Wednesday 14 January 2015

க்ருஷ்ணாவதாரம்-8

க்ருஷ்ணாவதாரம்-8
----------------------------------

"ஸ்வாமி.. இதென்ன சோதனை.. ஆயர்பாடி மக்கள் என்ன தவறு செய்தார்கள்.. கம்ச ராஜாவுக்கு எங்கள் மேல் என்ன கோபம்"
" எனக்குத் தெரிந்த விபரத்தை சொன்னேனப்பா.. கம்சனின் சேவகர்கள் கோகுலத்தை முற்றுகையிட்டு கஷ்டம் கொடுக்க இருப்பது எனக்கு மிகவும் தாமதமாகக் தெரிகிறது.. அதனை உன்னிடத்தில் சொல்லிப் போகலாம் என வந்தேன்.. சொல்லிவிட்டேன்"
" ஸ்வாமி .. தங்களுக்கு நாங்கள் எல்லோரும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் .. வரவிருக்கும் இந்தக் கஷ்டத்திலிருந்து எங்களைக் காத்துக் கொள்ள் நல்லதொரு உபாயமும் நீங்கள் தான் சொல்ல வேண்டும்"
"அதைச் சொல்லத்தான்.. உன்னை உன் குடிலுக்குள் அழைத்து வந்தேன்.. இது தேவ ரகசியம்.. பிறர் அறியத் தகுந்ததல்ல.. அருகே வா சொல்கிறேன்.. "
இந்த சமயத்தில் நந்தகோபரின் குடில் வாசலுக்கு ஒரு குதிரை விரைந்து வந்து நின்றது.. அது நின்ற வேகத்தில்,, அதன் குளம்புகள் எழுப்பிய ஒலி, நாலாபுறமும் எழுப்பிய தூசி,., உள்ளே பேசிக் கொண்டிருந்த கர்க்காச்சாரியார், நந்தகோபரின் கவனத்தை சேர்த்தே கலைத்தது
"ஸ்வாமி யாரோ வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. குதிரை குளம்படி சப்தம் கேட்டதே"
"சந்தேகமே வேண்டாம், நந்தா,, இதோ குதிரை கனைக்கும் சப்தமே கேட்டதே.. வா.. போய் யாரென்று பார்ப்போம்.., நான் சொல்ல வந்த தேவரகசியம் நீ அறிந்து கொள்ள நேரம் வரவில்லை என நினைக்கிறேன்"
குதிரை மேல் ஆரோகணித்திருந்த வீரன் யாருமே விசாரிக்க அவசியமில்லாது, தான் ஒரு ராஜாங்க ஊழியன் என்பதை சொல்லிக் கொள்ளும்படிக்கு அலங்காரத்தில் இருந்தான்.
"என்ன விஷயமாக வந்தாயாப்பா"
ராஜாங்க உத்தியோகஸ்தருக்கான மிடுக்கு இருந்தாலும், அந்த வீரனுக்கு இங்கிதம் நன்றாகத் தெரிந்திருந்தது..
"ஸ்வாமி.. என் நமஸ்காரங்களை ஏற்றுக் கொண்டு என்னை ஆசிர்வதியுங்கள்"
"நன்றாக இருப்பாயப்பா.. உனக்கு குறையேதும் வராமல் இறைவன் காப்பாற்றுவான்.. வந்த விஷயத்தை சொல்லப்பா" "நான் நமது நந்தகோபருக்கு இளவரசரிடமிருந்து செய்தி கொண்டு வந்திருக்கிறேன்"

நந்தகோபரின் கண்களில் மிரட்சியைப் பார்த்துவிட்டு ஆறுதலாக அவரது கரத்தினை இறுகப் பிடித்துக் கொண்டே கர்க்காச்சாரியார் வினவினார்
"எதுவும் லிகிதம் இருக்கிறதா.. இல்லை வாய் மொழிச் செய்தியா ????"
"ஸ்வாமி.. வாய்மொழிச் செய்தி தான்.. நமது நந்தகோபர் மதுராவுக்கு வந்து இளவரசர் கம்சன் அவர்களை சந்திக்க வேண்டும் என்பது செய்தி.. இதனை என்னிடம் இளவரசரே சொன்னதை அறியவும்.. அது மட்டுமில்லை.. இது வேண்டுகோளோ,, விருப்பமோ இல்லை.. அவசியம் என்பதை இளவரசர் கட்டளையாக தெரிவித்து வரச் சொன்னார்.. நந்த கோபருக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்"
வந்த வீரன் மறுமொழிக்கு காத்திருக்காமல், லாவகமாக கடிவாளம் இழுத்து குதிரையைத் திருப்பிக் கொண்டு விரைந்து போனான்.. குளம்படிச் சப்தம்ம் மெதுவாக தேய்ந்து கேட்பது நின்று போனது.. காற்றில் எழும்பிய புழுதியும் மெதுவாக ஓய்ந்து தரை சேர்ந்தது.
அந்த  வீரன் பேசிய கடைசி வரிகள் அடங்காமல் நந்தகோபரின் யோசனையில் சுழன்று கொண்டே இருந்தன ---"இளவரசர் கட்டளையாக தெரிவித்து வரச் சொன்னார்.. நந்த கோபருக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்"
"என்ன யோசனை நந்தகோபா"
"ஸ்வாமி நமக்கு வேறு வழி இருக்கிறதா என்ன விருஷ்ணி குலத்தாருக்கும், யாதவருக்கும் இருக்கும் கசப்பு, மன வேறுபாடுகள், சச்சரவுகள் என்று போகுமோ.. நமக்கு வழி என்று பிறக்குமோ.. எது எப்படியோ.. நான் மதுராவுக்குப் புறப்பட தேவையான ஆயத்தங்கள் செய்கிறேன்"

இத்தனையும் கவனித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த யசோதை மௌனம் கலைத்து பேசினாள்
"ஸ்வாமி.. நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.. இவர் மதுராவுக்கு இப்போது போவது உசிதமா.. ஆறு வருஷங்களாக இளவரசர் கம்சனின் கோபம் அதிகமாகியிருக்கிறது.."
"யசோதை.. என்னைத் தடுக்காதே.. நான் போய் வருகிறேன்.. எல்லாம் பகவான் பார்த்துக் கொள்வான்"
ஆதிசேஷா,, என்னமோ சொன்னாயே பக்தனுக்கு என் மீது சந்தேகம் என்று.. பார்த்தாயா,, நந்த கோபனை..

"ஸ்வாமி.. நிஜமாகவே என் ஆவல் அதிகமாகிறது.. தங்கள் அவதாரம் நிகழ இருப்பதற்குள் இன்னமும் என்ன என்ன நிகழ்த்திக் காட்டுவீர்களோ.. நந்தகோபருக்கு மதுராவில் ஏதும் ........"
"உனக்கு எப்போதும் அவசரம் தான்.. பொறுமையாகக் கவனி.. அதோ பார்.. நந்த கோபன் மதுராவை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டான்"
(தொடரும்)