Showing posts with label கிராமர் கிருஷ்ணமூர்த்தி. Show all posts
Showing posts with label கிராமர் கிருஷ்ணமூர்த்தி. Show all posts

Saturday, 14 June 2008

கிராமர் கிருஷ்ணமூர்த்தி-3


”நாளை சென்னை வருகிறேன்.. இந்த விமானத்தில் வருகிறேன்” என்று கிராமர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து ஒரு இமெயில்.. மனுஷன் அமெரிக்கா போயிருந்தார். அவரோட மூத்த பையன் அங்கே இருக்கான். ஒரு மாசம் இருந்துவிட்டு வருகிறார்.. ஒரு சர்ப்ரைஸ் தரலாமே என்று ஏர்போர்ட் போயிருந்தேன்.

சென்னை ஏர்போர்ட் நிர்வாகம் இன்னும் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.. டாய்லெட் இத்தனை சுகாதாரக் குறைச்சலாக இருக்க வேண்டாம்..


விடிகாலை நேரத்தில் வந்த அந்த விமானத்தில் தான் கிராமர் கிருஷ்ணமூர்த்தி வந்தார். என்னை ஏர்போர்ட்டில் எதிர்பார்ர்கவில்லை..


“என்னப்பா வேற யாரையும் ரிசீவ் பண்ன வந்தியா”

“இல்ல சார் உங்கள அழைச்சிண்டு போகத்தான் வந்தேன்”

“சரி வா போகலாம்”

”பயணம் எல்லாம் எப்படி சார் பையன்,, மாட்டுப்பொண்ணு எல்லாம் சௌக்கியம இருக்காளா.. உங்க பேரப் பசங்க”

“எல்லாம் சௌக்க்கியம்.. ரொம்ப சுத்தி பாக்க முடியல.. ஆனா முக்கியமான சில இடம் பார்த்தோம்.. பையன் எல்லாம் வீடியோ எடுத்தான்.. கொண்டு வந்திருக்கேன்.. சாவகாசமா பார்க்கலாம்.. ஆமா நீ உன் கார்ல தானே வந்தே”

“ஆமாம் சார்.. ஏன் கேட்றேள்”

“இல்லப்பா.. இங்கேர்ந்து போனேன் இல்லியா .. எம் பையன் ஏர்போர்ட் வந்திருந்தான். ஆனா டாக்ஸி பிடிச்சி வந்தான்.. ஏன்னு கேட்டேன்.. தன் கார் சின்னது.. நாலு பேர் தான் சௌகரியமா போலாம்.. இப்படி ஏதேதோ சொன்னான்.. அதான் கேட்டேன்”

“ஓஹோ... இப்படியெல்லாம் யோசிக்கணுமா”

“ஏம்பா பொஸ்தகம் வேணுமின்னு மெயில் பண்ணியே.. இங்க மதராஸில கிடைக்காததா”

”அதில்ல சார்.. அங்கெல்லா எல்லா பொஸ்தகமும் பேப்பர் பேக் எடிஷன் வரும்னு ஒரு சிநேகிதன் சொன்னான்.. அதான்.. சரி நீங்க தான் போய்ருக்கேளேனு ஒரு மெயில் அனுப்பினேன்”

“அது சரி.. பொஸ்தகம் பேர் சரியா அனுப்ப வேண்டாமா.. வெறுமன எழுதினவன் பேரு மட்டுமிருந்தா போதுமா பொஸ்தகப் பேரு.. யார் பப்ளிஷர் இதெல்லாம் வேண்டாமா”

இதற்குள் அவர் வீடு வந்துவிட்டது..

“ஏம்பா உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. கோலத்து மேல காரை நிறுத்தாதேனு.. எத்தனை சிரமப்பட்டு கோலம் போடறா.. பாரு டயரை தேச்சி நிறுத்தி அழிச்சிட்டே”

“ I am sorry Sir.. I will not repeat this again”

மாட்டிக் கொண்டேன்..

ஆங்கில சொற்றொடருக்காக மனுஷன் காத்திருந்த மாதிரி தோன்றியது..

“நீ உள்ள வா”... முகம் கொஞ்சம் கடுப்பாக இருக்கிறதோ

“இல்ல சார் பிரயாணக் களைப்பாயிருக்க்கும்.. நீங்க ரெஸ்ட் எடுங்கோ நான் அப்புறமா வர்றேன்”

“இல்ல ரெண்டு நிமிஷம் கூட ஆகாது”

சரி இனி தப்பிக்க முடியாது

“சந்துரு இந்தா இத தமிழில் எழுது” .. ஒரு பேப்பரில் எதையோ எழுதிவிட்டு நீட்டினார்..

I WILL NOT REPEAT என்று இருந்தது.. அதற்கு எதிரே.. நான் மறுபடியும் செய்ய மாட்டேன் என்று எழுதி அவரிடம் நீட்டினேன்

“பாத்தியா இங்க சரியா எழுதின.. வாசல்ல என்ன சொன்னே I will not repeat this again-- repeat னு சொன்னாலே மறுபடியும்னு தானே அர்த்தம் அப்புறம் ஏன் ஒரு again எக்ஸ்ட்ராவா.. அது தப்பு .. இப்ப கிளம்பு..

“சரி சார் வர்றேன் .. நீங்க ரெஸ்ட் எடுங்கோ

காரை ஸ்டார்ட் செய்யும் போது யோசித்தேன்.. இனிமே இவர்கிட்ட இங்லீஷ்ல பேசக்கூடாது.. ஒரு வார்த்தை கூட ஆமா I will not repeat this …

Sunday, 4 May 2008

கிராமர் கிருஷ்ணமூர்த்தி-2


உள்ளே போனபோது கிராமர் கிருஷ்ணமூர்த்தி சில நூறு கல்யாணப் பத்திரிகைகளை முன்னே அடுக்கி வைத்திருந்தார்.

“என்ன சார் ஏதாவது பிரிண்டிங் பிரஸ் ஆரம்பிக்கப் போறேளா ?”

“இந்த கிண்டல் தானே வேணாங்கறது.. உன்னோட கல்யாணப் பத்திரிக்கை கொண்டு வரச்சொன்னேனே எங்க?

“ அது சார். இப்ப தானே வீடு மாத்தினேன். அதனால கல்யாண ஆல்பம், பத்திரிக்கை இதெல்லாம் எந்த பெட்டில இருக்குனு தெரியல.. என்ன விஷயம் சொல்லுங்கோ”

“இத பாத்தியா.. சுமார் அறுபது வருஷ காலத்திய கல்யாணப் பத்திரிகைகள்.. எல்லா பிரிவு ஜனங்களோடதும் இருக்கு.. இதுல விதி விலக்கில்லாம எல்லாரும் ஒரு தப்பு பண்ணியிருக்கா”

உள்ளே சமையல் கட்டிலிருந்து மாமி, “ சந்துரு யார் தப்பு பண்ணாளோ இல்லியோ நான் தப்பு பண்ணியிருக்கேன். இந்த கல்யாணப் பத்திரிக்கை தப்பை இந்த மனுஷன் லென்ஸ் வச்சி கண்டுபிடிச்சது கூட தப்பிதம் இல்லை. அந்த மனுஷாளுக்கெல்லாம் இதை கடுதாசி போட்டுச் சொல்றார். அவாள்லாம் இப்ப போன் பண்ணி கேக்றா”

“கடுதாசி போட்டா என்ன தப்பு... நீ வாயை மூடு.. இத பார் சந்துரு.. கல்யாணப் பத்திரிக்கை எதுக்கு அடிக்கிறோம். இன்னாருக்கு இன்னாரை கல்யாணம் பண்ணி வைக்கப் போறோம். நீங்க வந்து நடத்திக் குடுங்கோ அப்டினு கூப்பிடத்தானே”

மேஜை டிராயரிலிருந்து சுருட்டி வைத்திருந்த போர்டை எடுத்து சுவற்றில் பொருத்தினார்.

“இப்ப பாரு.. பொண்ணைப் பெத்தவாளோ.. பையனை பெத்தாவாளோ.. வித விதமா கல்யாணம் சொல்றா பாரு”

கிருஷ்ணமூர்த்தி நிஜமான ஆராய்ச்சி ஆசாமிதான்.. போர்டில் வரிசையாக எழுதியிருந்தார்.

XXXXX என்கிற வரனை YYYYY என்கிற கன்னிக்கு திருமணம் செய்வதாய்
YYYYY என்கிற கன்னியை XXXXXX என்கிற வரனுக்கு திருமணம் செய்வதாய்
எனது குமாரத்தி YYYYY ஐ XXXXXX க்கு கன்னிகாதானம் செய்து கொடுப்பதாய்
எனது குமாரன் XXXXXX க்கு சௌபாக்கியவதி YYYY ஐ பாணிக்கிரகணம் செய்து கொள்வதாய்

“இப்படி எல்லா இடத்திலையும் ” க்கு” தான் யூஸ் பண்ணியிருக்கு. ஆனா இங்கிலீஷ்ல



We cordially invite you on the occasion of the marriage of my son / daughter

With

XXXX

போட்டு ‘வித்” யூஸ் பண்றா.. இது ரொம்ப பிசகு இந்த இடத்தில்

We cordially invite you on the occasion of the marriage of my son / daughter

to

XXXX

இப்படித்தான் போடணும்.


என் மகள் / மகனுக்கு இன்னாருடன் நடக்கும் திருமண வைபவம் .. இப்படி சொல்லக் கூடாது

என் மகள் / மகனுக்கும் இன்னாரின் மகன் / மகளுக்குமான திருமண வைபவம் இப்படித்தான் சொல்லணும்

இங்கிலீஷின் preposition க்கும் தமிழின் வேற்றுமை உருபுக்கும் கையாளறதுல நிறைய வித்தியாசம் இருக்கு வழக்கு இருக்கு.. தமிழில் கூட தொல்காப்பியர்

ஐ ஒடு கு இன் அது கண் என்னும்
அவ் ஆறு என்ப வேற்றுமை உருபே

இப்படி சொன்னதில் கூட ‘உடன்’ அர்த்தம் வர்ற with இல்ல பாரு.

நியாயம் தான் என நினைத்துக் கொண்டேன்.

ஆனால் இதை அந்த பழைய கல்யாணப் பத்திரிக்கை குடும்பத்தாருக்கு போஸ்ட் கார்ட் எழுதி சொல்வது நியாயக் கணக்கில் சேர்த்தி இல்லை தான்.

நல்லவேளை ஜவஹர்லால் நேரு கல்யாணப் பத்திரிக்கை இவருக்கு கையில் கிடைக்கவில்லை. இவர் அதை வைத்து 10, ஜன்பத் நியூ டெல்லிக்கு கடுதாசி போட்டுவிட்டால் பிரச்சனை பார்லிமெண்ட் வரை போய்விடும்.

Friday, 25 April 2008

கிராமர் கிருஷ்ணமூர்த்தி-1


CALL ME PLEASE என்று கிராமர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து எஸ். எம். எஸ். நான் ரொம்ப மரியாதையாக I AM GOING TO COME THERE IN THE EVENING என்று பதில் அனுப்பினேன். உடனே கூப்பிட்டு ஒரு பிடி பிடித்தார்.

”அதென்ன I AM GOING TO COME ; தமிழில் வரப்போகிறேன் அப்படினு சொல்லலாம். காரணம் “றேன்” அப்படிங்க்றது ப்யூச்சர் டென்ஸ். அதையே இங்கிலீஷில் I AM GOING TO COME சொல்றது தப்பு. I WILL BE COMING இப்படி சொல்லு“

”அதில்ல சார் விஷயம் அர்த்தமாயிடுத்தில்ல”

”நீ சொன்னா கேட்க மாட்டியே. இப்ப நான் ஒன்னு சொல்றேன். WHAT IS YOUR NAME இதை தமிழில் எப்படி சொல்வே “

“ உங்கள் பெயர் என்ன”

“பார்க்கப்போனா WHAT IS YOUR NAME இதை தமிழில் அட்சரமா மொழிபெயர்த்தால் உங்கள் பெயர் என்னவாக இருக்கிறது – இப்படித்தானே வரணும்- இப்ப புரியுதா. ஒவ்வொரு பாஷைக்கும் ஒரு வழக்கு இருக்கு”

“சரி தான் சார்”

“ சந்தோஷம். ஆமாம் என்னைப் பத்தி எழுதறேன்னு சொல்லிட்டு என்னையே அச்சு அசலா வரைஞ்சு போட்டிருக்கே”

” அது என் அண்ணா கண்ணன் வரைஞ்சது சார்”

”என்னை உன்னோட செல் போன்லே போட்டோ பிடிச்சு அனுப்பினியா”

“இல்லை சார் உங்களைப் பத்தி சொன்னேன். கொஞ்சம் அடையாளங்களும் சொன்னேன். அதை வச்சிண்டு வரைஞ்சார்”

அப்படியே என்னை மாதிரியா இருக்கு. நான் ரொம்ப சந்தோஷம்னு சொன்னேன்னு உன் அண்ணாகிட்டே சொல்லு. அப்புறம் என்ன பார்க்க வரச்சே உன் கல்யாணப் பத்திரிக்கை கொண்டு வா”

“சார் எனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கு. இப்ப போய் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்றேளே”

“போனை உன் பொண்டாட்டிக்கிட்ட குடு.. அப்ளக் குழவியால தலையில நங்னு போடச் சொல்றேன். உன் கல்யாணப் பத்திரிக்கை கொண்டு வா. சொல்றேன்.”

போனை வைத்துவிட்டார்.

என் கல்யாணப் பத்திரிக்கையில் இவர் என்ன செய்யப் போகிறார். ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. அதனால இந்த கல்யாணமே செல்லாது என்று சொல்லிவிடுவாரோ. போய்த்தான் பார்க்கலாம்

Tuesday, 22 April 2008

கிராமர் கிருஷ்ணமூர்த்தி- அறிமுகம்



கிராமர் கிருஷ்ணமூர்த்தி- எனக்கு அமைந்த நண்பர்களில் ஓர் அதிசயம். நம்மை விட சுமார் 20 வயசு ஜாஸ்தியான ஒருவரை நண்பர் என சும்மா பேச்சுக்கு சொல்லலாம்.. ஆனால் கிராமர் கிருஷ்ணமூர்த்தி நிஜமான நண்பர். ” உடுக்கை இழந்தவன் கைபோல “ ரிலையபிள் ஆசாமி. என்ன தொட்டதுக்கெல்லாம் ”உன் இங்கிலீஷ் சரளமா இருக்கு ஆனா நிறைய கிராமர் மிஸ்டேக்” என்று எல்லாரையும் காலை வாரிவிடுவார். புரிந்திருக்குமே “கிராமர் “ என்ற விருதின் பின்புலம்.

நான் இந்த மாதிரி BLOG தொடங்கியுள்ளேன் என அவருக்கு ஒரு எஸ். எம். எஸ் அனுப்பி வம்பில் மாட்டினேன். மறு விநாடி அவர் போனில்,

“ஏம்பா அதென்ன BLOG டிக்‌ஷனிரியில் அப்படினு வார்த்தையே இல்லையே”

“சார் அது ஒருவெப்சைட் மாதிரி. படிச்சு பாருங்கோ ! எப்படி இருந்ததுனு சொல்லுங்கோ “

“ அப்படியா சாவகாசமா படிக்கிறேன்...ஆமா உன்னிடம் ஒரு வேலை சொன்னா நீ என்னப்பா இன்னொருத்தர்கிட்ட கொடுத்துட்டே.. அவர் எப்படி நல்லா பண்ணுவாரா ?”

”சார்.. எனக்கு ஆபிஸில் கொஞ்சம் வேலை டைட்டா இருக்கு அதனால என் சிநேகிதர்கிட்ட கொடுத்தேன். நல்லா பண்ணுவார். He is even better than me”

“ He is better than me னு சொல்லக் கூடாது He is better than I அப்படினு தான் சொல்லனும். நாம சாதாரணமா ME னு சொல்லுமபோது நான் அப்படினு என்னுடைய எனது அப்படி அர்த்தம் பண்ணிக்கிறோம். ஆனா நம்மை மத்தாவாளோட கம்பேர் பண்ணும் போது I தான் கரெக்ட்.. “

பதினாறு பாஷை பேசவும் எழுதவும் தெரிந்த அவரிடம் மேலும் பேசி வம்பில் மாட்ட விரும்பாமல் சிரித்தேன்.

“சிரிக்காதே. இப்பவே உனக்கு இதில் நல்ல ரெபரன்சோட மெயில் அனுப்பறேன் “
சொன்ன மாதிரியே 10 நிமிஷத்தில் மெயில் இருக்கும்

இவர் பல தடவை எல்லாரையும் டீஸ் செய்தாலும், சகல பாஷைகளிலும் விஷயம் கொட்ட கொட்ட பேசுவார். என்ன பேச்சை நிறுத்தத் தெரியாது. அது தான் பிரச்சனை. அவரைப் பற்றி அவர் பெர்மிஷனுடன் எழுதப்போகிறேன்.