Tuesday 11 January 2011

34TH BOOK FAIR-CHENNAI PART 2


இந்த தொடரின் முதல் பாகம் படிக்க க்ளிக் செய்யவும்

கிழக்கு பதிப்பகம் மஹாத்மா காந்தி கொலை வழக்கு :

1990 ம் வருஷத்திய பிப்ரவரி மாசத்தில் ஒரு நாள். மதராஸ் பட்டிணத்தில் இருந்து தில்லிக்கு விரைந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியின் செகன்ட் க்ளாஸ் ஸ்லீப்பர் பெட்டி.. எதிர் எதிரே இருக்கும் இரண்டு அப்பர் பெர்த்கள். ஒன்றில் 22 பிராயம் கொண்ட வாலிபன் இன்னொன்றில் அவனது தந்தை. இருவரும் சம்பாஷிக்கிறார்கள்

"அப்பா இதுக்கு முன்ன நீங்க தில்லி போயிருக்கேளா"

"என்.சி.சி கேம்ப்க்காக மூணுதரம் போயிருக்கேன். இப்ப ரீசன்டா உங்க அக்காவை குடித்தனம் வைக்க போனமேடா நானும் அம்மாவும்"

"தில்லி சுற்றிப் பார்க்க நீங்கதான் என் கூட வரணும்.. நான் டிராவல்ஸ்ல எல்லாம் போக மாட்டேன்"

"டிராவல்ஸ்லேயே போகலாம்.. ஆனா நான் கூட வரேன்"

"தில்லிலே என்ன என்ன பார்க்கப் போறோம்.."

"ரெட் ஃபோர்ட், டிபென்ஸ் ம்யூசியம்... ராஜ் காட்..."

"அப்பா.. காந்தியை ஏன் கொன்னா.. நல்லவர் தானே..."

காந்தியார் குறித்த ஓர் ஆவணபூர்வமான சம்பாஷணைத் தொடர்ச்சி என் தந்தையின் பதில். சரித்திர பேராசிரியர் அல்லவா.. கிரமமாக வரலாற்று நிகழ்வுகளை அடுக்கிய படி தொடர்ந்தது அவர் பதில்

பிர்லா மாளிகையில் காந்தியி சுடப்பட்ட இடம் காண்பித்து விட்டு, சென்றிருந்த டிராவல் பஸ்ஸை புறக்கணித்து விட்டு அங்கிருந்து ஜந்தர் மந்தருக்கு வந்து அமர்ந்து காந்தியின் சரித்திரம் தொடரப் பேசினார்.. பேசினார்.

என் மனதில் அந்த ஒற்றை ஆடை ராஜாவை நிரந்தரமாக குடியமர்த்தினார் என் அப்பா.

1993 ம் வருஷம் நான் திருத்துறைப்பூண்டிக்கு ட்ரான்ஸ்பர் ஆனதும்.. அங்கிருந்து தான் நவஜீவன் பதிப்பகத்தாருடன் தொடர்பை பலப்படுத்திக் கொண்டேன். காந்தி காந்தி என புத்தக அலமாரி நிறைந்தது..

இன்னமும் காந்தி குறித்த புத்தகங்களை மறு கேள்வி இல்லாமல் வாங்குவேன்..

இந்த பதிவை எழுதும் இந்த நாளுக்கு முந்தைய இரவில் ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தியில் ஜெனரல் ஸ்மட்ஸ் காந்தி உரையாடலை பார்த்துவிட்டு சிந்திய இரண்டு கண்ணீர் துளிகள் என் லாப்டாபின் ஸ்க்ரோல் பேட் மீது ..

(தொடரும்)

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் சந்திர மௌளீஸ்வரன்

மகாத்மா காந்தியின் இரசிகனாகி, சிஷ்யனாகி, கொள்கைகளைக் கடைப் பிடிப்பவனாகி விட்டீர்கள் போலும். நல்ல செயல். அவரைப் பின் பற்றுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா