Sunday 20 February 2011

பக்கம் பக்கமாய் 3


சுமார் ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் புதுக்கோட்டை சென்றிருந்தேன். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நான் வாழ்ந்த இடம் . காலச் சூழலின் மாறுதல்கள் நிறைய தெரிந்தன.

எனது கல்லூரிப் பருவத்து தேநீர்க் கடையொன்று உண்டு. தேநீர் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இருக்காது எனினும் அந்தப் பிராயத்துக்கே உரித்தான அரட்டைக்கு நிறைய இடம் தந்த கடை . அந்த கடையின் ஓனர் தீவிர கருணாநிதி பற்றாளர். அவரது ஒவ்வொரு செயலிலும் அதை பிரதிபலிப்பார். யாரவது "இரண்டு " என விரல் காட்டி தேநீர் கேட்டால் அவ்வளவு தான். இரண்டு என விரலால் சைகை சொல்பவர்கள் ஆள் காட்டி விரலும் அதை அடுத்த நடு விரலையும் தானே காட்டுவார்கள் . இந்த சைகை அவர்கள் "இரட்டை இலை" சின்னத்தைக் குறிப்பதாக இவர் வலிய பொருள் கொண்டு , அவர்களுடன் விவாதம் செய்யத் தொடங்குவார். " இதோ பாருங்க .. நீங்க பள்ளிக் கூடத்துல நம்பர் எண்ணக் கத்துக்கும் போது ஒன்னு , ரெண்டு எப்படி எண்ணுவீங்க. முதல்ல சுண்டி விரலைத் தானே விரிப்பீங்க"

அவரின் அந்த லாஜிக் எனக்கு அப்போது ஒரு வறட்டு பிடிவாதமாக தெரிந்தது

கார்த்திக் சுப்பிரமணியன் The Mathematical Traveler - Exploring Grand History of Numbers என ஒரு புத்தம் அனுப்பி படித்துப் பாருங்கள் என சொன்னார் - Calvin C Clawson எழுதியது

How do we Count என மிக அடிப்படையான சங்கதியில் தொடங்கி நம்பர்களுடன் நாம் தினசரி நடத்தும் குடித்தனத்தில் இத்தனை ஆச்சரியமான ஆராய்ச்சி செய்ய இயலுமா என வியக்க வைக்கிறது.

நியு கினியாவின் பூர்வ குடிகள் எப்படி எண்ணுகிறார்கள் தெரியுமா

ஒன்று - வலது சுண்டி விரல்
இரண்டு - வலது மோதிர விரல்
மூன்று- வலது நடு விரல்
நான்கு - வலது ஆள் காட்டும் விரல்
ஐந்து - வலது கட்டை விரல்
ஆறு - வலது மணிக்கட்டு
ஏழு - வலது முழங்கை
எட்டு - வலது தோல்
ஒன்பது - வலது காது
பத்து - வலது கண்
பதினொன்று - இடது காது
பனிரெண்டு - மூக்கு
பதிமூன்று - வாய்
பதினான்கு - இடது காது
பதினைந்து - இடது தோள்
பதினாறு - இடது முழங்கை
பதினேழு - இடது மணிக்கட்டு
பதினெட்டு - இடது கட்டை விரல்
பத்தொன்பது - இடது ஆள்காட்டு விரல்
இருபது -இடது நடு விரல்
இருபத்தி ஒன்று- இடது மோதிர விரல்
இருபத்தி இரண்டு - இடது சுண்டி விரல்

இந்த விபரம் அடங்கிய இந்த புத்தகத்தின் சாப்டரை மெரினாவிலே காற்று வாங்கியவாறு படித்துக் கொண்டிருந்தேனா .. இப்படி விரலையும் உடல் பாகங்களையும் தொட்டு எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தேன் .

அந்த வழியாக சென்ற வாக்கிங் பெண்ணொருத்தி என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே போனாள்