Saturday, 4 August 2012

Uniform Civil Code-4

Uniform Civil Code-4

மதிப்பிற்குரிய துணைத் தலைவர் அவர்களே, எனும் கம்பீரமான குரல் கேட்டவுடன் அந்த மாபெரும் அவை அமைதியானது.. அனைவரின் கவனமும் அந்த குரலினால் ஈர்க்கப்பட்டது

பெரியவர் கே. எம் முன்ஷியின் குரல் அது..

நாமும் அவர் என்ன பேசுகிறார் எனக் கேட்போம்

நான் இந்த அவையின் முன்பு சில கருத்துகளை முன் வைக்க விரும்புகிறேன்.. இந்திய அரசியல சாசனத்தின் மிக முக்கிய அம்சமான அடிப்படை உரிமைகள் குறித்து ஷரத்துகளை நாம் விவாதிக்கும் மிக முக்கிய தருணம் இது.. நாம் ஏற்கனவே சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் எனும் ஷரத்தினை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.. இதே அவையில் .. நாம் எல்லோரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டோம்..

இப்போது பொது சிவில் சட்டம் கொண்டு வருவதினால், என்ன இடர் என்பதைக் குறித்து இங்கே சக உறுப்பினர்கள் கருத்துகள் சொன்னார்கள்..

அப்படியாக ஒரு பொது சிவில் சட்டம் கொண்டு வரும் நிலையிலும், சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாக்க அரசுக்கு உரிமை இருக்கிறது அதனால் அதற்கென சில சலுகைகளை செய்வதில் தடையில்லை எனவும் அரசியல் சாசனத்தின் ஒரு ஷரத்தில் உப பிரிவு ஒன்றினை நாமே இங்கே இதே அவையில் அங்கீகரித்திருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

பொது சிவில் சட்டமானது சிறுபான்மையினரின் நலனை முடக்குவதாக அமைந்துவிடும் என்பதாகவும் சில உறுப்பினர்கள் சொன்னார்கள்.. உலகில் எந்த இஸ்லாமிய தேசத்தில் அங்கே சிறுபான்மையினராக இருக்கும் மதத்தினரின் உரிமைகள் மதிக்கப்பட்டு, இந்தியாவில் நடத்தப்படுவது போல் நடத்தப்படுகின்றார்கள் என கவனிக்க வேண்டும்

உதாரணத்திற்கு நாம் எகிப்தையும் துருக்கியையும் எடுத்துக் கொள்ளலாம்.. அங்கே இஸ்லாமியரல்லாத சிறுபான்மையினருக்கு இப்படியெல்லாம் அவரவர் மதம் சார்ந்த பெர்சனல் சட்டங்களைக் கை கொள்ள உரிமை இருக்கிறதா

நான் இன்னமும் ஒன்று சொல்ல விழைகின்றேன்.. மத்திய சட்ட சபையிலே ஷரியத் சட்டங்களும் இன்ன பிற சட்டங்களும் அங்கீகரிக்கப்பட்டு அமுலுக்கு வந்த போது ஷியா பிரிவின் உப பிரிவான கோஜா பிரிவினரும் Cutchi Memons பிரிவினரும் அதனால் மிகவும் அதிருப்தியும் வருத்தமும் கொண்டார்கள்..

அப்போது முகமதியர்கள் அவர்களுக்கு மட்டுமல்ல எல்லாப் பிரிவினருக்கும் ஷரியத் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என வாதாடினர்.. அதனை இந்த இரண்டு பிரிவைச் சார்ந்த இஸ்லாமியர்களாலேயே ஏற்க இயலவில்லை.. மறுத்தனர்..

அவர்களுக்குள்ளே இருக்கும் இப்படியான வேறுபாட்டை வைத்துக் கொண்டு எப்படி சிறுபான்மையினர் நலனுக்காக ஒவ்வொரு தனி சட்டங்களை வைத்துக் கொள்ளலாம் என சொல்வது

நான் இஸ்லாமியர்களை மட்டும் சொல்வதாக நினைக்க வேண்டாம்..

ஹிந்துக்களுக்காக மனு, யாஞ்யவல்யர் போன்றோரின் கருத்துகளை வைத்துக் கொண்டு ஹிந்து சட்டங்களை வைத்தீர்களேயானால் அதனை மறுத்து சொல்ல, பல பிரிவுகள் ஹிந்து மதத்திலேயும் இருக்கிறது

மயூக்கர்களுக்கு, மிதாக்சரர்களுக்கு, பெங்கால் பகுதியின் தயாபாகர்களுக்கு என இப்படி வட்டாரக் கணக்கில் ஹிந்துக்களுக்கென பெர்சனல் சட்டங்கள் இருக்கிறது.. இதையெல்லாம் அங்கீகரித்து.. ஒவ்வொரு மதம் அதன் பல உட்பிரிவுகள்.. அந்த உட்பிரிவுகளுக்குள்ளே இருக்கும் ஏனைய பிரிவுகள் அந்தந்த பிரிவுகளுக்கெல்லாம் தனித்தனியாக பெர்சனல் சட்டங்கள் என வைத்துக் கொள்ளப் போகின்றோமோ நாம் ????

வெளியிலிருந்து வந்து இத்தனை நாட்கள் இங்கே அரசு செலுத்திய ப்ரிட்டிஷாருக்கு இப்படி ஒவ்வொரு பெர்சனல் சட்டங்களும் மதத்தின் அங்கமாகத் தெரிந்திருக்கலாம்.. ஆனால் தேசிய ஒருமைப்பாடு என்பது நமக்கு எத்தனை முக்கியம் என்பது நாம் தான் உணர்ந்து கொள்ள வேணும்..

இப்படி பிரிவுக்கு ஒன்றாக பெர்சனல் சட்டம் வைத்துக் கொள்வது செக்யூலரும் ஆகாது.. நல்லதுமல்ல

நாமெல்லாம் இந்த தேசத்தின் சரித்திரத்தை நன்கு அறிந்தவர்கள்..

அலாவுதீன் கில்ஜி.. பாரத தேசத்தில் முதல் சுல்தானிய சர்க்காரை அமைத்தவர்.. அவர் ஷரியத்தின் ஷரத்துகளில் திருத்தம் செய்து அதனை அமுல்படுத்திய போது, டெல்லியின் காஜியார் அதனை எதிர்த்தார்.. அப்போது அலாவுதீன் கில்ஜி சொன்ன பதில்

‍‍... நான் அறிவில்லாதவன்.. ஆனால் இந்த நாட்டின் மீதும் இதன் வளர்ச்சியின் மீதும் கொண்ட நல்லெண்ணம் அக்கறையினை மட்டும் வைத்துக் கொண்டு அரசாட்சி செய்கிறேன் .. என்னுடைய அறியாமையினையும், நல்லெண்ணத்தினையும் ஒருங்கே நோக்கும், கடவுள் , நான் ஷரியத்தின் படி நடக்கவில்லை என்பதை கருதி கோபமுறமாட்டார்.. எனது நல்லெண்ணத்தினை கருதி என்னை மன்னித்து அருள் செய்வார்

உறுப்பினர்கள் நன்றாக கவனிக்க வேண்டும்..

பண்டை மன்னனுக்கே இப்படி எண்ணமும் அதனை செயல்படுத்தும் துணிவும், முதிர்ச்சியும் இருந்திருக்குமேயானால், நம்மைப் போன்றவர்களுக்கு , இப்படியான மதம், அதன் பிரிவுகள் அதன் உப பிரிவுகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெர்சனல் சட்டம் என்பதெல்லாம், அப்படியான மதத்தின் அங்கம் எனும் கருத்து பிழையாக நமக்கு பயிற்றுவிக்கப்பட்ட கருத்து என்பதைக் உணரத் தெரிந்திருக்க வேணூம்

அவை மீண்டும் அமைதியானது.. பெரியவர் முன்ஷி தனது உரையினை நிறைவு செய்து அமர்ந்துவிட்டார்..

சுமார் ஒரு நிமிஷம் ஆனது

அவையின் கவனத்தைக் கவர்ந்த குரலுடன் அல்லாடி க்ருஷ்ணசாமி அய்யர் பேசலானார்

நான் பெரியவர் முன்ஷி அவர்களுக்கு மிகவும் நன்றியுடையவனானேன்.. நான் பேச நினைத்திருந்ததில் பெரும்பான்மையை அவரே சொல்லிவிட்டார்.. ஆயினும் அவரது கருத்துகளை வலியுறுத்துவதுமாகவும் இன்னமும் சில கருத்துகளை சொல்லவும் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்கிறேன்

ப்ரிட்டிஷ் சர்க்காரில் தங்கள் மதங்களுக்கான தனி தனித் பெர்சனல் சட்டங்கள் இருந்தன என்பதையும் அந்த ஆயிரம் வருஷ அந்நியர் அரசாங்கத்தினை மெச்சியவர்கள் இன்டியன் பீனல் கோட் கொண்டு வரும் போது ஏன் எங்கள் மதத்தின் படி எங்களுக்கு தனியே கிரிமினல் சட்டங்கள் இருக்கிறது .. அதனை நாங்கள் கை கொள்ளுகிறோம் என சொல்லவில்லை.. ஏன் ஐ பி சிக்கு ஆட்சேபணையே தெரிவிக்கவில்லை

இன்னுமொரு வருத்தம் என்னவெனில்,, அம்பேத்கார் தலைமையில் இயங்கும் அரசியல் சாசன வடிவமைப்பு குழு தனது வேலையினை சரிவர செய்யவில்லை என்பதாகக் கூட இங்கே ஓர் உறுப்பினர் சொன்னார்

அவர்களுக்கு அந்நிய ஆட்சியிலே சந்தோஷமிருந்தது நமக்கு நாமே அமைத்துக் கொள்ளவிருக்கும் குடியரசில் அவருக்கு சந்தோஷமில்லை போலும்

நம் முன்னே இருப்பது இரண்டு சங்கதிகள்

முதலாவது

"The State shall endeavour to secure for citizens a uniform civil code throughout the territory of India."

என்பதாக முன் மொழியப்பட்ட பொது சிவில் சட்ட தேவை அவசியம் ஆகவே அதை உறுதி செய்யும் ஷரத்து

இரண்டாவது..

'Provided that the personal law of any community which has been guaranteed by the statue shall not be changed except with the previous approval of the community ascertained in such manner as the Union Legislature may determine by law'."

"Provided that nothing in this article shall affect the personal law of the citizen."

"Provide that any group, section or community of people shall not be obliged to give up its own personal law in case it has such a law."

என்பதாக பலவித வடிவங்களில் உறுப்பினர்களால்,, அந்தந்த மதத்தின் பெர்சனல் சட்டங்களுக்கு பாதகம் வராத வகையில் ஒரு பொது சிவில் சட்டம் என முன் மொழியப்பட்ட திருத்தங்கள்

பெர்சனல் சட்டங்களைக் கருத்தில் கொள்ளாது அனைவருக்கும் பொதுவானதொரு சிவில் சட்டம் தேவையெனும் ஷரத்தினை நாமெல்லோரும் ஏற்க வேணும் என்பதே என் கருத்து

அல்லாடி க்ருஷ்ணசாமி அய்யர் தனது உரையினை முடித்து உட்கார்ந்தார்

தன் முன்னே இருந்த குறிப்புதவிக் காகிதங்களை ஒருதரம் பார்த்துவிட்டு, தனது கருத்துகளை சொல்ல விழைந்து அம்பேத்கார் எழுந்து நின்று பேசலானார்

(தொடரும்)

Thursday, 2 August 2012

Uniform Civil Code-3

Uniform Civil Code-3

மேற்கண்ட அலி பெய்க் சாஹிப் பகதூரின் உரை நிறைவுக்கு அனந்த சயனம் அய்யங்கார் : It is a matter of Contract என்பதாக ஒரு கருத்தை சொல்லி இடை மறித்தார்

இதனை அலிபெய்க் சாஹிப் பகதூர் எதிர்பார்த்திருந்தார் போலும்

"எனக்கு நன்றாகத் தெரியும், நமது அனந்தசயனம் அய்யங்கார் அவர்களுக்கு பிற மதத்தினரின் சட்டங்களைப் பொறுத்தவரை எப்போதுமே queer ideas வைத்திருக்கிறார்.. ஹிந்துக்களையும் ஐரோப்பியர்களையும் பொறுத்தவரை, சம்சார பந்தம் என்பது ஒரு ஸ்டேட்டஸ் அதாவது ஒரு நிலை.. ஆனால் ஆனால் கான்ட்ராக்ட் என அனந்தசயனம் அய்யங்காரால் வருணிக்கப்பட்ட சம்சார பந்தம் என்பது இஸ்லாமியருக்கு குரான் வழியிலானது.. அதனை நிறைவேற்றாத நிலையில் அது செல்லாததாகிவிடுகிறது

1350 வருடங்களாக முஸ்லிம்கள் ஒரு சட்டத்தினை கைக்கொண்டு வருகின்றார்கள்.. அதனை அந்த அந்த நிலையில் சர்க்கார்கள் ஒப்புக் கொண்டிருந்திருக்கின்றனர்.. இன்றைக்கு வந்து அனந்தசயனம் அய்யங்கார் , நாங்கள் எல்லோரும் ஒப்புக் கொள்கின்ற மாதிரி திருமணம் போன்றவற்றிற்கு பொதுவானதொரு சட்டம் கொண்டு வருகிறேன் என்று சொல்வாரேயானால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.. இது மிகச் சாதாரணமான சங்கதி இல்லை. இஸ்லாம் என்று மட்டும் இல்லை.. இன்னும் சில மதங்களில் கூட personal Law என்பது அவர்களின் மத நம்பிக்கைகள் சார்ந்ததாகவே இருக்கிறது.. அப்படியான மத நம்பிக்கைகளைக் பின்பற்ற இந்த பொது சிவில் சட்டம் இடைஞ்சலாகி விடக் கூடாது

இந்த நிலையில் மற்றொரு உறுப்பினர் க்ருஷ்ணசாமி பாரதி குறுக்கிட்டு, இப்படி ஒரு பொது சிவில் சட்டம், எல்லாருடைய ஒப்புதலுடன் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்

அன்றைய தினம் அவை அரசியல் சாசன நிர்ணய சபையின் துணைத் தலைவர் ஹெச் சி முகர்ஜி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது

அவர் , " மிஸ்டர் க்ருஷ்ணசாமி பாரதி.. என்னுடைய ஆசை. இது தான்.. பெரும்பான்மை சமூகத்தினர் கருத்துகளை சொல்ல்லுமிடத்து.. சிறுபான்மை சமூகத்தினர் தங்கள் கருத்துகளையும் சொல்ல வேண்டும்.. இந்த அவையில் நமது இஸ்லாமிய சகோகதரர்கள் மனம் திறந்து கருத்துகளை சொல்ல வேண்டும்"

க்ருஷ்ணசாமி பாரதி , " அவைத் தலைவருக்கு என் வணக்கம்.. நான் சொல்ல வந்தது என்னவெனில் இந்த அவையில் நிறைவேற்றம் காணப்படும் எதுவும் எல்லோருக்கும் சம்மதமானதாக இருக்க வேண்டும் " என்பதே

மீண்டும் அலிபெய்க் சாஹிப் பகதூர் தொடர்ந்தார், " அவைத் தலைவர் அவர்களே, நான் சிலரிடம் கவனிக்கிறேன்.. அவர்கள் செக்யூலர் அரசாங்கம் என்பது எல்லா மதத்தினரும் ஒரே சிவில் சட்டத்தைக் கைக்கொள்வது என நினைக்கின்றனர்.. அதாவது எல்லா மதத்தினரும் அவரவர் தினசரி வாழ்க்கை , மொழி, கலாச்சாரம் , பெர்சனல் சட்டங்கள் இதெல்லாம் அந்த "பொது சிவில் சட்டம்" மூலமாகவே நடைபெற வேண்டும் என நினைக்கின்றனர்.. ஆனால் அதல்ல செக்யூலர் சர்க்கார்

ஆனால் அந்தந்த மதத்தினருக்கு அவரவர் மதத்தினரின் நம்பிக்கைகளுக்கு ஏற்ப வாழ்வு நடத்திட ஏதுவானதே நிஜமான செக்யூலர் சர்க்கார்.. அதைச் செய்வதே சிறந்த பொது சிவில் சட்டம் "

இன்னும் சில இஸ்லாமிய உறுப்பினர்கள் அலிபெய்க் சாஹிப் பகதூர் சொல்வதை சபை ஏற்க வேணும் என குரல் தந்தனர்


பிஹார் பகுதியின் உறுப்பினர் ஹுசைன் இமாம் குறுக்கிட்டு , " இந்த பெரிய நாட்டிலே ஒரு பகுதியிலே மழை கொட்டியபடி இருக்கிறது.. இன்னொரு பகுதியில் வறட்சி .. இப்படியான வேறுபாடுகள் கொண்ட தேசத்திலே பொது சிவில் சட்டம் எப்படி சாத்தியம்"

என்பதான கேள்வியையும் கேட்டு வைத்தார்

அதுமட்டுமல்ல சபையில் வேண்டுகோள் ஒன்றினையும் வைத்தார்

"இந்த சூழல் மிகவும் சோதனையானது தான்.. பல்வேறு மதம், பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள், இன்னும் எவ்வள்வோ வேறுபாடுகள் கொண்ட சமூகச் சூழல்கள் கொண்ட நம் நாட்டில், அனைவரும் மனமுவந்து ஒரு பொது சிவில் சட்டத்தினை ஏற்பது மிகவும் கடினம்.. ஆனால் இந்த சூழலில் நமது அரசமைப்புச் சட்டத்தினை வரைவு செய்யும் நமது உறுப்பினர்கள் இதற்கு தக்கதொரு தீர்வினைத் தர இயலும் என்று நான் நினைக்கிறேன்.. மிகக் குறிப்பாக வரைவு கமிட்டியின் தலைவரான சகோதரர் அம்பேத்கார் அவர்கள் இதற்கு நல்ல தீர்வு தர வல்லவர் என்று நம்புகிறேன்

ஹுசைன் இமாம் பேசி அமர்ந்த பின் சபையில் சில நிமிஷங்கள் ஆழ்ந்த நிசப்தம்.. எல்லோரும் அம்பேத்கர் என்ன சொல்லவிருக்கிறார் எனத் தெரிந்து கொள்ள ஆர்வமானர்கள்..

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என வரும் நாட்களில் உலகம் அழைத்து மகிழ்ந்த அண்ணல் அம்பேத்கார் அவையில் இருக்கின்றாரா எனத் தெரிந்து கொள்ள் சில உறுப்பினர்கள் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தார்கள்.

அவர் அவையிலே தான் இருந்தார்.. எப்போதும் போல அமைதியாக இருந்தார்..

அவர் பக்கத்திலே அமர்ந்திருந்த உறுப்பினர்கள் அவரை கூடுதல் ஆர்வத்துடன் , "ம் எழுந்திருங்கள் .. நான் உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன்" என்ற கருத்தினை தங்கள் பார்வையாலே அவர்பால் செலுத்திப் பார்த்தார்கள்
..
அந்த மிக விசாலமான பெரும் அரங்கிலே ஆங்காங்கே உறுப்பினர்கள் தங்கள் குறிப்புதவிக் காகிதங்களை புரட்டும் போது உண்டான சின்ன சப்தம், மின் விசிறிகள் வேகமாக ஒடும் போது உண்டாகும் காற்றின் சப்தம் இவை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது

மொத்த சபையும் அம்பேத்காரின் பேச்சுக்காகக் காத்திருந்தது.

(தொடரும்)

Wednesday, 1 August 2012

Uniform Civil Code-2

Uniform Civil Code இந்த பொருளில் நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு முன்பே ,, அரசமைப்புச் சட்டம் உருவாகும் நிலையிலேயே விவாதம் நடைபெற்றதைக் கவனிக்க வேண்டும்..

அடிப்படை உரிமைகளை அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதி செய்திட வேண்டுமெனும் எண்ணத்தில் நமது அரசியல் சாசன நிர்ணய சபையில் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 30 ஆகஸ்ட் 1947 நடைபெற்ற விவாதத்தில் கருத்துகள் விவாதிக்கப்பட்டன

23 நவம்பர் 1948 அன்று அரசியல் சாசன நிர்ணய சபையில், மதராஸ் மாஹாணத்திலிருந்து உறுப்பினரான முகமது இஸ்மாயில் சாஹிப், Uniform Civil Code கொண்டு வருவனை எதிர்த்து ஒரு சட்ட முன் வடிவினை முன் மொழிந்தார். மேற்கு வங்கத்திலிருந்து உறுப்பினரான சுரேஷ் சந்திர மஜும்தார் இந்த முன் மொழிவினை எதிர்த்தார்

ஆனால் இஸ்மாயில் சாஹிப் சொல்வதனை ஏற்க வேண்டும் என இன்னுமொரு உறுப்பினர் நஸ்ரூதின் அகமது வலியுறுத்தினார்

இந்த நிலையில் உறுப்பினர் மொஹபூப் அலி பெய்க் ஷாகிப் பகதூர், சபையின் கவனத்தினை ஈர்க்கும் வண்னம் சில கருத்துகளை முன் வைத்து பேசினார். , ஏற்கனவே ப்ரிட்டிஷார் ஆட்சியில் Civil Procedure Code தனி மனிதனின் மதம் சார்ந்த நம்பிக்கைகளிலே தலையிட்டு அதனால் மத நம்பிக்கைகளுக்கு இடர் வந்திருப்பதாகவும் இப்போது இப்படி பொதுவான சிவில் சட்டம் கொண்டு வந்தால் மத நம்பிக்கைகள் அதனைக் கைக்கொள்வதிலும் இடர் தொடரவே செய்யும் என உரை செய்தார்

As far as the Mussalmans are concerned, their laws of succession, inheritance, marriage and divorce are completely dependent upon their religion

என்பதாக அவர் உரையினை நிறைவு செய்யும் போது உறுப்பினர் அனந்தசயனம் அய்யங்கார் குறுக்கிட்டு ஒரு கருத்தை சொன்னார்

(தொடரும்)

Uniform Civil Code-1

Uniform Civil Code என்பது குறித்து சின்ன சின்ன கட்டுரைகள் இங்கே எழுதலாம் என யோசித்து வைத்திருக்கிறேன்

அதன் முதல் படியாக‌

காட்டிலே அரசவை கூடியிருக்கு... அது அரசவை மட்டுமில்ல.. வழக்குகளை விசாரிச்சு நீதி சொல்ற இடமும்

சிங்க ராஜா.. இன்னும் எல்லா மிருகமும் இருக்கு..

“சிங்கம் கேட்குது இன்றென்ன வழக்கு... யார் இந்த ஐந்து பெண் ஒட்டகங்கள்... ஏன் அழுத படி உள்ளன”

சபையின் பொறுப்பாளரான , யானை எழுந்தது...,”அரசே இதோ இங்கே தங்கள் முன்பு நீதி கேட்டு நிற்கும் இந்த ஐந்து பெண் ஒட்டகங்களும்... அதோ திமிராக நிற்கிறதே அந்த ஆண் ஒட்டகத்தால் வஞ்சிக்கப்பட்டவை”

“ இன்னும் விளக்கமாக சொல்ல இயலுமா”

“சிங்க ராஜனின் கட்டளைப்படி... அந்த ஆண் ஒட்டகம் தான் இந்த ஐந்து பெண் ஒட்டகங்களை மணந்து கொண்டது.. ஆனால் இப்போது இவை ஐந்தையும் விலக்கிவிட்டு வேறொரு ஒட்டகத்தை மணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறது..”

சிங்கம் அந்தப் பெண் ஒட்டகங்களைப் பார்த்து கேட்டது,, “நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள்...”

“அரசே நாங்கள் ஒட்டகமாய்ப் பிறந்ததே பாவம் என நினைக்கின்றோம்.. அதுவும் இந்த கொடிய ஆண் ஒட்டகத்தின் மனைவியாக இருக்க எங்களுக்கும் விருப்பமில்லை.. எங்களுக்கு விடுதலை பெற்றுத் தாருங்கள்... எங்கள்
வாழ்க்கைக்கு ஜீவாதாரமாக ஏதாவது தரச் சொல்லுங்கள்.. அதை வைத்து நாங்கள்
எதாவாது செய்து கொள்கிறோம்”

“ஏனப்பா ஆண் ஒட்டகமே.. நீ என்ன சொல்கிறாய்”

“சிங்க அரசருக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.. எங்கள் ஒட்டகக் கூட்டத்துக்கென ஒரு நியதி இருக்கிறது.. நாங்கள் எந்தக் காட்டுக்கு குடியேறினாலும் எங்கள் நியதிப்படிதான் நடப்போம்.. நாங்கள் குடியேறும்
காட்டில் இருக்கும் நியதிகள் எங்களை கட்டுப்படுத்தாது”

“அது என்ன நியதி.. கையில் வைத்திருக்கிறாயா... கொடு படித்துப் பார்க்கிறேன்”

“இந்தாருங்கள் படித்துப் பாருங்கள்”

“ஏனப்பா இதில் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என நியதி
இருக்கிறதே... அதை இந்தக் காட்டிலே அப்படியேவா செய்ய வற்புறுத்துகிறீர்கள்.... இதில் ஒவ்வொரு குற்றத்துக்கு ஒரு நியதி சொல்லப்பட்டுள்ளதே.. இந்த நியதிகளின் படி ஒட்டகங்களுக்கு மட்டும் தண்டனை தரலாம்.. ஏனையவருக்கு இந்த வனத்தின் பொதுவான் நியதிகளின் படி தண்டனை தரலாம்.. என்ன ஒட்டகமே ஒப்புக் கொள்கிறாயா...

இங்கிருக்கும் ஒட்டகங்களே ஒப்புக் கொள்கிறீர்களா... உங்களின் நியதிப் படியே நீங்கள் திருமணம் செய்வதற்கு , மனைவியரை அக்கறையின்றி துரத்தி விடுவதற்கு எல்லாம் நியதி வைத்திருக்கின்றீர்கள் அதே போல் நீங்கள்
திருடினால் இன்ன , கற்பழித்தால் இன்ன, என குற்றங்களுக்கும் ஒட்டகங்களுக்கென நியதி வைத்திருக்கின்றீர்களே அந்த நியதிகளை நீங்க குடிபோகும் எல்லா காட்டிலும் அமுல்படுத்த ஏன் சொல்ல வில்லை...”

சிங்கம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதை விட ஓடுவதே மேல் என நினைத்து ஒட்டகங்கள் ஒடிவிட்டன

Sunday, 29 July 2012

அறியப்படாத அண்ணா ஹசாரே


ஹசாரேவும் ஊழல் செய்தார் முறைகேடுகள் செய்தார் என்று தீர்ப்பு சொன்னது Justice Sawant Commission of Enquiry


அவர் மீது கமிஷன் விசாரணை முடிவு சொன்ன தீர்ப்ப் விபரங்கள்

1. ஹிந்து ஸ்வராஜ் டிரஸ்ட் எனும் அமைப்பின் நிதியிலிருந்து 2.20 லட்சம் ரூபாய் தனது பிறந்த நாள் கொண்டாட்ட்த்திற்கு செலவு செய்தார். இந்த ட்ரஸ்ட் பெயரில அரசு நிலத்தை அபகரித்தார்

2. சந்த யாதவ பாப சிக்‌ஷான் மண்டல் எனும் அமைப்பின் கணக்கு வழக்குகளை தணிக்கைக்கு தரவில்லை; வருமான வரித்துறை சட்டங்களுக்கு புறம்பாக ட்ரஸ்ட் பணம் அதன் நிர்வாகிகளுக்கு கடன் எனும் பெயரில் தரப்பட்ட்து என்பன போல பல நுணுக்கமான முறைகேடுகளை ஹசாரேவுக்கு எதிராக கமிஷன் தீர்ப்பு சொன்னது

3. ராலேகான் சித்தி கிராமத்தில் ட்ரஸ்ட் பெயரில் நிலங்கள் பெறப்பட்டதும், பின்னர் கட்டிடங்கள் எழுப்பப்பட்டதும் இதற்கான அரசு அமைப்பிடம் தெரிவிக்கப்பட வேண்டும் எனும் அடிப்படை விதிகள் பின்பற்றப்படவில்லை

4. டிரஸ்ட் பணம் ரூபாய் ஒரு லட்சம் சுவாமி விவேகாநந்த க்ருதி என்பவருக்கு வட்டியில்லாக் கடனாக கொடுக்கப்பட்டது. இதற்கு ட்ரஸ்ட் விதிமுறைகளில் எந்த இடமும் இல்லை

5. டிரஸ்ட் நிதியிலிருந்து யாதவா பாப கோவில் பணிகளுக்கென ரூ 46 374 செலவிடப்பட்டுள்ளது. ஆனால் டிரஸ்ட் நிதி கல்வி தொடர்பான பணிகளுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என டிரஸ்டினை பதிவு செய்யப்படும் போது கொடுத்த உறுதிகளுக்கு இது முரணானது

6. மும்பை டிரஸ்ட் சட்டத்திற்குப் புறம்பாக டிரஸ்ட் பணம் ஷெட்யூலில் இல்லாத வங்கிகளிலேயே பெருமளவு முதலீடு செய்யப்பட்டது

7. இப்படி முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கு வட்டி என்ன ஆனது எனும் கேள்விக்கு டிரஸ்ட் நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை

8. தாக்டு கிசன் மன்பாரி என்பவருடன் அண்ணா ஹசாரே இணைந்து இயக்கி வந்த வங்கிக் கணக்கு வரவு செலவுகளைக் குறித்து இருவரும் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை.

9. பாரத்சார் விரோதி ஜனந்தோலன் எனும் அமைப்பினை ட்ரஸ்ட் என அண்ணா ஹசாரே தரப்பு சொல்லியது. ஆனால் அப்படி அமைப்பு ட்ரஸ்ட் விதிமுறைகளுக்கு உட்பட்டு பதிவே செய்யப்படவில்லை

10. இந்த ட்ரஸ்ட்க்கு மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமித்ததில் முறைகேடுகள் நடந்துள்ளது

11. இந்த டிரஸ்ட்டுக்கு நன்கொடை வசூல் செய்த பல ரசீது புத்தங்கள் தொலைந்து போயின‌

12. இந்த டிரஸ்டின் உறுப்பினர்கள் வன்முறை , ரௌடித்தனம், நில அபகரிப்பு என்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனும் புகாருக்கு சிலர் தங்கள் ட்ரஸ்ட் உறுப்பினர் இல்லை என ஹசாரே சொன்னார். புகாருக்கு உள்ளானவரில் பலர் டிரஸ்ட் உறுப்பினர்கள் என்பதையும் அவர்கள் டிரஸ்ட்டின் பெயரிலேயே இதனைச் செய்தனர் எனும் குற்றச்சாட்டையும் அவர் மறுக்கவில்லை

13. க்ருஷ்ணா பாணி பூர்வத யோஜனா எனும் சங்கத்தின் சட்ட திட்டங்களின் படி அந்த சங்க விவகார எல்லைக்குள் சொந்த நிலம் வைத்திருப்பவரே அதன் அங்கத்தினராக இருக்கலாம். ஆனால் இந்த தகுதி இல்லாத ஹசாரே 2001 முதல் 2003 வரை அதன் உறுப்பினராக மட்டுமல்ல தலைவராகவும் இருந்திருக்கின்றார்

14. இந்த சங்கத்தின் கணக்கினை தணிக்கை செய்த தணிக்கை அதிகாரியின் மறுப்புரைகளுக்கு எந்த பதிலும் தராது இருந்தனர்


மேலும் விபரமாக படிக்க

கிழக்கு பதிப்பகம் வெளியீடு

அறியப்படாத அண்ணா ஹசாரே

https://www.nhm.in/shop/978-81-8493-509-7.html

போன் செய்து இந்தப் புத்தகத்தை வாங்கிட

கிழக்குப் பதிப்பகம்

டயல் ஃபார் எ புக் சேவை எண்கள்

94459 01234

9445 97 97 97

Sunday, 15 April 2012

மீண்டும் சுஜாதா.. தொடர்கிறது

முன்பு மீண்டும் சுஜாதா எனும் பொதுத் தலைப்பிலே என் ப்ளாக்கிலே எழுதி வந்தேன்.. அதனைத் தொடராமல் இருந்தேன்.. பின்னர் ப்ளாக்கில் ஆக்டிவிடியினைக் குறைத்துக் கொண்டேன்.. அது அத்தனை இன்ட்ராக்டிவாக இல்லை என்பது என் ஒப்பீனியன்.. அதனால் ஃபேஸ் புக்கிலும், கூகிள் + லும் ஜாஸ்தியாக எழுதத் தொடங்கினேன்..

இந்த மீண்டும் சுஜாதாவினை தொடரலாம் என உத்தேசித்திருக்கின்றேன்

இதன் முந்தைய பதிவுகளை அன்பர்கள் சிரமம் பாராமல் இந்த லிங்கில் படிக்கவும்.. இது என் பளாக்கில் (http://mowlee.blogspot.in/search/label/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE
)


" ரங்கராஜன்.. உங்களது முதல் மேலுலக சந்திப்பு இன்னும் ஒரு மணி நேரத்தில்.. அடுத்து இருக்கும் வசந்த மண்டபத்தில்.. நீங்கள் சந்திக்க இருப்பது திருவள்ளுவரை"
சுஜாதா அவரை நோக்கி நட்புடன் புன்னகைத்தார்..

" ஓ வள்ளுவரா எனக்கு குறள்ல நிறைய சந்தேகம்.. அதும் தர்ட் பார்ட்லே..."

கணேஷ் வசந்தின் முதுகில் "பளார்" என ஒன்று வைத்தான்

இந்த இடத்தில் தொடரை நிறுத்தினேன் இனி மேலே படிக்கவும்

-------


"ஏம்பா வசந்தை இப்படி அடிக்கறே.".

"பின்ன என்ன சார் எப்ப பாரு காமத்துப்பால் சம்பந்தமாவே பேசிட்டு இருக்கான்.. திருக்குறள்லே எத்தனை சங்கதிகள் இருக்கு.. அதெல்லாம் பேசறானா பாருங்க"

"பாஸ்.. இது தானா விஷயம்.. இதுக்கா இப்படி வலிக்கிற மாதிரி அடிக்கிறது..என்னைச் சொல்லிட்டு நீங்க மட்டும்.. திருவள்ளுவரை அசிங்கப்படுத்தற மாதிரி நடந்துக்கலையா.. நீங்களே சொல்லுங்க சுஜாதா சார்'

"உங்க சண்டைக்கு நான் வரலைப்பா... நீயே என்ன விஷயம்னு சொல்லிடு"

"சொல்லலாம் சார்.. இப்படித்தான் ஒரு சப்பார்டினேட்டை டிஸ்கரெஜ் செய்யறதா.. இதெல்லாம் வள்ளுவர் கண்டிச்சிருக்கார் தெரியுமில்லையா"

"போட்டன்னா தெரியுமா.. உன்னோட லூட்டிக்கெல்லாம் வள்ளுவரை சப்போர்ட்டுக்கு இழுத்துக்காத வசந்த்.. பாருங்க சார் எப்படிப் பேசறான்னு"

"பாஸ் நீங்க சொல்றதப் பார்த்தா நான் என்னமோ எனக்கு வசதிக்காக வள்ளுவரை திரிச்சி சொல்றேன்னு நினைக்கிறீங்க போலிருக்கு"

'இல்லையா பின்ன"

"பாஸ் .. திருக்குறளை மேலும் இம்ப்ரூப் பண்றதோ ..இல்லை திருத்தி சொல்றதோ அதை சிதைக்கும்"

"என்னடா இது உளறல்"

"இது நான் சொன்னதில்ல பாஸ்.. லாசரஸ்னு ஒரு பாதிரியார் சொன்னதை அப்படியே சொல்றேன் பாருங்க...The Kural cannot be improved nor its plan made more perfect. It is a perfect mosaic in itself. The slightest change in the size, shape or colour of a single stone would mar the beauty of the whole" அப்படினு சொல்லிருக்கார் தெரியுமில்ல"

"சுஜாதா சார்.. என்னமோ இவன் அடிச்சு விடறான்னு தோணறது.. இப்ப இவனை விசாரிக்க டைமில்லை.. வாங்க நாம திருவள்ளுவரைச் சந்திக்கலாம். அவர் கிட்ட பேசினதுக்குப் பின்னால இவனை வச்சுக்கலாம்"

Wednesday, 1 February 2012

"எனக்கும் "பத்ம" விருது"-2

ராத்திரி படுக்கும் போது தலைமாட்டில் தண்ணீர் பாட்டில் இருக்கும். தாகமெடுத்தால், எழுந்து போய் ஃப்ரிட்ஜ் திறந்து தாகம் தணிப்பது ரொம்பவுமே தூக்கம் கலைக்கும் சமாச்சாரமாக இருக்கிறது.

அன்றைக்கு படுத்த வாக்கிலேயே பின்புறம் கை நீட்டினால் பாட்டில் அகப்படவில்லை. ஆனால் ஜரிகை வஸ்திரம் கைக்குப் படுகிறது. வெறும் துணி மட்டுமில்லை அதை உடுத்திக் கொண்டிருக்கின்ற ஆளும் கையால் நான்றாக ஸ்பரிசம் ஆகிறது

பக்கத்துப் படுக்கையில் பார்க்கிறேன். மனைவி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்காள்

அப்படியானால் இது யாரு

இப்போது வஸ்திரம் தரித்திருந்தவர் பேசலானார்

"என்னப்பா தேடறே. இந்தா தண்ணி பாட்டில்"

பேசுவதா, பேசினால் பெண்டாட்டி முழித்துக் கொண்டு "ஒஹோ முழிச்சிண்டு இருக்கும் போது பொஸ்தகம் படிச்சிண்டே தனக்கு தானே பேசிக்கிற பழக்கம் மட்டும் தான் உண்டுனு நினைச்சேன். தூக்கத்திலே பேசும் வியாதியும் இருக்கா" எனக் கேட்கும் வாய்ப்பு இருக்கிறது. முதலில் இது கனவா இல்லை நிஜமாவே சர சரனு ஜரிகை வேஷ்டி கட்டிண்டு இங்கே தலைமாட்டுல ஒருத்தர் உட்கார்ந்திருக்காரா

அது வேஷ்டி தான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு யோசித்தேன். இந்தா தண்ணி பாட்டில் என்று சொன்னது ஆண் குரல்

எதற்கும் இருக்கட்டும் எனக் கேட்டு வைத்தேன். "யார் நீங்க..பூட்டிருக்கும் வீட்டுக்குள் அதுவும் தாண்டி பூட்டிருக்கும் பெட்ரூமிலே எப்படி நுழைஞ்சீங்க. யார் நீங்க"

"நீ தான் வாசலில் நின்னுன்டு என்னை அழைச்சே"

"எப்ப"

"இன்னிக்குதான்.. வெங்காய சட்னியை சப்பு கொட்டி தோசையிலே தொட்டுத் தின்னுட்டு வாசலிலே நின்னுன்டு இன்னும் ரென்டு தோசை சாப்பிடலாம் போலிருக்குனு யோசிச்சிண்டே . கண்ணா Please cut it down அப்படினு கேட்டாய்"

எழுந்து உட்கார்ந்து திரும்பினேன்.

இப்போது அந்த மனுஷன் தன்னை சுற்றி ஒருவிதமாக லைட் போட்டுக் கொண்டு காட்டிக் கொண்டார்

அய்யய்யோ சாட்சாத் பரந்தாமன் க்ருஷ்ணன். தலைலே மயில் பீலி, கையிலே புல்லாங்குழல். நீலக் கலர் திருமேனி.

"ஸ்வாமி .. என்னது இது நீங்க தானா நிஜம் தானா.. என் தலை மாட்டிலே வந்து உட்கார்ந்துண்டு பாட்டிலிலே தண்ணி இந்தானு நீட்டிட்டு இருக்கேள்"

"ஏம்பா இப்படி சத்தமா பேசற.. உன் ஆத்துக்காரி முழிச்சிக்கப் போறா.. வரியா வெளிலே போய் பேசலாம்"

"இந்தப் பனில வெளில வந்தா எனக்கு குளிரும்"

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. வா போகலாம்"

"முதல்ல என்ன சமாச்சாரம்னு சொல்லுங்கோ.. இந்த நேரத்துல் மாம்பலத்துல டீ கடை கூட திறந்திருக்காது.. போலிஸ் ரோந்து வேன்லே சுத்திண்டு இருப்பா"

"காரணம் சொன்னாத்தான் வருவியா.. Will , an amorphous force that eludes human knowledge and consume all its manifestations " .. என்று சொல்லிட்டு சிரிக்கிறான்

"இதோ ஸ்வெட்டர் மாட்டிண்டு வரேன்.. manifestation அப்படினு நீ சொன்ன பின்னாலே தான் சொடேர்ங்கிறது.. நீங்க தான் சரியானவர் இந்த eternal recurrence சங்கதிக்கு"

"சரி சரி சீக்கிரம் வா.. ஆமாம் யார் பத்ம ப்ரியா"

Friday, 27 January 2012

எனக்கும் "பத்ம" விருது

நேற்றைக்கு பேப்பரில் முதல் பக்கததில் பத்ம அவார்ட்ஸ் படத்துடன் தொடங்கியது. இன்னாருக்குக் கொடுத்திருக்கலாம் என்பதான அபிப்ராயங்கள் ஆங்காங்கே அலசப்பட்டன

வழக்கமாக மாம்பலத்தில் பகல் 2 மணிக்கு கரண்ட் நின்று 3 மணிக்கு வரும். விடுமுறை தினமாதலால், ஒரு மணிக்கே சாப்பிட்டு விட்டு, தூக்கத்தை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். கையில் கிண்டில், இன்னொரு பக்கம் இந்த லாப்டாப், வழக்கமாக சில புத்தகங்கள். இரவு எட்டு மணிக்கு டி வி தரமாட்டோம் வேட்டையாடு விளையாடு பார்க்க வேண்டும் என்பதான ரிசர்வேஷன் குரல்கள்.

அந்த சமயத்தில் எனக்கும் ஒரு பத்ம அவார்ட் கிடைத்தது

ஃபேஸ் புக் இன்பாக்சில் ஒரு தகவல் இருக்கிறது படி என்றது சிவப்புக் கலரில் 1

திறந்தேன்

Can you explain "Nietzsche's Eternal Recurrence Theory" ? Can it be correlated to Indian Philosophy?

Was reading Jeyamohan's "Jagan Mithyai" in Thisaikalin Naduvae Collection, so got interested to know more about it from you.

என்று ஒரு தகவல்

நான்,

சொல்றேன்.. ஆனால் chat ல் சொன்னால் சுவையிருக்காதே.. ஞாயிறு அன்றைக்கு அழைத்துப் பேச இயலுமா. நீங்க என்னை அழைச்சாலும் ஓகே தான். 98406-56627

என்று பதில் அனுப்பினேன்

அங்கிருந்து

Neenga unga profilela pottelnale santhosham thaan.... I have big group of friends with whom I can share your writings.They all love ur writings, I often share urs in my group.


செய்தி அனுப்பியது பத்ம ப்ரியா

இதனையே எனக்கு வழங்கிய பத்ம அவார்ட் என சந்தோஷிக்கிறேன்

அப்பா சொல்லித்தான் முதலில் நீட்ஷே படிக்கத் தொடங்கினேன். அதுவும் எங்கே வைத்து என்கிறீர்கள். பெருவுடையார் ஆலயம் என அறியப்படும் ஆவுடையார்கோவிலில் வைத்து படிக்க ஆரம்பித்தேன்

திருவாசகத்தில் ஆனந்தத்து அழுத்தல் என 10 பாடல்களில் ஒரு பாடல் ஞாபகத்துக்கு வருகிறது

நினைப்ப தாக சிந்தை செல்லு மெல்லை
யேய வாக்கினால்
தினைத்த னையு மாவ தில்லை சொல்ல
லாவ கேட்பவே
அனைத்து லகு மாய நின்னை ஐம்பு
லன்கள் காண்கிலா
எனைத்தெ னைத்த தெப்பு றத்த தெந்தை
பாத மெய்தவே.


உலகம் அனைத்திலும் அவனே இருக்கிறான் அவனை அடைய மனம், ஐம்புலன்கள் , வாக்கு இவை உதவுமா என்றால் இந்த அந்தகரண introvert சங்கதிகள் கூட பிரபஞ்சத்தில் இருக்கும் சாதாரண மெட்டீரியலை நுகர்வதற்கே பயனாகின்றன. காரணமான பரமனை வழிபடுவதற்கு அவை கொஞ்சம் கூட பயன் தரமாட்டா

பத்ம ப்ரியாவிற்கு: நீங்கள் கேட்டது அவசியம் எழுதுகிறேன்.. இன்றைக்கு லேசாக மாணிக்கவாசகனை வைத்து Eternal Recurrence, ஜஸ்ட் தொடங்கி வைக்கிறேன். சில தினங்களில் விரிவாக எழுதுகிறேன்

Wednesday, 11 January 2012

தாஜுதீன்


இன்றைக்கு என் பெண் தனது ஸ்கூல் எக்ஸ்கர்ஷன் முடித்துக் கொண்டு மைசூர் எக்ஸ்பிரசில் வந்தாள்

அவளை ஸ்டேஷனில் இருந்து அழைத்துக் கொண்டு வருவதற்காக காலை ஆறுமணிக்கெல்லாம் ஸ்கூட்டரில் நானும் என் மனைவியும்

கிளம்பினோம். நல்ல பணி. ஹிகின்பாதம்ஸ் சமீபத்தில், அந்த கணத்துக்காக காத்திருந்தாற் போல பின் சக்கர ட்யூபின் மௌத் படீரென விட்டது. வண்டி நிலை தடுமாறி பூம்புகார் தாண்டி இடப்புறம் ப்ளாட்பாரம் ஒட்டி நிறுத்தினேன். வந்த ஆட்டோவை வழி மறித்து நிறுத்தி,
மனைவியை சென்ட்ரலுக்கு அனுப்பி விட்டு, பஞ்சர் ஒட்டும் வழியினை யோசித்தேன்

அந்த வயதானவர் அழைத்தார், " தம்பி பக்கத்துல பஞ்சர் கடை இருக்கு . நீங்க இங்கேயே இருங்க நான் போய் அந்தாளை கூட்டிட்டு வரேன்"

மூடப்பட்ட கடையொன்றின் வாசல்படி பளபளப்பான மொசைக்கில் இருந்தது.உட்கார்ந்தேன். ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கும் போது படிக்கலாம் என எடுத்துப் போன 'தாயர் சன்னதி' பிரித்தேன்.

அந்தப் பெரியவர் திரும்ப வந்து விட்டார், ' அந்தப் பையன் இப்பதான் கடை திறந்திட்டு இருக்கான். சொல்லிட்டு வந்திருக்கேன். இப்ப வந்துருவான்.. டீ சாப்பிடறீங்களா"

பர்ஸ் பிரித்து பணம் எடுத்துக் கொடுத்து, 'நீங்களும் டீ சாப்பிடுங்க"

இரண்டு பேப்பர் கப்பில் டீ வாங்கி வந்தார். "அது என்னங்க புத்தகம்" . அவரிடம் புத்தகம் தந்தேன்.

'இவரு திருநெல்வேலிக் காரரா'

"எப்படி சொல்றீங்க"

'அவங்க தான் திருநவேலி னு சொல்வாங்க.. இந்தியாவிலே முதல் முதலா கொடும்பாவி எரிச்சது யார் தெரியுமா"

இப்போது பஞ்சர் கடைப் பையன் பின் சக்கரத்தைக் கழற்றிக் கொண்டிருந்தான்

'நீங்க சொல்லுங்க"

'அக்பர் சக்ரவர்த்தி தான். மதன் எழுதின வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்திலே கிட்டத்தட்ட நடுவிலே படம் கூட வரைஞ்சிருக்கும்..நீங்க படிச்சிருக்கீங்களா

இப்படித் தொடங்கி, அக்பரைப் பற்றி இன்னும் ஏராளமான விபரங்களைச் சொல்லிக் கொண்டே , அதைத் தொடர்ந்து கபாலீசுவரர் கோவிலுக்கு நிலப் பட்டா, தீன் இலாஹி, தன்னுடைய சௌதி பயணம், மெக்கா மசூதி வரலாறு, அங்கே பாலைவனம் எப்படி யாத்திரிகர்களுக்கு இடைஞ்சல், அங்கே இருக்கும் பேரிச்சைக்கும் இங்கே இந்திய பேரிச்சைக்கும் இருக்கும் வித்தியாசம் , பாலஸ்தீன வரலாற்றினை பா. ரா அவர்களின் நிலமெல்லாம் ரத்தத்திலிருந்து மேற்கோள், தேசிங்கு ராஜன் சம்பந்தமாக கன்னிமரா பழைய லைப்ரரியில் இருக்கும் இரண்டு புத்தகங்கள்.. மீண்டும் சௌதிக்கு திரும்பிய அவரது பேச்சு அங்கே இருக்கும் ஆடுகளுக்கு எப்படி தீனி போடுவார்கள். அங்கே கொய்யா எப்படி விளைவிக்கின்றார்கள். மௌன்ட் ரோடில் சில வருஷங்களுக்கு முன்பு இருந்த ட்ராபிக்.. கெட்டி பொம்மு பத்தின நாட்டுப் பாடல், 'வெல்லுவதற்காக கொல்லுதல் ' நடந்தது எனும் அந்த கால கலக நியாயம்'

பையன் பஞ்சர் பார்த்து சக்கரத்தைப் பொறுத்திக் கொண்டிருந்தான்

அவனுக்கு பணம் தந்து விட்டு கிளம்பும் முன்பு, 'உங்க பேர் என்னங்க'

"தாஜுதீன்'

'என்ன வேலை செய்றீங்க'

'நிரந்தரமா ஏதும் இல்லீங்க தம்பி.. இங்கே இருக்கும் எல்லா பிரியாணி ஓட்டலிலும் வேலை பார்ப்பேன்.. காசு தருவாங்க சோறு போடுவாங்க.. ராத்திரியான பூம்புகார் வாசலிலே படுத்துக்குவேன். கால்ல நல்லா அடிபட்டிருக்கு ரொம்ப வலிக்குது. உங்க ஃபோன் நம்பர்
இருந்தா தாங்க தம்பி..

என்னுடைய பிசினஸ் கார்ட்டும் கொஞ்சம் பணமும் தந்தேன்

மறுத்துக் கொண்டே," உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம். பணம் வேண்டாம்.. போன் செய்றேன். என்னை ஒருதரம் புக் ஃபேருக்கும் லைப்ரரிக்கும் கூட்டிட்டுப் போக முடியுமா"

'அவசியம் செய்றேன். பணம் தந்ததை தப்பா நினைச்சுக்காதீங்க .. உங்களுக்கு 80 வயதிருக்கும் என நினைக்கிறேன். எங்கப்பா இறக்கும் போது அந்த வயசு தான்.. உங்க பையன் தந்த மாதிரி நினைச்சிட்டு வாங்கிக்கங்க"

என் பிசினஸ் கார்டை பார்த்தவாறு என்னிடம் பேசினார்.. Your guess is wrong mowlee. I am just 62 years old... சரளமான

ஆங்கிலத்தில், க்ளோபல் வார்மிங்.. ஏஜிங் என தொடந்தார்.

மனசில்லாமல் அங்கிருந்து சென்ட்ரல் போய் லேட்டாக வந்த ரயிலுக்கு காத்திருந்து... மகளை வரவேற்று, மனைவியுடன் ஆட்டோவில் அனுப்பி வைத்து ஆபிஸ் போய் மிக முக்கியமான முடிவுகள் இரண்டு இன்றைக்கு எடுத்து.. வீடு திரும்பி

இந்த நிமிஷம் வரை எனக்கு பிரமிப்பு அடங்கவில்லை.. அந்த பிரமிப்பை சொல்வதற்கு எனக்கு பிரமிப்பு என்ற வார்த்தை தவிர வேறு தெரியவில்லை

இந்த போட்டோவில் இருப்பவர் தான் அந்த தாஜுதீன்

Sunday, 8 January 2012

அறியப்படாத அண்ணா ஹசாரே

" அறியப்படாத அண்ணா ஹசாரே" எனும் தலைப்பில் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள எனது புத்தகம் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்ப்க ஸ்டால்களில் கிடைக்கும்

ஹசாரே மீதும் அவரது ஜன் லோக்பால் வரைவு மீதும், அவரது போராட்டத்தின் மீதும் கேள்விகள் எழுப்பும் புத்தகம்.