Tuesday, 20 January 2009

ஞானிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்


பிரபல இதழாளர் ஞானி 49 ஓ பற்றி முழங்கியது கேட்டிருப்பீர்கள்

விவரமாகக் கேட்க விழைபவர்கள் அவரது வலைமனைக்கு சென்று பார்க்கவும்

http://www.gnani.net/

எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை நமக்கு இந்தப் பிரிவு கொடுத்திருக்கிறது. வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைக்கபட்ட பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று நாம் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்தாக வேண்டும். இதுதான் தேர்தல் விதிகள் (1961)ன் 49 (ஓ) பிரிவு. வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.

எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்தவேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது.

ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் தரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி - 49 ஓ.

ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.

ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.

மேலே உள்ளது ஞானியின் கட்டுரை

ஞானியின் கூற்று பாதி தான் சரி


49 ஓ வின் படி ஒரு வாக்காளர் யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை என்றூ
பதிவு செய்ய இயலும். இது அவரது வாக்கினை வேறொருவர் போடாத நிலையில் இனி ஒருவரும் போடாதிருக்க மட்டுமே பயன் படும்


49 ஓவின் படி ஒருவர் தனக்கு வாக்களிக்க விருப்பமில்லை என்ற தகவலையே பதிவு செய்கிறார். இது வாக்காகாது

அதனாலேயே இந்த 49 ஓ ஆப்ஷன் வாக்குச் சீட்டிலோ வாக்கு இயந்திரத்திலோ இடம் பெறவில்லை
ஒரு தொகுதியில் குறைந்த பட்சம் இத்தனை வாக்குகள் அல்லது இத்தனை வாக்குகள் பதிவாக வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது

பதிவான வாக்குகளில் அதிகம் பெற்றவர் வெல்கிறார்

தேர்தல் என்பதே People Representative யார் என்பதை தெரிந்து கொள்ள
யாரைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது தான் Representation of People Act ன்
Doctrine

யாரை நிராகரிக்கிறோம் என்பதல்ல

ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதால் மற்றவர்கள் நிராகரிக்கப்படுகின்றனர் .
This is supplementary not the prime cause

49 ஓவின் படி ஒரு வாக்காளர் பதிவு செய்யும் தகவல் வாக்கு என்ற
அந்தஸ்த்தினை பெறாமல் இருப்பது இந்தக் காரணங்களால் தான்.

இந்த 49 ஓ வில் பதிவாகும் கருத்து வாக்கு அந்தஸ்த்து பெறாது

யார் 49 ஓ வின் கீழ் வாக்களிக்க விருப்பமில்லை என பதிவ செய்கிறாரோ அவர்
பெயருடன் தகவல் பதிவு செய்யப்படுகிறது

Representation of Peoples Act பிரிவு 94 ந் படி ஒருவர் யாருக்கு வாக்களிக்கிறார் என்ற தகவல் ரகசியமாக இருக்க வேண்டும்

இதன் காரணமாகவும் இந்த யார்க்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற ஆப்ஷன் வாக்கு என்ற அந்தஸ்த்தினைப் பெறவில்லை

வாக்கு இயந்திரம் வந்த பின் செல்லாத ஒட்டு போட வழியில்லை. ஞானி செல்லாத ஒட்டு மாதிரி ஒன்றை கொண்டு வர ரொம்பவே பிரயத்தனப்படுகிறார் அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

Sunday, 11 January 2009

சென்னை புத்தகக் காட்சி 2009


இது மாதிரி கூட்டம் சேரும் இடத்தில் அதற்கான சம்பிரதாய கடலை வண்டிகள், பஞ்சு மிட்டாய் என்று திருவிழா சம்பிரதாயங்களை கிரமாமாக வாசலிலேயே காண முடிந்தது. குடை ராட்டினம் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். ஏமாற்றம்.

டூ வீலர் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு நண்பர் கார்த்தி வர காத்திருந்த சொற்ப நேரத்தில் நல்ல சுவாரசியம்

இத்தனை பாக்கெட் வைத்து சொக்காய் மார்க்கெட்டில் கிடைக்கிறது என்று அங்கு வந்த சிலர் போட்டுக் கொண்டிருந்த சட்டையைப் பார்த்த பின் தான் தெரிந்தது.

இது மாதிரி இடங்களுக்கு டூ வீலரில் வரும் பெரும்பாலனவர்கள் தவறாமல் செய்யும் காரியங்கள்

1. பார்க்கிங் பராமரிப்பில் இருக்கும் அப்பாவி சிறுவர்கள் காட்டும் இடத்தில் வண்டியை நிறுத்தாமல் எட்டிப் போய் வண்டியை நிறுத்துவது

2. வண்டியில் இருந்து இறங்காமலே சைட் ஸ்டாண்டை ஸ்டைலாக போட்டுவிட்டு இறங்குவது.

3. இறங்கிய உடன் பக்கத்தில் நிறுத்தியிருக்கும் டூவிலரின் கண்ணாடியை உரிமையாக சரக்கென்று திருப்பி அதைப் பார்த்து சீப்பால் தலை வாருவது. வாரிய தலையை கையால் கோதி விடுவது. முகத்தை கர்ச்சீப்பால் துடைப்பது. உதட்டை பல தடவை ஈரப்படுத்திக் கொள்வது

4. இந்த அலங்கார ஆயத்தங்கள் முடிந்த உடன் டக்கென்று பாக்கெட்டில் கைவிட்டு செல் போனை எடுத்து நம்பர் ஒத்தி, “ நான் புக் ஃபேருக்கு வந்திருக்கேன். அப்புறமா உங்கிட்டே பேசறேன்என்று யாரிடமோ தகவல் சொல்வது

5. மனைவி குழந்தையுடன் வந்தால் தான் வருடா வருடம் வருவதை ஏகப்பட்ட டெசிபலில் சொல்வது


நல்லவேளை எனது லிஸ்டில் இன்னும் சேர்ப்பதற்கு முன்னால் கார்த்தி வந்துவிட்டார். இவர் எனது புத்தகப் பிரேமையை ஜாஸ்தியாக்கவே அவதாரம் செய்தவர் என்றே சொல்லலாம்


நான் வீட்டிலிருந்து கிளம்பும் போது, என மனைவியிடம் மன்றாடி வாங்கிக் கொண்டுவந்த சொற்ப காசைப் பற்றி இவரிடம் சொல்லியிருக்கணும். சொல்லாமல்விட்டது தப்பிதமாகி விட்டது.


ஏறக்குறைய எல்லா ஸ்டால்களிலும் ஒரு புத்தகம் வீதம் வாங்க வேண்டும் என்று சங்கற்பம் செய்து கொண்டே அரங்கத்தினுள் பிரவேசம் செய்தார்


I am not a man of one book or of a few select books. That is to say, there are no favourite books to which I recur again and again for inspiration or pleasure என்று சில்வர் டங் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் சொன்னதை அட்சரம் பிசகாமல் கடைபிடித்தார்.


அவர் பொஸ்தகம் வாங்க வாங்க எனக்கு ஒரே கவலை. காரணம் பெங்களூரூ ( இதானா அபிஷியல் பேரு) போன பின்னால் ஒரே ராத்திரியில் அத்தனையும் படித்துவிட்டு மறு நாள் கூகிள் டாக்கில் , “ அண்ணா இந்த பொஸ்தகத்தில் அவர் ஏன் அப்படி சொன்னார்என்று கேள்வி எழுப்புவார். அதற்கு பதில் சொல்ல எனக்கு அந்த பொஸ்தகம் படிக்க வேணும்.


கார்த்திக்கு முதல் முறையாக புத்தகம் சிபாரிசு செய்யும் வாய்ப்பு கிடைத்தை சந்தோஷத்தில் கலைஞரின் பொன்னர் சங்கர், அண்ணாவின் கம்பரசம் என ஒரு லிஸ்ட் தந்தேன். ஒரு நிமிஷத்தில் லட்சத்தில் ஒரு பங்கு நேரம் கூட யோசிக்காமல் வாங்கி விட்டார். இனிமேல் சாட்டில், “ தமிழரின் பெருமைகளை பறை கூறும் இது போன்ற காவியங்கள் வேறேதும் உளவாஎன்று டைப் செய்வார் என எதிர்பார்க்கலாம்


அவரை ஸ்டீபன் கோவே படிக்க சொல்லி ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருந்தேன் . இந்த முறை வசமாக மாட்டினார். 7 Habits of Effective People வாங்க வைத்தேன். இந்த பொஸ்தகத்தை சுஜாதா கற்றதும் பெற்றதுமில் சிலாகித்திருப்பது தெரிந்தால் கார்த்தி ஒரே மூச்சில் செவன் ஹாபிட்ஸை உள்வாங்கி விட்டு கூகிள் சாட்டில் என்னை பதம் பார்ப்பார் என்பது நிச்சயம்

இத்தனை வருஷங்களாக மௌண்ட் ரோட் ஆர்ட்ஸ் காலேஜ் மைதானத்தில் நடந்த இந்த காட்சி 2008 வருஷம் முதல் செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேநிலைப் பள்ளி மைதானத்தில் நடக்கிறது.


அரங்க அமைப்புகளுக்காக ஆர்க்கனைசர்களை பாராட்டியே ஆக வேண்டும். தரையில் மரப்பலகைகளால் சமமாக தளம் போட்டு அதை சிவப்பு கம்பளம் வைத்து நீவி மூடி... நடப்பதற்கு சுலபமாக இருந்தது


மௌண்ட் ரோடு காலேஜில் அப்படியே மணல் மீது கம்பளம் விரித்திருப்பார்கள். தடுக்கி விழாமல் நடப்பவர்களுக்கு 101 வகை சட்னி செய்வது எப்படி என்ற புத்தகம் அனுதினம் பரிசளிப்பார்கள்


இந்த புத்தகக் காட்சியில் ஒரு இம்சையும் இருக்கிறது. தினப்படி அறிஞர் ஒருத்தரை சாயங்காலம் 6 மணிக்கு பேச வைப்பார்கள். நான் போன தினம் இந்த இம்சையைச் செய்தது வைரமுத்து. ஏகப்பட்ட அடைமொழி சொல்லி அவரைப் பேச அழைத்தார்கள். முத்தமிழ் அறிஞர், தமிழ், தமிழன், தமிழனே என்ற சில வார்த்தைகளை வைத்தே அவர் சுமார் 40 நிமிஷம் மூச்சு விடாமல் பேசினார். அகில இந்தியாவில் எங்கேயும் இந்த மாதிரி புத்தகக் காட்சிகள் நடப்பதில்லை ஆகவே தமிழன் பெருமைப்பட வேண்டும் என்று தனது Ignorance ஐ முழங்கி காமெடி செய்தார்.


ஒரு வழியாக கைநிறைய ப்ளாஸ்டிக் பைகள் சகிதம் வெளியே வந்து ஆளாளுக்கு வாங்கின பொஸ்தகங்களைப் பிரித்துக் கொண்டோம்.


வீட்டுக்கு வந்து சமத்தாய் உப்புமா சாப்பிட்டுவிட்டு வாங்கி வந்த பொஸ்தகங்களை வண்டி பாக்ஸில் இருந்து எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்து பெருமையுடன் மனைவியிடம் கணக்கு ஒப்பித்தேன். எதுக்கு இப்படி பொஸ்தகமா வாங்கி அடுக்கறேள் என்பதற்கு எல்லாம் ஒரு Knowledge Improvement க்குத் தான் என்று மழுப்பினாலும்


ஜெயமோகனின் ரப்பர் நாவலின் முன்னுரையில் சொன்ன , அந்தரங்கமாய், எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலிமையுடன் இருக்க விழையும் என் அகங்காரம் தான் என அறிகிறேன்என்ற வாசகம் தான் பொருத்தமாக இருக்கும் என்று என் மனசாட்சி சொல்கிறது