Wednesday, 30 April 2008

ஏற்காடு


போனவாரக் கடைசியில் ஏற்காடு போயிருந்தேன். உபயம் நான் வேலை பார்க்கும் கம்பெனி.

நாங்கள் ”பாலா” என்று கூப்பிடும் எங்கள் கம்பெனி டைரக்டர் திரு. பாலமுருகன் இப்படி எங்களை சந்தோஷப்படுத்தி சந்தோஷப்படுவார். அவரும் எங்களுடன் வந்திருந்தார்

இந்த மாதிரி பயணம் கிளம்பும் போது பஸ் டிரைவர் பற்றி கொஞ்சம் புலன்விசாரணை செய்ய வேண்டும் போலும். நாங்கள் போன பஸ் டிரைவர் முன்னால் போகிற வண்டிகளின் பின்புறத்தை தரிசனம் செய்வதில் அபார பிரேமை கொண்டவர் போலும். அந்த வண்டிகாரர்கள், “இந்தாப்பா ஓவர் டேக் செஞ்சுக்கோ “என்று பெரிய மனசாய் கைகாட்டினாலும் எங்கள் டிரவைர் “ ஊஹூம் மாத்தேன் போ “ என்று குழந்தையாக பவ்யமாய் பின் தொடர்ந்தார். பயணத்தின் பெரும்பால நேரம் தார்ப்பாய் மூடிய லாரிகளின் பின்னால் தான்.

ராத்திரிக்குள் போய் சேர்ந்துவிடுவோமா என்ற சந்தேகம்.. ஒருவழியாய் நடு ராத்திரி கொண்டு போய்ச்சேர்த்தார். அந்த நடுநிசியிலும் எங்களுக்காக நிலா, நட்சத்திரம், அடர்த்தியான பனி, நாங்கள் தங்க இருந்த காட்டேஜ் சிப்பந்திகள் எல்லாரும் ஓவர் டைம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

மறுநாள் காலையில் காட்டேஜுக்குள் “கிறீச் கிலுங்”என தொடர் சப்தத்தில் என் தூக்கம் கலைந்தது. சத்தம் வெளியில் இருந்து. ஒரு ஜன்னலை திறந்து பார்த்தேன். அபாரம். காபி தோட்டத்தின் மிக சமீபம். வகை வகையாய் சின்னச் சின்ன பறவைகள். இத்தனை ரகமா !!


”கழனி செந்நெல் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரை கைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும் கனிகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்காற் கொக்கும்
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழுஉக்குரல் பரந்த ஓதையும் “

என கொஞ்சம் சிலப்பதிகாரம் ஞாபகம் வந்தது

நாங்கள் தங்கியிருந்த MM Holiday Inn ஊர்க் கோடியில் . ஜன சந்தடியில்லாத இடம். மேகங்கள் அவ்வப்போது பக்கத்து பள்ளத்தாக்கிலிருந்து புறப்பட்டு போயின

காதலர்கள், புதுசாய் கல்யாணம் ஆனவர்களுக்கு ஏற்காடு ஏரி படகு சவாரி அவ்வளவு உசிதமில்லை. அந்தரங்கமாய் ஒரு இடத்துக்கு படகை அவசரமாய் மிதித்துக் கொண்டுபோய் ஜோடியை வாத்சாயனமாய் வாசனை பார்க்கும் சாத்தியக் கூறுகள் கிஞ்சித்தும் இல்லை. மறைவிடம் என்பதே கிடையாது

ஏற்காடு ஏரி சின்னதுதான். ஊட்டி, கொடைக்கானல் போல அவ்வளவு விஸ்தீரணமில்லை. காக்காய் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் தலையை அசைக்குமே அது மாதிரி தலையை திருப்பினால் போதும். ஏரி முழுக்க பார்வையில் பதிவாகிவிடும். கொஞ்சம் நீட்டி விட்ட டபிள்யூ மாதிரி சைசில் இருக்கிறது.

கரைநெடுக திண்பண்டங்கள் கடை அணிவகுப்பு . அதன் முன் ஜனக் கூட்டம். ஒரு அலுமினியப் பாத்திரக் கடை கூடப் பார்த்தேன். அதன் முன்பும் கூட்டம். ஏற்காடு வந்து அலுமினியப் பாத்திரம் வாங்க வேண்டும் என்று சங்கல்ப்பம் போலும்.

ஏற்காடு ஏரியை உள்ளூர் நிர்வாகத்துடன் சேர்ந்து மதராஸ் அலுமினியம் லிமிடெட் என்ற கம்பெனியும் பராமரிப்பு செய்கிறது. இவர்கள் ஏரிக்கு நடு நாயகமாக ஒரு பவுண்டன் வைத்திருக்கிறார்கள்

பகோடா பாயிண்ட் என்ற ஸ்தலம் ஏற்காட்டில் பிரபலம். இப்படி ஒரு பட்சண லட்சணமாய் காரணப் பெயர் எப்படி வந்தது.

பகோடா என்றால் அடுக்கடுக்கான கட்டட அமைப்பு. ஸ்தூபி மாதிரி. கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் புத்தவிகார கட்டடங்கள் பகோடா வகை. உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர் ” லில்லி மலருக்கு கொண்டாட்டம் “என்று மஞ்சுளாவுடன் பாடிக்கொண்டிருக்கும் போது பாட்டின் கடைசியில் குண்டடிபட்டு ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து விழுவார் . அந்த கட்டடமும் பகோடா வகை.. இதே மாதிரி பிரமிடு அமைப்பு கற்கள் நாலு இங்கு பழங்குடி மக்களால் செய்யப்பட்டு உள்ளதால் இந்தப் பெயர் இங்கே ராமர் கோவில் ஒன்றும் இருக்கிறது.

இங்கிருந்து பார்க்கையில் பள்ளத்தாக்கு பரவசம் கண்ணிலும் பயம் அட்ரினிலாய் வயிற்றிலும். கம்பிக் கட்டையை விட்டு கொஞ்சம் தள்ளியே நிற்கணும். பக்கம் போனால் அடிவயிறும் காலும் கூசும். ”எனக்கு அப்படியெல்லாம் இல்லை” என்று யாராவது சொன்னால் , அவர் முந்தின ராத்திரி கொஞ்சம் ஜாஸ்தி ஜல போஜனம் பண்ணியிருக்கணும். அப்படியும் இல்லை என்றால் அவரை சீக்கிரம் டாக்டரிடம் கூட்டிப் போகவும்

மலை வாசஸ்தலங்களின் இலக்கணமாய் சில கோவில்கள், அருவி, சீட்டர்கள் இங்கும்.

Sound Sleep by night; study and ease,
Together mixt, sweet recreation;
And innocence, which does most please
With meditation

Thus let me live unseen unknown

என்று அலெக்சாண்டர் போப் சொன்ன மாதிரி இரண்டு நாள் ஒய்வு

ஆர்கே நாராயணின் மிஸ்டர் சம்பத் கொஞ்சம் படித்தேன். மத்தபடி ஓய்வுதான்.
ஞாயிறு மதியம் புறப்பட்டோம். ராத்திரி 10 மணிக்கு வந்த என்னை கரண்ட் போயிருந்த மாம்பலம் வரவேற்றது.

ஏற்காட்டில் காட்டேஜ் சிப்பந்திகள் , “இப்ப கிளைமேட் சூப்பர் சார் !! வேர்வையே இருக்காது “ என அடிக்கடி சொன்னது ஞாபகம் வந்தது.

Friday, 25 April 2008

கிராமர் கிருஷ்ணமூர்த்தி-1


CALL ME PLEASE என்று கிராமர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து எஸ். எம். எஸ். நான் ரொம்ப மரியாதையாக I AM GOING TO COME THERE IN THE EVENING என்று பதில் அனுப்பினேன். உடனே கூப்பிட்டு ஒரு பிடி பிடித்தார்.

”அதென்ன I AM GOING TO COME ; தமிழில் வரப்போகிறேன் அப்படினு சொல்லலாம். காரணம் “றேன்” அப்படிங்க்றது ப்யூச்சர் டென்ஸ். அதையே இங்கிலீஷில் I AM GOING TO COME சொல்றது தப்பு. I WILL BE COMING இப்படி சொல்லு“

”அதில்ல சார் விஷயம் அர்த்தமாயிடுத்தில்ல”

”நீ சொன்னா கேட்க மாட்டியே. இப்ப நான் ஒன்னு சொல்றேன். WHAT IS YOUR NAME இதை தமிழில் எப்படி சொல்வே “

“ உங்கள் பெயர் என்ன”

“பார்க்கப்போனா WHAT IS YOUR NAME இதை தமிழில் அட்சரமா மொழிபெயர்த்தால் உங்கள் பெயர் என்னவாக இருக்கிறது – இப்படித்தானே வரணும்- இப்ப புரியுதா. ஒவ்வொரு பாஷைக்கும் ஒரு வழக்கு இருக்கு”

“சரி தான் சார்”

“ சந்தோஷம். ஆமாம் என்னைப் பத்தி எழுதறேன்னு சொல்லிட்டு என்னையே அச்சு அசலா வரைஞ்சு போட்டிருக்கே”

” அது என் அண்ணா கண்ணன் வரைஞ்சது சார்”

”என்னை உன்னோட செல் போன்லே போட்டோ பிடிச்சு அனுப்பினியா”

“இல்லை சார் உங்களைப் பத்தி சொன்னேன். கொஞ்சம் அடையாளங்களும் சொன்னேன். அதை வச்சிண்டு வரைஞ்சார்”

அப்படியே என்னை மாதிரியா இருக்கு. நான் ரொம்ப சந்தோஷம்னு சொன்னேன்னு உன் அண்ணாகிட்டே சொல்லு. அப்புறம் என்ன பார்க்க வரச்சே உன் கல்யாணப் பத்திரிக்கை கொண்டு வா”

“சார் எனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கு. இப்ப போய் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்றேளே”

“போனை உன் பொண்டாட்டிக்கிட்ட குடு.. அப்ளக் குழவியால தலையில நங்னு போடச் சொல்றேன். உன் கல்யாணப் பத்திரிக்கை கொண்டு வா. சொல்றேன்.”

போனை வைத்துவிட்டார்.

என் கல்யாணப் பத்திரிக்கையில் இவர் என்ன செய்யப் போகிறார். ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. அதனால இந்த கல்யாணமே செல்லாது என்று சொல்லிவிடுவாரோ. போய்த்தான் பார்க்கலாம்

Thursday, 24 April 2008

பூமி ரொம்பப் பெரிசு


பூமிக்கு வெளியே ஒரு இடம் தாருங்கள்.. பூமியை கொஞ்சம் நகர்த்திக் காட்டுகிறேன் என ஆர்க்கிமிடிஸ் சொன்னதை படித்திருப்பீர்கள். நெம்பு கோல் தத்துவத்தை கண்டுபிடித்த ஆர்வத்தில் கொஞ்சம் அதிகமாய்ச் சொல்லிவிட்டார். பூமிக்கு வெளியே இடம் தர முடியாது. அப்படி வந்தால் பார்துக்கலாம் என நினைத்திருப்பார்.

இதைக் கொஞம் விவரமாகப் பார்க்கலாம்

60 கிலோ எடை உள்ள ஒரு பாறாங்கல்லை ஒரு மீட்டர் அந்தண்டை தள்ளி வைக்க சுமார் ஒரு குதிரை சக்தி எனர்ஜி வேண்டும் வேண்டும். சுமார் ஒன்றரை மீட்டர் நீளமான நல்ல கடப்பாரை வேண்டும். இந்த ரீதியில் கணக்கு செய்தால் 6000000000000000000000 டன் எடையுள்ள பூமியை ஒரு செண்டிமீட்டர் நகர்த்தவே அவருக்கு 1000000000000000000 கிலோ மீட்டர் நீளமான கடப்பாரை வேண்டும். இப்படி கின்னஸ் சைஸ் கடப்பாரை செய்யத பின் பூமியில் இரும்பே இருக்காது. சரி இதெல்லாம் செய்து கொடுத்துவிடுவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும். இந்த ராட்சச காரியம் செய்து முடிக்க அவர் எவ்வளவு நேரம் ம் .... ம் ...... ம்.... ம் ..........ம்... னு தம் கட்டணும் தெரியுமா 1000000000000000000000 விநாடிகள் அதாவது 30 மில்லியன் மில்லியன் வருஷங்கள். ஆர்க்கிமிடிஸ் ஒரு வேளை ஒளி வேகத்தில் அதாவது ஒரு செகண்டுக்கு 30000 கிலோமீட்டர் வேகத்தில் முக்கினால் கூட பத்து மில்லியன் வருஷம் முக்கினால்தான் பூமி சும்மா ஒரு செண்டி மீட்டர் நகர்ந்து கொடுக்கும்

இந்த மாதிரி பூமியை அநாயசமாக நகர்த்துவது இல்லை சும்மா மூக்கிலே வைத்து தூக்கிண்டு வரதெல்லாம் பெருமாளாலதான் முடியும்.

திருமங்கையாழ்வார் சொல்வதைக் கேளுங்கள்

சிலம்பினிடைச் சிறுபரல்போல்
பெரிய மேரு
திருக்குளம்பில் கணகணப்பத்
திருவா காரம்
குலுங்க, நில மடந்தைதனை
யிடந்து புல்கிக்
கோட்டிடைவைத் தருளியவெங்
கோமான் கண்டீர்,

Tuesday, 22 April 2008

கிராமர் கிருஷ்ணமூர்த்தி- அறிமுகம்



கிராமர் கிருஷ்ணமூர்த்தி- எனக்கு அமைந்த நண்பர்களில் ஓர் அதிசயம். நம்மை விட சுமார் 20 வயசு ஜாஸ்தியான ஒருவரை நண்பர் என சும்மா பேச்சுக்கு சொல்லலாம்.. ஆனால் கிராமர் கிருஷ்ணமூர்த்தி நிஜமான நண்பர். ” உடுக்கை இழந்தவன் கைபோல “ ரிலையபிள் ஆசாமி. என்ன தொட்டதுக்கெல்லாம் ”உன் இங்கிலீஷ் சரளமா இருக்கு ஆனா நிறைய கிராமர் மிஸ்டேக்” என்று எல்லாரையும் காலை வாரிவிடுவார். புரிந்திருக்குமே “கிராமர் “ என்ற விருதின் பின்புலம்.

நான் இந்த மாதிரி BLOG தொடங்கியுள்ளேன் என அவருக்கு ஒரு எஸ். எம். எஸ் அனுப்பி வம்பில் மாட்டினேன். மறு விநாடி அவர் போனில்,

“ஏம்பா அதென்ன BLOG டிக்‌ஷனிரியில் அப்படினு வார்த்தையே இல்லையே”

“சார் அது ஒருவெப்சைட் மாதிரி. படிச்சு பாருங்கோ ! எப்படி இருந்ததுனு சொல்லுங்கோ “

“ அப்படியா சாவகாசமா படிக்கிறேன்...ஆமா உன்னிடம் ஒரு வேலை சொன்னா நீ என்னப்பா இன்னொருத்தர்கிட்ட கொடுத்துட்டே.. அவர் எப்படி நல்லா பண்ணுவாரா ?”

”சார்.. எனக்கு ஆபிஸில் கொஞ்சம் வேலை டைட்டா இருக்கு அதனால என் சிநேகிதர்கிட்ட கொடுத்தேன். நல்லா பண்ணுவார். He is even better than me”

“ He is better than me னு சொல்லக் கூடாது He is better than I அப்படினு தான் சொல்லனும். நாம சாதாரணமா ME னு சொல்லுமபோது நான் அப்படினு என்னுடைய எனது அப்படி அர்த்தம் பண்ணிக்கிறோம். ஆனா நம்மை மத்தாவாளோட கம்பேர் பண்ணும் போது I தான் கரெக்ட்.. “

பதினாறு பாஷை பேசவும் எழுதவும் தெரிந்த அவரிடம் மேலும் பேசி வம்பில் மாட்ட விரும்பாமல் சிரித்தேன்.

“சிரிக்காதே. இப்பவே உனக்கு இதில் நல்ல ரெபரன்சோட மெயில் அனுப்பறேன் “
சொன்ன மாதிரியே 10 நிமிஷத்தில் மெயில் இருக்கும்

இவர் பல தடவை எல்லாரையும் டீஸ் செய்தாலும், சகல பாஷைகளிலும் விஷயம் கொட்ட கொட்ட பேசுவார். என்ன பேச்சை நிறுத்தத் தெரியாது. அது தான் பிரச்சனை. அவரைப் பற்றி அவர் பெர்மிஷனுடன் எழுதப்போகிறேன்.

Monday, 21 April 2008

சுஜாதாவிடம் கற்றதும் ... பெற்றதும்-1


நாகர்கோவிலில் ஒரு கல்யாணம். அதற்காக போயிருந்தேன். எனது கல்லூரித் தோழன் சிவகுமார் கன்னியாகுமரிதான். எனவே கல்யாணம் முடிந்த கையோடு அவன் வீட்டுக்குப் போனேன்.

மீன்பிடி விசைபடகில் கடலில் ஒரு ரவுண்டு அழைத்துக் கொண்டு போனான். விவேகாநந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை இரண்டையும் ரியர் வ்யூவில் பார்த்தேன். சில போட்டோக்களும் எடுத்தேன்.

“சிவா இப்படியே. தெற்கே போனால் அண்டார்டிகா வந்துடாது “

“ வழியிலேயே கோஸ்ட் கார்ட் அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய்டுவான்.. வேணா ஒன்னு பண்ணலாம் கொஞ்ச தூரம் தெற்கே போயிட்டு அப்படியே கிழக்கே வந்து திரும்பிடலாம். சன் செட்டிங் கடல்லேர்ந்தே பாக்கலாம்”

நானும் உற்சாகமானேன். என்னுடைய கைப்பையில் வைத்திருந்த பொடி செய்த அவோமின் எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன்.

“என்னடா அது “

”வாந்தி வந்தால் .... அதுக்குதான்.. கடல்ல ரொம்ப நேரம் பயணம் பண்ணினால் பழக்கம் இல்லாதவர்களுக்கு வாந்தி வரும்"
--
எல்லன் பொடி போலிருந்த மருந்து பொட்டலத்தை எடுத்து வைத்தாள். “எமிலி ! கடற்பிரயாணத்தில் வாந்தி வந்தால் இதை சாப்பிடு “
- சுஜாதாவின் "ரத்தம் ஒரே நிறம்"

Friday, 18 April 2008

கமல்ஹாசன் கோபித்துக் கொள்ள மாட்டார்


காதலி காதலன் உரையாடல் ஒன்று பாருங்கள.

”அங்கே என்னப்பா டிரம் சத்தம் ?”
“அது ஒண்ணுமில்லமா சிப்பாய்ங்க மார்ச் பாஸ்ட்”
“என்னெவோ ஒரு வெளிச்சம் சரக் சரக்னு கண்ணுல அடிக்குது ?”
“அவங்க கத்தி வச்சிருக்காங்கல்ல அதுல வெளிச்சம் பட்டு எதிரொளிக்குது”
”இங்க மலைக்கு அடியில என்ன பண்றாங்க”
“அதும்மா. அவங்க இப்படித்தான் டெய்லி பிராக்டிஸ் பண்ணுவாங்க”
“அங்க பாருப்பா. சடனா கிளம்பிட்டாங்க.... எங்க போவாங்க”
“ஏதாவது செய்தி வந்திருக்கும்மா... நீ ஏன் முட்டிபோட்டு எம்பி பார்க்கிற.... நேரா உக்காரு”
“வழில டாக்டர் வீட்ட தாண்டி இந்த பக்கமாதான் வராங்கப்பா”
“ அங்க ஏதாவது வேலை இருக்கும்மா”
“அய்யோ இங்க தான் வராங்க .. நீ எங்க எழுந்து போறே... என்ன விட்டு போக மாட்டேன்னு சத்தியம் பண்ணிருக்கே.... ஞாபகம் இருக்கா?”
”ஆமாம் சத்தியம் பண்ணேன்.. இப்பவும்.. சொல்றேன்.. நான் உன்னை ரொம்ப விரும்பறேன்.. ஆனா இப்ப இவங்க கூட போய் பட்டாளத்தில் சேரத்தான் வேணும்... வரேன்”

நிலம் அதிர வேகமாய் அவர்களுடம் போனான்

சரியாக 25 வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்த ஆங்கில கவிதை.

1934 ல் W. H AUDEN எழுதிய பாலட் வகைக்கவிதை- (ஒரிஜினல் கடைசியில் கொடுத்துள்ளேன்)

எனக்கு இந்த கவிதையை சொல்லிக் கொடுத்த செரியன் ஜேக்கப் ஒரு அபார ஞானஸ்தன். ஆங்கில வகுப்பு ஒரு டிராமா மாதிரி நடத்துவார். மலையாள வாசனை இல்லாமல் ஆங்கிலம் பேசும் சில அபூர்வ மலையாளிகளில் ஒருவர்.

அவர்... அவர் சொல்லிக் கொடுத்த சில ஆங்கில அபூர்வங்கள்.. பக்கத்தில் வந்தால் அவரிடமிருத்து வரும் சார்மினார் சிகரெட் வாசம் எல்லாம் ஞாபகம் இருக்கு

இந்தியன் படத்தில் கமல்ஹாசன் சுகன்யாவுக்கு பொட்டுவைத்துவிட்டு தாவிப் போய் ஐ. என் . ஏ வில் சேருவதாய் வரும் காட்சி... இந்த கவிதையிலிருந்து உண்டான இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் கமல்ஹாசன் கோபித்துக் கொள்ள மாட்டார்.

இப்போதெல்லாம் மெரினாவில், ரொம்ப நெருக்காமாய் ஒருவித “பச்சக்” ஸ்திதியில் ஆலிங்கன சொரூபமாய் காட்சி தரும் காதலன்கள் தேசபக்தி காரணமாய் சடக்கென்று வெட்டிவிட்டு காதலியை பிரிந்து போவார்கள் என்று தோன்றவில்லை.
----
O what is that sound which so thrills the ear
Down in the valley drumming drumming?
Only the scarlet soldiers, dear,
The soldiers coming

O what is that light I see flashing so clear
Over the distance brightly, brightly?
Only the sun on their weapons, dear,
As they step lightly.

O what are they doing with all that gear,
What are they doing this morning, this morning?
Only their usual manoeuvres, dear.
Or perhaps a warning.

O why have they left the road down there,
Why are they suddenly wheeling, wheeling?
Perhaps a change in their orders, dear.
Why are you kneeling?

O haven't they stopped for the doctor's care,
Haven't they reined their horses, their horses?
Why, they are none of them wounded, dear.
None of these forces.

O is it the parson they want, with white hair,
Is it the parson, is it, is it?
No, they are passing his gateway, dear,
Without a visit.

O it must be the farmer who lives so near.
It must be the farmer so cunning, so cunning?
They have passed the farmyard already, dear,
And now they are running.

O where are you going? Stay with me here!
Were the vows you swore deceiving, deceiving?
No, I promised to love you, dear,
But I must be leaving.

O it's broken the lock and splintered the door,
O it's the gate where they're turning, turning;
Their boots are heavy on the floor
And their eyes are burning.

Thursday, 17 April 2008

நான் மகேந்திர பல்லவனா ?


“மூணு நாள் லீவு சிதம்பரம், சீர்காழி கோவில் எல்லாம் பார்த்துட்டு வரலாமா?” நண்பர் எல் ஐ சி வெங்கட்ராமன் ஆரம்பித்து வைத்தது தான்.

”வைத்தீஸ்வரன் கோவில் போய் நாடி ஜோஸ்யம் பார்ர்கலாம்” என் சகா தியாகராஜன் ஆர்வத்தை ஜாஸ்தியாக்கினான்.

“அதென்னப்பா நாடி ஜோஸ்யம் அடிக்கடி போறியே கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன்” என்று நான் கேட்டது தான் தாமதம்.

”அதாவது உலகத்தில் பிறந்த, பிறக்கப் போற எல்லாரப் பத்தியும் ஓலைச் சுவடியில் எழுதி வச்சிருக்கும்”

“ லாஜிக்கலாகவே இல்லையே” வெங்கட்ராமன் எதிர் வாதம் செய்தார்

“அப்பிடி இல்லை சார். அந்த கால ரிஷிகள். எல்லா ஜீவராசிகளின் க்டந்த கால் ,நிகழ்கால எதிர் கால வாழ்க்கையை ஞான திருஷ்டியால் கணிச்சு பாட்டா பாடி வச்சிருக்காங்க”

தத்தியான தியாகராஜன் கஷ்டமான எங்கள் டிபார்ட்மெண்ட் டெஸ்ட் எப்படி பாஸ் பண்ணுகிறான் என ஒரு மாதிரியாய் விளங்கியது.

“ஏம்பா தியாகு ஒரு பர்டிகுலர் பெர்சனைப் பத்தின பாட்டுனு எப்படி தெரியும்” விடாமல் கேட்டேன்.

“ அதுக்கெல்லாம் முறை இருக்கு. நீ போன ஜன்மங்களில் என்னவாய் இருந்தாய் என்பது கூட சொல்லாம்”

என்னுடைய ஆர்வம் கன்னாபின்னா என்று எகிறியது

தியாகராஜன் மேலும் காகபுசுண்டர் நாடி, கெளசிக நாடி, சப்தரிஷி நாடி என வெரையிட்டியாக தாக்கினான்.

நான் போன ஜன்மத்தில் யாராக இருந்திருப்பேன் என்று தெரிந்து கொள்வதில் அலாதி ப்ரீதி வந்த்துவிட்டது. காலையில் ரொம்ப சீக்கிரம் 3 மணி வாக்கில் கிளம்பி நேரே சிதம்பரம் போய் கோவில் பார்த்துவிட்டு திரும்ப தஞ்சாவூர் வரும் வழியில் வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோஸ்யம் பார்ப்பதாய் தீர்மானம் ஆனது.

போன ஜன்மம் பத்தின என் ஆசை தூக்கம் வராமல் செய்தது

யாராக இருந்திருப்பேன்.

சட்டென்று ஞாபகம் வந்தது காந்தி.. ஹூஹூம். ரொம்ப நல்லவராய் அடிப்பவனை திருப்பி அடிக்காத அசடாய்- எல்லா காரியமும் செய்து கொடுத்து விட்டு எந்த பதவியும் இல்லாமல் பொசுக்குனு குண்டடி பட்டு.....நிராகரித்தேன்

பாரதியார்.... கம்பீரம், கவிதை மிடுக்கு எல்லாம் ஒகேதான். ஆனால் போகாதே போகாதே என்றால் யானையிடம் போய்... இப்படி அழிச்சாட்டியம் பண்ண ஒருத்தராய் இருந்திருப்பேனா.. ரிஜக்டட்

சர். சிவி. ராமன், நேரு, கர்ணன், ... வேகமாய் பல Resume களை நிராகரித்தேன்.

மகேந்திர பல்லவன்... ம்ம்ம் இருக்கலாமோ.. ராஜா..... நடனம்.. நாட்டியம் கலைகளில் அபார பிரேமை.. ரொம்ப தந்திரசாலி.. ஆனாலும் காதலைப் பிரிச்சதாவும் புலிகேசிகிட்ட தோத்ததாகவும் பிளாக் மார்க்..குறிப்பா பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி என்று எந்த குறிப்பும் இல்லை. இப்படி குணம் நாடி குற்றமும் நாடி குணமே மிகுதி என்று முடிவு செய்தேன். போன ஜன்மத்தில் நான் ம்கேந்திர பல்லவனாய் இருந்த்திருக்க ஆசைப் பட்டேன். கால சாத்தியம் இல்லாத அபத்தமாய் இருந்தாலும் நான் போன ஜன்மத்தில் மகேந்திர பல்லவன் தான் என்று நாடி ஜோஸ்யத்தில் சொன்னால் _____ செய்கிறேன் என்று பிள்ளையாருக்கு வேண்டிக் கொள்ள வேறு செய்தேன்.

காலையில் பட்டு பீதாம்பரம் சகிதம் கிளம்பி நின்ற என்னை பார்த்து கிச்சா கேட்டான் ,”என்னடா இதெல்லாம்.. கல்யாணத்துக்க்கா போறோம். சீ போய் டிரெஸ் மாத்திட்டு வா” என்று விரட்டி பாண்ட் போட வைத்தான்

பஸ்சில் போகிற வழியெல்லாம் எனது பல்லவ அபிப்ராயம் ரொம்ப ஸ்டிராங்காகி விட்டது. வழியில் பார்த்த கடை போர்டில் தெரிந்த அம்பிகா, ராதா எல்லார் மாதிரியும் காற்றில் வரைந்து கொண்டே வந்தேன். போட்டிருந்த மோதிரம் ரிஷப இலட்சினை பொறித்த அடையாள முத்திரையாக மாறிவிட்டதா என்று வேறு அடிக்கடி பார்த்துக் கொண்டே வந்தேன்.

பக்கத்தில் உட்கார்த்திருந்த கணபதி சுப்பிரமணியன், “ என்ன சந்துரு உடம்பு சரியில்லையா” என்று கேட்டதற்கு

“இல்லையப்பா நான் நலமாகவே இருக்கிறேன்” என்று மறு மொழி பகன்று விட்டு ஒரு ராஜா பார்வை வேறு பார்த்தேன். அவன் அவசரமாக என்னை விட்டு நாலு வரிசை தள்ளி தாவிப் போய் உட்கார்ந்து கொண்டான்

நேரே சிதம்பரம் கோவில்

சபாநாயகரை தரிசனம் செய்துவிட்டு பிரகாரம் சுற்றி வந்தோம். அங்கே மண்டபத்தில் ஜடா மகுடதாரியாய் ஒரு சிவனடியார்.

“டேய் யாரோ பிச்சைக்காரண்டா “ நண்பர்களின் எச்சரிக்கையை உதாசீனித்துவிட்டு சிவனடியாரை சமீபித்தேன். அவர் என்னை நிஜமாகவே பூர்வஜன்ம வாத்சல்யமாய்ப் பார்த்துவிட்டு ரோஜா பூவும் திருநீறும் கொடுத்தார். எங்கே என் மோதிரத்தை கழற்றி அவரிடம் கொடுத்துவிடப் போகிறேனோ என்று அங்கிருந்து என்னை பெயர்த்து மீட்டு வந்தனர்


அகஸ்தியரோ காக புண்டரோ ஏதோ பெயர் போட்ட ஒரு நாடி நிலையத்தை நாடிப் போனோம் ”நாடி ஜோஸ்ய சாகரா பூச முத்து” என்று நேம் போர்டு போட்டிருந்தது.

தியாகு ரெகுலர் கஸ்டமர். அங்கே வேலை பார்பவர்கள் எல்லாம் அவனைப் பார்த்து சிநேகமாய் சிரித்தார்கள்

ஒரு மத்திய வயசு ஆசாமி பேப்பர் எடுத்து வந்து “நாடி பாக்கணுங்றவங்க இதுல இடது கட்டை விரல் ரேகை வைங்க” என்றார்.

“என்ன தியாகு இது”

“அதில்ல சந்துரு. ஒருத்தர் ரேகை மாதிரி இன்னொருத்தர் ரேகை இருக்காதில்ல – அதனால இந்த ரேகை வச்சிதான் உனக்கு உண்டான சுவடி எடுப்பாங்க” இதனால் எனது பிரமிப்பு ஜாஸ்தியானது. ரேகை வைத்தேன்

கொஞ்ச நேர காத்திருப்புக்குப் பின் அழைக்கப்பட்டோம். பூச முத்தானவர் எனக்கு ஆசை முத்துவாக தெரிந்தார்.

என் நண்பர்கள் ஒவ்வொருவரும் இந்த பிறவி சங்கதி மட்டும் பார்த்தனர். எல்லாமே பாட்டுதான். ஒல்லியாய் நாற்பது பக்க நோட்டில் எழுதிக் கொடுத்தனர். குண்டு குண்டாய் அழகான கையெழுத்து. பூசமுத்து என்ற நடுநாயகர் சொல்ல சொல்ல இன்னொருத்தர் எழுதினார்.

”வெளியில் காத்திருக்கும் கூட்டம் இனிமேல் வரப்போகும் கூட்டம் இத்தனைக்கும் எத்தனை 40 பக்க நோட்டு வேணும். நல்ல பிசினஸ்” என் காதில் கிச்சா முணு முணுக்கும் போது என் முறை வந்தது


“சாருக்கு என்ன பார்க்கணும் .. பொதுவாப் பார்த்தா போதுமா ? இல்லை காண்டம் காண்டமா பார்க்கணுமா”

“எனக்கு போன ஜன்மத்தில் என்னவா இருந்தேன்னு தெரியனும்.. முடியுமா”

”சாதாரணமாக சொல்றதில்லை .. ஆனா அபூர்வமா கேக்றிங்க செலவாகும் பரவாயில்லையா ?”

போன ஜன்மத்தில் நான் பல்லவ சக்ரவர்த்தி என்று ஊர்ஜிதம் செய்ய இது கூடவா செலவு செய்ய முடியாது,, , “பரவாயில்லை பாருங்க.. ம்ம்ம் எவ்வளவு ஆகும்”

”____ ரூபாய் ஆகுங்க “

நண்பர்கள் “வேண்டாண்டா.. திரும்ப்பி போறது தவிர கொஞ்சம் தான் கூட காசு இருக்கு”

தஞ்சாவூருக்கு நடந்தே திரும்பி சென்றுவிடலாம் என்று அசட்டு நம்பிக்கையில் , “ஓகே” சொல்லிவிட்டேன்.

இந்த பிறவியில் நான் யார் யாருடைய பிள்ளை அக்கா, அண்ணன் பேரு எல்லாம் நாடியில் பார்த்து ஊர்ஜிதம் செய்தனர். என்னுடைய இடது கை பெருவிரல் ரேகை மட்டும் வைத்துக் கொண்டு இத்தனை சொன்னதே எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை

“பார்த்தியா அகஸ்தியர் நாடி பெர்பெக்டா இருக்கும்” தியாகு ஒருவேளை அகஸ்தியரின் பேரனாகக் கூட இருக்கலாம்.

என்னுடைய பூர்வ ஜென்ம ரெக்கார்டுகளை தேடி ஒரு சிஷய பட்டாளம் உள்ளே போயிருந்தது. நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பின்னே எத்தனை நூற்றாண்டு பின்னே போக வேண்டும். ஆறம் நூற்றாண்டா .. இல்லை எட்டாம் நூற்றாண்டா..

மனசுக்குள் பரிவாதினி யாழ், ருத்திராச்சாரியார் என்று மிக்சர் ஓடியது.

பரஞ்சோதி ஊர் திருவெண்காடு கூட இங்கே பக்கத்தில்தான் … ஞான சம்பந்தர் பற்றி கேட்க வேண்டும் அவரும் அப்பர் பெருமானும் இப்போது எங்கே யாராய் பிறந்திருப்பார்கள்

தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

அப்பர் திருவெண்காட்டில் பாடிய தேவாரம் மனசில் ஒடியது

இதோ வந்து விட்டார்கள்..

கையில் ஏராளமாய் ஒலைச்சுவடிகள். இருக்காத பின்னே எத்தனை சாதனைகள்

பூச முத்து ஆரம்பித்தார்

ஒரு பாட்டை பாடிவிட்டு அதாவது உங்க போன ஜன்ம தகப்பனார் பேரில் சிங்கம் இருக்கு பெருமாளும் இருக்கு

மனசுக்குள் சபாஷ் போட்டேன். மகேந்திர பல்லவனின் தந்தை சிம்ம விஷ்ணு.

பூச முத்து தொடர்ந்தார்... அவர் சொல்ல சொல்ல என் சுவாரசியம் குறையத் தொடங்கியது.. முடிக்கும் போது அவர் மோச முத்துவாக தெரிந்தார். டக்கென்று முடித்துவிட்டார்.

அப்படியானால் போன ஜென்மத்தில் நான் ._________ வா இருந்திருக்கேனா ?

கேட்டபடி அந்த பெரிய தொகையை கொடுத்துவிட்டு பஸ்ஸுக்கு காசில்லாமல் சாயங்காலம் கள்ள ரயில் ஏறி தஞ்சாவூர் வந்தோம்.

பல வருஷம் கழித்து கணபதி சுப்பிரமணியத்துடன் குடும்ப சகிதமாக இன்னிக்கு மஹாபலிபுரம் வந்தேன். ரிசார்ட்டில் ரூம் போட்டு விட்டு ஜன்னலில் தெரியும் கடல் கோவிலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Wednesday, 16 April 2008

MAN OF THE MATCH


எனது நண்பன் வில்லியம்ஸ் அசகாய சூரன். இப்போது நாங்களிருவரும் தினசரி எஸ். எம். எஸ் / சாட் / மெயில் எப்போதாவ்து போன் என்ற தூரத்த்தில் இருந்தாலும் சின்ன வயசில் ஒன்றாகவே இருந்தோம். என்னைவிட நாலு வயசு பெரியவன்.

கையெழுத்துப் பத்திரிக்கை; பின்னர் அதைப் பிரிண்டில் கொண்டு வந்தது என்ற எனது கல்லூரி வயசு சாதனைகளின் பின்னால் மறைவாக நிற்கும் ஆறடி ஆசாமி. இந்தக் கதை அவனைப் பற்றி அல்ல

“டேய் ஒரு கிரிக்கெட் டோர்ணமெண்ட் நடத்தி சீப் கெஸ்டா கவாஸ்கரை வரவழைத்தால் எப்படி இருக்கும்” நான் எப்போதுமே இப்படித்தான் வில்லியம்ஸை உசுப்பேத்துவேன். அந்த 17-18 வயசில் எதை செய்யணும் எது வேண்டாம் என்ற ஆராய்சியெல்லாம் கிடையாது. நண்பன் சீரியசாக எடுத்துக் கொண்டு களம் இறங்கிவிட்டான்.

கவாஸ்கர் சீப் கெஸ்ட் என்பது தவிர ஒரு நிஜ கிரிக்கெட் பந்தயத்தின் எல்லா லட்சணங்களையும் தனி ஆளாய் கொண்டு வந்தான்.

சைட் ஸ்கிரின் அளவுக்கு இருந்த ஸ்கோர் போர்ட் எனது வியப்புகளில் சாஸ்வதமாய் இருக்கிறது. டோர்ணமெண்டின் விதிமுறைகள் எல்லாம் அவனே எழுதினான்.

எனக்கு JURY – MAN OF THE MATCH AWARD என்ற கவர்ச்சியான நீதிபதி பதவி தந்தான்

புதுக்கோட்டை ராஜாஸ் காலேஜ் மைதானம். என் வாழ்நாள் முழுவதற்குமான லார்ட்ஸ் மைதானம்.

75 யார்ட் பௌண்டிரி, சின்னதாய் படபடக்கும் பவுண்டிரி கொடிகள் சின்ன மேட்சுகளுக்கு கூட யுனிபார்மில் வரும் அம்பயர்கள், அந்த நாட்களிலேயே ராட்ச்ஸ ஸைசில் சைட் ஸ்கிரின், பிரிடடிஷ் பாரம்பரிய பெவிலியன், அதன் முகப்பில் ஒரு புராதான் கடிகாரம் வசீகரமான புல் தரைக்கு நடுநாயகமாய் கிரிக்கெட் பிட்ச்...

எத்தனையோ டெஸ்ட், ஒரு நாள் பந்த்யங்களை வெவ்வேறு கிரவுண்டுகளில் பார்த்திருந்தாலும் எனது நினவுகளில் விஸ்வரூபமாய் நிற்பது அந்த மைதானமே.

டோர்ணமென்டின் எல்லா மாட்சுகளும் சகஜாமாய் போய்விட்டன. பைனல் மாட்ச். எனது வழுவாத நீதி பரிபாலனத்திற்கு ஒரு சோதனையாய் வந்தது

MAN OF THE MATCH AWARD க்கான விதிகளின் ஷரத்துகளில் இவ்வளவு சூட்சுமம் இருப்பது முன்பே தெரிந்திருந்தால் அந்த நீதிபதி பதவியை ஏற்றே இருக்கமாட்டேன். இத்தனை ரன் அடித்தால் இத்தனை பாயிண்ட், இத்தனை விக்கெட்டுக்கு இத்தனை பாயிண்ட், காட்ச் பிடித்தால் எவ்வளவு, ரன் அவுட் ஆக்கினால் எவ்வளவு என்ற உபத்திரமில்லாத ஷரத்துக்கள் தானிருந்தது. இரண்டு பேர் சமமாய் பாய்ண்ட் எடுத்தால் அந்த கோப்பையை யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற சிக்கலான விஷயத்துக்கு அதில் தீர்வு இல்லை.

சமமாய் பாயிண்ட் எடுத்துள்ள திருப்பதியும், சிவராமனும் எனக்கு முன்பு.

திருப்பதி எனது ஸ்கூல் மேட். சிவராமன் எனது அப்போதைய புரொபசரின் மகன். தர்ம் சங்கடம்

மாட்ச் விதிகள் எனக்கு கை கொடுக்காது என தெரிந்தபின் சொந்த லாப நஷ்டக் கணக்குகளை ஆராய்ந்தேன்.

சிவராமன் – இந்த MAN OF THE MATCH AWARD கிடைக்கவில்லை என்றால் அவன் அப்பாவிடம் போய் சொல்லுவானா? மாட்டான். அப்படியே சொன்னாலும் என் அப்பாவும் புரொபசர் தானே.. சமாளித்து விடலாம்

திருப்பதி- எனது ஸ்கூல் காலத்தோழன்.. இன்று காலையில் கூட அவன் மாமா வாங்கி வந்த ராத்மென்ஸ் சிகரெட் பிடிக்கக் கொடுத்தான். எல்லாவற்றையும்விட முக்கியம் அவன் பெயர்... எனது குல தெய்வம்..

நான் தீர்மானித்துவிட்டேன்


ஒரு CAUGHT AND BOWLED விக்கெட்டுக்கு தனக்கு இரண்டு பாயிண்ட் தர வேண்டும் என்ற சிவராமனின் நியாயமான வாதத்தை புறக்கணித்தேன். ஜூரியின் முடிவு விவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று ஒரு ஷரத்து விதிகளின் கடைசியில் இருந்து எனக்கு ரொம்ப சௌகர்யமாய்ப் போய்விட்ட்து. இப்படியல்லவோ ஒரு வீட்டோ பவர் இருக்க வேண்டும்

இருபது வருஷம் கழித்து ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் ..நேற்று திருப்பதி சிவராமன் ரெண்டு பேரையும் பார்த்தேன்.

ஒரு விருந்துக்காக ஹோட்டலுக்கு போயிருந்தேன். அங்கே ராட்சஸ திரையில் ஷார்ஜாவில் நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் மாட்ச். அதில் விருது வழங்கும் விழா.

MAN OF THE MATCH AWARD ஐ ஒரு வெள்ளைக்கார பிளேயருக்கு வழங்கியது ஒரு பெரிய கம்பெனி அதிகாரியாய் சிவராமன். இவன் எனது நண்பன் என்று ஆபிஸ்காரர்களிடம் பெருமையடித்துக் கொண்டேன்.

வெளியில் வரும் போது கார் பார்க்கிங்கில் திருப்பதியைப் பார்த்தேன். அட்டெண்டராய். விசில் ஊதிக் கொண்டு போகும் வரும் கார்களின் போக்குவரத்தை கவனித்துக் கொண்டு..

”திருப்பதி ”...

உடனே திரும்பினான்.. என்னைப் பார்த்ததும் ரொம்ப பரவசமானான். இத்தனை வருஷ இடைவெளியை கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு ,”நான் புறப்படறேன்”. என்றேன். பாக்கெட்டுக்குள் கைவிட்டு எடுத்து நீட்டினான். ஒரு பாக்கெட் ராத்மென்ஸ் சிகரெட்.

Sunday, 13 April 2008

சுஜாதாவுக்கு மற்றொரு இமெயில் CC TO ஆழ்வார்கள்




சுஜாதா சார்

வணக்கம்.

தங்களின் ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் பக்கம் 83 பார்க்க

“எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கரசு என்னுடை வாணாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவருயிர் செகுத்தஎம் அண்ணல்
வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை
மாமணிக்கோயில் வணங்கி
நம்பிகாய் உள்ள நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்”

நாலாயிர திவ்யபிரபந்தத்தில் 953 வது பாசுரம். திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்தது


இதில் குறிப்பிடும் மாமணிக் கோயில் தஞ்சையில் எங்கிருக்கிறது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

என்ன சார் இப்படி சொல்லிவிட்டீர்கள்

இந்த திவ்ய தேசம் தஞ்சாவூருக்குப் பக்கத்தில் சுமார் 2 கி.மீ தூரத்தில் வெண்ணாற்ற்ங்கரையில் உள்ளது

இதற்குப் பக்கத்தில் சுமார் ஒரு மைல் தூரத்தில் தஞ்சை மணிகுன்ற பெருமாள், தஞ்சை யாழி பெருமாள் என்று இரண்டு வைணவத்தலங்கள் உள்ளன.

தஞ்சை மாமணிக் கோவில், தஞ்சை மணிகுன்ற பெருமாள், தஞ்சை யாழி பெருமாள் இவை மூன்றும் சேர்ந்து ஒரு திவ்ய தேசமாக கருதப்படுகிறது

தஞ்சை மாமணிக் கோவில்

மூலவர்:கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலமாய் நீலமேகப் பெருமாள்
தாயார்: செங்கமலவல்லித் தாயார்
தீர்த்தம் :அம்ருத தீர்த்தம்

தஞ்சை மணிகுன்ற பெருமாள் கோவில்

மூலவர்: மணிகுன்ற பெருமாள்- கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தாயார்: அம்புஜவல்லித் தாயார்
தீர்த்தம் : ஸ்ரீராம் தீர்த்தம்

தஞ்சை யாழி பெருமாள் கோவில்

மூலவர்: நரசிம்மர் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தாயார்: தஞ்சை நாயகி
தீர்த்தம் சூர்ய புஷ்கரணி, ஸ்ரீராம் தீர்த்தம்

நீங்கள் குறிப்பிட்ட பாசுரம் 953 தவிர திருமங்கை ஆழ்வார் இந்த திவ்விய தேசத்தை கீழ்க்கண்ட இரண்டு பாசுரங்களிலும் குறிப்பிட்டுள்ளார்

உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய்
உலகுய்ய நின்றானை,அன்றுபேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து
விளையாட வல்லானை வரைமீகானில்,
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில்
தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்,
கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடன்fமல்லைத் தலசயனத்தே (பிரபந்தம் -1090)

என்செய் கேனடி னேனுரை யீர் இதற்
கென்று மென்மனத் தேயிருக் கும்புகழ்,
தஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்றன்
நெஞ்ச மன்றிடந் தவனைத்தழ லேபுரை
மிஞ்செய் வாளரக் கன்நகர் பாழ்படச்
சூழ்க டல்சிறை வைத்து இமை யோர்தொழும்,
பொன்செய் மால்வரை யைமணிக் குன்றினை
அன்றி யென்மனம் போற்றியென் னாதே (பிரபந்தம் -1576)


இது மட்டுமில்லை சார்

உங்கள் பேவரைட் நம்மாழ்வார்

மாதர்மா மண்மடந் தைபொருட் டேனமாய்,
ஆதியங் காலத் தகலிடம் கீண்டவர்,
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதும்மால், எய்தினள் என்தன் மடந்தையே (பிரபந்தம்- 3139)

என்று இந்த ஸ்தலத்தில் தான் பாடியுள்ளார்

பூதத்தாழ்வாரும்

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,
ஏவல்ல எந்தைக் கிடம் (பிரபந்தம்- 2257)

என்று பாடியுள்ளார்

கோவில் படங்கள் இத்துடன் போட்டுள்ளேன்.

Saturday, 12 April 2008

சுஜாதாவுக்கு இமெயில் CC TO ஆழ்வார்கள்


சுஜாதா சார்,

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் படித்தேன் (விசா பதிப்பகம்). அது தொடராக வரும்போதே ஒரு தடவை படித்திருக்கிறேன்

“பிரபந்தத்தில் நேரடியாக கீதையைப் பற்றிய செய்தி எங்குமே இல்லை என்று ஒரு கருத்து உண்டு. பார்த்தனுக்கு தேர் ஊர்ந்தது இருக்கிறது. ஆனால் அவனுக்கு கீதாபதேசம் செய்தது நேரடியாக நாலாயிரம் பாடல்களில் எதிலும் இல்லை. வார்த்தை என்று ஓர் இடத்தில் மட்டும் திருமங்கையாழ்வார் பாசுரத்தில் வருகிறது என்று காஞ்சிபுரத்தில் ஒரு சுவாமி சொன்னார். அதை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்”

என்ன சார் இப்படி சொல்லிவிட்டீர்கள்??

திருவரங்கமுதனார் அருளிச்செய்த ராமனுஜ நூற்றந்தாதியும் சேர்த்து தானே 4000.. அப்படியானால் அதில் 68 ம் பாடல் பாருங்கள்

ஆரெனெக்கின்று நிகர் சொல்லில்
மாயனன் றைவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மை.....


திருமழிசைஆழ்வார் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி பாடல் 71 ஐ ப் பாருங்கள்

"மாயன் அன்றோதிய வாக்கதனை"... என்று வருகிறதே. இது கீதையை நேரடியாகத்தான் குறிக்கிறது

நீங்கள் பிரபந்தத்தில் தேடிய அந்த ”வார்த்தை” திருமங்கையாழ்வார் பாசுரத்தில் இல்லை.

அது உங்களின் பேவரைட் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருக்கிறது

வார்த்தையறிபவர் மாயவற்காளன்றி யாவரோ (திருவாய்மொழி 7-5-10)

நம்மாழ்வார் இன்னுமொரு பாசுரத்தில் திருவாய்மொழி (4-8-6)

“அறிவினால் குறைவில்லா
அகல் ஞானத்தவரறிய
நெறியெல்லாம் எடுத்துரைத்த
நிறைஞானத்தொருமூர்த்தி ....”

இப்படி சொல்வது கீதையைப் பற்றித்தான்

திருவாய்மொழி நான்காம் பத்து எட்டாம் திருவாய் மொழியில் இது 6 வது பாசுரம்.

சார் உடனே அங்கே ஆழ்வார்களுடன் அரட்டைக்கு உட்கார வேண்டாம். இங்கே வாரம் ஒரு பாசுரம், கற்றதும் பெற்றதும், ஷங்கரின் ரோபோ என்று பல சங்கதிகள் போட்டது போட்டபடி இருக்கிறது.

நேரே பெருமாளிடம் போகவும் “இதோ பார்.. நிமோனியா.. அது இது என எதுவும் இல்லாமல் ஒரு 300 வருஷம் லைஃப் எக்ஸ்டென்ஷன் வேணும்.. நிறைய படிக்கணும் எழுதனும் “ அப்பிடினு கரறாரா சொல்லிட்டு அவரோட புஷ்பக விமானத்தை எடுத்துக் கொண்டு வந்து சேரவும்