Thursday, 14 April 2011

எஸ்.வி. சேகர்‍ - கலைஞர் - குதிரை


சமீபத்தில் எஸ்வி சேகர் முதல்வர் கலைஞரை சந்தித்தார் அப்போது அன்பு பரிசாக குதிரைப் படம் ஒன்றை வழங்கினார் சேகர்.

அப்போது நடந்த உரையாடல் ( கற்பனை உரையாடல் சாமி )

"ஏம்பா சேகர் இதென்ன குதிரைப் படம். உள்குத்து ஏதும் இருக்கா

"இல்லீங்க ஆனா ஒரு குதிரைக் கதை சொல்ல நீங்க அனுமதிக்கனும்"

"தாராளமா சொல்லுப்பா"

சேகர் சொன்ன குதிரைக் கதை :

“என்னப்பா என்னிக்கு உன்னோட மரண தண்டனையை நிறைவேத்தறாங்க”

”தண்டனையா.. அடப் போங்க பெரியவரே.. இன்னும் ஒரு மாசம் இருக்கு அதுக்கு”

“நீ என்னப்பா சொல்றே”

“ இப்ப வேண்டாம். சாப்பிட எல்லாரையும் ஒண்ணா உக்கார வைப்பாங்களே அப்ப
விவரமா சொல்றேன்”

நடந்தது இது தான். ஓர் இளைஞன். செய்யாத குற்றத்திற்கு சிறைப்பட்டான். மரண
தண்டனை விதித்து விட்டனர். தண்டனை நிறைவேற்றம் செய்ய நாள் குறிக்கும்
நடைமுறைக்காக அவனை அரசர் முன் அழைத்துப் போனார்கள். அங்கிருந்து திரும்பு வரும் போது எதிர்ப்பட்ட சக் கைதியிடம் அவன் செய்த உரையாடல் தான் அது.

“சாப்பாட்டு நேரத்துல சொல்றேன்னு சொன்னியே என்னனு சொல்லு”

“ அது வந்துங்க. நம்ம மன்னருக்கு குதிரைங்க வளர்க்கறதுல ஆசைனு
உங்களுக்குத் தெரியுமே”

“ அதான் ஊருக்கே தெரியுமே. நம்ம கிட்ட வாங்கற வரிக்காசெல்லாம் குதிரைக்கே போகுது”

“அங்கதான் இருக்கு விஷயம்.. நீ கடைசியா ஏதாவது சொல்ல விரும்பறியானு ராசா கேட்டாரு”

“ அட அப்புறம்”

“ஆமா ராசா ஆனா அதை உங்க காதுல தான் சொல்லுவேன்னு சொன்னேன்”

“ரொம்பத் தைரியம் தான் உனக்கு. என்ன ஆச்சு ராசா ஒத்துகிட்டாரா இல்லியா”

“ கொஞ்சம் தயங்கினாரு. அப்புறம் சரின்னாரு”

“ சீக்கிரம் சொல்லுப்பா”

“ நான் ராசா இருந்த மேடைக்கு மெதுவா ஏறிப்போனேன். மண்டி போட்டுகிட்டேன். ராசாவும் மெதுவா கொஞ்சம் குனிஞ்சாரு. அவரு காதுல சொன்னேன்.. அப்புறம் நிமிர்ந்து கூட்டத்தைப் பார்த்து இவனின் மரண தண்டனை இன்னும் ஒரு மாசம் தள்ளி வைக்கிறேன் அப்படின்னாரு “

“ அட அப்படி என்னதான் சொன்னே”

“ ராசா எனக்கு குதிரைங்களை பறக்கிற சக்தி உள்ளதா மாத்திடற மந்திரம்
தெரியும்னேன். மொதல்ல நம்பல. அப்புறம் நான் சொன்னேன். என்னை உங்க
குதிரைங்க கிட்ட விடுங்க நான் மெதுவா மந்திரம் சொல்லி அதுங்க பறக்கிற
மாதிரி செஞ்சிடுவேன்னேன். ஒரு மாசம் அந்த மந்திரத்தை குதிரைங்க கேட்டா
நிச்சயம் பறந்துரும்னேன்”

“அடப்பாவி அந்த மாதிரி ஒரு மந்திரம் உனக்குத் தெரியும்னு சொல்லவேயில்லையே”

”எனக்கு அந்த மாதிரி ஒரு மந்திரம் தெரியாது ஆனா பாருங்க- இப்ப ஒரு மாசம்
தண்டனை தள்ளிப் போயிருக்கு. இன்னும் ஒரு மாசம் உயிரோட இருக்கப் போறேன்.

இந்த ஒரு மாசத்துல ராசா மனடசு மாறலாம். தண்டனை குறையலாம். இல்லே வேற ராசா வரலாம். ஒரு வேளை குதிரை பறந்தாலும் பறக்கலாம் யாருக்குத் தெரியும்”

"தம்பி சேகர் கதை நல்லாத்தான் இருக்கு நானும் ஒரு குதிரைக் கதை சொல்லவா"

"அய்யா அதைக் கேட்க நான் கொடுத்து வச்சிருக்கணும்.. சொல்லுங்க சொல்லுங்க‌

கலைஞர் சொன்ன குதிரைக் கதை

ஒரு விவசாயி. தன்னுடைய பண்ணைத் தேவைகளுக்காக ஒரு குதிரை வாங்கினார்.

அவரது நண்பர்கள் அவர் அதிக விலை கொடுத்து விட்டார் அந்தக் குதிரை அவ்வளவு விலை பெறாது என சொல்லி அவரை கேலி செய்தனர். அவர் நன்றாக ஏமாந்து விட்டதாகச் சொல்லி வந்தனர். ஆனால் அவர் இதையெல்லாம் சட்டை செய்யவில்லை

ஒரு நாள் அந்தக் குதிரை கட்டியிருந்த கட்டை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது.

விவசாயி அதை துரத்திப் பிடிக்க முயன்றார். அது பக்கத்தில் இருந்த
காட்டினுள் ஓடி மறைந்தது. விவசாயி சோர்ந்து போனார்.குதிரை ஓடிப்போன
விஷயம் அவர் நண்பர்களுக்குத் தெரிந்தது. கேலி அதிகமாகி விட்டது. ஆனாலும் விவசாயி தான் ஏமாறவில்லை என்று சொல்லிக் கொண்டார்

ஓடிப் போன குதிரை ஒரு நாள் அதுவாகவே காட்டிலிருந்து திரும்பி வந்து
விட்டது. தனியாக வரவில்லை. இன்னொரு குதிரையை கூடவே கூட்டிக் கொண்டு வந்தது. விவசாயிகு ஆனந்தம் பிடிபடவில்லை. இப்போது அவர் தன் நண்பர்களிடம் பெருமையாக பேசினார் , “ பார்த்தீர்களா. என்னவோ நான் ஏமாந்து விட்டதாக சொன்னீர்களே. இப்ப என்ன சொல்றீங்க” நண்பர்கள் ஒன்றும் சொல்லவில்லை

வந்த் இரண்டாவது குதிரை மிகவும் முரடாக இருந்தது. விவசாயியின் பையன் 18 வயது இளைஞன். அவனுக்கு இந்த புது குதிரை ரொம்ப பிடிச்சி போச்சு. அதன் மீது தாவி ஏறி அதை ஓட்டிப் பழக முயற்சித்தான். இப்படி செய்து
கொண்டிருக்கும் போது ஒரு நாள் அந்த முரட்டுக் குதிரை அவனைக் கீழே தள்ளி அவனுக்கு கால் எலும்பு முறிந்து விட்டது.

விவசாயியின் நண்பர்கள் ,” அது ஏதோ காட்டுக் குதிரை போலிருக்குப்பா பாரு
பையன் காலை உடைச்சிருச்சு, குதிரைஐ துரத்தி விடுப்பா “ என்றனர்

விவசாயி அதெல்லாம் எதுக்கு வேண்டாம் எல்லாம் நன்மைக்கே என்று விட்டு
விட்டார்

மறுநாள் அந்த நாட்டின் மீது அண்டை அரசன் படையெடுத்து வந்தான், இந்நாட்டு அரசன் 18 வயதான இளைஞர்கள் எல்லோரும் படையில் சேர வேண்டும் என்று அறிவிப்பு செய்து உடனே வீடு வீடாக சென்று அப்படியான இளைஞர்க்ளை படையில் சேர்த்து வர தன் தளபதிகளைப் பணித்திருந்தான்

படைத் தளபதிகள் வீடு வீடாக வந்தனர். விவசாயியின் மகன் காலை முறித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து அவனை விட்டு விட்டனர். ஆனால் விவசாயியின் நண்பர்களின் மகன்கள் அவர்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும்
வலுக்க்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்

அப்போது விவசாயியின் நண்பர்கள் அந்தக் குதிரை தான் விவசாயியின் மகனை படையொ சேர்வதிலிருந்து காப்பாற்றிற்று என்றனர்

விவசாயி இருக்கலாம் என்றார்


Sunday, 10 April 2011

தாகம்


இப்படித் தலைப்பைப் பார்த்த உடன் இது ஒரு மலையாளப் படத்தின் விமர்சனம் என்றோ, தேர்தல் சமயத்தில் நடந்த ஒரு விவாதக் கூட்டத்தின் வியாஜ்யம் என்றோ நினைத்து வாசிக்க வந்திருந்தால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் இப்போது எந்த அளவில் இருக்கிறது என தெரியவில்லை

1943 ஜூலை மாதத்தில் ஒரு நாள். அமெரிக்க கடற்படையின் ஜார்ஜ் ஸ்மித் புகழ்பெற்ற குடால்கனாலினருகில் கடலில் ஒரு ரப்பர் மிதவையில் மிதந்து கொண்டிருக்கிறார். மிகுந்த தாகத்தில் இருக்கிறார். கடல் தண்ணீரை அருந்த இயலாத மனிதனின் இயலாமையை நொந்து கொண்டிருந்தார். கண்ணுக்கு எதிரே பார்வைக்கு எட்டிய பரப்பெங்கும் தண்ணீர். ஆனால் அதைக் குடிக்க முடியாது. அவரது ஆதங்கத்தை அதிகப்படுத்தியது ஒரு கடற்பறவை . கடல் பரப்பின் மீது லாவகமாகப் பறந்தபடி அந்தப் பறவை கடல் நீரை அருந்தியது

அந்த அசாதாரண சூழ்நிலையிலும் ஸ்மித்துக்கு ஒரு கேள்வி பிறந்தது. நானும் இந்தப் பறவையும் இரத்தமும் சதையும் தான். அந்தப் பறவையால் கடல் தண்ணீரைக் குடிக்க முடிகிறது; என்னால் முடியவில்லை ஏன்.

பாவம் அந்தப் பறவை. ஸ்மித்தின் திடீர் விஞ்ஞான ஆர்வத்துக்கு பலியானது. ஆம் அந்தப் பறவையை சுட்டு கைப்பற்றி அதற்கு குடலாப்பிரேஷன் செய்து அதன் குடலில் தண்ணீர் கொழுப்பாக சேகரம் ஆகியிருப்பதைக் கண்டுபிடித்தார். ஆக இந்த கெட்டிக் கொழுப்பை வைத்துக் கொண்டு தன்னுடைய தாகத்தை தீர்த்துக் கொள்ள யத்தனித்தார். கடல் நீரை அருந்தினாலும் ஏன் அந்தப் பறவைக்கு டீ
ஹைட்ரேஷன் ஆவதில்லை என்ற உண்மை அவருக்கு ஓரளவு புரிந்திருந்திருந்தது. அப்போதிலிருந்து தினம் கொஞ்சமாக அவர் கடல்

தண்ணீரை அருந்தி தன் தாகத்தினை ஓரளவு தணித்துக் கொண்டிருந்தார்

கடலில் மிதந்து கொண்டிருந்த அவரை அமெரிக்க கடற்படை 20 நாட்கள் கழித்து மீட்டது

அவர் கடல் நீரை அருந்தி அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத சங்கதி பரவியது..

அமெரிக்க கடற்படை விமானப் படையின் சர்வைவல் மானுவலில் ஸ்மித்தின் அனுபவம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

ஸ்மித்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதமைக்கு விஞ்ஞானிகள் சொன்ன காரணம்: ஐந்து நாட்கள் கழித்து பெய்த கடல் மழையின் காரணமாக அவருக்கு தூய நீர் கிடைத்து அதனை அருந்தியிருக்கிறார் அதனால் அவருக்கு ஆபத்து இல்லாமல் இருந்தது

ஸ்மித் தனது அந்த உயிர்ப் போரட்ட பயணத்தின் போது, வெளியேறிய சிறுநீரின் அளவினை கவனித்து இருக்கிறார். அருந்திய கடல் நீரின் அளவினை விட மூன்று பங்கு அதிகம் . அதாவது கடல் நீரில் இருக்கும் உப்பு உடலில் கலந்த உடன் அங்கிருக்கும் உப்பில் கோளாறு செய்து வெளியேறும் அளவினை அதிகரித்து இருக்கிறது

தினசரி 50 மில்லி மட்டும் கடல் தண்ணீர் அருந்தி சுமார் ஆறு நாள் உயிர் வாழலாம் ஆனால் அதை பத்து பங்காக்கி கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். ஆனால் ஆறாவது நாள் கட்டாயம் ஒரு லிட்டர் நல்ல தண்ணீர் குடித்த்தாக வேண்டும் இல்லையெனில் ஆள் காலி என்பதாக ஃப்ரெஞ்சு தேசத்து கடற்படை ஆய்வு சொல்கிறது

அந்தப் பறவை போலத்தான் ஒட்டகமும். ஒட்டகத்தின் திமிலில் தண்ணீர் சேகரிக்கப்படுவதாக நம்பினால் நம்புகின்றவர்களும் ஐயோ பாவம் அப்படி நம்பி தண்ணீர் கிடைக்கும் என ஒட்டக்த்தை காவு வாங்கினால் அந்த ஒட்டகமும் ஐயோ பாவம்

Dromedary Camel என்பது அரேபிய ஒட்டகம். ஒட்டகத்தில் இன்னொரு ரகம் Bactrian Camel முதல் ரகத்துக்கு ஒரு திமில். இரண்டாவது ரகத்துக்கு இரட்டை திமில்

இரண்டு வகையிலும் திமிலில் தண்ணீர் கொழுப்பு திசுக்களாகத்தான் சேமித்து வைத்துக் கொள்ளும் ஒட்டகம். அதைக் கிழித்தால் ஒட்டக ரத்தம் தான் வரும். தண்ணீர் வராது

யானையைப் போல இப்போதெல்லாம் ஒட்டகத்தை தெருவிலே கூட்டிக் கொண்டு வந்து பிச்சை எடுப்பதைப் பார்த்திருக்கிறேன்.

இந்தியாவில் ஒட்டகத்துக்காகவே ஒரு அரசு சார்பு நிறுவனம் இருக்கு தெரியுமோ

http://nrccamel.res.in/

இந்த ஸ்தாபனத்தில் நாகராஜன் என்ற தமிழ்க்காரரும் இருக்கிறார் . டாக்டர் நாகராஜன். காமெல் டிசிசஸ் எனும் பிரிவில் ஆராய்ச்சி ஆர்வம் இருப்பதாக வலையில் காணப்பட்டது.

இந்தியன் படத்தில் மணீஷா கொய்ராலாவுக்கு கமல்ஹாசன் பரிசளிக்கும் ஒட்டகம் கவுண்டமணியைக் கடித்து விடுமே..

மணீஷா கொய்ராலா ஏன் இப்படி இருக்கிறார்.. மாப்பிள்ளை என ஒரு படத்தின் ட்ரைலர் காட்டுகிறார்கள் சன் டிவியின் எல்லா சானலிலும்; தனுஷின் மாமியாராக நடிக்கிறார் . இந்த மாமியார் மாப்பிள்ளை கதை அரதப் பழசு. பட்டிக்காடா பட்டணமா படத்தில் சிவாஜி ஜெயலலிதா படம்.. மாப்பிள்ளை என்றெ ரஜினி படம் ; ஸ்ரீ வித்யா மாமியார்;

மதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்பதான எம்.எல்.வி யின் புதல்வி ஸ்ரீவித்யா என்பது பலருக்குத் தெரிந்திருக்கும்

எம்.எல்.வி அவர்களை நினைக்கும் போதே வெங்கடாச்சல நிலையம் எனும் புரந்தரதாசரின் சாஹிட்தியத்தினை அவர் பாடும் அழகும் ரம்மியமும் நினைவுக்கு வராமலா போகும். சிந்து பைரவியின் எல்லா லஷணங்களையும் எம்.எல்.வி பாடும் ரசனையே தனி

இதை தட்டச்சிக் கொண்டிருக்கும் போது "எஜமானரே ஊட்டக் பர்த்தீரா" என என்னை கன்னடத்தில் மனைவி அழைக்கிறார்

"ஒரு நாளும் உனை மறவாதா இனிதான வரம் வேண்டும்" என பாடி விட்டு. "என்ன டிபன்" எனக் கேட்டேன்

இது எஜமான் படப்பாட்டு இல்லையா என்றாள் மனைவி

ஆமாம் சிந்து பைரவி ராக சாயல் நிறைய இருக்கும் பாட்டு என சொல்லிவிட்டு டிபன் சாப்பிடப் போகிறேன்

Saturday, 9 April 2011

சக பயணி 3

சக பயணி 3


“உங்களுக்கு காஃபி என்றால் மிகவும் பிரியம் போலிருக்கிறது”

“எனக்கு என்றில்லை சார். பலருக்கும் தான். அதுவும் காஃபி தவிர்த்த பயணம் இனிமையானது அல்ல என்பதை நீங்கள் இங்கே கவனிக்கலாம். கப்பலில் லண்டன் சென்ற காந்தியார் பயணத்தின் போது சூயஸ் கால்வாயில் உள்ள செயிட் துறைமுகத்தில்(Port Said) உள்ள காஃபி ரெஸ்டாரண்ட்களைக் குறித்து தனது பயணக் குறிப்பில் சொல்லியிருக்கிறார். அங்கு இசை கேட்டது குறித்தும் பதிவு செய்திருக்கிறார்”

“ஓ !! சரி !! அது தான் காஃபி வந்து நாம் குடித்தும் முடித்தோம். என் கேள்விக்கு இப்போது விடை சொல்வீர்களா ?”

”நிச்சயம் சொல்கிறேன்; காந்தியின் ஆதார சிந்தனை, கோட்பாடு சத்யாகிரஹம். இந்த வடமொழிச் சொல்லினைக் கவனிக்க வேண்டும். இது ஒரே சொல்லாக பொருள் கொள்ளப்பட்டாலும் இரு பெரும் குணங்களின் சங்கமம் இந்த சொல்; சத் என்பது உண்மையினையும் அக்ரஹ எனும் சொல் அந்த உண்மையினைக் கை கொள்வதற்கான, தேடுவதற்கான மனத் திண்மையினையும் குறிக்கிறது. இந்த
குணங்களை வைத்துக் கொண்டு ஒருவரை எதிர்ப்பதல்ல காந்தியாரின் வழி; இந்த குணங்களை வைத்துக் கொண்டு ஒருவருக்கு பணியாற்றுவது, In other words Satyagragha is not used against anybody but is done with somebody"

"வார்த்தைக்கு அழகாகத்தானிருக்கிறது ஆனால் இது போன்ற கொள்கைககள் நடைமுறை சாத்தியமானதா"

"தொழிலில் ஈடுபட்டுள்ளவர் இந்தக் கொள்கையின் உயரத்தினை கவனத்தில் கொண்டால் சாத்தியம் தானே"

"எல்லோருக்கும் ஒரே மனோபாவம் என்பது நடைமுறை சாத்தியத்துக்கு அப்பாற்பட்டதல்லவா சார்"

"ஒவ்வொரு மனிதனும் அடிப்படை சிந்தாத்தம் என்று ஒன்றை வைத்திருக்கக் கூடும் அந்த அடிப்படை சித்தாந்தத்தை சரிவர அமைத்துக் கொண்டால் அதன்படி நடந்து கொள்வதில் சுலபம் இருக்குமல்லவா"

"எனக்கு புரியவில்லை.. இன்னும் விளக்கமாக சொன்னால் புரிந்து கொள்ளவேன்"

"சொல்கிறேன் சார்.. நாம் பண்பு சார்ந்த கொள்கைகளை அல்லது நம்பிக்கைகளை அது சார்ந்த சூழலில் மிகுந்த ஆழ்நிலையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு , பரிசோதிக்கிறோமா.. உதாரணமாக சுற்றுச் சூழல் மாசுபடுகிறது என ஒரு செய்தி தாளில் ஒரு கட்டுரையினைப் படிக்கும் போது நமது ரியாக் ஷன் எப்படி இருக்கிறது. பெரும்பாலும் ரேஷனலாகத்தான் இருக்கும்.. ஆனால் அதே சமயம் கார் ஓட்டிக் கொண்டு செல்லும் போது புகை கக்கும் இன்னொரு காரை கவனிக்க அல்லது கடக்க நேர்ந்தால் நமது ரியாக் ஷன் எப்படி சற்று மிகையான உணர்ச்சிகளோடு கலந்து வருகிறது"

"ஆமாம் ஒப்புக் கொள்கிறேன்"

"சுற்றுப் புற சூழலினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையினை அதன் மீது நமக்குள்ள தீவிர நம்பிக்கையை பரிசோதித்துக் கொள்ள இந்த இரண்டு சூழலுமே நமக்கு இடம் தருகிறதா சொல்லுங்கள். பண்பு சார்ந்த அதுவும் கேரக்டர் சார்ந்த சித்தாந்தத்தை பரிசோதித்துக் கொள்ள நமக்கு மிகவும் டென்சிடியான ஒரு சூழல் தேவை; அதை அமைத்துக் கொண்டோ அல்லது தன்னார்வமாக அந்த சூழலுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டோ சோதித்துக் கொள்ளாமல், நம்மால் அந்த குறிப்பிட்ட சித்தாந்தத்தை
வாழ்வின் பிற ப்ரியாரிட்டிசுடன் ஒப்பிட்டு எதை விட்டுக் கொடுப்பது எதில் சமரசம் செய்து கொள்வது எதில் சமரசம் செய்து கொள்ள்வே கூடாது என்பதை தீர்மானிக்க இயலுமா சொல்லுங்கள்; இப்படி டென்சிடியான சூழலில் உட்படுத்திக் கொள்ளாமல் தான் நமது நம்பிக்கை அடுக்குகள் அமைந்துள்ளது அதைத்தான் முன்பு சொன்னேன் நினைவிருக்கிறதா

"ஆம் சொன்னீர்கள் Opinions, Desires, Convictions, Values என"

" பெரும்பாலும் நாம் பண்பு சார்ந்த கொள்கைகளை கைக் கொள்வது அவை சமூகப் பொருத்தம் கொண்டவை என்பதால். அதாவது சமூக அங்கீகாரம் கொண்டவை என்பதால். ஆங்கிலத்தில் சொல்வதெனில் We adopt because they are socially appropriate ஆனால் காந்தி அப்படி பொதுவில் கைக் கொள்ளாதவர் என்பதனையும் அவர் அடர்த்தியான சூழலில் அதை பரிசோதித்து கைக் கொண்டார் என்பதையும் அதில் எத்தனை உறுதியாக இருந்தார் என்பதையும் நீங்கள் கவனிக்கலாம். மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன் ;சத்யாகிரஹம். இந்த
வடமொழிச் சொல்லினைக் கவனிக்க வேண்டும். இது ஒரே சொல்லாக பொருள் கொள்ளப்பட்டாலும் இரு பெரும் குணங்களின் சங்கமம் இந்த சொல்; சத் என்பது உண்மையினையும் அக்ரஹ எனும் சொல் அந்த உண்மையினைக் கை கொள்வதற்கான, தேடுவதற்கான மனத் திண்மையினையும் குறிக்கிறது ஒரு பாரிஸ்டராக காந்தியாரை கவனிக்கும் முன் அவரது இந்த ஆதாரக் கொள்கையினை புரிந்து கொள்ள வேணும்..

இப்ப அவரோ பாரிஸ்டர் வாழ்க்கைக்கு வருகிறேன் ...

(பயணம் தொடரும்)

Wednesday, 6 April 2011

ஏப்ரல் 13

ஏப்ரல் 13 . மிக முக்கியமான நாள்.. இங்கே தேர்தல் நடக்கவிருப்பதால் சொல்லவில்லை. இதே ஏப்ரல் 13 1919 .. ஜாலியன் வாலாபாக்..

வாக்களிக்க செல்லும் முன்பு அந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை ஒரு நிமிடமாவது நினைக்க வேண்டும்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணமாக தாகூர் தனக்கு வழங்கப்பட்ட KnightHood பட்டத்தை துறந்தார்

அப்போது வைசிராய் அவர்களுக்கு தாகூர் ஒரு கடிதம் எழுதினார்

"The time has come when badges of honour make our shame glaring to their incourageous context by humiliation, and I for my part, wish to stand shorn of all special distinction by the side of those my countrymen who for their so-called insignificance , are liable to suffer
degradations not fit for human beings and these are the reasons which have painfully compelled me to ask Your Excellency with due deference and regret, to release me of my title knighthood"

பிரிகேடியர் ஜெனரல் டயர் ஆணைக்கு இணங்க நடந்த அந்த கொடூர சம்பவத்தை அப்போதைய பஞ்சாபின் லெப்டினட் கவர்னர் மைக்கேல் ஓட்வையர் சரிதான் எனச் சொன்னது தான் கொடூரத்தின் உச்சம்

ஒட்வைர் vs நாயர் எனும் புகழ் பெற்ற வழக்கிலே ஹௌஸ் ஆஃப் லார்ட்ஸ்ம் நீதிபதி மெக்கார்டியும் டயர் செய்த்தது சரிதான் என சொல்லிவிட்டார்கள்

ஆனால் ப்ரிடிஷ நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்கிவித் இந்த சம்பவம் நாட்டின் மிக கொடூரமான மனிதாபிமானமன்ற செய்கை எனச் சொன்னார்

ஓட்வயரின் செய்கையைனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நாயர் : சேட்டூர் சங்கரன் நாயர். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குறைஞராகவும் பின்னர் நீதிபதியாகவும் இருந்தவர்

பஞ்சாப் பல்கலைக்கழகம் ஏப்ரல் 13 , 1969 அன்று ஒரு ஆய்வு அறிக்கை வெளியிடுகிறது (ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 50 ஆண்டுகள் கடந்து) அதில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கான திட்டம் லாகூரில் ஏப்ரல் 8, 1919 அரசு மாளிகையில் ஓடைவயர் முன்னிலையில் பல ப்ரிடிஷ் அதிகாரிகள் முன்னிலையில் தீட்டப்பட்டது எனவும் அதை baishakshi day எனும் நாளில் நிகழ்த்தினால் பஞ்சாப் முழுவதும் பயம் விளைவிக்க ஏதுவாகும் எனவும் விவாதிக்கப்பட்டது என சொல்லப்பட்டுள்ளது

இந்த ஓட்வயர் உத்தம் சிங் எனும் இந்திய இளைஞரால் சுட்டுக் கொல்லப்பட்டான்

அதற்காக தூக்கிலிடப்பட்டான்

உத்தம் சிங் பெயரில் உத்ரகாண்ட் மாநிலத்திலே ஒரு மாவட்டம் இருக்கு

அம்மாவட்ட நிர்வாகத்தின் சுட்டி

http://usnagar.nic.in/

Sunday, 3 April 2011

கூடுமாயில் பிரமசரியம் கொள்


மதராஸ் பட்டணத்தை சுற்றிப் பார்க்கவென வரும் வெளியூர் ஜனங்கள் தப்பாமல் வரும் இடம் எக்மோர் ம்யூசியம் கட்டிடம். பக்கத்தில் இருக்கும் கன்னிமரா நூலகத்திலே புத்தகம் யாசித்துப் பெற்று திரும்பினேன். வாகன நிறுத்துமிடத்தை நெருங்கின போது,

"ஓய் இங்கே வாரும் என 'அதட்டல்'" கேட்டது. வலப்புறம் திரும்பிப் பார்த்தேன். அங்கே தூரத்தில் முண்டாசு.

"உங்களுக்கு மூக்கு வேர்ப்பது எனக்கு புதிததல்ல"

"அது சரி பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே, என பட்டினத்துப் பிள்ளை சொன்னதைப் படித்திருப்பீரே"

"அது தான் நான் என்ன யோசித்திருந்தேன் என யூகித்து விட்டீர்களே"

" நீர் யூகித்ததும் யூகித்த வழி போய் உத்திரம் காணாது குழம்பியதும் தெரிந்த பின் மேலுலகில் என்ன வேலை என இங்கே வந்து விட்டேன். தென்னந்தோப்பும், கிணறும் கேட்டு பாட்டுக் கலந்திடவென் பத்தினிப் பெண் எனத் தானே கேட்டேன்
வெறுமனே பெண் எனக் கேட்டிருந்தால் இன்றைக்கு இன்றைக்கு நாகரீகக் கேடாக இளைஞரும் யுவதியும் களிப்பு என்ற பெயரில் கலாச்சார சீரழிவு செய்வதற்கு ஒப்பாக ஆகியிருக்குமே"

"எல்லாம் சரிதான் ; நேரடியாகவே பாடலுக்கு வருகிறேன்.

கூடுமாயில் பிரமசரியம் கொள்.
கூடுகின்றிலதெனில் பிழைகள் செய்து
ஈடழிந்து நரக வழிச்செல்வாய்
யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண்

இது தான் எனக்கு ஐயம் தந்த பாடல். கலியாணம் செய்து பிள்ளைகள் பெற்ற தகப்பன் எழுதும் பாடலா இது"

" ஹோ ஹோ ஹோ !!!!!! பராசக்தி பராசக்தி...இது தானா உமது ஐயம்"

"சிரிக்காமல் விஷயத்துக்கு வாருங்கள்"

" வீடு உறா வணம் யாப்பதை வீடு என்பர்
மிக இழிந்த பொருளை பொருள் என்பார்
நாடும்கால் ஓர் மணமற்ற செய்ய செய்கையை
நல்லதோர் மணம் ஆமென நாட்டுவார்

இப்படி நாட்டுவார்களை குறித்து பாடிய பின் தான் இம் மணம் என குறிப்பிட்டு உரைத்தேனயல்லாது பொதுவில் மணம் செய்யாதே எனவா பாடினேன்"

" நான் உங்களை நமஸ்கரிக்கிறேன். என்னை ஆசிர்வாதம் செய்யணும்"

சாஷ்டாங்கமாக விழுந்தேன்.

முண்டாசு பாடினான். பாடினான். பாடியபடியே விண்ணளவு உயர்ந்தான்.

அப்படியே சொல்லிவிட்டேன் ஐயோ திருவுளத்தில் எப்படி நீர் கொள்வீரோ யானறியேன்.. ஆரியரே

காதலருள் புரிவீர் காதல் இல்லையென்றிடிலோ சாதல் அருளி தமது கையாற் கொன்றிடுவீர் எனக் குயிலும் எனது கையில் வீழ்ந்தது காண் !!!!!!

என் கண்ணிலிருந்து மறைந்தான்

Saturday, 2 April 2011

ராயர் மெஸ்‍- சாரு நிவேதிதா


நான் சாருவை எதிர்த்தே எழுதுவதாகவும் ஏன் என்றும் "அன்புடன்" என்னை அவரின் அபிமானிகள் விசாரிப்பதால் இந்தப் பதிவை எழுதியே தீருவது எனத் தீர்மானித்து விட்டேன்

அது ராயர் மெஸ் . சுமார் எழுபது வருடங்களுக்கு மேலாக இயங்கி வருது. முன்பு கச்சேரி ரோடு போலிஸ் ஸ்டேஷன் சமீபத்தில் இருந்தது. இப்போது அருண்டேல் தெருவில் இயங்குது. போஸ்டாஃபீஸ் சமீபம்

தொபே எண் : 24670519 உரிமையாளர்கள் மோகன், குமார் ., மொபைல் எண் 9382118126
No 13/1, Near Kutchery Road Post Office, Arundale Street, Mylapore, Chennai - 600004

உரிமையாளர்களின் போட்டோவை இங்கே தந்திருக்கேன்

ஒரு சரித்திர ஆராய்ச்சிக்கு உதவிய‌ திருப்தியோடு நிறைவு செய்கிறேன்

சக பயணி- 2


நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் என் சட்டை பாக்கெட்டில் இருந்த பேனாவைப் பார்த்துக்

கொண்டிருந்தார். அந்த பேனாவில் காந்தியாரின் உருவம் பதித்திருந்தார்கள்

" சார் இந்தப் பேனா எனக்கு நான் பணியாற்றிய அலுவலகத்தில் எனக்கு அன்பு பரிசாக வழங்கியது. காந்தி குறித்து நீங்கள் என்னிடம் வினவியதற்கு இந்த பேனா காரணமாக இருக்கும் என யூகிக்கிறேன்"

" உங்கள் யூகம் மிகச் சரியானது. இது போன்ற பரிசுகளில் பெரும்பாலும் சாமி படங்கள் மதப் பெரியவர்களின் படங்கள் இருக்கும். முதன் முறையாக காந்தி படம் பதித்த கிஃப்ட் பேனாவைப் பார்க்கிறேன். உங்களுக்கு காந்தியின் மீது ஈடுபாடு இருக்கும் பட்சத்தில் தான் இப்படி வைத்துக் கொண்டிருக்க முடியும் என யூகித்து உங்களிடம் அப்ப்டி ஒரு கேள்வி கேட்டேன். நீங்கள் பதிலுக்கு என்னைக் கேள்வி கேட்டதால், உள்ளுக்குள் விஷயங்களை கோர்வைப்படுத்திக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன். அதுவுமல்லாது காந்தி சிற்சில விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தாலும் பொதுவில் He is a symbol of good அதனால் உங்கள் மேல் ஒரு நல்மதிப்பு வரும் அதற்காக இதை வைத்துக் கொண்டிருக்கலாம் எனவும் யோசித்துக் கொண்டிருந்தேன்"

"நல்லது சார். நான் உங்களை பதிலுக்கு கேள்வி கேட்டது என்னை நான் தயார் செய்து கொள்ள ஒரு சிறிய அவகாசம்; நீங்கள் யூகம் என சொன்னதை நான் மித் (Myth) என சொல்வேன்.. எனது கருத்து இந்த விஷயத்தில் மிகவும் காரமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு என் வருத்தங்கள் ஆனால் என் கருத்துக்கான விளக்கம் சொல்ல நீங்க்ள் எனக்கு அனுமதி அளிப்பீர்கள் என கருதுகிறேன்"

"தாரளமாக சொல்லுங்கள்"

"யூகம் என்றும் அனுமானம் என்றும் சொல்லப்படுபவை ஒருவரின் நம்பிக்கை கட்டமைப்பில் (Belief Structure) ஒரு ஸ்தானம் எனச் சொல்லுவேன்"

"எனக்கு முழுமையாகப் புரியவில்லை சார்"

"ஒருவரின் நம்பிக்கை கட்டமைப்பு Opinions, Desires, Convictions, Values என அடுக்குகள் கொண்டவை என நான் கருதுகிறேன். இதில் கீழடுக்கு ஒப்பீனியன் எனக் கொண்டால் மேலான அடுக்கு வேல்யூஸ் என பொருள் கொள்ள் வேண்டும்."

"இதை இந்த தருணத்தில் ஏன் சொல்கின்றீர்கள் என தெரிந்து கொள்ளலாமா"

"சொல்கிறேன் சார். காந்தி படம் வைத்துக் கொண்டால் அது நல்லவர் எனும் அடையாளத்துக்கு உதவும் என நீங்கள் யூகிப்பதாக சொன்னீர்கள் அல்லவா. அதன் பொருட்டு இதைச் சொன்னேன்"

"ஆம் அப்படித்தான் யூகித்தேன். இப்போது கோர்ட் ஹாலில் எல்லாம் காந்தி படம் மாட்டப்பட்டுள்ளது. எதற்க்காக ? இங்கே நல்லது நடக்கும் ; உண்மை இருக்கும் என ஒரு உணர்வைத் தோற்றுவிப்பதற்க்காக. அது மட்டுமல்லாது அவர் தேசப் பிதா எனும் அடையாளம் பெற்று விட்டார் என்பதற்க்காவும்; He is mere a convention there என்பது என் எண்ணம்”


"மிக எளிமையாக அல்ல அல்ல மிக சாதாரணமாக சொல்லிவிட்டீர்க்ள். இதில் எனது கருத்தினை பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். எனக்கு உதவியாக இருக்கும் என கருதுவதால் எனது மடிக் கணிணியை உயிர்ப்பித்து உபயோகித்துக் கொள்ளலாமா"

"தாரளமாக சார்.. அதற்கு முன்னால் ஒரு கப் காஃபி அருந்தலாமா"

"செய்யலாம். நான் காஃபியில் சர்க்கரை சேர்த்துக் கொள்வதில்லை.. இதோ காந்திக்கு மீண்டும் வருகிறேன்

உண்மை என்பது வெறும் பொய் தவிர்ப்பது எனும் நிலையில் காந்தியார் இருக்கவில்லை. அதை எப்போதும் தவிர்ப்பது எனும் நிலையில் இருந்தார். நீங்கள் இராகவன் நரசிம்மன் அய்யர் என்பவர் குறித்து அறிந்திருப்பீர்கள்... ?"

"இல்லை சார்"

"இராகவன் அய்யர் எழுதிய The Moral and Political Thought of Mahatma Gandhi நூலில் காந்தியாரை மேற்கோள் காட்டி சொல்லியதை சுட்டினால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்

As truth is the sbstance of morality , man is a moral agent only to the extent that he embraces and seeks the truth. By truth is not merely meant the absstention from lies, not just the prudential conviction that honesty is the best policy in the long run , but even more that we must rule our life by this law of truth at any cost. We must say No when we mean NO , regardless of the consequences

இதில் நீங்கள் ஒன்றைக் கவனிக்கலாம். உண்மை உரைப்பது என மேலோட்டமாக இல்லாமல் உண்மையை தேடுவது என ஆழமாக் சொல்லப்பட்டிருக்கின்றது. இப்படியான தேடலினால் தான் காந்தியார் படம் நீதிமன்ற கூடங்களில் மாட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்"

"காந்தியாரே ஒரு பாரிஸ்டர்.. ஆனால் அவரால் இப்படி ஒரு உண்மைத் தேடலில் வெற்றி கொள்ள இயன்றதா "

"நீங்கள் காந்தியாரை கருப்பு அங்கி அணிந்து கொண்டு. கட்சிக்காரரை சட்டத்தின் பார்வையில் இருந்து காப்பாற்ற அல்லது சட்டத்தின் பார்வையில் வேண்டும் எனும் அளவுக்கு நிவாரணம் பெற்றுத் தரும் வக்கீல் / பாரிஸ்டர் அளவில் பார்த்தீர்கள் என்றால் இந்த சங்கதியினைப் புரிந்து கொள்வதில் சற்று சிரமம் இருக்கும்"

"ஓ அப்படியா .. வேறு எப்படி புரிந்து கொள்ள வேண்டும்"

"மேலும் தொடர்வதற்குள் இதோ காஃபி வந்து விட்டது.. அருந்திய பின் தொடரலாம்"

(பயணம் தொடரும்)

Wednesday, 30 March 2011

சக பயணி-1

சுமார் 400 கி.மீ தூரத்தை பகல் நேரத்தில், இரயில் பயணத்தில் அதுவும் கோடை தொடங்கிய நேரத்தில் பயணித்துக் கடக்க வேண்டிய சந்தர்ப்பம். சக பயணிகள் இது மாதிரியான தருணங்களில் பொழுது போக்க மிகவும் உதவுவார்கள். கையில் வைத்திருக்கும் வார, மாத சஞ்சிகைகள், நாளிதழ்கள் கைமாறும். அரசியல், சினிமா, சமூக அவலங்கள், சமூக அக்கறைகள் என உரையாடல்களும் களம் மாறி மாறி நேரம் நழுவும்.


மிக அருகில் அமர்ந்திருக்கும் ஒரு சக பயணி சமூகம் சார்ந்த அவரது கருத்தை நிறுவிடவும், நாம் அதனுடன் ஒத்துப் போவதும் இல்லை முரண்படுவதுமாக பல சமயம் இலக்கில்லாது., பற்பல சந்தர்ப்பங்களில் உரையாடும் கருத்துக்கு நம் தரப்பிலோ அல்லது அவர் தரப்பிலோ வலுவற்ற சான்றுகள் ஏதுமே இல்லாது உரையாடல் அந்த இரயில் வண்டியை விட வேகமாக பயணிக்கும். முரண்பட்ட கருத்துக்களே ஆயினும் இருவருக்கும் இடையே ஒரு மெல்லிய கண்ணியம் ஒட்டிக் கொண்டிருக்கும். அது ஒருவரை ஒருவர் முதன் முறை அறிந்துள்ளோம் என்பதால்.

எனக்கு இப்படியான பயணத்தில் வாய்த்த சக பயணி., அந்தப் பயணம் முழுமைக்கும் ஒரே சங்கதியைப் பற்றி உரையாடி வந்தது எனக்கான ஆச்சரியம். அவருக்கு 70 வயது கடந்திருக்கும் ஏன் 80 கூட இருக்கலாம். பாசஞ்சர் லிஸ்டில் பார்த்திருந்தால் தெரிந்து இருக்கும்.. அவர் தான் உரையாடலைத் தொடங்கினார்

“உங்களுக்கு காந்தியக் கொள்கைகள் மீது நம்பிக்கை இருக்கின்றதா”

நான் இந்தக் கேள்விக்கு எப்பவுமே உற்சாகமாக ஆமாம் என தலையாட்டி விடுவேன் அன்றைக்கு என்னவோ பதில் கேள்வி கேட்டேன்

“காந்தியக் கொள்கைகள் என திட்டவட்டமாக எதைச் சொல்லுகின்றீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா”

(பயணம் தொடரும்)

Tuesday, 29 March 2011

தேசிகனுக்குப் போட்டியாக

தலைப்பைப் பார்த்து விட்டு அவர் என்னவோ தேர்தலில் போட்டியிடுவது போலவும் நான் அதே தொகுதியில் மனு தாக்கல் செய்திருப்பது போலவும் அர்த்தம் செய்ய வேண்டாம்

பல நாள் முன்பு தேசிகன் மாயாஜாலக் கட்டம் என அவருடைய வலையில் வேதாளம் மூலமாக சொல்லியிருந்தார் http://desikan.com/blog/?p=213

அதே போல் இன்னொன்னு அமைக்க இயலுமானு கேட்டிருந்தார்

ஒன்றென்ன இரண்டு அமைத்து விட்டேன் தேசிகன்.



8

19

18

25

15

5

12

11

22


Eight (5)

Nineteen (8)

Eighteen (8)

Twenty five (10)

Fifteen (7)

Five (4)

Twelve (6)

Eleven (6)

Twenty two (9)





118

122

105

102

115

128

125

108

112





One hundred and eighteen (21)

One hundred and twenty two (22)

One hundred and five (17)

One hundred and two(16)

One hundred and fifteen(20)

One hundred and twenty eight(24)

One hundred and twenty five(23)

One hundred and eight(18)

One hundred and twelve(19)









Monday, 28 March 2011

யார் மாதிரி ஆளுக்கு ஓட்டுப் போடணும்


காமராஜருக்கு நிகரான தொண்டுள்ளமும், நேர்மையும், கண்ணியமும், தேசப் பற்றும் , எளிமையும் உள்ளவரா உங்களிடம் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர் என சிந்தியுங்கள். இல்லையெனில் நிராகரியுங்கள்.