு ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து விழுவார் . அந்த கட்டடமும் பகோடா வகை.. இதே மாதிரி பிரமிடு அமைப்பு கற்கள் நாலு இங்கு பழங்குடி மக்களால் செய்யப்பட்டு உள்ளதால் இந்தப் பெயர் இங்கே ராமர் கோவில் ஒன்றும் இருக்கிறது.

இங்கிருந்து பார்க்கையில் பள்ளத்தாக்கு பரவசம் கண்ணிலும் பயம் அட்ரினிலாய் வயிற்றிலும். கம்பிக் கட்டையை விட்டு கொஞ்சம் தள்ளியே நிற்கணும். பக்கம் போனால் அடிவயிறும் காலும் கூசும். ”எனக்கு அப்படியெல்லாம் இல்லை” என்று யாராவது சொன்னால் , அவர் முந்தின ராத்திரி கொஞ்சம் ஜாஸ்தி ஜல போஜனம் பண்ணியிருக்கணும். அப்படியும் இல்லை என்றால் அவரை சீக்கிரம் டாக்டரிடம் கூட்டிப் போகவும்

மலை வாசஸ்தலங்களின் இலக்கணமாய் சில கோவில்கள், அருவி, சீட்டர்கள் இங்கும்.

Sound Sleep by night; study and ease,
Together mixt, sweet recreation;
And innocence, which does most please
With meditation

Thus let me live unseen unknown

என்று அலெக்சாண்டர் போப் சொன்ன மாதிரி இரண்டு நாள் ஒய்வு

ஆர்கே நாராயணின் மிஸ்டர் சம்பத் கொஞ்சம் படித்தேன். மத்தபடி ஓய்வுதான்.
ஞாயிறு மதியம் புறப்பட்டோம். ராத்திரி 10 மணிக்கு வந்த என்னை கரண்ட் போயிருந்த மாம்பலம் வரவேற்றது.

ஏற்காட்டில் காட்டேஜ் சிப்பந்திகள் , “இப்ப கிளைமேட் சூப்பர் சார் !! வேர்வையே இருக்காது “ என அடிக்கடி சொன்னது ஞாபகம் வந்தது.

Tuesday, 8 April 2008

ஹனி மூன்- பாகம் -1


இப்படி டைப் செய்வதை என் தோள் வழியே பார்த்த என் மனைவி " அச்சு பிச்சுனு எதையாவது எழுத வேண்டாம் " என ஒரு தடை உத்தரவு போட்டாள். அவள் தூங்கிய பின் பூனை மாதிரி எழுந்து இந்த இலக்கிய சேவையை தொடந்தேன்.


ஹனி மூனுக்கு சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் என எம்.ஜி.ஆர் கணக்காக ஒரு மெகா பிளான் வைதிருந்தேன்.( இந்த சிந்தனை உபயம் : உலகம் சுற்றும் வாலிபன் படம்) . அவர் மாதிரியே ஒரு ஓலைத் தொப்பி, பாடுவதற்கு நல்ல மெட்டுகளுடன் சில டூயட் பாடல்கள் ( கவனிக்க : இசை, லிரிக்ஸ் - அடியேனே ) என சகல ஏற்பாடுகளுடன் கல்யாணம் என்ற பதத்திற்கு நிஜமான தாத்பர்யம் தெரிந்த நாளில் இருந்து தயாரானேன்.

ஆனால் இதெல்லாம் அந்த நாடுகளுக்கு போன பின்பு தானே !!!! அங்கெல்லாம் போக என்ன என்ன செய்ய வேண்டும் என யோசித்ததில் எனக்கு விளங்கியவை

1. அங்கெல்லாம் போக என்ன செய்ய வேண்டும் என்று விசாரிப்பதற்கே என்னிடம் அப்போது இருந்த காசெல்லாம் காலியாகி, மிகுந்த அளவில் கடன் வாங்க வேண்டியிருக்கும்.

2. இதெல்லாம் நமக்கு ஒத்து வராது. லோக்கலாக ஊட்டி, கொடைக்கானல் என சமாதானம் ஆவதே உத்தமம்

இப்படி சுள் என்று உரைத்த சில வருஷங்களுக்குப் பிறகு, எனக்கு கல்யாணம் ஆகி, ஹனி மூன் என்ற அந்த மஹா சுவாரஸ்யமான சங்கதியும் நடந்தேறியது. என்னுடைய கிழக்கத்திய நாட்டு ஹனிமூன் பயண ஆசைகளுடன் ஈடு கொடுத்தது கொடைக்கானல் என்ற ஷேத்திரமே. காரணம் அங்கே ஒரு நல்ல காட்டேஜில் தங்க என் அண்ணனின் நண்பர் ஒருவர் மூலம் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

மதுரை போய் என் அண்ணன் வீட்டில் இரண்டு நாள் தங்கல். பின்னர் அந்த சரித்திர புகழ்பெற்ற பயணத்தை தொடங்கினோம். வத்தலகுண்டு தாண்டி பஸ் மலையேறியது. நடுவழியில் சில்வர் காஸ்கேட் என்று ஓர் அருவியருகே நிறுத்தினார்கள். "10 நிமிஷம்- பாக்றவங்க பாக்கலாம்". எனது மனசு ஓரத்த்தில் இருந்த "நயகராவில் இரண்டாவது ஹனி மூன் என்கிற கனவும் இப்படி ஒரு ஒல்லியான அருவியைப் பார்ப்பதில் சமாதானம் ஆனது.

இனிமேல் வழியில் நிறுத்தி அது இது என எதைக்காட்டினாலும் இறங்க கூடாது என ஒரு சங்கல்ப்பம் செய்து கொண்டு, பஸ்ஸில் ஏறினேன்.

கொடைக்கானல்.... கடல் மட்டத்திலிருந்து சுமார் 2 கி.மீ உயரத்திதில் இருக்கிறோம் என்பது காலை 11 மணிக்கும் தெரிந்தது.. குஷியான சில்.....

காட்டேஜ். நல்ல இடத்தில் அமைந்திருந்தது. அங்கேயே சாப்பாடு.


”எல்லா இடமும் சுத்திப் பார்க்க நாங்களே வண்டி ஏற்பாடு செஞ்சு தரோம்” என்று காட்டேஜ் நிர்வாகம் ஒரு கவர்ச்சி சங்கதி வைத்திருந்தார்கள். சிக்ஸ் சீட்டர் வேன். மூன்று ஹனி மூன் தம்பதிகள் மட்டும் என்று எக்ஸ்ட்ரா கவர்ச்சி.

மறு நாள் தான் அந்த வேனில் திக் விஜயம் போகப் போகிறோம். இன்னிக்கு நாமளே போய் சுத்திப் பார்க்கலாம் என்று நினந்த்து கிளம்பினோம்.

ஏரிக் கரையை சுற்றி நடந்தால் -- ஜாலியாக கடந்து போகும் பல முகங்கள். குதிரை சவாரி அனுபவிக்கும் மிடில் ஏஜ், தைலம் விற்கும் ஆசாமிகள். மரத்தடியில் புற உலகம் மறந்தபடி பேசிக் கொண்டிருக்கும் ஹனி மூன் ஜோடிகள்

ஏரியை இரண்டு தடவை சுற்றி வந்தோம். என் மனைவி “ இது என்ன கோவிலா சுத்தி சுத்தி வரதுக்கு இதுக்கு மேல என்னால நடக்க முடியவில்லை” என்று சொன்னதால் காட்டேஜுக்கு திரும்பினோம்.

ஒலைத் தொப்பி சகிதமாக முதல் டூயட் பாட, லொகேஷன் தேர்வு செய்யத்தான் ஏரியை இரண்டு தடவை சுத்தி வந்தோம் என்று என் மனவியிடம் சொல்லவில்லை

மறு நாள் காலையில் காட்டேஜ்காரர்கள் சரியாக 7 மணிக்கு வேனைக் கொண்டு வந்து நிறுத்தி ஹாரன் அடித்தார்கள். அந்த சத்தம் நிச்சயம் கீழே வத்தல குண்டு வரை கேட்டிருக்கும்.

நான் வண்டியை ஒரு தடவை பிரதஷணம் பின்பு அப்பிரதஷணம் எல்லாம் செய்து பார்த்ததில் 5 சீட் தான் இருந்தது. ஆறு சீட்டர் என்று சொன்னார்களே. வண்டிக்காரரை கேட்டேன். “சரியா பாருங்க சார்”

சரி தான் என்று ஒரு தடவை கண்ணை கசக்கி விட்டு எண்ணினேன். ”அஞ்சுதானேப்பா இருக்கு”

”சார் இங்க பாருங்க ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, ஆறு” டிரைவர் சீட்டையும் சேர்த்து எண்ணினார்

எனக்கு இந்த கணக்கு புரியவில்லை. ஒருவேளை டிரைவரும் ஹனி மூன் ஜோடிகளில் அங்கத்தினரா. அப்படியானால் அவரும் புது மனவியை பக்கத்து சீட்டில் உட்காரவைத்துக் கொண்டு வருவாரோ? அவர் ம்னைவியை பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டினால் பத்திரமாய் இருக்குமா ? நிமிஷ நேரத்தில் கேள்விகள் கூட்ஸ் வண்டிபோல ஒன்றன் பின் ஓன்றாய்......

...........

இந்த போஸ்டிங்கின் அடுத்த பாகம் விரைவில்

Friday, 21 March 2008

ரயில் பயணம்


தூங்கிக்கொண்டு போகலாம் ; பாத்ரூம் இருக்கிறது ; பகல் ட்ரெயினில் தொடர்ச்சியாக பட்சண ஊர்வலம் வரும் என்று சில சௌகர்யங்கள் இருந்தாலும் ரயில் பயணத்தில் பல அசௌகர்யங்களும் உண்டு என்று ஒத்துக் கொள்வீர்கள்.


சென்னை சென்ட்ரல் போன்ற பெரிய ஸ்டேஷன்களில் முகப்பு வாசலுக்கும் டிரெயின் நிற்கும் இடத்துக்கும் உள்ள தூரம் பல கி.மி இருக்கும். ராமேஸ்வரம் கோவில் பிரகாரத்துக்கு போட்டியான நீளமான பிளாட்பாரங்கள் என் போன்ற மினி கஜேந்திர ஆகிருதி கொண்டவர்களின் சத்ரு. சிலருக்கு மட்டும் எப்போதும் பிளாட்பாரத்தின் தலைப்பில் உள்ள கம்பார்ட்மென்ட்டில் ரிசர்வேஷன் கிடைத்துவிடும். இவர்கள் பெருமாளுக்கு ப்ரீதியானவர்கள் என நினைக்கிறேன். இவர்கள் பெருமாளுக்கு செய்யும் நைவேத்திய சங்கதிகள் என்னவென்று கேட்டு வைத்துக்க் கொள்ள வேண்டும்.

இப்போது AIRTEL , RELIANCE போன்ற நம் கால புரவலர்கள் சென்னை , பெங்களூர் ஸ்டேஷன்களில் மினி பாட்டரி கார்கள் உபயம் செய்து என்னை மாதிரி ஆசாமிகளை ரட்சித்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் இந்த கார்களில் ஸ்டேஷன் வாசலில் இருந்து எனது கம்பார்ட்மெண்ட் வரை சென்று விடுகிறேன். அங்கே இறங்கியவுடன் இந்த கார்களை ஓட்டும் அன்பர்களை ,
"என் உயிர் அன்பாய் நீ ; என் இளவல் உன் இளையான் இந்நன்னுதலவள் நின் கேள்" என ராமன் குகனிடம் பரிவு செய்தது போல் அன்பாகத்தழுவிக் கொள்வேன்.

ஸ்லீப்பர் கோச்சில் நான் பெரிதும் காதலிப்பது சைட் லோயர் பெர்த். தூக்கம் வரவில்லை என்றால் உட்கார்ந்து வரலாம். இதர பர்த்துகளில் இது சாத்தியம் இல்லை.

இப்போது ஸைட் லோயருக்கும் ஸைட் UPPER க்கும் இடையிலான அந்த சொற்ப இடத்திலும் ஸைட் மிடில் என ஒரு பெர்த் வரப்பபோவதாக அறிவிப்பு.

இந்த ஐடியாவை லாலுஜியின் நினைவு மண்டலதிலிருந்து நீக்கிவிட பெருமாளை சேவிக்கிறேன்

ரயில்வே நிர்வாகம் பல வருடங்களாக ஒரு சங்கதியை கவனிக்கவில்லை. லால் பகதூர் ஸாஸ்திரியார் ரயில்வே மந்திரியாக இருந்த போது அவரது உயரத்தை கணக்கிட்டு பெர்த் நீளம் டிஸைன் செய்யப்பட்டிருக்க வேண்டும். இப்போது பெரிய மனசு பண்ணி வேறு நீளமான பர்த்துகளை வடிவமைக்க வேண்டுகிறேன்.

அப்பர் பெர்த் ( UPPER BERTH) என்ற பொறியில் சிக்கும் அன்பர்களுக்கு சில யோசனைகள்

ஒரு பனையோலை விசிறி, மூவ் போன்ற ஏதாவது சுளுக்கு போக்கும் சங்கதி போன்றவற்றுடன் மேலே ஏறவும்.
கம்பார்ட்மெண்டில் பொறுத்தியுள்ள ஃபேன்கள் UPPER BERTH க்கு காத்து தராது. எனவே விசிறி அவசியம்.

திடீர் என முழிப்பு வந்தால் வீட்டில் எழுந்து உட்கார்வது போல் முடியாது. கூரை இடித்து கழுத்தில் சுளுக்கு நிச்சயம். ஆகவே சுளுக்கு நீக்கி கட்டாய தேவை