Monday, 15 June 2009

நிற்பதுவே


பாண்டிச்சேரியில் ஈஸ்வரன் தர்மராஜன் கோவில் தெருவிலே கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வீட்டின் மாடியிலே ஏறி எதிர் வீட்டு மொட்டை மாடியை டிஜிட்டல் காமிராவுக்குள்ளே கொண்டு வரும் முயற்சியிலே நானும் கார்த்தியும்...

”திருப்தியாய் வந்த்தா படம்”

.. தலையாட்டினார்

சரி கீழே இறங்கலாம் என திரும்பினால் .. “ஓய் ஸ்வாமி... இப்படி வாரும்” எனக் குரல் கேட்டது

அந்த எதிர் வீட்டு மொட்டை மாடியிலே சமையல் கட்டு புகை போக்கி போலிருந்த மேடை ஒத்த இட்த்தின் மீது முண்டாசு கட்டிய பாரதி..


அவன் 10 வருஷம் குடியிருந்த அந்த வீட்டு மொட்டை மாடியில் இப்போது அவனைப் பார்க்க எனக்கு ஆச்சரியமில்லை.. அங்கிருந்தபடியே எங்களை அழைத்தான்..


“இந்தப் பக்கம் வாருமேன்”


அந்த வீட்டிலே மொட்டை மாடிக்குப் போகும் வழிக் கதவு சாத்தப்பட்டிருப்பதை கார்த்தி என் காதிலே முணு முணுத்தார்.


“நண்பர் உமது காதிலே எதோ உபதேசம் செய்கிறாரே”


“அது ஒன்னுமில்லை.. உங்க வீட்டிலே மொட்டைமாடிக்கு வரும் வழியிலே ஒரு கதவு இருக்கிறதல்லவா அது மூடியிருக்கு அதை சொல்றார்”


“அது குறித்து நீர் கவலையுற வேண்டாம். நான் கீழே இறங்கி வருகிறேன். நீங்கள் அங்கே வந்துவிடுங்கள்.”


எதிர் கொண்டு எங்களை வரவேற்று உள்ளே அழைத்துப் போனான்..


“இவர் கார்த்தி.. இவர் ருத்ரபிரசாத் என் நண்பர்கள்.. இங்கே அரவிந்தர் வாழ்ந்த வீடு உங்க வீடு இரண்டையும் பார்த்துவிட்டுப் போகலாம் என வந்தோம்”

வீட்டின் உள்ளே பார்த்து குரல் கொடுத்தான் முண்டாசு , “செல்லம்மா. நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இன்று இங்கேதான் போஜனம்..”.. சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான்..


“பழக்க தோஷம்” என சொல்லிவிட்டு எங்களைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினான்


”நீங்க தான் யுக புருஷன். 100 வருஷம் தாண்டியும் எங்களோட பேசிண்டிருக்கேள்.. செல்லம்மாவும் அப்படியா”


“நல்ல கேள்விதான். ஆனால் என்னைப் போல கிறுக்கனை சமாளித்தாள் எனும் வகையிலே செல்லம்மா என்னிலும் மேலானவள்.. அது கிடக்கட்டும் அது என்ன நண்பர் கார்த்தி உங்கள் காதிலே எதோ சொல்கிறாரே”


“அது ஒன்னுமில்லை.. நீங்க பேனாவும் பேப்பருமாய் அமர்ந்த உடன் கவிதை தங்கு தடையில்லாம வருமானு வியப்பாகக் கேட்கிறார்”


“எனக்கென்ன தெரியும்... அதெல்லாம் பராசக்தி வேலை.. அவளிடம் தான் கேட்க வேண்டும் சட்டையிலே எதையோ தொங்கவிட்டிருக்கின்றீர்களே அது என்ன”


“அது பாடல் கேட்கும் கருவி.. இதோ நீங்களும் கேட்டுப்பாருங்கள்..” எம்பி3 ப்ளேயரை இயக்கி முண்டாசை லேசாக நீக்கிவிட்டு ஸ்பீக்கரை காதிலே பொறுத்தினேன்.. ”நிற்பதுவே” பாட்டைத்தான் வைத்திருந்தேன்


“அற்புதம்... அற்புதம்... என் பாடலை ரொம்ப வருடம் கழித்துக் கேட்பதிலே

பரமான்ந்தம்..”


எங்கள் மூவரையும் மாறி மாறிப் பார்த்தான்.. நீங்கள் மூவரும் சமீபத்திலே அத்வைதம் குறித்துக் கதைத்தீரல்லவா.. இந்த பாடலில் அத்வைதம் தான் சொல்லிருக்கேன்..


நீங்கள் அரவிந்தர் இல்லத்துக்குப் போய் வாருங்கள்.. நான் கடற்கரை வரை சென்று வருகிறேன்”


காண்பதெல்லாம் மறையும் என்றால்.. மறைவதெல்லாம் காண்பமன்றோ


அடுத்த முறை சந்திக்கும் போது கேட்டுக் கொள்ளலாம் என விட்டு விட்டோம்

Sunday, 10 May 2009

குருஷேத்ரம்-2


”ஆரம்பிச்சுட்டியா. சரி வந்தாச்சு. உபதேசம் கேட்டுக்க வேண்டியது தான். சொல்லு”

“சிவராம். உலகத்திலே எதுவுமே உபதேசம் இல்லை. எல்லாம் அக்கறையாலேசெய்றது தான். தனக்கு தெரியாதையா இவன் சொல்லப் போறான் அப்படினுநினைச்சா அது உபதேசமா தெரியும். போரடிக்கும். எரிச்சலா வரும். இன்னும்சொல்லப் போனா இந்த மாதிரி அக்கறையிலே சொல்றவன் எல்லை மீறிசுதந்திரம் எடுத்து கொள்கிற மாதிரியும் தெரியும்”

“நான் அப்படியெல்லாம் நினைக்கலை. நீ சொல்லு நான் கேட்டுக்கிறேன். Probably I may be wrong நீ சொல்றதாலே எனக்கு அது புரியலாம்”

“சரி இந்த ப்ராஜக்ட் விஷயத்துக்கே வரேன். இதுக்கு நீ அமெரிக்கா போகணும்னுஏன் நினைக்கிறே”

“போச்சுறா அதான் சொன்னேனேப்பா. நான் தான் டிசைனர்”

“அப்படின்னா அமெரிக்கா போறது தான் இந்த ப்ராஜக்ட்டுக்கு நீ எதிர்பார்க்கிறபலன்; அப்படித்தானே”

“ஆஹா நீ என்ன சொல்லப் போறாய் எனத் தெரிந்து விட்ட்து. கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே and all that ; ஒரே boring இந்த ஒரு விஷயத்துக்காகஇத்தனை பெரிய சாஸ்திரம்”

”நீ கவனமாகப் புரிந்து கொள்ளவில்லை என என்னால் தீர்மானமாகச் சொல்லமுடியும்”

“எப்படிப்பா. நான் வேலை செய்யனும். அதுக்கு கூலி கிடைக்கனும்னுஎதிர்பார்க்கப்பிடாது. ரிவார்டு கிடைக்குமானு நினைக்கப்பிடாது. ரெக்க்கனிஷன்கிடைக்கனும்னு நினைக்க்க் கூடாது. இதெல்லாம் சாத்தியமா. இல்லை ஏன்அப்படி இருக்கனும்”

“பார்த்தியா அதனாலே தான் சொன்னேன். நீ கவனமாகப் புரிஞ்சிக்கலைனு. நீசெய்யற வேலைக்கு கூலி, ரிவார்ட், அவார்ட், ரெக்க்கனிஷன் இதெல்லாம்எதிர்பார்க்க்க் கூடாதுனு சொல்றதை மேம்போக்காகப் புரிந்து கொள்வதாலேவரும் சிரம்ம் இது தான்”

(தொடரும்)

Saturday, 9 May 2009

குருஷேத்ரம்-1


மைதிலி அப்படியான ஓர் அகால வேளையில் போன் பண்ணி விசும்புவாள் என நானோ என் பெண்டாட்டியோ எதிர்பார்த்திருக்கவில்லை. இது மாதிரி விஷயங்களில் என்னைவிட என் மனைவி இங்கிதமாக ஹாண்டில் பண்ணுவாள் என்பதால் ரிசீவரை அவளிடம் நீட்டினேன், “ இந்தாம்மா மைதிலி மாமி லைனிலே இருக்கா; என்னவோ பிரச்சனை போலிருக்கு; என்ன்னு கேளு; லேசா அழற மாதிரி தெரியறது.”

“என்னது மாமி அழறாளா. கொண்டாங்கோ நான் பேசறேன்”

நாங்கள் அங்கே போனபோது சிவராமன் அப்படின் ஒன்றும் நிலை தடுமாற்ப் போயிருக்கவில்லை. மைதிலி கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லிவிட்டாள்.

“சிவராம் ! என்னாச்சு ! திடீர்னு. இப்படி அப்செட் ஆகியிருக்கேள். அதுவும் லிக்கர் கன்ஸ்யூம் பண்ணிட்டு தடுமாறுகிற அளவுக்கு”

“அதெல்லாம் ஒன்னும் இல்லேப்பா; இவ தான் உனக்கு போன் பண்ணி கலாட்டா பண்ணிட்டாள்”

“அப்படி தெரியலையே; நீங்க ரொம்ப அப்செட் ஆகியிருக்கிறது நன்னாவே தெரியறது”

“உன் கிட்டே சொல்றதுக்கென்ன; எங்க கம்பெனில ஒரு பெரிய ப்ராஜக்ட் ஆரம்பிச்சோமில்லையா”

“ஆமா சொல்லிருக்கீங்க. அமெரிக்கன் க்ளையண்ட்; நல்ல சாலஞ்சிங் ரோல் கிடைச்சிருக்கு அப்படினு”

“அதான். அதோட ஆப்ரேஷனல் க்வாலிட்டி டெஸ்டிங் நடக்கப் போறது. க்ளையண்ட் ப்ளேசிலே. அந்த டீமிலே நான் இல்லை; இந்த ப்ராஜக்டிலே இது வரை சம்பந்தமே படாதவா எல்லாம் பொண்டாட்டி குழந்தை சகிதம் அமெரிக்கா போக கம்பெனி எல்லாம் செய்றது; ஐம் ஜஸ்ட் எ ஸ்பெக்டேட்டர் நௌ”

“நீங்க தானே ப்ராஜக்ட்டையே டிசைன் பண்ணினது”

”ஆமா. நான் தான் பேஸ் டிசைனிலிருந்து ஆரம்பிச்சு ஆர்க்கிடெக்சர் வரைக்கும் கொண்டு வந்தவன். டெவெலெப்மெண்டிலே ஒவ்வொரு வரியா பார்த்து பார்த்து க்வாலிடிக்கு மாரடிச்சேன்; ஆனா இப்ப க்வாலிடி டெஸ்டிங்கிலே நான் இல்லை”

“இவ்வளவு தானா ! இதுக்கு தானா இத்தனை சோகம் ! என்ன சாப்பிட்டேள் ! வெறுமனே பீர் தானா இல்லை ரொம்ப காட்டமா இருக்கட்டுமேனு ரம் வரைக்கும் போய்ட்டேளா”

“என்னப்பா இத்தனை சாதாரணமா சொல்ற. என் கஷ்டம் உனக்குப் புரியலையா”

“சிவராம். இதிலே கஷ்டப்பட வேண்டிய அவசியமேயில்லை”

“என்ன சொல்றே நீ. சாஃப்வேர் ப்ராஜக்ட்டுக்காகவும் ஒன்னோட கிருஷ்ணர் எதாவது ஸ்லோகம் சொல்லிருக்கார் கீதையிலே அப்படின்னுவே|”

“அதே தான்”

(தொடரும்)

Thursday, 5 March 2009

சுஜாதா ஓர் இயக்கம்


சுஜாதா ஓர் இயக்கம் என முந்தைய பதிவிலே சொல்லியிருந்தேன்

அதை நண்பர் திரு வெங்கட்ரமணன் மெய்ப்பித்துள்ளார்

கற்றதும் பெற்றதும் தொடரில் சுஜாதா அறிமுகம் செய்த நூல்களை நண்பர் கார்த்திக் தொகுத்து எழுதி அனுப்பினார். அதை அப்படியே இங்கே தந்தேன். நண்பர் திரு வெங்கட்ரமணன் அந்தப் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்பது வரை சேகரித்து ஒரு தொகுப்பை வெளியிட்டுள்ளார்



இங்கே விபரங்கள் கிடைக்கும்
http://venkatramanan.wiki.zoho.com/Sujatha-books.html

அவர் செய்த இந்த முயற்சி பிரமிக்கத் தக்கது.

Thursday, 26 February 2009

சுஜாதா சார்... WE ALL MISS YOU A LOT











நாளை பிப்ரவரி 27. இன்றோடு ஓராண்டாகிறது. நாட்காட்டிகளின் தேதிப்படி. அவர் எப்படி எப்போதும் சுவாரசியமாக இருந்தார் என்கிற ரகசியத்தை அவர் ஒளித்து வைக்கவே இல்லை.


சுஜாதா என்பவர் ஓர் எழுத்தாளராக, வெறுமனே கதை சொல்பவாராக எங்களுக்கு தோன்றவில்லை. அவர் ஓர் இயக்கம்.






தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது மரணம் எனக்கு எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை எனச் சொல்ல முடியாது










அவரது மரணம் ஒட்டிய மன சஞ்சலத்தைப் பகிர்ந்து கொள்ள முயன்ற போது கிடைத்த நண்பர்கள் அநேகம். மிக்க் சொல்ல வேண்டுமெனில். திரு. தேசிகன். திரு கார்த்திக் சுப்ரமண்யன் எனச் சொல்ல்லாம்

சுஜாதாவிற்கு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும். இப்படி எல்லாத் தளங்களிலும் கால் பதித்து நடனம் ஆடி, வெற்றிக் கொடி நட்டு..



அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கொஞ்ச நாள் ஸ்வாதீனமே இல்லாமல் இருந்து விட்டு தேசிகன் ,”சிற்றம் சிறுகாலே.. “ என பாசுரம் படிக்க அதைக் கேட்டபடியே கண்மூடி..

இந்த மனுஷனுக்கு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும். இப்படி எழுத்து , எழுத்து என மாய்ந்து போனதற்கு..

எனக்குத் தெரிந்து ஒரே நோக்கம் தான்

அவர் சொன்னதும் சொல்ல முயன்றதும் ஒன்றே ஒன்றைத் தான்.











நல்ல எழுத்துகள் படிக்க வேண்டும். நல்ல புத்தகங்கள் நிறைய வெளிவர வேண்டும். நல்ல புத்தகங்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும்






இளம் எழுத்தாளர்களை, இளம் கவிஞர்களை, நல்ல புத்தகங்களை எப்படியெல்லாம் அறிமுகம் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்தார்






அவரது கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் எல்லாவற்றிலும் புத்தகம், புத்தகம் புத்தகம் தான்.

அவர் கற்றதும் பெற்றதும் கட்டுரைத் தொடரில் (அறிமுகப்படுத்திய புத்தகங்களைத் தான் நண்பர் கார்த்திக் சுப்பிரமணியன்(karthik.manian@gmail.com ) தொகுத்து தன் கைப்பட எழுதியதை இங்கே பதிந்து இருக்கிறேன்.



அவரால் வசீகரிக்கப்பட்டவர்கள் அவரால் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என சுஜாதா ஓர் இயக்கம்.

அவரது மறைவுக்கு இரங்கல் எழுதிய எழுத்தாளர் திரு. இராமகிருஷ்ணன் சொன்னதை நினைத்துக் கொள்கிறேன், போய் வாருங்கள் வாத்யாரே.. எழுத்தாய் எப்போதும் இருப்பீர்கள்”




அந்த வாத்யாருக்கு மாணவர்கள் செய்யும் வணக்கம் ஒன்றே ஒன்று தான். நல்ல புத்தகங்கள் படிப்பது. நல்ல புத்தகங்களைப் பற்றி செய்திகள் பகிர்ந்து கொள்வது. அதை ஒரு இயக்கமாகத் தொடர்வது

சுஜாதா சார்... WE ALL MISS YOU A LOT

Tuesday, 17 February 2009

திரு.மாலன் அவர்களுக்கு எனது பதில்


திரு. மாலன் அவர்களின் ஜனகணமன  அதற்கு என் விமர்சனம், அதற்கு திரு. மாலன் அவர்களின் பதில்( என கடந்த பதிவுகள் 

திரு.மாலன் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியது என் கடமை

மாலன் அவர்கள் நீண்ட கடிதத்தின் வாயிலாக சொல்ல விழைவது  தான் அந்தப் புத்தகத்தை எழுதியது 1980 எனவும் Manohar Malgonkar ன் புத்தகம் அதற்குப் பின் வெளியாகி இருக்கலாம் என்று யூகிப்பதாகவும் சொல்லியிருக்கார்

மாலனின் வரிகளை மீண்டும் பாருங்கள்

//நீங்கள் ஒரு THE MEN WHO KILLED GANDHI யைப் படித்து விட்டு எழுதுகிறீர்கள். MALGONKAR ருடைய அந்தப் புத்தகம் 1981ம் ஆண்டு வெளிவந்ததாக ஞாபகம். (நான் இன்றுவரை அதைப்படித்ததில்லை) ஆனால் நான் என் நாவலை 1980லேயே எழுதி விட்டேன்.81ல் அது பிரசுரமாகிவிட்டது//

1980 ல் தானே கூகிள் இல்லை இண்டெர்நெட் இல்லை . இப்போது இருக்கிறதே. எனக்கு மெயில் அனுப்புவதற்கு முன்பு  Manohar Malgonkar  என்பவர் The Men Who Killed Gandhi என்ற புத்தகத்தை எப்போது எழுதினார் என சரி பார்த்துவிட்டு எனக்கு மெயில் அனுப்பியிருக்கலாமே. இன்றைய தேதி மாலன் சீனியர் தானே

படிப்பவர்களுக்கு தெரிய வேண்டாமா

Manohar Malgonkar  என்பவர் The Men Who Killed Gandhi என்ற புத்தகத்தை  1978 லேயே வெளியிட்டுவிட்டார்.  அப்போதே  காந்தி கொலை தொடர்பாக  6 புத்தகங்கள் வந்துவிட்டன . ஆக மாலன் ஜனகணமன வெளியிடும் சமயத்தில் இந்தப் பொருளில் புத்தகங்கள் இருந்திருக்கின்றன

Manohar Malgonkar  எழுதிய  The Men Who Killed Gandhi சமீபத்திய பதிப்பு 2008 ல்


மாலன் அவர்கள் சொல்லியிருக்கும் சமாதானம் / விளக்கம்

//உங்கள் விமரிசனத்தில் நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். என்னுடையது Fiction வரலாற்றின் அடிப்படையில் அமைந்த Fiction.அதை நான் கதையைத் துவக்கும் முன் Prologueலேயே சொல்லி விட்டேன். ஒரு கதாசிரியனுக்கு சில உரிமைகள் உண்டு.எப்போதுமே சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதும் எந்த எழுத்தாளரும் தான் திரட்டும் எல்லாவற்றையும் எழுதிவிடுவதில்லை. கதையின் கட்டுமானம், இலக்கு இவற்றைக் கருத்தில் கொண்டு H/She will use his/her discretion.//

இது FICTION என மாலன் சொல்லியிருப்பது நிஜம். அதே Prologue ல் சம்பவங்கள் நிஜம் , சம்பாஷனைகள் தான் கற்பனை என்றும் ஒவ்வொரு விபரமும் சரி பார்க்கப்பட்ட பின்னரே எழுதியதாகவும் க்ளெயிம் செய்திருக்கிறாரே. சரி பார்த்தேன் எனச் சொல்லி வெளியிட்டால் அதிலே தப்பு இருந்தால் சொல்வது தானே விமர்சனம். அதைத் தானே செய்துள்ளேன்

இதையும் வாசகர்கள் கவனிக்க வேண்டும். 

ஆப்தே ஒரு பெண்ணுடன் சல்லாபித்திருந்தார் என பொதுவாகச் சொல்லவில்லை. ரேணு என்ற பெயரைச் சொல்லியிருக்கிறார்

அந்தப் பெண்ணின் பெயர் மனோரமா சால்வி என ஆதாரத்துடன் சொன்னால்  அது முக்கியமில்லை எனச் சொன்னால் என்ன சொல்வது

இன்னொன்று

ஆப்தே , கோட்சேயின் குவாலியர் பயணம். இதற்கு மாலன் தரும் சமாதானம் விளக்கம்

//உடனே டிரெயின் மூலம் ? நமக்கு அவர்கள் கிளம்பிய டிரெயினின் நேரம் தெரியாது. தில்லி வந்த நேரம் தெரியாது.தில்லி வந்து டிரெயின் மூலம் குவாலியர் போவதற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் போலீஸ் கண்ணில் படாமல் எங்கு தங்கியிருக்க முடியும்? அங்கே கற்பனைக்கு இடமிருக்கிறது அதை நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். தப்பா?//

கோட்சேவும் , ஆப்தேயும் 27-ஜனவரி-1948 மும்பையிலிருந்து விமானம் மூலம் போலி பெயரில் டெல்லி வந்த உடன் விமான நிலையத்திலிருந்து நேராக பழைய டெல்லி ரயில் நிலையம் சென்று டிரெயினில் குவாலியர் போனது ஆப்தேவிடமும், கோட்சேவிடமும் பெறப்பட்ட ஸ்டேட்மெண்ட்களில் பதிவாகியுள்ளது. எந்த டிரெயின் என்ன நேரம் என்பது உட்பட

ஆக நமக்கு தெரியாது என்று மாலன் சொல்லும் நமக்கில் நான் சேர்த்தி இல்லை. 

தப்பா என மாலன் அவர்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் - வாசகர்களிடமே விட்டுவிடலாம்

அதே போல் 21-ஜனவரி-1948 ஜேடி நகர்வாலா என்ற அதிகாரி மொரார்ஜி தேசாயை பம்பாய் ரயில் நிலையத்தில் தான் சந்தித்தார். மாலன் எழுதியிருப்பது போல மொரார்ஜி தேசாயின் அலுவலகத்தில் இல்லை. இதற்கு மாலன் அவர்கள் பதில் சொல்லவில்லை

காந்தியின் கொலை அரசின் மெத்தனத்தால் என மாலன் ரமணன் மூலம் சொல்வதாகச் சொல்லியிருக்கார்

அதைத் தான் தீர்ப்பு சொன்ன நீதிபதி ஆத்ம சரன் சொல்லிருக்கார்னு தீர்ப்பு வரிகளை அப்படியே தந்திருக்கேனே

மாலனின் கீழ்கண்ட வரிகளைப் பாருங்கள்

//என்ன, மல்கோங்கர் ஆங்கிலத்தில் வரலாறாக எழுதினார். (என் உங்கள் குறிப்புக்களிலிருந்து நான் ஊகிக்கிறேன்) நான் தமிழில் சில பரிசோதனை முயற்சிகளோடு புனைகதையாக எழுதினேன். 

என்றைக்குமே தமிழ் எழுத்தாளனது முயற்சிகளுக்கு எளிதில் அங்கீகாரம் கிடைத்து விடாது. அது இளப்பமாகத்தான் கருதப்படும்.//


இதையும் மாலன் என்ற இன்றைய சீனியரிடம் நான் எதிர்பார்க்கவில்லை