Showing posts with label 34th Book Fair-Chennai. Show all posts
Showing posts with label 34th Book Fair-Chennai. Show all posts

Tuesday, 22 March 2011

34TH BOOK FAIR -CHENNAI - PART 5


சரித்திரம் புத்தகங்கள் வழியாக அறியப்படுவதை விட சினிமாவின் வழியாக அதிகம் அறியப்படுகிறது. விஷுவல் மீடியாவுக்கு இருக்கும் பலம். அதிலே சொல்லப்படுவது மிகைப்படுத்தலானாலும்., சரிவர சான்றுகள் சரி பார்த்து காட்சிகள் அமைக்கப்படாவிடினும் அல்லது சினிமாவுக்கான வியாபார நோக்கத்தில் செய்யப்படும் சமரசங்களில் சரித்திரம் திரிந்து போகவும் வாய்ப்புண்டு.. ஆனாலும் சரித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர்கள் அதற்கான முத்திரையைப் பெற்று விடுகிறார்கள்

நான் அரசு சார்ந்த பணியில் இருந்த காலம். எங்கள் துறையின் தலைமை நிர்வாக அலுவலரின் மாமனார் இசபெல் மருத்துவமனையில் குடல் நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை நடந்திருந்தது. அவரைப் பார்ப்பதற்காக நான் சென்றிருந்தேன். அவர் திரைப்படத் துறையில் புகழ் பெற்ற ஸ்டில் போட்டாகிராபர் ; ஸ்டில் சாரதி.. சிவாஜி , எம்.ஜி.ஆர் காலத்து திரை ஆசாமி

அவரைக் காண தயாரிப்பாளர் பாலாஜியும் வந்திருந்தார். சாரதி அவர்கள் என்னைக் காட்டி பாலாஜியிடம், " சார் சிவாஜி சாரின் பரம ரசிகர் " என அறிமுகம் செய்து வைத்தார்

நான் பாலாஜியிடம் ஒரு சம்ப்ரதாயக கேள்வி கேட்டேன், " நீங்க நடிச்சதிலேயே உங்களுக்கு பிடிச்ச கேரக்டர் என்ன?"

"கப்பலோட்டிய தமிழனில் வாஞ்சிநாதன் காரக்டர்'

வாஞ்சிநாதன் இத்தனை குண்டாக இருந்திருப்பாரா என்ற என் சந்தேகம் ரொம்ப நாள் கழித்து தீர்கிறது

காலச்சுவடு பதிப்பகம்‍ ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும் எனும் புத்தகத்தால்

இந்தப் புத்தகம் வாங்க மேற்சொன்ன நிகழ்ச்சி மட்டும் காரணமல்ல.

ஆஷ் படுகொலையினை பாரதி ஒரு தனிமனித கொலையாக கண்டு வெறுத்தான் என்பதும் தான். அது எனக்கு உடன்பட்ட கருத்தும் தான்

இது குறித்து பாரதி ஒரு நீண்ட ஆங்கிலக் கட்டுரை எழுதியிருந்தான். அதனை முன்பே படித்திருக்கிறேன். அது இந்த நூலில் மிகச் சிறப்பாக பதியப்பட்டுள்ளது

பாரதி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதியுள்ளார் என்பதை ஒரு ரிலவன்ட் ரெஃபெரென்ஸாகத்தான் இங்கே குறிப்பிடுகிறேனேயல்லாது சர்வதேச அளவில் விருது வாங்க ரொம்ப சீரியசாக கனவு கண்டு கொண்டிருப்போரின் பொது அறிவு குறித்து நான் மறைமுகமாக ஏதும் குறிப்பிடவில்லை எனத் தெளிவு கொள்க‌

ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் என்ற ஆக்கத்திற்காக நான் அதன் ஆசிரியர் திரு ஆ. சிவசுப்ரமணியன் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாகிறேன்.

இது போன்ற ஆக்கங்களில் எத்தனை எளிமை கை கூட வேண்டுமோ அத்தனை எளிமையினையும்., எத்தனை கட்டுக் கோப்பு அவசியமோ அதனையும் சேர்த்து கொடுத்துள்ளார். சான்றுகளை மிகக் கோர்வையாக வரிசைப்படுத்தி தந்துள்ளார்

இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். பேசும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை சென்ற போது எனது நண்பர் மு. பாண்டியன் என்னை ஆஷ் துரையின் கல்லறைக்கு அழைத்துச் சென்ற சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டேன்.

இங்கே நான் தந்துள்ள படம் ஆஷ் கல்லறையின் படம்

அந்த கல்லறை அமைந்துள்ள தேவாலயத்திற்கு Christ Church என பெயர் இருந்தாலும் அது இங்கிலீஷ் சர்ச் என்றே அழைக்கப்படுகிறது

அங்கே இன்றளவும் ஆங்கிலத்தில் தான் சர்வீஸ் நடக்கிறது என்ற தகவலை திரு. சிவசுப்ரமணியன் சொன்னார்.

எனது பள்ளிக் காலத்தில் எங்கள் பள்ளிக்கு பக்கத்து வீட்டில் தான் வ.உ. சிதம்பரம் அவர்களின் புதல்வர் திரு வாலேசுவரன் வசித்தார் எனச் சொல்லி அப்போது பள்ளிப் பருவம் ஆதலால் அவருடன் உரையாடி வ.உ.சி அவர்களைக் குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்திருக்கவில்லை என சொன்னபோது,

"நீங்கள் அதிகம் ஒன்றும் தவறவிடவில்லை . வ.உ.சி மறைந்த போது திரு. வாலேசுவரன் அவர்கள் மிகவும் இளம் பிராயத்தவர்தான்" என்ற யதார்த்தத்தையும் சொன்னார் திரு .சிவசுப்பிரமணியன்

நான் இந்தப் புத்தகத்தை அதிகம் சிலாகித்துக் கொண்டே பின்னட்டையினைக் கவனித்தேன்.

சரித்திர சான்றுகளைச் சார்ந்த புனர்நிர்மாணம் என்ற அறிவுலக ஒழுக்கத்திற்கு இது ஒரு அபூர்வ உதாரணம். முன்னெண்ணங்களிலிருந்து முற்றாக பெற்ற விடுதலையும் விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சியில் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்ட உதாரணம்

இப்படி சொல்ல வேறு யாரால் முடியும் .. சாட்சாத் சுந்தர ராமசாமி தான்

Saturday, 29 January 2011

34TH BOOK FAIR -CHENNAI - PART 4



மரக்கதவுக்கு வெளியே காத்திருந்தேன்.

உள்ளே அதட்டலான குரலும் அதற்கு பதில் சொல்லும் மென்மையான குரலுமான உரையாடல் கசிந்து கொண்டிருந்தது

காத்திருந்த அறையை கவனித்தேன் சுவற்றில் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி, லால் பகதூர் சாஸ்திரி , காமராஜர் , சத்தியமூர்த்தி என ஒரே கதர். இதெல்லாம் ஒருவித கன்வென்ஷன் என நினைத்துக் கொண்டேன்

கதவு திறந்து ஒல்லியான ஒருத்தர் என்னிடம் வந்து , "சார் நீங்க வந்துட்டீங்கன்னு அண்ணன்கிட்ட சொல்லிட்டன்; ரெடியாய்ட்டு இருக்கார் . இப்ப வந்துருவார் . புறப்படுரலாம்"

"நீங்களும் வருவீங்கல்ல "

"நான் இல்லாம எம்.எல் ஏ என்னிக்கு சார் வெளில போயிருக்காரு ; கண்டிப்பாக வருவேன்"

கையில் வைத்திருந்த பைலை பிரித்து படித்தேன் . இந்த ஒரு வாரத்தில் அந்தக் கடிதம் மனப்பாடம் ஆகியிருந்தது

இணைப்பில் காணப்படும் அரசு செயலரின் நேர்முகக் கடித்தத்தின் பால் தங்களின் தனிப்பட்ட கவனம் ஈர்க்கப்படுகிறது....

என் தனிப்பட்ட கவனம், அந்த கடிதம் படிப்பதில் இருந்து விலகியது இப்போது அந்த மரக்கதவை திறந்து கொண்டு அதிகாரமாக வந்த நபர் கவனத்தை கவர்ந்தார்.

"வணக்கம் சார்"

"வணக்கம் வாங்க . செகரட்டரி டு த கவர்மெண்ட்டுக்கு எழுதி உங்களை மாதிரி ஆபிசருங்க்களை வரவழைக்க வேண்டிருக்கு . ருலிங் பார்டி எம்.எல்.ஏ கூப்பிட்டா ஓடுவிங்க"
"எம்.எல்.ஏ சார் என்னை மன்னிக்கணும் ; நான் இந்த போஸ்டிலே சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகிருக்கு. இதுக்கு முன்னாலே ஒரு வருஷம் அந்த போஸ்ட் வேகன்ட்டா இருந்திருக்கு"

"ஒ அப்படியா ; இதுக்கு முன்னாலே எந்த ஊர்ல இருந்தீங்க "

" இது தான் என் முதல் வேலை"

"வாழ்த்துகள்.. வாங்க போகலாம் "

எந்த பந்தாவும் இல்லாமல் சகஜமாக பேசியபடி வந்தார்.

"பேராவூரணி டு பட்டுக்கோட்டை பத்து டிபரென்ட் ரோட் ரூட் இருக்கு.. அதுல ஒன்னு இப்ப நாம போயிட்டு இருக்குறது ஒன்னு . இங்க தான் நான் லெட்டர்ல எழுதின கிராமம் இருக்கு. அங்க தான் இந்த "நச்சுப்புல்" ஸ்கீம் வேணுமின்னு ஒரு வருஷமா பேசிட்டு இருக்கேன் "

"நச்சுபுல் ?"

"அதான் சார் களை. இங்கிலீஷுல வீட் . அதை நச்சுபுல் அப்படின்னு சொல்லுவோம்; நாம திரும்பி போகும்போது எனக்கு நினைவு படுத்துங்க . என் கிட்ட ஒரு நோட்டு புஸ்தகம் வச்சிருக்கேன் . எங்கம்மா பாட்டி இவங்க கிட்ட கேட்டு எழுதினது .. கிராம வழக்குல இருக்கும் சொற்கள் சுமார் பத்தாயிரம் இல்ல அதுக்கு மேலே இருக்கும் "

திரும்பும் பொது மறக்காமல் அந்த நோட்டுப் புஸ்தகத்தை வாங்கி வந்தேன் .. இரண்டு நாள் வைத்திருந்து விட்டு திரும்பிக் கொடுத்து விட்டேன் . ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு கொடுத்திருக்கலாம் என பின்னர் வருத்தப்பட்டேன்

நா. வானமாமலை தொகுத்திருக்கும் தமிழர் நாட்டுப் பாடல்கள் புத்தகத்தில் ஒரு பாடலில்

நாத்துகுள்ளே ஏலேலோ
நச்சுபுல்லு அகிலகிலா
நச்சுபுல்லு
நச்சுபுல்லை ஐ லப்பிடி
நறுக்கித் தள்ளு அகிலகிலா
நறுக்கித் தள்ளு


Saturday, 22 January 2011

34TH BOOK FAIR -CHENNAI - PART 3




கிழக்கு பதிப்பகம் ஹரன் பிரசன்னாவின் கவிதை தொகுப்பு நிழல்கள் (தடம் வெளியீடு)

நான் திருத்துறைப்பூண்டிக்கு ட்ரான்ஸ்பர் ஆனவுடன் அங்கே பாச்சுலர் ஜாகைக்கு ஆரம்பத்தில் சிரமப்பட்டேன். வேதாரண்யம் சாலையில் ஒரு மான்ஷன் இருக்கிறது என ஆபிசிலே சொன்னார்கள் என மிக தைரியமாக சாமான்களுடன் அங்கே சென்றேன். அது லாட்ஜா அல்லது மான்ஷனா என குழப்பமான கட்டிடம். வெளிச்சமே வராத அறைகள். எப்படியோ சில மாதங்கள் சமாளித்தேன். அங்கே இராகவேந்திரன் என்ற பி.டபிள்யூ.டி இன்ஜினியர் அறிமுகம் ஆனார். அவர் மூலமாகத்தான் முத்துப்பேட்டை ரோட்டிலே புதுசாக அம்சமாக ரூம்கள் தயாராகி வருவதாக அறிந்து அங்கே புலம் பெயர்ந்தேன்.

அந்த புது ரூமைக் குறித்து இப்படி விஸ்தரிப்பதற்கு காரணம் அங்கே தான் கவிதை எனும் பார்மாட்டினை சுவைக்க தொடங்கினேன். கணையாழி படிக்க ஆரம்பித்ததும் அங்கே தான். கணையாழியின் கடைசி பக்கத்தில் ஒருதரம் என்னைக் குறித்து சுஜாதா எழுதியதும் அந்த கால கட்டத்தில் தான்.

புது அறையிலிருந்து அலுவலகம் செல்ல இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று மெயின் ரோட்டுக்கு வந்து கடைகளை வேடிக்கை பார்த்தபடி நடப்பது. இன்னொன்று ஊருக்கு குறுக்கே ஓடிய ஒரு கால்வாயின் மீது கட்டப்பட்ட சின்ன பாலத்தை கடந்து செல்வது. நான் பெரும்பாலும் இரண்டாவது வழிதான் செல்வேன்.

பாலத்தை தாண்டி அந்தக் கரைக்கு போனபின்பு கரையிலேயே கொஞ்ச தூரம் போனால் தான் தார் ரோடு வரும். அப்படி கரையிலே போகும் போது உடைந்த வளையல் துண்டுகள், உதிர்ந்த மல்லிகைப் பூக்கள் என தவறாமல் பார்ப்பேன். முந்தைய தினம் இரவில் நடந்திருந்த ஒரு தப்புக் காரியத்தின் சாட்சிகள் அந்த ஊரைக் குறித்து நினைக்கும் நாளெல்லாம் வரும்.

அங்கிருந்து ட்ரான்ஸ்பர் ஆன பின்பு என்ன காரணமோ கவிதைகளை தேடிப் படிக்கும் பழக்கம் போய்விட்டது.

நெடுநாட்களுக்கு பின்பு இணையத்தில் உலவும் போது

வழுக்கும் வரப்பில் கால்குத்தி நிறுத்திய கண்ணாடி வளையலின் ஒரு துண்டு ...

என ஹரன்பிரசன்னாவின் வரிகள் கண்ணில்பட்டன. என்னை மீண்டும் திருத்துறைப்பூண்டிக்கும் கவிதைகளின் பக்கமும் இழுத்து வந்தன‌

வழுக்கும் வரப்பில்

கால்குத்தி நிறுத்திய

கண்ணாடி வளையலின் ஒரு துண்டு

- கால்கள் பின்னியிருந்ததை

- வெம்மை பரிமாறப்பட்டதை

- வெற்றுடல்களின் போர்வையாய் இருள் இருந்ததை

நேற்றிரவுக்குள் தள்ளுமுன்

நினைத்தேன்-

கண்ணுள்ள பானைத்தலை

கந்தல் வெள்ளையாடை

வெக்கங்கெட்ட சோளக்காட்டு பொம்மை

கண்மூடியிருக்காது என

Tuesday, 11 January 2011

34TH BOOK FAIR-CHENNAI PART 2


இந்த தொடரின் முதல் பாகம் படிக்க க்ளிக் செய்யவும்

கிழக்கு பதிப்பகம் மஹாத்மா காந்தி கொலை வழக்கு :

1990 ம் வருஷத்திய பிப்ரவரி மாசத்தில் ஒரு நாள். மதராஸ் பட்டிணத்தில் இருந்து தில்லிக்கு விரைந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியின் செகன்ட் க்ளாஸ் ஸ்லீப்பர் பெட்டி.. எதிர் எதிரே இருக்கும் இரண்டு அப்பர் பெர்த்கள். ஒன்றில் 22 பிராயம் கொண்ட வாலிபன் இன்னொன்றில் அவனது தந்தை. இருவரும் சம்பாஷிக்கிறார்கள்

"அப்பா இதுக்கு முன்ன நீங்க தில்லி போயிருக்கேளா"

"என்.சி.சி கேம்ப்க்காக மூணுதரம் போயிருக்கேன். இப்ப ரீசன்டா உங்க அக்காவை குடித்தனம் வைக்க போனமேடா நானும் அம்மாவும்"

"தில்லி சுற்றிப் பார்க்க நீங்கதான் என் கூட வரணும்.. நான் டிராவல்ஸ்ல எல்லாம் போக மாட்டேன்"

"டிராவல்ஸ்லேயே போகலாம்.. ஆனா நான் கூட வரேன்"

"தில்லிலே என்ன என்ன பார்க்கப் போறோம்.."

"ரெட் ஃபோர்ட், டிபென்ஸ் ம்யூசியம்... ராஜ் காட்..."

"அப்பா.. காந்தியை ஏன் கொன்னா.. நல்லவர் தானே..."

காந்தியார் குறித்த ஓர் ஆவணபூர்வமான சம்பாஷணைத் தொடர்ச்சி என் தந்தையின் பதில். சரித்திர பேராசிரியர் அல்லவா.. கிரமமாக வரலாற்று நிகழ்வுகளை அடுக்கிய படி தொடர்ந்தது அவர் பதில்

பிர்லா மாளிகையில் காந்தியி சுடப்பட்ட இடம் காண்பித்து விட்டு, சென்றிருந்த டிராவல் பஸ்ஸை புறக்கணித்து விட்டு அங்கிருந்து ஜந்தர் மந்தருக்கு வந்து அமர்ந்து காந்தியின் சரித்திரம் தொடரப் பேசினார்.. பேசினார்.

என் மனதில் அந்த ஒற்றை ஆடை ராஜாவை நிரந்தரமாக குடியமர்த்தினார் என் அப்பா.

1993 ம் வருஷம் நான் திருத்துறைப்பூண்டிக்கு ட்ரான்ஸ்பர் ஆனதும்.. அங்கிருந்து தான் நவஜீவன் பதிப்பகத்தாருடன் தொடர்பை பலப்படுத்திக் கொண்டேன். காந்தி காந்தி என புத்தக அலமாரி நிறைந்தது..

இன்னமும் காந்தி குறித்த புத்தகங்களை மறு கேள்வி இல்லாமல் வாங்குவேன்..

இந்த பதிவை எழுதும் இந்த நாளுக்கு முந்தைய இரவில் ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தியில் ஜெனரல் ஸ்மட்ஸ் காந்தி உரையாடலை பார்த்துவிட்டு சிந்திய இரண்டு கண்ணீர் துளிகள் என் லாப்டாபின் ஸ்க்ரோல் பேட் மீது ..

(தொடரும்)

Sunday, 9 January 2011

34TH BOOK FAIR -CHENNAI - PART 1


ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் போது வாங்க வேண்டிய பட்டியல் இல்லாமல் செல்வதில்லை. அந்தப் பட்டியலில் சில மாற்றங்களும் நிகழும். அப்படியாக அமைந்தது இந்த 2011 வருட சென்னை புத்தகக் கண்காட்சி. சின்ன விஷேசம் ஹரன் பிரசன்னாவிடமும். பா.ராகவனிடமும் ஆட்டோகிராப் வாங்கினேன். நான் ஆட்டோகிராப் வாங்கும் 3 வது 4 வது பிரபலங்கள் இவர்கள். இதற்கு முன் நான் கவாஸ்கரிடமும், குண்டப்பா விஸ்வநாத்திடமும் மட்டும் தான் வாங்கியிருக்கிறேன். ஒவ்வொரு புத்தகம் வாங்கும் போது அதனை வாங்குதற்குரிய காரணம் இருக்கும். இன்னார் சொன்னார் ; இங்கே ரிவ்யூ படித்தேன் என்பதாய். அதையும் தாண்டி புத்தகம் வாங்குதற்குரிய வலுவான பின் புலக் காரணம் இருக்கும். இந்த 2011 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களுக்கான அப்படியான பின்புலம் குறித்த பதிவுகளாக எழுத ஆசை..

வாங்கிய புத்தகப் பட்டியலை வரிசையிட்டு சொல்லிவிட்டு ஒவ்வொரு புத்தகம் வாங்கிய காரணப் பின்புலம் குறித்து தொடர் பதிவுகள் எழுதுகிறேன்


1. கிழக்கு பதிப்பகம்‍ ‍ திராவிட இயக்க வரலாறு இரண்டு பாகங்கள்

2. கிழக்கு பதிப்பகம் காந்திக்குப் பின் இந்தியா இரண்டு பாகங்கள்

3. கிழக்கு பதிப்பகம் ஹரன் பிரசன்னாவின் கவிதை தொகுப்ப் நிழல்கள்

4. கிழக்கு பதிப்பகம் உணவின் வரலாறு

5. காலச்சுவடு பதிப்பகம்‍ ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும்

6. கிழக்கு பதிப்பகம் மஹாத்மா காந்தி கொலை வழக்கு

7. பூம்புகார் பதிப்பகம் தொல்காப்ப்பிய பூங்கா

8. பாரதிய வித்யா பவன் க்ருஷ்ணாவதாரம். கே.எம் முன்ஷி ஏழு பாகங்களும்

9. கிழக்கு பதிப்பகம் ப்ராஜெக்ட் மானேஜ்மென்ட்.. இரா.மு

10. கிழக்கு பதிப்பகம் அசோகமித்ரன்‍ 18வது அட்சக் கோடு

11. காலச்சுவடு பதிப்பகம் உப்பிட்டவரை

12. நர்மதா பதிப்பகம் தேர்ந்தெடுக்கப்பட்ட 220 பாராயணப்பாடல்கள்

13. புதிய தலைமுறை பத்தாயிரம் மைல் பயணம் ( இறையன்பு)

14. காலச்சுவடு பதிப்பகம் திலக மஹரிஷி

14. பரதன் பப்ளிகேஷன்ஸ் ‍ கண்ணனைத் தேடி

15. என்.சி.பி.ஹெச். நா. வானமாமலை.. தமிழர் நாட்டுப் பாடல்கள்

16. கிழக்கு பதிப்பகம் உருப்படு

17. உயிர்மை கணையாழியின் கடைசி பக்கங்கள்

18. உயிர்மை சுஜாதவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி

19. பெங்குவின் பதிப்பகம் நாரயணமூர்த்தி பெட்டர் இந்தியா பெட்டர் வேர்ல்ட்


கிழக்கு பதிப்பகம் பதிப்பித்துள்ள திராவிட இயக்க வரலாறு இரண்டு பாகங்கள்:

எண் 8:காண்டீபன் வேதாசலம் தெரு, செங்கல்பட்டு இந்த விலாசத்தில் இரண்டு வருடங்களுக்கு மேல் குடியிருந்தேன். அந்த வீடு சம்பத் என்பாருக்கு சொந்தமானது. சம்பத்தின் தந்தை மறைந்த திரு பலராமன். நான் மாடி போர்ஷனில் ஒரு சிறிய அறையில் குடியிருந்தேன். ஈ.வே. இராமசாமி தொடங்கி பல திராவிட இயக்க தலைவர்களுடன் திரு. பலராமன் நட்பு கொண்டிருந்தார் எனும் தகவலை திருமதி. பலராமன் மூலம் அறிந்திருந்தேன். அவரது அபூர்வ photo collection எனது நினவுகளில் எப்போதும் வந்து போகும் .. திரு. பலராமன் ஈ.வே.கி சம்பத் நினைவாகத்தான் சம்பத் என பெயரிட்டார் என அந்த அம்மையார் சொல்லியிருக்கிறார். திரு.பலராமன் வீட்டுக்கு வந்து அவருடன் உணவு அருந்தாத திராவிட இயக்க தலைவர்களே இல்லை என அந்த மூதாட்டி சொல்லும் போது அறியாமையும் , அதையும் தாண்டிய ஒரு பெருமையும் மிளிரிடும்.. இப்படி திராவிட இயக்கம் தொடர்பான பிரமுகர்களின் நிகழ்வுகளை யதார்த்தமாக ஒரு மூதாட்டியிடம் கேட்டுப் பெறும் வாய்ப்பு...

அப்போதிலிருந்தே திராவிட இயக்கம் தொடர்பான தகவல்களில் அதனை விழைந்து சேகரிக்கும் ஆர்வம்..

அரசாணை 44 ஆதி திராவிட நலத்துறை.. இட ஒதுக்கீட்டு வரலாற்றில் முக்கிய இடம் கொண்ட அரசாணை. இதனை அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த அரசு சார்பு நிறுவனத்தில் அமுல் செய்ய அப்போதைய இயக்குநரான ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி முனைந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிர்பந்தம்.. அந்த நிறுவனத்தின் பணியாற்றும் பொறியாளர் சங்கத்தின் தலைவர் நான்.. இட ஒதுக்கீடு தொடர்பான வரலாற்றினை தெரிந்து கொள்ள கன்னிமரா நூலகம், புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நூலகம், சட்ட மன்ற நடவடிக்கைகளின் ஆவணங்கள் என தேடி தேடி படித்த போது.. அதனோட ஜஸ்டிஸ் கட்சி , சமூக நீதி, திராவிட இயக்கங்கள் என இணைந்த வரலாற்றினையும் படிக்க வேண்டியதானது.. அப்போது தொகுத்த ரெபரென்சுகளை இப்போது மீண்டும் எடுத்துப் பார்க்கிறேன்

இப்படியான ஆர்வப் பயணத்தில் ஒரு தருணம் தான் நான் இந்தப் புத்தகத்தை வாங்கிய இந்த தருணம். இரண்டு பாகங்களையும் படித்து முடித்தபின்பு விரிவாக விமர்சனம் எழுத வேண்டும்

(தொடரும்)