Sunday, 26 September 2010

எந்திரனுக்கு தடை வருமா ?


ரஜினிகாந்த் நடித்து வெளியிடப்பட இருக்கும் எந்திரன் திரைப்படத்திற்கு தடை விதிக்கலாமா என அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது

காரணம் என்னவாக இருக்கும் என விசாரித்ததில் திடுக்கிடும் உண்மை வெளியாகி இருக்கிறது

பிரபல விதூஷகர் இந்த திரைப்படத்திற்கு விமர்சனம் எழுத வேண்டும் என்னும் அக்கறையில் தனக்கு முதல் காட்சிக்கு ஓசி டிக்கெட் கிடைக்குமா என ஏறக்குறைய யாசகன் ரேஞ்சுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது அரசின் கவனத்திற்கு வந்ததால் அரசு அதிர்ச்சியும் கவலையும் அடைந்திருக்கிறது. அந்த பிரபல விதூஷகரின் பல லட்சம் அபிமானிகள் தியேட்டர் வாசல்களை முற்றுகை இடும் அபாயம் இருப்பதை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இதனால் திரைப்படத்திற்கு தடை விதிக்கலாமா என அரசு யோசிப்பதாக தெரிகிறது. அரசு தரப்பிலிருந்து ஓர் உயர் அதிகாரி அந்த விதூஷகரை தொடர்பு கொண்டு சமாதானம் செய்த்ததாகவும் தெரிகிறது. எப்படியும் முதல் காட்சிக்கே டிக்கெட் ஏற்பாடு செய்துவிடுவதாகவும் , கவலை மிகுதியால் பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் அளவுக்கு அதிகமாக கடன் வைத்து உற்ச்சாக பானம் அருந்திவிட வேண்டாம் என அந்த அதிகாரி அந்த விதூஷகரை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது . அரசு அதிகாரியின் சமாதான பேச்சு அந்த விதூஷகரின் வருத்தத்தினை பூஜ்யம் டிகிரிக்கு கொண்டு வந்ததா என அவரது அபிமானிகள் கவலையுடன் காத்திருப்பதாக தகவல்.. இந்த விஷயத்தில் ரஜினி என்ன நினைக்கிறார் என என அவரை தொடர்பு கொண்ட நிருபர் ஒருவரிடம் ," அளவுக்கு அதிகமாக உளறுபவருக்கும் அளவுக்கு அதிகமா தன் போட்டோவை தானே பார்த்துக்கொள்பவருக்கும் தன் அனுதாபம் எப்பவும் உண்டு" என சொன்னதாகத் தெரிகிறது

Saturday, 25 September 2010

சங்கீதம் - இரண்டு ஜோக்கர்கள்



சங்கீததிற்கும் ஜோக்கர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்க இயலும் என ஆச்சர்யப்பட வேண்டாம்

சர்க்கஸில் சாகசம் செய்யும் வீரர்களைப் போலவே ஜோக்கர்கள் இமிடேட் செய்து நம்மை சிரிக்கவைப்பார்கள்.

நமது இரண்டு ஜோக்கர்களும் அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. சங்கீதம் குறித்து எதுவும் தெரியாவிட்டாலும் அது குறித்து எழுதி விகடம் செய்து சிரிக்க வைக்கிறார்களே

இப்படியெல்லாம் நடக்கும் என தியாகராஜருக்கு தெரிந்திருந்திருக்கிறது

தியாகராஜரின் வரராக லயஜ்ஞுலு என்ற கீர்த்தனை வரிகள்

“ஸ்வரஜாதி மூர்ச்சநா பேதமுல் ஸ்வாந்த மந்து தெலியக யுண்டிந
வரராக லயஜ்ஞுலு தாமநுசு வதரேரயா”

அதாவது ஸ்வரம், ஜாதி மூர்ச்சனை ஆகியவற்றின் வேறுபாடுகளைத் தம் உள்ளத்தில் அறியாதவர்களாயினும் சிறந்த ராக தாள வித்வான் மாதிரி பிதற்றி திரிகின்றனர் என்று அர்த்தம். இது ஸங்கீத லோகத்திற்கானது மட்டுமல்ல.

இது குறித்து எனது முந்தைய பதிவில் எழுதியிருப்பதைப் படிக்கலாம்


இரண்டு ஜோக்கர்களைக் குறித்து தொடர்ந்து எழுத உத்தேசம்

Saturday, 18 September 2010

சுய மோகன்

எப்போதும் தன்னைக் குறித்து தற்புகழ்ச்சி நிறைந்த எண்ணம் கொண்டிருப்பவர்களை, தனக்கு தானே வேறு வேறு பெயர்களில் கடிதம் எழுதிக் கொண்டு அதை உங்கள் நடை நன்றாக இருக்கிறது என சிலாகித்துக் கொள்ளும் அற்ப புத்தி கொண்டவர்களை , தமது திறமையால் தமது துறையில் உயர்ந்தவர்களை அவர்கள் உயிருடன் இருக்கையில் ஒரு வார்த்தையும் பேச துணிவில்லாத ஆனால் அவர்கள இறந்த பின் விமர்சனம் செய்து மகிழும் கோழைகளை , என்ன இப்படி அநாகரீகமாக நடந்து கொள்கிறீர்களே என கேட்டால் நான் சும்மா தமாஷுக்கு சொன்னேன் என புறமுதுகு காட்டிய சுத்த வீரர்களை ,அவர்கள் இறந்த பின்பும் அவர்களது புகழால் பொறமை எண்ணம் கொண்டவர்களை எப்படி அழைக்கலாம்

இப்படியானவர்களை சுய மோகன் என அழைக்கலாம் என நினைக்கிறேன்

Sunday, 12 September 2010

சுஜாதா நினைவு


சென்னை கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் , ஒரு வாசிப்பு அரங்கிற்கு எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பெயரினைச் சூட்டலாம் . வாசகர்களுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்து படிக்கும் பழக்கத்தினை தூண்டிய ஒரு நல்ல எழுத்தாளருக்கு இது ஒரு Fitting Tribute ஆக அமையும்

சுஜாதா அவர்களின் எண்ணற்ற வாசகர்கள் , அவரின் எழுத்தினை பதிப்பித்த பதிப்பாளர்கள் , இதழாசிரியர்கள் இதனை அரசிடம் ஒரு வேண்டுகோளாக எடுத்து செல்ல வேண்டும்

ஒரு எழுத்த்தாளர் , பதிப்பாளர் , ரசிகர் தானும் சுஜாதாவின் வாசகர் எனும் அடிப்படையில் முதல்வர் கலைஞர் அவர்கள் இதற்கு இசைவார் எனும் நம்பிக்கை இருக்கிறது

Monday, 2 August 2010

மீண்டும் சுஜாதா தொடர்கிறது


மீண்டும் சுஜாதா தொடரை தொடர்கிறேன்

இதன் முந்தைய பதிவுகளின் சுட்டிகளை தந்திருக்கிறேன்

மீண்டும் சுஜாதா அறிமுக்கப் பதிவு - http://mowlee.blogspot.com/2008/07/blog-post_03.html
வைகுண்டப் பிரவேசம்-1 (மீண்டும் சுஜாதா) - http://mowlee.blogspot.com/2008/07/1_04.html
வைகுண்டப் பிரவேசம்-2 (மீண்டும் சுஜாதா ) http://mowlee.blogspot.com/2008/07/2_11.html
யஷகானம் (மீண்டும் சுஜாதா) http://mowlee.blogspot.com/2008/07/blog-post.html

இப்போது தொடர்ச்சியாகப் படிக்கலாம்
---

"வசந்த் என்ன இது வந்த இடத்திலே கலாட்டா"

" பாருங்கோ பாஸ் மெக்சிகோ தேசத்து சலவைக்காரி ஜோக் சொன்னாத்தான் இந்த ஆசாமி என்னை விடுவாராம்"

"கஷ்டமேயில்லை. சார் கிட்ட இவரை கூட்டிண்டு போய் விட்டுடு. சாருக்கு ப்ரீதி இருந்தா சொல்றார்"

"அப்புறமா பாஸ்; பெங்களூரு லால் பாக் போனப்ப toilet ரூமுக்கு போயிருந்தேனில்லையா அங்க ஒன்னு கவனிச்சேன்"

"ஏண்டா நீ திருந்தவே மாட்டியா"

"இல்ல பாஸ் இது சுஜாதா சார் பத்தி அங்கே எழுதிருந்தது"

"என்ன உளறல்"

"இல்ல பாஸ் சுவத்திலே கிறுக்கிருந்தா; அதாவது சார் எழுதினதெல்லாம் சயன்ஸ் இல்லையாம். இலக்கியம் இல்லையாம் "

"அட போடா toilet சுவத்திலே கிறுக்கினது எல்லாத்துக்கும் கவலைப் பட முடியுமா; சார் பத்தி இது மாதிரி எழுதினாவாளுக்கெல்லாம் அவரே பல தரம் பதில் சொல்லிட்டார்; நான் இதுக்கெல்லாம் ஒரு வரில பதில் சொல்லிடுவேன் அது De Puisieux சொன்னது Jealousy is an awkward homage which inferiority renders to merit அப்படின்னு"

"என்ன கணேஷ் De Puisieux பேரெல்லாம் அடிபடுது என்ன சமாச்சாரம்" சுஜாதா அருகில வந்தார்

(தொடரும் )

Thursday, 29 July 2010

சுஜாதா.. ஜெயமோகன் .. இலக்கியம்




இது ஜெயமோகன் அவர்களின் வலையில் காணப்படும் கட்டுரைக்கான எதிர்வினை எனக் கொள்ளலாம்

http://www.jeyamohan.in/?p=7505

கேள்வி சுஜாதாவின் மரணத் தருவாயில் அவரால் சொல்லப்பட்ட ஒரு சொற்றொடருக்கு என்ன காரணம் இருக்க இயலும் எனும் ஒரு வாசகனின் கேள்வி . இந்தக் கேள்விக்கு விடை அளிக்க எத்தனித்த திரு. ஜெயமோகன் வழக்கம் போல சுஜாதாவின் எழுத்திற்கான இலக்கிய அந்தஸ்த்து குறித்து எழுதியுள்ளார்.

கட்டுரை ஆயுர் வேத மருத்துவ முறை குறித்து தொடங்கி அது எப்படி இலக்கியத்தோடு ஒப்பிடலாம் என்பதாய் தொடங்குகிறது

Betrand Russel, Inference as a Habit எனும் கட்டுரையில் Syllogism குறித்து விளக்கியிருப்பார்; Syllogism என்றால் இரண்டு வாக்கியங்களை சொல்லிவிட்டு அதன் வழியே மூன்றாவது வாக்கியத்தினை உண்மை என நிறுவ எத்தனிப்பது.
சுஜாதாவின் எழுத்து இலக்கியமா இல்லையா என்பதற்கான ஜெயமோகன் அவர்களின் வாக்கியங்களும் Syllogism முறையிலேயே அமைந்துள்ளன என சொல்லலாம் ஆனால் எடுபடவில்லை

ஜெயமோகன் அவர்கள் உளவியல் சார்ந்த தத்துவ சார்புகளை அதிகம் வாசிப்பவர் , விவாதிப்பவர் என்பது நன்கறிந்த விஷயம் . தர்க்கத்தில் Syllogism நிறைய பங்களிப்புகளை செய்திருந்தாலும் ; தர்க்க சாஸ்திரத்தில் Syllogism கோலோச்சியிருந்தாலும் Betrand Russel , I have never come across any case of new Knowledge obtained by means of Syllogism ; It must be admitted that, for a method which dominated logic for two thousan years, this contribution to the world's stock of Logic for two thousan years, this contribution to the world's stock of Information can not be considered as weighty என சொல்லியிருப்பதை சுட்டிக் காட்ட விழைகிறேன்

ஜெயமோகன் அவர்கள் வழக்கமாக கையாளும் Syllogism இங்கே எடுபடாமல் போவதற்கும் இது தான் காரணம்

பொதுவில் தமிழ்நாட்டில் ஒரு பழக்கம். தானாக வரிந்து நீதிபதியாகி விடுவது. யார் தமிழன் ... எது நடிப்பு .. எதெல்லாம் இலக்கியம் .. இது போன்ற தளங்களில் அளவுகோல்கள் , தராசுகள் , அளவுக் குவளைகளை தன்னிச்சையாக அமைத்துக் கொண்டு களமிறங்கும் நீதிபதிகள்

இப்படி அளப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனால் அளவுகோல் தான் விந்தையானது . பதினோரு அங்குல ஸ்கேல். ஒரே தட்டுள்ள தராசு . ஓட்டையான குவளைகள்

ஜெயமோகன் இதற்கு தானும் விதி விலக்கல்ல என்பது போல தெரிவது தான் வேதனை.

Tuesday, 27 July 2010

நல்லதோர் வீணை


அழகர் கோவில்- குடும்ப சகிதம் சென்றாலும் கோவிலுக்குள் செல்லவில்லை. நல்லதாக ஆயிற்று. ஆலயத்தின் வெளியே வந்து நிற்கும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். கார்கள் வரும் வழியிலிருந்து திடீரென உதயமாகி முண்டாசு நடந்து வருவதைப் பார்த்தேன். வழியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையுடன் பேசுவதற்காக உட்கார்ந்து கொண்டான்.

நான் விரைந்து சென்று அவனையடைந்து பக்கத்தில் நின்றேன். உட்கார்ந்த நிலையிலிருந்தே என்னை நிமிர்ந்து பார்த்தான்

"நீர் இங்கு தான் இருப்பீர் என யூகித்தே வந்தேன்"


" என்னை நீங்கள் தேடினீர்களா " .. நிஜமாகவே எனக்கு ஆச்சர்யம்


"உமக்கு அதில் என்ன சந்தேகம். நீர் பொழுது சாய்ந்து பொழுது விடிந்தால் என்னைத் தேடிக் கொண்டே இருக்கின்றீர்"


எனக்கு சிரிப்பு வந்துவிட்டது ..


"என்ன ஸ்வாமி. இப்படி நகைக்கின்றீர். நாம் இரண்டு தரம் சந்தித்திருகின்றோம். அப்போதெல்லாம் உம்மைத் தேடி நான் வந்தததாக தோன்றும். ஆனால் அகத்தளவிலே நீர் என்னைத் தேடியதால் நான் வந்தேன். நான் சரியாகத்தான் சொல்கின்றேனா"


"நீங்கள் சொல்வதில் என்றைக்குமே பிசகிருக்காது என்பதில் எனக்கு நம்பிக்கை "


"உதட்டளவில் இருக்கிறதோ உங்கள் நம்பிக்கை" என கண் சிமிட்டினான் முண்டாசு


" உங்களிடம் மறைக்க முடியுமா .. எனது சந்தேகம் உங்களைக் குறித்தல்ல. அந்தப் பாட்டில் என்ன சொல்ல வருகின்றீர் என தெளிவு செய்து கொள்ள ரொம்ப நாளாக ஆசை"


"நீர் பாடலைச் சொல்லும் .. அல்ல அல்ல .. பாடியே காண்பியும் "

நல்லதோர் வீணை செய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி - எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்வல்லமை தாராயோபட்ட - இந்தமாநிலம் பயனுற வாழ்வதற்கேசொல்லடி சிவசக்தி - நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ


விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்நசையறு மனம் கேட்டேன் - நித்தம்நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன்


தசையினைத் தீச்சுடினும் - சிவசக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்அசைவுறு மதி கேட்டேன்


இவைஅருள்வதில் உனக்கேதும் தடையுளதோ

"என்ன உமது ஐயம்"

"உங்களுக்கு சரியானதொரு அங்கீகாரம் கிட்டலைன்னு ஒரு வருத்தம் தெரியறது பாட்டிலே"

"எப்படி இவ்வாறு சொல்கின்றீர் என அறியலாமா ?"

"நலம் கெட புழுதியில் ... சுடர் மிகும் அறிவு .. என்பதாக தாக்குதல் உளதே"

"பராசக்தி !!! இப்படியுமா நினைப்பார் "

"நீங்கள் விளக்கம் சொல்லிவிட்டால் எனக்கு மனசு அமைதியாகும் "

"ஒரு பெரும் முயற்சியில் இருப்பவனுக்கு அது குறித்த அறிவு மட்டும் போதுமா இல்லை அதை செயலாக்க திடமும் மனவுறுதியும் வேண்டுமா "

"இரண்டும் தான்"

"அறிவைக் கொடுத்த சரஸ்வதியிடம் திடமும் மனவுறுதியும் கேட்டுப் பாடியிருக்கின்றேன்"

நான் யுக புருஷனாய் மதிக்கும் அவனை நமஸ்கரித்தேன்

"என் பரி பூர்ண ஆசிர்வாதங்கள். அதோ உமது குடும்பத்தார் வந்துவிட்டனர்"

காற்றிலே கலந்தான்

Wednesday, 30 June 2010

ஜெயமோகனின் இன்றைய காந்தி




நண்பர் கார்த்திக் சுப்ரமணியன் ஜெயமோகனின் இன்றைய காந்தி புத்தகத்தை உடுமலை டாட் காம் மூலம் அனுப்பி வைத்திருந்தார். சில பக்கங்கள் படித்த உடனே இதில் விவாத்தித்து தெளிவு பெற வேண்டிய சங்கதிகள் நிறைய உண்டே எனும் குதூகலம். இது குறித்து ஜெயமோகன் அவர்களுடன் உரையாட (இணையம் வழி ) ஆவல் கொண்டுள்ளேன். முதல் கட்டமாக நான் அவருக்கு எழுதிய மின் கடிதம் அதற்கு அவரின் பதில் இந்த சுட்டியில்

Sunday, 4 October 2009

கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம்


கமல்ஹாசன்,

உன்னைப் போல் ஒருவன் சினிமா பார்த்தேன்.

நிறைய பேர் படம் அப்படி இருந்தது இப்படி இருந்தது என எழுதி விமர்சனங்கள்ஓய்ந்த சந்தர்ப்பத்தில் நானும் அது மாதிரியே எழுதிக் கொண்டிருக்க நான்நிச்சயமாக உன்னைப் போல் ஒருவன் இல்லை

ஒரு படத்திலே லீகல் சிஸ்ட்த்துக்கு டிமிக்கி தந்துவிட்டு ஆஸ்திரேலியாபோய்விட்டு அங்கிருந்து போனில் போலிஸ் ஆபிசருடன் பேசுகிறார்

இப்போது இன்னும் ஒரு படி மேலே போய், லீகல் சிஸ்ட்த்திலே இருக்கும் ஒருபோலிஸ் ஆபீசர் சினிமாவின் கடைசி காட்சியிலே ,”’ “உங்க கையிலே இருக்கும்பாரம் ஜாஸ்தியா இருக்கும் போல இருக்கு, நான் வேணும்மினா தூக்கிட்டுவரவா” என கேட்கிறார்.

சமூகத்திலே சுத்தமான வாழ்க்கை என்பதை மேசேஜாக சொல்வதற்காகபுனையப்படும் சினிமாவிலே சுவாரசியம் சேர்ப்பதற்காக, சினிமாவின் ஹீரோசட்டத்தை தானே கையில் எடுத்துக் கொள்வதாக வரும் படங்கள் வியாபாரரீதியாக மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாக சொல்லலாம்.. என்னை விட அந்தபட்டியல் கமல்ஹாசனுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் பட்டியலில் கவனம்செலுத்தாமல் இந்த கடிதத்தை தொடர்கிறேன்.

லஞ்சம் வாங்குபவர்கள், கடமையை சரியாக செய்யாதவர்கள், தீவிரவாதிகள்இப்படியானவர்கள் மீது சமூகம் கோபம் கொண்டிருப்பது மெய்தான். ஆனால்அவர்களை கையாள இப்படி சினிமாக் கணக்காக ஒரு ஹீரோ extraordinary சங்கதிகளுடன் போலிசுக்குத் தண்ணி காட்டி தண்டனை வழங்குவான் என்பதைசினிமா அளவில் மட்டுமே சாத்தியம் என்பதை சமூகம் தெரிந்து வைத்துதான்இருக்கிறது.

சினிமா என்பதை மெசேஜ் சொல்லும் யுக்தியாக, நீங்கள் வைத்திருக்கும்பட்சத்தில் சமூக அவலங்களுக்கு சினிமாவிலே ஹீரோ நடை முறையில் உள்ளலீகல் சிஸ்ட்த்திற்கு உட்பட்டே தண்டனை வாங்கித் தருவதாக, கதை அமைத்துஒரு படம் முயற்சி செய்து பாருங்களேன். என்ன கோர்ட் கேஸ் என படம் ஜவ்வடிக்குமோ என நீங்கள் கொஞ்சம் யோசிக்கலாம்.. ஆனால் அதையெல்லாம்தாண்டி சுவாரசியமாக கதை சொல்ல உங்களுக்குத் தெரிந்து இருக்கணும்னு நான் நம்புகிறேன்

இப்படி படம் செய்வதால் என்ன மேசேஜ் கிடைக்கும் எனவும் யோசித்தேன்.. சினிமாவிலே ஹீரோ ஒருவனும் இன்னும் சிலரும் மட்டுமே நல்லவர்கள்பிறரெல்லாம் சமூகப் பிரஞ்ஞையே இல்லாதவர்கள்.. குறிப்பாக அரசாங்கஅதிகாரிகள் சமூக அக்கறையே இல்லாதவர்கள் என்பது போல காட்டப்பட்டுவரும் வழக்கம் மாறிடலாம்.

இப்படி படம் எடுத்தால் எனக்கு கமர்ஷியலாக பாதிப்பு வரலாம் என நீங்கள்யோசிக்கலாம்.. இப்படி ரிஸ்க் எடுப்பதில் உன்னைப் போல் ஒருவன் இல்லையேகமல்.. அதனால் தான் இதை உங்களிடம் சொல்கிறேன்

இப்படி செய்தால் மட்டுமே நீங்கள் சொல்லும் moral anger சரியாகப் பொருந்திவரலாம்.. இல்லேன்னா anger மட்டும் இருக்கும். தான் மாரல் இருக்காது

Sunday, 26 July 2009

நரை


இன்றைக்குத்தான் புதுசாக ஒன்றைக் கவனித்தேன். ஷேவ் செய்யும் போது மீசையிலே இரண்டு வெள்ளை முடிகள். நரை...

சரி வயசாகிவிட்ட்தோ என நினைத்து சமாதானம் ஆகிவிட்டேன். ஆமாம் ஏன் நரை முடி... என் டாக்டர் சிநேகிதனைக் கேட்டேன்

நம் ஒவ்வொரு முடியின் வேரும் Tissue Tube ஒன்றால் கவர் செய்யப்பட்டுள்ளது. இதுக்கு பாலிக்கிள் என்று பெயர். இதிலே நிறைய பிக்மெண்ட் செல்கள் இருக்கின்றன இந்த பிக்மெண்ட் செல்கள் மெலனின் எனும் ஒரு ரசாயனத்தை உற்பத்தி செய்து கொண்டே இருக்குமாம். இந்த மெலனின் தான் கேசத்தின் நிறத்துக்குக் காரணமாம்.

வயசு ஏற ஏற மெலனின் உற்பத்தி சொற்பமாகி, கலர் சப்ளை நின்று போய் கேசத்திலே வெள்ளை அடிக்க ஆரம்பமாகிறதாம். இதே மெலனின் தான் நமது தோலின் நிறத்துக்கும் காரணமாம்.

மெலனின் பற்றாக்குறைக்கு அல்பினிசம் என்று பெயராம். இந்த அல்பினிசத்துக்கும் காது கேட்காமல் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக சொல்லி லேசாக பயம் காட்டினான்

மெலனின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துகொள்ள ஏதாவது மாத்திரை, டானிக் இருக்கிறதா எனக் கேட்டேன். ”அதான் நிறைய டை வந்திருக்கே” என்றான்.

டை அடித்துக் கொண்டு முடியைக் கறுப்பாக்கிக் கொண்டு உலாவும் கனவான்கள் ஒன்றைக் கவனித்திருப்பார்களா தெரியவில்லை. முன் மண்டையிலே பிசிரில்லாமல் நேர்த்தியாக கருப்படித்திருப்பார்கள். அந்த நேர்த்தி பெயிண்டிங் கேசம் மாதிரி இருக்கும். உடனே இது டை அடித்த தலை என சந்தேகம் இல்லாமல் சொல்லிவிடலாம்

மெலனின் அபரிமிதமாக சுரப்பதும் உண்டாம். அதுக்கு மெலனோஜெனசிஸ் என்று பெயராம். இப்படி மெலனின் அளவு கடந்து சுரப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டேன். ”எல்லாம் ஹெரிட்டரி” சிம்பிளாகச் சொல்லிட்டு போய்ட்டான் ஆனால் இதுக்கு ஒரு நல்ல ஆன்சர் புறநானூற்றிலே பிசிராந்தையார் சொல்லிருக்கார் பாருங்கள்

“யாண்டு பலவாக நரையில் ஆகுதல்

யாங்கு ஆகியர் ? என வினவுதிர் ஆயின்

மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்;

யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்

அல்லவை செய்யான், காக்கும்; அதந்தலை

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர்யான் வாழும் ஊரே”

(புறநானூறு :191 பாடியவர் பிசிராந்தையார்)

எனக்கு அன்பான மனைவி.. மிக்க அன்பான குழந்தைகள்.. கடமை பெரிதென உழைக்கும் ஊழியர்கள். எல்லாவற்றிலும் மேலாக குற்றம் செய்யாத என் அரசன். அதைவிட மேலாக கொள்கையால் சிறந்த சான்றோர்கள் நிறைந்த ஊரிலே நான் குடியிருக்கிறேன். அது தான் ஆண்டுகள் பல ஆகியும் எனக்கு கேசம் நரைக்கவில்லை