Friday, 29 July 2011

Thursday, 28 July 2011

இன்றைக்கு என்ன ஆனது 28-ஜூலை-2011

டின்னருக்கு போய் வந்து உறங்கி காலையில் சீக்கிரமே துயில் கலைந்தது. நேற்று கார்த்தி மூலம் வந்த Woody Allen Complete Prose படிக்கலாம் எனப் பிரித்தேன். தபால் வழியே செஸ் ஆடும் இரண்டு பேரின் கடிதங்கள் கண்ணில் பட்டது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்ன இப்படி சிரிச்சா நாங்க எப்படி தூங்குவது என மனைவியும் மகளும் புகார் செய்ததால் சரி சிரிக்காமல் சீரியசாக ஒன்றைப் படிக்கலாம் என எனது பழைய கலெக்‌ஷனில் இருந்து குடுமியான்மலை சங்கரன் என்பார் எழுதிய காஞ்சிமடத்து ஆச்சாரியார்கள் வரலாறு என்ற திட்டும் நூலை எடுத்து வைத்துக் கொண்டேன். இந்த நூலைப் பலதரம் வாசித்திருக்கிறேன். இது தொடர்பான வேறு சில நூல்களும் அன்பர்கள் உதவியால் கிடைத்து வாசித்திருக்கிறேன். எல்லாம் திட்டு தான். வசை காந்தம் என யாராவது இன்றைக்கு சொற்ப திட்டு வாங்கினதற்கே பட்டம் கொடுத்துக் கொண்டு இருப்பதைக் கவனித்தால் அவர்களுக்கு இந்தப் புத்தகங்களை அனுப்பி வைக்கலாம் எனத் தோன்றும். இந்த திட்டுகளில் மஹா ஹாஸ்யம் ஒளிந்திருக்கிறது என தெரிந்தும் எடுத்து வைத்துக் கொண்டேன் பாருங்கள். இதற்கும் சிரிப்பு வந்தது. சரி இதெல்லாம் தோதுப்படாது என Rottenberg எழுதிய The Structure Of Argument என்ற எனக்கு மிகப் ப்ரீதி எனும் லிஸ்டில் இருந்து எடுத்து வைத்துக் கொண்டேன். மஹா பித்துக்குளித்தனமாக ஆர்க்யு செய்பவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என தெரிந்து கொள்ளலாம். அதற்கு எதிர் திசையில் பயணிக்கவும் சொல்லித் தருகிறார் ராட்டன்பெர்க். இதுவும் சிரிப்பை வரவழைக்கிறது. சரி மெயில் பார்ப்போம் என லாப்டாப் திறந்தேன். சயிண்டிபிக் அமெரிக்கன் கோஷ்டியார் வசீகரமாக ஒரு மெயில் அனுப்பியிருந்தனர். yes no button to Sex / Violence என தலைப்பு. இதல்லவோ வேண்டும் என ஓப்பன் செய்தேன். சிம்பு சில காலம் முன்பு நயன் தாராவின் உதட்டினைக் கடிப்பதாக படம் செய்தி வந்ததே. அது போல இதிலும் அமெரிக்க இளைஞன் , மாது படத்துடன் செய்தி போட்டிருந்தார்கள். இந்த ஹைபோதலமஸ் செக்சின் போது எப்படியெல்லாம் வேலை செய்கிறது என சொல்லி ஆலன் ப்ரயின் இன்ஸ்டிட்யூட்காரர்கள் என்ன என்ன ஆராய்ச்சி செய்கிறார்கள் என விபரம் தந்திருந்தார்கள். இந்த கட்டுரையில் smartest mouse of the world என யுடியூப்பிலே தேடுங்கள் ஒரு எலியின் சாகச வீடியோ கிட்டும் என சொன்னார்கள். தேடினேன். பார்த்தேன் ; நீங்களும் பாருங்கள்.

Monday, 18 July 2011

கமல்ஹாசனும் பெருமாளும்


கல்கி அவர்களின் சிவகாமியின் சபதம் படித்த அனைவருக்கும் திருவெண்காடு , நமச்சிவாய வைத்தியர், பரஞ்சோதி எனும் பெயர்கள் நினைவிருக்கும்

தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே

இது திருவெண்காடு தலத்திலே அப்பர் பாடிய பதிகம்

நல்லாத் திரியைக் கிள்ளி தூண்டி விடப்பட்ட விளக்கின் சுடர் போல உடம்பு அதும் சுத்தபத்தமா குளிச்ச உடம்பு
சூலத்தைக் கையிலேந்திக் கொண்டு.. பாம்பை உடம்பிலே சுத்திக்கிட்டு,, காதிலேயும் பாம்பையே அணிகலனாக சூடிக்கிட்டு
சடை முடி தாழ்ந்து புரள,, வெண்நூல் அணிந்து பிறை நிலவை சூடிக்கொண்டு வீதி வழியா நடந்து வந்து வேறெங்கேயோ போவாரானு பார்த்தா என் நெஞ்சத்துக்குள் அல்லவா புகுந்தார்;யாருனு கேட்றீங்களா;எருது வாகனம் கொண்ட சிவபெருமான்

இதே சாயலில்

நம்மாழ்வாரின் பெரிய திருமொழியிலிருந்து-

பருவக் கருமுகி லொத்து

முத்துடை மாகட லொத்து

அருவி திரள்நிகழ் கின்ற

வாயிரம் பொன்மலை யொத்து

உருவக் கருங்குழ லாய்ச்சி

திறத்தின் மால்விடை செற்று

தெருவிள் திளைத்து வருவான்

சித்திரக் கூடத்துள் ளானே

நல்ல மழை மேகம் கணக்கா, கடல் கணக்கா, அருவியாலே தினம் குளிக்கும் மலை கணக்கா இருக்கும் இந்த சித்திரக் கூடத்தான் வீதில நடந்து வரான்

இது சித்திர கூடம் என்பது சிதம்பரம்.. இந்தக் கோவில் தான் தசாவதாரம் படத்தின் முதல் காட்சி

ஆனால் தசாவதாரம் பட்த்திலே ஒரு பிசகு செய்துவிட்டார்கள் உற்சவர் பெருமாளை நின்ற திருக்கோலத்திலே காட்டிவிட்டார்கள் ஆனால் அங்கெ உற்சவர் அமர்ந்த திருக்கோலம்..

கமல்ஹாசனுக்கும் விஷ்ணுவுக்கும் என்ன பொருத்தமோ தெரியவில்லை . இப்படித்தான் குருதிப்புனல் படத்திலே க்ருஷ்ண ஜெயந்தி மே மாத்த்திலேயே வருவதாக காட்சி இருக்கும்

அருவி திரளாக விழும் என நம்மாழ்வார் படித்துக் கொண்டே வந்தால் குறுந்தொகை நினைவுக்கு வருகிறது

கோவேங்கை பெருங்கதவனார் பாடல் பார்க்கலாம்

அம்ம வாழி தோழி நம்மொடு

பிரிவு இன்று ஆயின் அன்று மற்றில்லை

குறும் பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப்

பூவுடை அலங்குசினை புலம்பத் தாக்கி

கல் பொருது இரங்கு கதழ் வீழருவி

நிலங்கொள் பாம்பிம் இழிதரும்

இதுக்கு என்னப்பா அர்த்தம்னு யாரும் கேட்பதற்குள் சொல்லிடலாம்

தோழி ! பாறை மீது வேர் படர்ந்து பரவி கிளைகளில் மலர் நிரம்பியுள்ள வேங்கை மரம் அதிரும் வண்ணம் பெரும் சப்தத்துடன் விழுந்து கற்களில் மோதி நுரைத்து சமவெளிக்கு வந்து பாம்பு போல நெளிந்து போகும் ஆறு உற்பத்தியாகும் மலையின் தலைவன் ஒரு போதும் பிரியாமல் இருக்கனும்

இந்த இரண்டு பாட்டுமே சங்கமம் குறித்து தான்

இது கடவுள் நம்பிக்கை குறித்த பாடல்களை குறித்தானதாயினும் நான் அந்த நோக்கம் குறித்த சிந்தனைகளை ஆராயப் போவதில்லை. மொழி வளம். ஒத்த கருத்துள்ள பாடல்கள் அவ்வளவே

இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஆர். கே நாராயணன் அவர்களின் சிறு கட்டுரைத் தொகுப்பான Writerly Life என்ற தொகுதியில் இருக்கும் God and the Atheist எனும் தலைப்பில் உள்ள கட்டுரையைப் படிக்க சிபாரி செய்கிறேன்

அது கடவுளுக்கும் கடவுள் மறுப்பவர் ஒருவருக்கும் இடையேயான உரையாடல் ஸ்டைலில் எழுதியிருக்கார். அதிலே கடவுள் தான் இருப்பதற்கான சாட்சிகளாக சிலவற்றைச் சொல்வதும் அதை கடவுள் மறுப்பவர் மறுத்து உரையாடுவதுமாக வரும். அதன் இறுதி சில வரிகளை மட்டும் தருகிறேன்

கடவுள் கேட்கிறார்

Are you now convinced of my existence?

கடவுள் மறுப்பவர் சொல்கிறார்

Not Yet. How am I to be sure that our talk is real and not just a piece of self-deception

மீண்டும் கடவுள் கேட்கிறார்

What does it matter; what difference could it make

Sunday, 17 July 2011

திரைச்சீலை - ஜீவா


கே கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் ஓவியர் ஜீவா அவர்களின் திரைச் சீலை புத்தகம் கலந்துரையாடல் நிகழ்ச்சி என ஃபேஸ் புக்கில் அழைப்பு வந்தது. ஜீவா அவர்களை சந்தித்து என் சகபயணிக்கு காந்தி வரைந்து தந்தமைக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காக சென்றிருந்தேன். ஜீவா தனக்கு வழங்கப்பட்ட புகழுரைகள், விமர்சனங்கள் மாற்றுக் கருத்துகள் அனைத்திற்கும் அளித்த பதிலைக் கேட்ட போது எனக்கு நேரு Glimpses of World History(சிறைச்சாலையில் இருந்தவாறு அவர் தன் மகளுக்கு எழுதிய உலக வரலாறு தொடர்பான கடிதக் கட்டுரைகள் ) நூலுக்கு ஜனவரி 1 1934 ல் எழுதிய முன்னுரை நினைவுக்கு வந்தது.


I do not know when or where these letters will be published, or wether they will be published at all, for India is a strange land to-day and it is difficult to prophesy. But I am writing these lines while I have the chance to do so, before events forestall me

சிறைச் சாலையில் குறிப்புகளுக்காக புத்தகங்கள் கிடைப்பதில் இருக்கும் சிரமங்களைச் சொல்லும் நேரு there are no libraries or reference books at the command of the prisoner, and under these conditions to write on any subject, and especially history is foolhardly undertaking.

ஆனாலும் தான் படிக்கும் புத்தகங்களுக்கு நோட்ஸ் எடுக்கும் பழக்கம் இருந்ததால் வரலாற்றினை எழுதும் பணி சிரமமில்லாமல் இருந்ததாக சொல்கிறார் நேரு. இன்றளவும் எனக்கு வரலாற்றில் முதல் ரெஃபரன்ஸ் என்பது அந்தப் புத்தகம் தான்.

ஜீவாவும் இப்படி திரைச்சீலை என தனது ரசனை இதழ் கட்டுரைகள் தொகுக்கப்படும் அது தேசிய விருது பெற்றுத் தரும் என நினைக்கவில்லை என சொன்னார். ஜீவாவின் புத்தகம் எனது ரெபரென்ஸ் புத்தகங்களில் மிக மதிப்புற்குரிய இடம் பெறும்.

நேரு உலக சமூக நிகழ்வுகளின் மீது எத்தனை passion வைத்திருந்தாரோ அதே போல் ஜீவா தான் பார்த்த சினிமாக்களின் மீது வைத்திருந்ததால் தான் இப்படி தகவலாகவும் ரசனையாகவும் படைப்பு வந்திருக்கின்றது

எனக்கு 13 வயது இருக்கும் போது பள்ளிப் பாடத்தில் Andy Roony என ஒரு கதை பாடத்தில் இருந்தது அதில் ஆண்டி ரூனி முட்டாள் ஹீரோ. தப்பு தப்பாக காரியம் செய்வதில் நம்மைச் சிரிக்க வைக்கும் கதாபாத்திரம். சற்றேறக் குறைய மிஸ்டர் பீன் வடிவம் எனச் சொல்லலாம். அதை பள்ளி ஆண்டு விழாவில் நாடகமாக்கினார் ஆங்கில ஆசிரியர். எட்டாம் வகுப்பில் இருக்கும் 5 செக் ஷனிலும் உன்னளவுக்கு ஆங்கிலம் பேச யாருமில்லை என தந்திரமாக பேசி எனக்கு அந்த கதாபாத்திரம் சுமத்தப்பட்டது. விழாவில் அந்த நாடகம்
மேடை ஏறிய போது விழாத் தலமையேற்ற முதன்மைக் கல்வி அதிகாரி திரு இராஜகோபால் விழுந்து விழுந்து சிரித்தார். எனக்கு அந்தப் பாத்திரம் கன கச்சிதமாகப் பொருந்தியதாக சிறப்பு பரிசு கூட வழங்கினார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்தப் புத்தகத்தில் ஜீவா கேலி சித்திரங்கள் என்ற கட்டுரையின் முகப்பில் the most difficult charectar in comedy is that of a fool and must be no simpleton who plays the role என்ற Miguel de Cervantes ஸ்பானிஷ் இலக்கியவாதி Don Quixot எனும் நாவலில் சொன்னதை மேற்கோள் காட்டியிருக்கிறார் அதைப் படிக்கும் போது எனக்கு என் andy roony நினைவுக்கு வந்தது

நடிகர் திலகம் குறித்தும் அவருக்கு பெஸ்ட் ஆக்டர் அவார்ட் தரவில்லை என்ற உங்கள் வருத்தத்திற்கு நான் நண்பர்களுக்கு இதே வினாவுக்கு தந்த பதிலையே சொல்கிறேன். சிவாஜிக்கு ஒரு வருஷம் பெஸ்ட் ஆக்டர் அவார்ட் தந்திருந்தால் அது ஒரு பெஞ்ச் மார்க் ஆகியிருக்கும். அதன் பின்பு அடுத்த வருஷம் யாருக்குத் தருவது. அவருக்கே தான் தரணும்.. இந்த காரணம் தான் அவருக்குத் தரவில்லை

விழாவில் பேசும் போது ஜீவா சொன்ன இன்னொரு வாக்கியம், இந்தக் கட்டுரைகள் என் நினைவில் இருந்து எழுதியவை 20 ம் தேதி வர
வேண்டிய இதழுக்கான கட்டுரையினை நான் 17ம் தேதி தான் யோசித்து டைப் அடிப்பேன் அதனால் தகவக் பிழைகள் இருக்கலாம் என திரு வெ. இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் தனது பத்தாயிரம் மைல் பயணம் கட்டுரைத் தொகுப்பின் முன்னுரையினை, இந்நூலில் இருக்கும் விவரங்களில் சில குறைபாடுகள் இருக்கலாம் ஆனால் விவரங்களைத் தாண்டி விளைவுகள் முக்கியமானவையாக இருப்பதால் அவற்றைப் பதிவு செய்வது நான் பயணம் மேற்கொள்ள ஊக்கியாக இருக்கும் என்பதால் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன‌ என சொல்லி நிறைவு செய்திருப்பார்.ஜீவா சார் உங்கள் திரைச்சீலையும் அப்படித்தான்.

திரை என்பது எதையாவது மறைக்க விரிக்கப்படும் . நீங்கள் விரித்துள்ள திரை மறைந்திருப்பவை வெளியே தெரிய விரிக்கப்பட்டுள்ளது..

நான் முன்பு சொன்னது போல் எனது ரெஃபரன்ஸ் தொகுப்பில் திரைச்சீலை இருக்கிறது என்பதில் எனக்கு தனி பெருமை.

Friday, 15 July 2011

இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – 1


தமிழோவியம் தளத்தில்இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் கட்டுரைத் தொடரின் முதல் பாகம்

http://www.tamiloviam.com/site/?p=1663

Thursday, 14 July 2011

இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள்


தமிழோவியம் தளத்தில், இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் குறித்து, தொடர் கட்டுரைகள் எழுத வாய்ப்பு அமைந்திருக்கின்றது. இந்த வாய்ப்பினை உருவாக்கித் தந்த நண்பர் கணேஷ் சந்திராவுக்கு என் மனமார்ந்த நன்றி.

அக்கட்டுரைகள் தமிழோவியம் தளத்தில் வாரம் ஒரு கட்டுரை என வெள்ளிக் கிழமைகளில் பதிவாகும், படித்து கருத்துரைக்க அன்புடன் வேண்டுகிறேன்

Saturday, 9 July 2011

விக்கிரமாதித்யன் வேதாளம் முதல் கதை


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் அந்த பிரம்மாண்டமான மரத்தினை அணுகி வேகமாக அதன் கிளைகளின் வழியே ஏறி, தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தினை பற்றி இழுத்து, தன் முதுகில் சுமந்து கொண்டு அந்த அடர்ந்த வனத்திலே நடக்கத் தொடங்கினான். வழக்கத்திற்கு மாறாக வேதாளம் மௌனமாக இருந்தது.

"என்ன வேதாளமே ! என்ன பேச்சையே காணோம். இந்த முறை கதையும் வினாவும் இல்லையா"

" அது எப்படி ! நிச்சயம் உண்டு; கவனமாகக் கேள்

புண்ணிய தேசமென்றே பெயர் கொண்ட நாடு அது. அது பல குறுநில இராஜ்ஜியங்களைச் சேர்த்து அமைந்த ஒரு பரந்த தேசம். அந்த தேசத்தினை மனமோகன் என்ற ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஆலோசனை சொல்ல குறு நிலத்து அரசர்கள் தங்கள் பிரதிநிதிகளாக அமைச்சர்களை அனுப்புவது வழக்கம். அப்படியாக தென் பகுதி குறுநில மன்னன் தட்சிணா மூர்த்தி தன் சார்பாக இரண்டு பிரதிநிதிகளை மனமோகனுக்கு ஆலோசனை சொல்லும் அமைச்சர்களாக அனுப்பியிருந்தான். ஒருவன் பெயர் பெரம்பலூரன் மற்றொருவன் பெயர் சூரியப்பேரன்.


அந்த் நாட்டில் நீண்ட நாட்களாக ஒரு வழக்கம் இருந்தது. மக்கள் தாங்கள் தகவல் அனுப்ப தேவையான புறாக்களை இராஜ்ஜியத்திடம்வாடகைக்குப் பெற வேண்டும். இந்நிலையில் சில வர்த்தகர்கள் தாங்களும் புறாக்கள் வளர்ப்பதாகவும் செய்தி சுமக்கும் புறாக்களாக அவை இருப்பதாகவும் அவற்றினையும் மக்கள் வாடகைக்கு துய்த்து பயன் பெறச் செய்தால்

இராஜ்ஜியத்திற்கு மிகவும் உதவியாக இருக்குமெனவும் கருத்து சொல்லியிருந்தனர். இதனை ஏற்பதால் இராஜ்ஜிய கஜானாவுக்கு வருமானம் தடைப்படும் என மனமோகன் யோசித்தான்.

அமைச்சனான சூரியப் பேரன் மனமோகனிடம், "அரசே வர்த்தகர்கள் தங்கள் புறாக்களையும் செய்தி சுமக்கும் பணியில் அமர்த்தினால் கஜானாவுக்கு ஆபத்து உண்டாகும் என தாங்கள் அஞ்ச வேண்டாம். இதற்கு ஒரு உபாயம் இருக்கிறது. தாங்கள் ஆணையிட்டால் நான் விளக்குகிறேன்"

இந்த அணுகுமுறை மனமோகனுக்கு மகிழ்சி தருவதற்குப் பதில் கலக்கத்தையே தந்தது. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தட்சிணாமூர்த்தி அனுப்பும் பிரதிநிதிகள் கஜானா எனும் சொல்லை உச்சரிக்கும் போதே அவர்கள் கண்களில் ஒரு ரகசிய வெறி தெரிவதை மனமோகன் பல முறை கண்டிருக்கின்றான்.

அதுவும் புண்ணிய தேசத்தின் கடல்பரப்பில் பெருங்கப்பல்கள் வந்து செல்ல புது திட்டம் என அந்த மதுக்கூரன் எனும் அமைச்சர் கொண்டு வந்த திட்டமும் அதில் கஜானா பட்ட பாட்டையும் மனமோகனால் மறக்க இயலவில்லை.

ஆனாலும் தட்சிணாமூர்த்தியின் தயவு மனமோகனுக்கு அவசியமாக இருந்தது.

சரி சொல சூரியப் பேரா என சொல்லிவிட்டான்.

அரசே வர்த்தகர்கள் தங்கள் புறாக்களை இராஜ்ஜியத்திடம் தத்து தந்து விடட்டும். அவர்கள் புறா வழி மக்கள் செய்திகளை அனுப்புவதற்கு ஒரு கட்டணம் நிர்ணயம் செய்வோம். அதில் கணிசமான பங்கினை நாம் எடுத்துக் கொண்டு மீதியை வர்த்தகர்களுக்குத் தருவோம். உங்கள் சம்மதம் மட்டும் போதும் என்னிடம் பொறுப்பை தாருங்கள் நான் இதனை செம்மையாக நடத்துகிறேன் என்றான் சூரியப் பேரன்

அவன் செம்மையாக என அழுத்திச் சொன்னது மனமோகனுக்கு மிகவும் கலக்கமாக இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.

மனமோகன் ராஜாங்கத்துக்கு ஒரு இராஜ மாதா இருந்தார். அவள் மனமோகனின் தாயார் இல்லை. மனமோகன் ராஜ்ய பரிபாலனப் பொறுப்பினை ஏற்பதற்கு பல வருடங்களுக்கு முன்பு புண்ணிய தேசத்தினை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவனது தர்ம பத்தினி தான் இப்போதைய இராஜ மாதா. அந்த மன்னன் காலமானபின்பு அவனின் தர்மபத்தினிக்கு மன்னனின் விதவை எனும் மரியாதை இருந்து வந்தது. அவளும் இராஜாங்க காரியங்களில் சில சமயம் தலையிட்டு வந்தாள். ஆனால் இடையில் ராஜாங்கத்தில் ஏற்பட்ட சில குழப்பங்களால்
அவள் இராஜா மாதா ஆவது தான் சிறந்தது என சில ஜோதிடர்கள் சொல்லி விட்டனர். அவளும் இராஜ மாதா ஆகிவிட்டார். இப்போது மனமோகன் பெயருக்குத் தான் மன்னன். அவனை ஆட்டுவிப்பது இந்த இராஜ மாதா தான் என அரண்மனையின் முற்றம் தொடங்கி தேசத்தின் தென் கோடி எல்லையில் இருக்கும் சாமான்யன் வரை எல்லோரும் சில சமயம் அரசல் புரசலாகவும் பல முறை பட்டவர்த்தனமாக வெளிப்படையாகவும் பேசிக் கொண்டனர். இதில் ஓரளவு உண்மையும் இருந்தது. மனமோகன் சூரியப் பேரனின் பேச்சைக் கேட்டு புறாக்கள் திட்டத்தை செயலாக்கி விட்டால் இராஜ மாதாவிற்கு யார் பதில் சொல்வது என்ற கலக்கம் தான் மனமோகனுக்கு ; இதனை சமாளிக்க மனமோகன் ஒரு யுத்தி செய்தான். தென்பகுதி குறுநில மன்னன் தட்சிணா மூர்த்தி, தான், சூரியப் பேரன், இராஜ மாதா இவர்கள் சந்தித்துப் பேசுவது எனவும் அவர்களுக்குள் இந்த புறாத் திட்டம் தொடர்பாக ஒரு சமரச ஒப்பந்தம்
செய்வது எனவும் திட்டமிட்டான். அப்படியே சந்திப்பும் நடந்தேறியது. சமரச ஒப்பந்தமும் உண்டானது.

வர்த்தகர்கள் தங்கள் புறாக்களை மக்கள் பயன்படுத்த ஏதுவாக புறாக்களை வழங்குவது., மக்களிடம் இதற்காக வசூலிக்கப்படும் கட்டணத்தில் கஜானாவிற்கு இவ்வளவு, புறா வழங்கிய வர்த்தகர்களுக்கு இவ்வளவு என விகிதாச்சாரமும் முடிவானது. இதனை மேற்பார்வை செய்யும் பொறுப்பு சூரியப் பேரனுக்கு வழங்கப்பட்டது.

இந்த திட்டம் செயலுக்கு வந்த உடன் புதிது புதிதாக புறா வளர்க்கும் வர்த்தகள் புற்றீசல் போல முளைத்தனர். தங்களையும் இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ள அவர்கள் சூரியப் பேரனின் அரண்மனையினை மொய்க்கத் தொடங்கினர். சூரியப் பேரன் தன்னை அமைச்சனாக்கிய தட்சிணா மூர்த்திக்கு நன்றிக் கடன் பட்டவன். ஆகவே புதிய வர்த்தகர்களை திட்டத்தில் சேர்த்துக் கொள்ள அவர்கள் தட்சிணா மூர்த்தியின் கருணைக்குப் பாத்திரமானால் மட்டுமே சாத்தியம் என சொல்லி விட்டான். இதனால் தட்சிணா மூர்த்திக்கு புறா வளர்க்கும்
வர்த்தகர்கள் மத்தியில் செல்வாக்கு பல மடங்கு பெருகியது. அதனை அவனும் செம்மையாக பயன்படுத்திக் கொண்டான். சூரியப் பேரனாகப் பட்டவன் தட்சிணா மூர்த்தியின் உறவினனுமாவான். இவர்கள் குடும்ப உறவில் ஒரு சிக்கல் உதித்தது. சூரியப் பேரன் தட்சிணா மூர்த்தியின் அன்பை இழந்தான். அவனுக்கு இந்த புறாத் திட்டம் கண்காணிக்கும் பொறுப்பும் கை நழுவியது.

தட்சிணாமூர்த்தியிடம் நீண்ட காலம் விசுவாசமாக் ஓர் அடிமை போல உழைத்த பெரம்பலூரனுக்கு தட்சிணா மூர்த்தியின் கடைக் கண் கருணை கிட்டியது. புறாத் திட்டப் பொறுப்பு பெரம்பலூரன் வசம் வந்தது

புண்ணிய தேசத்தின் நீதி பரிபால முறையில் ஒரு நல்ல அம்சம் இருந்தது. நீதி வழங்க அமர்த்தப்படும் குருமார்கள் அரசுக்கோ அரசனுக்கோ கட்டுப்பட்டவர்கள் அல்லர்.அவர்களுக்கு அரசனையே கேள்வி கேட்கவும் ஏன் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது புண்ணிய தேசத்தில் ஒரு புகழ்பெற்ற விதூஷகன் இருந்தான் . அவன் பெயர் சேவல்கொடி. அவன் பேச்சைக் கேட்டால் கோமாளி போலத் தோன்றும் ஆயினும் மிகச் சிறந்த அறிஞன். அவனுக்கு இந்தப் புறாத் திட்டத்தில் சூரியப் பேரன், மனமோகன், இராஜ மாதா, பெரம்பலூரன், தட்சிணா
மூர்த்தி,எல்லோரும் கஜானவுக்கு வரும் வருமானத்தில் ஏதோ சூது செய்வதாக ஐயம் தோன்றிவிட்டது. கொஞ்சமும் அச்சமின்றி மனமோகனையே நீ தானே அரசன் புறாத் திட்டத்தில் இராஜ்ஜியத்திற்கு வர வேண்டிய வருமானம் எங்கோ களவு போகிறது போல சந்தேகம் கொள்கிறேன். உண்மையைச் சொல் எனக் கேட்டு விட்டான். மனமோகனுக்கு உள்ளூர கலக்கம்.

ஆயினும் காட்டிக் கொள்ளாமால், அப்படியெல்லாம் ஏதுமில்லை நீ உளறுகிறாய் எனச் சொன்னான். சேவல் கொடி பிடிவாதமாக சூரியப் பேரனையும் பெரம்பலூரனையும் விசாரித்துப் பார் எனச் சொன்னான். மனமோகனின் கலக்கம் அதிகமானது. ஆனாலும் அவன் தனது பிடி வாதத்தில் தளரவில்லை.

சேவல்கொடி பொறுத்துப் பார்த்து ஒரு நாள் நீதிபரிபாலன குருமார்களிடமே முறையிட்டு விட்டான்.

குருமார்கள் இதனை என்னவென்று விசாரியுங்கள் என இராஜாங்கத்தின் பிரத்தியேக காவலர்களுக்கு ஆஞ்ஞை செய்தார்கள்.

பிரத்தியேகக் காவலர்கள் ஆய்ந்து விசாரணை செய்து

புறா வழங்க வர்த்தகர்கள் தேர்வானதில் சூது
புறா கட்டணம் வசூலில் சூது என இதில் பலவாறாக சூது நடந்திருக்கிறது என சொன்னார்கள்

மனமோகன் கலக்கமடைந்து சூரியப் பேரனையும், பெரம்பலூரனையும் காரக்கிருஹத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என காவலர்களிடம் சொல்லிவிட்டான்.

காரக்கிருஹம் செல்வதற்கு முன்பு இருவரும் ஆலயத்திற்கு சென்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள் . அப்போது அங்கே கூடியிருந்த ஜனங்களைப் பார்த்து சொன்னார்கள்

நாங்கள் என்ன செய்தாலும் அதை அரசனிடமும் இராஜ மாதாவிடமும் சொல்லி விட்டுத்தான் செய்தோம். அவர்களுக்கு தெரியாமல் ஏதும் செய்யவில்லை

இப்போது விக்கிரமாதித்யா உனக்கு கேள்வி. அரச தர்மம் , இராஜ நீதி இதில் எல்லாம் சிறந்தே நீ உஜ்ஜையினியில் நீ இராஜ்ய பரிபாலனம் செய்கிறாய் ஆதலினால் இந்த கேள்வி கேட்கிறேன். பதில் சொல். இராஜ்யத்தில் பரிபாலனம் செய்யும் அமைச்சர், தளபதிகள், சேனாதிபதிகள் இவர்களின் தவறுகளில் இராஜ்யாதிபதிக்கு பங்கு இருக்கிறதா. இங்கே இந்தக் கதையில் மனமோகன் நடந்து கொண்டது சரியா. இதற்கு சரியான விடை தெரிந்தும் உரைக்காது இருப்பாய் என்றாலும் அல்லது தவறான விடை சொன்னாலும் உனது சிரம் சுக்கல் நூறாக வெடிக்கும்"

விக்கிரமாதித்யன் பதிலுரைக்கத் தொடங்கினான்

" இராஜ்ஜியத்திற்கு துன்பம் என வரும் போது அரசனாகப்பட்டவன் பிறரை விடுவித்து தனனை இரையாக்கவும் தயங்கலாகது. ஒரு கப்பலில் படையினர் பயணம் செய்கையில் கப்பல் மூழ்கிவிடும் எனம் அபாயக் காலத்தில் கப்பலின் தலைவனானவன் பிறரை தப்பிக்க வைத்து தான் மிகக் கடைசியாகவே தப்பிக்க முயல வேண்டும். தேவையெனில் பிராணத் தியாகம் செய்யவும் சித்தமாக இருக்க வேண்டும்.

இராஜ்ஜிய பரிபாலத்தில் பிழை என்றும் ஒழுங்கில் குறை எனவும் வருமேயாயின் அதன் முதல் பொறுப்பினை அரசனே ஏற்பது இராஜ தர்மம் ஆகும். தனது சேனையினைச் சேர்ந்தவர், மந்திரிமார்கள் பிழையிழைத்தாலும் அதன் பொறுப்பு அரசனுக்கே உரியது. அரசனை ஒட்டிதான் இராஜ்ஜிய பரிபாலனம் நிகழ்கிறது. அரசனே சேனைகளை வழி நடத்துகிறான். அமைச்சர்களை கவனிக்கிறான், கண்கானிக்கின்றான். பிரஜைகள் அரசனை தங்களை துன்பத்திலிருந்து ரட்சிக்கும் தெய்வமாகவே மதிக்கின்றார்கள். ஆகவே ஒரு இராஜ்ஜியாதிபதிக்கு
சாதாரண பிரஜையினைக் காட்டிலும் இராஜ்ஜிய சேவையில் பொறுப்பு அதிகமாகிறது. அதன் பொருட்டே அவனையும் அவனது குடும்பத்தாரையும் காத்து நிற்கும் சேனைகளும் சேவகர்களும் அரசனுக்கு ஆபத்து வரும் போது பிராணத் தியாகம் செய்தும் அரசனைக் காக்கின்றார்கள்.

இராஜ்ஜியத்தின் பொறுப்பு என நோக்கும் போது மனமோகன் தனது அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு பொறுப்பேற்பதே முறையாகும். அவனுக்கு அரசனாக பொறுப்பில் தொடர்ந்து இராஜ்ஜிய பரிபாலனம் செய்ய அருகதை இல்லை என்றே சொல்கிறேன். அவனுக்கு நீதி பரிபாலனம் செய்யும் குருமார்கள் இதனையே புத்திமதியாகச் சொல்லியிருக்க வேண்டும். அன்றி மனமோகன் குருமார்கள் மீது மதிப்பு வைத்திருப்பானேயாகில் தானே முன் வந்து முடி துறக்க வேணும்"

விக்கிரமாதித்தியனின் இந்த சரியான பதிலால் உவகை அடைந்த வேதாளம் அவனது முதுகை விட்டு அகன்று பறந்து மீண்டும் அதே மரத்தில் தொங்கியது

Friday, 8 July 2011

அன்பின் மன்மோகன் சிங்


நிறைய சிரமப்படறீங்க போலிருக்கு. ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசி, அவர்கள் அழிச்சாட்டியம் செய்யும் போது அவர்கள் கட்சித்

தலைமையிடம் பேசி சம்மதிக்க வைத்து, ஒரு அமைச்சரிடம் ராஜினாமா கடிதம் வாங்குவதற்குள் எத்தனை சிரமம் பாருங்கள்.

பற்றாக்குறைக்கு இந்த ராஜினாமா பட்டியலில் இவரைச் சேர்க்க வேண்டும் அவரை ஏன் சேர்க்கவில்லை எனக் கேள்விகள் வேறு.

என்னதான் செய்வதென்று குழப்பமாகத்தான் இருக்கும் உங்களுக்கு. ஆனால் மிக சிம்பிளாக ஒரு சொல்யூஷன் இருக்கிறது. அதுவும்

நீங்கள் வகித்துக் கொண்டிருக்கும் பிரதமர் பொறுப்பிலே ( வார்த்தையைக் கவனிக்க பிரதமர் ப்தவி என நான் சொல்லவில்லை பிரதமர்

பொறுப்பிலே !!!) இருந்த லால் பஹதூர் சாஸ்திரியார் செய்து காட்டியது தான். அவரைக் குறித்து தெரியும் தானே.. பின்னே தெரியாமல்

இருக்குமா. அவர் இருந்த ஆபிசுக்குத் தானே தினமும் நீங்களும் போய் வருகின்றீர்கள். அதுவுமில்லாமல் ஆகஸ்ட் 15 செங்கோட்டையில்

கொடியேற்றப் போகும் முன் சாஸ்திரியாரின் நினைவிடத்துக்கும் சென்று விட்டு தானே கொடியேற்றுகின்றீர்கள்

இந்த சாஸ்திரியாகப்பட்டவர் 1951 முதல் 1956 வரை மத்திய சர்க்காரில் ரயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது ஆந்திராவிலே மெஹபூப் நகரில் நடந்த ரயில் விபத்தில் 112 பேர் இறந்தனர். சாஸ்திரி தார்மீகப் பொறுப்பேற்று இராஜினாமா செய்தார். அதனை நேரு ஏற்கவில்லை. பின்னர் அரியலூர் ரயில் விபத்தில் 144 பேர் இறந்தனர். சாஸ்திரியார் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். நேரு இதனை ஏற்றுக் கொண்டார். சாஸ்திரியாரின் பொறுப்புணர்ச்சி அத்தனை அளவுக்கு இருந்தது. நீங்களும் அதே நாற்காலியில் இருக்கின்றவராயிற்றே எனச் சொல்லி வைத்தேன்.

வழக்கமாக என் நண்பர்கள் சர்தார்ஜி ஜோக்குகளை நிறையச் சொல்வார்கள் , ஆனால் சர்த்தார்ஜிகள் உழைப்பாளிகள், உழைப்பினை நம்பி வாழ்பவர்கள் பிச்சை எடுக்கவே மாட்டார்கள் எனச் சொல்லி அந்த சர்தார்ஜி ஜோக் சொன்னவர்களை நான் வாயை அடைப்பேன். இப்போதெல்லாம் அப்படி சொல்ல முடியும் என தோன்றவில்லை

Sunday, 3 July 2011

இட ஒதுக்கீடு-1

நண்பர் ஹரன்பிரசன்னா அவர்களுக்கு நன்றி சொல்லியும் அவருக்கே இந்த பதிவினை சமர்ப்பிக்கவும் செய்கின்றேன்.

பஸ்ஸில் அவர் நண்பர்களுடன் செய்து கொண்டிருக்கும் கருத்து பரிமாற்றங்களை கவனித்த பின்பு இட ஒதுக்கீடு குறித்து சிறிய அளவில்
அறிமுகம் தரலாம் என இதனை எழுதுகிறேன்

1854 ம் ஆண்டு வருவாய் வாரியத்தின் செயல்பாடுகளிலான ஒரு நிலை ஆணையில் காணப்பட்ட அவதானிப்பினைக் கவனிக்கலாம்
"Collectors should be careful to see that the subordinate appointments in their distric are not monopolised by members of a few influential families. Endeavour should always be made to device the principal appointments in each district among the several castes ( Board of Revenue
Proceedings dated 9-march 1854 BSO 128.2 of 1854)

ஆக இட ஒதுக்கீட்டுக்கான முதல் குரல் என இதனைக் கொள்ளலாம்; தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுக்கு என முதலில் வழி வகுத்தது நீதிக் கட்சி. தனது 1920 ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பின் 1921 ல் நீதிக் கட்சியின் தீர்மானம் அரசு பணிகளில் பிராமணர் அல்லாதாருக்கு உள்ள் இடங்கள் அதிகப்படுத்த வேண்டும் எனவும் இதனை வருவாய் துறை தவிர ஏனைய துறைகளுக்கும் விரிவு செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டு முதல் வகுப்பு வாரி பிரதிநிதித்துவ ஆணை பிறப்பிக்கப்பட்டது (அரசாணை எண் 1071 ‍பொதுத் துறை நாள் 4‍ நவம்பர் 1927)

இந்த அரசாணையின் படி இட ஒதுக்கீடு விபரம் வருமாறு

1. பிராமணர் அல்லாதார் : 41.67 %

2. பிராமணர் : 16.67 %

3. ஆங்கிலோ இந்தியரும் கிறிஸ்துவரும் : 16.67 %

3. முகமதியர்கள் : 16.67 %

4. நசுக்கப்பட்டவர்கள் (தாழ்த்தப்பட்டவர்களும் மலைஜாதியினரும் ) 8.33 %


இந்திய விடுதலைக்குப் பின் 1947 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி ஓர் அரசாணை பிறந்தது ( அரசாணை எண் 3437 பொதுத்துறை நாள் 21 நவம்பர் 1947)

இந்துக்களில் பிராமணர் அல்லாதார் எனும் பிரிவினை முதலில் கொண்டு வந்தது இந்த ஆணை தான்

1. இந்துக்கள் பிராமணர் அல்லாதார் 42.86 %
2.பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் 14.29 %
3. பிராமணர்கள் 14.29 %
4. தாழ்த்தப்பட்டவர்கள் 14.29 %
5. ஆங்கிலோ இந்தியர்கள் / இந்திய கிறிஸ்துவர்கள் 7.14 %
6. முகமதியர்கள் 7.14 %

1950 இந்திய அரசமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்த பின் அதன் அடிப்படை உரிமைகள் பிரிவில் இட ஒதுக்கீட்டுக்கான சாத்தியங்கள் இல்லாமையால் அதுவரை அமுலில் இருந்த இட ஒதுக்கீடு பழக்கம் சட்டப்படி செயல் இழந்தது . சம்பகம் துரை ராஜன் என்பவர் சென்னை இராஜதானி அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழி நின்று உரைத்த
தீர்ப்பினால் அதுவரை அமுலில் இருந்த இட ஒதுக்கீடு பழக்கம் சட்டப்படி செயல் இழந்தது

இது அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்திற்கு அடிகோலியது.

அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்து 15 ல் 4 என ஓர் உப பிரிவு சேர்ந்தது

Article 15(4) Nothing in this article or in clasue 2 of Article 29 shall prevent the state from making any special provision for the advancement of any socially and educationally backward class citizens or for the Scheduled caste an Scheduled Tribes

இந்த திருத்தத்திற்கு பிறகு 1951 ல் இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை அரசு வெளியிட்ட ஆணை எண் 2432 நாள் 27 செப்டம்பர் 1951

இதன்படி இட ஒதுக்கீடு

1. தாழ்த்தப்பட்டவர் மலைசாதியினர் 15 %
2. பிற்படுத்தப்பட்டவர்கள் 25 %
3 பொது தொகுப்பு 60 %

1954 மொழிவாரி மாநிலப் பிரிவுக்குப் பின் இந்த விகிதம் சற்று மாற்றி அமைக்கப்பட்டது


1. தாழ்த்தப்பட்டவர் மலைசாதியினர் 16 %
2. பிற்படுத்தப்பட்டவர்கள் 25 %
3 பொது தொகுப்பு 59 %

1969 ல் சட்ட நாதன் தலைமையில் உருவான முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தனது அறிக்கையினை 1970ல் வழங்கியது .

அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு விகிதங்கள் திருத்தப்பட்டன‌;அதற்கான அரசாணை நாள் 7 ஜூன் 1971ல் வெளியானது அரசாணை எண் 695 சமூக நலத்துறை

அதன்படி

1. தாழ்த்தப்பட்டவர்கள் 18%
2.பிற்படுத்தப்பட்டவர்கள் 31 %
3. பொது தொகுதி 51 %

பிற்படுத்தப்பட்டோரில் ஆண்டு வருமானம் 9000க் கும் கீழே உள்ளவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடு என எம். ஜி. ஆர் ஆட்சியில்

ஆணையிடப்பட்டது அரசாணை 1156 சமூக நலத் துறை நாள் 2 ஜூலை 1979. பின்னர் இதற்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வரவே இது கைவிடப்பட்டது

1989 ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டவரில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என உருவாக்கி அவர்களுக்கு தனியாக 20 சதவீதம் ஒதுக்கீடு

செய்யப்பட்டது அரசாணை 242 பிற்படுத்தப்பட்டோர் நலம் நாள் 28 மார்ச் 1989

இந்த ஒதுக்கீடு சதவிகிதங்களைப் பார்க்கையில் ஒன்று கண்கூடாகத் தெரியும். யாருக்காவது ஒதுக்கீடு செய்வதெனில் பிற பிரிவுகளில்

கை வைப்பதில்லை ; பொது தொகுதியைக் குறைத்து அதை குரங்கு ஆப்பத்தினைப் பிய்த்து பங்கிடுவது போல செய்தால் தீர்ந்தது

இந்த ஒதுக்கீடு சதவிகிதங்களைப் பார்க்கையில் ஒன்று கண்கூடாகத் தெரியும். யாருக்காவது ஒதுக்கீடு செய்வதெனில் பிற பிரிவுகளில் கை வைப்பதில்லை ; பொது தொகுதியைக் குறைத்து அதை குரங்கு ஆப்பத்தினைப் பிய்த்து பங்கிடுவது போல செய்தால் தீர்ந்தது

1953 ல் அமைக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் அறிக்கையினை பரிசீலித்த மத்திய அரசு சொன்னதைக் கவனிப்போம்

Government of India also consider that while the state government have discretion to choose their own criteria for defining backwardness, in the view of the government of india it would be better to apply economic tests that to go by caste

ஆனால் மண்டல் கமிஷனின் அறிக்கையில் .. But the substitution of caste by economi tests will amount to ignoring the genesis of social backwardness in the Indian society என்பதாக சொல்லியுள்ளது (Mandal Commission Report Volume 1 chapter 1 page 4)

அதிக மதிப்பெண் பெறும் உயர் சாதி மாணவன் இடம் பெறாது போவதையும் அதே சமயம் மிக குறைந்த மதிப்பெண் பெறும்

பிற்படுத்தப்பட்ட மாணவன் இடம் பெற்றே ஆக வேண்டும் என பரிந்துரைக்கும் மண்டல் கமிஷனின் வாதம் எப்படித் தெரியுமா

அதிக மதிப்பெண் பெறும் உயர் சாதிப் பையன்

அவன் நகரில் வசிக்கிறான்
அவன் பெற்றோர் பட்டதாரிகள் அதுவுமில்லாது அரசு பணியில் இருப்பவர்கள்
அதிகாலை அலாரம் வைத்து அவனை எழுப்புகிறார்கள்
எழுந்ததும் ஆவி பறக்கும் காபி தருகின்றனர்
பின்னர் நாற்காலியில் அமர்ந்து மேசையில் வைத்து மின் விளக்கு ஒளியில் படிக்கின்றான்
ஐயம் உண்டாயின் பெற்றோர் துணை செய்கின்றார்கள்
கூப்பிடும் தூரத்தில் பள்ளி
பள்ளியில் முதல் மணி அடித்த உடன் புறப்பட்டால் போதும் பள்ளிக்கு சென்றுவிடலாம்
அவன் உழுவதில்லை; ஆடு மாடுகளுக்கு தீனி வைப்பதில்லை
தனிப் பயிற்சியான டியூஷன் வேறு

ஆனால் பிற்படுத்தப்பட்ட சாதிப் பையனைப் பாருங்கள் என கேட்கும் மண்டலை

என்ன சொல்வது. அவர் அடுக்கிய எல்லா கேள்வியும் பொருளாதாரம் சார்ந்தது தான் என அவருக்குத் தெரியாதா

மண்டல் கமிஷனின் பக்கம் பக்கமான அறிக்கையில் நல்ல ஆங்கிலம் இருக்கிறது. லாஜிக் இருக்கிறதா எனத் தேட வேண்டியிருக்கிறது.

எங்கள் பல தலைமுறைக்கும் முந்திய சந்ததியினர் அடிமைப்படுத்தப்பட்டனர் ஆகவே எங்களால் மார்க் வாங்க இயலாது. நாங்கள் குறைவாகவே மார்க் வாங்குவோம் ஆகவே எங்களுக்கு இதெல்லாம் வேண்டும் என வசதி வந்த பின்பும் கேட்டுக் கொண்டே இருப்பவர்கள் இருக்கும் வரை குரங்கு ஆப்பம் பிய்த்து எச்சல் ஆப்பத்தை பங்களித்துக் கொண்டே தான் இருக்கும்

(உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டம் இடுபவர்கள் கவனத்திற்கு.. ஆராய்ச்சி, சர்வே, நீதி மன்ற விவாதங்கள், புள்ளி விபரங்கள் என இன்னும் விரிவான் முறையில் தொடர எனக்கு வாய்ப்பளித்தவராவீர்கள்., )


இலங்கை‍ -தனி ஈழம்- தமிழ்நாடு


சமீபத்தில் சென்னைக் கடற்கரையில் இலங்கைத் தமிழர்கள் நினைவாக மெழுகுவர்த்தி சுடர் ஏந்திய நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. ஆங்கே எதிர்பார்த்தது போல விடுதலைப் புலிகளை ஆதரித்த கோஷங்கள் கேட்டன. புலிக் கொடி ஐநாவிலே விரைவில் பறக்கும் எனும் தனி நாடு கோரும் பேராவல் மிக்க குரலும் அதிலே கலந்திருந்தது.

இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் பெருமளவில் உயிரிழந்தமைக்கு அங்கிருக்கும் அரசின் போர் நடவடிக்கைகள் மட்டுமே காரணம் எனும் நினைப்பும் யூகமும் பரவலாக இருக்கின்றது. ஆனால் ஒரு யாதார்த்தத்தினை மறந்து விட்டதன் விளைவும் அந்த மரணங்களுக்கு காரணமாக இருக்கின்றதென்பதனை மறந்துவிடலாகாது

தமிழீழம் எனும் மாயக் கனவே அத்தனை உயிர்ப்பலிக்கும் காரணம். இதனை மாயக்கனவு என நான் சொல்வதால் சிலர் காயப்படலாம்.

ஆனால் இந்திய கடல் எல்லையில் ஆயுதம் வழியாக ஒரு நாடு உருவாக்கிட இந்தியா துணையிருக்கும் எனும் சாத்தியமில்லாத அம்சத்தினை துணை கொண்ட போராட்டம் புலிகளின் போராட்டம். . புறத்தே இருந்து ஆதரவு பெறாது தங்களால் இலங்கை அரசினை எதிர்த்து தனி நாடு அமைத்து அதனை நிர்வகித்துக் கொள்ளும் நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததில்லை.

இன்றைக்கு அங்கே தமிழ் பேசும் மக்கள் தங்கள் உரிமைகளை பேசிப் பெறுவதற்கு ஓர் அரசியல் ரீதியான அமைப்பினை அமைத்துக் கொள்ளும் சாத்தியத்தினை முற்றிலும் இல்லாமல் செய்து விட்டது புலிகளின் போராட்டம்

இன்றைக்கு நம்பிக்கை எந்த அளவில் இருக்கிறதென்றால்,இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து பல நாடுகளில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் குரல் எழுப்பி, அதனால் ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் நீக்கப்பட்டு பின்னர் புதிய தலைமை அமைந்து.... கானல் நீரினும் மாயை கொண்ட அம்சமாக அல்லவா இருக்கின்றது.

இந்த கானல் நீரையும் தங்கள் தாகம் தணிக்கும் நீராக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவ்வப்போது நம்பிக்கை துளிர்க்க, செய்தி

ஊடகங்கள் ஐநா அறிக்கை... அவர் கண்டனம் இவர் கண்டனம் என செய்திகளை வாரி வழங்குகின்றன. இது போன்ற செய்திகளை கவனிப்பவர்கள் கவனத்திற்கு இரண்டு முக்கிய அறிக்கைகளை முன் வைக்கலாம்

Francisians International எனும் அமைப்பு ஐநாவுக்கு அளித்த அறிக்கை. அதனை இந்த சுட்டி வாயிலாக வலை ஏற்றியுள்ளேன்.


புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்த போராட்டத்தின் போது புலிகளின் பிடியிலிருந்து தப்பித்து முகாம்களுக்கு செல்ல முயன்ற தமிழர்கள் புலிகளால் தடுக்கப்பட்ட உண்மை அந்த அறிக்கை சொல்லுகிறது ; அப்படி தப்பிச் சென்றவர்களை சுட்டுக் கொன்ற விபரத்தினையும் Asian Forum For Human Rights and Development எனும் அமைப்பு ஐநாவுக்கு அளித்த அறிக்கையில் (இந்த சுட்டியில்
வலையேற்றியுள்ளேன்) விபரமாக சொல்லியுள்ளது. http://www.scribd.com/doc/59211011/G0911990

புறநானூற்றுப் பாடல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை; காரணம் நாம் எப்போதும் தமிழ்ப் பெருமை பேசுவது வழக்கம்

ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்


பசுக் கூட்டம், பார்ப்பனர், பெண்கள், பிணியால் பீடிக்கப் பட்டவர், மறு உலகம் (அதான் சொர்க்கம்/ நரகம் )(இது தான் தென்புலம்) போய்ட்டவங்களுக்கு செய்ய வேண்டிய கடன்களோ செய்ய் பிள்ளையே இல்லாதவங்களையும் போர் நடக்கும் இடத்திலிருந்து விலக்கி வைப்பர்

ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதை நாமெல்லாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம்.

ஒசாமாவின் அல்கொய்தா குறித்த சிறந்த வரலாற்றுப் பார்வையும் பதிவும் செய்திருக்கும் ப்ரிடிஷ் பத்திரிகையாளர் Glen Jenvey சொல்வதைச் சற்று கவனிக்கலாம் ( பார்க்க இந்த சுட்டி)

http://www.asiantribune.com/index.php?q=node/4518

சர்வதேச அளவில் பயங்கரவாதத்தின் உச்சம் என அறியப்பட்ட அல்கொய்தா விடுதலைப் புலிகளின் வழி நின்று பயங்கரவாதம் செய்யும்

சங்கதியை அவர் தெரிவிக்கும் எச்சரிக்கை செய்தி.

இஸ்லாமிய உரிமை , ஜிகாத் எனும் பெயரில் அல்கொய்தா செய்வதும் தமிழ் தமிழர் எனும் பெயரில் புலிகள் செய்ததும் ஒன்றே... தீவிரவாதம்.

புலிகளையே இன்னும் தங்கள் காவலர்களாக ஏன் காவல் தெய்வங்களாக நினைக்கும் இலங்கை வாழ் தமிழர்களும் அவர்களுக்கு இங்கே ஆதரவுக் குரல் எழுப்பும் அன்பர்களுக்கும் மீண்டும் நினைவு செய்ய விரும்புவது

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே இருக்கும் பரந்த கடற்பரப்பில் மட்டும் உப்பு கலந்திருக்கவில்லை. இந்தியா மனிதாபிமான அடிப்படையில் செய்த / செய்து கொண்டிருக்கும் அத்தனை உதவி நிவாரணத்திலும் உப்பு கலந்திருக்கிறது; அந்த உப்புக்கு எதிர்மறையாக நடந்து கொண்ட புலிகளுக்கு ஆதரவான குரல் இலங்கைத் தமிழரின் குரலில் கலந்திருக்கின்றதைக் கவனித்தே இருக்கின்றோம்.

அன்பின் வடிவமான பௌத்தத்தினையும் நாங்களே உங்களுக்கு வழங்கினோம். எங்களுக்கு பௌத்தம் மட்டுமே தரத் தெரியும் என நினைக்க வேண்டாம்