Sunday, 23 October 2011

Carl Friedrich Gauss

ஒரே விஷயத்தைப் படமாகவும் எழுத்தாகவும் ஆடியோ வீடியோவாகவும்

கார்ல் ப்ரெடிரிக் கௌஸ் குறித்து பத்ரி சேஷாத்திரியின் பதிவு

கௌஸ் 1 + 2 + 3 + 4 + 5 என்பதான தொடர் எண்களின் கூட்டலைக் கண்டுபிடிக்க கையாண்ட எளிமையான வழி

குறித்து மிகவும் எளிமையாக விளக்கும் பதிவு

இதனையே Edward De Bono தனது Simplicity புத்தகத்தில் படமாக விளக்கியது. இங்கிருக்கும் படம்

கார்ல் ப்ரெடரிக் குறித்து திரு இறையன்பு அவர்கள் தனது உரையொன்றில் குறிப்பிட்டு சுவையாக குறிப்பிடுவது
கார்ல் ப்ரெடரிக் கௌஸ் குறித்து திரு இறையன்பு அவர்கள் தனது உரையொன்றில் சுவையாக குறிப்பிடுவது


Saturday, 22 October 2011

நாதஸ்வர போட்டிக் கதை


ரங்கசாமி அந்த நாதஸ்வர போட்டிக்கு தன்னைத் தானே நடுவராக நியமித்துக் கொண்டார்.

இப்படி தீடீரென ரங்கசாமியில் தொடங்கினால், புரிவதற்கு கஷ்டமாக இருக்கும். விஸ்தாரமாகச் சொல்கிறேன்.

ரங்கசாமிக்கு வாத்திய இசையில் ப்ரேமை அதிகம். அதுவும் நாதஸ்வர வாத்தியத்திலே மோகம் கொஞ்சம் அதிகம். இதற்கு காரணமிருக்கின்றதுJustify Full
சில காலத்துக்கு முன்பு அவருக்கு, மோகனசுந்தரம் எனும் வித்வானுடன் சிநேகிதம் உண்டானது. இந்த மோகன சுந்தரமாகப்பட்டவர் தன்னை சிக்கல் ஷண்முகசுந்தரத்துக்கு நிகராக நினைத்து, நாதஸ்வரம் வாசிக்கப் பழகினார். நாதஸ்வரம் செய்த புண்ணியமா, அல்லது வேறு என்ன காரணமோ அவருக்கு சுத்த சாஸ்திரிய சங்கீதம் கைவரவில்லை. ஆனாலும் எப்படியோ வித்வான் எனும் அந்தஸ்தினை தன்னுடன் ஒட்டிக் கொண்டார். சங்கீதம் கைவரவில்லை என்பதற்காக மோகன சுந்தரம் மனசு தளரவில்லை. கலியாணத்தில் நாதஸ்வரம் வாசிப்பவர்களுடன் ஏற்பாடுகள் செய்து முகூர்த்த மாசத்திலெல்லாம் எல்லா முகூர்த்த நாளிலும் ஏதானும் ஒரு கலியாணத்தில் வாசிக்க சான்ஸ் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டார்.

கலியாணத்துக்கு வருபவர்களில் யாரும் சங்கீதப் ப்ரேமை கொண்டு, இன்ன கீர்த்தனை வாசி.. இப்படி நிரவல் செய் என் விருப்பம் சொல்வதில்லையாதலின், மோகன சுந்தரத்தின் நிஜமான சாஸ்திரிய சங்கீத பலம் இன்னதென்று தெரியாமல், ஒரு வழியாக கோஷ்டி கானமாக போய்க் கொண்டிருந்தது. எப்போதாவது, யாராவது சங்கீத அபிமானி இவரிடம் ஒரு ராகத்தை சொல்லி வாசிக்க முடியுமா எனக் கேட்டால், இவர் சாமர்த்தியமாக , “நான் ரகுபதி ராகவ ராஜாராம்” என காந்திக்கு ப்ரீதியான பாட்டை வாசிக்கின்றேனே” என்று சொல்லி வாசித்து சமாளிப்பார்.. இதுமட்டும் எப்படியோ அந்த ராகவன் கருணையால் இவருக்கு சித்தித்து விட்டது. நாதஸ்வரக் கோஷ்டியில் இருக்கும் இரண்டு பிரதான இடத்திலிருந்து இவர் வாசிப்பதில்லை. பெரும்பாலும் ஒத்து ஊதுவது தான் இவர் வேலை

மோகன சுந்தரத்து தனக்கு இன்னது தெரியும் இன்னது தெரியாது என்ற பேதம் தெரியாது.. அல்லது யார் கவனிக்கப் போகின்றார் எனும் அசட்டு தைரியமும் ஜாஸ்தி.. எங்கே கலியாணக் கச்சேரிக்குப் பயணமானாலும், அங்கே சுத்த ஸாவேரி, பந்துவராளி என பேசுவார். இவரது பேச்சிலே ஒரு ரீதியான பிரமிப்பு உண்டு.. அது தான் இவரோட பலம்.. மத்தபடி சங்கீதமானது இவருக்குத் ரொம்ப தூரம்

இவர் தனது கோஷ்டியுடன் வெளியூர் கலியாணத்திற்கு ரயிலில் பிரயாணித்துக் கொண்டிருந்தார். எதிர்சாரியில் மிக அம்சமாக வேஷ்டி, சட்டை அங்கவஸ்திரம் என பளீரிடும் லட்சணங்களுடன், ஒருவர் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் நமது மோகன சுந்தரம் பேச்சுக் கொடுத்தார்.

" அடியேன்.. மோகன சுந்தரம்.. நாதஸ்வர வித்வான்.. சார் என்ன பேர்னு நான் தெரிஞ்சுக்கலாமா”

அந்த புதிய மனுஷ்யன், இவரை ஒரு தரம் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு, ‘ என் பேர். ராமசந்திரன்..”

”சார் என்னவா இருக்கீங்க”

அவர் ஒரு பிரபல கலாசாலையின் பெயரைச் சொல்லி அங்கே சங்கீதம் போதிக்கும் உத்தியோகத்தில் இருப்பதாகச் சொன்னார்.

வழக்கமாக காதில் கேட்கும் தவில் சப்தம் இந்த முறை , மோகன சுந்தரத்திற்கு தொண்டையில் தொடங்கி, அடி வயிறுக்கு சென்று அங்கே சொற்ப நேரம் தனி நடை வாசித்து, பின் அந்தரங்கப் பாகத்தில் மெதுவாக வாசிப்பது போலிருந்தது.

’நீங்க எங்கே நாதஸ்வரம் அப்யாசம் செய்தீங்க “ ராமசந்திரன் கேள்வி, மோகனசுந்தரத்தின் அந்தரங்க பாகத்தில் இருந்த தவில் சப்தம் இப்போது ஹிருதயத்துக்குப் பக்கத்தில் கேட்பது போலிருந்தது..

வேர்வையைத் துடைத்தபடி, “ எனக்கு பல குரு உண்டு” என்பதான பொது பதில் போட்டு சம்பாஷணையினை நிறுத்தலாம் என்று பார்த்தார்.. ராமசந்திரன் சிரித்துக் கொண்டே, “நாதஸ்வரம் மட்டும் தானா வாய்ப்பாட்டும் உண்டா” எனக் கேட்டு வைத்தார்.

இதற்கு சங்கீத ரீதியாக ராகம், ஸ்வரம் என தனக்கு தெரியாத சங்கதியெல்லாம் மோகன சுந்தரம் உளறி, அவர் உளறுகிறார்.. கேள்விக்கு சரியாக பதில் சொல்லவில்லை என ராமசந்திரன் சுட்டிக் காட்ட ஏக ரகளையானது.

இந்த ரயில் பயணத்தினை அந்த வாத்திய கோஷ்டிக்கு அமைத்துத் தந்த புரவலரான ரங்கசாமியும் அங்கே இருந்தார். அவருக்கு மோகன சுந்தரம் இப்படி, சிக்கிக் கொண்டதில் ஏக வருத்தம். ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து ராமசந்திரனைப் பார்த்து, “இவ்வளவு பேசுகின்றீரே.. உமக்கு வாத்தியம் வாசிக்கத் தெரியுமோ.. அதுவும் எமது மோகன சுந்தரத்தின் வாசிப்புக்கு பதில் வாசிப்பு செய்யணும்.. ரெடியா” எனக் கேள்வி போட்டு, மோகன சுந்தரத்தை கர்வமாகப் பார்த்தார்.

மோகன சுந்தரம், தனது குல தெய்வம் , எப்படியாகினும் ராமசந்திரன் நாவில் இறங்கி போட்டிக்கு தயாரில்லை எனச் சொல்ல வைக்கனும் என வேண்டிக் கொண்டார். குலதெய்வம் அவருக்கு ஒத்தாசை செய்யவில்லை.

தனக்கு முறையான வாத்தியப் பயிற்சி உண்டெனவும், ஆகவே போட்டிக்கு தயார் எனவும் சொல்லி, ரங்கசாமியே போட்டியினை ஏற்பாடு செய்யலாம் எனவும் சொல்லி, ராமசந்திரன் அந்த சம்பாஷணைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்,

“நான் போட்டி ஏற்பாடு செய்துவிட்டு உங்களுக்கு தகவல் தருகிறேன்” எனச் சொல்லி ரங்கசாமி நிறுத்திக் கொண்டார்.. ஆனால் அந்தரங்கத்தில் தானே இந்தப் போட்டிக்கு நடுவராக இருக்கலாகும் என நினைத்துக் கொண்டார்.

இப்படியாக இந்த சங்கீத வாத்திய யுத்தம் நிச்சயமாகி, அதற்கு ரங்கசாமி தன்னையே நடுவராக நியமித்துக் கொண்ட பூர்வ கதை இதுவே.

போட்டி வெகு விமரிசையாக நடந்தது. முறையான சங்கீத அப்பியாசம் உள்ளபடியால், ராமசந்திரன் எந்த ராகம் சொன்னாலும் அவரது வாத்தியம் அவர் சொல்படி கேட்டது. தினசரி சாதகம் இருப்பதால், ராகத்தின் லஷணங்களை கேட்போருக்கு புரியும்படி வாசித்துக் காண்பிக்க அவருக்கு சாத்தியமானது.

மோகன சுந்தரம், தனது வேர்வையினைத் துடைத்துக் கொள்ளவே நேரம் போனது.. எதிரே வாசிப்பவரின் சாயலைப் பிடித்து வாசித்து விடலாம் என ரொம்பவும் பிரயத்தனப்பட்டார். சாத்தியமாகவில்லை. எந்த ராகத்துக்கு என்ன ஆரோகணம், அவரோகணம் என ஸ்வர வரிசை தெரியாததால் காப்பியடித்து வாசித்தாலும் அவரது வாசிப்பு அபஸ்வரமாகவே தொனித்தது.. பார்த்தார் மோகன சுந்தரம்.. தனக்கு மிகவும் கைவந்ததும், பரிச்சயமானதுமான ஒத்து ஊதுவதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். வாயிலே வைத்த வாத்தியத்தை நெடு நேரம் எடுக்காது, தொடர்ந்து ’ஹொய்ங்” என்பதான சப்தம் கூட்டி ஊதத் தொடங்கினார். அவருக்கு எப்போது இன்னும் மூச்சுக் கட்டுவது பிராண அபாயத்தில் கொண்டு விடும் என்றாகிறதோ அது வரை ‘ஹொய்ங்” கை நிறுத்தவில்லை.. அவர் அப்படி ஒரு கட்டத்தில் அதை நிறுத்தினது தான் தாமதம், ரங்கசாமி தனது தீர்ப்பைச் சொல்லிவிட்டார்..

“சபையோரே.. இதுவரை இந்த இரண்டு வித்வான்களும் வாசித்ததனைக் கேட்டீர்கள்.. ஆனால் ராமசந்திரன். இந்த ராகம் அந்த நடை என சொல்லி வாசித்தாலும். அவரால் நமது மோகனசுந்தரம் இப்போது வழங்கியது போல நிறுத்தாமல் இசை வழங்க இயலவில்லை. ராமசந்திரன் வாசிப்பிலே ஆங்காங்கே இடைவெளி விட்டு வாசித்தார் அது இசையாகாது ஆகவே இந்த போட்டியில் நமது மோகன சுந்தரமே வென்றவராகிறார்”

ராமசந்திரன் தனது உத்யோகத்தை ராஜினாமா செய்துவிட்டு.. வட தேசத்தில் காவி உடை தரித்து இலக்கில்லாமல் திரியும் தேசாந்திரியாக மாறக் கூடும் என யூகமாகிறது


Friday, 21 October 2011

டைரிக் குறிப்பு-3


அரசு சார்ந்த பணியில் இருக்கும் போது எத்தனையோ நிகழ்வுகளில், மிகவும் சோர்ந்து போயிருக்கின்றேன். இந்த ஒரு நிகழ்வில் நான் கற்றுக் கொண்டது ஒன்றை..

இந்த நிகழ்வினைத் என் டைரியிலிருந்து தேடிப் பதிவு செய்கிறேன்

நாம் எந்த தேசத்தில் இருந்தாலும், ஒருவரின் திருமணத்தில் மற்றொருவர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். மற்றொருவருக்கு திருமணம் ஆகியிருந்தால் அவர் மனைவியுடன் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும்.. எனக்கு என் பள்ளித் தோழன் குமரவேலுவுக்கும் இடையே 8 ம் வகுப்பில் உடன்படிக்கை. அந்த நாளில் அவன் தந்தைக்கு வங்கிப் பணியில் ப்ரமோஷன் கிடைத்து

வட இந்தியாவுக்கு குடிபெயர்ந்து , அங்கேயே பல வருஷம் இருந்தான். அவனும் வங்கிப் பணியில் சேர்ந்து விட்டான், அவனுக்குத் தான் கலியாணம். எனக்கு கலியாணம் ஆகி என் பெண்ணுக்கு ஒரு வயதும் பூர்த்தியாகிவிட்டது

தன் கலியாணத்தை திங்கட்கிழமை சென்னையில் வைத்திருந்தபடியால், ஒரு நாள் காஷுவல் லீவு தாருங்கள் என எனது செயற்பொறியாளரிடம்மன்றாடி சாங்கஷன் வாங்கியிருந்தேன்

வெள்ளிக்கிழமையன்றும் திங்கட்கிழமையன்றும் லீவு போடுகிறவன் வேலைக்கு லாயக்கான்வன் இல்லை என்பது அவரது அபிப்ராயம்.

நான் அவர் சொல்பேச்சுக் கேட்காத பிள்ளை என்று அவருக்கே ஓர் அபிப்ராயம் (அதில் ஓரளவு உண்மை இருக்கின்றதென என் மனசாட்சி சொல்கிறது). திங்கட்கிழமை லீவு கேட்டேன் என்பதால் என்னை சனிக்கிழமை நடுராத்திரி வரை ஆபிசில் இருக்க வைப்பார் எனத் தெரியும். அது போலவே செய்தார்

ஞாயிறு ராத்திரி, திருச்சியிலிருந்து ராக்போர்ட் எக்ஸ்பிரசில் சென்னைக்கு செல்ல எனக்கு, என் மனைவிக்கு டிக்கட் வாங்கியிருந்தேன்.

இந்த ட்ரெயினில் பிரயாணிக்கிறேன் என்பதை எனக்கு லீவு சாங்ஷன் செய்த அதிகாரியிடம் ஏன் சொல்ல வேண்டும்.. ஆனாலும் சொல்லியிருந்தேன்..

திட்டமிட்டபடி ராக்ஃfபோர்ட் எக்ஸ்பிரசில் எங்களது பயணம் தொடங்கிவிட்டது.

நட்ட நடு நிசியில் என்னை டிக்கெட் பரிசோதகர் எழுப்பினார். குறைந்த விளக்கு வெளிச்சத்தில் டயம் பார்த்தேன். நள்ளிரவு தாண்டி 1.30 என்றது கைக்கடிகாரம்.
என்ன்வென்று கேட்டேன். வண்டி விழுப்புரத்தில் நிற்பதாகவும், மிகவும் அவசரம் என்று சொல்லி என்னைக் கேட்டுக் கொண்டு , ராதாகிருஷ்ணன் என்று ஒருவர் ப்ளாட்பாரத்தில் நிற்பதாகவும் சொன்னார். எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. ஜன்னல் ஷட்டரை உயர்த்தி, வெளியே பார்த்தேன். எங்கள் டிபார்ட்மெண்ட் விழுப்புரம் யூனிட் ஜூனியர் என்ஜிநியர் நின்று கொண்டிருந்தார். அந்த அர்த்த ஜாம வேளையிலும், “வணக்கம் சார்.. ஒன்னும் பதட்டப்படாதீங்க.. உங்க ஃபேமிலியில் எல்லாரும் நலம். இது ஆபிஸ் விஷயம்..”

சங்கதி இது தான்.. நான் வேலை செய்யும் டிபார்ட்மெண்ட் மூலம் , நான் தலைமை ஏற்றுள்ள யூனிட் பொறுப்பெடுத்து நடந்து வரும் மிகப் பிரபலமான ப்ராஜெக்ட் ஸ்தலத்துக்கு, அந்த துறையின் மந்திரி விஜயம் செய்கிறார். ஆகவே நான் உடனே எனது ஹெட்குவார்ட்டர்ஸ் திரும்பச் சொல்லி மங்களச் செய்தி. பிரயாணத்தைத் துறந்து, மனைவி, கை குழந்தை சகிதம் விழுப்புரம் ஸ்டேஷனில் நிற்கிறேன்.

”சார், புதுக்கோட்டை ஈ.ஈ தான், இந்த ட்ரெயினில் நீங்க சென்னை போறதா சொல்லி, ராதாகிருஷ்ணன், எப்படியும் மௌளீயைக் கண்டுபுடிச்சி அவரை திருப்ப புதுக்கோட்டை அனுப்புங்க. அவர் காலைல பத்து மணிக்கு சைட்ல இருந்தாகனும். மினிஸ்டர் விசிட்னு சொல்லி, நீங்க விழுப்புரத்தில் இறங்கின உடனே, அவர் வீட்டு நம்பருக்கு உங்களை போன் செய்யச் சொன்னார்.. அதோ எஸ்.டி.டி பூத்”

“சார் மௌளீ பேசறேன். விழுப்புரத்திலிருந்து”
“மௌளீ .. ரொம்ப சாரி.. இப்படி உன்னைத் தொந்தரவு செய்றதுக்கு.. மினிஸ்டர் புதுக்கோட்டைக்கு ஒரு கல்யாணத்துக்கு வரதா ராத்திரி 11 மணிக்குதான் கலெக்டர் கேம்ப் க்ளார்க் போன் செய்தார்.. உடனே மினிஸ்டர் பி ஏ கிட்ட நானே போன் செய்து பேசினேன். மினிஸ்டர் ப்ராஜக்ட் சைட்டுக்கு வர சான்ஸ் இருக்கிறதா சொன்னார்”

“சார்... உங்களுக்குத் தெரியாதா.. அந்த ப்ராஜக்ட் சைட்லே நிறைய டிஸ்ப்யூட் இருக்குனு. அதனாலே வேலை நடக்காம நிக்குது.. அந்த இடம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தம்னு முன்சீப் கோர்ட்லே ஸ்டே வாங்கிருக்காங்க. அந்த சைட்டுக்கு ஏன் மினிஸ்டர் வரணும்”

“ இதெல்லாம் நடுராத்திரி மினிஸ்டர் பி ஏ கிட்ட சொல்ல முடியுமா. அதுவுமில்லாம, ஸ்டே வாங்கினவங்க கிட்ட மினிஸ்டர் பேசினாக் கூட அவங்க கேஸ் வாபஸ் வாங்க சான்ஸ் இருக்கு.. நீங்க திரும்பி வாங்க.. பஸ்லே வந்து சிரமப்பட வேண்டாம். ராதாகிருஷ்ணன் கிட்ட சொல்லிருக்கேன்.. டாக்சி ஏற்பாடு செய்யச் சொல்லி.. நான் காலைல 8 மணிக்கெல்லாம் ட்ராவலர்ஸ் பங்களாவிலே இருப்பேன்.. நீங்க அதுக்கு முன்னாலே வந்தா என் வீட்டுக்கு வந்துடுங்க.. சேர்ந்து போய்டலாம்.. மினிஸ்டருக்கு சால்வை.. மத்த பார்மாலிட்டஸ் எல்லாம் நான் ஏற்பாடு செய்துடறேன்”

என் மனைவிக்கு ஒன்றுமே புரியவில்லை.

“சார் மணி 2 ஆகுது.. பக்கத்துல தான் என் வீடு.. நீங்க ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு 3 மணிக்குப் புறப்பட்டாலும் 7 மணிக்குள்ள புதுக்கோட்டை போய்டலாம்”

“இல்லை ராதாகிருஷ்ணன்.. இப்பவே புறப்படறேன்.. நீங்க டாக்சி கொண்டு வாங்க”

“டாக்சி எடுத்துட்டேன் சார். ஸ்டேஷன் வாசல்ல நிக்குது.. ஈ.ஈ எனக்கு போன் செய்த உடனே டாக்சி எடுத்துட்டு தான் வந்தேன் .. போற வழில தான் என் வீடு நான் இறங்கிக்கிறேன்.. நீங்க புதுக்கோட்டை போய் இறங்கி காருக்கு பணம் ஏதும் தரவேண்டாம்.. நான் பார்த்துக்கிறேன்”

ராதாகிருஷ்ணன் மனைவி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். கையிலே ப்ளாஸ்க்.. பிஸ்கெட் பாக்கெட்டுகள், வாழைப்பழம்

“ராத்திரி நேரம்.. முழிச்சிருந்தா பசிக்கும். வழில நிறுத்தினா லேட்டானாலும் ஆகும் அதான் சார் .. ஒன்னும் தயங்காம வாங்கிக்குங்க”

”தாங்க்ஸ் ராதாகிருஷ்ணன்”

விழுப்புரம் நகர எல்லை தாண்டும் வரை என் மனைவி எதுவும் பேசவில்லை.. நன்றி மீண்டும் வருக விழுப்புரம் நகராட்சி என்ற நட்பு பாராட்டிய போர்டு தாண்டியதும் பிடித்துக் கொண்டாள்

“ ஒன்னுமே பேசாம.. எல்லாத்துக்கும் ஒத்துகிட்டு இப்படி வரீங்களே.. முடியாது.. நான் மெட்ராஸ் போய்த்தான் ஆகணும்னு சொன்னா அந்த மந்திரி என்ன செய்வார்”

“ஒன்னும் செய்ய மாட்டார் தான்.. ஆனா சில சமயம் .. நம்ம விருப்பங்களை பொது வேலைக்காக விட்டுக் கொடுக்க வேண்டி வரும்.. இதும் அது மாதிரி தான்”

“என்ன பொது வேலையோ.. அடுத்த முறை இப்படி ஆச்சு நான் ட்ரெயினை விட்டு இறங்க மாட்டேன் ஆமா”

இது போல இன்னும் ஒரு முறை , மந்திரி வருகைக்காக நாம் ரயில் வண்டி விட்டு நடுராத்திரி இறங்கி, மடை திருப்பிய வெள்ளமாக திசை மாறி பயணிப்போம் என நினைக்கின்றாயா என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

ரோஸ் லேண்ட் (Rose Land) என்று வசீகரப் பெயர் கொண்டதும்.. ஒரு ரோஜாச் செடி கூட தனது காம்பவுண்டுக்குள் இல்லாததுமான புதுக்கோட்டையின் ட்ராவலர்ஸ் பங்களா.

அமைச்சர் இன்றைக்கு வருவது நேற்று நடு நிசியில் தான், எங்கள் செயற்பொறியாளருக்குத் தெரிந்திருக்கு.. ஆனால் கட்சிக்காரர்கள் எப்படி வரவேற்பு போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஒட்டினார்கள் என தெரியவில்லை..

ஹெட்குவார்டஸ் டெபுடி தாசில்தார், புன்னகையுடன் கையைப் பற்றிக் கொண்டார்.. ‘ மெட்ராஸ் போய்ட்டு இருந்து பாதில வந்துட்டீங்கனு உங்க ஈ.ஈ சொன்னார்”

“எப்ப வரார் மினிஸ்டர் .. எங்கேர்ந்து வரார்.. “

“அவர் ஊர்லேர்ந்து தான் வரார்.. இன்னும் அங்கேர்ந்து புறப்படலையாம்”

”அவர் ஊரிலிருந்து இப்ப புறப்பட்டாலும் 5 மணி நேரம் ஆகுமே. மணி இப்பவே 8 ஆச்சு. பகல் 1 மணிக்கோ .. 2 மணிக்கோ தான் வருவார் ”

“என்ன செய்ய.. மாவட்டம் நேரா கலெக்டருக்கு போன் செய்துட்டார். கலெக்டர் என்னைக் கூப்பிட்டு , நீங்க போய் ரோஸ் லேண்ட்ல ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு வாங்கனுட்டார்.. அதான் இத்தனை சீக்கிரம் வந்தேன்.. எந்த டிபார்ட்மெண்ட் மந்திரி வந்தாலும் ரெவினியூ டிபார்ட்மெண்ட் ஆசாமிங்க தலை தான் உருளும்.”

ஈ.ஈ என் பக்கத்திற்கு வந்து என்னவோ பேச ஆரம்பித்தார். நான் முறைக்கத் தொடங்கியவுடன் அமைதியானார்.

அங்கும் இங்கும் நடமாடிய கட்சிக்காரர்கள் ஓரிரு வார்த்தைகள் பேசினார்கள்.

நானே வலுவில் ஈ.ஈ யிடம் பேசினேன், “ சார் மணி 11.30 ஆச்சு.. கலெக்டர் ஆபிசுக்கு போன் செய்து கேளுங்க.. மினிஸ்டர் எப்ப புறப்பட்டார்னு.. டயம் தெரிஞ்சா.. நாம லஞ்ச் முடிச்சுட்டு கூட வந்து வெயிட் செய்யலாம்”

‘அதும் சரி தான்.. இங்கே இருக்கும் போன் எப்பவும் கட்சிக்காரங்க கைலே இருக்கும்; வா.. அப்படி கோர்ட் வாசல்ல நல்ல டீ குடிச்சிட்டு.. அப்படியே ஃபோன் செய்யலாம்”

ஆஸ்திரேலியாவில் ஒரு மங்கையைக் கலியாணம் செய்து, அதன் வழி சிட்னி தொண்டைமான் , என ஒரு வாரிசு கொண்ட புதுக்கோட்டை மன்னர் பரம்பரையின் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் கோர்ட் கட்டிடங்களுக்கு வெளியே உயரமான பீடத்தில் சிலையாக நின்று நாங்கள் டீ குடிப்பதை கேலியாகப் பார்க்கின்றார்.

பக்கத்தில் இருந்த டெலிபோன் பூத்துக்குள் ஈ. ஈ சென்றார்.. இன்னும் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டுமோ என நினைத்து , நான் குமுதம், ஆனந்த விகடன் என வாங்கினேன்


“சார் நான் குழந்தைவேலு ஈ.ஈ பேசறேன்.. வணக்கம் நல்லாருக்கீங்களா...” பூத் கதவைச் சாத்திக் கொண்டார்.

சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்தார்.
“மௌளீ.. மினிஸ்டர் வரலையாம்.. விசிட் கான்சலாம் என்னமோ அர்ஜெண்ட் வேலையாம். மெட்ராஸ் போறாராமாம்.. கலெக்டர் கிட்ட போன் செய்து சொன்னாராமாம்”
------
என் டைரியின் அந்த தினப் பக்கத்தில் குத்தி வைக்கப்பட்ட அந்த பழைய அட்டை டிக்கெட்டை என் மனைவியிடம் காட்டி இன்றைக்கும் திட்டு வாங்கினேன்

Thursday, 20 October 2011

How to Hug


அவனுக்கு ட்ரெயினுக்கு நேரமாகிவிட்டது.. ரொம்ப வேகமாக ஸ்டேஷனுக்குள் ஓடி வந்து கொண்டிருக்கிறான்.. எந்த ப்ளாட்பாரம். எந்தப் ப்ளாட்பாரம்.. அய்யோ 4 வது ப்ளாட்பாரம்.. படியேறி ,, எதிரே வந்தவர்.. முன்னே போய்க் கொண்டிருப்பவர் எல்லாரையும் தள்ளி விட்டபடி பாய்கிறான்.. போச்சு.. அதோ ட்ரெயின் வந்து .. ஐயோ கிளம்பி விட்டதே.. பல படிகளை தாவித் தாவிக் கடக்கிறான். படி இறங்குமிடத்தில் புக் ஸ்டால்.. மிகப் பெரிசாக ஒரு புத்தகம் How to Hug என்று தலைப்பு.. ஆகா சுவாரசியமாகப் படித்துக் கொண்டே போகலாம்; கிளு கிளுப்பான கதை போலும்.. கடைக்காரரிடம் காசைத் தூக்கி எறிந்து அந்தப் புத்தகத்தைக் கவர்ந்து பையில் திணித்து.. வேக வேகமாக ஓடி.. எப்படியோ ட்ரெயினுக்குள் ஏறிவிட்டான்.. ஆனால் அவன் ஏற வேண்டிய கோச் இது இல்லை.. பக்கத்துக் கோச்.. டிக்கட் பரிசோதகர் , “ சார் என்ன இது .. இப்படி சாகசம் செய்து கொண்டு ,, மிகவும் ஆபத்தான் வேலை நீங்கள் செய்தது” அன்பாக கடிந்து அடுத்த கோச்சுக்கு போகும் வெஸ்ட்யூபில் கதவினைத் திறந்து விட்டார்.
அப்பாடா.. இதோ என்னுடைய சீட்.. மடக் மடக் என்று ஒரு பாட்டில் தண்ணீர் குடித்தான். இப்போது அந்த ரசமான புத்தகத்தை படிக்கலாம். திணித்த இடத்திலிருந்து அந்த தாட்டியான புத்தகத்தை உருவினான்
அது ஆங்கிலப் பேரகராதி தொகுப்பில் 12 வது வால்யூம் How எனும் வார்த்தையில் தொடங்கி Hug எனும் வார்த்தையில் முடிகிறது

டைரிக் குறிப்பு -2

இப்படி டைரி எழுத ஆரம்பித்ததை நினைத்துப் பார்க்கின்றேன். இப்போதும் டைரி எழுதாமல் தூங்கப் போவதில்லை. இப்போதெல்லாம் மின் டைரி என்பதாக மென்பொருள் வந்துவிட்டபடியால்.. எழுதி வைத்து இடத்தை அடைத்துக் கொண்டில்லாமல் இருக்கிறது..

இடத்தை அடைத்துக் கொள்வதாக இருந்தாலும், அந்தப் பழைய டைரிகள்.. நானா இப்படிச் செய்தேன் என்பதாயும்.. அட இவர் இப்படியல்லவா என்பதான சுவாரசியங்கள் நிறைந்தவை அல்லவா..

ராஜா... இவர் இப்படியல்லவா என்று நினைக்க வைக்கும் நபர்.. இன்றைக்கு மிகக் காலையிலேயே கண்ணில் பட்ட ஒரு பழைய நாள்..

அதிலிருந்து..

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மார்க்கத்தில் இருக்கும் ஒரத்தநாட்டில் அதே மார்க்க சாலையில் புதூர் மேன்ஷன் என அறியப்பட்டதான , என்னையொத்த கலியாணமாகாத பிரம்மச்சாரிகள் தங்கியிருக்கும் கட்டிடத்தில், இரண்டாவது மாடியில் என் ரூமுக்கு எதிரே இருக்கும் சொற்ப இடத்தில், சின்னதான மடக்கு நாற்காலியினைப் போட்டுக் கொண்டு, சாலையினை வேடிக்கை பார்த்தவாறு உட்கார்ந்திருந்தேன்.

வேடிக்கை பார்க்க என்ன இருக்கிறது.. ஐந்து நிமிஷத்திற்கு ஒரு தரம் தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் பஸ் ஒன்று புழுதிக் கிளப்பிக் கொண்டு ராஜேந்திரன் டீ கடைக்கு எதிரே நிற்கும். அதிலிருந்து இறங்குபவரெல்லாம் தன் கடையில் டீ குடிக்க வருவார்களா என அவன் ஏக்கமாகப் பார்க்கிறான் என நினைத்துக் கொள்வேன். ஆனால் எதிர் சாரியில் மறு மார்க்கத்தில்

பார்த்திருக்கின்றேன்.ஒரு பஸ் வந்து இவன் கடைக்கு சற்று முன்பே நிற்கும் போது, அதிலிருந்து இறங்குபவரில் சிலர் இவன் கடைக்குள் நுழைவதை பார்த்திருக்கின்றேன்


அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமையாதலால் இந்த ரஸ்தாவிலே நடந்து போகும் ஜனங்களைக் கூட அதிகம் காணோம். காலையில் தஞ்சாவூருக்கு போய் சினிமா பார்த்து விட்டு வந்ததற்கு பதில் ஃபர்ஸ்ட் ஷோவுக்கு போயிருந்திருக்கலாம்..

அதோ ரோட்டிலே பாண்டி ஆடிக் கொண்டு போகும் பெண் எத்தனை தரம் நொண்டி அடித்துப் போகிறாள் என்பதை விரல் விட்டுக் வேறு எண்ணிக் கொண்டிருக்கின்றேன்

பாய்லரை விட்டு அகன்று, கடை வாசலுக்கு வந்து பீடி பற்ற வைத்த ராஜேந்திரனை கை தட்டி அழைத்து சைகை செய்தேன். டீ அனுப்புகிறேன் என பதிலுக்கு அவனும் சைகை செய்தான்.

சரி தான் ஒரு புத்தகத்தை எடுத்து விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்குவோம் என நினைத்து, ரூமுக்குள் நுழையலாம் என எழுந்தேன். வதங்கிப் போன கத்திரிக்காய் நிறத்தில் அந்த அம்பாசிடர் கார், கட்டிடத்தின் முன்பு வந்து நின்றது. அந்த கலரில் லோகத்தில் ராஜா ஒருத்தர்தான் கார் வைத்திருப்பார் என்பது என் தீர்மானம்

அந்தக் காரின் பானட்டின் மீது, ஆளும் கட்சிக் கொடி பறப்பதால், இவர் இன்ன கட்சியைச் சார்ந்தவர் என தெரிந்து கொள்ளலாம்.

சொன்னது போலவே ராஜா ஆளும் கட்சியில் உள்ளூரில் மிகப் பிரபலம்

வாரம் தவறாமல் தஞ்சாவூரில் முகாம் இடும் இந்த ஜில்லாவின் மந்திரிகள், இவரைப் பார்த்து அண்ணே என்று விளிப்பதை நானும் பார்த்திருக்கிறேன்.

கட்டிடத்தின் கீழ்த் தளத்திலே இரண்டு கடைகள். ஒன்று வெண்புரவி என்று ஷோக்காக பெயர் கொண்ட சலவைக் கடை. இன்னொன்று காதி வஸ்திராலாயம். அடிக்கடி காந்தி என்றும், சத்திய சோதனை என்றும் சொல்லுகின்ற நான் கூட அந்த காதி வஸ்திராலயத்தில் எதுவும் வாங்குவதில்லை.. அங்கு பழைய சோப்புக் கட்டிகளைத் தவிர ஏதுமில்லை என நினைக்கின்றேன்.

வெண்புரவி கடையின் ஓனரிடம் தான்.. ராஜா பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்த மனுஷன் டக்கென தலையினை உசத்தி மேலே பார்த்து, அதோ என்று என்னைக் காட்ட அங்கிருந்தே ராஜா என்னைப் பார்த்து சிரித்து, " சார் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.. கீழ வரீங்களா"

சட்டை மாட்டிக் கொண்டு வருவதாகச் சொன்னேன்.

"இல்லை இல்லை.. சட்டை ஃபான்டு போட்டுகிட்டு வாங்க ஒரு முக்கியமான வேலையாக வெளில போறம்.. அப்படியே தஞ்சாவூர் போய்ட்டு சாப்பிட்டு வந்துடலாம்"

'எங்க போறம்னு சொல்லாம வந்தா என்ன அர்த்தம்.. அப்படி என்ன சஸ்பென்ஸ்"

" அங்க போன பின்னாலே தெரிஞ்சுக்கப் போறீங்க"

நான் பேசாமலே இருந்தேன். காரின் நிறம் தான் சரியில்லையே தவிர, நல்ல கண்டிஷனில் தான் வைத்திருந்தார். தஞ்சாவூர் மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தோம்

பெரிய காம்பவுண்ட் உள்ளே தென்னை மரங்கள் கொண்டதான அந்த தோப்பு வீட்டின் உள்ளே காரைச் செலுத்தினார் டிரைவர்.

"ஏங்க நிஜமாகவே இங்க தான் வந்திருக்கமா சொல்லுங்க ராஜா"

கார் இதற்குள் அந்த தோப்பிற்குள் இருந்த ஒரு பழைய காலச் சாயல் கொண்ட வீட்டின் பொர்ட்டிகோவுக்கு வந்து விட்டது.

வெராண்டாவை ஒத்த அமைப்பு கொண்ட இடத்தில், திண்ணை மாதிரி இருந்த இருக்கையில் இருந்தவர் எங்களைப் பார்த்து சிரித்து வாங்க என்றார்

அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அது சூரக்கோட்டை பண்ணையில் அவரது வீடு.

என்னை அவருக்கு ராஜா அறிமுகம் செய்த விதத்திலிருந்தே, இருவரது சிநேகிதம் குறித்தும் ராஜா ரொம்ப நாளாக சொல்லி வந்தது நிஜம் என்பதை மனதுக்குள் எழுதிக் கொண்டேன்

வீட்டுக்குள் போனதும், நான் நடிகர் திலகத்திடம் அவரது நடிப்பை சிலாகித்து பேசிக் கொண்டே இருந்தேன்.

'அப்பு.. ரொம்ப சந்தோஷம்.." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் ராஜாவை ஏக்கமாகப் பார்த்தேன்

"என்ன தயக்கம்.. கேளுங்க அவருகிட்ட... அதொன்னுமில்ல கணேசா, உன் நடிப்பை இப்ப நீ நடிச்சுப் பார்கணுமாம்"

'இதுக்கா இத்தினி தயக்கம்.. சொல்லுங்க எந்த படம் என்ன் சீன்"

"கர்ணன் படத்துல, உங்க மகனைக் அர்ஜுனன் கொன்ன பின்னாலே தரையை உதைச்சிட்டு கோபமா பேசுவீங்களே ..."

அவரால் மட்டுமே செய்ய முடியும் அந்தக் காட்சியை.

மீசையில்லாமல்.., ஆடை அலங்காரமில்லாமல், கர்ஜித்த கர்ணனைக் கண்டது நானும் ராஜாவும் மட்டும் தான்

எப்போதும் கல கலப்பாக பேசும் ராஜாவிடம் ஒரு பிரமிப்பு தொற்றிக் கொண்டிருந்தது..அங்கிருந்து தஞ்சாவூர் சென்று , டிபன் சாப்பிட்டு திரும்பி வரும் வரைக்கும் ராஜா சில வார்த்தைகளே சொல்லியிருந்தார்

"நீங்க சொல்றது சரி தான் சார்.. இந்த கணேசன் பய ஒரு அதியசம்தான்"

Wednesday, 19 October 2011

டைரிக் குறிப்பு -1


நினைவுச் சுவட்டில் பின்னோக்கிய பயணம் காலத்தை விழுங்கும் செயல்.. கடந்த காலத்தினை நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக என இல்லாது சம்பவங்களாக பின் நகர்த்திச் செல்லுதலில்.. நாட்களும் , மாதங்களும்.. வருடங்களும் கணக்கிடப்படாது விழுங்கப்படுகின்றன..

இப்படியான அசை போடுதலில் நிகழ்காலமும் விழுங்கப்பட்டு விடுகிறது.. இனம் தெரியாத லயிப்பில் இருக்கும் தருணங்கள் அவை

அங்கொன்றும் இங்கொன்றுமாக எனது பழைய டைரிகளை வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.. அதிலிருந்து..

இப்போதெல்லாம் அடிக்கடி திருவண்ணாமலை வந்து போகத் தொடங்கியிருக்கின்றேன்.. முன்பு வந்ததற்கும் இன்றைக்கு வந்ததற்கும்
நிறைய வித்தியாசம் இருக்கின்றது.. இன்று மாலை கிடைத்த அனுபவம், வாடைகைக்கு ரூம் எடுத்து தங்க வைத்துவிட்டது.

ரமணிரின் ஆசிரமத்தில் கூட்டம் அதிகமில்லை.. வழக்கமாக செய்வது போல தியான மண்டபத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன்.

புத்தகத்தின் பக்கத்தினை திருப்புவதில் உண்டாகும் கச கச எனும் சப்தம் கூட பிறத்தியாருக்கு அசௌகரியம் உண்டாக்கும் என்பதால், எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், விரல்களை நாவின் ஈரத்தினைக் கொண்டு தயார் செய்து பக்கங்களைப் புரட்டினேன். முன்பெல்லாம் தியான மண்டபத்தில் உட்காரும் போது மனசு கட்டுப்பாடு இல்லாமலே இருந்தது. தியானம் என்பது எனக்கு ஒத்து வந்ததில்லை.. அது என்னவென்று தெரிந்திருந்தால் தான் ஒத்து வரும்.. வருபவரையும் போகின்றவர்களையும் வேடிக்கை பார்ப்பதிலும்..அவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என புத்தியினை விகாராமாகச் செலுத்துவதிலும் தான் காலம் கழிந்தது. இதனை கட்டிப் போடத் தான் புத்தகத்தினை உபாயமாக்கினேன்

படித்தது போதும் என்ற நினைப்பு முதலில் லேசாக வந்து பின்னர் சற்றே மூர்க்கமாகி என்னை எழும்பச் செய்தது.

நடந்து வந்து புத்தக ஸ்டாலில் அலமாரிகளில் அடுக்கப்பட்டுள்ள வரிசைகளில் சிலவற்றை வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்

அன்னபட்சி போல ஒரு கார் தவழ்ந்து வந்து நின்றது. பின்புறத்துக் கதவினைத் திறந்து அவர் இறங்கினார். நாலு முழ வேட்டி.. வெள்ளை ஜிப்பா.

இளையராஜா

நான் பிரபலங்களை பல முறை பார்த்திருக்கின்றேன்.. ஏன் இது போல. அவர்களிடமிருந்து வரும் வித்தியாசமான வாச்னைகள் என் நாசிக்கு மிகப் பக்கமாய் உலவுகின்ற தூரத்தில் கூட சமீபமாகப் பார்த்திருக்கின்றேன். ஒரு போதும் பிரமிப்பு உண்டானதில்லை. அவரும் நம்மைப் போலத் தான் எனும் சமாதானமா என்னவென்று தெரிந்ததில்லை

ஆனால் இந்த மனுஷ்யனிடத்தில் அப்படி எனக்கு சமாதானம் ஆகவில்லை..

செருப்பை அங்கேயே விட்டு விட்டு, அவர் பின்னாலேயே நடந்தேன்.. இங்கே வந்து அவர் என்ன செய்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமா இல்லை நானும் இந்த மனுஷ்யன் பின்னால் நடந்தேன் எனச் சொல்லிக் கொள்ளவா என்கின்ற விடையினைத் தேடிக் கொண்டே நடந்தேன் என வைத்துக் கொள்ளுங்களேன்

அவரும் எல்லோரையும் போல, சந்திதிகளில் நின்று தியானித்து தியான மண்டபத்தில் மீண்டும் லயித்து, அமைதி பின்னுக்குத் தள்ளப்பட்ட இடத்துக்கு வந்தவுடன் எனக்கு அவரிடம் பேச வேண்டும் எனத் தோன்றியது

பக்கத்தில் சென்று விட்டேன் " சார் நமஸ்காரம்"

"நமஸ்காரம் சொல்லுங்க"

"உங்களோட ரமணமாலா கேட்டிருக்கேன்.. ஆனா இந்த இடத்துல நீங்க பாடிக் கேட்கணும்னு ஆசையா இருக்கு"

"இங்கேயே.. இப்பவேவா"

"முடியும்னா ரொம்ப சந்தோஷம் சார்"

'சரி என்ன பாட்டு அந்த கலெக் ஷன்ல"

"எனது உடலும் உயிரும் பொருளும்..."

எந்த வாத்தியங்களின் சங்கமும் இல்லாமல் அங்கேயே அருகில் இருந்த படிக்கட்டில் அமர்ந்து இசைஞானியானார். நானும் இன்னும் சிலரும் மட்டுமே கேட்டிருந்தோம்

பாட்டு முடிந்தபின்பு கண்களைத் துடைத்துக் கொண்டு தான் அவருக்கு கைகூப்பி நன்றி சொன்னேன். அவரும் கண்களைத் துடைத்துக்

கொண்டு தான் ஏற்றுக் கொண்டார்

Monday, 17 October 2011

பொட்டி ஸ்ரீராமலு


என்னுடன் பணியாற்றும் அந்தப் பெண் ஹதராபாத்திலிருந்து நேற்று இரவு பேசினாள். தெலுங்கான போராட்டம் மிகவும் தீவிரமாகி, குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பவதற்கே பயமாக இருக்கின்றது. இந்த லட்சணத்தில், ஸ்கூலை மூடி வைத்தால், அங்கீகாரம் ரத்து என ஸ்கூல் நிர்வாகத்தை ஆந்திர சர்க்கார் கபர்தார் அளவில் அச்சுறுத்தி வைத்திருக்கின்றார்களாம். இதனால் ப்ரின்சிபால் தொடங்கி, ஸ்கூல் ப்யூன் வரை எல்லோரும் பெற்றோர்களுக்கு ஃபோன் செய்து குழந்தைகளை அனுப்புங்கள் ப்ளீஸ் எனக் கேட்கின்றார்களாம்..

என்ன செய்யலாம் மௌளீ என என்னிடம் அந்தப் பெண் கேட்டது..

"உங்க ஆந்திரா உருவானதன் அடிப்படையே எங்க மதாராஸ் பட்டிணத்திலே தான் தொடங்கினது தெரியுமா"ன்னு கேட்டேன்.

"என்ன சொல்றீங்க”

"ஆமாம் பொட்டி ஸ்ரீராமலு உண்ணாவிரதம் இருந்தது இங்கே மதராஸிலே தான். 1952 இதே அக்டோபர் 19 ம் தேதி.. ஆந்திரா அமைக்கனும்னு உண்ணாவிரதம் தொடங்கி , அதைத் தீவிரமாக்கி டிசம்பர் 15 அன்னிக்கு இறந்துட்டார்.. இந்த போராட்டம் தான் மொழிவாரி மாநிலங்கள் அமைக்க தூண்டு கோலாக இருந்ததுனு சொல்லலாம்.. இந்தப் போராட்டத்தின் நோக்கத்தில் மதராஸையும் ஆந்திராவில் இணைக்கனும்னு நோக்கம் இருந்தது..

அக்டோபர் 1 1953 லே ஆந்திரா மாநிலம் முதலில் கர்நூலை கேப்பிடலாக வைத்து அறிவிக்கப்பட்டது. 1956 வரை ஹதராபாத் ஸ்டேட் என்று தனியாக தெலுங்கானவை உள்ளடக்கிய பகுதி இருந்தது. அது இந்த புதிய ஆந்திராவிலே 1956 லே இணைக்கப்பட்டு ஹதராபாத் கேப்பிடலாகி.. இப்ப இருக்கும் ஆந்திரபிரதேசம் உருவாச்சு. இப்ப மீண்டும் தெலுங்கானானு பிரிச்சுக் கொடுனு கேட்கிறாங்க"

"ஓ அப்படியா"

”ஸ்ரீராமுலு காந்தியோட நெருக்கமான தொடர்பு கொண்டவர்னு தெரியுமா

காந்தி 10 மார்ச் 1924ல்லே கொண்டா வெங்கடப்பையா என்பவருக்கு ஒரு தந்தி அனுப்புகிறார்

சாபர்மதி ஆசிரமத்தினோடு தொடர்புடைய ஸ்ரீராமுலு, முலாப்பேட்டையிலிருக்கும் வேணுகோபாலசாமி ஆலயத்திற்குள் ஹரிஜனங்களை பிரவேசிக்க அனுமதிக்கனும்னு கோரிக்கை வைத்து மார்ச் 7 முதல் நெல்லூரில் உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை நேரில் சந்தித்து,
அவருக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டுகிறேன்”

”பழைய வரலாறு... ம்ம் மேலே சொல்லுங்க”

"இந்த போராட்டத்தை ஆதரித்து மஹாத்மா 1924 மார்ச் 15 அன்று பம்பாயிலிருந்து ஓர் அறிக்கை வெளியிடறார்"

"என்னானு சொல்லுங்க"

"அப்படியே படிக்கிறேன் கேளுங்க‌

Shri Sriramulu is an unknown poor Congressman and servant of humanity working in Nellore. He has been labouring single handed for the cause to the Harijans of that place. There was a time when high hope was entertained about removal of untouchability and other social work in Nellore. An ashram was built near Nellore, but for variety of causes the activity received a set-back. Desabhakta Konda Venkatappayya was, and still is, though very old, the moving spirit in connection with these activities. It is in this place that shri Sriramulu has been quietly and
persistently working for the removal, root and branch, of untouchability.

He has been trying to have a temple opened to Harijans. He asked me the other day whether, in order to awaken public conscience in favour of such opening, he could, if all others efforts failed, undertake a fast. I sent him my approval. Now the place is astir. But some persons have
asked me to advise Shri Sriramulu to suspend his fast for removing legal difficulties of which I have no knowledge. I have been unable to give such advice.

As I am anxious that an unobtrusive servant of humanity my not die for want of public knowledge and support, I bespeak the interest of the journalists of the South, if not of all India, to find out for themselves the truth of the matter and, if what I say is borne out by facts, shame
by public exposure the opposing parties into doing the right and save a precious life.

’"மேலே சொல்லுங்க"

”ஸ்ரீராமுலு காந்திக்கு எழுதிய கடிதம் ஒன்றிற்கு காந்தி வார்தா ஆசிரமத்திலிருந்து ஆகஸ்ட் 3 1939 ல் பதில் எழுதிருக்காரு. அப்படியே படிக்கிறேன் கேளுங்க‌

SEGAON, WARDHA,
August 3, 1939

MY DEAR SHRIRAMULU

I have your letter. I must not write to Rajaji. You should go to the Kodambakkam Ashram and offer your services as a volunteer. They will accept you if you are a steady worker

இதன்பின்பு 1945ல் இரண்டு கடிதங்கள் பம்பாயிலிருந்து காந்தி ராமுலுவுக்கு எழுதியிருக்கின்றார். பின்னர் 1946 ல் நவகாளியிலிருந்தும், டெல்லியிலிருந்தும் கடிதங்கள் அனுப்பியிருக்கின்றார். இந்தக் கடிதங்களிலெல்லாம், தீண்டாமை ஒழிப்பின் அவசியத்தினையும் அதற்காகப் பாடுபடும் ராமுலுவை பாராட்டும் விதமாக காந்தியார் எழுதியிருந்தார்"

“ஓகே மௌளீ.. நாளைக்கு உங்களுக்கு லீவு.. கொண்டாடுங்கனு சொல்லிட்டு அந்தப் பெண் ஃபோனை வைத்துவிட்டது..

மடிநிறையப் புத்தகமுமாய் ஏன் நான் மொபைல் போனை முறைத்துப் பார்க்கிறேன் எனக் கேட்டாள் என் மனைவி.

Sunday, 16 October 2011

படுக்கையறைக் கதை

தினமும் இரவு பெட் டைம் ஸ்டோரியாக என் மகளுக்கு டெல்லியின் கதை சொல்லி வருகின்றேன்.. இதை முன்பே சொல்லியிருந்தேன்.

வெகு நாட்களுக்கு முன்பு தூர்தர்ஷனில் Mein Delhi Hoon..என ஒரு மெஹா சீரியல் வந்தது.. டெல்லி நகரமே தன் வரலாறு கூறுவது போல.. அந்த தொடரையும்.. Bakshi எழுதிய Delhi Through Ages என்ற புத்தகத்தையும் வைத்து இந்தக் கதையினை நகர்த்தி வருகின்றேன்.

தனது மாணவர்கள் சிலருடன் ஒரு பேராசிரியர், டெல்லிக்கு கல்விச் சுற்றுலா செல்வதாக கதைக் களம் அமைத்துக் கொண்டேன்

தமிழில் இது போல் டிவி சீரியல்கள் செய்யலாம்.. சென்னை, மதுரை, திருச்சி என சரித்திரம் நிரம்பிய நிறைய வாய்ப்புகள் உள்ளன

டெல்லி சரித்திரம் என்றால் என்னால் William Dalrymple ஐயும் அவரது Last Mughal புத்தகத்தையும் நினைக்காது இருக்க முடியுமா;

முகலாய வம்சத்து கடைசி பாதுஷாவாக அறியப்பட்ட Zafar கைதான பின்பு எழுதியதாகக் கருதப்படும் ஒரு ஆங்கிலக் கவிதையின் ஒரு பத்தியில்

Delhi was once a paradise
Where Love held sway and Reigned
But its charm lies ravished now
and only ruins remain

என்று சொல்வதாக தனது முன்னுரையில் William Dalrymple எழுதியிருக்கின்றார்

அது மட்டுமல்ல டெல்லியின் புராதானம், சரித்திரம், கட்டிடங்கள் பராமரிப்பு குறித்த அவரது வருத்தம் tragic neglect of Delhi's Magnificent Past என வெளிவருகிறது

Visiting Najafgrah, 20 kilometers beyond Indira Gandhi International Airport and scene of one of the most important battles in the siege of Delhi, I found that no one in the town had any knowledge or family memories of the battle; but instead recruitment posters for call centres were plastered all over the last surviving Mughal ruin in the town Delhi gate

பவன் வர்மா தனது Mansions at Dusk எனும் புத்தகத்தில் குறிப்பிட்ட டெல்லி சரித்திர இடங்கள் பத்தாண்டுகளுக்குள்ளேயே குப்பைமேடாகி விட்டது என்ற வருத்தமும் கலந்து தான் இரவுக் கதைகள் தொடர்கிறது

Saturday, 15 October 2011

காஃபி குடிப்பது


வெளிமண்டலத்தில் காஃபி குடிப்பது எப்படி என்று ஃபில்டர் காஃபி குடித்துக் கொண்டே இந்த சுட்டியில் படித்தேன்

காஃபி குடிப்பதை வைத்து சொல்லப்படும் ஜோசியம் குறித்து இறையன்பு ஐ ஏ எஸ் புதிய தலைமுறையில் எழுதிய பத்தாயிரம் மைல் பயணத்தில் படித்தது நினைவுக்கு வருது

ஒருவரின் எதிர்காலத்தை காஃபியை வைத்து அனுமானிக்கின்ற ஒரு கலையும் மேற்கத்திய நாடுகளில் உண்டு. இன்றும் கூட இத்தாலி நாட்டின் தெற்குப் பகுதியில் இப்படியொரு ஜோதிடம் உண்டு. அதற்குப் பெயர் டேஸியோமன்ஸி (tasseomancy) ஒருவர் காஃபியைக் குடித்த பிறகு மிச்சமிருப்பதோடு கோப்பையை அப்படியே கவிழ்த்து விட வேண்டும். பிறகு அந்த காஃபி எந்த வடிவத்தில் கோப்பையில் பரவியிருக்கிறது என்பதைப் பார்த்து, அதைக் கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை சொல்வது டேஸியோமன்ஸி . கோப்பையில் இருக்கும் வடிவம் எதிர்காலத்தையும் , சாசரில் இருக்கின்ற வடிவம் நிகழ்காலத்தையும் கூறுவதாக அவர்கள் நம்புகிறார்கள்

கப்பலில் லண்டன் சென்ற காந்தியார் பயணத்தின் போது சூயஸ் கால்வாயில் உள்ள செயிட் துறைமுகத்தில்(Port Said) உள்ள காஃபி ரெஸ்டாரண்ட்களைக் குறித்து தனது பயணக் குறிப்பில் சொல்லியிருக்கிறார். அங்கு இசை கேட்டது குறித்தும் பதிவு செய்திருக்கிறார்

தாவுதல்


ஒரு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கி, அதிலிருக்கும் சங்கதிகளை உறுதி செய்து கொள்ள, அங்கிருந்து இன்னொரு புத்தகத்திற்கு தாவி, இப்படியாக ரிலே ரேஸ் போன்றது என்னுடைய படிக்கும் வாடிக்கை.. ஆனால் இதெல்லாம் புத்தகத்தின் உள்ளே பல பக்கங்கள் கடந்த பின்பு நடக்கும், தாவுதல் மீண்டு வருதல் எனும் எனும் நடவடிக்கைகள்

ஆனால் ஒரு புத்தகத்தின் முகப்பிலேயே இப்படி தாவும் சாத்தியம் உண்டானது, The Emperor of All Maladies - by Sidhartha Mukherjee எனும் புத்தகத்தில்..

கான்சர் குறித்ததான இந்த புத்தகத்தை எழுதிய‌ கான்சருக்கான வைத்தியரான முகர்ஜி இருப்பது நியூயார்க்கில்.

இந்தப் புத்தகத்தின் முகப்பில் ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறியும் A Study in Scarlet எனும் கதையிலே ஷெர்லக் ஹோம்ஸ் பேசுவதான வசனம் , In Sloving a Problem of this sort, the grand thing is to be able to reason backgrounds. That is a very useful accomplishment, and a very easy, but people do not practice it much என்று படித்தவுடன்,ஷெர்லக் ஹோம்ஸ் கதைத் தொகுப்புகளுக்குப் தாவிபோய் மீண்டும் ஒரு முறை சிலாகித்துப் படித்துவிட்டு மீண்டும் இப்போது மறுபடி கான்சர் புத்தகத்துக்கு வந்திருக்கேன்

ஆனாலும் ஷெர்லக் ஹோம்ஸ் ஆச்சரியத்தினையும் விட மனசில்லாமால், பத்ரி சேஷாத்திரி, A Study in Scarlet ஐ ஒரு மோதிரம் இரு கொலைகள் என்று மொழி பெயர்த்திருக்கின்றார். அதனை மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கின்றேன். மேலே சொன்ன ஷெர்லக் ஹோம்ஸ் ஆங்கிலத்தை பத்ரி சேஷாத்ரி மொழிபெயர்ப்பில் , இது போன்ற சிக்கலைத் தீர்ப்பதில் முக்கியமானது பின்னோக்கியபடி காரணங்களைச் சொல்லிக் கொண்டு போவது தான். இது உபயோகமானது, எளிதானதும் கூட. ஆனால் மக்கள் இதை அவ்வளவாக
செய்வதே இல்லை...

என்பது வரை வந்துவிட்டேன்...

இதை இங்கே ஏன் எழுதுகிறேன் என்றால்,, சித்தார்த்த முகர்ஜி , வி எஸ் ராமசந்திரன் போன்றோரின் புத்தகங்களையும் எளிமையான தமிழில் கொண்டு வர வேண்டும்...

...

ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் என்னிடம் முழுமையாக இருந்தாலும்.. பிடிஎஃப் வடிவத்தில் கிடைக்குமே என இணையத்தில் தேட நவீன நாலந்தாவின் வலைத் தளம் சிக்கியது

http://www.nalanda.nitc.ac.in/

இதில் Classic Fiction கிடைக்கும் என உப சுட்டி

http://www.nalanda.nitc.ac.in/index.html

Thursday, 13 October 2011

இந்திய தேசியக்கொடி அறிவோம்

தேசியக் கொடி குறித்த எனது கட்டுரை இன்று தமிழ் பேப்பரில்

http://www.tamilpaper.net/?p=4435

Tuesday, 4 October 2011

மனிதர்கள்-1

என்னோடு தொடர்பில் இருக்கும் மனிதர்களை வகைப்படுத்துவது என்பது சிக்கலான சங்கதி என்றாலும், இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டேன்.

1. நான் உதவி கேட்பவர்கள் அல்லது நான் நாடிச் சென்று விபரம் கேட்பவகள்

2. என்னிடம் உதவி கேட்பவர்கள் அல்லது என்னை நாடி வந்து விபரம் கேட்பவர்கள்
இந்த வியாஜ்யம் 2 வது வகையினரைப் பற்றியது. முதல் வகையில் பிராதன இடத்தில் என் மனைவி இருப்பதால் அந்த வகையினரைக் குறித்து எழுதப் போய் உண்டாகும் சிக்கல்களைத் தவிர்க்கவே இப்படி ஏற்பாடு.
என்னிடம் உதவி கேட்பவர்கள் அல்லது என்னை நாடி வந்து விபரம் கேட்பவர்களை இன்னும் சின்ன சின்ன உப பிரிவுகளாக பிரித்துக் கொள்கிறேன்

1. நான் மனித வள மேம்பாட்டுத் துறையில் இருப்பதால் தனது, அல்லது தெரிந்தவர்களின், அல்லது உறவினர்களின் கரிகுலம் விட்டே தந்து இவனுக்கு / இவளுக்கு ஒரு நல்ல வேலை இருந்தா பாரேன்... இப்படியானவை

2. என் தம்பி பையன் + 2 படிக்கிறான்.. உனக்குத் தெரியுமே ...படிப்பிலே கவனமே இல்லை...உன்னண்டை அழைச்சிண்டு வரேன். கொஞ்சம் கௌன்சிலிங் செய்யணும்.. அதுவரை என்னிடம் திரிஷா, சமீரா என பேசிக் கொண்டிருந்த அந்த தம்பி பையனை தர்ம சங்கடப்படுத்தும் அண்ணன்கள்

3. என் மச்சினி ரயில்வே பரிட்சை எழுதறா வரும் ஞாயித்துக் கிழமை பரிட்சை. ந்யூமரிக்கல் எபிலிட்டி, லாஜிக்கல் ரீசனிங் இதுக்கெல்லாம் க்ளாஸ் எடுக்கிறாய் உங்கிட்ட ட்ரெயினிங் எடுத்தால் நல்லது என சாமிநாதன் சொன்னான், என அந்த ஞாயிற்றுக் கிழமைக்கு முந்தின வெள்ளிக்கிழமை நடு ராத்திரி போன் செய்பவர்கள்

4. என் ஆத்துக்காரியோட பெரியப்பா.. ரிட்டயர் ஆய்ட்டார் .. அவருக்கு பென்ஷன் நிர்ணயம் ஆனதிலே நிறைய குழப்பம். ஏஜிஎஸ் ஆபிசிலே சரியாகவே பதில் சொல்ல மாட்டேங்கறா . ஒரு பெட்டிஷன் தயார் செய்யனும். அல்லது ஒரு ரிட் பெட்டிஷனே போட்டாலும் தேவலை என ஹை கோர்ட்டை லீசுக்கு எடுக்கும் உத்தேசத்துடன் வரும் அழைப்புகள்

5. என்னிடம் புத்தகங்கள் குறித்து பேசுபவர்கள்

கரிகுலம் விட்டே தந்து வேலை கேட்பவர்களை முதலில் கவனிக்கலாம்

என்னிடம் வரும் விண்ணப்பங்களின் மீது கராறான பார்வை கொண்டவன் என்பது இப்படி ககுவி தருபவர்களுக்கு முதலில் தெரிவதில்லை. இந்த சமரசம் இல்லாத என் குணம் , என் வேலையினைப் பத்திரப்படுத்திக் கொள்வதிலும் இருக்கிறது. வரிசையாகச் சொன்னால் புரிந்துவிடும்
காலேஜ் வாசல் விட்டு வெளியே வந்த உடன், கம்பெனி வாசலுக்கு வேலைக்குப் போகும் உத்தேசம் உள்ள இளைஞர்களை, சந்திரமௌளீக்கிட்ட சொல்லிருக்கேன். நீ போய் பாரு என அனுப்பி வைக்கின்றார்கள். இப்படியானவர்களை, என்னை, ஆபிசிலே வந்து பாருங்கள் என சொன்னால் கேட்க மாட்டேன் என அழிச்சாட்டியமாக ஞாயிற்றுக் கிழமை மத்தியானம் மிகச் சரியாக 3 மணிக்கு, என் வீட்டுக்கு வந்து டிங் டாங் என காலிங் பெல் அடிக்கிறார்கள். என் ப்ளாட்டில் காலிங் மணி வைத்தவர் போன ஜென்மாவிலே கோவிலில் மணி அடிக்கும் வேலை செய்திருக்கனும். கொஞ்ச வால்யூமில் அழைப்பு மணி அடிப்பதன் சாத்தியத்தினைத் தெரியாமலே இருந்தவரால் தான் , ரூமைப் பூட்டிக் கொண்டு, தூங்குபவனிக் காதுக்குப் பக்கத்திலும் அதிக டெசிபலில் மணி சத்தம் கேட்க வைக்க முடியும்
(தொடரும்)

Sunday, 2 October 2011

அக்டோபர் -2 2011My Dear Bapu, Today the nation and the world celebrate your birthday, Oct 2; In the morning I
happened to read few articles, the authors of those were of course have got the expected

disability of understandings. I always wonder your saying , " My life is my message".

I always preferred to refer you from your own life and writings. I avail this day as a golden

opportunity to request the friends to read Complete Writings of Mahatma Gandhi (available

for free-download in pdf form) and then start reading any interpretations, at least to know


their disability of understanding you Bapu. In your writings you have given clear guidance,

how to understand and approach you, which again confirms your saying , " My Life is my

message"


தேசப்பிதாவே ! இன்றைக்கு நாடும் உலகமும் உங்கள் பிறந்த நாளைக்

கொண்டாடுகிறது. அக்டோபர் 2.. இன்றைக்கு காலையில் சில கட்டுரைகளை

வாசித்தேன். எதிர்பார்த்தது போலவே, அந்தக் கட்டுரை ஆசிரியர்களுக்கு

உங்களைப் புரிந்து கொள்வதில் குறைபாடுகள் இருக்கின்றன. நீங்கள், “ எனது

வாழ்க்கை எனது செய்தி” எனச் சொன்னதை நான் வியந்திருக்கின்றேன்.

அதனால் தான் நான் உங்களை குறித்து சொல்லும் போது உங்கள்

வாழ்க்கையிலிருந்தும், உங்கள் எழுத்துக்களை மேற்கோளிடுவதையே

விரும்பியிருக்கின்றேன். இந்த நாளில் என் நண்பர்களுக்கு ஒரு


வேண்டுகோள் வைப்பதை மகிழ்ச்சியாக நினைக்கின்றேன். உங்களது எழுத்துத்

தொகுதி இப்போது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அதனை

முழுமையாகப் படித்துவிட்டு , உங்களை விமர்சனம் செய்யும் நூல்களைப்

படிக்க என் நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன், அது அவர்கள் உங்களைப்

புரிந்து கொள்வதில் கொண்டுள்ள குறைபாட்டினை அறிந்து கொள்ள உதவும்.

உங்களை அணுகவும், உங்களைப் புரிந்து கொள்ளவும்

உங்கள் எழுத்துக்களிலேயே தெளிவான் வழிகாட்டுதல் இருக்கிறது. அது

நீங்கள், “ எனது வாழ்க்கை எனது செய்தி” என சொன்னதை உறுதி செய்கிறது