Sunday, 8 May 2011

கனிமொழி vs சிபிஐ


கனிமொழி என்ற எனது முந்தைய பதிவு பெற்றுத் தந்த உற்சாகம் அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவு

கனிமொழி மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் அவர் மீது Prevention of Corruption Act Section 7 & 11 மற்றும் Indian Penal code Section 120 B கீழ் குற்றம் இழைத்தவர் எனும் அடிப்படையில் அவர் மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது

இந்த சட்டப் பிரிவுகளின் தன்மைகளைத் தெரிந்து கொள்வது நலம்;

என்னுடன் உரையாடியவர் பலருக்கு இந்த சங்கதிகளுக்கு ஏன் இவ்வளவு கால அவகாசம் உடனே பிடித்து உள்ளே தள்ள வேண்டியது தானே எனும் அளவில் அவசரம் இருப்பது தெரிந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றம் இழைக்கவில்லை எனக் கருதும் போது ஏன் முன் ஜாமீன் கோரணும் அதுவே அவருக்கே அவர் மீது நம்பிக்கையில்லை என்பதைக் காட்டுகிறதே என்ற கேள்வி என்னிடம் இணைய உரையாடலில் கேட்டார்கள். எனக்கு அந்த கேள்வி அறியாமையா அல்லது ஒருதலைப் பட்சமாக யோசிக்க மக்களை நிர்பந்தித்துள்ள ஊடகங்களின் கைவரிசை காரணமா என சிந்திக்க தூண்டியது. இரண்டும் தான் இருக்க வேண்டும்.

இப்போது அந்த சட்டப் பிரிவுகளை கவனிக்கலாம் இது சாரம் தான் புரிந்து கொள்ள வசதியாக எளிமையாக சொல்லிருக்கேன்

ப்ரிவென்ஷன் ஆஃப் கரப்ஷென் ஆக்ட் செக்சன் 7ன் சாரம்

பொது ஊழியர் (ப்ப்ளிக் சர்வன்ட்) அல்லது பொது ஊழியராக ஆக இருப்பவர் தனக்கோ அல்லது பிறர் சார்பாகவோ அரசு மற்றும் அரசு சார்பு துறையில் பணியினை செய்வதற்கோ அல்லது பணி செய்யாமல் இருப்பதற்கோ ஊதியம் அல்லது ஊதியம் சார்ந்த வருமானம் தவிர பிற எவ்விதமான வெகுமதியினையும் பெறுவது குற்றமாக கருதப்படும்

அதே ஆக்டின் செக்சன் 11ன் சாரம்

பொது ஊழியர் தான் சார்ந்துள்ள பணி தொடர்புடைய எவருடனும் வர்த்தகப் பறிமாற்றங்கள் செய்வது குற்றம்

இப்ப ஐபிசி செக்சன் 120பி

இது சதி செய்தல் அல்லது கூட்டுச் சதி செய்தல்

இந்த இரண்டு வகை குற்றச் சாட்டிலும் முன்னாள் அமைச்சர் இராசா நேரடியாக தொடர்புடையவராகிறார் ; காரணம் அவர் அந்த துறைக்கு அமைச்சராக இருந்ததால் இந்த குற்றச் சாட்டுகளில் கனிமொழியினை இராசவின் சார்பில் கலைஞர் தொலைக் காட்சி பெயரில் பணம் பெற்றார் எனக் குற்றம்

சாட்டப்பட்டுள்ளது

இப்போது கவனிக்க

தான் பங்குதாரராக இருக்கும் தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரில் இவர் வாங்கிய பணம் இராசவின் சார்பில் பெறப்பட்ட முறையற்ற

வெகுமதிதான். அது கடனல்ல. வழக்கமாக கடன் வாங்கும் போது பெறப்படும் ஆவணங்கள் இல்லை என்பது சிபிஐ வாதம்
“சார்பில்” எனும் வாதத்தினை முன்வைக்க இவர் அவரை அடிக்கடி சந்தித்தார். பேசினார். அவர் அமைச்சராக இவர் எவருடனோ பேசினார் என பொதுவாக யூகத் தன்மை கொண்டு இருக்கிறதேயல்லாது. இந்திய குற்றவியல் நடைமுறைக்குத் தேவையான சந்தேகத்திற்கு இடமில்லாத நிரூபணமாக இல்லை

இந்தப் பதிவுக்கும் படத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கு. அந்த கயிறு இழுக்கும் வீரர்கள் எல்லோரும் சிபிஐ அதிகாரிகள். இந்த ஆண்டு சிபிஐ விளையாட்டுப் பந்தயத்தின் போது எடுக்கப்பட்ட படம்.. சுட்டி

Saturday, 7 May 2011

கனிமொழி


கைது கைது என எங்கே பார்த்தாலும் சத்தம், எழுத்துக்கள். டிவியை ஆன் செய்தால் இணையத்தில் நுழைந்தால் இதே வார்த்தை தான்.

மக்களுக்கு ரிமான்ட் எனச் சொல்லிப் பழக்கமில்லையோ அல்லது தமிழில் ரிமான்டுக்கு கைது தான் சரியான நிகர்ச் சொல் என நினைக்கின்றார்களோ என்னவோ. காவல் எனும் வார்த்தை பொருத்த்ம்

பன்மொழிப் புலவர் அப்பாத்துரை என்ன சொல்கிறார்; ரிமான்ட் என்றால் திரும்ப அனுப்பு என சொல்கிறார்.. இவர் வேண்டாம்..

நாம் லாஜிக்கலாக பார்ப்போம்.

நடைபெற்றதாக நம்பப்படும் குற்றப் பிண்ணணி குறித்து புலன் விசாரண அமைப்பு விசாரிக்கிறது நபர் 1, நபர் 2 , நபர் 3 இதிலே தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என கருதுகிறது. குற்றப் பத்திரிக்கை தயார் செய்யத் தேவையான சாட்சிகள் ஆவணங்கள் சேகரிக்க இவர்கள் இடையூறு தரக் கூடும் என நினைத்து அவர்களை கைது செய்கிறது. நீதி மன்றத்தில் ஆஜர் செய்கிறது . ரிமான்ட் கோருகிறது .

இவர்கள் குற்றம் இழைத்ததாக கருதுகிறோம். இவர்கள் மேல் விசாரணைக்கு தேவைப்படுகிறார்கள் ஆயினும் இவர்கள் வெளியில் சுதந்திரமாக உலவினால் சாட்சிகளை கலைக்கும் அபாயம் இருக்கு ஆகவே ப்ளீஸ் ரிமான்ட் எனக் கேட்பது.

நீதிபதி, " என்னங்க நீங்க என்ன சொல்றீங்க"

குற்றம் சாட்டப்பட்டவர், " ஐயா அதெல்லாம் இல்லீங்க. " எனக் கூறி தன் தரப்பு நியாங்களை சொல்கிறார். இதை நீதிபதி ஏற்காத தருணத்தில் ரிமான்ட் ஆகிறது. தமிழில் சொன்னால் காவலில் வைக்கப்படுகிறார்

சம்பவங்களைச் சரியாக கவனிக்க வேண்டும். குற்றம் குறித்து விசாரணை நடக்கிறது. அய்யோ இவர் வெளிலே இருந்தா ஆபத்து.. புடிச்சி காவலில் வை.. அய்யா நீதிபதி இவர் வெளிலே இருந்தா ஆபத்து புடிச்சி வச்சிட்டோம். இவர் விசாரணைக்கு குந்தகம் செய்வார் ஆகையாலே நீங்க இவரை காவலில் வைக்க ஆர்டர் தரணும் என வரம் கேட்பது தந்தேன் என சொல்வதும் நடந்திருக்கு .. அவங்க மேல் அப்புறமா தான் குற்றப் பத்திரிக்கை தாக்கல் ஆகிருக்கு.

அதே வழக்கிலே நபர் 4 , நபர் 5, நபர் 6 சம்பந்தப்பட்டிருக்காங்கனு சந்தேகத்துல அவங்களை விசாரிக்கிறாங்க. விசாரிக்கிறாங்க .ஆனா கைது செய்யலை. ஏன் இவங்க சாட்சி கலைப்பாங்க இடைஞ்சல் செய்வாங்கனு தோணலை. இல்லை தேவை இல்லை.. ஆனா குற்றம் செய்திருக்காங்கனு தோணுது . கோர்ட்லே சொல்லியாச்சு கோர்ட்டும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து அதை வாங்கிக்க இத்தனாம் தேதி வா என சொல்லியாச்சு.

கவனிங்க விசாரணை நடந்ததுக்கும் , குற்றப் பத்திரிக்கை தாக்கல் ஆனதுக்கும், அதை வாங்க வானு கோர்ட் சொன்ன நாளுக்கும் இடையிலே எத்தனை இடைவெளி. ஆக இவங்க எல்லாம் சாட்சி கலைப்பு இதெல்லாம் செய்ய வாய்ப்பில்லைனு விசாரிச்ச போலிசு நினைத்தது உறுதியாச்சு

ஆக இப்ப குற்றப் பத்திரிக்கை வாங்க வந்தப்போ ஜட்ஜ் அய்யாகிட்ட சாட்சி கலைச்சிருவாங்கனு சொல்ல சான்ஸ் இல்லை ; சொல்லலைனு நினைக்கிறேன்.


இவங்கள்ளாம் விசாரணைக்கு தேவைப் படுவாங்க .


என்னங்க எப்ப கூப்பிட்டாலும் வரணும். வரேன். வெளிநாடு போகக் கூடாது.

ஏன் சந்தேகம் இந்தா என்னோட பாஸ்போர்ட்..

நீங்க என்னங்க சொல்றீங்க .. எங்களுக்கு ஓகே


ரிமான்ட் என்றால் என்ன எளிமையாகப் புரிய வைக்க இனிமையான மொழியில் ஐ மீன் கனிவான் மொழியில் சொல்ல முயற்சி செய்தேன் இதில் மேலும் சட்ட பூர்வமாக சிஆர்பிசி , ஐபிசி, பல வழக்குகளின் முன்னுதாரணம் இதெல்லாம் சொல்லி விளக்கமா வேணுமின்னா எனக்கு தனியா மெயில் அனுப்பவும்


நான் அரசியல் சார்ந்த பதிவுகள் எழுதுவதில்லை ஆகையால் இந்தப் பதிவினை அரசியல் எனக் கருதாது படிக்கவும். பின்னர் ஏன் தலைப்பினை இப்படி வைத்தாய் எனக் கேட்டால் கனிமொழி என்பதற்கு இனிய மொழி என பெயர் உண்டு என விளக்கம் சொல்லக் கடமைப்பட்டவனாகின்றேன். அந்த அம்மா படத்தை ஏன் இந்தப் பதிவில் இணைத்தாய் எனக் கேட்டால் கூகிள் இமேஜ்ஜில் தேடினால் இந்தப் படம் மட்டும் தான் கிடைக்கிறது

Tuesday, 3 May 2011

அந்த அம்மா அப்பாவுக்கு நன்றி


சான்றோன் எனக் கேட்ட தாய்

அவை தனில் முந்தியிருக்கச் செய்த தந்தை


அந்த பிள்ளை என்ன செய்தது,, இந்த புத்தகத்தை படி அந்தப் புத்தகத்தை படி, இந்த சங்கீதம் கேள், இந்த சயின்ஸ் சங்கதி படி என எப்ப பாரு படிக்கச் சொன்னது அந்தப் பிள்ளை... கணக்கில்லாமல் படிக்கிறதுக்கு எழுதி வச்ச பிள்ளை.. பலதரப்பட்ட ரசனைகளை சொல்லிக் கொடுத்தஅந்த பிள்ளைக்காக அந்த அப்பா அம்மாவுக்கு தாங்க்ஸ் சொல்லிக்கிறேன்


இவங்க பிள்ளைக்கு(சுஜாதா) இன்னிக்கு பிறந்த நாள்

Sunday, 1 May 2011

சக பயணி 5

சக பயணி 5

இதன் பாகம் 4 ஐ படிக்க இங்கே க்ளிக்

"என்ன சொல்கின்றீர்கள்". எனது வாக்கியம் அவரிடம் ஒரு சின்ன அதிர்வை வரவழைத்திருந்தது. எங்கள் உரையாடலை கவனித்து வந்திருந்த மற்றவர்களும் நான் ஏதோ சொல்லக் கூடாத ஒரு செய்தியைச் சொன்னது போல் பார்த்தனர். ஒருவர் ,'அப்படின்னா காந்தியடிகள் நாஸ்திகரா " என்றே என்னிடம் நேரடியாக வினவினார்.

"இதற்கு நான் விரிவான விளக்கம் தர வேண்டியிருப்பதால், அதுவும் அதனை எளிமையாகவும் சிக்கலின்றி சொல்ல விழைவதால் ஒரு புராண கதையுடன் தொடங்க ஆசைப்படுகிறேன்"

"தாராளமாகச் சொல்லுங்கள்; நமது பயணம் இன்னும் பல மணிநேரம் இருக்கிறதே"

"மிக்க நன்றி ; இந்த கதை வராஹ புராணத்தின் தொடக்கத்தில் இருக்கிறது;

அஸ்வசிரஸ் எனும் மன்னன்; மிகவும் நேர்மையானவன், பண்பாளன், கனிவானவன்;அவன் ஒரு யாகத்தை மேற்கொண்டான். அதிலே

அந்தணர்களுக்கு தானம் அளித்தான். அவனை நாடி இரண்டு அந்தணர்கள் வந்தனர். ஒருவர் பெயர் கபிலர். மற்றொருவர் ஜெய்கிஷவ்;

இருவருக்கும் உரிய மரியாதைகள் செலுத்தியபின் அவர்களிடம் மன்னன் கேட்டான், " நாராயணனை எப்படி வணங்க வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு சொல்ல வேண்டும்"

"நாரயணனா அது யார்". இருவரது பதில் கேள்வியும் மன்னருக்கு ஆச்சர்யம் தந்தது. அதுவுமில்லாமல் அடுத்து ,"நாங்கள் தான் நாராயணன்" எனவும் சொன்னார்கள்

"நீங்கள் இருவரும் பெரும் தவம் இயற்றியவர்கள்; கல்வியில் சிறந்தவர்கள் அதிலெல்லாம் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் பஞ்சாயுதம் தாங்கிய நாராயணன் நீங்கள் இல்லை; அவன் கருட வாகனத்தில் இருப்பவன்"

"ஓ ஆயுதங்களும் கருட வாகனமும் தான் உனது பிரச்சனையா ! இதோ பார்"

அவர்கள் இருவரில் ஒருவர் கதை, சங்கு, சக்கரம், வில் துளசி மாலை தரித்த நாரயண வடிவமும் மற்றொருவர் அசல் ராட்சஷ அளவிலான கருடனாகவும் மாறி விட்டனர்

மன்னன் மயங்கவில்லை .. அவர்களிடம் மீண்டும் பேசினான்

(பயணம் தொடரும்)

Saturday, 30 April 2011

நாரதர் சென்னை வருகை


திரிலோக சஞ்சாரியான நாரதர்.. சில தினங்களுக்கு முன்பு சென்னைப் பட்டிணத்துக்கு வந்து சென்றதாக நேற்று இரவில் கனவில் வந்து சொன்னார்.

"இங்கே வந்து என்ன செய்தீர்கள்"

"வயது முதிர்ந்த ஒரு பெரியவரை சந்தித்து அவருக்கு கதை சொன்னேன்"

மிகுந்த ஆர்வத்தில், "யாரை சந்தித்தீர்கள்"

"அது தேவ ரகசியம் என்றும் அதை சொல்வதற்கில்லை"

"சரி என்ன கதை சொன்னீங்க"

"அந்த உரையாடலை அப்படியே இங்கே சொல்கிறேன். கவனமாக கேளுங்கள்

நான் சந்திக்கும் போது அந்த முதியவர் மிகவும் கவலையில் இருந்தார். அவருக்கு நிறைய பொறுப்புகள் என்பது எனக்கு தெரியும் ஆகையால் சமாதானம் சொன்னேன். அவருக்கு சமாதானம் உண்டாகவில்லை;நான் அவருக்கு பாரதத்தில் வரும் சம்பவம் ஒன்றையும் அதை ஒட்டிய கதை சொன்னேன்

பாரதத்திலே கிருஷ்ணனிடம் அறிவுரைகள் பெற்றவர்கள் ஏராளம்

கீதையாகவும், எச்சரிக்கையாகவும், பதவிசாகவும், மறைமுக எச்சரிக்கையாகவும் ஏராளம் ஏராளம்

ஆனால் கிருஷ்ணனே ஆலோசனை கேட்கும் தருணம் உண்டு.. அதை அம்புப் படுக்கையில் இருந்தவாறு பீஷ்மர் தர்மனுக்கு சொல்லும் அறிவுரைகளில் சொல்கிறார்

“ போற்றுதலுக்குரிய பாட்டனாரே. ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்ட உறவினர்களைக் கொண்ட அரசன் அவர்களைக் கையாள்வது எப்படி”

“என் பிரியத்துக்குரிய யுதிஷ்டிரா. இதற்கு நான் கிருஷ்ணன் ஒரு சமயம் நாரதரிடம் பெற்ற உபதேசத்தை மேற்கோளாக காட்டினால் உனக்கு எளிதில் புரிந்து விடும்”

கிருஷ்ணர் நாரதரிடம் கேட்கிறார்,

“ நாரதரே. நான் ஒரு பரந்த தேசத்தினை ஆள்கிறேன் என்று வெளிப்பார்வைக்கு சொல்லலாம். ஆனால் நான் என் உறவுகளின் அடிமை போல உணர்கிறேன். அவர்களின் சுடு சொற்களும், குத்தலும் குதர்க்கமும் நிறைந்த பேச்சுகளும் என்னை மிகவும் சங்கடப்படுத்துகின்றன. அவர்களில் தங்கள் அழகினால் கர்வம் கொண்டவர்களாகவும், சிலர் தங்கள் பதவிகளால் கர்வம் கொண்டவர்களாகவும்
இருக்கிறார்கள். மூர்கமாகவும் நடக்கிறார்கள் என்னை ஆலோசியாமல் அவர்கள் செய்யும் காரியங்களுக்கு பின்னர் நான் பழி சுமக்கிறேன்”

“கேசவா, நாராயணா , மதுசூதனா... பரந்த ராஜ்ஜியத்தில் சில பொறுப்புகளை நீ அவர்களுக்கு தந்திருக்கலாம். அவர்களின் சுடு சொற்களை நீ நல்ல வார்த்தைகள்மூலமே எதிர் கொள்ள வேண்டும். அவர்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறிப்பது நீ கக்கிய உணவை நீயே சாப்பிடுவது போல். அவர்களை மென்மையானதும் அதே சமயம் இரும்பைவிட உறுதியானதுமான ஒரு சக்தி ஆயுதம் கொண்டு கையாளவேண்டும்”

“அதென்ன ஆயுதம் நாரதா”

”அவர்களின் சக்திக்கு தக்கவாறு உணவு, தேவையான அளவே கருணை, நாம் எப்போதும் பொறுமையாக இருப்பது. மிக முக்கியமாக தகுதிக் கேற்ற அளவே அவர்களை மரியாதையாக நடத்துவது இது தான் நான் சொன்ன ஆயுதம்”

இந்த கிருஷ்ண நாரத உரையாடலை பீஷ்மர் தர்மனின் கேள்விக்கு பதிலாக சொல்கிறார்

இது தான் நான் அந்த முதியவரிடம் சொன்ன கதை"

”இதற்கு அந்த முதியவர் என்ன பதில் சொன்னார்”

”முதியவர் ஏதும் பதில் சொல்லவில்லை அவர் பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார் தன் பெயர் வடிவேலு எனச் சொன்னார். அவர் தான் எனக்கு பதில் சொன்னார்”

"என்ன பதில்"

ஏம் பெரிசு இதச் சொல்லத்தான் வந்தியா நீ லேட் பிக் அப்; இதான் ஊருக்கே தெரிஞ்ச சங்கதியாச்சே" எனச் சொன்னார்

கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் 29 ஏப்ரல் 2011

கிழக்கின் மொட்டை மாடிக் கூட்டங்களை தவறவிடக் கூடாது என ஒவ்வொரு முறையும் அறிவிப்பு பார்க்கும் போதும் நினைத்துக் கொள்வேன். ஆனால் தவற விட்டுவிடுவேன். இந்த முறை ஒரு சங்கல்பம் செய்து கொண்டதால் தவறாமல் கலந்து கொள்ள முடிந்தது

கூட்டத்தின் பேச்சாளர் திரு ரகோத்தமன் அவர்கள் (சி.பி.ஐ ல் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி‍; இராஜிவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை புலன் விசாரணை அதிகாரி)

பேச எடுத்துக் கொண்ட டாபிக் : 2 ஜி ஸ்பெக்ட்ரம் + சிபிஐ எனவெல்லாம் இருந்ததால் தான் சங்கல்பம் செய்து கொண்டேன்.

1977 ம் ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி நடந்த இந்திரா காந்தி கைது சம்பவத்தை சுவையாக விவரித்தார்

ஆனால் சில தகவல் சறுக்கல்களைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது

இந்திரா காந்தியை கைது செய்ய சென்ற போது என். கே சிங் டி.ஐ.ஜி அந்தஸ்த்தில் இருந்தத்தாக சொன்னார். மன்னிக்க வேண்டும் அப்போது என்.கே சிங் எஸ்.பி அந்தஸ்த்தில் இருந்தார்.

அதே போல் இந்திரா அப்போது சப்தர்ஜங் சாலையில் இருந்த வீட்டில் இருந்தார் எனவும் திரு இரகோத்தமன் சொன்னார் ஆனால் அப்போது இந்திரா வசித்த முகவரி நம்பர் 12 வெலிங்க்டன் கிரசன்ட். (தற்போது அந்த முகவரியில் எம்.எஸ் கில் வசிக்கிறார் என நினைக்கின்றேன்)

இந்திராவை கிங்க்ஸ் வே கேம்பில் வைத்திருந்தது , பின்னர் மாஜிஸ்திரேட் முன்னர் ஆஜர் செய்தது, பப்ளிக் ப்ராசிக்யூட்டர் சொதப்பியது அதனால் மாஜிஸ்திரேட் இந்திராவை விடுவித்தது எல்லாம் சுவையாகச் சொன்னார்

சொல்லியிருக்கலாம் என நான் நினைத்தது :

இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் என். கே சிங் 29 ஜனவர் 1980 அன்று ஹரியான‌ போலிசால் கைது செய்யப்பட்டது ; அவர் லீவில் சென்றது; பின்னர் 31‍ ஜனவரி 1980 அன்று என்.கே சிங் விசாரணைக்காக கூர்கான் கொண்டு செல்லப்ப்பட்டது இவை எல்லாம் சொல்லியிருக்கலாம்

சிபிஐ முன்பு உள்துறை அமைச்சகக் கட்டுப்பாட்டிலும் பின்னர் அது பிரதமர் அலுவலக கட்டுப்பாடிலும் இந்திரா‍ காந்தி ‍-‍‍ மொரார்ஜி - இந்திரா காலங்களில் மாறி மாறி இயங்கியதை சொன்னார்

இந்த சந்தர்ப்பத்தில் ஞானி ,'இப்ப சிபிஐ உள்துறை அமைச்சகக் கட்டுப்பாட்டில் தானே இருக்கு என்றார்" இதற்கு இரகோத்தமன் இல்லை இப்போது சிபிஐ பிரதமர் அலுவலகக் கட்டுப்பாட்டில் இருக்கு என்றார்.

இங்கேயும் ஒரு விளக்கம் சொல்ல கடமையாகிறது:

சிபிஐ Prevention of Corruption Act, 1988 கீழ் குற்றங்களை விசாரிக்கும் போது அதனை மத்திய விஜிலென்ஸ் கமிஷன் மேற்பார்வை செய்யும். பிற சங்கதிளுக்கு சிபிஐ Department of Personnel & Training (DOPT) in the Ministry of Personnel, Pension & Grievances of the Government of India.கட்டுப்பாட்டிலும் வருகிறது. இந்த அமைச்சராக த்ற்போது பிரதமர் இருக்கிறார். ஆகவே சிபிஐ பிரதமர் அலுவலகக கட்டுப்பாட்டில் வருவதாக சொல்லியிருக்கலாம்

கிரிமினல் வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராகும் பப்ளிக் ப்ராசிக்யூட்டர் நீதிமன்றத்தால் நியமிக்கப்படுவதாக ரகோத்தமன் தெரிவித்தார்.

இதற்கு கிரிமினினல் ப்ரொசிஜர் கோட் செக் ஷன் 24 ஐ மேற்கோள் காட்டினார்

சிஆர்பிசி என சுருக்கமாக அழைக்கப்படும் கிரிமினல் ப்ரொசிஜர் கோட் அதே செக் ஷன் தான் ஆனால் அரசாங்கம் தான் பப்ளிக் ப்ராசிக்யூட்டரை நியமிக்கும் கோர்ட் அல்ல. புலன் விசாரணை எப்படி அதி அற்புதமாக நடந்து சாட்சிகளும்,வாக்குமூலமும் புலன் விசாரணை அமைப்புகள் செய்திருந்தாலும் அதை வைத்துக் கொண்டு அந்த வழ்க்கினை நீதி மன்றத்தில் அந்த அமைப்பின் சார்பில் நடத்த வேண்டியவர் இந்த பப்ளிக் ப்ராசிக்யூட்டர் தான். இவர் சொதப்பினால் / சறுக்கினால் ... நாங்கள் என்ன செய்ய இயலும் என
இரகோத்தமன் கேட்டது நியாயம் தான்

குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரை விசாரிக்கையில் அவரையே அவருக்கு எதிரான சாட்சியாக நிர்பந்திக்க இயலாது என்பதை அழகாக சில சம்பவங்களுடன் விளக்கினார். இந்திய அரசமைபுச் சட்டம் ( Constitution of India) ஷரத்து 20(3)ன் கீழ் இது அடிப்படை உரிமை. No person accused of any offence shall be compelled to be witness against himslef.

இந்த உரிமை குறித்து உச்ச் நீதி மன்றம் 1961 ம் ஆண்டு State of Bombay vs Kathi Khalu Oghad எனும் வழ்க்கில் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் மிக முக்கியமான அம்சங்களை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும். இந்த தீர்ப்பில் 11 நீதிபதிகள் கொண்ட பெஞ்

1. குற்றம் சாட்டப்பட்டவரிடம் போலிஸ் கஸ்டடியில் பெறப்படும் வாக்குமூலம் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல அவரை நிர்பந்தித்ததாக ஆகாது

2. குற்றம் சாட்டப்பட்டவரை புலன் விசாரணை அதிகாரி விசாரிப்பதும் அதற்காக அவரிடம் ஸ்டேட்மெண்ட் பெறுவதும் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல அவரை நிர்பந்தித்ததாக ஆகாது

3. to be witness என்பது ஆதாரம் வழங்குவதற்கு ஈடல்ல

4. குற்றம் சாட்டப்பட்டவர் தனது அடையாளத்தினை நிரூபிக்க அவரிடம் பெறப்படும் கைரேகை அல்லது கையொப்பம் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல அவரை நிர்பந்தித்ததாக ஆகாது

5 அடிப்படை உரிமையான இந்த ஷரத்து குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில் மட்டுமே பொருந்தும் அதாவது அவரிடம் விசாரிக்கும் போது அவர் குற்றம் சாட்டப்ப்ட்ட்வராக இருக்க வேண்டும்

இரகோத்தமன் பேசி முடித்ததும் கேள்வி கேட்கலாம் என அறிவித்து பலர் கேள்வி கேட்டு என் கைக்கு மைக் வந்த போது நான்

கேட்டது, " சாதிக் பாட்சா , இராஜாவின் நெருங்கிய நண்பர் என்றும் அவருக்கு இந்த 2 ஜி வழக்கில் தொடர்பு இருக்கலாம் என

கருதுவதால் அவரிடம் முதல் கட்டமாக விசாரணையும் நடத்தப்பட்டது ஆனால் அவர் ஏன் கைது செய்யப் படவில்லை"

இரகோத்தமன் ,'குட் கொஸ்டின் ; நான் இந்த வழக்கை விசாரித்து இருந்தால் நிச்சயம் அவரைத்தான் கைது செய்து இருப்பேன் "

நிகழ்ச்சி முடிந்து விடை பெறும் போது அருகில் வந்த இரகோத்தமன் ,"தட் வாஸ் அ குட் கொஸ்டின்" என சொல்லி கை குலுக்கி சென்றார்

இட் வாஸ் அ குட் ப்ரொக்கிராம்.. கிழக்குக்கு பாராட்டுகள்

Tuesday, 26 April 2011

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா


தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா

ஒன்றை நன்றாக கவனிக்க முடிகிறது. இந்திய அளவில் பேசப்படும் விஷயங்கள் சோஷியல் நெட்வொர்க்கில் நன்றாக அலசப்படுகின்றன.

டுவிட்டர், பேஸ் புக், லிங்ன்ட் இன். ஆனால் அவற்றில் எல்லாம் உணர்ச்சி மிதப்புகள் அதிகமாக இருப்பதாக நினைக்கின்றேன். காரணம் அந்த விஷயங்கள் குறித்த தகவல்கள் இப்போதெல்லாம் ஊடகங்களில் சுடச் சுடச் கிடைக்கின்றன. ஊடக செய்திகள் சுட்டிக் காட்டும் தன்மையைத் தாண்டி சுவாரசியம் சேர்ப்பதற்காக விவாதம் எனும் பெயரில் செய்தியினை விரிவாக சொல்கிறோம் எனும் பெயரில் ஒரு கண்ணோட்டத்தினை ஓர் எண்ண அலையினை மக்கள் மத்தியில் ஆழமாக விதைக்கின்றார்கள்

உதாரணத்திற்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணை; தொடர்புடைய அமைச்சகத்தில் பொறுப்பு வகித்த அமைச்சர் மத்திய புலனாய்வுத் துறையால் கைது, தொடர்ச்சியா விசாரணை குற்றப் பத்திரிக்கை தாக்கல்.. இன்னொரு வழக்கில் மற்றுமொரு புள்ளி கைது..

இவர் கைது ஆவாரா .. இத்தனை கோடி ரூபாய் என்ன ஆனது. சம்பவங்களை யூகிக்க இயலாத கோணத்தில் வீடியோவாக காண்பித்த வண்ணம் உள்ளார்கள்;

செய்தியில் வீடியோவில் காட்டப்படும் எல்லோரும் குற்றம் இழைத்தே இருப்பார்கள். இவர்களுக்கு என்ன விசாரணை வேண்டியிருக்கிறது. உடனே தூக்கில் போடாமால் என்கிற அளவில் கூட சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் பரவலாகவும் உணர்வு பூர்வ்மாகவும் ஆதங்கங்கள் தென்படுகின்றன‌

ஒருவர் ரிமாண்டில் கைதாகி இருக்கும் போதே அல்லது ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும் எண்ணம் கொண்டு அவர் தண்டனை அனுபவித்து வருவதாகவும் எண்ணம் கொண்டு அதனை ஒட்டியவாறே சிந்தனை துளிகள் இந்த தளங்களில் பார்க்க முடிகிறது. இதன் நீட்சியை யோசித்துப் பார்க்கிறேன். செய்திகளின் அதீத
தன்மையால் நம் மனதில் ஒருவகையாக நீதிபதி பொறுப்பு ஏற்றுக் கொண்டு குற்றவாளி முத்திரை குத்திவிடுகிறோம்.

ஆனால் நிதர்சனத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் இந்திய நீதி பரிபாலன முறைகளில் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமின் முறையீடு, மேல் முறையீடு, மறு முறையீடு என நிவாரணம் தேடும் போதும், ஏற்கனவே மனதில் வடிவம் பெற்று விட்ட தண்டனை பிம்பம் கலைகிறது


இப்போதும் புலன் விசாரணை அமைப்புகள் அதன் அதிகாரிகளின் செயல் திறன் மீது , நேர்மை மீது, நீதி அமைப்பின் செயல் திறன் மீது அதன் நேர்மை மீது, அவசர அவசரமாக களங்கம் கற்பிக்கும் மன நிலைக்கு உந்தப்பட்டு மீண்டும் டுவிட்டர், பேஸ் புக் லிங்ன்ட் இன் எங்கும் அவதூறு மழை.

பிம்பத்தினை வரையும் போது என்ன அவசரமோ அதே அவசரம் அது நிதர்சனத்தில் மாற்றம் காணும் போது.. மீண்டும் திருத்தி எழுதும் போது

இந்திய நீதி மன்ற நடை முறைகளில் உள்ள படிக்கட்டை புரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு லட்சம் கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருந்தாலும். இந்தப் படிக்கட்டு தவிர்க்க இயலாது

வழக்கு பதிவு செய்யப்படுதல் ‍ இது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்.. குறைந்த பட்சம் ஒரு மாஜிஸ்திரேத் நீதி மன்றம் அல்லது மாவட்ட அந்தஸ்தில் உள்ள நீதி மன்றம்

வழக்கினை விசாரிக்கும் புலன் விசாரணை அமைப்பு நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தல்

குற்றப்பத்திரிக்கையினை குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கி அவர் தரப்பினை கேட்டல்

வழக்கு விசாரணை.. வாதப் பிரதிவாதங்கள்

வழக்கின் தீர்ப்பு

இந்த தீர்ப்பினை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் முறையீடு

உயர்நீதி மன்றத்தில் வழக்கு முறையீட்டு அளவில் விசாரண‌

உயர் நீதி மன்ற தீர்ப்பு

உயர் நீதி மன்றத்திலேயே அதிக நீதிபதிகள் கொண்ட் பெஞ்சிடம் மேல் முறையீடு

அந்த பெஞ் தீர்ப்பு

அதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு

உச்ச நீதி மன்ற தீர்ப்பு

இதில் எல்லாப் படிகளும் குற்றம் சாட்டும் புலனாய்வு அமைப்புக்கும் , குற்றம் சாட்டப்பட்டவருக்கும் பொது. இரு தரப்புக்கும் சம் வாய்ப்பு

செய்தி ஊடகங்கள் மக்கள் மனதுக்குள் தனது செய்தி வழங்கும் தன்மையால் ஊடுருவி ஒருவருக்கு குற்றவாளி அந்தஸ்த்தை வழங்கி ஒரு பிம்பம் வரையப்பட்டுள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் இந்தப் படிக்கட்டுகளில் ஏறும் போது அந்த பிம்பம் உடைகிறது. அந்த வ்ழக்கினை விசாரித்த புலன் விசாரணை அமைப்பு குற்றம் சாட்டப்பட்டவ்ரி ஏவலாள் ஆகிவிட்டது போலவும் புது பிம்பம் உருவாகிறது.

அந்த அமைப்பின் நேர்மை எள்ளி நகையாடப்படுகிறது

இதெல்லாம் நம்மை நாமே பலவீனமாக்கிக் கொள்வதல்லாது வேறொன்றுமில்லை

குற்றம் சாட்டப்பட்டுள்ள எவருக்கும் ஆதரவு தெரிவிப்பதல்ல நோக்கம்

ஆனால் குற்றம் சாட்டப்படும் நிலையிலிருந்து குற்றம் நிரூபணம் ஆகும் வரையிலான பயணம் நெடும் பயணம். இதனை புரிந்து

கொள்ளும்

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா

Sunday, 24 April 2011

சக பயணி 4

சக பயணி 4


"சார் ! வாழ்க்கையில் எல்லோரும் பல பொறுப்புகளை சுமந்திருக்கின்றோம். அலுவலகத்தில் சிப்பந்தியாக, குடும்பத்தில் உறவு முறையாக, நட்புகளுடன் தோழமையாக, தினசரி வாழ்வில் சந்திக்கும் மனிதர்களுடன் சக மனிதனாக இப்படி பல; இவை என்னவோ ஒரு கல்லூரி அல்லது பள்ளிப் படிப்பில் நமக்கு உண்டான பல பாடத்திட்டங்கள் போல ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத சங்கதிகள் போல; ஆனால் இவை எல்லாம் ஒரே மனிதனால் நிறைவேற்றப்படும் கடமைகள் எனும் அடிப்படையில் ஒரு அடிப்படை சிந்தாந்தம் இதனை
நிர்வகிக்கும். அது வெளியில் புலப்படாது"

"இல்லையே அலுவலக வாழ்க்கை வேறு; வீட்டு வாழ்க்கை வேறு"

" நீங்கள் நான் சொல்ல வந்த கருத்தை சற்று ஆழமாக கவனிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்; ஒருவன் பொது வாழ்வில் ஒரு மாதிரியும் தனி வாழ்வில் ஒரு மாதிரியும் நடந்து கொள்ளலாம். ஆனால் ஏதாவது ஒன்று தான் அவரது இயல்பாகவும் மற்றொன்று இயல்புக்கு முரண்பட்டதாகவும் இருக்குமல்லவா"

"ஆமாம் நிச்சயமாக"

"அந்த இயல்பை வழி நடத்திச் செல்லும் சித்தாந்தம் அல்லது அவரது கேரக்டர் என ஒன்று வைத்துக் கொள்ளுங்கள் அது இயல்போடு இயைந்ததாகவும் இயல்போடு இசைய மறுப்பதாகவும் இரட்டை நிலைப்பாடு கொண்டதாகவும் இருக்க இயலுமா"

"இன்னும் சற்று விளக்கமக சொல்ல முடியுமானால் பயனுள்ளதாக அமையும்"

"Howard Gardner எழுதிய Unschooled Mind எனும் நூலில் சொல்வதை இங்கே எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்: ஒருவன் தனக்கு எப்படி பயிற்சியினை அமைத்துக் கொள்கிறானோ அப்படியே தனது செய்கைகளில் நடத்தையில் சிறப்பினை வெளிப்படுத்த முடிகிறது. அவன் போதிக்கப்பட்ட வழிகளில் தனது செய்கையை செலுத்துகிறான்.. சூழல் மாறும் போது அவனது செய்கைகள்
தடுமாறுவது மட்டுமல்ல அவை முழுமை பெறாமலும் போகின்றன. இவ்வகைப் பயிற்சி Compartmentalisation என அழைக்கப்படுகிறது.. அதாவது ஒரு இரயில் பெட்டி போல மனதிற்குள் அடுக்குகளை சமைத்துக் கொள்வது. ஒரு பெட்டி வசதியானதாக ஒரு பெட்டி சாதாரண வசதிகள் கொண்டதாக சமைக்கப்பட்டது போல நமக்குள்ள பொறுப்புகளை வழி நடத்தும் சித்தாந்தங்களை ஒவ்வொரு பொறுப்புக்கும் ஒன்றாக சமைத்துக் கொள்வது; ஆனால் இப்படி சமைத்துக் கொள்வதில் சமரசங்கள் தான் இருக்குமே அல்லாது அவை நிரந்தரமானது
அல்ல. ஒரு பொறுப்பு மற்றொன்றை எதிர் கொள்ள நிகழும் தருணத்தில் எந்தப் பொறுப்பு முக்கியமானது என கேள்வி கேட்டு பதில் கிடைக்க இயலாமால் இரண்டும் சமரசம் செய்யும் போராட்டம் ஆனால் காந்தியாரிடம் இது போன்ற தருணங்களில் சங்கடங்களே இருந்ததில்லை. காரணம் அவர் இப்படி அடுக்குகள் சமைத்துக் கொள்வதில் அடிப்படையாக ஒரே சித்தாந்தத்தை முன் வைத்தார். Moral tenets applied to men in every situation என்பது அவரது சிந்தாந்தம். அதில் ஒரு போது அவர் சமரசம் செய்து கொண்டது இல்லை அவர் எடுத்துக் கொண்டு நடத்திய வழக்கில் அவர் ஆதரித்த கட்சிக்காரர் பிழையானவர் எனத் தெரிந்த உடன் அவர் இந்த அடிப்படை சித்தாந்தத்தின் வழி நின்று பேசினார்.. அவருடைய சுயசரிதையிலிருந்தே இதை சொல்கிறேன்

I discovered that my client had deceived me; I saw him completely breakdown in the witness box; So without any argument I asked the magistrate to dismiss the case; The opposing counsel was astonished and the magistrate was pleased. I rebuked my client for bringing a false
case to me: He knew that I never accepted false case.. At any rate my conduct did not affect my practice for the worse, indeed it made my work easier"

" மிக்க நன்றி.. காந்தியாரின் மதப் பற்று கடவுள் நம்பிக்கை குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்"

"நம்மில் பலரும் கருதுவதைப் போல், கடவுள் நம்பிக்கை கொண்டவரல்ல காந்தி "

(பயணம் தொடரும்)

Monday, 18 April 2011

விஜயகாந்துக்கு அம்மா சொன்ன கதை


(இந்தக் கற்பனை உரையாடலால் ஆட்டோவோ வக்கீல் நோட்டிசோ வராது என நினைக்கின்றேன்)

விஜயகாந்த் அம்மா சந்திப்பு இடம் அம்மா வீடு தான்

"என்ன விஜயகாந்த் என்ன இந்தப் பக்கம்"

"தேர்தல் முடிந்து கூட்டணித் தலைவர்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிறது மரபாச்சே அதான் வந்தேன்"

"ஓ அப்படியா"

" அம்மா இந்த தேர்தலில் வேலை செய்த தொண்டர்களின் எண்ணிக்கைxxx அதில் ஆண்கள் zzzz பெண்கள் zzzz

"நான் உங்களுக்கு ஒரு கூட்டணிக் கதை சொல்றேன்; கவனமா கேளுங்க‌


காட்டிலே ஒரு வேடன் மாலை வேளையில் வலை விரித்துச் செல்வான். இரவு அதிலே சிக்கும் விலங்கினை தன் வேட்டைப் பொருளாக மறுநாள் காலையிலே எடுத்துச் செல்வான் அப்படி அவன் ஒரு நாள் விரித்த வலையில் ஒரு பூனை சிக்கியது. காலையிலே அந்தப் பக்கம் வந்த எலி ஒன்று பூனை வலையிலே சிக்கியிருப்பதை பார்த்து ஆனந்தம் கொண்டது. “அப்பாடா பூனை சிக்கிச்சி. வேடன் வந்து இந்தப் பூனையைக்
கொண்டு செல்வான். நாம இனிமே சுதந்திரமா இருக்கலாம் “ என நினைத்த எலி குதியாட்டம் போட்டது. அப்போது அந்த எலியைப் பிடித்துவிடும் நோக்கில் ஒரு கீரி பாய்ந்து வந்த்து. ஒரு கோட்டானும் வானில் இருந்து எலியைக் குறிவைத்துப் பறந்து வந்தது. பூனைத் தொந்தரவு இருக்காது என்ற எலியின் ஆனந்தம் ஷண நேரம் தான் நிலைத்திருந்தது. ஓடி சென்று வலையில் ஒளிந்தது.

அங்கிருந்த படி பூனையிடம் பேசியது.

”பூனையாரே !. நான் உங்களை இந்த வலையின் பிடியிலிருந்து விடுவிக்க தயார். ஆனால் அதற்காக நான் உங்கள் அருகில் வந்த்தும் நீங்கள் என்னை லப்க்கென கடிக்கக் கூடாது”

எலியின் இந்த யோசனை அதன் பயத்தின் காரணமானது. அதற்கு, பூனை, கீரி, கோட்டான் என மூன்று விரோதிகளை ஒரே நேரத்தில் எதிர் கொள்ள் திராணியில்லை.

எதிரியில் ஒருவர் இப்போது ஆபத்தில் இருக்கிறார். அவருடன் நாம் தற்காலிக நட்பு கொண்டு அவரை விடுவித்து அதன் மூலம் தானும் மற்ற இரண்டு எதிரிகளிடமிருந்து தப்ப ஒரு வாய்ப்பு. இப்படியான சிந்தனை எலியுடையது.

எலியின் யோசனையினைப் பூனை ஏற்றது. எலி வேகமாக வலையிலிருந்து ஓடி வந்து பூனையின் மடியில் படுத்தவாறு வலையினை தன் கூர்மையான பல்லால் கடித்து வலையினை அறுக்கத் தொடங்கியது.

எலி இப்போது பூனையுடன் நட்பு கொண்டது கண்ட கீரியும், கோட்டானும்
அங்கிருந்து விலகின.

பூனை எலியிடம், “என்னப்பா இத்தனை மெதுவாக கடிக்கிறாய். வேடன் வருவதற்குள் நான் தப்ப வேண்டாமா ‘ என்றது

“ நான் காரணமாகத்தான் மெதுவாக செய்கிறேன். அதோ தெரிகிறதே ஒரு
ஒற்றையடிப்பாதை அது வழிதான் வேடன் வருவான். அவன் தொலைவில் வரும் போதே இங்கிருந்து பார்த்துவிடலாம். அவன் வருவதற்கு முன்பே நான் இந்த வலையினை முழுவதும் கடித்து உன்னை விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடமாட்டாய் என்பது என்ன நிச்சயம். வேடன் வந்தபின் அவன் வலையிலே நீ சிக்கியிருப்பதைப் பார்ப்பான். உடனே விரைந்து இந்த இட்த்தை அடைய வேகம் கூட்டுவான். நான் அந்த சமயம் பார்த்து உன்னை முழுவதும் விடுவித்தால் உன் கவனம் அவனிடமிருந்து எப்படியாவது தப்ப வேண்டும் என்பதில் இருக்கும் . என்னைக் கடித்து விழுங்க வேண்டும் என்ற எண்ணம் உனக்கு அப்போது வராது”

அதே போல் தூரத்தில் வேடன் தலை தெரிந்த்து. அவனும் வலையிலே பூனை சிக்கியிருப்பதைப் பார்த்துவிட்டான். நடையிலே வேகம் கூட்டினான், எலியும் தன் கடிக்கும் வேகத்தை அதிகப்படுத்தியது. டக்கென வலை முழுமையாக அறுந்த்து.

பூனையும் எலியும் வேடனிடம் பிடிபடாமல் ஓடினர். நெடுந்தூரம் ஓடிக் களைத்தனர்.

ஓர் ஆற்றங்கரையில் நின்றனர்.

பூனை எலியினை நன்றிப் பெருக்குடன் பார்த்து, ”தக்க சமயத்தில் என்னைக்
காத்தாய். நான் இனி உன் நண்பன். வா இருவரும் இணைந்தே இந்தக் காட்டிலே வாழலாம்” என்றது.

”இதோ பாரப்பா.. கீரியிடமிருந்தும் கோட்டானிடமிருந்தும் தப்பிக்கவே
உன்னிடம் வந்தேன். நாம் நட்பு கொள்வதென்பது இயற்கையாகாது. நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உன்னிடம் வந்தேன். நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள என் உதவியை ஒப்புக் கொண்டாய். இது அவ்வளவு
தான்.” எனச் சொல்லி வேகமாக ஓடி மறைந்தது


Saturday, 16 April 2011

வைகோ வுக்கு கலைஞர் சொன்ன கதை


எஸ்.வி.சேகர் கலைஞர் குதிரை பதிவு ரேஸ் குதிரை மாதிரி ஆகிவிட்டது. தமிழ் இன்டெலி எனும் வலைத் திரட்டி தளத்தில் கொடுத்துப் பாருங்கள் என என் நண்பர் சொன்ன யோசனை வேறு அதன் மவுசைக் கூட்டி விட்டது. பதிவின் லிங்கை காப்பி பேஸ்ட் தான் செய்தேன். ஒரே நாளில் அதற்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்துவிட்டது. இன்டெலியிலிருந்து ஒரு மெயில் வேறு வந்தது. இன்டெலி
உபயோகிப்போர் ஒன்று கூடி அதனை பாப்புலர் பதிவு என செய்துவிட்டதாக. அங்கே ஆரம்பித்தது இன்னும் வேகம். அந்தப் பதிவு டாப் டென் வரிசையில் மூன்றாவது இடத்துக்கு ஒரே இரவில் வந்துவிட்டது. கூகிள் அனலிடிக்ஸ் ஹிட் எண்ணிக்கை தருகிற நம்பரைக் கவனித்தால் எஸ்.வி சேகரின் மகத்துவம் புரிந்தது.

இந்தப் பதிவு இப்படி ஈகோ ட்ரிப் அடிபதற்கல்ல. இந்தப் பதிவை நினைத்துக் கொண்டே உறங்கப் போனேன். கனவில் வைகோ வந்தார்.

உங்களுக்கு நம்புவதற்கு சிரமமாகத் தான் இருக்கும். என் போன்ற ஆசாமிகள் கனவில் அந்த கால டி. ஆர் இராஜகுமாரி தேவிகா வருவது தான் நியதி வாஸ்தவமும் கூட. திரிஷா. ஷ்ரேயா கனவில் வருவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள் கூட பலிக்க்கவில்லை.

அதிர்ஷ்டமாய் வைகோ வந்தார்

"ஏங்க நான் எப்பவுமே புலிக்கு எதிரா பேசற ஆசாமி.. என் கிட்ட சண்டை புடிக்க வந்தீங்களா"

"அது இல்லீங்க.. எஸ்.வி.சேகர் கலைஞருக்கு குதிரைக் கதை சொன்னதாவும் பதிலுக்கு அவர் ஒரு குதிரைக் கதை சொன்னதாகவும் எழுதிருந்தீங்களே"

"அது கற்பனைங்க.."

"நல்லது நான் போனவாரம் தேர்தலுக்கு முன்னே கலைஞருக்கு போன் செய்தேன். அப்ப எனக்கு ஒரு குட்டிக் கதை சொன்னாரு"

"என்னது குட்டிக் கதையா”

"சின்னக் கதைங்க"

"சின்னக் கதையா"

"அதாங்க பாரபிள்னு ஆங்கிலத்துல சொல்வாங்களே"

"சொல்லுங்க சொல்லுங்க"

"போன் செய்தனா;; அவரே போனை எடுத்தார்

என்ன தம்பி நலமா"

"எங்கண்ணே உங்களுக்குத் தெரியாதா"

"ஒரு கதை சொல்கிறேன் கேள்" அப்படின்னார்

"எனக்கு கொஞ்சம் பதை பதைப்பு. ஏதானும் சினிமாவுக்கு எழுதும் கதையை போன்ல சொல்லப் போறாரா. ப்ரிபெய்டு சிம்.. பாலன்ஸ் வேற கம்மியா இருந்தது. இருந்த காசெல்லாம் அம்மா வீட்டுக்கு ஆட்டோவிலே போய் வந்தே கரஞ்சு போச்சு அதான்"

"ஓக்கே ஒக்கே புரிஞ்சுது ..நீங்க மேட்டருக்கு வாங்க'

"அவர் சொன்ன கதை இது தான். அப்படியே சொல்றேன் நீங்க உங்க வலையிலே போடணும்"

கலைஞர் வைகோவிடம் சொன்ன கதை

வளம் பெருகிய நாடு

ஆனால் அந்த நாட்டின் அரசி கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தாள். அவளுக்கு தன்னை விமர்சனம் செய்பவரைக் கண்டால் ஆகாது.

உடனே கடும் சிறைத் தண்டனைதான். அப்படியாக ஒரு நாடக ஆசிரியரை தன்னை விமர்சனம் செய்தார் என சிறையில் தள்ளினாள்.

அரசியின் காவலர்கள் அந்த நா.ஆ வைக் கைது செய்யும் போது அவர் செய்த சூளுரைகள் நாடெங்கும் பேசப்பட்டன.

சிறையில் நாடக ஆசிரியர் சும்மா இருக்கவில்லை. அங்கே ஊர்ந்து கொண்டிருந்த ஓர் எறும்பை நட்பாக்கிக் கொண்டார். தனது விடா முயற்சியால் தொடர் முயற்சியால் அந்த எறும்புக்கு பேசக் கற்றுக் கொடுத்து விட்டார். நாடக ஆசிரியரின் எழுச்சி முழக்கங்களையும், நாடக வசனங்களையும் அந்த எறும்பு நன்கு பேசப் பழகிவிட்டது. அவரது இந்த அரிய முயற்சி சிறைக் காவலர்களின் கவனத்தில் வராமலே நடந்தது.. ஆண்டுகள் உருண்டோடின. நா.ஆ விடுதலை ஆகும் நாளும் நெருங்கியது. அப்போது அந்த எறும்பு நா.ஆ அளவுக்கே பேச, முழங்க தயாராகி இருந்தது.

நாடக ஆசிரியரின் நம்பிக்கை இப்போது பன்மடங்கு பெருகியிருந்தது..

தனது கொள்கை முழக்கங்களை ஒரு எறும்பைக் கொண்டு நாடெங்கும் பரப்பிட நல்ல வாய்ப்பு கிட்டியிருப்பதாக நினைத்தார். ஓர் எறும்பு பேசுகிறது அதுவே பெரும் ஆச்சரியம். அதுவும் தூய தமிழில் கொள்கை முழக்கம் செய்கிறது. தனது முழக்கங்களுக்கு சரியான ஆதரவு கிட்டும் என அவருக்கு திண்ணமாக தோன்றியது..

விடுதலை நாள் வந்தது.. சிறைக் கதவுகள் திறந்தன ... நா.ஆ வெளியே வந்தார்.. பல ஆண்டுகள் கழித்து வெளி உலகம் காணும் உவகை. அதுவுமின்றி தன்னிடம் இருக்கும் கருத்துக்கள்.. அதை முழங்கும் எறும்பு..

கால்களை அழுந்தப் பதிந்து நடந்தார்.. களைப்பு இருந்தாலும் உற்சாகம் குறையவில்லை.. ஆனால் பசித்தது.

ஆ அதோ ஓர் உணவு விடுதி.. என்னவோ பெயர் பலகையில் காணப்படுகிறதே.. ஜெயம்மா உணவு விடுதி..இங்கேயே பசியாறலாம்..

நா.ஆ உள்ளெ நுழைந்தார்.

அங்கே ஒரு பணியாள் வந்த அனைவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருந்தான்

இவரிடம் வந்து என்ன வேண்டும் எனக் கேட்டான். இருப்பதில் ஒன்றைக் கொடப்பா என்றார் நா.ஆ என்னது இருபத்தி ஒன்றா என்றான் பணியாள்.. இருபத்தி ஒன்றல்ல அப்பா இருப்பதில் ஏதாவது ஒன்று எனச் சொன்னேன் என்றார் நா.ஆ

அவனும் சென்றான்.. நா.ஆ சிந்தித்தார். இந்த உணவு விடுதியில் ஆட்கள் நிறைய உள்ளனர். இங்கேயே பேசும் எறும்பைக் காட்டி அதனை பேச வைத்து மக்களை தன் பக்கம் இழுத்தால் என்ன.. இது தான் நல்ல வாய்ப்பு அப்படியே செய்யலாம் என முடிவும் செய்தார்

பத்திரமாக வைத்திருந்த மேசை மேல் அந்த அதியசய எறும்பை எடுத்து வைத்தார் நா.ஆ

கையில் ஒரு தட்டுடன் வந்தான் பணியாள்.

நா.ஆ அவனிடம் ஆர்வமாக அந்த எறும்பைக் காட்டி இதோ பார்த்தாயா எனக் கேட்டார்

அவன் பதறிப் போய் அந்த எறும்பை சடேரென தன் கையால் அடித்து நசுக்கிக் கொன்று போட்டான்.. என்னை மன்னித்து விடுங்கள்

அய்யா உணவு அருந்தும் இடத்தே எறும்பு வந்தது எங்கள் தவறு தான் எனவும் சொன்னான்