Wednesday, 19 October 2011

டைரிக் குறிப்பு -1


நினைவுச் சுவட்டில் பின்னோக்கிய பயணம் காலத்தை விழுங்கும் செயல்.. கடந்த காலத்தினை நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக என இல்லாது சம்பவங்களாக பின் நகர்த்திச் செல்லுதலில்.. நாட்களும் , மாதங்களும்.. வருடங்களும் கணக்கிடப்படாது விழுங்கப்படுகின்றன..

இப்படியான அசை போடுதலில் நிகழ்காலமும் விழுங்கப்பட்டு விடுகிறது.. இனம் தெரியாத லயிப்பில் இருக்கும் தருணங்கள் அவை

அங்கொன்றும் இங்கொன்றுமாக எனது பழைய டைரிகளை வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.. அதிலிருந்து..

இப்போதெல்லாம் அடிக்கடி திருவண்ணாமலை வந்து போகத் தொடங்கியிருக்கின்றேன்.. முன்பு வந்ததற்கும் இன்றைக்கு வந்ததற்கும்
நிறைய வித்தியாசம் இருக்கின்றது.. இன்று மாலை கிடைத்த அனுபவம், வாடைகைக்கு ரூம் எடுத்து தங்க வைத்துவிட்டது.

ரமணிரின் ஆசிரமத்தில் கூட்டம் அதிகமில்லை.. வழக்கமாக செய்வது போல தியான மண்டபத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன்.

புத்தகத்தின் பக்கத்தினை திருப்புவதில் உண்டாகும் கச கச எனும் சப்தம் கூட பிறத்தியாருக்கு அசௌகரியம் உண்டாக்கும் என்பதால், எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், விரல்களை நாவின் ஈரத்தினைக் கொண்டு தயார் செய்து பக்கங்களைப் புரட்டினேன். முன்பெல்லாம் தியான மண்டபத்தில் உட்காரும் போது மனசு கட்டுப்பாடு இல்லாமலே இருந்தது. தியானம் என்பது எனக்கு ஒத்து வந்ததில்லை.. அது என்னவென்று தெரிந்திருந்தால் தான் ஒத்து வரும்.. வருபவரையும் போகின்றவர்களையும் வேடிக்கை பார்ப்பதிலும்..அவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என புத்தியினை விகாராமாகச் செலுத்துவதிலும் தான் காலம் கழிந்தது. இதனை கட்டிப் போடத் தான் புத்தகத்தினை உபாயமாக்கினேன்

படித்தது போதும் என்ற நினைப்பு முதலில் லேசாக வந்து பின்னர் சற்றே மூர்க்கமாகி என்னை எழும்பச் செய்தது.

நடந்து வந்து புத்தக ஸ்டாலில் அலமாரிகளில் அடுக்கப்பட்டுள்ள வரிசைகளில் சிலவற்றை வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்

அன்னபட்சி போல ஒரு கார் தவழ்ந்து வந்து நின்றது. பின்புறத்துக் கதவினைத் திறந்து அவர் இறங்கினார். நாலு முழ வேட்டி.. வெள்ளை ஜிப்பா.

இளையராஜா

நான் பிரபலங்களை பல முறை பார்த்திருக்கின்றேன்.. ஏன் இது போல. அவர்களிடமிருந்து வரும் வித்தியாசமான வாச்னைகள் என் நாசிக்கு மிகப் பக்கமாய் உலவுகின்ற தூரத்தில் கூட சமீபமாகப் பார்த்திருக்கின்றேன். ஒரு போதும் பிரமிப்பு உண்டானதில்லை. அவரும் நம்மைப் போலத் தான் எனும் சமாதானமா என்னவென்று தெரிந்ததில்லை

ஆனால் இந்த மனுஷ்யனிடத்தில் அப்படி எனக்கு சமாதானம் ஆகவில்லை..

செருப்பை அங்கேயே விட்டு விட்டு, அவர் பின்னாலேயே நடந்தேன்.. இங்கே வந்து அவர் என்ன செய்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமா இல்லை நானும் இந்த மனுஷ்யன் பின்னால் நடந்தேன் எனச் சொல்லிக் கொள்ளவா என்கின்ற விடையினைத் தேடிக் கொண்டே நடந்தேன் என வைத்துக் கொள்ளுங்களேன்

அவரும் எல்லோரையும் போல, சந்திதிகளில் நின்று தியானித்து தியான மண்டபத்தில் மீண்டும் லயித்து, அமைதி பின்னுக்குத் தள்ளப்பட்ட இடத்துக்கு வந்தவுடன் எனக்கு அவரிடம் பேச வேண்டும் எனத் தோன்றியது

பக்கத்தில் சென்று விட்டேன் " சார் நமஸ்காரம்"

"நமஸ்காரம் சொல்லுங்க"

"உங்களோட ரமணமாலா கேட்டிருக்கேன்.. ஆனா இந்த இடத்துல நீங்க பாடிக் கேட்கணும்னு ஆசையா இருக்கு"

"இங்கேயே.. இப்பவேவா"

"முடியும்னா ரொம்ப சந்தோஷம் சார்"

'சரி என்ன பாட்டு அந்த கலெக் ஷன்ல"

"எனது உடலும் உயிரும் பொருளும்..."

எந்த வாத்தியங்களின் சங்கமும் இல்லாமல் அங்கேயே அருகில் இருந்த படிக்கட்டில் அமர்ந்து இசைஞானியானார். நானும் இன்னும் சிலரும் மட்டுமே கேட்டிருந்தோம்

பாட்டு முடிந்தபின்பு கண்களைத் துடைத்துக் கொண்டு தான் அவருக்கு கைகூப்பி நன்றி சொன்னேன். அவரும் கண்களைத் துடைத்துக்

கொண்டு தான் ஏற்றுக் கொண்டார்

12 comments:

pvr said...

Thank you. Your page made me listen to the prayer and reach the bliss.

http://www.youtube.com/watch?v=MIjgjL6RIho

Jawahar said...

பொறாமைப்பட வைக்கிற அனுபவங்கள் நிறைய இருக்கு உங்களுக்கு!

http://kgjawarlal.wordpress.com

பாரதி மணி said...

மெளளீ: எழுத்து உங்களுக்கு வசப்பட்டிருக்கிறது. நிறைய எழுதவேண்டும். படிக்க நாங்களிருக்கிறோம்.

பாரதி மணி

D. Chandramouli said...

A very touching post. Ilaya Raja's spiritual dimension remains a booster for his immortal compositions like in "Naan Kadavul".

On his melodies, my best pick, among various songs, continues to be "Agaya Vennilavay" from the movie "Arangetra Velai", and the picturization of this song was also superb. This in spite of my being a die-hard fan of MSV and his predecessors like GR and host of others.

RVS said...

பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் ஐயனே என் ஐயனே!!

படித்து முடித்ததும் என் கண்ணிலும் கண்ணீர்!

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

Ramani said...

ஆஹா அருமையான அனுபவம்
நானும் சிறுவயதில் நானும் என் நண்பனும் மட்டும் இருக்க
இங்கு ஒரு சாய் பாபா கோவிலில் டி.எம் ஸ் அவர்கள்
மனமுருக பாடும் பாடல்கள் கேட்கும் பாக்கியம் கிடைத்தது
இன்றுவரை அது தந்த சுகம் என்னுள் இப்போதும்
இருந்து கொண்டே இருக்கிறது
உங்களுக்கும் அது தொடர்ந்து இருக்கும்
வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - தங்களின் பல உயர்ந்த பழக்கங்களில் இதுவும் ஒன்றா ? என்னால் புரிந்து கொள்ளவே இயல்வில்லை. இளையராஜாவின் அருமையான ரமணமாலா - அவரே பாடக் கேட்க - கொடுத்து வைத்தவரைய்யா நீர். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Anonymous said...

சந்திரமெளளீஸ்வரன்....நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
Umajayaraman.

சேக்காளி said...

//"உங்களோட ரமணமாலா கேட்டிருக்கேன்.. ஆனா இந்த இடத்துல நீங்க பாடிக் கேட்கணும்னு ஆசையா இருக்கு"

"இங்கேயே.. இப்பவேவா"

"முடியும்னா ரொம்ப சந்தோஷம் சார்"

'சரி என்ன பாட்டு அந்த கலெக் ஷன்ல"

"எனது உடலும் உயிரும் பொருளும்..."

எந்த வாத்தியங்களின் சங்கமும் இல்லாமல் அங்கேயே அருகில் இருந்த படிக்கட்டில் அமர்ந்து இசைஞானியானார். நானும் இன்னும் சிலரும் மட்டுமே கேட்டிருந்தோம்//
தலைக்கனம் பிடித்தவர்கள் இப்படித்தான் செய்வார்களா?

Azhagan said...

\\தலைக்கனம்........ \\. Some people donot understand his genius, some dont want to accept it for reasons unknown, they are to be ignored. Maestro is Maestro.

Erode Nagaraj... said...

அண்ணா, குண்டூசிகள் வைக்கும் ஸ்பாஞ்ச் டப்பாவில் சிறிது ஜலம் விட்டு உபயோகிக்கலாமே.