Monday, 27 June 2011

ஆயிரம் நாட்கள் - ஆயிரம் விஞ்ஞானிகள்

இங்கே தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் இப்போது சட்டம், அரசியல் என பல ரூபங்களை எடுத்து எப்போது கமிட்டி ரிப்போர்ட் தரும் எப்போது கோர்ட் விசாரிக்கும் எப்போது தீர்ப்பு வரும் அதை எதிர்த்து அப்பீலுக்குப் போவார்களா என்பதான விடை தெரியாத கேள்விகளுக்கு இடையே தினம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் உபரியாக ஒரு தகவலைச் சொல்லலாம்

சயின்டிபிக் அமெரிக்கனில் வாசித்தேன்.

அமெரிக்க சர்க்காருக்கு விஞ்ஞானம் தொழில் நுட்பத்தில் ஆலோசனை சொல்லும் National Academies, என்ற அமைப்பு கவலையுடன் ஒரு சங்கதி சொல்லியிருக்கிறது. அதாவது பணக்கார நாடுகள் 29 ல் அமெரிக்காவின் விஞ்ஞானம் மற்றும் இன் ஜிநியரிங் மாணவர்கள் 27 வது இடத்தில் தான் இருக்கின்றார்கள். இப்படி சொல்லிவிட்டு அந்த அமைப்பு அமெரிக்காவின் அனைத்து மாஹாண சர்க்காருக்கும் ஃபெடரல் அமெரிக்க சர்க்காருக்கும் ஓர் அறை கூவல் விடுத்திருக்கிறது : பள்ளி அளவில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களில் பாடத் திட்டம் போதனை முறைகளில் பெருமளவில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும் ; இதில் ஆசிரியர்களுக்கான பயிற்சியும் தேவை

சயின்டிபிக் அமெரிக்கன் 1000 நாட்களில் 1000 விஞ்ஞானிகள் எனும் திட்டத்தினை தொடங்கியிருக்கிறது. இதில் பள்ளி மாணவர்களின்
வகுப்பறை சந்தேகங்களுக்கு விஞ்ஞானிகள் பதிலளிக்க ஏற்பாடு செய்யப்படும் ; இதில் தொலைத் தொடர்பு என்ற நிலையில் இருந்து விஞ்ஞானிகளை பள்ளிகளுக்கு விசிட் செய்ய வைப்பதும் உண்டு;

இங்கே கல்லூரிகளில் நடக்கும் கருத்தரங்குகளில், மற்ற் நிகழ்ச்சிகளில் சர்வ தேச அளவில் இயங்கும் விஞ்ஞானிகள் சப்ஜெக்ட் மேட்டர் எக்ஸ்பெர்ட்களை வரவழைத்துப் பேச வைக்கின்றார்கள். கேள்வி பதில் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. அப்படியே அவர்களை அருகே இருக்கும் பள்ளிக்கு ஒரு மணி நேரம் வாருங்கள் என அழைத்துச் செல்ல யாராவது முன் வர வேண்டும்

Sunday, 19 June 2011

அழைக்கிறேன்நல்ல புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தினை மாணவர்களிடையே ஊக்குவிக்க, பாடத் திட்டம் தாண்டி அவர்களது படிக்கும் / தேடும் ஆர்வம் அதிகமாக ஒரு சிறிய முயற்சியாக பள்ளி மாணவர்களுக்கு விநாடி வினா (க்விஸ்) நிகழ்ச்சிகள் நடத்த நண்பர்களுடன் இணைந்து திட்டமிட்டுள்ளேன். இதில் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களின் உதவி இதனை மேலும் செம்மைப்படுத்தும். இதில் இணைய விருப்பமுள்ள நண்பர்கள் என்னை மின்னஞ்சலில் அல்லது போனில் தொடர்பு கொள்ள அழைக்கிறேன்

Thursday, 16 June 2011

ஆணுறை

இப்படித் தலைப்பைக் கண்டுவிட்டு, "அப்படி இப்படியான சங்கதிகளை" எதிர்நோக்கி வந்திருப்போரை ஏமாற்ற இருக்கிறேன். சமீபத்தில் வெளியான ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் பெயரிலேயே காண்டம் இருப்பதால்... என்பது போன்ற சில விஷயம் பொதிந்த சமாச்சாரங்களை ஃபேஸ் புக்கில் படித்தேன். உடனே சயின்டிபிக் அமெரிக்கன் இதழில் ஆணுறை தொடர்பாக படித்த கட்டுரை நினைவுக்கு வந்தது

ஆண்கள் பயன்படுத்தும் கருத்தடை சாதனத்தின் வரலாறு குறித்த கட்டுரையினை பகிர்ந்து கொள்ளத்தான் எழுதுகிறேன்.

ஆணுறை எனும் சாதனத்திற்கு சுமார் 300 ஆண்டு வயசாகிறது, முன்பு விலங்குகளின் குடலைக் கொண்டு செய்து வந்தார்கள்;

இப்போதைய நவீன ஆண் கருத்தடை சாதனம் prophylactics எனும் ரப்பர் சங்கதியில் ஆனது. ஆண்களுக்கான மற்றொரு கருத்தடை ஆப்ஷன் வாசக்டமி எனும் கத்தி வைக்கும் சமாச்சாரம் ;vas deferens என்பதான விந்துக் குழாய்களை வெட்டி ஆணின் விந்து அணுக்கள் அதைத் தாண்டி பயணிக்காமல் செய்வது. இது ஒரு தரம் செய்து விட்டால் ரிவர்ஸ் செய்து கொள்ள இயலாது போலிருக்கிறது. இதற்கும் இப்போது தீர்வு காணும் வகையாக ஆராய்ச்சி நடக்கிறதாக சயின்டிபிக் அமெரிக்கன் சொல்கிறது ;

அதாவது விந்துக் குழாய்களை வெட்டுவதற்குப் பதிலாக அதை பாலிமர் ஜெல் போன்ற ஒரு வஸ்துவை வைத்து தடுப்பு உண்டாக்கி அது நாளாவட்டத்தில் கரைந்து போவது போல் செய்வது;

அந்தக் கட்டுரை அமெரிக்காவில் உண்டாகும் கர்ப்பத்தில் 50 சதவீதம் முன்னேற்பாடுகள் இல்லாமல் உருவானவை என சொல்கிறது

அதிலும் பாதி கருக்கலைப்பில் தான் முடிகிறதாம். பெண்களுக்கான கருத்தடை வழிமுறைகளை விட ஆண்களுக்கான முறைகளில் எப்படி முன்னேற்றம் காண்பது என்பது தான் இந்த விஷயத்தில் ஆராய்ச்சி செய்பவர்களிடம் அதிகம் காணப்படும் ஆர்வம் என்கிறது கட்டுரை. இதற்காக தனி ப்ராஜெக்ட்கள் உருவாகி வருகின்றன எனச் சொல்லி ஒரு தனி வெப்சைட் கூட இருக்கிறதாக சொல்கிறது
(http://www.newmalecontraception.org/)

கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் அமோரி செய்துவரும் சுவாரசியமான ஆராய்ச்சிகளை கட்டுரை எளிமையாக விளக்குகிறது. மாதம் ஒரு கருமுட்டை என பெண்களும் ஒரு இதயத் துடிப்புக்கே 1000 விந்து அணுக்கள் என ஆண்களும் இரண்டு தரப்பட்ட ஸ்பீடில் கரு உருவாகும் சாத்தியங்களில் இயங்குவது அவருக்கு ஆராய்ச்சியில் பெரிய சவாலாக இருக்கிறதாம்.

இதைப் படிக்கும் போது எனக்கு Thomas Hunt Morgan நினைவு வந்தது

Thomas Hunt Morgan என்ற அமெரிக்க ஜெனடிக் இயல் விஞ்ஞானிக்கு 1933 ம்
ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிறக்கும் குழந்தை ஆணாகவோ
அல்லது பெண்ணாகவோ அமைய ஆணின் க்ரோமோசோம்களே காரணம் என்ற இவரின் ஆராய்ச்சி முடிவுக்காக இவருக்கு நோபெல்.

பாண்டவர்கள் 5 பேர் என்பதால் அவர்களின் பெயர்கள் நமக்கு சுலபமாக நினைவில் இருக்கிறது.

ஆனால் கௌரவர்கள் 100 பேர். பொதுவுல் துரியோதனன், துச்சாசனன் இவர்கள்
இருவரும் தான் பாப்புலர். மீதி 98 பேரைப் பற்றி பொது வழக்கில்
கேட்கப்படும் பாரதக் கதையில் சொல்லப்படுவதில்லை. அந்தக் குறை இல்லாமல் ஒரு அந்த் 100 பெயரையும் இங்கே சொல்லி செஞ்சுரி அடிச்சுடறேன்

1. துரியோதனன்
2. யுயுத்ஸு
3. துச்சாசனன்
4. துஸ்ஸஹன்
5. துச்சலன்
6. துர்முகன்
7. விவிம்சதி
8. விகர்ணன்
9. ஜலஸந்தன்
10. சுலோசனன்
11. விந்தன்
12. அனுவிந்தன்
13. துர்தர்ஷன்
14. சுபாஹு
15. துஷ்ப்ரதர்ஷணன்
16. துர்மர்ஷணன்
17. துர்முகன்
18. துஷ்கர்ணன்
19. கர்ணன்
20. சித்திரன்
21. உபசித்திரன்
22. சித்திராஷன்
23. சாரு
24. சித்ராங்கதன்
25. துர்மதன்
26. துர்ப்ரதர்ஷன்
27. விவித்ஸு
28. விகடன்
29. ஸமன்
30. ஊர்ணநாபன்
31. பத்மநாபன்
32. நந்தன்
33. உபநந்தன்
34. சேநாபதி
35. சுஷேணன்
36. குண்டோதரன்
37. மஹாதரன்
38. சித்திரபாஹூ
39. சித்திரவர்மா
40. சுவர்மா
41. துர்விரோச்னன்
42. அயோபஹு
43. மஹாபாஷு
44. சித்திரசாபன்
45. சுகுண்டலன்
46. பீமவேகன்
47. பீமபலன்
48. பலாகி
49. பீமன்
50. விக்கிரமன்
51. உக்ராயுதன்
52. பீமசரன்
53. கநகாயு
54. த்ருடாயுதன்
55. த்ருஷ்டவர்மா
56. த்ருஷ்டத்ரன்
57. சோமகீர்த்தி
58. அநூதரன்
59. ஜராசந்தன்
60. த்ருடசந்தன்
61. சத்தியசந்தன்
62. ஸஹஸ்ரவாக்
63. உக்ரச்ரவஸ்
64. உக்ரசேனன்
65. ஷேமமூர்த்தி
66. அபராஜிதன்
67. பண்டிதகன்
68. விசாலாஷன்
69. துராதனன்
70. த்ருடஹஸ்தன்
71. ஸுகந்தன்
72. வாதவேகன்
73. ஸுவர்ச்சன்
74. ஆதித்ய கேது
75. பஹ்வாசி
76. நாகதத்தன்
77. அநுயாயி
78. சுவசி
79. நிஷங்கி
80. தண்டி
81. தண்டாதரன்
82. தநுக்ரஹன்
83. அலோலுபன்
84. பீமரதன்
85. வீரன்
86. வீரபாஹு
87. அலோலுயன்
88. அபயன்
89. ரௌத்ரகர்மா
90. த்ருட்ரதன்
91. அநாத்ருஷ்யன்
92. குண்டபேதி
93. விராவி
94. தீர்க்கலோசனன்
95. தீர்க்கபாஹு
96. மஹாபஹூ
97. வ்யூமேரு
98. கனகாங்கதன்
99. குண்டஜன்
100. சித்ரகன்

இது தவிர திருதராஷ்டிரனுக்கும் காந்தாரிக்கும் துச்சலை என்ற பெண் மகவு
உண்டு. திருதராஷ்டிரனுக்கும் ஒரு பணிப்பெண்ணுக்கும் யுயுத்சு என்று ஒரு
பையன் பிறந்தான். மேலே சொன்ன பட்டியலில் இரண்டாவதாக இருக்கும் யுயுத்ஸு வும் இந்த யுயுத்சுவும் வேறு வேறு

திருதராஷ்டிரனுக்கு பிறந்த 100+1+1 குழந்தைகளில் 101 ஆண் மகவுகள்.

Thomas Hunt Morgan திருதராஷ்டிரனின் க்ரோம்சோம்களைப் பற்றி ஆய்வு
நடத்தினால் இன்னொரு நோபெல் நிச்சயம். ஆனால் திருதராஷ்டிரனும் உயிரோடு இல்லை; Thomas Hunt Morgan 1945 லேயே போய்ச் சேர்ந்துட்டார்

Sunday, 12 June 2011

கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் 11 ஜூன் 2011


சமச் சீர் கல்வி குறித்து பேராசிரியர் திரு முத்துக் குமரன் அவர்கள் உரை நிகழ்த்திய கூட்டம்.

சமச் சீர் கல்வி குழுவின் தலைவராக செயலாற்றி அரசுக்கு பரிந்துரைகள் கொண்ட அறிக்கையினை சமர்ப்பித்தவர்.

மக்கள் மத்தியில் புரிந்து கொள்ள மறந்துவிட்ட ஒரு தகவலுடன் பேராசிரியர் தனது உரையினைத் தொடங்கினார்.

விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உள்ளாகியுள்ள இந்த சமச் சீர் கல்வி திட்டத்தினை மக்கள் ஸ்டேட் போர்ட் பாடத் திட்டம் , மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டம் இரண்டுக்கும் இடையேயான தரம் சார்ந்த விவகாரம் என Abstract செய்து கொண்டுள்ளனர்

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 1977 ம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கின என்பதால் அவை உயர் கல்வி தரத்துடன் விளங்கியதாக ஒரு பிம்பம் உருவாகிவிட்ட உண்மையினைச் சொன்னார் முத்துக் குமரன்

இது குறித்து என் தரப்பில் கூடுதல் விபரங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன்

1966 ம் ஆண்டு வரை தமிழகத்தின் அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகப் பொறுப்பில் இயங்கின‌

1966 ம் ஆண்டு மதுரையில் காமராஜர் பல்கலைக் கழகம் உருவான பின் அதன் செயல்பாட்டுக்கென நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அதன் நிர்வாகப் பொறுப்பிற்கு மாறின

இந்த் நிலை 1976 வரை நீடித்தது

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை அரசின் நிர்வாகப் பொறுப்பில் கொண்டு வரலாம் எனும் பரிசீலனை 1976 ல் தொடங்கியது

அதன் அடிப்படையில் இதற்கான திட்ட வரைவு , கல்வித் துறை தனது துறைக்கான அரசு ஆணை எண் 2816 நாள் 29 நவம்பர் 1976 அன்று வெளியானது
தொடர்ச்சியாக மெட்ரிக்குலேஷன் கல்விக்கு என தனியாக ஒரு போர்ட் அமைப்பினை உருவாக்கிட பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் பரிந்துரைத்தார் அதன் அடிப்படையில் அதுவரை சென்னை மற்றும் மதுரைப் பல்கலைக் கழங்கங்களின் பொறுப்பில் இருந்த மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரின் நிர்வாகப் பொறுப்பிற்கு
மாற்றப்பட்டன. இதற்கான கல்வித் துறையின் அரசாணை எண் 1720 நாள் 25 ஜூலை 1977 ( ஜூலை 25 உங்கள் பிறந்த நாளாயிற்றே எனும் என் மனைவியின் நினைவூட்டலை புறம் தள்ளி தொடர்கிறேன்)

இந்த அரசாணையின் படி Board of Matriculation Schools உதயமானது. சென்னை மதுரைப் பல்கலைக் கழகங்களின் சின்டிகேட் தீர்மானங்களும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை இனி தமிழக அரசிடம் தந்துவிட சம்மதித்து இருந்தன‌

பள்ளிக் கல்வி இயக்குநரின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்க் இருக்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் விவகாரங்களுக்காக ஒரு Inpectorate உருவாக்கி அதன் தலைமை நிர்வாகியாக Inspector of Matriculation Shools எனும் பொறுப்பில் மாவட்ட கல்வி அதிகாரி அந்தஸ்த்தில் ஒரு அதிகாரியினை நியமிக்க அரசு முடிவு செய்து அதற்கான அரசாணை எண் 2678 கல்வித் துறை நாள் 29 டிசம்பர் 1977 அன்று வெளியிடப்பட்டது

பள்ளிக் கல்வி இயக்குநரின் நிர்வாக பொறுப்பில் மெட்ரிக்குலேஷன் கல்விக்கென தனி ஆய்வாளர் அமைக்கப்பட்டு நவம்பர் 2001 வரை மெட்ரிக்குலேஷன் கல்வி நிர்வாகம் இயங்கியது

பின்னர் மெட்ரிக்குலேஷன் கல்விக்கென் தனி இயக்குநரகம் உதயமானது . இதற்கான அரசு ஆணை 188 நாள் 08 நவம்பர் 2001

இனி மீண்டும் பேராசிரியர் முத்துக் குமரனின் உரைக்கு வருகிறேன். அவர் உரைத்த மிக முக்கியமான சங்கதிகள்

1. ஸ்டேட் போர்ட் , மெட்ரிக்குலேஷன் போர்ட் இரண்டுக்குமான பாடத்திட்டங்களில் அதிக வேறுபாடு இல்லை.

2. சமச் சீர் கல்வி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் குழுவின் பரிந்துரை. அதில் கல்வியின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் எனும் அடிப்படையும் அதனை அடைவதற்கு தேவையான நெறி முறைகள் எவை எவை என்பதும் எங்கள் பரிந்துரையின் அம்சம்

இந்த விவகாரம் நான்கு தனித் தனியான பாடத்திட்டங்கள் இயங்கிய தமிழ்நாட்டில் இனி மாநில பள்ளிக் கல்வி நிர்வாகப் பொறுப்பின் கீழ் ஒரே பாடத்திட்டம் தான் எனும் ஒற்றை வரியாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது

பேராசிரியர் முத்துக்குமரன் அவர்கள் சொன்ன மிக முக்கியமான கருத்து

I have competency to say what the School education to impart the students but I have no competency to say what syllabi would be suitable to achieve this ; that is the implementation part and teachers of school education alone are competent to decide on this ; I am not ashamed of saying that I am not competent to decide on school syllabi

கூட்டம் முடிந்து அவர் விடை பெறும் போது மாடிப்படி இறங்கிய வண்ணம் அவர் எல்லோரிடமும் பேசிக் கொண்டு வந்தார்

அவரிடம் நான் சொன்னேன்," கூட்டம் தொடங்கும் போது ஒன்று சொன்னீர்கள் . உங்களது பரிந்துரை அறிக்கையினைப் படிக்காமலே தான் பலர் விமர்சனம் செய்கிறார்கள் விவாதிக்கின்றார்கள் என ; ஆனால் நான் உங்கள் அறிக்கையினை முழுவதும் வாசித்திருக்கிறேன் அதன்றி இந்த பரிந்துரை அடிப்படையில் சமச் சீர் கல்வி சட்டமாக அறிமுகம் ஆன போது அதனை எதிர்த்து உயந் நீதி மன்றத்தில் 2010 ஆம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்ட்டு அதன் தீர்ப்பினை முழுவதும் வாசித்திருக்கிறேன். அதில் நீதிபதி திருமதி பிரபா ஸ்ரீதேவன் உங்கள் அறிக்கையின் விபரங்கள் குறித்து மிக விபரமாக அலசியிருக்கிறார். National Curriculam Frame Work , Kothari Committee Report இவற்றுடன் உங்கள் அறிக்கை எப்படி இசைந்திருக்கிறது எனவும் நீதிபதி விபரமாக சொல்லியிருக்கிறார் " என பகிர்ந்து கொண்டேன்..

அவருக்கு விடை தரும் போது , I have not competency என சொல்வதற்கும் அதை சொல்ல வெட்கப்படவில்லை எனச் சொல்வதும் மிகப் பெரிய குணம் சார் ”
என்றேன்

"நான் உண்மையைத் தானே சொன்னேன்” என்றார்

பாடத்திட்டம் பாடம் அப்படி இருந்தது இப்படி இருக்க வேண்டும் என்று எழுதும் மஹானுபாவர்கள் கவனிப்பார்களாக‌

Wednesday, 8 June 2011

கலைஞருக்கு ஒரு கடிதம்


அன்பின் கலைஞருக்கு. வணக்கம். இது வரை நீங்கள் தான் பிறருக்கு கடிதம் எழுதி அது முரசொலியில் பதிவாகும் ஆனால் இன்றைக்கு நீங்கள் வெளியிட்ட ஓர் அறிக்கை இந்தக் கடிதம் எழுத தூண்டியது. இப்படி சங்கதிகளை நினைவு வைத்திருப்பதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்

அண்ணா ஹசாரே, பாப ராம்தேவ் இவர்களின் போராட்டங்கள், லோக் பால் மசோதா இவற்றையெல்லாம் குறிப்பிட்டு இன்றைய அறிக்கையில் 1973 ல் திமுக ஆட்சியில் இருக்கும் போது பொது ஊழியர் ஊழ்ல் தடுப்பு சட்டம் கொண்டு வந்ததை குறிப்பிட்டுள்ளீர்கள்;

அதுவும் எப்படி ஊழல் ஒழிப்பிலே தமிழகம் இந்தியாவுக்கு முன்னோடியாக இருக்கிறது என

ரொம்ப வாஸ்தவம் தான்

அந்த சட்டம் ஒட்டிய வரலாற்றினையும் கொஞ்சம் பார்க்கலாம்

டிசம்பர் 1973 நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த போது Tamil Nadu Public Men (Criminal Misconduct) Act, 1973 என்ற பெயரில் வந்த சட்டம் அது பின்னர் செப்டம்பர் 6 1977 அன்று அப்போதைய எம் ஜி ஆர் அரசால் ரத்தானது இதல்லாம் நீங்கள் மிகச் சரியாக நினைவில் வைத்திருப்பீர்கள்

கோதுமை பேர ஊழல் வழக்கில் தங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட போது நீங்கள் வழக்காடீனீர்கள்... என்னவென்று ஒரு மாநில முதல்வர் பொது ஊழியரே இல்லையென அதற்காக உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று 20 பிப்ரவரி 1979 உச்ச்நீதிமன்றம் முழு பெஞ் உங்கள் வாதத்தினை ஏற்காது உங்கள் மனுவினைத் தள்ளுபடி செய்ததையும் நினைவில் வைத்திருப்பீர்கள். ஆனால் நீங்களாக வெளியில் சொல்ல மாட்டீர்கள்

உங்களைக் கடலில் தூக்கி போட்டாலும்.. என ஒரு சின்ன ப்ளாஷ் கலைஞர் தொலைக் காட்சியில் வரும் போதெல்லாம் இந்த வழக்கினையும் அதில் உங்கள் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களையும் நினைத்துக் கொள்வேன். ஒரு மாநில முதல்வர் பொது ஊழியர் அல்ல எனும் வாதத்தினை இந்திய நீதி மன்றத்தில் ஒலிக்கச் செய்த பெருமையும் நமக்கு தானே

என்ன செய்வது அந்த 28 பக்க உச்ச நீதி மன்றத் தீர்ப்பு மிக நிரந்தரமான் சட்ட ஆவணம்

கூடா நட்பு மட்டும் கேடு தராது .. இப்படி மறக்க கூடா நிகழ்வுகளும் கேடு தரும்


அன்புடன்
மௌளீ

Sunday, 5 June 2011

Tell-Tale Brain


கம்ப்யூட்டர் உபயோகிக்கும் எல்லாருக்குமே வாய்த்திருக்கும் இந்த அனுபவம்: நாம் சமீபத்தில் உபயோகித்திருக்கும் கோப்புகளை ஸ்டார்ட் மெனுவில் டாக்குமெண்ட்ஸ் எனும் உப மெனு மூலம் அணுகியிருப்போம். பின்னர் அந்த கோப்புகளை இடம் மாற்றி வைத்திருப்போம் அல்லது தேவையில்லை என டெலிட் செய்திருப்போம். ஆனால் அவற்றின் பெயர் ஸ்டார்ட் மெனுவின்
டாக்குமென்ட்ஸில் இருக்கும் அதனைக் கிளிக்கினால் கம்ப்யூட்டர் சற்று நேரம் தேடிவிட்டு, ' என்ன விளையாடுறியா இடம் மாத்தி வச்சிட்டியோ அல்லது காலி பண்ணிட்டியோ " என மெசேஜ் காட்டும்

மனிதனின் மூளை இப்படித்தான் மனிதனின் அங்கங்களை மேப் செய்து வைத்திருக்கிறது. விபத்தின் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ ஏதானும் உறுப்புகள் துண்டிக்கப்பட்டால் அவை இருந்த போது மூளையில் அந்த உறுப்புகளுக்காக உண்டாக்கப்பட்ட நினைவு மேப்பிங் அந்த உறுப்பு துண்டிக்கப்பட உடன் நீங்குவதில்லை

உதாரணமாக மணிக்கட்டுக்கு கீழே கை துண்டிக்கப்பட்டது என வைத்துக் கொல்வோம். அப்படிப்பட்ட நபருக்கு கீழே விழுந்திருக்கும் பொருளை எடுக்கும் தேவை உண்டாகும் போது அதற்கான கட்டளை கைக்க்குப் போகும்.. சற்று இடைவெளியில் ஆஹா நம்மாளுக்குத்தான் கையை பஞ்சாய்த்துல அன்னிக்கு வெட்டிட்டாங்களே என உரைக்கும். மூளையின் மேப்பிங்கில் நம்ம்வருக்கு கை
இல்லை என பதிவு அப்டேட் ஆக சில காலம் பிடிக்கும்

இப்படியான சுவாரசியமான மூளை குறித்த புத்தகம் Tell-Tale Brain ஆசிரியர் நரம்பியல் மருத்துவர் வி. எஸ் இராமசந்திரன்

7 என்ற எண்ணை எத்தனை பெரிசாக எழுதிக் காட்டினாலும் எனக்கு 7 எனச் சொல்லத்தான் தெரியும் சிலருக்கு சில நம்பரைப் பார்த்தாலே சில கலர் தெரியுமாம். இதற்கு சினஸ்தீஷியா எனப் பெயர். தகரத்தில் கிறீச் கிறீச் என கீறினால் பலருக்குப் பல் கூசும் ஆனால் சில சப்தங்களைக் கேட்டால் சிலருக்கு ஏதானும் வாசனை வருவது போல தோன்றுமாம்.

நேற்று திருப்பதி போயிருந்தேன். கோவிந்தா கோவிந்தா இரைச்சல், ஜருகண்டியுடன் மிக்ஸாகி பெருமாளை சேவித்து விட்டு வந்து ப்ரசாத க்யூவில் நின்றேன் . எனக்கு நல்ல பசி என்பது வெங்கி நன்கறிந்து இரண்டு தொன்னையில் மிளகுப் பொங்கல் ஏற்பாடு செய்திருந்தார். உடனே எனக்கு மெது வடை வாசனையும் வந்தது. அக்கம் பக்கம் பார்த்தேன் வடை இல்லை. ப்ரசாத லிஸ்டில் எப்பவும் மெதுவடை வராதாம். இப்படி மிளகுப் பொங்கலைப் பார்க்கும் போதெல்லாம் மெதுவடை வாசனை வருவது சினஸ்தீஷியா வகையில்
சேர்த்தியா என வி.எஸ் இராமசந்திரனிடம் மெயிலில் கேட்டிருக்கிறேன்.

அலுவலகத்தில் எத்தனை ப்ரஷர் இருந்தாலும் இரவு வீட்டுக்கு வந்தபின் ஜெர்ரியைத் துரத்தும் டாம் பூனையைப் பார்த்தால் எனக்கு ப்ரஷர் ஓடிவிடும். இப்பொதெல்லாம் அந்த எலி பூனையைப் பார்த்தால் எனக்கு வால்ட் டிஸ்னி ஞாபகம் வருவதில்லை.

ஒரு காரின் பிம்பம் நமது மூளையில் பதிவாகி இருப்பதும் அது ஓடும் போது பதிவாகும் பிம்பங்களின் தொடர்ச்சியும் வெவ்வேறானவையாம். சிலருக்கு மூளையில் ஏற்படும் காயத்தால் 'மூவ்மென்ட்" என்பது தெரியாமல் போய்விடுமாம். அதாவது ஒரு கிளாஸ் தண்ணீரை அவரால் புரிந்து கொள்ள முடியும் அதையே கீழே ஊற்றினால் அவருக்கு அந்த பிம்பம் தெரியவே தெரியாது.

வழக்கமாக தன்னிடம் வரும் நோயாளிகளிடம் டாக்டர் கேட்கும் கேள்வி, "என்ன செய்யுது"

"டாக்டர் எனக்கு நாலு நாளா.... " இப்படி இருக்கும் பதில்

ஆனால் தான் செத்துப் போய்விட்டதாக சொல்லும் ஒரு ஆசாமியிடம் டாக்டர் என்ன பதில் சொல்லனும் யோசித்துப் பாருங்கள்

இராமசந்திரன் இதனை Cotard syndrome or walking corpse syndrome, என்கிறார்

ஒவ்வொருவரின் செய்கையில் தெரியும் விநோதங்களுக்கும் ஒரு நரம்பியல் காரணம் இருக்கும் எனும் விஞ்ஞானத்தினை மிக எளிமையாக நல்ல உதாரணங்களுடன் சொல்லும் இராமசந்திரனை தமிழ்ப் பதிப்பகங்கள் கவனிக்க வேண்டும்

சக பயணி 7"வெவ்வேறு வடிவங்களோ அல்லது செயல்களோ கடவுளை நமக்கு காட்டிவிட இயலுமா" மன்னன் கேட்ட கேள்வி

என் சக பயணி இடை மறித்தார், " சார் இந்த விளக்கம் எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது"

"ஓ அப்படியா.. சரி சில கேள்விகள் கேட்டு பதில் சொல்ல வைப்பதன் மூலம் உங்களுக்கு நான் சொல்ல விழைவதை விளக்க இயலுமா எனப் பார்க்கிறேன்"

"சரி கேளுங்கள்"

"உங்களுக்கு கடவுள் எப்போதெல்லாம் தேவைப்படுகிறார்"

"இதென்ன கேள்வி. கடவுள் என்ன தேவைப்படுகிறார் எனும் வகைக்கான பொருளா இல்லை தின்பண்டமா"

"எனக்கு மிகவும் வேலை வைக்காமல்.. நீங்களே இந்த சப்ஜெக்டை மிகவும் சுலபமாக்கிவிட்டீர்கள். நம்மில் பலர் கடவுள் எனும் சித்தாந்தத்தை உணர்ந்திருக்கின்ற வகையினைக் கவனியுங்கள். Daily அவரவருக்கு உண்டான க்டமை நிறைவேற்ற கடவுள் எப்படி தேவைப்படுகிறார். நமக்கு எந்த இடையூறு வருவதை தடுக்கவும், நமக்கு மிகவும் ஒத்தாசையாக இருக்கவும். நமது வேலைகள் சிறப்புற நடந்துவிட்டால் நன்றி சொல்லி மகிழ்ந்து கொள்ள ஒருவனாகவும், வியாதியே வராத வாழ்க்கை வழங்கிடவும், அப்படியே வந்துவிட்டால் அதனை நீக்கும் வைத்தியனாகவும் இப்படி பலவாறாக ஒரு தனிமனித தேவைகளைப் பூர்த்தி செய்து வைக்கும் பணியாளனாக கடவுள் நமக்கு தினசரி வாழ்வில் இழையோடுகிறார் அல்லவா"

"ஆமாம் இதில் என்ன தவறு"

" இப்படி தனிமனித நோக்கங்களை நிறைவேற்றும் அம்சம் எப்படி ஒரு மஹாத்மாவின் சிந்த்னைக்கு கடவுளாக இருக்க இயலும் சார் ! அவருக்கு இப்படியான தனிமனித கடவுளில் விருப்பமில்லை. அவரது இராம பக்தி அல்லது பக்தியை அவர் வெளிப்படுத்த கையாண்ட முறைகள் யாவுமே இப்படியான தனிமனித நோக்கம் நிறைவேற்றும் ஓர் அம்சத்தினை அவர் கடவுளாக கொண்டிருந்தார் என்பதைக் காட்டவோ நிறுவவோ இல்லை.. அவர் நம்பிய கடவுள் எல்லாத் தனிமனிதனையும் வழிநடத்தும் நன்னெறி, இன்னும் மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமெனில் எந்த காரணத்துக்காகவும் மனிதருள் வேற்றுமை பாராட்டாத மனோபாவம் அதன் வழியில் அமைத்துக் கொள்ளும் வாழ்க்கை முறை அதனை எந்த வித காம்ப்ரமைஸும் செய்து கொள்ளாமல் மிகத் திடமாகப் பின்பற்றும் மனோதிடம் இவைதான் அவர் நம்பிய கடவுள் , அவர் தொழுத கடவுள் இந்தக் கடவுளின் பாதையில் சென்றால் தனிமனிதனின் தேவைகள் அவன் உழைப்பின் மூலமே பூர்த்தியாகும் என்பதும் அவரது நம்பிக்கை. சுருக்கமாக சொன்னால் அவர் கொண்டிருந்த கொள்கையை ஞான யோகமாகவும் தான் செய்ய வேண்டியதை கடமை உணர்வுடன் சோர்வின்றி அச்சமின்றி நிறைவேற்றும் கர்மயோகியாகவும் அவர் வாழ்ந்தார் அவருடைய மொழியிலேயே சொல்வதெனில் Performance of duty and observance of morality are convertible terms. To observe morality means mastery over our mind and over our passions. So doing we know ourself"

தொடரின் ஏனைய பகுதிகளைப் படிக்க வலப்பக்கம் சிறியதாக உள்ள காந்தியாரின் படத்தினைக் க்ளிக் செய்யவும்

பயணம் தொடரும்

தலைமைச் செயலகம் பார்ட் 4இப்படியாக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது என அப்போதைய ஜெ அரசு முடிவு செய்த இடத்தில் அமைய உள்ள கட்டிடத்தின் வடிவமைப்பினை தயார் செய்யும் நிறுவனத்தினை இறுதி செய்ய டென்டர் விடப்பட்டு அதில் ஆறு பேர் கலந்து கொண்டு அதில் சி.ஆர் நாரயண ராவ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அரசாணையும் வெளியடப்பட்டது .
பொதுப்பணித் துறை கட்டிடங்கள் பிரிவு அரசாணை எண் : 1184 நாள் 8 அக்டோபர் 2003

கட்டுமானப் பணிகள் தொடங்க இருந்த நிலையில் இந்த திட்டத்தினை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

இப்படி கட்டிடம் கட்டுவது சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதலைப் புறக்கணிப்பதாக உள்ளது, ஏற்கனவே மஹாபலிபுரம் அருகே அரசு நிர்வாக நகரம் அமைக்க அரசு உத்தேசித்துள்ள நிலையில் கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது ஒரு தற்காலிக முயற்சி இதற்கு இத்தனை செலவு தேவையா, உள்ளிட்ட பல கோணங்களில் பலர் இதனை நீதி மன்றத்தில் எதிர்த்தனர்

நீதி மன்றம் அரசு கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் அமைக்க தடையேதும் இல்லை என சொல்லி மனுவைத் தள்ளுபடி செய்தது

ஆனாலும் கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தினை ஜெ அரசு தொடரவில்லை

இதற்கு முன் இராணி மேரிக் கல்லூரி வளாகத்தில் அந்த கல்லூரியினை இடித்து விட்டு அங்கே தலைமைச் செயலக வளாகம் அமைக்கலாம் எனும் முந்தைய ஜெ அரசின் திட்டம் ( ?! ) குறித்துப் பார்க்கலாம்

1914 ம் வருடம் மதராஸ் பெண்கள் கல்லூரி எனத் தொடங்கப்பட்ட மிகப் பழமையானதொரு கல்வி நிறுவனம் சென்னைக் கடற்கரைக்கு எதிரே தமிழக காவல் துறை தலைமை அலுவலகத்தின் அருகே உள்ள இராணி மேரிக்கல்லூரி. இப்படியானதொரு சரித்திரப் புகழ்வாய்ந்த கட்டிடம் முந்தைய ஜெ அரசின் பார்வையில் விழுந்தது. தலைமைச் செயலகம் கட்ட இந்த வளாகம் தேர்வானது ; இருக்கும் கட்டிடம் இடிக்கப்படவும் ஆணை பிறந்தது

(தொடரும்)

கவர்னர் உரை‍ 1

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜீன் 3 அன்று கவர்னர் ஆற்றிய உரையிலிருந்து இரண்டு அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த சிறிய தொடர் பதிவினை பகிர்ந்து கொள்ள உத்தேசிக்கின்றேன்

முதல் அம்சம் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்பட்டு மோனோ ரயில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

அது என்ன மெட்ரோ அது என்ன மோனோ என கவனிக்கலாம். புரிந்து கொள்ளும் வசதிக்காக எளிமைப் படுத்தி சொல்வதெனில் ஒற்றைத் தண்டவாளத்தைக் கவ்வியபடி இயங்கும் ரயில் வண்டியினை மோனோ என சொல்லலாம். மெட்ரோ ரயிலுக்கும் சாதாரண ரயிலுக்கும் வித்தியாசமில்லை என சொல்லலாம். மோனோ என்பது 'ஒற்றை" என்பதைக் குறிக்கும் சொல். மோனோவோ மெட்ரோவோ இரண்டும் தரையில் இயங்குவதாலோ அல்லது உயரமாக்கப்பட்ட ப்ளாட்பாரத்தில் இயங்குவதாலோ வேறுபட்டதல்ல. தண்டவாளம் எனும் Rail தான் வித்தியாசம்

அமைய உள்ள மோனோ ரயில் மெட்ட்ரோ ரயிலுக்கான மாற்று என்பதாக கவர்னர் உரையில் தொனிக்கப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில் தொடர்பான சில விபரங்களைச் சொல்வது பொருத்தமாக இருக்கும்

சென்னையில் தினசரி அதிகரித்துக் கொண்டே வரும் போக்குவரத்து தேவைகளைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டம் வடிவம் பெற்றது. இந்த திட்டம் ஏனைய போக்குவரத்து கட்டமைப்புகளான பேருந்து, நடைமுறையில் இருக்கும் சப் அர்பன் ரயில்கள், பறக்கும் ரயில் என செல்லமாக அழைக்கப்படும் எம்.ஆர்.டி எஸ் இவற்றுடன் தேவையான அளவு இன்டகெரெட் செய்துகொள்ளும் வண்ணமாக இருக்கும்படி வடிவம் கொண்டது
இந்த திட்டம் வடிவமைப்பு பெறும் ஆரம்ப கட்டத்திலேயே மோனோ ரயில் அமைப்பும் பரிசீலிக்கப்பட்டு மோனோ ரயில் அமைப்பு உத்தேசிக்கப்பட்ட தடத்தில் ஒரு மணி நேரத்தில் 10000 பயணியரை மட்டுமே சுமந்து செல்ல இயலும் ஆனால் மெட்ரோ ரயில் 30000 பயணியரை சுமந்து செல்ல இயலும் என்ற ஆய்வு முடிவின் காரணமாக மெட்ரோ ரயில் முறை தேர்வு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தினை செயல்படுத்திட தமிழக அரசு Chennai Metro Rail Limited எனும் நிறுவனத்தினை கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்து டிசம்பர் 3 2007 அன்று தொடங்கியது .

பின்னர் இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு இரண்டும் சேர்ந்து நிர்வகிக்கும் நிறுவனமாக மாற்றப்பட்டது . மத்திய , மாநில அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் பொறியியல் வல்லுநர்கள் இதன் தலைமை நிர்வாகப் பொறுப்பில் உள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஆலோசகராக அதாவது கன்சல்டன்ட்டாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்புக் கொண்டு அதற்கான முறையான நிர்வாக ஆவணங்களும் பதிவாகின.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு பகுதிகளாக நடைமுறைப் படுத்த திட்டம் வடிவமைக்கப்பட்டது இதனை காரிடார் 1 என்றும் காரிடார் 2 என்றும் பெயர் கொடுத்தனர்.

காரிடார் 1 : வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை 23.1 கி மீ தூரமுள்ள தடமாகவும்

காரிடார் 2 : சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து செயின் தாமஸ் குன்று வரை 22 கி மீ தூரமுள்ள தடமாகவும் திட்டமிடப்பட்டது

இரண்டு காரிடார்களிலும் தடம் தரைக்கு கீழேயும், உயர்த்தப்பட்ட தளத்தில் இயங்கும் வகையிலும் திட்டமிடப்பட்டது திட்டம் பொறியியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தயாரிக்கப்பட்டு நவம்பர் 7 2007 அன்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு அதன் பின்னரே சென்னை மெட்ரோ ரயில்
நிறுவனமும் அமைக்கப்பட்டது

இந்த திட்டத்தினை 28 ஜனவரி 2009 அன்று மத்திய அரசு அங்கீகரித்தது . திட்டத்தின் மொத்த மதிப்பீடு 14000 கோடி என மதிப்பிடப்பட்டு இதில் தமிழ் நாடு அரசும் மத்திய அரசும் கூட்டாக 41 % சதவிகிதம் ஏற்பது எனவும் மீத தொகையினை Japan International Cooperation Agency (JICA). கடனாக வழங்க சம்மதித்து . இந்திய அரசுக்கும் அந்த ஜப்பான் நிறுவனத்திற்கும் இடையே 28 நவம்பர் 2008 அன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடன் ஒப்பந்தம் கையொப்பமானது

இந்த திட்டத்தினை செயல்படுத்த டென்டர் விடப்பட்டு கீழ்கண்ட நிறுவனங்களுக்கு

M/s. Soma Enterprise Limited
M/s Consolidated Construction Consortium Limited
M/s Tantia Construction Limited
M/s. Larsen & Toubro Limited (L&T)
M/S Transtonnelstroy-Afcons JV
M/S Metro Tunnelling Chennai L&T-SUCG JV
M/s Alstom Transport S.A & Alstom Projects India Ltd Consortium
M/S Gammon-OJSC Mosmetrostroy JV
M/S Siemens, AG and Siemens India Limited Consortium
M/S Voltas Ltd
THE Nippon Signal Co Ltd
M/S Emirates Trading Agency LLC, Dubai and ETA Engineering Private Limited, India Consortium

தரைக்கு கீழே உள்ள நிலையங்களுக்கு ஏர்கண்டிஷன் செய்வது, தானியங்கி டிக்கெட் வழங்கும் மெஷின்கள் அமைப்பது பராமரிப்பது, குகைப் பாதைக்கான காற்று வசதி மற்றும்

வென்டிலேஷன் வசதி அமைப்பது பராமரிப்பது,சிக்னல் சிஸ்டம் அமைப்பது பராமரிப்பது, தண்ட்வாளங்கள் அமைப்பது பராமரிப்பு, ரயில் பெட்டிகள் வழங்குவது, மின்சார அமைப்புகள் அமைப்பு பராமரிப்பு இது போன்ற திட்டத்தில் தொடர்புடைய பல பணிகளுக்கு டெண்டர் மூலம் முடிவு செய்யப்பட்டு ஆர்டர் வழங்கப்பட்டு ஆங்காங்கே பணி நடைபெற்று வருகிறது

இந்த திட்டம் மாநில அரசின் திட்டம் மட்டுமல்ல மத்திய மாநில அரசுகளின் கூட்டு செயலாக்கம். அதன்றி ஜப்பானில் உள்ள நிறுவனம் மத்திய அரசிடம் செய்து கொண்ட கடன் ஒப்பந்தத்தின் மூலம் கடனாகப் பெறும் தொகையில் வடிவம் பெறும் திட்டம். மத்திய அரசும், ஜப்பானிய நிறுவனமும் திட்டத்தின் மதிப்பீடுகள், திட்டத்தில் தொடர்புடைய பொறியியல் , வருவாய், நிதி, முதலிய அம்சங்களை கவனத்தில் கொண்ட பின்பு தான் இதற்கான ஒப்புதலை வழங்கவும், உரிய முதலீட்டைச் செய்யவும் , கடனை வழங்கவும் சம்மதித்துள்ளன .
அப்படியான நிதியினை வழங்கியுமுள்ளன .

அதன் அடிப்படையிலேயே திட்டம் செயலாக்கம் பெற கட்டுமானம் மற்றும் பிற பணிகளுக்கு டென்டர் விடப்பட்டு பல உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்டர் பெற்று பணி தொடங்கியுள்ளன‌

இப்போது மெட்ரோ மோனோ ரயிலாகும் என்ற அறிவிப்பினால உண்டாகும் கேள்விகள்

1. மெட்ரோ ரயில் அமைப்பு முழுவதும் கைவிடப்பட்டு மோனோ என்பதாகுமா

2. அதே வழித் தடங்களா இல்லை புதியனவா

3. இந்த மாற்றத்திற்கு இந்த் திட்ட செயலாக்கத்தின் இணை பொறுப்பாளரான மத்திய அரசின் அனுமதி ஒத்துழைப்பு எவ்வாறு அமையும். காரணம் மத்திய அரசில் திமுக வகிக்கும் பங்கு

4. . தனது உத்திரவாதத்தின் மீது ஜப்பானிய நிறுவனம் வழங்கியுள்ள கடன் தொகைக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டாமா

5. ஆர்டர் பெற்று இது வரை பணி செய்துள்ள நிறுவனங்கள் என்ன செய்யும் ; தமிழக் அரசு என்பது ஜெயலலிதாவுக்கோ அல்லது கருணாநிதிக்கோ சொந்தமானதல்ல ; TamilNadu Government Functions in a Common Seal and has perpetual succession எனும் தார்மீக சட்டம் சார்ந்த கோட்பாடு அந்த நிறுவனங்களுக்குத் தெரியாதா

மெட்ரோ அல்ல மோனோ ரயில் எனும் மாறுதல் அறிவிப்பு வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல . அல்லது இரண்டு தண்டவாளம் அல்ல ஒரே தண்டவாளத்தில் இயங்கும் மோனோ ரயில் எனும் ஜஸ்ட் லைக் தட் அறிவிப்பும் இல்லை. இதனுடன் இணைந்து Engineering related Plans, நிர்வாகம், நிதி, வருவாய், மத்திய அரசு, அதனுடன் உறவு, அதன் முதலீடு, ஜப்பான் நிறுவனம், அது வழங்கிய கடன், வேலை தொடங்கிய கம்பெனிகள், அவற்றின் நிதி, வருவாய் என்பதன்றி சட்டம் சார்ந்த பல அம்சங்கள் கொண்டது.

காத்திருப்போம். இந்த புது (! ?) திட்டம் எத்தனை எதிர்ப்புகள சந்தித்த பின் வடிவம் பெற வேண்டும் என்பதை நினைக்கும் போது இன்னும் எத்தனை காலம். அந்த காலத்திற்கு இத்தனை தொகைக்கு என்ன வட்டி எனும் கேள்விகள் உதிக்கின்றன‌

(அடுத்த பதிவில்)

Friday, 3 June 2011

ஞாயிறு 05 ஜூன் 2011 பதிவுகளுக்கான முன் அறிவிப்பு


வரும் ஞாயிறு பதிவிட உள்ள பதிவுகளை குறித்து ஒரு முன்னறிவிப்பு செய்யலாம் என ஆசை

கவர்னர் உரை
தலைமைச் செயலகம் தொடரின் பதிவு
சக பயணி தொடரின் பதிவு
Tell Tale Brain