Sunday, 30 March 2008

வேலைப் பளூ


இப்படி ஒரு சங்கதியை அனுபவித்து அறியாதவர்கள் ஒன்று குழந்தையாய் இருக்க வேண்டும் அல்லது இமய மலை , திருவண்ணாமலையில் வசிக்கும் ரிஷியாக இருக்க வேண்டும்


என்னைப் போல சேவை செய்யும் தொழில் சார்ந்தவர்கள் ( SERVICE INDUSTRY), வொர்க் பிரஷர் ஜாஸ்தி என சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்வோம். பெருமை தவிர இந்த பிரஷரை சாக்கிட்டு வாரக் கடைசியில் குளிந்த பார்லி ஜலம் என்று தீர்த்த யாத்திரை போகவும் வாய்ப்புகள் ஜாஸ்தி


வாடிக்கையாளர்களுக்கு எங்களது சேவையை படம் போட்டு விளக்கி ( POWER POINT PRESENTATION) அவர்களை நைச்சியம் செய்து, வேகம் , விவேகம், நம்பகத்தன்மை என்று பல உத்திரவாதம் தந்து பிஸினெஸ் ஆர்டர்கள் கவர்ந்து வரும் முன்னனி மறவர்கள் எங்கள் அலுவலக விற்பனை பிரிவு மேலாளர்கள். இது ஒரு டீம். இவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற உடல், பொருள், ஆவி இவற்றை துச்சமாக மதித்து கருமமே கண்ணாயினார் வம்சமாய் கடமையாற்ற பல வீர ஆடவர் , வீர மங்கையர் கொண்டது ஒரு BACK END TEAM. நானிருப்பது இரண்டாவது டீமில். இந்த இரண்டு டீமும் காதலாய் கருத்தொருமித்து கரம் கோர்த்து வேலை செய்கையில் எல்லாம் சுளுவாய் தெரியும். கொஞ்சம் ஊடல் வந்தாலும் எல்லாமே பளுதான்.

விற்பனை பிரிவு மேலாளர்கள் எங்கள் அணியிடம் வேலை வாங்கும் தந்திரத்தைப் பார்த்தால் இவர்கள் போன ஜன்மத்தில் ஒரு விஷமக் குழந்தைக்கு சாதம் ஊட்டும் பேஜாரான வேலை பார்த்திருப்பார்கள் என நினைக்கச் சொல்லும். அவ்வளவு சாமர்த்தியமாக, "அதோ நிலா பார்" ," ஒரு ஊர்ல ஒரு ராஜா" மாதிரி, "அது வந்து கிளையண்ட் என்ன சொல்றார்னா", "இந்த கிளையண்ட் லட்டு மாதிரி. இப்ப சி.வி குடுத்தா இன்னும் 15 நிமிஷத்தில் FEEDBACK என்கிறதான பரிவு கலந்த போஷாக்கான வார்த்தைப் பிரயோகங்கள் இருக்கும். இதில் நிஜம் எத்தனை சதவீதம் என்பது உணர முடியாத விந்தை

விற்பனை பிரிவு மேலாளர்கள் பல நேரம் அபிமன்யு கணக்காய் யுத்த களத்தில் தனியாய் மாட்டிக் கொள்வர். எங்கள் BACK END TEAM சரியானபடி ஒத்துழைக்காத தருணங்களில், வாடிக்கையாளர்களிடம் மாட்டிக் கொண்டு புண்ணாகி என்னவோ சொல்லி சமாளித்து

சிதைவிடத்(து) ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றும் களிறு

கணக்காய் ஊக்கமாய் நிற்பார்கள்.

அப்படி என்ன காரணம் சொல்லி சமாளிக்கிறீர்கள் என்று அந்த அணி நண்பர்கள் செந்தில், க்ருஷ்ண குமார் (KRUSHNA KUMAR- க்ருஷ்ண என்ற சமஸ்க்ருத வார்த்தைக்கு சரியான ஆங்கில ஸ்பெல்லிங் வைத்திருக்கும் இவருக்கு ஒரு தனி சபாஷ்), ரஞ்சித், வித்யா, ரோஹித் எல்லோரிடமும் கேட்டிருக்கிறேன். ஒரு மழுப்பலான சிரிப்பை பதிலாகத் தருவார்கள். தொழில் ரகஸ்யம் போலும்..

சரியானபடி டீல் முடிந்து வாடிக்கையாளர் திருப்தி அடைந்த சந்தர்பங்களில் அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் போதும் இது அத்தனைக்கும் நீ தான் காரணம் என்று மகுடம் சூட்டும் போதும் நாங்கள் மனசளவில் ராஜா / ராணி டிரஸ் அணிந்து ஒரு சாரட் ஊர்வலம் வருவோம்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்

என்று தாடி வைத்த அய்யன் திருவள்ளுவர் சொன்னது கிளு கிளுப்பான சங்கதிக்கு மட்டுமில்லை; அலுவலகத்தில் டீமில் உண்டாகும் ஊடலுக்கும் கூடலுக்கும் பொருந்தும்.

என்னை விரட்டி சுளுக்கெடுக்கும் ரோஹித்( ரோஹித்துக்கு தமிழ் தெரியாது !!!! ) உள்ளடங்கிய எங்கள் விற்பனை ப்ரிவின் வீர ஆடவர், வீர மங்கையருக்கு ஒரு ராயல் சல்யூட்டுடன் இந்த போஸ்டிங்கை சமர்ப்பிக்கிறேன்

Saturday, 29 March 2008

அலெக்ஸாண்டரின் குதிரை


நான் தஞ்சாவூரில் இருந்தபோது எனது நண்பர் Dr. RSA. Alexander அப்போது பிரசித்தமாய் இருந்த சுசூகி மோட்டடார் பைக் வாங்கினார். அதெல்லாம் பிசகில்லை. அந்த பைக்குக்கு மாவீரன் அலெக்ஸாண்டரின் குதிரை பெயரை வைக்க வேண்டி ஆசைப்பட்டார். எனக்கு தெரிந்து மோட்டார் பைக்குக்கு நாமகரணம் செய்ய ஆசைப்பட்டவர் அவர் ஒருவராகத்தான் இருக்கும். இதில் சங்கடம் என்னவென்றால் அந்த குதிரையின் பெயரை கண்டுபிடித்துச் சொல்லும் அந்த கஷ்டமான வேலை என்னுடையது. இப்போது மாதிரி அலெக்ஸாண்டரின் + குதிரை என்று தட்டினால் குதிரை பெயர் என்ன அது ருதுவான நாள் நட்சத்திரம் எல்லாம் நொடியில் தரும் இன்டர்நெட் இல்லாத காலம். (1989 ம் வருஷம்)

அலெக்ஸாண்டரின் தந்தை மன்னர் பிலிப் ஒரு குதிரை வாங்கியதாகவும் அது மஹா சண்டித்தனம் செய்து யாரையுமே தன் மீது ஆரோகணிக்க விடாமல் இருந்த போது அலெக்ஸாண்டர் அந்த குதிரை தனது நிழலைக் கண்டுதான் மிரள்கிறது என உணர்ந்து அதன் நிழல் அது கண்ணில் படாத மாதிரி அதை நிறுத்தி அதன் மீது லாவகமாக ஏறி பின்னர் சவாரி செய்தார்

அந்த பொல்லத குதிரரையைப் பற்றி பள்ளி பாடத்தில் படித்திருக்கிறேன். பெயர் எல்லாம் பாட புஸ்தகத்தில் வந்த ஞாபகம் இல்லை.


தஞ்சாவூர் லைப்ரரிகள் சமயல் குறிப்புகள், பெண்களை கொடுமைப் படுத்தும் கணவர்களை தோலுரிக்கும் நாவல்கள் என்ற சமூக அக்கறையில் இருந்தன. எனது குதிரை பெயர் கேள்வி அந்த லைப்ரரியன்களை " அய்யோ யார் பெத்த பிள்ளையோ பாவம் புத்தி சரியில்லை" என்று என்னை ஒரு பட்சாதாபத்துடன் பார்க்க வைத்தது..


நான் விக்கிரமாதித்தியன் மாதிரி. சளைக்கவில்லை. இந்த ஒரு குதிரையின் பெயரை அறிந்து கொள்ளும் வெறியுடன் சென்னைக்கு ரயிலேறினேன்.

கன்னிமரா நூலகத்தில் நான் தேடிய சங்கதி கிடைத்ததது. அந்த குதிரையின் பெயர் Bucephalus.


கிரேக்க நாட்டு இந்த கி.மு வரலாறு என்னை ரொம்ப வசீகரம் செய்தது. குதிரை பெயர் தெரிந்தவுடன் அத்துடன் நிற்காமால் மேலும் கொஞ்சம் நோண்டினேன். இந்த குதிரை அலெக்ஸாண்டரின் 12 வயதிலிருந்து அவரது கடைசி யுத்தம் (கி.மு 326) வரை அவருடனே இருந்திருக்கிறது. யுத்தத்தில் காயமாகி அலெக்ஸாண்டருக்கு முன்பே பரமபதம் அடைந்த்தது. இதன் நினைவாக Bucephala என்ற ஒரு நகரை உண்டாக்கினார் என்ற சொற்ப தகவலை உபரியாகவும் கிரேக்க சரித்திரம் சம்மந்தமாக ஹிக்கின்பாத்தம்ஸில் சில புத்தகங்களும் வாங்கிக் கொண்டு தஞ்சாவூர் திரும்பினேன்.


டாக்டர் நண்பருக்கு ஒரே சந்தோஷம். பைக் பெயர் சூட்டு விழாவில் நான் தான் தலைவர். நான் தான் அந்த பைக்குக்கு பெயர் சூட்டினேன். டாக்டர் தனது நன்றியின் அடையாளமாக தானே த்யாரித்த ஒரு காலண்டரை எனக்கு பரிசாக தந்தார். பைபிளில் 365 தடவை "பயப்படாதே" என்று வருகிறதாயும் அதை நாளுக்கு ஒன்று வீதம் எழுதி ஒரு காலண்டர் அது.


இன்னும் அந்த காலண்டர் என்னிடம் இருக்கிறது. நான் தொடர்ச்சியாக கிரேக்க நாட்டு சரித்திரம் சம்பந்தமாக வாங்கிய பல புஸ்தகங்களும் இருக்கின்றன. எனது டாக்டர் நண்பர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. அவருக்கு மாற்றலாகி திருச்சிக்குப் பக்கத்தில் எங்கோ புலம் பெயர்ந்தார். நானும் எங்கெங்கோ சுற்றி இப்போது சென்னையில். எங்காவது எப்போதாவது அகஸ்மாத்தாய் குதிரையைப் பார்த்தால் டாக்டர் ஞாபகம் வரும்

Monday, 24 March 2008

பேய்


பக்கத்து பிளாட்டுகளில் இந்த அதிகாலை 6 மணிக்கு சமத்தாய் கந்த சஷ்டி கவசம் , சுப்ரபாதம் என கேட்டுக் கொண்டு இருக்க நான் அமானுஷ்ய சங்கதி குறித்து அதுவும் சுமார் 12 வருஷம் முந்தி நடந்ததைப் பற்றி எழுத வேண்டிய அவஸ்யத்தை கடைசியில் சொல்கிறேன்.அழகப்பா யுனிவர்சிட்டியின் 10 நாள் தொடர்சியான CONTACT CLASS க்காக காரைக்குடியில் யுனிவர்சிட்டி ஹாஸ்டலில் தங்கி இருந்தேன்.ஒரு அறையில் ஆறு பேர்.ஸ்தாபகர் அழகப்ப செட்டியாரின் தாரளம் அறையின் அளவிலும் கட்டணத்திலும் தெரிந்தது. 150 சதுர அடிக்கு குறையாத அறை; சௌகர்யமான பாத்ரூம்; 45 ரூபாயில் மெஸ்ஸில் மூணு வேளை சாப்பாடு + 2 வேளை காப்பி+ ரூம் வாடகை


வேறு வேறு ஊர்களில்இருந்து வந்த பல தரப்பட்டவர்கள் ஒரே அறையில் இருக்கும் வித்தியாசமான அனுபவம். அது ரொம்ப வித்தியாசமாக இருக்க போகிறதென்று 9 நாள் நடு ராத்திரி தெரிந்தது.


வழக்கமான அரட்டைக்குப் பிறகு 10-10.30 மணிக்கு படுத்தோம். ஒரு மணி நேரம் ஆகியிருக்கலாம். உட்ச பட்ச டெசிபலில் ஒரு அலறல். நான் தங்கியிருந்த அறையில்தான். அறையின் பக்க சுவர்களை ஒட்டி இரண்டு இரண்டாக 4 கட்டில்கள்; வாசலுக்கு எதிரே ஒரு கட்டில் தரையில் ஒருவர். யார் இப்படி அமாணுஷ்யமாக கத்துவது என்று பார்க்க வெளிச்சம் போதவில்லை. நான் அறை வாசலுக்கு நேர் எதிரே உள்ள கட்டிலில். அமானுஷ்ய அலறல் நிற்காமல் இப்போது கொஞ்சம் வார்த்தைகளுடன் தொடர்ந்தது. குரலில் இருந்து தரையில் படுத்து தூங்கும் நண்பர்தான். என தெரிந்த்ததும் எனக்கு பயம் ஜாஸ்தியானது. காரணம் அவருக்கு மற்ற ஐவரும் சம அளவு தூரத்தில். தாக்குதல் யார் மேல் வேண்டுமானாலும் இருக்கலாம். வாசலை அடைவதற்கு அவரைத் தாண்டாமல் அந்த 150 சதுர அடி அறையில் வேறு ஷார்ட் கட் எதுவும் இல்லை. நான் தான் வாசலில் இருந்து அதிக தூரத்தில். எனக்கு லாங்க் ஜம்ப் போன்ற லாவகங்களில் கொஞ்சம் கூட பரிச்சயம் இல்லை


சத்தம் இன்னும் நிற்கவில்லை. நல்ல வேளை. பக்கத்து அறை ஆசாமிகள் காரிடார் விளக்கைப் போட்டார்கள். ஜன்னல் வழியாக வந்த வெளிச்சம் எனது பயத்தை பல மடங்கு ஜாஸ்தியாக்கியது. தரை ஆசாமி தனது பெட்ஷீட்ட்டை காற்றில் சுழற்றி சுழற்றி யாருடனோ யுத்தம் பண்ணிக் கொண்டு இருந்தார். எதிரே யாரோ நிச்சயம் இருக்கிறார்கள் என அப்போது நான் நம்பினேன். காரணம் அவரது பெட்ஷீட் சுழன்ற லாவகம். அவரது ஆக்ரோஷமான யுத்தகால வார்த்தைகள் (" இன்று நீ மாய்வதற்காகவே வந்துள்ளாய் ", "உனது யுத்த தந்திரங்கள் என்னிடம் பலிக்காது " etc .etc.). எனது அறையில் இருந்த மற்ற மனுஷ்ய நண்பர்கள் ரொம்ப ஜாக்கிரதையானவர்கள். தரை ஆசாமியின் பெட்ஷீட் வீச்சு மேலே தோளளவில் இருப்பதை சூட்சமமாக கணித்து அவரவர் கட்டிலுக்கு கீழே பதுங்கி இருந்தார்கள்.


தரை ஆசாமியின் சத்தமான இந்த திருவிளையாடல் மிக மிக விஸ்தீரமான அந்த ஹாஸ்டல் வளாகத்த்தின் வெளி விளிம்பில் வசித்தவர்களையும் இங்கே ஓடி வர வழைத்தது. வந்த எலோரும் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தனர். யாரும் என்னை ரட்சிக்க ஒரு உபாயம் சொல்லவில்லை.
கடைசியில் நமது தரை ஆசாமி யுத்தையும் சத்தத்தையும் நிறுத்தி மயக்கமானார்.


"சார் கதவைத் திறங்க " ஜன்னல் வழியே கோரஸ். எனக்கு பயம் போகவில்லை. ஒரு வேளை தரை ஆசாமி தோற்று விழுந்த்திருக்கலாம். அவரை வீழ்த்திய அந்த அமானுஷ்ய எதிரி அவர் நெஞ்சு மேல் கால் வைத்துக் கொண்டு இன்னும் அங்கேயே நிற்கலாம் என உத்திரவாதமாய் நம்பினேன். எனது அறையில் இருந்த யாரோ கட்டிலுக்கு அடியில் இருந்து தைரியமாய் வெளியே வந்து கதவைத் திறந்ததுதான் தாமதம். அவரை முந்திக் கொண்டு நான் வெளியே பாய்ந்தேன். அதற்கப்புறம் தரை ஆசாமியை டாக்டரிடம் கூட்டிப் போனார்கள். ஹாஸ்டலில் இருந்த வாட்ச்மேன் தமிழ் நாடு கவர்னர், மந்திரிகள் தவிர அந்த யுனிவர்சிட்டிக்கு சம்பந்தாமன எல்லோருக்கும் போன் செய்து விட்டார். கீழே காரிடார் முழுவதும் கூட்டம்.


இந்த சம்பவத்தில் எனக்கு ஒரிரண்டு லாபங்களும் இருந்தது


தரை ஆசாமியை டாக்டரிடம் கூட்டிப் போன பின்பு கூட்டமாக இருந்த எல்லோரும் அவரவர் ஜோலியை பார்க்க கலைந்த போது தான் எனது அறைக்கு பக்கத்து அறையில் தங்கியிருந்த திரு. சந்திரசேகரன் அறிமுகமானார்.


இந்த சம்வத்தை என் தாத்தவிடம் சொன்ன போது இது மாதிரி இக்கட்டுகளில் சொல்லத்தக்க ஒரு ரகஸ்ய மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்த மந்திரத்துக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் பத்திரமாய் இருக்கிறேன்.


சில வருடங்களுக்கு முன் இந்த சம்பவம் ஞாபகம் வந்ததும், அழகப்பா யுனிவர்சிட்டியில் விரிவுரையாளராக பணியாற்றும் நண்பர் முனைவர். மொரார்ஜியை தொடர்பு கொண்டு,


"ஸார் யுனிவர்சிட்டியில் விசாலாஷி ஹாஸ்டல் எல்லாம் இப்போ இருக்கா; இல்ல இடிச்சு மாத்தி கட்டிட்டாங்களா "


"கட்டடம் அப்படியே இருக்கு. ஆனா அதுல தான் எங்க CORPORATE SECRETARYSHIP DEPARTMENT இருக்கு" என்று சொல்லி என்னை ஒரு முறை காரைக்குடிக்கு வருமாறு அழைத்தார்.


கொஞ்சம் யோசித்து , "சரி சார் கட்டாயம் வரேன்; வீட்டுல கேட்டதாக சொல்லுங்க" என சொல்லி போனை வைத்தேன்.


இன்று காலை ஐந்து மணிக்கு எனது மனைவி , தன் தோழியிடமிருந்து அந்த அகால நேரத்தில் வந்த ஒரு ஹாஸ்ய எஸ்.எம்.எஸ் ஐ காட்ட எழுப்பிய போது திடுக்கிட்டு நமது தரை ஆசாமி மாதிரி கூச்சல் போட்டு எழுந்தேன்.

Saturday, 22 March 2008

ஹார்ட் அட்டாக்


சென்ற மாதம் என் சித்திக்கு ஹார்ட் அட்டாக் என அகால நேரத்தில் தகவல் வந்து டாக்சி பிடித்து பெங்களூர் போய் சேர்வதற்குள் ஆஞ்சியோகிராம் முடித்து ஆஞ்சியோ பிளாஸ்டிக்கு தயார் நிலையில் ஆஸ்பத்திரி இருந்தது. அதுவும் நிமிஷங்களில் முடிந்து அடைப்பை சுத்தம் செய்துவிட்டார்கள்.

நமது பாத்ரூம் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு சில மணி நேரம் ஆகலாம். ஆனால் இதய குழாய் ரிப்பேர் மாதிரியான இந்த ஆஞ்சியோ பிளாஸ்டி சில நிமிஷங்களில் முடிந்துவிடும். என்ன பைசா கொஞ்சம் ஜாஸ்தி செலவாகும்.

இருதயம் சரியான படி ரத்தத்தை வாங்கி மீண்டும் பம்ப் செய்கிறதா என தெரிந்து கொள்ள டாக்டர்கள் கார்டியாக் கேத்தரைசேஷன் என ஒரு குழாய் வைத்தியம் செய்கிறார்கள். இதன்படி ஒரு மெல்லிசான குழாயை ரத்த நாடி வழி செலுத்துகிறார்க்ள். பெரும்பாலும் தொடையில் உள்ள FERMORAL VEIN என்ற ரத்த நாடி தான் இதற்கு பயன்படுத்தப்படுகிறது .

இந்த குழாய் வழியாக நமது ரத்தத்தில் ஒரு வித கதிரியக்கத்தை கிரகிக்கும் ரசாயனம் சேர்ப்பார்கள். காரணம் மனித ரத்தம் கதிரியக்க கதிர்களை கிரகிக்க தக்க அடர்த்தியில் இல்லை. இந்த ரசாயனம் சேர்த்தால் ரத்தம் எக்ஸரேயை கிரகிக்கும். அதனால் ரத்தத்தின் பிம்பம் எக்ஸரே பிலிமில் பதிவாகும்.. இது ஒரு வகையான ஃப்ளோரோஸ்கோப் எக்ஸரே. அதாவது ரத்தம் நாடி நரம்புகளில் எப்படி நிரம்பி உள்ளது. இதயத்துககு ஒழுங்காக சப்ளை ஆகிறதா. இதயம் மற்ற பாகங்களுக்கு ஒழுங்காக ரத்தத்தை அனுப்புகிறதா என்றெல்லாம் இந்த சுடர் விடும் எக்ஸரே சொல்லிவிடும். ரத்தம் வரும் / போகும் வழியில் ஏதாவது அடைப்பு இருந்தால் இதோடா அடைப்பு என தெரிந்துவிடும். இப்படி அடைப்பை கண்டறியும் முறைதான் ஆஞ்சியோகிராம்
இனி அடைப்பை நீக்கும் நவீன குழாய் வைத்தியம் தான் ஆஞ்சியோபிளாஸ்டி.

மேற்சொன்ன எக்ஸரே பரிசோதனையில் அடைப்பு காணப்படும் இடத்துக்கு ஒரு பலூன் மாதிரியான சங்கதியை அனுப்பி அந்த பலூனை வெடிக்கச் செய்து அடைப்பை "காக்கா ஊச் " என காணாமல் செய்து விடுவார்கள். பின்னர் ஸ்டென்ட் என்கிற ஒரு வஸ்துவை அங்கே பொருதுகிறார்கள், இந்த ஸ்டென்ட் ஒரு குழாய். ஏற்கனவே அடைத்துக் கொண்ட இடம் இன்னொரு தபா அடைச்சுக்காம இருக்க அந்த இடத்தில் இந்த ஸ்டென்ட் குழாயை வைத்துவிட்டு
இந்த நவீன சிகிச்சயை முடிப்பார்கள். நான் சொன்னது பொதுவான இருதய ஆஞ்சியோபிளாஸ்டி சிகிக்சை. இதில் சிக்கல், சாதா என வெரையிட்டிகள் உண்டு. நோயின் தீவிரத்தை பொறுத்து மாறும்..

ஆப்ரேஷன் முடிந்து சில நாள் ஐ.சி யு வில் வைத்துவிட்டு பின்னர் வார்டுக்கு மாற்றி, நோயாளி சஜமாகி விட்டார் என தெரிந்தால் டாக்டர் டிஸ்சார்ஜ் செய்யும் போது கட்டாயம் செய்பவை

1. நீங்கள் இப்போது இருதய நோயாளியே அல்ல . உங்கள் இருதயம் புது வலிவு அடைந்த்துள்ளது என சொல்வார். இது நீங்கள் சகஜமாக இருக்க சொல்லப்படும் அறிவுரை. அதற்காக நீங்கள் முன்பு போல கண்டபடி பஜ்ஜி, கோழி வறுவல், 555, ராயல் சாலஞ், பகார்டி என ரொம்ப ரொம்ப சகஜமாக இருக்க அவர் சொன்னதாக அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டாம். டயட் டாக்டர் சொல்படி இருக்கட்டும்
2.ஒரு மருந்து பிர்ஸ்கிரிப்ஷன் தருவார். அதை அப்படியே பின்பற்றவும். மருந்துகளை எங்கு வைக்கப்பட்டிருக்கிறது என் வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரியட்டும்.

Friday, 21 March 2008

ரயில் பயணம்


தூங்கிக்கொண்டு போகலாம் ; பாத்ரூம் இருக்கிறது ; பகல் ட்ரெயினில் தொடர்ச்சியாக பட்சண ஊர்வலம் வரும் என்று சில சௌகர்யங்கள் இருந்தாலும் ரயில் பயணத்தில் பல அசௌகர்யங்களும் உண்டு என்று ஒத்துக் கொள்வீர்கள்.


சென்னை சென்ட்ரல் போன்ற பெரிய ஸ்டேஷன்களில் முகப்பு வாசலுக்கும் டிரெயின் நிற்கும் இடத்துக்கும் உள்ள தூரம் பல கி.மி இருக்கும். ராமேஸ்வரம் கோவில் பிரகாரத்துக்கு போட்டியான நீளமான பிளாட்பாரங்கள் என் போன்ற மினி கஜேந்திர ஆகிருதி கொண்டவர்களின் சத்ரு. சிலருக்கு மட்டும் எப்போதும் பிளாட்பாரத்தின் தலைப்பில் உள்ள கம்பார்ட்மென்ட்டில் ரிசர்வேஷன் கிடைத்துவிடும். இவர்கள் பெருமாளுக்கு ப்ரீதியானவர்கள் என நினைக்கிறேன். இவர்கள் பெருமாளுக்கு செய்யும் நைவேத்திய சங்கதிகள் என்னவென்று கேட்டு வைத்துக்க் கொள்ள வேண்டும்.

இப்போது AIRTEL , RELIANCE போன்ற நம் கால புரவலர்கள் சென்னை , பெங்களூர் ஸ்டேஷன்களில் மினி பாட்டரி கார்கள் உபயம் செய்து என்னை மாதிரி ஆசாமிகளை ரட்சித்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் இந்த கார்களில் ஸ்டேஷன் வாசலில் இருந்து எனது கம்பார்ட்மெண்ட் வரை சென்று விடுகிறேன். அங்கே இறங்கியவுடன் இந்த கார்களை ஓட்டும் அன்பர்களை ,
"என் உயிர் அன்பாய் நீ ; என் இளவல் உன் இளையான் இந்நன்னுதலவள் நின் கேள்" என ராமன் குகனிடம் பரிவு செய்தது போல் அன்பாகத்தழுவிக் கொள்வேன்.

ஸ்லீப்பர் கோச்சில் நான் பெரிதும் காதலிப்பது சைட் லோயர் பெர்த். தூக்கம் வரவில்லை என்றால் உட்கார்ந்து வரலாம். இதர பர்த்துகளில் இது சாத்தியம் இல்லை.

இப்போது ஸைட் லோயருக்கும் ஸைட் UPPER க்கும் இடையிலான அந்த சொற்ப இடத்திலும் ஸைட் மிடில் என ஒரு பெர்த் வரப்பபோவதாக அறிவிப்பு.

இந்த ஐடியாவை லாலுஜியின் நினைவு மண்டலதிலிருந்து நீக்கிவிட பெருமாளை சேவிக்கிறேன்

ரயில்வே நிர்வாகம் பல வருடங்களாக ஒரு சங்கதியை கவனிக்கவில்லை. லால் பகதூர் ஸாஸ்திரியார் ரயில்வே மந்திரியாக இருந்த போது அவரது உயரத்தை கணக்கிட்டு பெர்த் நீளம் டிஸைன் செய்யப்பட்டிருக்க வேண்டும். இப்போது பெரிய மனசு பண்ணி வேறு நீளமான பர்த்துகளை வடிவமைக்க வேண்டுகிறேன்.

அப்பர் பெர்த் ( UPPER BERTH) என்ற பொறியில் சிக்கும் அன்பர்களுக்கு சில யோசனைகள்

ஒரு பனையோலை விசிறி, மூவ் போன்ற ஏதாவது சுளுக்கு போக்கும் சங்கதி போன்றவற்றுடன் மேலே ஏறவும்.
கம்பார்ட்மெண்டில் பொறுத்தியுள்ள ஃபேன்கள் UPPER BERTH க்கு காத்து தராது. எனவே விசிறி அவசியம்.

திடீர் என முழிப்பு வந்தால் வீட்டில் எழுந்து உட்கார்வது போல் முடியாது. கூரை இடித்து கழுத்தில் சுளுக்கு நிச்சயம். ஆகவே சுளுக்கு நீக்கி கட்டாய தேவை

Wednesday, 19 March 2008

நளவெண்பா-1
இன்று ஒரு நாள் லேசான ஜுரம் வந்து , லீவு போட்டுவிட்டு டாக்டரிடம் போய் பாராசிட்டமால் இன்ன இதர இத்தியாதி சின்னதும் பெரிசுமாய் மாத்திரைகள் முழுங்கிவிட்டு அவரது அட்வைஸ்படி முழு ஓய்வு எடுத்துவிட்டு இரவு ஒன்பது மணிக்கு ஆபிஸ் மெயில் செக் செய்து நாளைக்கு மனதளவில் தயாராகி எதாவது படிக்கலாம் என புத்தக அலமாரியில் கண்ணை ஓட்டி "புகழேந்தி"யில் நிறுத்தினேன்.புகழேந்தியின் நளவெண்பா ரசிக்க வியக்கவைக்கும் நாலுவரி வெண்பா. சில சாம்பிள் பார்க்கலாம்
அள்ளிக் கொளலாய், அடையத் திரண்டு ஒன்றாய்
கொள்ளிக்கும் விள்ளாத கூர் இருளாய், உள்ளம்
புதையவே வைத்த பொதுமகளிர் தங்கள்
இதயமே போன்றது - இரா


இரவை வருணிக்கும் பாடல் இதுஇரவின் இருட்டு அள்ளிக் கொள்ளத்தக்க மாதிரி ஒன்றாய் திரண்டு , வெளிச்சத்தால் விண்டு போகாததாய் இருக்கிறது எனச் சொல்லி அத்தோடு விடாமல் அது விலைமாதர் மனசு போல புதைந்த இருட்டாய் இருந்ததாய் சொல்லுகிறான் புகழேந்தி

சாயங்காலம் வருவதை எப்படிச் சொல்கிறான் கவனியுங்கள்
மல்லிகையே வெண் சங்கா வண்டு ஊத வான்கருப்பு
வில்லிகணை தெரிந்து மெய்காப்ப முல்லைஎனும்
மென்மாலை தோளசைய மெல்ல ந்டந்ததே
புன்மாலை அந்திப் பொழுது

வண்டுகள் மல்லிகை அரும்பையே வெண்ணிறச்சங்காகக் கொண்டு ஊதவும் , சிறந்த கரும்பு வில்லையுடைய மன்மதனானவன் மலர் அம்புகளை ஆராய்ந்து எடுத்துத் தன் உடம்பைப் பாதுகாத்துக்கொண்டு வரவும், முல்லை மலர் என்னும் மென்மையான மாலை தன் தோள்களில் அணியப் பெற்று அசைந்துகொண்டிருக்கவும் சிறிய மாலைக்காலம் என்னும் அரசு, மெல்ல நடந்து வந்தது.இந்த பாட்டின் முதல் வரி நீங்கள் ஏற்கனவே ராகவேந்திரா படத்தில் ரஜினி வாயசைக்க ஜேசுதாஸ் பாடும் "ஆடல் கலையே தேவன் தந்தது " என்ற பாட்டில் கேட்டதுதான்.படித்துகொண்டே வந்த நான் "நள தமயந்தி இன்ப வாழ்க்கை " என்ற TITLEலிட்ட பாடல்களில் ஸ்தம்பித்து நிற்கிறேன்."ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி ", "கால் வளைத்து " போன்ற சென்சார் பதங்கள் அந்த இரண்டு பாடல்களில் மிகுதியாய் காணப்படுவதாலும், பாடல்களை விளக்க முனைந்தால் இந்த போஸ்டிங் ADULTS ONLY CERTIFY செய்யப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதாலும், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இது போன்ற ஜிகினா சங்கதிகளை அவர்களே தேடிப் படித்து விடுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாகவும் மிக முக்கியமாக இதுபோன்ற சங்கதிகளை ராத்திரி 10 மணி வாக்கில் படித்தால் உண்டாகும் ______ களை கருத்தில் கொண்டு போதுமென வருணனைகளை நிறுத்திக் கொள்கிறேன்.

பிரேயர் வீல்பல நாட்டு கலாச்சார சின்னங்களை சேகரிக்கும் பிரேமை எனக்கு உண்டு. எகிப்து பிரமிட் மாடல், ஆஸ்திரேலியாவில் வாங்கிய கங்காரு பொம்மை , சொம்பில் அடைக்கப்பட்ட DEAD SEA தண்ணீர் என என்னிடம் ஒரு விஷேஷ கலெக்க்ஷன் உள்ளது.


இங்கே படத்தில் உள்ளது மாதிரியான் ஒரு பிரேயர் வீல் எனது அந்த ஆத்மார்த்தமான கலெக்க்ஷனில் ஒரு முக்கிய அங்கம்.

என் ஆபிஸில் எனது சீனியர் சுஜாதா ஜெகந்நாத், சீனா சென்று வந்த தன் மகள் மூலம் அதை எனக்கு தருவித்து தந்தார். அவருக்கு எனது நன்றி.

திபேத்திய புத்த மதத்தில் இந்த பிரேயர் வீல் ஒரு முக்கிய் சமாச்சாரம். இந்த மாடல் மணி வீல். இன்னும் பயர் வீல், விண்ட் வீல், வாட்டர் வீல் என பஞ்ச பூதங்களில் பூதத்துக்கு ஒன்றாக மாடல்கள் இருக்கிறது. மணி வீல் சாதரண்மாய் கையில் வைத்து சுற்றிக் கொண்டே ஜபம் செய்யும் ஒரு பூஜா சமாச்சாரம், இதை கிளாக் வைசாக சுற்ற வேண்டும் என கிரமம் உள்ளது. காரணம். இதற்குள் பல மந்திரங்கள் தோலில் எழுதி சுற்றி வைத்திருக்கிறார்கள். மந்திரங்கள் எழுதப்பட்டுள்ள DIRECTION க்கு தகுந்த மாதிரி சுற்ற வேண்டும் அப்பிரதஷணமாக சுற்றினால் அவ்வளவு தான்.

இந்த வீலை சுற்றும் பொது "ஓம் மணி பத் மே ஹம் " என்ற மந்திரமே பெரும்பாலும் சொல்லப்படுகிறது. நானும் சொல்கிறேன். இது ஸம்கிருதத்தில் இருந்து திபேத்திய புத்தர்கள் CTRL + C & CTRL + V செய்தது. அர்த்தம் வருமாறு


ஓம் --- தபஸ் / அமைதியான நிலை கொண்ட மனம்
ம- பொறாமை போகட்டும்
ணி- - ஓழுக்கம் வளரட்டும்
பத் ---- ஞானம்
மே --- சகிப்புத்தன்மை, அன்பு, தாரால குணம்
ஹம்- வெறுப்பற்ற தன்மை வரட்டும்- நல்லதில் ஈடுபாடு ஜாஸ்தியாகட்டும்.

இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே இந்த பிரேயர் வீலை சுற்றினால், துஷ்ட சக்திகள் நம்மை அண்டாது / அணுகாது என்பது நம்பிக்கை.

எனது மனைவி நகை, பட்டுபுடவை என்று எனது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் என்ற ஐஸ்வர்யங்களுக்கு எதிரான துஷ்ட PROPOSAL லுடன் பேசப் போகிறாள் என லேசாக தெரிந்தாலும் போதும் - உடனே இந்த பிரேயர் வீல் அந்த மந்திரம் சகிதமாக நிஷ்டையில் அமர்ந்து தப்பித்து கொள்வேன்.

Sunday, 16 March 2008

திருவல்லிக்கேணி பிரசித்தங்கள்


திருவல்லிக்கேணி பிரசித்தங்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் பார்த்தசாரதிக்கு கூட இரண்டாம் இடம் தான். மான்ஷன்களுக்குதான் முதல் இடம். பெருமாள் சர்வ வியாபி என்பது கருத்து. மான்ஷன்கள் திருவல்லிக்கேணியின் எல்லா தெருக்களிலும் இருக்கின்றன. இதனால் அந்த மீசை வைத்த பெருமாளின் அனுமதியுடன், மான்ஷன்களை "சர்வ வியாபி" என்று அழைக்க கேட்டுக்கொள்கிறேன். இதில் மாற்று கருத்து உள்ளவர்களை மன்னித்து மேலே தொடர்கிறேன்.


மான்ஷன்கள் விதி விலக்கில்லாமல் இரண்டு பொது அம்சங்கள் கொண்டவை . கவரச்சியான ரிஷப்ஷன். இதன் பின்னால் ஒளிந்திருக்கும் புறா கூண்டு சைஸ் ரூம்கள். முதல் தடவை வரும் எல்லாரும் கவர்ச்சியில் விழுவது திண்ணம்.ரூம் சைஸ் சிறிதானாலும் வாடகை சல்லிசு. வசதிகள் ஏராளம். கூப்பிட்ட தூரத்தில் எல்லா சௌகர்யங்களும் கிடைக்கும். திருவல்லிக்கேணி மெஸ்ஸில் சாப்பிடாதவர்கள் என்னளவில் அபாக்கியவான்கள்.

சென்னையின் நித்திய வசீகரங்கள் இரண்டு. ஒன்று ஸ்பென்சர் பிளாசா. அடுத்தது மெரீனா. இவை திருவல்லிக்கேணியின் மிக அருகில் அமைந்து மான்ஷன்வாசிகளின் நித்யானுஷ்டமான டைம் பாஸ் சங்கதிக்கு இலவச சேவை செய்வது இப்பிரதேசத்தின் கூடுதல் சிறப்பு.

குதிரை மேல் சவாரி செய்தபடி டிராபிக் ஒழுங்கு செய்யும் போலீஸ் திருவல்லிக்கேணியில் மட்டுமே பார்க்க கிடைக்கும். சேப்பாக்கம் ஸ்டேடியம் சுற்றி ஓட்ட நடையில் குதிரை வர அதிகாரமாய் போலீஸ் அதன் மீது. பெரிய மீசையுடன் ஏதாவது போலீசை குதிரை மீது பார்த்தால் எனக்கு "பெரிய பழுவேட்டரை " பார்த்த மாதிரி தோன்றும். அவர் அந்த வம்சமா என கேட்க தோன்றும் ஆனால் மாட்டேன். மேனியில் அறுபத்து மூன்று விழுப்புண் கண்ட வீரர் என்றெல்லாம் பெயர் வாங்க எனக்கு ஒரு போதும் ஆசையில்லை.

ஹர்த்தால் , சண்டே இன்ன பிற அசாதாரண நாட்கள் தவிர பிற நாட்களில் ஒரு பந்தயம் வைத்து அதற்கு ஒரு கார் பரிசு தர நான் தயார் பந்தய விதிகள் வருமாறு
அமீர் மகாலிலிருந்து கண்ணகி சிலை வரை டுவீலர் காலை ஊன்றாமல் ஓட்ட வேண்டும் . பைகிராப்டஸ் சாலை என அறியப்படும் இந்த சாலையில் உள்ள ஜன நெருக்கத்தை கணக்கு பண்ணி துணிச்சலாக நீங்களும் என்னுடன் co sponser ஆக வாத்சல்யல்யத்துடன் அழைக்கிறேன்.

பைக்ராப்ட்ட்ஸ் சாலையில் காணப்படும் புத்தக கடைகள் என் போன்ற அசடுகளுக்கு மணிக்கணக்காக கம்பெனி தரும். பல புதையல் புத்தகங்களை அங்கே வாங்கியிருக்கிறேன். உதரணமாக ஸ்ரீனிவாச சாஸ்திரியாரின் அபார ஆங்கிலம் பொதிந்த THE OTHER HARMONY கட்டுரை தொகுப்பை இங்கே மூன்று ரூபாய்க்கு வாங்கினேன். இன்று பதிப்பித்தால் அது முன்னூறு ரூபாய்க்கு வரும் .

திருவல்லிக்கேணியின் இம்சை மழைக்காலம். ஜோவென்று பெய்து கொண்டிருக்கும் மழையில் குடை பிடித்து கூட இங்கே வெளியில் போக முடியாது. பெரும்பாலும் அடைத்துக்கொன்டுவிட்ட டிரைனேஜ - ஏணி வைத்து ஏறினால் தான் ஏற முடியும் என்கிறதான உயரமாய் உள்ள பிளாட்பாரம் இவைகளின் காருன்யத்தால் ரோட்டில் வெள்ளமாய் ஜலப்பிரவாகம்.
கோவர்த்தனகிரியை குடையாக்கி ஜனங்களையும் ஆநிரை கூட்டத்தையும் காப்பாற்றியதாக பார்த்தசாரதியை
"அந்தமில்வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக்கேணி கண்டேனே " என்று பெரிய திருமொழியாய் வியந்த திருமங்கை ஆழ்வார் இப்போதைய திருவல்லிக்கேணி மழையை பார்த்தால் என்ன சொல்வாரோ?

பெருமாளை பற்றி மட்டும் சொல்லி திருவேட்டீஸ்வரனை கண்டு கொள்ளமால் விட்டால் எனக்கு ஸ்பெஷல் சங்கதிகளை எம லோகத்தில் அறிமுகம் செய்யும் அபாயம் காத்திருப்பதால் அவரைப்பற்றி ஒரு வரி இங்கே சொல்லி அவருக்கென ஒரு பிரத்தியேக போஸ்டிங் இங்கே வெளியிடுகிறேன் என உங்களை சாட்சியாக்கி அந்த ஈஸ்வரனிடம் GOD PROMISE செய்கிறேன்.

Saturday, 15 March 2008

சுஜாதா நினைவுகள்


குமுதத்தில் "கொலையுதிர் காலம்" வந்த சமயம். அவர் எங்கள் குடும்ப உறுப்பினர் ஆனார். குமுதம் வரும் நாள் மிக கவனமாக தொடரப்படும். அதைக் கொண்டு தரும் நபர் தெரு முனையிலேயே என் அண்ணனால் பெரும்பாலும் மடக்கபடுவார். இப்படி எங்களை ஆக்கிரமித்தவர் வெறித்தனமாக தேடி தேடி படிக்கப்பட்டார். தமிழ் இலக்கியத்தின் மீது எனக்கு இருக்கும் ப்ரேமையின் முகவரியாக சுஜாதா ஆனார். அவரைக்கொண்டே இலக்கிய அறிமுகங்களை செய்ய தொடங்கினேன்.எனது மூத்த சகோதரி திருமணமாகி பெங்களூர் போனதும் அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு (பனசங்கரி தேர்ட்ஸ்டேஜ் ) சுஜாதா குடி வந்ததும் அவரை நேரில் சந்திக்க திருப்பதி ஸ்ரீ பாலாஜி செய்த கருணை. அந்த வீட்டில் தான் அவரை முதலில் சந்தித்தேன்.நான், எனது அக்கா , என் அண்ணன் எல்லோரும் போனோம். அப்போது CMC கம்ப்யூட்டர் கம்பெனி அனுப்பிய ஒரு கோர்ஸ் சம்பந்தப்பட்ட தபால் ஒன்றை அவரிடம் காட்டி ஆலோசனை பெற என் அண்ணன் விரும்பினான். அவன் கையில் அந்த கவர்.சுஜாதா சாரின் மனைவியுடன் ஏற்கனவே என் அக்கா அறிமுகம் ஆகியிருந்தார். ஆகவே அவர் எங்களை சாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். உடனே சார் அது என்ன சி. எம். சி கவர் என கேட்டார். அவரது கவனிக்கும் திறன் !!!. அதுவே கனேஷாக நம்முன் உலாவியது"விக்ரம் படத்தில் கையாளப்பட்ட சில நையாண்டிகளை சொன்ன போது மெல்லிசாக சிரித்தார்."ரத்தம் ஒரே நிறம் " கதையில் காணப்பட்ட சில தகவல்அவரது தேடுதலை அதில் உள்ள தீவிரத்தை சொன்னது. புதுக்கோட்டை சம்பந்தமாக என் அண்ணன் சில குறிப்புகளை அவரிடம் கொடுத்து "இது சம்மந்தமாகவும் கதை எழுதுங்கள் சார்" எனச்சொன்ன போது அதை ஆமோதித்து தலை அசைத்து சிரித்தார்.விடை பெறும்போது வாசல் வரை வந்து வழி அனுப்பினார்.


அவர் தினமும் அலுவலகம் போகும் நான் பார்ப்பேன். சிரித்து தலை அசைப்பார்அதன் பிறகு நெடு நாள் கழித்து அவரை சென்னை புத்தக கண்காட்சியில் சந்த்திதேன். பேச முடியவில்லை.ஆயினும் அவர் எங்கள் வீட்டுக்கு கட்டுரையாக , சிறு கதையாக , நாவலாக , கேள்வி பதிலாக , பாசுரமாக , ஹைக்குவாக, விமர்சனங்களாக வந்த வண்ணம் இருந்தார் . என் புரிந்து கொள்ளும் ஆற்றலின் மூலமே சுஜாதாவின் எழுத்து எனக்கு அளித்த கொடை. நான் பேசும் போது செய்யும் நையாண்டி கேலி ஜோக் எல்லாம் அவர் வசந்தாக தந்துவிட்டுப்போன ஜீவ சுவை.எனது பத்து வயது மகளுக்கு அவரின் திருக்குறள் உரையிலிருந்தே சொல்லித்தருகிறேன் . அவளின் பல சந்தேகங்களுக்கு அவரின் " ஏன் எதற்கு எப்படியில் " இருந்தே பதில் சொல்லுகிறேன்எனக்கு அவர் எப்போதுமே ஒரு விந்தை !! அதிசயம் !!.அவர் தனி மனித ரசனைகளின் பிம்பம்.அவர் ரசனைகளின் வழி விட்டுச்சென்றது வாசனை அல்ல சில காலம் கடந்த பின் மறைய !!! அவை ஜீவ சுவை !!!. அழிவில்லாத ஊற்று !!!மனித பிறவியாக , ரங்கராஜனாக அவர் அந்த அரங்கனிடம் போனது நிஜம் . ஆனால் சுஜாதவாக இங்கே பூலோகத்தில் தமிழ் பேசும் எல்லோரிடமும் கலந்துள்ள அந்த வாத்தியாரை அரங்கனால் கவர முடியாது . இது அரங்கனே விரும்பி ஏற்கும் தோல்வி

Saturday, 8 March 2008

RECRUITER

இந்த பதத்துக்கு சரியான தமிழ் நிகர் வார்த்தை கண்டுபிடித்துச் சொன்னால் அவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியை தருகிறேன். இந்த வியாசம் அதைப்ப்பற்றியது இல்லை. Recruiter உத்தியோகத்தில் உள்ளவர்களின் சௌகர்ய / அசௌகர்யங்களை சொல்லிவைப்பதுதான் . இந்த உத்த்யோகத்துக்கு பெரும்பாலும் பெண்கள் தான் வருகிறார்கள்.

காலையில் எழுந்து பதிசேவை இன்ன பிற சேவைகளை, தாய் பாஷையில் புலம்பிக்கொண்டே முடித்துவிட்டு , பஸ் / எலெக்ட்ரிக் டிரெயின் பிடித்து ஆபிஸ் நுழைந்ததுமே ஆங்கிலம் வந்து விடும். இந்த 'சடக் பாஷை மாற்றம்'
எப்படி நடக்கிறது என்பது பல நாள் ஆராய்ச்சிக்கு பிறகும் புரியவில்லை.
இவர்களின் தினசரி வேலை , நேற்றய சாயங்கால சம்பாஷணைகளின் தொடர்ச்சி போன்ற புண்ணிய காரியங்களுக்குப்பின் தொடங்கும்.

Requirement எனப்படும் ஜீவாதார சங்கதியுடன் வேலையை ஆரம்பிப்பார்கள்.

Requirement என்பது இன்ன வேலைக்கு இன்ன படிப்புடன் இத்தனை வருஷம் முன் அனுபவம் இந்த டெக்னாலஜியில் இன்ன இன்ன மாதிரி தகுதிகள் கொண்டு இந்த அளவுக்குள் சம்பளம் வாங்கும் இந்த அளவுக்கு மேல் சம்பளம் எதிர் பார்க்காத இத்தனை பேர் இத்தனாம் தேதிக்குள் வேணும் என்று கிளையன்ட் கம்பெனிகள் தரும் "ஆள் வேண்டும் " பட்டியல் . இதை வைத்துக்கொண்டு வேட்டை தொடங்கும் . இந்த இத்தனை போன்ற தகுதி உள்ள கேண்டிடேட் என செல்லமாக அழைக்கப்படும் மகானுபாவர்களின் விவரங்கள் NAUKRI, MONSTER போன்ற பேருதவியாளர்களின் வலை தளத்தில்(இவை தளங்கள் இல்லை புண்ணிய ஸ்தலங்கள்) இருக்கும். அவர்களை கவனமாக தேடி கண்டு பிடித்து போனில் பேசவேண்டும். அவர்களுக்கு புது வேலை மாறும் உத்தேசம் உள்ளதா என்கிற மகா ரகசியத்த்தை ஜாலக்காக கண்டுபிடித்தே ஆக வேண்டும். இது ஆதார விதி !! கேண்டிடேட் சரளமாக ஆங்கிலத்தில் உரையாட வல்லவரா என்பதை கவனிக்க வேண்டும். அப்புறம் அவர் இன்ன இந்த இத்தனை போன்ற விசேஷங்களை உண்மையிலேயே கொண்டுள்ளாரா என சரி பார்க்க வேண்டும் . அவர் இது வரை எத்தனை தடவை வேலை மாறியுள்ளார் - அதற்கெல்லாம் என்ன காரணம் போன்ற போலீஸ் கேள்விகளும் அவரிடம் கேட்டு அவரை பற்றி ஒரு குறிப்பு தயார் செய்ய வேண்டும் . இப்படி ஒரு சரியான ஆசாமியை கண்டுபிடிப்பதற்குள் பல அசௌகர்யங்கள் வரும். உதாரணங்கள் கீழே :

  1. வேலை பற்றி எல்லாம் கேட்டுவிட்டு கடைசிவரியில் சும்மா மார்க்கெட் எப்படி இருக்கு என்று பார்க்கிறேன் என் சொல்லும் வெறுப்பு ஆசாமிகள்
  2. Phone செய்த உடன் பேசாமல் இப்போது பேசவும் அப்புறம் பேசவும் என பேசவே இழுத்தடிக்கும் பந்தா ஆசாமிகள்
  3. நீங்கள் வேலை பற்றி சொன்னது பாதி தான் ; இன்னும் விவரமாக மெயில் அனுப்ப முடியுமா என கேட்கும் முன் ஜாக்கிரதை ஆசாமிகள்

இப்படியாக பல எரிச்சல்கள் சவால்களை தாண்டி சரியான ஆசாமிகளை இனம் கண்டு கிளயன்ட்டுக்கு "சிவி " எனப்படும் அவர்களது ஜாபிதவை அனுப்ப வேண்டும்

இதன் பின் தான் இந்த உத்தியோகத்தின் உச்சகட்டம்

கிளையன்ட் என்கிற அன்னபூரணன் கேண்டிடேடை நேரில் சந்தித்து interview எனப்படும் பரிசோதனை நடத்த முகூர்த்த நாளும் நேரமும் தருவார். இந்த முகூர்த்தத்துக்கு கேண்டிடேட் சரியான படி போய்ச்சேரும் படி செய்ய வேண்டியது இவர்களது வேலை.

கேண்டிடேட் குறிப்பிட்ட நேரத்தில் போகாமல் கழுத்தருப்பது; மொபைல் போனை எடுக்காமல் தொடர்புக்கு கிடைக்காமல் கண்ணா மூச்சி காட்டுவது ; அதே நாளில் வேறு interview க்கு போய் உட்கார்ந்து கொண்டு நக்கல் செய்வது போன்ற பிளட் பிரஷர் சமாசாரங்கள் ஏராளமாய் சந்திக்க வேண்டும்.

இதை தாண்டி கேண்டிடேட் interview க்கு போய் செலக்ட்டாக வேண்டும். செலக்க்ஷனுக்கும் வேலையில் சேருவதற்கும் இடையே ஒரு நீளமான அவஸ்த்தையான காலம் - இந்த தொழிலின் MINE WALK கால கட்டம்

  • "மேடம் எனக்கு வேற ஒரு சி.எம் எம் பைவ் லெவல் கம்பெனியில் இருந்து இதைவிட கூட இத்தனை லட்சம் ஆபர் வந்திருக்கு "என தொலை பேசி மூலமான அல்லது மெயில் மூலம் தெரிய வரும் counter offer அபாயங்கள்
  • "என்னை current employer ரிலீவ் பண்ண லேட் ஆகுது" என்பதான சால்ஜாப்புகள்
  • "எனக்கு இங்கேயே ஒரு வாய்ப்பு அமெரிக்கா போக வந்திருக்கு - அதனால " என்கிற வெளி நாட்டு புளி கரைசல்"
  • எங்க கம்பெனியிலேயே இப்ப எனக்கு ஹைக் தராங்க - அதனால இப்ப மாற வேண்டாம்னு பாக்கிறேன் என்பதான லஜ்ஜை இல்லாத வழிசல்கள்

இப்படி எதுவும் உபத்திரவம் தராமல் சமத்தாய் ஜாயின் பண்ணுகிற பரமாத்மாக்களும் ஏராளமாய் உண்டு.

இந்த மாதிரி பரமாத்மாக்களுக்காக நான் திருப்பதி ஸ்ரீ பாலாஜியிடம் வேண்டுவது

  • இவர்கள் கால காலத்துக்கும் இப்படியே சமத்து புத்தியுடன் இருக்க கிருபை செய்யுங்கள்
  • இவர்கள் வேண்டும் சகல சம்பத்துக்களையும் லேட் பண்ணாமல் கொடுங்கள்

குடும்ப கஷ்டம் , குழந்தையை பார்த்துக்க ஆளில்லை போன்ற பல சங்கடங்களை ,மறையாத ,மாறாத கஷ்டங்களை காட்டிக் கொள்ளாமல் உற்சாகமாய் போனில் பேசும் எனது சக பெண் RECRUITERS உற்சாகம் எனக்கு ஒரு டானிக்

உலக மகளிர் தினத்தில் எழுதிய இந்த வலைப்பதிவு, என்னுடன் பணியாற்றும் பெண் RECRUITERS க்கு சமர்ப்பணம்

Thursday, 6 March 2008

தண்ணீரே அருந்தாத பிராணி

கங்காரு எலி - இது அமெரிக்க பாலைவனங்களில் காணப்படும் ஒரு வகை எலி. இயற்கை இவ்வகை எலிகளுக்கு அபார சக்தி கொண்ட சிறுநீரகப் பைகளை ஆசிர்வதித்துள்ளது. அதன் மூலம் அவை மனித சிறுநீரைப்போல 5 மடங்கு concentration கொண்ட சிறுநீரை உற்பத்தி செய்கின்றன. இதனால் உடம்புக்குள் நடக்கும் வேதி வினைகள் அபார அளவில் தண்ணீரை உற்பத்தி செய்கிறது. ஆகையால் இவை வாழ் நாளில் தண்ணீர் அருந்துவதில்லை

தண்ணீர் கஷ்டம் உள்ள பிரதேசத்து மக்கள் இனி இது போல ஒரு விசேஷ கிட்னி வேண்டி யாகம் செய்யலாம்

கம்ப ரசம்-1

கம்பன் என்றைக்குமே ஒரு வியப்பு ! சொல்லாட்சி, உவமைகளில்

சாம்பிளுக்கு ஒரு பாட்டு பார்ப்போமா

அனுமன் வைத்த நெருப்பால் இலங்கை எரிகிறது. இதனைச் சொல்ல வரும் கம்பன்

வினைஉடை அரக்கராம் இருந்தை வெந்துகச்

சனகி என்றோர்தழல் நடுவண் தங்கலால்

அனகன் கை அம்பெனும் ஊதையால்

கனகம் நீடிலங்கை நின்று உருகக் காண்டியால்

அர்த்தம்

ஜானகி நெருப்பு / - அரக்கர்கள் கரித்துண்டுகள் - ராமனின் வில் /வீரம் காற்று - இலங்கை தங்கம் - அந்த தங்கம் இப்போது இந்த நெருப்பில் உருகுகிறது

Tuesday, 4 March 2008

சில குறள்கள்

குறள் வெண்பா எழுதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் ! ! sample க்கு நான் எழுதிய இரண்டு

அச்சம் தவிர்த்து அறிவை வளர்த்திட்டால்
மெச்சா திருப்பவர் இல்

ஆதாயம் தேடாது செய்த உதவியினால்
பாதாளம் மட்டும் பயன்

நண்பர்கள் தங்கள் குறள் வரிசையை காட்டினால் இந்த தமிழ் பக்கத்தில் சந்தோஷமாக வெளியிடுவேன்

பாலிண்ட்ரோம்

நீ வாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ

இதுதான் சுஜாதா பாராட்டிய palindrom

சுஜாதாவும் நானும்

சுஜாதாவும் நானும் - இப்படி சொல்லிக்கொள்ள எனக்கு உரிமை இல்லை ! ஆனாலும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு முறை கணையாழிக்கு தமிழில் palindrome (இட வலமாகவும் வலஇடமாகவும் படித்தால் ஒரே மாதிரி வரும் வாக்கியம்) எழுதி அனுப்பினேன். அதை கடைசி பக்கத்தில் பிரசுரித்து என்னை கௌரவபடுத்தினார். அதனை தமிழில் மிக நீளமான palindrom என சுஜாதா சொன்னது மேலும் சந்தோஷம் !!! எனது கவிதைகளை மரபு உள் வட்டத்தில் சேர்த்துக்கொள்ள உள்ளதாகவும் எழுதியிருந்தார். அந்த கணையாழி இதழை SCAN செய்து அடுத்த போஸ்டிங்கில் வெளியிடுகிறேன்

சுஜாதா ! சுஜாதா !

நம்ப முடியாத செய்தி ! நம்பித்தான் ஆகவேண்டும் ! சுஜாதா காலமானார் ! எழுத்த்துக்களால் நம்மை ஆண்ட அவர் அவரை ஆண்டவரிடம் போய்விட்டார் ! இனி அவரை நினைவு கொண்டு நம் மனசை சமாதான படுத்திக்கணும்.