Sunday, 5 May 2013

க்ருஷ்ணாவதாரம்-7

க்ருஷ்ணாவதாரம்-7
-----------------------------

"ஆதிசேஷா, நான் சொன்னதை நன்றாக கவனித்து மனசிலே பதிந்து கொண்டாயல்லவா, இந்த அவதாரத்திலே.. உன்னுடைய பங்கு எது எப்படி என்று சொல்லிவிட்டேன்.. நீ கணித்து தந்த நேரமெல்லாம் சரிதானே.. அப்படியே செய்துவிடலாம் அல்லவா"

"பிரபு.. அனைத்தும் செய்வது நீங்கள்.. நான் என்னவோ தனியாக செய்வது போலவே கேட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள்"
"நன்றாக நினைவிருக்கட்டும் . இந்த அவதாரத்தில் செய்து தீர்க்க வேண்டியதான காரியங்கள் நிறைய இருக்கின்றன"
"ப்ரபோ.. இந்த லோகம் இயங்குவதும், உயிரினங்கள் ஜீவிப்பதும் , அவை மரணமெய்துவதும், நதியிலே பிரவாகம் உண்டாவதும், மழை பொழிவதும், பனி உண்டாவதும், வெயில் இருப்பதும் எல்லாம் தங்கள் லீலா விநோதங்கள்.. ஏன் இப்போது நான் தங்களுடன் சம்பாஷித்துக் கொண்டிருப்பதும் கூட நீங்கள் சித்தத்தில் நினைத்திருப்பதால் தான்.. அப்படியிருக்க நீங்கள் ஒவ்வொரு காரியத்திற்கும் இப்படி சொல்லிக் கொள்வது தான் விந்தையாக இருக்கிறது"
"அதிருக்கட்டும் சேஷா... அங்கே பார்.. கோகுலத்து நந்தகோபனை"

பூலோகத்திலே இந்த சமயம் கோகுலத்திலே ஆயர்களின் மூத்தவனான நந்தகோபன் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவனுக்கு அவனே பேசிக் கொண்டான்
' ஹ்ம் மழை பொய்த்துப் போனது .. பசுமை என்பதே காணாமல் போனது.. இந்த பசுக்களும் கன்றுகளும் மேய்ச்சலுக்கு போவதற்குக் கூட பசுந்தரைகள் இல்லாமல் போய்விட்டதே.. வற்றாத யமுனையிலே கூட  ஜலம் குறைந்து கொண்டே வருகிறது"
"அங்கே யாருடன் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்" நந்தகோபரின் மனைவியான யசோதை அவரை வினவியபடி அந்த கிருஹத்தை விட்டு வெளியே வந்து பார்த்தாள்
ஒருவருமில்லை.. நந்தகோபர் வானம் நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது
'அப்படி என்ன ஆகாசத்திலே அதிசயத்தைக் கண்டீர்கள்.. "
யசோதையும் வானம் பார்த்தாள்
வைகுண்டத்தில் மஹாவிஷ்ணு பூலோகம் பார்த்து கைகூப்பி வணங்குவதை ஆதிசேஷன் கவனித்தான்.
"ப்ரபோ இதென்ன ஆச்சரியம்.. ஸர்வலோகமும் கை கூப்பி தொழும் தாங்கள் யாரைத் தொழுகின்றீர்கள்"
"உஷ் .... இங்கே வா .. பூலோகத்திலே அந்த உரையாடலைக் கவனி"
"ஓ யசோதைத் தாயாரைக் கவனித்து தான் தாங்கள் தொழுது நின்றீர்களா"
"ஷ் ஷ்.. கவனி "
"யசோதை.. வானம் வறண்டு காண்கிறோம்.. நம் ஆயர் குலத்து பசுக் கூட்டங்களுக்கு மேய்ச்சலுக்கு மழை அவசியமாகிறது.. அதான் வானத்தைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தேன்"
"ஆமாம் ஸ்வாமி.. நானும் வேறொன்றை நினைத்திருந்தேன்.."
"என்ன அது"
"இது சமயம் மதுராவிலே தேவகி அம்மையாருக்கு பிறந்த  ஆறு குழந்தைகளை யமனுலகம் அனுப்பியிருப்பான் அந்த கம்ஸன்.. அந்த வேதனை சொல்லி மாளாது"
"ஹ்ம் .. என்ன செய்வது யசோதை.. விதி விளையாடுகிறது.. இதெல்லாம் அந்த மஹா விஷ்ணுவின் கண்களில் தெரியவே தெரியாதா.. பகவான் கல்மனசுக்காரனாக மாறிவிட்டான் என நினைக்கிறேன்"
" ஏன் இப்படி சிரிக்கிறாய் ஆதி சேஷா.... சொல்லி விட்டுத்தான் சிரித்தால் என்ன"
"இல்லை ஸ்வாமி.. பக்தனுக்கு எப்போதும் தங்கள் மேல் சந்தேகம் இருக்கிறது.. ஆனால் நீங்கள் தான் எல்லாவற்றையும் மன்னித்து அருளும் தயாளனாக இருக்கின்றீர்கள்"
இந்த சமயம் கோகுலத்து தெருவிலே கர்காச்சாரியார் நடந்து வருவது கண்டு நந்தகோபரும், யசோதையும் அவரை வரவேற்றார்கள்
"வர வேண்டும் வர வேண்டும்"
"நந்தகோபா.. உன்னுடன் முக்கியமானதொரு சங்கதி பேச வந்தேன்"
கர்காச்சாரியாரின் குரலில் இருந்த விஷேஷ கவனம் நந்தகோபருக்கு ஆச்சரியம் தந்தது
(தொடரும்)