Monday, 18 August 2008

பச்சை மைப் பேனா


ஸ்ரீநிவாசனாகிய எனக்கு மகிழ்ச்சி ஜாஸ்தியாகத்தான் இருக்கிறது. இந்த பதவி உயர்வு எதிர் பார்த்து வந்தது தான். இது வரை ஏக்கமாகப் பார்த்த ”பச்சை மைக் கையெழுத்தை” தானே போட முடியும். அதான் கெஜெட்டட் ஆபிசர். இப்பெல்லாம் யார் ப்ரமோஷனும் கெஜெட்டில் வர்றதில்ல. ஆனாலும் அந்த பேர் அப்படியே இருக்கு.

இன்னிக்கே போற வழில ஒரு நல்ல பேனா வாங்கணும். பச்சை இங்க் வாங்கணும். என்ன இந்த ப்ரமோஷன் உள்ளூரிலிருந்தால் வீட்டு வாசலுக்கு ஜீப் வந்து கூட்டிண்டு போகும். இப்ப என்னடாண்ணா தினம் அறுபது கிலோமீட்டர் பஸ்ஸில தினம் பிரயாணம் பண்ணனும். இருக்கட்டும் இப்போ போய் ஜாயிண் பண்ணிடலாம் அப்புறமா மெள்ள டிரான்ஸ்பர் வாங்கிண்டு வந்திடலாம். இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரில் வர்ற ஜோசியக் காலம் பலிக்றது.. பீட்டர் வைடால் இப்பத்தான் ரெண்டு வாரம் முன்னால எழுதினான். இதோ ப்ரமோஷன் வந்திடுத்தே. ஆனாலும் இந்த ராமுடு சுத்த மோசம். இதுக்கெல்லாம் மெட்ராஸ் போகணும் மந்திரியப் பாக்கணும். டைரக்டரை சேவிக்கணும் அப்படி இப்படினு பயம் காட்டிட்டானே. இன்னும் எல்லாம் சீனியாரிட்டிப்படி தானே நடக்கிறது. இதோ நிதர்சணமாத் தெரியறதே. நான் யாரையும் போய்ப் பார்கலே; குழையலே, பைசா தரலே.. ஆட்டோமேடிக்கா வந்துடுத்தே. என் சர்வீஸ் புக் க்ளியர். ஒரு மெமோ கிடையாது.. எல்லா டிபார்ட்மெண்ட் டெஸ்டும் கிரமமா பாஸ் பண்ணிருக்கேன். நான் வேலை பார்த்த எல்லா இட்த்திலேயும் பி. ஆர் வாங்கிப் பாருங்கோ. கண்லே ஒத்திக்ற மாதிரி இருக்கும். டிபார்ட்மெண்ட் ரூல்ஸ் எல்லாம் எனக்கு அத்துப் படி.
ஒரு விசை கவர்னர் எங்க டிபார்ட்மெண்ட் எக்சிபிஷனை பார்க்க வந்திருந்தார். நான் தான் அவரோட பயண ஏற்பாடெல்லாம் கலெக்டர் ஆபிசோட கோஆர்டினேட் பண்ணினேன். அப்பத்தி கலெக்டர் என்னைப் பத்தி சிலாகிச்சி கவர்னரண்டையே ஒரு வார்த்தை சொன்னார். அதை குறிச்சிக்க சொல்லி கவர்னர் தன்னோட காரியதரிசிகிட்ட சொன்னார். ஒரு வாரம் இருக்கும் கவர்னர்கிட்டேயிருந்து ஒரு கடிதாசி வந்த்து. என்னைப் பாராட்டி புகழ்ந்து ஒரு அஞ்சாறு வரி எழுதி கவர்னரே கையெழுத்துப் போட்டிருந்தார். இந்த மாதிரி பாராட்டு வந்தா சர்வீஸ் பொஸ்தகத்திலே பதியனும். அப்ப இருந்த ஈ.ஓ பொறாமைப்பட்டுண்டு கண்டுக்கலை. ஏதாவது சென்ஷியூர், சார்ஜ் மெமோன்னா உடனே அதை காரியமா எழுதுவார் அவர். அப்படி ஒரு நல்ல மனசு.. ஆனா நான் அதை லேசிலே விடலை.. ஒரு விசை கலெக்டர் இன்ஸ்பெக்‌ஷன் வர்றச்சே நைசா அவருக்கு தேங்க்ஸ் சொல்ற மாதிரி இந்த விஷயத்தை ஞாபகப்படுத்தினேன். அவரே ஈ.ஓ கிட்டே இதெல்லாம் உடனே சர்வீஸ் பொஸ்தகத்தில எழுதணும் தள்ளிப் போடப்பிடாதுனு சொல்லிட்டார். இப்ப அதெல்லாம் பேசிருக்கு அதான் எனக்கு நியாயமான முறையில டர்ன் படி ப்ரமோஷன் கிடைச்சிருக்கு
பேனா வாங்கியாச்சு பச்சை மையும் வாங்கியாச்சு. புது போஸ்ட்லே ஜாயின் பண்ணின உடனே அங்கேயும் ஒரு பாட்டில் மை வாங்கி வச்சிடணும். இங்கே இருக்ற மாதிரி எல்லாரண்டையும் லேசா இருக்கப் பிடாது. கொஞ்சம் கரார் சேத்துக்கணும். அந்த ஜி செக்‌ஷன் சோம சுந்தரம் மாதிரி. அவனும் என் ரேங்க்தான். ஆனா என்னை மாதிரியில்லியே. மிடுக்கா இருப்பான். அவன் செக்‌ஷன் ஆளுங்க எல்லாம் சூப்பிரண்ட் சார் சூப்பிரண்ட் சார்னு பவ்யமா இருப்பாளே. அவனும் நானும் ஒரே பேட்ச் ஒரே நாள் ஜாயினிங் டேட் ஆனா இந்த ப்ரமோஷன் அவனுக்கு வரல. அவன் ஒரு டிபார்ட்மெண்ட் டெஸ்ட் எழுதவேயில்லை. நானும் சொல்லிப் பார்த்தேன். அவன் கேக்கலை அவன் எழுதி பாஸ் பண்ணிருந்தான்னா இப்ப அவனும் என்ன மாதிரியே பச்சை மை ஊத்தி பேனாவை ஜோபில சொருகிக்கலாம்.
இன்னிக்கு கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ணனும். அந்தப் பிள்ளையார் சக்தி வாஞ்சவரா இருக்கார். இந்தப் பச்சை மைப் பேனாவை அவர் பாத்த்திலே வச்சி வாங்கணும்.

புது ஆபிஸ் நல்ல இடம் தான். பக்கத்திலே ஒரு நல்ல காபி கிடைக்குமானு விசாரிக்கணும். இவாள்ளாம் ப்ரு காபிதான் போடுவா. டிகாஷன் காப்பியே சாப்பிட்டு நாக்கு பழகிப் போச்சி. அதும் ருசி வேறதுக்கும் வராது. அதும் ‘ஏ’ கிரேட் கொட்டை வாங்கிப் பதமா வறுத்து மெஷின்ல போட்டு மெதுவா கையாலே சுத்தி பொடியோட சிக்கரி சேர்த்து... சிக்கரினோன்ன ஞாபகம் வர்றது. இன்னிக்கி திரும்பிப் போறச்சே வாங்கணும்.

என்ன இந்த ஆபிஸ்ல ஃபைல் மூவ்மெண்ட் தாமதமா இருக்கு. ஆசையா முழு கையெழுத்து ஸ்ரீநிவாசன் அப்படினு ஒரு பைல்ல கையெழுத்துப் போடணும்னு நம நமனு இருக்கு.

நான் எல்லாம் கிரம்மா செய்யணும்னு நினைக்கிறவன். ஜாயினிங்க் ரிப்போர்ட்லே நான் நீலக் கலர் மைலதான் கையெழுத்துப் போட்டேன். காரணம் இருக்கு; இங்க ஜாயின் ஆனதுக்கப்புறம் தானே ஆபிசர். அப்புறம் தான் பச்சை மை. ஆபிஸ் சூப்பிரண்டெண்டெண்ட் ( இப்படித்தான் சொல்லனும் சூப்பிரண்ட் அப்படின்னா என்னவோ கெட்ட வார்த்தை மாதிரி இருக்கு) கிட்டே சொன்னேன். முதல் பைல் அக்கப்போரா ஒண்ணைக் கொண்டு வந்து அப்ரூவ் பண்ணுனு சொன்னா நான் பண்ண மாட்டேன்னு. நல்ல விதமா ஒரு ஆபிஸ் நோட் எழுதி எடுத்துண்டு வந்தா கூட அதுல இனிஷியலுக்குப் பதிலா முழு கையெழுத்து விஸ்தாரமா போடறதுன்னு தயாரா இருக்கேன். இதுக்கோசரம் வெத்து வெள்ளைப் பேப்பர்ல இது வரை ஒரு அம்பது தரம் போட்டுப் பார்த்திருப்பேன். அதெல்லாம் நீலக் கலர் தான். முதல் பச்சை மைக் கையெழுத்து அரசாங்க காகித்த்துல தான். அதும் நல்ல சங்கதியா இருக்கணும்.

மேஜை கண்ணாடிக்குக் கீழே ஸ்வாமி படங்கள் இருக்கு. பரவாயில்ல நாமும் நாளைக்கு ஒரு பிள்ளையார் படம் கொண்டு வந்து வைக்கணும். கண் மூடி நினைச்சிண்டேன். இந்தப் பேனாவினால யாருக்கும் உபத்திரவம் தர்ற் மாதிரி ஒரு மெமோ, சார்ஜ் மெமோ, இன்ஸ்பெக்‌ஷன் ரிப்போர்ட் இப்படி எதுவும் கையெழுத்துப் போடற மாதிரி வரப்பிடாது. எல்லாம் சுப காரியமாவே இருக்கணும். சாத்தியமில்ல தான். இருந்தாலும் நல்லதே நினைப்போமே.

இதோ என் காபின் கதவை தட்றாளே- முதல் பைல் வந்திடுத்து.

“என்ன சூப்பிரண்டெண்டெண்ட் பஞ்சாபகேசன் சார். நான் சொன்ன மாதிரி ஒரு நல்ல விஷயமான பைல் தானே “ னு கேட்டுண்டே நாடாவை நாசுக்கா பிரிக்கிறேன்.
நான் இந்த டாட்டன்ஹாம் சிஸ்ட்த்தில எத்தனை வருஷம் இருந்திருக்கேன் அப்படினு நான் பைலோட டேப்பை அவிழ்க்ற வித்த்திலேயே தெரிஞ்சிக்கலாம். இருங்கோ முதல் பச்சை மைக் கையெழுத்து. என்ன சப்ஜெக்ட்னு படிக்கிறேன்.

என்ன இது கோர்ட் ஆர்டர் மாதிரின்னா இருக்கு

படிச்சிட்டு பஞ்சாபகேசனை நிமிர்ந்து பாத்தேன்

‘’ ஆமாம் சார். இந்தக் கட்டிடம் வாடகைக் கட்டிடம். இதோட ஓனர். இதைக் நாம காலி பண்ண என்னென்னெவோ செஞ்சார். நாம சரியா நடந்துக்கல. அப்புறம் கோர்ட்டுக்குப் போனார். நாமளும் கௌர்மெண்ட் ப்ளீடர் சொன்னதாலா வாய்தா வாய்தாவா வாங்கி இழுத்தடிச்சிருக்கோம். நான் இங்க வந்தே ஒரு ஆறு வருஷம் இந்த இழுத்தடிப்பைப் பார்த்திருக்கேன். கடைசில கோர்ட் அவருக்கு சாதகமா தீர்ப்பு சொல்லி நாம போன வருசமே காலி பண்ணிருக்கணும். கோர்ட் கெடு தேதி கூட வச்சிருந்த்து. இதுக்கு முன்னே இங்க இருந்த ஈ.ஓ அதை சரியா டிபார்ட்மெண்ட்டுக்கு கன்வே பண்ணலை. இத்தனைக்கும் இந்த வழக்கில நம்ம டிபார்ட்மெண்ட் டைரக்டரும் ஒரு பிரதிவாதி. அவர் தரப்பில ஒரு கௌண்டர் கூட தாக்கல் ஆகிருக்கு. காலி பண்ண கெடு தேதி சொல்லியும் காலி பண்ணாத்தால கட்டிட ஒனர் கோர்ட்டை மூவ் பண்ணி ஜப்தி ஆர்டர் வாங்கிட்டார். இப்ப கோர்ட் ஸ்டாப், போலிஸ் சகிதம் வெளில ஹால்லே உக்கார வச்சிருக்கேன். இதிலே நீங்க உங்க முன்னாடி தான் இந்த ஆபிஸ் ஜப்தி ஆச்சினு கையெழுத்துப் போட்டுத் தரணும். நாம இப்ப ஒண்ணும் பண்ண முடியாது. மேல் கொண்டு அப்பீல் செய்யலாம். அவாள்ளாம் வெயிட் பண்றா”

ஸ்ரீநிவாசன் என்ற என் சின்னப் பெயரை அந்த கோர்ட் காகித்த்தில் தினத்தந்தி தலைப்பு செய்தி அளவில் பச்சை மையில் விஸ்தாரமாய் நான் ஏன் கையெழுத்திடுகிறேன் எனப் புரியாமல் பார்க்கிறார் பஞ்சாபகேசன்

Saturday, 9 August 2008

கடிதம்-4


J Krishnamurthy என் ஆதர்சங்களில் ஒருவர். அவரது எளிமையான எழுத்துக்கள் என்னை வசீகரிக்கும் நீண்ட நாள் ஆச்சரியங்கள். அவரின் Sri Lanka Talks ம் Letters to Schools ம் என் புத்தக சேமிப்பில் பொக்கிஷம் என்றே சொல்லுவேன்

கிருஷ்ணமூர்த்தி தான் தொடங்கிய பள்ளியின் மாணவர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுதி.

முன்னுரை பாருங்கள்:

இந்தக் கடிதங்கள் நீங்கள் ஆயாசமாக் இருக்கும் போது படிப்பதற்கல்ல; இவற்றை நான் சிரத்தையுடன் எழுதினதைப் போலவே, சிரத்தையுடன் படியுங்கள். ஒரு பூவை அதன் இதழ், வர்ணம், மணம் கூடிய அழகை பார்த்துப் பயிலுவது போல இந்தக் கடிதங்களையும் பயிலுங்கள்

ஜனவரி 15 1982ல் எழுதப்பட்ட கடிதம் :

I think it is important to learn the art of thinking together. The scientists and the most uneducated human beings think. They think according to their profession, specialization and according to their belief and experience. We all think objectively or according to our own particular inclination, but we never seem to think together, to observe together. We may think about something, a particular problem or experience but this thinking does not go beyond its own limitation.

இப்படியாகத் தொடரும் இந்தக் கடிதத்தை

I am in stream with that which is godness, compassion and intelligence. That intelligence is acting, confronting the madness of the present world. That intelligence will be acting where the ugly is

என்று முடித்திருக்கிறார்

(கடித சுவாரசியம் இன்னும் தொடரும்)

Sunday, 3 August 2008

கடிதம்-3


நான் படித்த காதல் கதைகளிலே மிகவும் சுவாரசியமானதென ”ஸ்வர்ணகுமாரி” யைச் சொல்லலாம். ஸ்வதந்திர போராட்ட காலத்திய கதை. பாரதியார் சுபாவமாகவே ரசனை கொஞ்சம் ஜாஸ்தியான பேர்வழிதான் என நம்பத் தகுந்த மாதிரியான கதை.

கதையின் க்ளைமாக்ஸ் ஒரு கடிதம். ஸ்வர்ணகுமாரி எழுதும் கடிதம்

அதை அப்படியே தருகிறேன்..

“எனது காதலாராயிருந்த மனோரஞ்சனுக்கு,

நெடுங் காலமாக உறங்கி நின்ற நமது சுதேச மாத இப்போது கண் விழித்திருக்கிறாள். நமது நாடு மறுபடியும் பூர்வகால மஹிமைக்கு வருவதற்குரிய அரிய முயற்சிகள் செய்து வருகின்றது. இம் முயற்சிகளுக்கு விரோதமிழைக்கும் கூட்டத்திலே நீயும் சேர்ந்து விட்டாயென்று கேள்வியுற்றவுடனே எனது நெஞ்சம் உடைந்தே போய்விட்டது. இனி உன்னைப் பற்றி வேறு விதமான பிரஸ்தாபம் கேட்கும்வரை உன் முகத்திலே விழிக்க மாட்டேன். பெற்ற தாய்க்கு சமானமான தாய்நாட்டின் மீது அன்பு செலுத்தாத நீ, என் மீது என்ன அன்பு செலுத்தப் போகிறாய்?. நமது வாலிப எண்ணங்களைப் பற்றி நீ திருந்திய பிறகு யோசனை செய்து கொள்ளலாம். நான் காசியிலே என அத்தை வீட்டிற்கு சென்று ஒரு வருஷம் தங்கியிருக்கப் போகிறேன். அங்கே வந்து நீ என்னைப் பாராதிருக்கும்படி பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.”

இந்தச் சின்னக் கடிதம் மட்டுமே மொத்தக் கதையையும் ஓரளவு யூகிக்க வழி செய்யும்படியாக எழுதினது தான் பாரதியின் சாமர்த்தியம்.

இந்தக் கதையை எனது 12 ம் பிராயத்திலிருந்து தொடங்கி இதோ இப்போது வரை எத்தனையோ தடவை படித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் என் கற்பனையில் கதை மாந்தரை சில நடிகர் நடிகைகளாக உருவகப்படுத்தி மனதுக்குள் ஒரு சின்னத் திரை வெள்ளோட்டம் விட்டிருக்கிறேன்


(கடித சுவாரசியம் இன்னும் தொடரும்)