Sunday, 27 July 2008

யக்ஷகானம் (மீண்டும் சுஜாதா)”கணேஷ அது என்னனு பாருப்பா.. நான் இங்கே இவரோட கொஞ்சம் பேசிக்கிட்டிருக்கேன்”

“சரி சார்.. இதோ பார்க்கிறேன்”

“கவலை வேண்டாம் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்.. வசந்துக்கு எதுவும் நிகழாது”

“இரண்டு விஷயம்.. என்னை வாக்கியத்துக்கு வாக்கியம் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் என்று நீளமாக கூப்பிட வேண்டாம். என்னை பூலோகத்தில் எல்லோரும் சுஜாதா என்று கூப்பிடுவார்கள்.. நீங்களும் சுஜாதா என்றே கூப்பிடலாம்.. வசந்துக்கு எதுவும் ஆகாது என்று எனக்குத் தெரியும். அவனால் மத்தவர்களுக்கு எதுவும் ஆகாமல் இருந்தால் சரி”

”உங்களுக்கு விப்ரநாராயணர் சிறப்பு அழைப்பு தந்திருப்பதாக அறிந்தேன்.. அதற்கு உதவுவதே என் பணி... நீங்கள் இங்கே யாரையெல்லாம் பார்க்க நினைக்கிறீர்களோ என்னிடம் சொல்லவும்; நான் ஏற்பாடு செய்கிறேன்”

“சற்று அவகாசம் தாருங்கள்—ஒரு பட்டியலே தருகிறேன்—நீங்கள் என்னை மன்னிக்க வேணும். இப்படி அட்சர சுத்தமா தமிழ் பேசறது எனக்கு அலர்ஜி. யாதார்த்தமா பேசலாமே.. இல்லேன்னா சாண்டில்யன் கதை மாதிரி நீள நீளமா வாக்கியம் வரும்”

“அதுவும் சரி தான்.. ஆனால் எனக்கு உங்கள் வழக்கப்படி பேசி பழக்கமில்லை.. ஆனால் நீங்கள் பேசினால் புரியும்.. நீங்கள் கதை புனைபவர் என்று சொன்னார்கள்.. உங்கள் படைப்பில் யக்ஷகானம் வைத்து ஒரு புனைவு செய்திருக்கிறீர்கள் என்று ஞாபகம்”

“அட ஆச்சரியமா இருக்கே.. என் கதை உங்களுக்கு எப்படி தெரியும்.. அது மூன்று நிமிஷம் கணேஷனு ஒரு த்ரில்லர்.. யக்ஷகானத்தில் வரும் நிமிஷா, நிமிஷா, நிமிஷா அப்படினு அந்த வார்தை மூணு தரம் சொன்னவுடனே குண்டு வெடிச்சி ஒரு விஐபியை கொல்ற மாதிரி பிளாட்.. இந்த கணேஷ் வசந்த் தான் அதை பிரேக் பண்றமாதிரி எழுதினேன்.”

“ஞாபகம் இருக்கிறது ஸ்ரீரங்.... மன்னிக்கவும் சுஜாதா. இங்கே ஒரு பெரிய நூலகமே இருக்கிறது.. அதில் தான் எடுத்து படித்தேன்.”

“ஆஹா லைப்ரரி இருக்கா அதும் போதும் எனக்கு.. “

” யக்ஷகானம் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லமுடியுமா”

”அது வந்திட்டு... ஆந்திரா, கர்நாடகாவிலே அதும் பேரு யக்ஷகானம். தமிழ்நாட்டிலே ‘பாகவத மேளா’னு கூட சொல்வாங்க.. பழைய குறவஞ்சி நாடகம் கூட இந்த டைப் தான். பெங்கால்ல இதை “யாத்ரா” னும் அஸாமில “பாவநா” அப்படினு சொல்வாங்க.. நீங்க “பொன்னியின் செல்வன்” படிச்சிருப்பீங்க”

“ஆமாம் படித்திருக்கிறேன்.”

“அதில கூட தேவராளன் தேவராட்டி டான்ஸ் வருமே.. அதெல்லாம் இந்த மாதிரி இசை நாடகம் தான். தமிழ்ல கோபால கிருஷ்ண பாரதியாரோட “நந்தனார் சரித்திரம்” ரொம்ப பிரசித்தம்.. அதே மாதிரி தெலுகிலே தியாகராஜர் “ பிரஹல்லாத பக்த விஜயம்” அப்படினு பண்ணிருக்கார்.. அதுவும் இந்த டைப் தான். தமிழ்ல மெரட்டூர் வெங்கட்ராம சாஸ்த்திரி, ஷாஹாஜி மஹாராஜா இவங்கெல்லாம் கூட இந்த மாதிரி இசை டிராமா போட்டிருக்காங்க”

‘இதோ கணேஷும் வசந்தும்”

வசந்தை ஆலிங்கனம் செய்தபடி ஒரு ஆசாமி

(தொடரும்)

கடிதம்-2கடிதம் என்று சொன்னாலே காதல் இல்லாமல் இருக்காது. எனது குடும்ப நண்பர் ஒருவர் ”பேனா நண்பராக” ஒரு பெண்ணுடன் அறிமுகமாகி ரொம்ப நாள் சுவாரசியமாக கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.

அந்தப் பெண் தீடீரென “ஐ லவ் யூ” என்று கடுதாசி போட்டுவிட்டது. மனுஷன் முதலில் தயங்கினார். என்னைப் போல புண்ணிய ஆத்மாக்கள் எதற்கு இருக்கிறோம்.. அவரை உசுப்பேத்தி சம்மதம் பெற்றோம். அதன் பின் இரண்டு கடிதங்கள்.. அந்தப் பெண் இலங்கையிலிருந்து வந்த அகதி என்று தெரிந்தது. நண்பர் குடும்பம் அவசரமாக அவருக்கு சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்து விட்டார்கள்.. அந்த இலங்கைப் பெண் என்ன ஆனாள் என்று தெரியவில்லை..

அகிலன் அவர்களின் “ஆனால் “ என்ற கதையை என்னால் மறக்கவே முடியாது.. 1954 லிலேயே இத்தனை சுவாரசியமான ஒரு கதை இருந்திருக்க முடியுமா என்று இப்போதும் வியக்கிறேன்.
திருச்சியிலிருக்கும் கல்யாணராமன்.. குன்னூரிலிருக்கும் தியாகராஜன் இவர்களின் கடிதங்களே கதை.

கதை 1954 செப்டம்பர் 15 கல்யாணராமனின் கடிதமாய் தொடங்கி அதே செப்டம்பர் 30 தியாகராசனின் அவசரத் தந்தியுடன் முடிகிறது.

அப்போதே பெண்களை இவ்வளவு உன்னிப்பாக “அப்சர்வ்” செய்யும் பழக்கம் இருந்திருக்கிறது.

ஹாய்ஸத்துக்குப் பஞ்சமில்லாத நடை.

(கடித சுவாரசியம் இன்னும் தொடரும்)

Sunday, 13 July 2008

கடிதம்-1


பேப்பர் பேனா எடுத்து கடிதம் எழுதி தபாலில் சேர்த்து, பின்னர் பதில் வந்து அதை சிலாகித்து இல்லை வருந்தி பதில் போட்டு... இப்போதெல்லாம் இந்த சுவாரசியம் வழக்கொழிந்தே விட்டது எனச் சொல்லலாம். எல்லாம் இமெயில், எஸ்.எம்.எஸ் புண்ணியம்.

இந்த நவீன சாதனங்கள் நேரக் குறைப்பு செய்திருக்கின்றன.. நேரத்தோடு சுவாரசியக் குறைப்பும், அந்நியோந்யக் குறைப்பும் சேர்ந்து விட்டது

கடிதம் என்று சொன்னாலே எனக்கு பண்டித நேருவின் ஞாபகம் தான் வரும். அவரின் Glimpses of World History இந்திரா காந்தி அவர்களுக்க் நேரு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. அதில் ஒரு கடிதம்.. நான் அடிக்கடி குறிப்பிடும் வரிகள்

It was about a man from South India who came to Kraunasuvarna, it was a city somewhere near modern Bhagalpur in Bihar.

This man, it was written, wore round his waist copper plates and on his head he carried a lighted torch. Staff in hand, with proud bearing a lofty steps, he wandered about in this strange attire and anyone asked him the reason for his curious get-up he told that his wisdom was sop great that he was afraid his belly would burst if he did not wear copper plates round it; and because he was moved with pity for the ignorant people round about him who lived in darkness he carried the light on his Head.

(நேருவை முழுசாத் தெரிஞ்சிக்க அவரோட இந்த புத்தகத்தை படிக்க சிபாரிசு செய்கிறேன்)

இந்த கடித வரிகளை படிக்கும் போதெல்லாம் எனக்கு தியாகராஜரின் வரராக லயஜ்ஞுலு என்ற கீர்த்தனை வரிகள் ஞாபகம் வரும்


“ஸ்வரஜாதி மூர்ச்சநா பேதமுல் ஸ்வாந்த மந்து தெலியக யுண்டிந
வரராக லயஜ்ஞுலு தாமநுசு வதரேரயா”

அதாவது ஸ்வரம், ஜாதி மூர்ச்சனை ஆகியவற்றின் வேறுபாடுகளைத் தம் உள்ளத்தில் அறியாதவர்களாயினும் சிறந்த ராக தாள வித்வான் மாதிரி பிதற்றி திரிகின்றனர் என்று அர்த்தம். இது ஸங்கீத லோகத்திற்கானது மட்டுமல்ல.

சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதம்

இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்

மாதவியை கணிகையர் குலத்தவளாகவே இளங்கோ அறிமுகம் செய்கிறார். ஆயினும் தான் பண்பு நெறி தவறாதவளே என அவளே கடிதம் வழி சொல்வதாகவும் காட்சி அமைக்கிறார்

நான் இந்த சுவாரசியங்களை இன்னும் விடாமல் வைத்திருக்கிறேன்.

ராஜீவ் காந்தி அவர்களின் மரணத்தின் போது அதற்கு வருந்தி ஓர் இரங்கல் கடிதம் சோனியா காந்தி அவர்களுக்கு எழுதியதும் அவர் அதற்குக் கைப்பட எழுதிய கடிதத்தில் ,’ நான் உங்கள் அன்பிற்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். உங்களுக்கு நானும் பிரியங்காவும், ராகுலும் நன்றி சொல்கிறோம்” என்று எழுதியது இப்போதும் எனது சேகரிப்புப் பொக்கிஷத்தில்

மொரார்ஜி தேசாய் அவர்களின் சுய சரிதையில், அமெரிக்க தூதுவர் ஒருவரிடம் பண்டித நேரு அவர்களின் முகம் காட்டாப் பேச்சுதான் அமெரிக்கா பாகிஸ்தானை ஆதரிப்பதற்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இதைப் படித்து ஆவல் காரணமாக அவருக்கு நான் எழுதிய கடிதத்துக்கு அவர் சாதாரண Inland லெட்டரில் தன் கைப்பட எனக்கு எழுதிய பதில் கடிதமும் (விளக்கக் கடிதம்) என் பொக்கிஷத்தில் ஒரு முத்து

நான் வியந்த சட்ட நிபுணர்களில் மறைந்த நீதியரசர் M. ஸ்ரீநிவாசன் அவர்களும் ஒருவர். அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசராக இருக்கும்போது நான் அனுப்பிய தீபாவளி வாழ்த்துக்கு தன் கைப்பட பாராட்டியும் வாழ்த்தியும் எழுதிய கடிதம், பின்னர் ஹிமாசல பிரதேச உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்றிருந்த அவர் என் திருமணத்திற்கு அனுப்பிய ஆசிர்வாதக் கடிதம்.. என் நினைவில் நீங்கா இடம் பெற்றவை

(கடித சுவாரசியம் இன்னும் தொடரும்)

Saturday, 12 July 2008

வைகுண்ட பிரவேசம்-2 (மீண்டும் சுஜாதா)


”பாஸ் என்ன இது மௌண்ட் ரோடு ரெஹேஜா டவர்ஸ் மாதிரி இருக்கு; மேலோகம்னா வேற மாதிரி கற்பனை பண்ணிண்டிருந்தோமே எல்லாரும்”

அந்த முகப்பு மிகப் பிரம்மாண்டமாய்... வழுக்கும் தரைகள்.. மூன்று பவுண்டன்கள்.. பீய்ச்சியடிக்கும் தண்ணீர்... அதற்கு கலர் சேர்க்கும் Focus லைட்கள்... சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம்..

க்யூப் டைப்பிலான லிப்ட்கள்.. அவற்றில் சிரித்த முகங்களுடன் மனிதர்கள்.. அங்கும் இங்கும் உலாவும் சீருடை தரித்த சிப்பந்திகள்..

”சார் நிஜமாவே இது மேலோகம் தானா.. என்னவோ JFK ஏர்போர்ட் மாதிரி இருக்கு”

“ஏம்பா! எனக்கு மட்டும் என்ன தெரியும்; நான் என்ன பத்து தரம் இங்கே வந்து போயிருக்கேனா”

பார்ப்பதற்கு பளிச்சென்றிருந்த ஒரு பெண் சிப்பந்தி மூவரையும் அணுகி,

“நீங்கள் அந்த வரிசையில் நின்றால் உதவியாக இருக்கும்; அதுவுமில்லாமல் நீங்களும் அதிக சிரமம் இல்லாமல் இருக்கலாம்”

“மிஸ்; நான் உங்களை ஒரு கலை விழாவில பார்த்திருக்கேன்”

“வசந்த்.... இங்க இந்த ட்ரிக்கெல்லாம் எடுபடாது... அவாள்ளாம் மேலோகப் பிரஜைகள். மந்திரமெல்லாம் தெரிஞ்சி வச்சிருப்பா.. உன்னை டபக்குனு ஆட்டுக்குட்டியா மாத்திட்டானா கஷ்டம்”

“சார் நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க.. இல்லேன்னா நான் ஆடா மாறி... பாஸுகு வேற மட்டன்னா பிடிக்காது”

“உன்ன திருத்தவே முடியாதுடா வசந்த்”

பளிச் பெண் காட்டிய வரிசை டிக்கெட் கௌண்டர் மாதிரி இருந்த இடத்தை நோக்கி நீண்டிருந்தது..

கௌண்டர் ஆசாமி வரிசையில் வரும் எல்லார் தலையிலும் தொப்பி மாதிரி ஒரு சமாச்சாரத்தை வைத்து பின் அங்கிருந்த கம்யூட்டர் மாதிரி ஒரு வஸ்துவிலிருந்து என்னவோ படித்துக் காட்டி பின்னர் ஒரு அட்டையைக் இடுப்பில் கட்டினான்.


“பாஸ் கன்பார்ம். இது வைகுண்டம் தான்.. பாருங்க தலைல சடாரி வைக்கிறாங்க”

”வசந்த்.. கேலி பண்ணாத.. சடாரி எதுக்கு வைக்கிறாங்க தெரியுமா”

“சொன்னா தெரிஞ்சுக்கிறேன்..”

”சடம் என்றால் போன ஜென்மா வினையான காற்று; பிறக்கிற குழந்தை முன் ஜென்மா வினையால அழறது. பெருமாள் பாதம் படறதினால போன ஜென்மா வினையெல்லாம் முறிஞ்சிடறது. நாம பெருமாள் பாதம் தேடி போகலேன்னாலும் அவர் நம்மைத் தேடி வருவார்.. அது தான் இது”

”சார்... உங்க பிரெண்ட் அப்துல் கலாம் ஒரு தரம் சுவாமி சிவானந்தரிடம் கேட்டாராம் How can I find my right teacher? அதற்குச் சிவானந்தர் சொன்ன பதில் - When the student is ready, the Teacher arrives! – Wings of Fire ல் படிச்சிருக்கேன்... அது மாதிரி பகதன் ரெடின்னா ஸ்வாமியும் ரெடி.. அதானே”


இப்போது சுஜாதாவின் முறை.. தொப்பி மாட்டினவுடன்.. கௌண்டர் ஆசாமி பவ்யமானான்..

“அய்யா நீங்கள் தானே ஸ்ரீரங்கம் ரங்கராஜன்...”

“ஆமாம்பா .. ஆனா ஸ்ரீரங்கத்தில் நான் மட்டும் ரங்கராஜனில்லை”

“அய்யா இந்த கருவி மூலம் உங்களின் விதியைப் படிக்க இயலும்.. இதை பூவுலகில் தலையெழுத்து என்று சொல்கிறீர்கள் அல்லவா. அதுதான்;.. இங்கே பல வருஷ காலம் பிரஜையாயிருக்கும் ஒருவர் புதிதாக கவர்ந்து கொண்டுவரப்படும் உயிர்க்கு சிறப்பு பிரஜா அந்தஸ்த்து அளிக்க பரிந்துரைக்க முடியும்.. அப்படி ஓரு பரிந்துரை ஒருவர் உங்களுக்கு செய்திருக்கிறார்”

“ எனக்கா .. யாருப்பா அது ரொம்ப ஆச்சரியமா இருக்கே”

“அவர் இப்போது ஸ்ரீஹரியின் சந்நிதியில் இருக்கிறார்.. அவர் பெயர் விப்ர நாராயணர்”

“ ரங்கநாதா !!... தொண்டரடிப்பொடியாழ்வாரா !!! .. அவரை நான் தரிசிக்க முடியுமா“

“ஆமாம்.. அவரேதான். நிச்சயம் சந்திக்க இருக்கிறீர்கள். இது உங்களுக்கான அடையாள அட்டை.. உங்களின் படைப்பான இந்த இருவரும் உங்களுடனே இருப்பதற்கும் அனுமதி உண்டு... இதோ அந்த வாயில் வழியாக செல்லுங்கள். ஒரு தோட்டம் வரும்.. அங்கே தாடியுடன் ஒரு பெரியவர் இருப்பார்.. அவர் உங்களுக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.. அவரிடம் மேல்விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.....வந்தனம்”

“கணேஷ்.. இது ஒன்ணும் கனா இல்லியே.. நிஜமாகவே தொண்டரடிப்பொடியாழ்வாரா !! எனக்கு பிரமிப்பா இருக்குப்பா”

“எனகும் தான் சார்.. அவன் சொன்ன மாதிரி அந்த வாசல் வழியா போவோமே”

கௌண்டர் ஆசாமி காண்பித்த வாசல் அந்த ஹாலின் ஒரு மூலையில் இருந்தது.. மூவரும் நடந்தனர்.

“கைடா ஒரு பெண் பிள்ளையைப் போட்டால் சௌகரியமா இருக்காதோ..”

நீ சும்மா இருக்க மாட்டே இப்போ”

அந்த வாசல் கொஞ்சம் உயரம் குறைச்சலாக இருந்தது.. குனிந்து வெளியில் வந்தால்.. மிக விசாலமான் இடம்.. ரம்மியமான தோட்டம்.. தாடி வைத்த பெரியவர் அவராகவே நாடி வந்தார்

“வந்தனம் நான் தான் இங்கே உங்களுக்கு வழிகாட்டியாக நியமிக்கப் பட்டுள்ளேன் நீங்கள் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்.. இது கணேஷ்.. சரி தானே.. வசந்த் என்று இன்னொருவரும் வருவதாக தகவல்.. அவரெங்கே”

”பாஸ் இங்கே சீக்கிரம் வாங்க “ என்ற வசந்தின் அலறல் பின்னாலிருந்து கேட்டது

(தொடரும்)

Tuesday, 8 July 2008

குட்டிக் கதை-4 கோணல் புத்தி


ஒரு வேட்டைக்காரன். அவனிடம் இருந்த வேட்டை நாய் தண்ணீரின் மேல் நடக்கும். தன் நண்பன் ஒருவனிடம் இந்த நாயின் அபார சக்தியை காண்பிப்பதற்காக வேட்டைக்கு கூட்டிச் சென்றான். ஒரு குளக்கரையில் இருந்து கொண்டு அங்கே நீந்திக் கொண்டிருந்த வாத்துகளை சுட்டான்.. ஒவ்வொரு முறையும் அந்த விசித்திர நாய் தண்ணீரில் நடந்து போய் சுடப்பட்ட வாத்துகளை கவ்வி எடுத்து வந்தது.

வேட்டைக்காரன் நணபனைப் பார்த்து “எப்படி என் நாய் ”

“ஆமாம். உன் நாய்க்கு நீந்தத் தெரியாது போலிருக்கே”


நீதி: சிலருக்கு எப்பவுமே கோணல் புத்தி

(ஷிவ் கேராவின் You Can Win புத்தகத்திலிருந்து)

Saturday, 5 July 2008

வைகுண்ட பிரவேசம்-1(மீண்டும் சுஜாதா)


ஒரு நீளமான டிரெயின் மாதிரி வாகனத்தில் சுஜாதா தனது கணேஷ், வசந்த் சகிதம் பிரயாணம். மேக மண்டலங்களில் அசாத்திய வேகத்தில் அந்த வாகனம் பிரயாணிக்கிறது...

சற்று நேரத்தில் ஒரு உயர்ந்த கட்டிடத்தின் வாசலில் அந்த வண்டி நிற்கிறது.. ரயில்வே ஸ்டேஷன் போலவே பலர் இறங்குகின்றனர். பிளாட்பாரம் இல்லை.. எல்லாம் அப்படியே அந்தரத்தில் நிற்கின்றனர்.

“பாஸ் இது என்ன இடம்.. ராத்திரி பத்தரை மணிவாக்கில சுஜாதா சார் கூப்பிட்டாரேனு டிவில பாலமுரளிகிருஷ்ணா கச்சேரியைக் கூட தியாகம் பண்ணிட்டு வந்தேன்.. மேக மேகமா வந்ததே”

“வசந்த் நீ ராத்திரி என்ன மாதிரி டிவி ப்ரோகிராம் பார்ப்பேனு எல்லாருக்கும் தெரியும்.. பேசாம வா”

“எல்லாம் என் நேரம் பாஸ். சார் எழுதி எழுதி வசந்த ஒரு சோக்காளியாவே தெரியறான் இல்ல.. இது என்ன இடம்.. எதுவும் புது கேஸ் எடுத்திண்டிருக்கேளா.. சொன்னா என்ன கொறஞ்சா போய்டுவேள்”

“ஏம்பா வசந்த் இன்னும் புரியலையா. எனக்கு பூமில ஆயுசு முடிஞ்சது.. இது மேலோகம்.. என்னால படைக்கப்பட்ட நீங்க ரெண்டு பேரும் கூட வந்திருக்கேள்.. கணேஷைக் கூப்பிட போகும் போது அவன்கிட்ட விபரம் சொல்லிட்டேன்.. உன் கிட்ட சொல்லாம கூட்டிண்டு வந்தது தப்புதான்”

“சரிதான்.. கதையில தான் பாஸ் எல்லாத்தியும் முன்னயே தெரிஞ்சிண்டு பலியாடு மாதிரி சில எடத்துக்கு என்ன அனுப்புவார்.. அதையே மெயிண்டய்ன் பண்றாரு”

வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் சகிதமாக அங்கே ஒருவன் வந்தான்..

‘எல்லோரும் வரிசையில் நில்லுங்கள்.. இது தான் மேலுலக முன்றில்.. இன்னும் சற்று நேரத்தில் கதவுகள் திறக்கப்படும்”

“இந்தோ பார்ப்பா இந்த சாருக்குதான் தமிழ் ப்ரீத்தி ஜாஸ்தி.. ஒரு நாலு வார்த்தை கொடுத்து இதில எது தமிழ் வார்த்தை இல்லை இப்படியெல்லாம் கேள்வி போடுவார்.. முன்றில் னா என்ன”

“நான் சொல்றேன் வசந்த்.. முன்றில் னா கிட்டத்தட்ட ரிசப்ஷன் மாதிரி..

கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக்,
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்

அப்படினு புறநானுறில் வருது”


“அடடா இங்கே வந்தும் கற்றதும் ... பெற்றதும் மாதிரி ஆரம்பிச்சுட்டார்”

”வசந்த் ... என்ன இது சார்கிட்டே போய்... பேசாமா வா”

“ ஓகே பாஸ்”

சற்று நேரத்தில் அந்த மாபெரும் கதவு கொஞ்சம் கூட சப்தமில்லாமல் மெதுவாகத் திறந்தது...

உள்ளே......

Friday, 4 July 2008

மீண்டும் சுஜாதா....


தமிழ் எழுத்துலகில் பல வருஷம் பல தளத்தில் இயங்கிய எழுத்தாளர் சுஜாதாவின் நினைவாக இந்த தொடர்.. இந்த தொடரின் ஹீரோ அவர் தான்..
நம் ஆதர்ச சுஜாதா தனது கணேஷ், வசந்த் சகிதம் வைகுண்ட பிரவேசம் செய்வதில் கதை தொடங்குகிறது.. அவர் அங்கே ஆழ்வார்கள் பின்னர் கைலாயத்தில் நாயன்மார்கள் இன்னும் பிற சங்கத் தமிழ் புலவர்களையும்.. சந்திக்கிறார்.. பல ஆங்கில, தமிழ் எழுத்தாளர்களையும் அங்கே மறு உலகத்தில் சந்திக்கிறார் கூடவே கணேஷ் வசந்த்..


இந்தத் தொடரின் பதிவுகள் ”மீண்டும் சுஜாதா” என்ற தலைப்பின் கீழ் பதியப்படும். ஒவ்வொரு பதிவும் தனித் தனி தலைப்பிட்டதாக இருக்கும்..

முதல் பதிவு இன்னும் இரண்டு தினங்களில்...