Saturday 31 May 2008

பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றம்


டெல்லி சர்க்கார் ரொம்ப கில்லாடி. இத்தனாம் தேதி லிட்டருக்கு பெட்ரோல் விலையும் டீசல் விலையும், காஸ் சிலிண்டெர் விலையும் இத்தனை உசத்தலாம் என்று ஒரு வழியாய் முடிவு செய்துவிட்டு , அதற்கு ஒரு வாரம் முன்னாலேயே லிட்டருக்கு 17 ரூபாய் ஜாஸ்தியானாலும் ஆகலாம், சிலிண்டெர் 100 ரூபா ஜாஸ்தியாகப் போறது என அதிர்ச்சி வைத்தியம் ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்புறம் இத்தனாம் தேதி இன்னின்னார் கூடி விவாதம் செய்து கடைசியாக இத்தனை என்று சொல்லுவோம் என்று சொல்கிறார்கள்.

பொது ஜனம் என்ற அப்பாவி எதைச் சொன்னாலும் நம்பிவிடுவான். அவனுக்கும் வேறு வழியில்லை. ஐபிஎல் கிர்கெட் மாட்சுக்கு நடுவே டிவி ஸ்கிரீன் கீழ் மூலையில் இந்த செய்தி எப்படியும் வல இடமாக ஜிலு ஜிலு என ஓடும். பதினேழு ரூபா ஏறிவிடும் என்று எதிர்பார்த்தால் 2 ரூபாயோ 3 ரூபாயோ உசந்திருக்கும். ஆஹா பரவாயில்லை என சமாதானம் ஆகிவிடுகிறோம்.

”லெப்ட் பார்டிகள் விடமாட்டார்கள் பாரேன்” என்று அசட்டுத்தனமாய் நம்பிக் கொண்டு இருக்கிறோம்

பெட்ரோலியப் பொருள் விலையேற்றம் எப்படி ஏன் நடக்கிறது. வித விதமாய் படம் போடுகிறார்கள்

பெட்ரோலியப் பொருள் தாராளமாய் கிடைத்து ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஒரு சங்கம் வைத்துள்ளன. அதாவது OPEC (Organization of the Petroleum Exporting Countries ) அல்ஜீரியா, அங்கோலா, ஈக்வடார், ஐக்கிய அரபு தேசம், இரான், இராக், சௌதி அரேபியா, குவைத், கத்தார், வெனின்சுலா, நைஜீரியா ஆகிய நாடுகள் அங்கத்தினர். இவர்கள் உலக் பெட்ரோலிய உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கை வைத்திருக்கும் கனவான்கள், இவர்கள் தவிர மெக்சிகோ வளைகுடாவில் கொஞ்சம், பழைய சோவியத ரஷ்யா பக்கம் கொஞ்சம் எண்ணெய் வருகிறது.. ஆக எண்ணெய் சாம்ராஜ்யம் OPEC தயவில் தான். ஆனால் இந்த அமைப்பு எண்ணெய் விலை எங்கள் கையில் இல்லை. ஆனால் மூன்றில் இரண்டு பங்கு எங்கள் கையில் இருப்பதால் நாங்கள் நினைத்தால் உற்பத்தியை கூட்டவோ குறைக்கவோ செய்வோம் என சொல்கிறார்கள்.

இந்த மாதிரி திடுக் திடுக் என்று விலை ஏறுவதற்கு எல்லாரும் சொல்லும் காரணம் தேவைக்கு ஏற்ற உற்பத்தி இல்லை.. காசு ஜாஸ்தி தந்தால் எப்படி உற்பத்தி ஜாஸ்தியாகிறது என்று யாரும் கேட்கக் கூடாது.. காசை கையில் ஜாஸ்தி வாங்கிக் கொண்டு தோண்டினால் பூமி மாதா, “சரியான காரியவாதிப்பா நீ.. சமயம் பார்த்து ஜாஸ்தி வாங்கிட்டியேனு” சிலாகிச்சு ஜாஸ்தி எண்ணை தருவாளா என்ன

வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருளை கொஞ்சம் மான்யம் தடவி (பெட்ரோல் லிட்டருக்கு சுமார் 17 ரூபாய் மான்யம்) நமது டெல்லி சர்க்கார் ஜனங்களுக்குத் தருவதாகவும் இனியும் மான்யம் தடவித்தர வழியில்லை.. விலையேற்றம் நிச்சயம் என்று சொல்லிவிட்டார்கள். அதுவும் மே 31ம் தேதி என்று அதற்கு சுப முகூர்த்தம் சொல்லியிருக்கிறார்கள். ஆக 31ம் தேதி பெட்ரோல் பங்குகாரர்கள் ”ஸ்டாக் இல்லை”என்று சின்னதாய் ஒரு காலண்டர் அட்டையில் எழுதி ஏற்கனவே வாங்கிய பெட்ரோலையும் டீசலையும் ஒளித்து வைத்து (பதுக்கி என்று சொன்னால் கோபித்துக் கொள்வார்கள்) ஒரே நாளில் சில ஆயிரங்களை பார்த்துவிடுவார்கள். இந்த பகல் கொள்ளையை ரெகுலேட் செய்ய மத்திய் சர்க்கார் ஒரு துரும்பைக் கூட அந்தண்டை இந்தண்டை நகர்த்தாது..

பின்னே என்ன ஸ்வாமி நாட்டில் இருக்கும் எல்லா பெட்ரோல் பங்குக்கும் பங்க் ஒன்றுக்கு ஒரு ஆள் போட்டு ”இந்தாப்பா உன்னோட பெட்ரோல் பங்கில் இன்னி தேதிக்கு இத்தனை லிட்டர் பெட்ரோல் இத்தனை லிட்டர் டீசல் இருப்பு இருக்கு.. இதெல்லாம் நீ பழைய விலைக்கு வாங்கினாய்.. இதை நீ பழைய விலைக்கு தான் வித்தாகணும்.. இனி புதுசா வாங்ற ஸ்டாக்கைத்தான் புது விலைக்கு விற்கலாம்” என சொல்ல சர்க்காருக்கு எத்தனை சிரமம்; எவ்வளவு ஆள் பலம் வேண்டும்..

இருக்கிற போலிஸ் பூராவும் முக்கியஸ்தர் பந்தோபஸ்துக்கே பத்த மாட்டேங்றது

பொது ஜனத்துக்காக இதை ஏன் செய்ய வேண்டும் ? அவர் தான் எதற்கும் கேள்வி கேட்கப் போவதில்லையே.

சர்க்கார் என்பதே பொது ஜனத்துக்குத்தான் என்று யாராவது சொன்னால்தான் அவருக்கே தெரியும். எல்லா சுமையும் அவர் தலையில்தான். அவர் தான் எல்லா வீக்கத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு சின்ன திறப்பு விழா .. அதில் கலந்து கொள்ள டெல்லியில் இருந்து ஸ்பெஷசல் ஏர்கிராப்டில் வந்து சின்னதாய் ஒரு பொத்தானை அழுத்திவிட்டு அரை பக்க அறிக்கை ஒன்றை இரண்டு தடவை நிமிர்ந்து பார்த்து படித்துவிட்டு போவதற்கு பாதுகாப்பு செலவு உட்பட பல கோடி செலவாகிறது. ”இதெல்லாம் என்னோட காசுப்பா. இப்படி விரயம் பண்றேளே “ அப்படினு என்னிக்காவது பொது ஜனம் கேட்டிருக்காரா.

வெயில், குளிர், மழை காலம் இப்படி எல்லா காலத்திலேயும் பார்லிமெண்டைக் கூட்டிவிட்டு , சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் நடுஹாலில் வந்து நின்று கொண்டு ஹர்த்தால் பண்ணி, ஒத்தி வச்சு முக்கியமான விஷயம் பேசாமலேயே தப்பாமல் அலவன்சு மட்டும் வாங்கிண்டு போறதை டிவில பார்த்துட்டு என்னிக்காவது பொது ஜனம் தலையில் அடிசிண்டுருக்காரா. இல்லை “அதெல்லாம் என்னோட காசு என்னோட காசுன்னு” புலம்பிருக்காரா

இவா அவாளோட சகவாசம் வச்சிண்டு அப்புறம் அவா இவாளோட சகவாசம் வெச்சிண்டானு சொல்லிட்டு திடீர்னு ஆதரவு வாபஸ் ,” வா எலக்‌ஷன்ல உன்னைப் பார்த்துக்றேன்னு “ சவால் விட்டுட்டு தேமேன்னு இருக்ற பொது ஜனத்துக்கிட்ட ,” இதோ பார்ப்பா கொள்கை பிரச்ச்னையால திருப்பி தேர்தல் வந்துடுத்து இப்ப எனக்கு ஓட்டு போடுனு” வந்து கேக்றப்போ அதையும் நம்பிண்டு காலம் கார்த்தால ஏழு மணிக்கே போய் ஓட்டுப் போட்டுட்டு வர்றாரே பொது ஜனம்; “ஏம்பா இப்படி என் காசைக் கரியாக்றேள்னு” என்னிக்காவது கேட்டிருக்கிறாரா.

”இதோ பாருங்க டீசல் விலை ரெண்ட்ரூவா ஏறிடுச்சு அதனால இனிமே சவாரி குறைஞ்சது 40 ரூபா ஆகும் “ என்ற குரலுக்கு தன்னை பழக்கிக் கொண்டவர்தானே பொது ஜனம்.. “ஏம்பா லிட்டருக்கு 2 ரூபாதானேப்பா ஏறிருக்கு 20 ரூபாய்க்கு வந்த தூரத்துக்கு இன்னிக்கு டபுளாக்கி கேக்றியேப்பானு “ என்னிக்காவது பொது ஜனம் கேட்டிருக்காரா. இல்லை போலிஸ் ஸ்டேஷன் போய், ”இதை என்னனு சித்த விசாரிங்கோனு” பிராது கொடுத்திருக்காரா.

”டீசல் பெட்ரோல் விலையெல்லாம் ஏறிடிச்சி இனிமே கிலோ இத்தனை கொடுத்தாத்தான் கட்டுபடியாகும்” என்று சொல்லும் போதும் ,”ஆஹா பேஷா செய்துடலாம்னு தானே” சொல்றார் பொது ஜனம்.

மிகச் சாதாரணமான பொது ஜனம், கெடு தேதி தவறாமல் வரி செலுத்தி விட்டு சமத்தாய் வீட்டுக்கு வந்து டீவி போட்டுக் கொண்டு சர்க்காரின் எல்லா விழாவையையும் தவறாமல் பார்க்கிறார். “ஏம்பா இந்தாள் இத்தனை கோடி ரூபா வரி பாக்கி தரணும்னு சொல்றாளே.. இவாளுக்கெல்லாம் இப்படி உசந்த அவார்டா தரேளேனு “ என்னிக்காவது சொல்லிருக்காரா

இப்படியும் இன்னும் பலவிதமாயும் அபார சகிப்புத்தன்மை கொண்ட இந்த அப்பாவி பொது ஜனத்துக்காக பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டெர் விலையில் இன்னும் கொஞ்சம் மான்யம் தடவித்தரலாகாதா..

டெல்லியில் நார்த், சௌத் இன்ன பிற பிளாக்குகளில் கோலோச்சும் கோட்டு சூட்டு போட்ட, வெள்ளை வேட்டி சட்டை அணிந்த, ஷெர்வாணி அணிந்த சம்பந்தப்பட்ட இலாக்காக்களில் உசந்த பொறுப்பிலிருக்கும் பெரியோர்களிடம் ஒரு விண்ணப்பம். இப்படி ஒரு சகாயம் நீங்கள் இந்த பொது ஜனத்துக்கு செய்தால் அவர் கொஞ்ச நேரம் நம்ப மாட்டார். அப்புறம் உத்சாகத்தில் தேம்பி தேம்பி அழுவார்.. நம்பிக்கையில்லை என்றால் செய்துதான் பாருங்களேன்

Saturday 24 May 2008

டார்ச் லைட்


“ஏண்டா பாஸ்கி.. போன் பண்ணா எடுக்க இவ்வளவு நேரமா? “

“இல்லை புரொபசர்.. டாய்லெட்ல இருந்தேன்.. சொல்லுங்கோ “

”எப்டிடா ஒருமாசம் லீவு நல்லா போச்சா “

“ஆச்சு ... நாளைக்கி வந்து ஜாயின் பண்ணிடுவேன்.. அத ஞாபகப்படுத்தான் கூப்பிட்டேளா “

“இல்லைடா.. இது அதைவிட முக்கியம்.. காரணமாத்தான் உனக்கு ஒரு மாசம் லீவு கொடுத்து அனுப்பிச்சேன்.. ஆனா நான் சும்மா இல்லை.. ஒரு புது இன்வென்ஷன்.. நீ இன்னிக்கே ஜாயின் பண்ணிடு அதுவும் இன்னும் ஒரு மணி நேரத்தில... அதுவும் நாலு நாள் வெளியூர் போய் தங்கர மாதிரி ரெடியா வா.. நாம இன்ன்னிகு ஊட்டி போறோம்”

”புரொபசர்.. என்ன இந்த ஸ்பீடு.. ஊட்டி அது இதுன்றேளே .. விவரமா சொல்லுங்கோ .. “

“உங்கிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்லப் போறேன்.. எல்லாம் நேர்ல சொல்றேன்.. வரும் போது மறக்காம ஒரு பெரிய தோசைக்கல்.. கிரேன்ல இருககுமே ஸ்டீல் ரோப் அதுல ரெண்டு மீட்டர்.,, ஒரு கெட்டி பெட்ஷீட்.. ம்ம்ம் அப்புறம்.. இது போதும் வாங்கிண்டு வந்திடு”

சொன்னபடியே இந்த வஸ்துக்களை சேகரம் பண்ணிக்கொண்டு பாஸ்கியாகப்பட்ட பாஸ்கர் சடகோபன் எதிரில் ஒரு மணி நேரத்தில் ஆஜரானான்.

“என்னடா கிளம்பலாமா?”

”நீங்க ரொம்ப மோசம் புரொபசர்.. ஒரு விவரமும் சொல்ல மாட்டேங்கறேளே.. இந்த ப்ராஜக்டில் நான் கிடையாதா”

“பறக்காதேடா.. ஊட்டி வரை போக இன்னும் எத்தனை நாழியிருக்கு.. போறச்சே எல்லாம் விலாவரியா சொல்றேன்.. நாழியாறது .. இப்ப கிளம்பினாத்தான்.. கார்தால போக முடியும். நம்ம ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கார் ஓட்டலாம்”.


”அதான் கிளம்பி 100 கிலோ மீட்டர் பக்கம் வந்தாச்சே. இன்னும் நீங்க சொல்லலை”

“விட மாட்டியே... சரி இப்ப நான் கேக்றதுக்கு ஒவ்வொண்னா பதில் சொல்லு”
“கேளுங்கோ”

“உன் முடி ஏன் இப்படி ஆடறது”

“விளையாடறேளா.. 70 ல கார் ஸ்பீடா போறது அதான்”

“கார் ஸ்பீடா போனா உன் கேசம் ஏண்டா ஆடணும்”

“காத்தடிச்சா வேகமா அடிச்சா ஆடாதா.. புரொபசர்.. ஏன் கடிக்றேள்”

“சரியாச் சொன்னே.. இப்ப காரை நிறுத்தறேன் “

நிறுத்திவிட்டு பாண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சின்ன டார்ச் லைட் எடுத்தார்.. அதை உயிர்பித்து வெளிச்சத்தை பாஸ்கி முடி மேல் அடித்துவிட்டு ,

“இப்பவும்தான்.. லைட் உன் முடிமேல வேகமா அடிச்சது.. ஏன் ஆடலே..”

“இதென்ன பைத்தியக்காரத்தனம்.. சாரி புரொபசர் ..வாய் தவறிடுத்து.. லைட் எப்படி பொருள நகர்த்தும்.. இட் இஸ் நாட் அ மேட்டர். ஐ மீன்.. அது திடமோ, திரவமோ, வாயுவோ இல்லையே “


“கிட்டக்க வந்துட்டடா... இப்ப பிஸிக்ஸல மேட்டர்னா என்ன”

“ அதுக்கு வெயிட் இருக்கணும்.. இடத்தை அடைத்துக் கொள்ளும் குணாதிசயம் இருக்கணும்”

“பிரமாதம்டா... இப்ப காத்துக்கு வெயிட் இருக்றதால அது ஒரு வேகத்துல உம் மேல பட்டா. முடி, டிரஸ் எல்லாம் ஆடறது. சரியா. “

“ஆமாம்.. சரிதான்”

”இப்ப உம்மேல பட்ட லைட்டுக்கு வெயிட் அதாவது எடை இருந்தா அது உன்னை அசைக்குமா “”

”லைட்டுக்க்தான் வெயிட் கிடையாதே”

அதில்லைடா வெயிட் இருந்தா ... என்னவாகும்”

“அசையும்... நிச்சயம் அசையும்”

“அதாண்டா கண்ணா என்னோட புது இன்வென்ஷன்.. எடை இருக்கிற வெளிச்சம்.. அதாவது அந்த மாதிரி எடையுடன் வெளிச்சம் தர ஒரு டார்ச் லைட், பல்பு.. ரெண்டும் கண்டுபிடிச்சிருக்கேன்.. அதை டெஸ்ட் பண்ணத்தான்.. இப்ப ஊட்டி போறோம்.”

பாஸ்கி ரொம்பவுமே பிரமித்தான்...

“புரொபசர்.. பிரில்லியண்ட்.. ஆனா லைட்டோட வேகம் ஒரு செகண்டுக்கே கிட்டத்தட்ட 2 லட்சம் மைல் ஆச்சே புரொபசர்.. அந்த வேகத்தில ஒரு சின்ன வெயிட் மேல பட்டாலே.. எல்லாம் சிதறிடுமே..”

“அதாண்டா பாஸ்கி சூட்சுமம்.. எல்லாம் ஊட்டில விவரமா சொல்றேன்.. இனிமே எல்லாம் பிராக்டிகல் விளக்கம் தான்”

விடிகாலை அந்த மலைப்பாதை ரொம்பவுமே குளிராக இருந்தது.. இருவருக்கும் இரவு முழுநேர கார்ப்பயணம் ரொம்பவுமே களைப்பைத் தந்தது.. கார் கொஞ்சம் கொஞ்சமாய் ஊர்ந்து மேலேறிக் கொண்டிருந்தது.

“புரொபசர்.. இது ஏதோ.. காட்டுப்பாதை மாதிரி தெரியறது.. இதுல ஏன் திருப்றேள்.. ”

“தெரிஞ்சுதாண்டா திருப்றேன்.. ஏன் இப்படி கத்றே.. ஊட்டி கிரவுடட் பிளேஸ்.. அங்க போய் இந்த லைட் வேகத்தில் பரிசோதனை செய்ய முடியுமா .. யோசிச்சுப் பாரு.. இப்படி ஆள் அரவம் இல்லாத வனாந்திரமா பார்த்து டெஸ்டெல்லாம் பண்ணிட்டு.. அப்புறமா.. ஊட்டி போறோம். அங்க கெஸ்ட் ஹவுஸ் புக் பண்ணிட்டேன்.. ஒரு பிரஸ் கான்பிரன்ஸ் இருக்கு.. அவாளெல்லாம் ஊட்டிக்கு மேல தொட்டபெட்டா போற வழியில இதே மாதிரி ஒரு இடத்துக்கு கூட்டிண்டு போய் டெமோ செஞ்சி காமிக்கப்போறோம்.. எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு”

“அது சரி.. ரொம்ப பிரிபேர்டாத்தான் இருக்கேள்.. ஆள் இல்லாத வனாந்திரம் சரி.. அரவம் இல்லைனு சொல்ல முடியாது..”

கொஞ்ச தூரத்திலேயே சடகோபன் கற்பனைக்கு ஈடு கொடுத்த ஒரு சின்ன வெட்ட வெளி.. அங்கிருந்து சடக்கென சரியும் பள்ளத்தாக்கு.. தூரத்தில் சின்ன சின்னதாய் மலைகள் தொடர்ச்சியாய்.. மலையை சுற்றி செல்லும் எந்தப் பாதையும் கண்ணுக்கு தெரியவில்லை..

“இந்த இடம்தாண்டா ஐடியல் பாஸ்கி.. டயம் கூட இப்ப ஆறரைதான் ஆச்சி.. இங்க ஜன நடமாட்டமே இருக்காதுனு நினைக்கிறேன்.. ஜஸ்ட் 30 நிமிஷம்.. ரெண்டு மூணுதரம் டெஸ்ட் பண்ணி அத ஹேண்டிகாம்ல் பதிஞ்சிண்டுட்டு புறப்பட வேண்டியதுதான்”

“முதல்ல அந்த டார்ச் லைட்ட கண்ல காட்டுங்கோ”

சடகோபன் காரின் டிக்கியிலிருந்து ஒரு பெட்டியை சர்வ ஜாக்கிரதையாக இறக்கினான். அதைத் திறந்து அதிலிருந்து துணிகளுக்கு மத்தியில் ஏறக்குறைய ஒளித்து வைக்கப்பட்ட அந்த விஷேஷ டார்ச்சை எடுத்தான்..

‘இதாண்டா அது.. “

“எங்க குடுங்கோ பாக்றேன்”’

“இரு அவசரப்படாதே.. இதுல நிறைய விஷயம்.. கவனிக்கனும்.. இந்த டார்சுக்குனு விஷேஷ பல்பு, ஒரு ரியோஸ்டாட். அப்புறம் ஷாக் அப்சார்ப் பண்ண ஒரு செட்டிங்”

“புரியற மாதிரி சொல்லுங்கோ”

“மண்டு .. லைட்டோட வேகத்தில இங்கேயிருந்து சந்திரனுக்கே ஒன்றை செகண்ட்ல போய்டலாம்.. சோ அந்த வேகத்துக்கு அதோட வெயிட் சும்மா ஒரு கிராம் இருந்தா கூட இந்த மலையைக் கூட பேர்த்து எடுத்துடும். அதுவும் இல்லாம எடையுள்ள ஒரு வஸ்து காத்தைக் கிழிச்சிண்டு அந்த வேகம் போனா ப்ரிக்‌ஷன்ல என்ன சூடு ஜெனரேட் ஆகும். இதெல்லாம் விட நியூட்டன் விதிப்படி இந்த வேகத்தில் ஒரு வஸ்து முன்னே போனா அதோட ஆப்போஸிட் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்.. இதுக்குதான் இதெல்லாம்”

“எக்ஸலண்ட் புரொபசர்.. இப்போ இதெல்லாம் செட் பண்ணி இங்க அந்த டார்ச் லைட்டில் எடை தர வெளிச்சம் காமிக்கப் போறேள் அப்படித்தானே”

”ஆமாண்டா.. இந்த ரியோஸ்டாட்.. இந்த விஷேஷ டார்ச்/ பல்பிலிருந்து வரும் வெளிச்சத்தோட வெயிட்டை கூட்ட குறைக்க.. இப்போதைக்கு ஒரு கிராமில் ஒரு கோடியில் ஒரு பங்கு வரை எடை உள்ள வெளிச்சம் வர்ற மாதிரி செட் பண்ணியிருக்கேன். ஒரு தடவை இந்த டார்ச்சை ஆன் பண்ணினால் ” டக்னு” ஒரு பிளாஷ் மாதிரி லைட் அடிக்கும்.. ”எடையுள்ள வெளிச்சம்”. உடனே ஆப் ஆயிரும். அப்புறம் 5 அல்லது 6 செகண்ட் கழிச்சுதான் திருப்பவும் செய்யமுடியும்.. ஏன்னா தொடர்ச்சியா எடையுள்ள லைட் அடிச்சா அதிர்வு சூடு இதெல்லாம் தாங்க முடியாது. இந்தோ பார்த்தியா. இந்த பைபர் ஷாக் அப்சார்ப் சிஸ்டம் இந்த டார்ச் எடையுள்ள வெளிச்சத்தை தரும் போது பின்னால எகிறாம இருக்க. இந்த ஷாக் அப்சார்பர் நிரந்தரம் இல்லை அப்பப்ப லோட் பண்ணனும். ஒரு தடைவை 12 லோட் பண்ணலாம். 12 தடவை வெளிச்சம் அடிக்கலாம். இப்ப 12 லோட் பண்ணியிருக்கு . எக்ஸ்டிரா ஸ்டாக் இல்லை”

”புரொபசர் நீங்கள் ஒரு அதிசயம்... இப்போ எப்படி டெஸ்ட் பண்ணலாம்”

“அந்த தோசைக்கல்லை ஒரு மரத்தில் கட்டி தொங்கவிடு”

அந்த விஷேச டார்ச் உமிழ்ந்த எடையுள்ள வெளிச்சம் பௌதிக விதிகளை மீறாமல் அந்த அப்பாவி தோசைக்கல் மீது பட்டதுதான் தாமதம் தோசைக்கல் முதலில் ஒட்டையானது அதே ஷணத்தில் நொறுங்கியது..

”பாத்தியா பாஸ்கி.. எப்படி”

“புரொபசர்.. மார்வ்லெஸ்.. இந்த யுகத்தின் இணையில்லாத விஞ்ஞானி நீங்கள்தான்.. இந்த டார்ச் லைட்ட வெச்சி எதை வேணுமின்னாலும் சுட்டு வீழ்த்தலாம்”

“போடா மண்டு.. டிஸ்டரக்டிவா நினக்காதே.. கன்ஸ்ட்ரக்டிவா யோசி.. இந்த வேகத்தை எல்லா வகை டிரான்ஸ்போர்ட் சிஸ்டம்,, பூமியை தண்ணி எண்ணெய்க்காக தோண்டரதுக்கு, பாரம் தூக்றதுக்கு.. இப்படி நல்ல காரியத்துக்கு யூஸ் பண்ணலாம்.. சரி கொண்டு வந்த பெட்ஷீட் எங்க அதை அந்த ரெண்டு மரத்துக்கும் இடையில் கட்டு”

“புரொபசர் இப்ப நான் சுடறேன்”

”ஏண்டா ஆயுதாமாவே நினைக்கிறாய்.. இந்தா அந்த பெட்ஷீட் மேல வெளிச்சம் அடி “

பாஸ்கி டார்சை பெட்ஷீட் எதிரே காட்டி ஸ்விட்சைப் போட்டான். காட்டன் பெட்ஷீட் குபுக்கென்று தீப்பிடித்தது.

”புரொபசர் போதும்.. இப்பவே, ரெண்டுதரம் ஆய்டுத்து.. அப்புறம் பிரஸ் ஆசாமிகளுக்கு காண்பிக்க லோட் இருக்காது “
“இருடா அங்க அவாளுக்கு ஒரு அஞ்சி தரம் தான் காண்பிக்கப்போறேன். இங்க இன்னும் ஒரு தடவை பார்ப்போம்.. மூணு தடவை ஆய்டும்.. ஊருக்கு திரும்றச்சே மிச்சம் நாலு லோட் கையில் இருக்கும்.. நம்ம லேப்ல இன்னும் கொஞ்சம் பண்ணிக்கலாம்”

“இப்ப எப்படி டெஸ்ட் பண்ணப் போறேள் “

”இந்த லைட்டோட வெயிட்டை இன்னும் கொஞ்சூண்டு ஜாஸ்தி பண்ணி.. இங்க இந்த பூமியில் அடிச்சுப் பார்ப்போம்”
“புரொபசர் எதுக்கும் ஜாக்ககிரதை. எல்லா அளவும் சரியா இருக்கானு பார்த்துட்டு பண்ணுங்கோ.. எதுக்கும் பூமாதாவை என்னை ஷமிச்சுடுமான்னு கேட்டுண்டுடுங்கோ “

சடகோபன் ரியோஸ்டாட்டை அட்ஜஸ்ட் செய்துவிட்டு,, ஷாக் அப்சார்பர் சரியாயக இருக்கிறாதா எனப்பார்த்து விட்டு, அந்த கையை தோளளவில் நேராய் நீட்டிக் கொண்டு விஷேஷ டார்ச்சை தரைக்கு 90 டிகிரி செங்குத்தாய் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஸ்விட்ச் போட்டான்.

ஒரு செகண்டுக்கு சுமார் 2 லட்சம் மைல் செல்லும் அந்த விஷேஷ, எடையுள்ள லைட் அந்த மஹா சொற்பமான நாலரை அடி தூரத்தைக் கடந்து தரையைத் தொட்டு துளைத்து மண், கல் எல்லாவற்றையும் வாரியெறிந்த வேகம், சடகோபன் சடக்கென கையை மடக்கிக் கொள்வதை விட பல லட்சம் மடங்கு வேகமாய் இருந்தது. அவன் கையில் இருந்த டார்ச்சை ஒரு கனமான கல் எகிறடித்து கண்கானாமல் தூக்கி எறிந்தது

Thursday 22 May 2008

இப்படிக்கு ... தொடர்ச்சி


மாற்றுக் கருத்தாயினும் எனது வலைப்பதிவில் செல்வேந்திரனின் பின்னூட்டத்தை பதிவு செய்ய அனுமதி வழங்கி பின்னூட்டமும் அங்கே அனைவர் பார்வைக்கும் உள்ளது (பார்க்க: இப்படிக்கு... பதிவின் பின்னூட்டங்கள்)

இந்த வலைப்பதிவில் இந்த பொருள் குறித்து முத்தமிழ் கூகிள் குழுமத்தில் (Google Groups) இரண்டு வரியில் ஓர் இழை சேர்த்தேன். அங்கே விவாதம் இன்னும் தொடர்ந்து நடக்கிறது. பல வகைக் கண்னோட்டங்கள் அங்கே பதிவாகிக் கொண்டிருக்கின்றன. அங்கே உறுப்பினராகி விவாதத்தில் பங்கு பெற அழைக்கிறேன்

இந்தப் பொருளில் வேந்தன் அரசு, சங்கர் குமார், பச்ச புள்ளே, ஸ்ரீ(முத்தமிழ் கூகிள் குழுமம்) செல்வேந்திரன் ஆகியோர் மாற்றுக் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர் (யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் என்னை அவர்கள் மன்னிக்க)

இப்பொருளில் பெண்கள் பக்கமிருந்து குழுமத்திலும்(முத்தமிழ் கூகிள் குழுமம்) வலைப்பதிவிலும் பின்னூட்டம் இல்லை.

ஆயினும் இரண்டு பெண்கள் எனக்கு தனிமடலில் அவர்கள் கருத்துக்களை அனுப்பியுள்ளனர்.

இந்த பொருள் விவாதமாக நடைபெறும் நிலையில், பொது விவாத மேடையில் பெண்கள் பங்கு கொள்ளும் அளவுக்கு இன்னும் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளும் நிலையில் மனதளவில் வளரவில்லை

ஆயினும் இதில வியப்புக்குரிய செய்தி: ஒரு பெண் தன்னை பாலியல் தொழிலிலில் இருப்பதாக அறிமுகம் செய்துகொண்டு எழுதிய தனிமடலை குறிப்பிட வேண்டும். அவரது அறிமுகம் Bonafide ஆனதா என்ற ஐயம் எனக்கு உள்ளது. ஆனால் அவர் வெளிப்படுத்திய அவரது மனநிலை என்னை சற்று சங்க்டப் படுத்தியது. பாலியல் தொழில் அவரது தொழில் என்ற கூற்றை தற்காலிகமாக ஏற்றுக் கொண்டு அதைப் படித்தால் இந்த தொழிலை ஒழித்தே ஆக வேண்டும் என்றே தோன்றுகிறது.

பாலியல் தொழில் அங்கீகரிக்கப் பட வேண்டும் என்ற சிலரின் வாதம் கேள்வி அறிவினாலும், இது தொடர்பான ஊடக செய்திகளின் வாயிலாகப் புரிந்து கொண்ட விதத்தினாலுமேயல்லாமல் அவர்தம் தனிப்பட்ட அனுபவம் என்று சொல்ல முடியாது.

பாலியல் தொழில் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்ற எனது ஆதங்கமும் கூட கால காலமாக கற்ற கல்வி, போதிக்கப் பட்ட அறிவு / பண்புகள் அதன் வழி ஏற்படுதிக் கொண்ட சிந்தனைப் பின்னல்கள், சட்டம் பயின்ற போது பெற்ற நூலறிவு, பெரியோர் அமைத்தளித்த வாழ்வு முறை இதன் பிண்ணனியிலேயே.

இப்போது ஒருவர் பாலியல் தொழிலாளி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு தனது எண்ணத்தை வெளியிட்டிருக்கும் நிலையில் அவர் தம் கருத்தையும் பார்க்க வேண்டியதாகிறது. அவர் தனது பெயரை (பொய்ப் பெயர் ஆயினும்) வெளியிட வேண்டாம் என சொன்னதால் பெயரை மட்டும் மறைத்து அவரது கருத்தை எனது அடுத்த பதிவில் எனது வ்லைப்பதிவில் வெளியிடுகிறேன்.

மற்றுமொரு ஆச்சரியம்.. ஒரு பெண் போலிஸ் அதிகாரியின் தனி மடல்.. இவர் தன்னை நேரடியாகவே அறிமுகம் செய்து கொண்டுள்ளார். இவரது கடிதம் ஆங்கிலத்தில்.. காரணம் தனக்கு தமிழில் எப்படி இமெயில் அனுப்ப வேண்டும் என தெரியாது என சொல்லியுள்ளார்.. அவரது ஆங்கில மெயிலை அப்படியே வெளியிட அனுமதியும் கொடுத்துள்ளார். அவரது ஆங்கில மெயிலை தமிழாக்கம் செய்து “இது சரியா- உங்கள் கருத்து அப்படியே வந்துள்ளதா” என கேட்டு மெயில் ஒன்று அனுப்ப உத்தேசித்துள்ளேன். காரணம் வாசகரில் சிலர் தமிழில் புலமை பெற்றுள்ள அளவு ஆங்கிலத்தில் பெற்றிருக்க மாட்டார்கள். அந்த காவல் அதிகாரி தனது ஆங்கில மெயிலின் தமிழாக்கம் சரி என்று சொன்னவுடன் அதனையும் (ஆங்கிலம் மற்றும் தமிழாக்கம்) எனது அடுத்த பதிவில் பதிகிறேன்

இது தவிர சகோதரர் வேந்தன் அரசு(முத்தமிழ் கூகிள் குழுமம்) எனக்குள் ஏற்படுத்திய திருக்குறள் அலை காரணமாக “வரைவின் மகளிர்” அதிகாரம் குறித்து நான் கலந்தாலோசித்த பேராசிரியர் ஒருவரின் ( இவர் திருக்குறளில் ஆராய்ச்சி செய்து இரண்டு முறை முனைவர் பட்டம் பெற்றவர்- மிக முக்கியமான செய்தி திருக்குறள் வேற்று நாட்டவருக்கும் தகுந்த நீதி நூலே என்பதனை புரியவைக்க சுமார் 17 நாட்டு கலாச்சார பிண்ணனியுடன் அந்த நாட்டு மொழியியல் வல்லுநர்கள் கலாச்சார ஆசிரியர்கள் இவர்களுடன் கலந்த்தாலோசனை செய்து அந்த 17 நாட்டு மொழியிலும் கட்டுரை வெளியிட்டவர்) விளக்க உரையினையும் எனது அடுத்த பதிவில் பதிவு செய்கிறேன்

இது தவிர இந்திய அரசியல் நிர்ணய சபையில் (Constituent Assembly) Constitution of India வின் 23 வது ஷரத்து(Right Against Traffic in Human Being and Forced Labour) ஏன் தேவை அது ஏன் ஒரு அடிப்படை உரிமையாகக் கருத்தப் படவேண்டும் என்று அம்பேத்கார் அவர்களின் விளக்கத்தினையும் சேகரித்து வருகிறேன். இந்த விவாதம் நான் பல வருடங்களுக்கு முன்பு படித்த்து. இப்போது Constituent Assembly விவாதங்கள் நூலை வேண்டி வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்டிருக்கிறேன். இந்த விவாதங்கள் இப்போது இணையத்திலேயே கிடைப்பினும் சில முன்னுரைகள் இந்திய கலாசாரத்தினை சாதாரணமாக நினைப்பவர்களுக்கு அது அப்படியல்ல என புரிய வைக்க பயன்படும். இது தவிர புகழ் வாய்ந்த Jurist H. M Seervai அவர்கள் Constitution of India க்கு எழுதிய Commentary லிருந்து குறிப்புகள் சேகரித்து வருகிறேன்.

மேலும் 1950 லிருந்து 2007 வரை இந்திய உச்சநீதி மன்றம் பாலியல் தொடர்பான வழக்குகளில் வழங்கிய பல வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்புகளையும் படித்து வருகிறேன். இந்த தீர்ப்புகள் முதிர்ந்த அனுபவமும், வாழ்வியல் நடைமுறையில் பல தரப்பட்ட நிலைகளைக் கடந்த நீதியரசர்களால் வழங்கப்பட்டவை. அந்த தீர்ப்புகளில் சட்டம் மட்டுமில்லை. சம்பந்தப்பட்டவர்களின் ஆதங்கமும் மன் உணர்வுகளும் உள்ளன

எல்லாவற்றிலும் முக்கியமானது மூவாலுர் ராமாமிர்தம் அம்மையார் அவர்கள் தேவதாசி ஒழிப்புக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் பிறந்த வரலாறு குறித்து சில முதியவர்கள் எனக்கு குறிப்புதவிகள் செய்திருக்கிறார்கள்

மேலும் UNITED NATIONS Population Division Department of Economic and Social Affairs ன் EXPERT GROUP MEETING ON INTERNATIONAL MIGRATION AND DEVELOPMENT ன் அறிக்கைகள் ரெகுலராகப் படிக்கிற வழக்கம் உண்டு. இந்த கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட பொருள் ஆழம் என்னை வியப்பின் எல்லைக்கு கொண்டு சென்றது.. எத்தனை தகவல்கள்.. பல நாட்டு கலாச்சார , சட்ட பிண்ணணியுடன் ஆராயும் அறிஞர்களின் வாதப் பிரதிவாதங்கள்

ஐ.நா சபையின் அங்கமான உலக சுகாதார நிறுவனம் (WHO) உலகத்தில் பாலியல் தொழில் தொடர்பாக விடுத்த/ விடுத்துக்கொண்டிருக்கும் எச்சரிக்கை செய்தி படங்களும் சேகரித்து வருகிறேன்

International Labour Organisation இந்த பாலியல் தொழில் தடை செய்யப்பட்டே ஆக வேண்டும் என்று பல ஆண்டுகளாக சில நாடுகளுக்கு எழுதிய மடல்கள் அதற்கு அந்த நாடுகள் தந்த பதிலுரைகளையும் சேகரித்து வருகிறேன்

பலருடன் உடல் உறவு செய்யின் (பாலியல் நோய் பாதுகாப்புடனே செய்தாலும்) ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்புகள் குறித்து புகழ் பெற்ற நரம்பியல் மருத்துவர் ஒருவர் சில குறிப்புகள் தருவதாக சொல்லியுள்ளார்.


ஆக இதனை பல கோணங்களில் அணுகி வருகிறேன்.

வலைப்பதிவில் தொடர் பதிவாகத்தான் செய்ய வேண்டும்.. அலுவல் பணிகள் வேறு.. கொஞ்சம் கால அவகாசம் எடுத்து நன்றாக செய்ய வேண்டும் என்று ஒரு ஆவல்.

இவை அனைத்தும் சேர்த்து எனது வலைப்பதிவில் அடுத்த பதிவினை இடுகிறேன்

Sunday 18 May 2008

இப்படிக்கு


இது சில நாள் முன்பு விஜய் டி.வியில் ஒளிபரப்பான “இப்படிக்கு ரோஸ்” ஒரு குறிப்பிட்ட நாள் நிகழ்ச்சியின் விமர்சனப் பதிவு.

நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓர் அரவாணி. நிகழ்ச்சியில் ”வரைவுஇலா மான்இழையார்” இருவரும் புகழ் பெற்ற எழுத்தாளர் சாருநிவேதிதாவும் கலந்து கொண்டனர்.

”வரைவுஇலா மான்இழையார்”- இந்த சொற்பிரயோகத்திற்காக என்னிடம் இமெயில், சாட், செல்போனில் சண்டை பிடிக்கும் உத்தேசம் யாருக்காவது இருக்குமானால் நேரே பக்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு எதிரே போய் நின்று கொண்டு சண்டை போடவும்.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள இரண்டு பெண்களை இருட்டிலிருந்து மஹா வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ”உனது தொழில் சூட்சுமங்கள்” என்ன என்னவென்று கேள்வி கேட்டார்கள். எதிர்பாராமல் இந்த தொழிலில் சிக்கிக் கொண்ட பெண்மணியும், எனக்கு இது தான் ரொம்பப் பிடிச்சிருக்கு என சொன்ன பெண்ணும் டிவியின் பப்ளிசிட்டிக்கு ரொம்பவும் உபயோகமாக இருந்திருப்பார்கள். அதிலும் ஒரு ”வரைவுஇலா மான் இழையார்” எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொன்னதைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை.

மனிதனின் பாலியல் ஆசைகளும் அது மறுக்கப்படுவதும் தான் சமூகத்தில் CRIME RATE அதிகமானதற்கு காரணம் என ”வரைவுஇலா மான்இழையார்” சொன்னது வேதனை. அதைவிட சோதனை ”இந்த தொழிலுக்கு” சட்ட அங்கீகாரம் தந்துவிட்டால் குற்றங்கள் குறையும் என்ற வாதம்.

Traffic in Human Being என்று மிக நாகரீகமாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 23 வது ஷரத்தில் சொல்லப்பட்டு தடை செய்யப் படவேண்டியதாகவும் சொல்லப் பட்ட இந்த தொழில் ஒரு குற்றம். தண்டனைக்குரிய குற்றம். இது Exploitation வகையிலான மனித உரிமைக்கு எதிரான குற்றம்.

இந்த தொழிலைச் செய்துவிட்டு தண்டனை அடையும் பெண்கள் மீண்டும் மீண்டும் அந்த அவலத்திற்கே தள்ளப்படலாகாது என்று சமூக அமைப்புகள் போராடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் விஜய் டிவி காற்றலைகளில் பரந்துள்ள TELECAST பலத்தால் அந்த அவலத்தை சட்ட ரீதியாக்க வேண்டும் என்ற குரலை பதிவு செய்ய முயற்சிப்பது CHEAP PUBLICITY ரகம்

ஐரோப்பாவில் சில நாடுகளில் நடக்கிறது , தாய்லாந்தில் நடக்கிறது.. அங்கேயெல்லாம் ஜன சபை கூடி இதைச் செய்யலாம் என அறிவித்து “தொழில்” அமோகமாக நடக்கிறது என்றும் இந்த நிகழ்ச்சியில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது. அங்கேயெல்லாம் பாலியல் தொழில் அங்கீகாரம் பெற்றுவிட்டதனால் CRIME RATE குறைவாக இருப்பதாகவும் ராத்திரி 10 மணிக்கு மேல் பெண்கள் அங்கே வெளியில் சுதந்திரமாக போகலாம் வரலாம் என்ற எந்த புள்ளியியல் விபரமும் இல்லாத வாதம் வேறு.

சில பத்து வருஷங்களுக்கு முன்பு பாலைவனம் மாதிரி இருந்த துபாய் இப்போது எப்படி இருக்கிறது. பெரும்பான்மையாக Expatriate Work Force ஐ நம்பி இருக்கும் அந்த ஊரில் Sex Work Legalize பண்ணப்படவில்லை. அங்கு ராத்திரி 10 மணிக்கு ஒரு பெண் பாதுகாப்பாக வெளியே போய் வரமுடியும். உலகத்தின் எதோ ஒரு சில மூலைகளில் நடப்பதால் அது சௌகர்யம் என்று சொல்வது விதண்டாவாதம்.

Sex Urge பசி மாதிரி மலம் மாதிர் ஓர் உடலியற் கூறு என்று ”வரைவுஇலா மான்இழையார்” சொல்லிவிட்டு இதையெல்லாம் தடை செய்ய முடியுமா எனக் கேட்பது, நான் கெட்டுப் போய்விட்டேன். எல்லோரும் கெட்டுப் போகலாம் வாருங்கள் என கூப்பிடுவது மாதிரி இருக்கிறது. பசித்தால் எதை வேண்டுமானால் சாப்பிடலாமா.

அப்புறம், ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஒரு மாயை அது இந்தியாவில் ஐரோப்பியர்கள் வந்த பின் வந்த VICTORIAN MORAL என்று சொன்னது தான் நல்ல தமாஷ். பிரிட்டிஷ் சர்க்கார் வருவதற்கும் முன்பு இந்தியாவில் இந்த கொள்கையே இல்லை என்பது ”வரைவுஇலா மான்இழையார்” சொல்லும் வாதம்.

ஐரோப்பியர் இங்கே கால் வைப்பதற்கு பலப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கே ”ஒருவனுக்கு ஒருத்தி”க்கு காப்பியங்களும் பாட்டுகளும் நிறைய இருக்கின்றன. அதே சமயம் கி.மு 300 ல் மௌரிய காலத்திய ”அர்த்த சாஸ்திரத்தில்” (ஆமாம் சாணக்கியனின் அர்த்த சாஸ்திரத்தில் தான்) ”இந்த தொழிலில்” இருப்பவர் வருமான வரி கட்ட வேண்டும் என்றும் இந்த தொழிலை ரெகுலேட் செய்ய “Ganika Pratiganika “ என்று அரசு அதிகாரி ஒருவர் இருக்க வேண்டும் என்றும் சொல்லியுள்ளது.

மனித நாகரீகத்தின் எந்த நிலையையும் பிற நாட்டவரைப் பார்த்த் பின் தான் தெரிந்த கொள்ள வேண்டும் என்ற நிலை இந்தியாவுக்கு இல்லை. இதற்கு முன்பும் இருந்தது இல்லை


Human Trafficking சட்ட விரோதம் என்ற நிலையில் இருக்கும் போதே ஆள் கடத்தல் நடக்கும் போது சட்ட அங்கீகாரம் கொடுத்துவிட்டால் கடத்தல் ஜாஸ்தியாகிவிடாதோ.; எப்படி குறையும் என எதிர்பார்க்கிறார்கள் என புரியவில்லை.

Council of Europe Convention, Human Traffic ஐ அங்கீகரிக்க சொல்லவில்லை;மாற்றாக இந்த் வேலை செய்பவர்களை சுளுக்கு எடுக்க சொல்லி வற்புறுத்தி வருகிறது.

கி.மு காலத்திய சிந்தனையாளர் கன்பியூஷியஸ் சொன்னதை ”வரைவுஇலா மான்இழையார்” படித்திருக்க சாத்தியம் இல்லை.


”What is God given is what we call human nature. To fulfill the law of human nature is what we call the moral law. The cultivation of the moral law is what we call as culture.

The moral law is a law from whose operation we can not for one instant in our existence escape”



உலகம் முழுக்க AIDS ஐ ஒழிக்க போராடிக்கொண்டிருக்கும் போது இங்கே பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கலாம் என ஆராதிப்பதும் அதற்கான டிவி நிகழ்ச்சிக்கு வியாபார நிறுவனங்கள் உபயதாரர் ஆகி இருப்பதும் Social Irresponsibility.

கண்டனத்துக்கு உரியது.

Wednesday 14 May 2008

ஜெயகாந்தன்




நான் ஒவ்வொரு முறை மதுரைக்குப் போகும் போதும் தவறாமல் சர்வோதய இலக்கியப் பண்ணை புத்தகக் கடைக்குச் செல்வேன். எல்லா முறையும் மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்ட ஜெயகாந்தன் அவர்களின் படைப்பு ஏதாவது வாங்கி வருவேன். அது என்னவோ அவரது புத்தகங்களை அங்கே வாங்கினால் தான் ஒரு திருப்தி வருகிறது. இப்போது சென்னையில் இருந்தாலும் எப்போது மதுரை போய் புத்தகம் வாங்குவோம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன்

முன்னுரை படித்துவிட்டு சில நாட்கள் கழித்துதான் கதைக்குள்ளே போவது வழக்கம். காரணமிருக்கிறது. முன்னுரையில் கதையில் சொல்லாத சொல்ல முடியாத ஆனால் கதை வலுப்பெற சொல்லியே தீர வேண்டிய சங்கதிகளை முன்னுரையில் சௌகர்யமாகச் சொல்லலாம் என “பிரம்மோபதேச ” முன்னுரையில் சொல்கிறார்

பிரம்மோபதேசம் வெளியானது 1963ல். அப்போது அவருக்கு வயது 29. நான் பிறக்கவேயில்லை. நான் பிரம்மோபதேசம் முதலில் படித்தது 1994ல் அதாவது அந்த கதை வந்து 31 வருஷம் கழித்து. அப்போது எனக்குக் வயது 26. முதலில் படித்த போது நான் நினைத்துக் கொண்டேன். இந்த மனுஷன் இதை எழுதும் போது சுமார் நம் வயசுதான்; இவருக்கு மட்டும் இப்படி ஒரு பொறி எப்படி என்ற வியப்பு இன்று வரை சாஸ்வதமாய் இருக்கிறது.. பிரம்மோபதேசத்தில் இந்த வரிகளைப் பாருங்கள்,

“ஒரு சிறந்த மனிதன் தன்னைச் சுற்றி தானே அமைத்துக் கொள்ளும் அந்த வேலிக்குள் வளர்ந்து செழிக்கும் அவனது தனித்துவம் தான் பிற்காலத்தில் சமூகத்தையே ஆள்கிறது. சமூகத்தின் அழுகலிலிருந்து காப்பற்றப்படும் அந்த நெறியே பிறகு சமூகத்தின் சொத்தாகிறது”

ஒருவேளை தன்னைப் பற்றிதான் சொல்கிறாரோ எனத்தோன்றும். பிசகில்லை. ஒவ்வொரு அட்சரமும் அவருக்கு பொருந்தவே செய்கிறது

"ஒவ்வொரு கூரைக்கும் கீழே" யின் முன்னுரையில்

“சென்னை போன்ற வளர்ந்து வரும் தமிழகத்துப் பெருநகரங்களில், கூடி வாழ்தல் என்னும் பெரு நாகரிகத்தின் அடிப்படை போன்ற ஒண்டு குடித்தனக்காரர்களின் வாழ்கையை நான் வியந்து பயின்றிருக்கிறேன்”

அவருக்கு வயசாகிவிட்டது என்று சொல்கிறார்கள். இருக்கலாம். அந்த முறுக்கு மீசை இப்போது வெள்ளையாகிவிட்டது. கேசமும் தான்.

ஆனால் அந்த அகலமான கண்ணாடி அப்படியே. அதானால் அவர் பார்வையும் அப்படியே அகலமாய்த்தான் இருக்கும். அவர் இப்போது Active வாக எழுதுவதில்லை சுமார் 15 வருஷம் ஆகிவிட்டது என செய்தியாகச் சொல்கிறார்கள். லாபம் எனச் சொல்லலாம். பின்னே என்ன அவரை விட்டால் அவர் இன்னும் மெருகுடன் எழுதிக்கொண்டிருப்பார் அவருடன் யார் போட்டி போடுவது. அவர் தானாகத்தான், ”போதும் .. இளம் எழுத்தாளர்கள் கொஞ்சம் பயிற்சி எடுக்கட்டும் ” என எழுதுவதற்கு ரெஸ்ட் விட்டிருக்கிறார். ஒய்வில் இருக்கும் சிங்கத்தை ஆதர்சமாக பாருங்கள். சிங்கம் இப்படி நடக்க்கும், இப்படி கர்ஜிக்கும் என நாமும் கர்ஜிப்பது /நடப்பது எப்படி என பழகிப் பார்ப்போம். சிங்கத்தை சீண்டிவிட்டால் அது மீண்டும் வேட்டைக்கு கிளம்பினால்.. மற்றவர்களுக்கு ஏதாவது மிஞ்சுமா?

ஜேகே சார்... ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து கர்ஜித்து காமிங்க சார்

Tuesday 13 May 2008

ப்ரியமானவளே


ஒரு ஆங்கில உரையாடல். கட்சிக்காரர்- வக்கீலிடையே. விவாகரத்து வழக்குக்காக வக்கீலிடம் வந்த ஒருவர்,

“I want to get one of those dayvorces”
Advocate,”Well do you have any grounds?”
“Yes I have about 140 Acres”
“No; you do not understand- Do you have a case?”
“No; I do not have a case; but I have a John Deere”
“No; you really do not understand. I mean do you have any grudge?”
“Yes I have a grudge where I park my John Deere”
“No Sir. Please listen carefully; do you have a suite?”
“Yes I got it now. I have suit... And wear it to churches on Sunday”
“Aha ... Does your wife beat you up?”
“No attorney we both get up by 4.30 “
“My God. Why do you want a divorce?”
“Well, I can never have a meaningful conversation with her”

(எனது ஆதர்ச ஸ்டீபன் கோவேயின் 8TH HABIT புஸ்தகத்திலிருந்து.)

இவரது இன்னொரு பிரபலமான புஸ்தகம் THE SEVEN HABITS OF EFFECTIVE FAMILIES. இந்த புஸ்தகத்தை கல்யாணம் ஆகாத அல்லது சமீபத்தில் கல்யாணம் ஆனவர்கள் படிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.. குறைந்த பட்சம் ஒரு வருஷ கல்யாண வாழ்க்கை அல்லது அதுக்கு மேலே உள்ளவர்களுக்கான புஸ்தகம் அது.

புது கல்யாண மாப்பிள்ளைகள் எனது எச்சரிக்கையை மீறி படித்துவிட்டு ”நங்”கென்று மனைவிகையால் குட்டு வாங்கி, குட்டி கிண்ணம் சைசுக்கு தலையில் புடைத்துக் கொண்டால் நான் ஜாவாப்தாரியில்லை..

அந்த புஸ்தகத்தின் சாரம்சம் இதுதான்.
By Accepting people you are not condoning their weakness or agreeing with their opinion; you are simply affirming their intrinsic worth; you are acknowledging that they think or feel in a particular way. You are freeing them of the need to defend, protect and preserve themselves.”

நல்லது தானே என்கிறீர்களா?

அதுதான் இல்லை இந்த நிலைக்கான பயிற்சி படிப்படியானது.; தினசரி வாழ்க்கையை யதார்த்தமாய் பார்த்தால் இந்த ஸ்டேஜுக்கு ஒரு வருஷத்தில் வந்துவிடலாம் எடுத்தவுடனே பாய்ந்தால் சொம்பால் அடிவாங்க வேண்டியதுதான்.

தினசரி எல்லாவற்றிற்கும் கணவனும் மனைவியும் நடுஹாலில் “ வா பார்த்துர்ரேன் இன்னிக்கு “ என்ற ரேஞ்சில் நின்றால் ரொம்ப விபரீதம்.

இந்த மாதிரி பொஸ்தகம் படித்துதான் கணவன் மனைவி உறவை ஸ்திரப்படுத்திக்கணுமா என்று கேட்பவர்களுக்கு வாங்கி படித்துவிட்டு சொல்லுங்கள். கொஞ்சம் கூட பிரயோஜனம் இல்லையென்று சொன்னால் புத்தகப் பணத்தை நான் வாபஸ் செய்கிறேன். ஒரு கண்டிஷன் கணவன் மனைவி இரண்டு பேரும் படிச்சாகணும். இரண்டு பேருமே ஒரே மாதிரி ,”இந்த புஸ்தகம் வேஸ்ட்” என்று சொன்னால் உத்திரவாதமாய் பணம் வாபஸ்.

Sunday 11 May 2008

ஒரு வேளை


”என்ன விளையாடுகிறீர்களா.. நீங்கள் சொல்வது சாத்தியமில்லாத விஷயம்”

”ஏன் கோபப்ப்டுகிறீர்கள்.. மொத்த விஷயமும் உங்கள் கையில் இருக்கிறது. நல்ல பரிசும் தயார். நீங்கள் ஒப்புக் கொள்ள தயங்குவதுதான் ஆச்சரியமாய் இருக்கிறது”

“என்ன சொல்கிறீர்கள்.. இன்னும் 4 ரன்கள் அடித்தால் வெற்றி. அதுவும் நாளை போட்டியின் கடைசி தினம் ஐந்தாவது நாள். ஒரு நாள் முழுவது இருக்கிறது..”

“ஆனால் உங்கள் ஒரு விக்கெட் தானே கைவசம் இருக்கிறது.. அதனால் தான் சொல்கிறேன்.. மொத்த விஷ்யமும் உங்கள் கையில் இருக்கிறது. தற்செயலாக நடப்பது போலச் செய்யமுடியும். ஒரு ரன் அவுட்.. ஒரு காட்ச் நீங்கள் விரும்பினால் நேரடியாக போல்ட் .. எப்படி வேண்டுமானாலும் .. “

“அது முடியும்.. ஆனால் நன்றாக யோசித்துப் பாருங்கள். நான் எங்கள் அணியின் மிக முக்கிய ஆட்டக்காரன்.. தோற்க இருந்த மேட்சை வெற்றிப் பாதையில் திசை திருப்பியிருக்கிறேன்.. இன்று பகலிலேயே ஆட்டத்தை முடித்திருக்கலாம்.. வெளிச்சம் போதவில்லை. ஜஸ்ட் நான்கு ரன்கள்.. நாளை ஆட்டம் தொடங்குவதும் தெரியாது முடிவதும் தெரியாது”

“ அப்படியானால் உங்களால் முடியாது என்று சொல்கிறீர்களா.. உங்களுக்கு காத்திருக்கும் பரிசைப் பாருங்கள் “ கையிலிருந்த லாப் டாப்பை திறந்தான் அந்த பூனக்கண்ணன்.

“இந்த வீட்டைப் பாருங்கள்... முழுவதும் பர்னிஷ்ட்.. இது தவிர ரொக்கமாக டாலர்கள் வேறு.. யோசித்துச் சொல்லுங்கள்”

“நீங்கள் என்னை தாமதமாக அணுகியிருக்கிறீர்கள் என்று சொல்கிறேன்.. இப்போதைய சூழலில் நான் அவுட் ஆனால்.. மொத்த மைதானமும் என்னை அடித்தே கொன்றுவிடுவார்கள்.. அப்படியே தப்பித்து பெவிலியனுக்கு ஓடினாலும் எனது சொந்த ஊரில் என் வீட்டைக் குடும்பத்தோடு கொளுத்தி விடுவார்கள்.. போர்ட் விசாரணை ,போலீஸ் விசாரண என தொடரும்.. இப்போதே என்னை ஹோட்டலில் காணோம் என தேடுவார்க்ள்.. மீடியாக்களின் கண்கள் வேறு எல்லா பக்கமும்.. என்னை மன்னித்து விடுங்கள்”

“ எனக்கு சிரிப்புதான் வருகிறது.. பேட்டி என்ற பெயரில் ஒன்றை ஜோடித்து உங்களை இந்த படகு வீட்டுக்கு வரவழைத்து .. எவ்வளவு முன் ஜாக்கிரதியாக இருக்கிறோம் பார்த்தீர்களா.. இந்த டீலில் ஒரு மீடியா நிறுவனமும் சம்பந்தப்பட்டிருக்கிறது “

“நீங்கள் ஒன்றை மறந்துவிட்டு பேசுகிறீர்கள்.. இன்னொரு பேட்ஸ்மென் வேறு இருக்கிறார்.. அவரை எப்படி சரிகட்டுவது “

“அதையும் யோசித்தாகிவிட்டது.. இன்று மாலை ஆட்டம் முடியும் போது அதே ஒவரில் இன்னும் 4 பந்துகள் போடவேண்டும். நீங்கள் தான் ஸ்டிரைகிங் பேட்ஸ்மேன்.. காலையில் மேட்ச் ஆரம்பித்ததும் நேரத்தை விரயம் செய்யாமல் அவுட் ஆனீர்களானால் போதும்”

“உங்களைப் போன்ற ஆசாமிகள் முன்பெல்லாம் ஒரு நாள் போட்டியில் தான் தலையிட்டீர்கள்..”

“வியாபாரம்.. உங்களை தேடி ஒரு நல்ல சான்ஸ் வந்திருக்கிறது.. பயன்படுதிக்கொள்ளுங்கள்.. நீங்கள் சரியெனச் சொன்னால் இன்னொரு விருந்து.. நீங்கள் ஒரு பேட்டியில் எனக்கு இந்த நடிகையை பிடிக்கும் என்று சொன்னீர்களல்லவா .. அவர் இதே படகு வீட்டில் இன்னொரு அறையில்...”

பிரம்மாஸ்த்திரம் வேலை செய்தது

“எனக்கு தருவதாக சொன்ன தொகை எனக்கு எப்போது கிடைக்கும்..”

“சபாஷ்.. இப்போதுதான் சரியாகவே பேச ஆரம்பித்திருக்கிறீர்கள்.. இதோ.. பேசியதில் முக்கால் பங்கு உங்களின் ரகசிய வங்கிக் கணக்குக்கு மாற்றச் சொல்கிறேன்”

“எனது ரகசிய கணக்கு உங்களுக்கு எப்படித் தெரியும்”

“ என்ன இவ்வளவு அப்பாவியாய் இருக்கிறீர்கள்... ம்ம்ம் .. முடிந்தது.. இப்போது நீங்கள் உங்கள் கணக்கை செக் செய்து கொள்ளலாம்”

மைதானம் நிரம்பிவழிந்தது.. நேற்று வரை ஈ அடித்தது.. ரிசல்ட் நிச்சயம் என்று தெரிந்ததால் கூட்டம் வேறு ஜாஸ்தி ஆகிவிட்டது

“எப்படி அவுட் ஆவது... பேசாமால் பேட்டை சுழற்றும் போது ஸ்டம்பில் இடித்துவிடலாமா.. அய்யோ அவ்வளவுதான்.. பட்டவர்த்தனமாய்த்தெரியும்.. காசை வேறு வாங்கியாகிவிட்டது”

கார்ட் எடுத்து நின்றான்.. எதிரே அந்த பவுலர்.. அவனும் நெர்வசாக இருகிறானோ.. இதோ ஒடி வருகிறானே.. அந்த நடிகை அவ்வளவு ஒன்றும் விஷேஷமில்லை.. “

யோசித்துக் கொண்டிருக்கும் போதே பந்து OFF STUMP க்கு கொஞ்சம் வெளியே நல்ல வேகத்தில் விழுந்து மட்டையை விசிறுவதற்குள் விக்கெட் கீப்பருக்கு பெப்பே காட்டி விட்டு தேர்ட் மேனிலிருந்து மூச்சிறைக்க ஓடி வந்தவனுக்கும் டேக்கா காட்டிவிட்டு பவுண்டிரியைத் தொட்டது.

ஏன் பவுலரும் கீப்பரும் சங்கேதாமாய் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள்.. ஒரு வேளை..

Saturday 10 May 2008

பாம்பு ஜாதகம்


துபாயில் இருக்கும் எனது சகா திருமதி. சித்ரா ராம்பிரசாத் சில அழகான படங்கள் அனுப்பியிருந்தார். எல்லாம் விளம்பரம் சம்பந்தமானது. முதல் படம் இங்கே

இந்தப் படத்தைப் பார்த்தவுடன் என்னிடம் இருக்கும் SNAKES OF INDIA என்ற புத்தகம் ஞாபகம் வந்தது. P.J DEORAS என்பவர் எழுதியது.. NATIONAL BOOK TRUST வெளியீடு 1992 ல் சல்லிசாக 36 ரூபாய்க்கு கிடைத்ததே என்று வாங்கி வந்தேன். இதைப் படித்த பெரும்பாலன நாட்களில் ராத்திரி கனவில் “தொப்பு தொப்பு “ என்று என் மீது பாம்புகளாய் வந்து விழுந்தது. யாரோ சொன்னார்கள் என ஒரு கழுகு படத்தை படுக்கைக்கடியில் வைத்துப் பார்த்தேன். கழுகு “நங்” என்று தலையில் கொத்துவதாய் புதுசாய் கனவு வந்தது. ஒரே சமயம் கழுகையும் பாம்பையும் சமாளிப்பது கஷ்டம்.

P.J DEORAS இந்தியாவில் முதல் பாம்பு பண்ணையை 1952 ல் ஸ்தாபித்தவர்

இந்த புத்தகத்தின் ஆரம்பமே விஷப் பாம்பு விஷமில்லாப் பாம்பு என ஒரு பட்டியலுடன் …

TYPHLOPS BRAMINUS, UROPELTIS, PYTHON MOLURUS என்ற ஜூவாலஜிகல் நாமகரணமாய்ப் பாம்பு LIST இருக்கிறது.

பாம்பு கடித்தால் என்ன மந்திரம் சொன்னால் விஷம் ஏறாது என்ற சில அதிசய பக்கங்கள் இருக்கிறது. ஆனால் அதிலும் தமிழ் இல்லை. சமஸ்கிருதம் , ஹிந்தி, கன்னடம், மலையாளம். மராத்தி.. இப்படி இருக்கிறது. ரொம்ப விஷேஷம் என்னவென்றால் சில முயல்களை பாம்பைவிட்டு கடிக்க வைத்து இந்த மந்திரங்கள் வேலை செய்கிறதா என பார்த்திருக்கிறார்கள். பாவம் முயல்கள். மந்திரம் வேலை செய்யவில்லை என்ற மஹா முக்கியமான தகவலை பொடி எழுத்தில் FOOT NOTE ல் போட்டிருக்கிறார்கள்.

பாம்பு விஷத்தைப் பற்றி பல மங்களகரமான சங்கதிகள் தெரிய வருகிறது

இந்திய சினிமாக்கள் பாம்பு என பொதுமைப்படுத்திய நல்ல பாம்பின் விஷம் 12 கிராம் இருந்தால் போதும். ஆரோக்கியமான ஆசாமியை காலி செய்ய.

பலவித புரோட்டின்களின் சங்கமம் நல்ல பாம்பு விஷம். இதில் Neurotoxin என்பது பிரதான புரோட்டின். இதில் 71 அமினோ அமிலங்கள் உள்ளது. இந்த சக்திவாய்ந்த புரோட்டின் தான் ரத்தத்தில் க்லந்த உடன் எட்டே நிமிஷத்தில் வேலையைக் காட்டத் தொடங்குகிறது. சுமார் 50 நிமிஷத்தில் ஆள் காலி. Anti Snake Venom என்ற மருந்துகள் பாம்புக் கடி சாத்தியங்கள் ஜாஸ்தி உள்ள இடங்களில் அரசாங்க ஆஸ்பத்திரியில் தயார் நிலையில் இருக்கும்- திருத்துறைப்பூண்டி என்ற ஊரில் தினம் ஒரு”நல்ல பாம்பு கொத்து” கேஸ் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வருவதைப் பார்த்திருக்கிறேன்.

நல்ல பாம்பு விஷம் 1/ 50000 பங்கு நீர்த்துப் போன நிலையிலும் ஒரு தவளைக்கு மஹா விஷம்

புளோரிடாவில் ஆராய்ச்சிக்காக ஒரு ஆசாமிக்கு நல்ல பாம்பு விஷம் தினம் கொஞ்சூண்டு “இந்தாப்பா பிரட்டுக்கு தொட்டுண்டு சாப்பிடு” என்று சில வருஷங்கள் கொடுத்துவிட்டு, அப்புறமாய் பாம்பை கொத்தவிட்டு விஷம் ஏறுகிறதா என்று பார்த்திருக்கிறார்கள். எத்தனை தடவை !!! 123 !!! தடவை. அந்த ஆசாமி அத்தனையும் தாங்கி உசிருடன் இருந்திருக்கிறார்.

பாம்பு விஷம் தினம் சாப்பிட்டதால் இம்யூனிட்டி ஜாஸ்தியாகி அவர் ஒரு மாதிரி நாகலோக வாசி அந்தஸ்த்தைப் பெற்றுவிட்டார். இதே மாதிரி தமிழில் “ பௌர்ணமி அலைகள்” என்று ஒரு படம் வந்தது ஞாபகம் இருக்கலாம்.

ஒரு கெமிஸ்டிரி பேராசிரியரிடம் இது சம்மந்தமாக கேட்டேன். பெயிண்டிங் வேலையில் ரொமப வருஷம் இருப்பவர்களுக்கு பெயிண்டில் இருக்கும் ஒரு வித அமிலம் நக இடுக்கு வழியே தினம் உடலில் கலந்து அவர்களுக்கு விஷ எதிர்ப்பு சக்தி ஜாஸ்தியாகிவிடும் என்று சொன்னார். இனிமேல் பெயிண்டர்களிடம் சகஜாமாக பழகவும். ”சதுர அடிக்கு இத்தனை தானேப்பா “ என்று கறார் பேசி அவரை உசுப்தேத்த வேண்டாம்.


இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள ஒரு சங்கதியை ரகசியாமாக வைத்திருக்க ஆண் சமுதாயத்தை கேட்டுக் கொள்கிறேன்.

“பெண் நல்ல பாம்பை விட ஆண் நல்ல பாம்பே அதிக விஷம் கக்கும்”

அகஸ்மாத்தாய் இதை தெரிந்து கொண்ட பெண்மணிகள் கணவனிடம் சண்டை போடும் போது சமயம் பார்த்து Quote செய்யவும்

Tuesday 6 May 2008

இங்கேயிருந்து ... அங்கே


சடகோபன் இந்தமாதிரி ஒரு நிலவறையில் கச முசாவென ஒயர்கள் பிண்ணிய சூழலில் லாபரட்டரி வைத்திருப்பான் என ஒரு எறும்புக்குக் கூட சந்தேகம் வராது.

“ஹேமா.. இந்த தடவை பாரு.. ஹுயுமன் டிரான்சிஷன் சக்ஸஸ் ஆயிடும்.. அப்புறம் நோபெல் பரிசு நிச்சயம்.. உன் பேரும் பிரபலமாயிடும்”

ஹேமாவுக்கு நோபெல்லைவிட அங்கிருந்து தப்பித்தால் போதும் என்பதே பிரதானமாயிருந்தது. அமெரிக்கா அனுப்புகிறேன் என்று சொல்லி சாமர்த்தியமாய் கிழவன் பாஸ்போர்ட்டை கவர்ந்து எங்கேயோ ஒளித்து வைத்துவிட்டான்.

“எங்கே இந்த பாஸ்கரை காணோம்” சடகோபன் நிலையில்லாமல் நடக்க ஆரம்பித்தான்

”வா பாஸ்கர்... ஆள் கிடைச்சுதா..”

“ஆமாம் புரொபசர்.. கடற்கரையில சிப்பி சேகரிச்சிண்டு.. நடந்துண்டிருந்தான்.. நைச்சியமா பேசி கூட்டிண்டு வந்திருக்கேன்’

” எங்கேடா அவன்”

“ மொத ரூம்லே உட்கார வச்சிருக்கேன்”

“ஆள் எப்படி .. விவரமெல்லாம் சொல்லிட்டியா.. சம்மதிச்சானா?”

“ஆரோக்கியமா இருக்கான். மேலோட்டமா சொன்னேன்.. சரின்னான்.. பைசா தருவேளான்னு கேட்டான்.. புரொபசர் தாராளமாய்த் தருவார்னு சொல்லியிருக்கேன்”

“வா பார்க்கலாம்”

அந்த ஆள் மத்திய வயசினன்.
“ உம் பேரென்னப்பா”
”மோகன்”
‘பாஸ்கி விவரம் சொன்னானா உனக்கு சம்மதமா”
“நீங்கள்தான் சடகோபனா”
”ஆமாம்”
“இது என்ன மாதிரி ஆராய்ச்சி.. நான் என்ன பண்ணணும்”
"உனக்கு பேக்ஸ்னா தெரியுமா”
“தெரியும். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு ஓர் ஆவணத்தை நகலாக அனுப்ப்புவது”

“சபாஷ் .. சரியா சொன்னே. அதே மாதிரி. ஒரு மனுஷனையும் ஒரு மெஷின் வழியா அனுப்ப முடியும்னு நிரூபிக்க போறேன். அந்தமாதிரி இங்கேயிருந்து ... அங்கே டிரான்ஷிஷன் ஆகப் போற முதல் ஹியூமன் நீ தான்”

இது அவனை கொஞ்சமும் அதிர்ச்சியாக்கவில்லை.

”சரி இதற்கு முன் ஏதாவது விலங்குகளை வைத்து பரிசோதித்தாகிவிட்டதா”
“ ஓ பேஷா. ஒரு பூனை, ஒரு மூஞ்சூறு, சின்னதா ஒரு மான்குட்டி எல்லா பர்பெக்டா போச்சு .. நீ தான் முதல் மனுஷன்”

“எனக்காக ஒரு விலங்கை வைத்து செய்து காண்பிக்க முடியுமா”

“இதோ பண்றேனே.. இதோ பார்.. இது தான் அனுப்பற இடம்.. இங்க இந்த மூஞ்சூறை வைக்கிறேன் பார்” என்று சொல்லி ஒரு பெட்டியில் வைத்து மூடினான் சடகோபன்.

“அதோ அந்த் ரூமில் ஒரு குழாய் மாதிரி தெரியறது பார் . அதும் வழியா இந்த மூஞ்சூறு வந்துடும் பாரு”

“இந்த பெட்டிக்கும் குழாய்க்கும் சுரங்க வழி இருக்கிறதா”

“அப்படி இல்லைப்பா.. நீயே பாரு இந்த பெட்டியைத் தூக்கிக் காண்பிக்கிறேன்.. சுரங்கமெல்லாம் இல்லை தானே. என்ன பண்ணியிருக்கேன்னா. இந்த பொட்டியோட நான் கண்டுபிடிச்ச ஒரு விஷேஷ ஸ்கானர் அப்புறம் சக்தி வாய்ந்த ஒரு மோடம் இரண்டையும் சேர்த்திருக்கிறேன்.. ஸ்கானர் இந்த பிராணியை ஸ்கான் பண்ணி சின்ன சின்ன டிஜிட்டல் இமேஜா மாத்திடும் அப்புறம் மோடம் அதை அனலாக் சிக்னலா மாத்தி ஒரு டெலிபோன் லைன் வழியா அந்த குழாய்க்கு முன்னாடி இதே மாதிரி ஒரு மிஷினுக்கு அனுப்பிடும். அந்த மிஷின் திரும்பவும் அதை மூஞ்சூறா மாத்தி அந்த குழாய் வழியா தள்ளிவிடும்”

“புரிகிறது .. எங்கே செய்து காட்டுங்கள்”

சடகோபன்... எதேதோ சுவிட்சுகளை தட்டினான். டெலிபோன் மாதிரி ஒன்றில் டயல் செய்தான். கொஞ்ச தூரத்தில் குழாயுடன் கூடிய அந்த இன்னொரு மெஷினில் “ரூரூரூ ம்ம்ம்ம் “ என்று சத்தம் கேட்டது. கொஞ்ச நேரம் கழித்து இங்கே வைக்கப்பட்ட அந்த மூஞ்சூறு அந்த குழாய் வழியே அந்து விழுந்தது. கொஞ்ச் நேரம் அசைவில்லாமல் கிடந்த்தது. பின் எழுந்து ஒடியது.

சடகோபன் பெட்டியை திறந்து காட்டினான். “பார்த்தியா எலி இங்கெ இல்லை.. டாகுமென்டை பேக்ஸ்ஸில் அனுப்பினால் ரீசீவ் ஆகிற இடத்தில் காப்பிதான் கிடைக்கும். இங்கே ஒரிஜினாலாவே வருது பார்.. காரணம்.. பேக்ஸில் ஒரு பிரிண்டரும் இருக்கு. இங்கே ஒரு விஷேஷ டிரான்ஸ்மிஷன் சூட்ட்சுமம் வச்சிருக்கேன்”

“புரிகிறது.. எனக்கு சம்மதம்.. இந்த நவீன கருவி வழியே பயணப்பட நான் தயார்.. போய் அந்த பெட்டியில் படுத்துக் கொள்ளவா”

”இரு அவசரப படக்கூடாது.. ஒரு பெரிய சாதனையில பங்கு பெற போறாய்.. உன்னைப் பத்தி சில விஷயம் குறிப்பு எழுதி என்னோட ஆர்ரய்ச்சி குறிப்போட சேர்த்துறேன்.. உனக்கும் உலகப் புகழ் நிச்சயம்”

“நீ என்ன வேலை செய்றே”

“எழுத்து”

“புரியலைப்பா”

“நான் ஒரு இலக்கியவாதி”

“ஓ கதை கவிதை எழுதறியா .. பேஷ் பேஷ்”

“அப்படியும் சொல்லலாம். நான் சமூகத்தின் மீது தீவிர அவதானிப்பு கொண்டு அதனால் தேடல் பசி அதிகமாகி தினம் மானுடம் அருந்தும் ஒரு பிறவி”

“ஏம்பா சமீபத்தில் உனக்கு தலையில ஏதாவது அடிபட்டதா”

“ஏன் கேட்கிறீர்கள்”

”இல்ல சும்மா கேட்டு வச்சேன். சின்னதா ஒரு டெஸ்ட் எடுக்கணும் அதுக்கு தான் ஆமா இந்த மாதிரி பரிசோதனை பண்ண உன் வீட்டில் சம்மதிப்பாளா”

“வாழ்க்கையே ஒரு பரிசோதனை தானே”

“ஆமா வந்த போதே கேட்கணும்னு நினைச்சேன். அது என்ன பொஸ்தகம் கையில”

”மோ. அபராஜிதாவின் சமூக நோக்கு”

“யார் எழுதினது”

“நான் தான்”

“அபராஜிதா யாரு. பெரிய சோஷியலிஸ்டா”

“அது என் மகள்”

“என்னப்பா உன்னைப் பார்த்தா நாப்பது நாப்பத்தி அஞ்சு வயசு சொல்லலாம். உனக்கு அவ்ளவு பெரிய பொண்ணா?’

“எனது மகளுக்கு ஆறு வயது”

“சரி தான்.. ரொம்ப லாகிரி வஸ்து உபயோகிப்பியோ ?”

“ஏன் கேட்கிறீர்கள்”

“எனக்கு தெரிஞ்ச ஒருத்தர். வைத்தியர். குணசீலத்தில் இருக்கார்.. முடிஞ்சா போய் பாரு.. அப்புறமா விலாசம் தரேன்... ஏம்பா பாஸ்கி.. என்னப்பா ஸ்திரமா ஒரு ஆளை அழைச்சிண்டு வான்னா.. என்னவோ.. மாதிரி பேசறானேப்பா.. ”

“புரொபசர்... அவன் எப்படி பேசினா என்ன பிசிக்கல் ஹெல்த் செக் பண்ணிப் பாருங்கோ.. ஒத்து வந்தா ஆச்சி இல்லைன்னா அனுப்பிடலாம்”

“அதுவும் சரிதான்.. இந்தாப்பா மோகன்.. இங்க வா”

சில பரிசோதனைகள் முடிந்து.
“மோகன் இப்ப போய் அந்த பெட்டியில் படுத்துக்கோ.. உலக சாதனை பண்ணப்போறே”

அவன் போய் பெட்டியில் படுத்தபின் மூஞ்சூறுக்கு செய்த மாதிரியே செய்தான்.

கொஞ்ச நேரம் வழக்கமான ரூரூம் ரூரூம் சப்தம். மோகன் அந்த குழாய் வழியே வந்தான்.

சடகோபனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை

“பாஸ்கி கை குடு கை குடு. இந்த வருஷம் நோபெல் நிச்சயம்..மோகன் மோகன் .. ரொம்ப தாங்ஸ்பா”

“ஐயா இந்த் குழாய் வழியே பயணமாகும்போது ஒரு வித பிழியப்பட்டதாய் உணர்ந்தேன். மற்றபடி வேறொன்றுமில்லை”

“அதுவா மோகன் .. இப்ப சரி பண்ணிடறேன். இப்பவே இன்னொரு தபா பண்ணலாம். சரியா”

“சரி “

“ஏய் பாஸ்கி.!! இந்தா இப்ப நீ நம்பர் டயல் பண்ணு.. நான் அந்த டியூப் டைமன்ஷன் சிஸ்டம் சரி பண்றேன்”
மோகன் அந்தப் பெட்டியில் படுத்தான்.. அதே ...

ஆனால் வழக்கமான சப்தம் வரவில்லை.

“ஏண்டா பாஸ்கி. என்னடா இது. அந்த ஆசாமியைக் கானோம் “

“புரொபசசர் .. பெட்டியை திறந்து பார்க்கவா ‘’

“ டிரான்ஸ்மிஷன் மெசேஜ் வந்ததா”

”வந்தது புரொபசர்”

“அப்ப திற”
“அய்யோ .. அந்தாளைக் காணோம்...”

என்னடா பாஸ்கி சொல்றே. ஒரு வேளை குழாய் நடுவிலே சிக்கிண்டுட்டானோ.. இல்லையேடா..” திறந்து பார்த்து விட்டு அலறினான் சடகோபன்.

“ஏண்டா பாஸ்கி போலீஸ் பிரச்சனையாடுமோடா”

”அதெல்லாம் வராது .. இவன் இங்க வந்தான்னு யாருக்குத் தெரியும்”

“ஏண்டா பாஸ்கி என்னடா இது கிரகச்சாரம்.. இரு டிஸ்பிளேயில் ஏதாவது மெசேஜ் இருக்கா பாக்கறேன்.. அட என்னடா இது.. என்னவோ நம்பர் டயல் பண்ணிருக்கே”.
“இல்லியே சரியாத்தானே பண்ணேன்”

”இல்லைடா இது அந்த குழாயோட பொறுத்தின போன் நம்பர் இல்லை.. எதுக்கும் இந்த நம்பரை லாண்ட் லைனிலிருந்து டிரை பண்ணு எங்க போறதுனு பார்க்கலாம்”

பாஸ்கி டயல் செய்தான்.

மறுமுனை “ Good Evening Pakistan Central Prisons .. Shall I turn the fax tone now” என்றது

சுஜாதாவிடம் கற்றதும் ... பெற்றதும்-2


நான் இன்ஜினியரிங் டிப்ளமோ படிக்கும் போது HEAT POWER ENGINEERING என்று ஒரு பாடம் உண்டு. அந்த பாடம் நடத்திய வாத்தியாரும் பாடத்திற்காக சிபாரிசு செய்யப்பட்ட புஸ்தகமும் நல்ல புஷ்டியாக இருந்தார்கள்.

சுமார் முக்கால் அடி THICKNESS ல் எனக்கு அறிமுகம் ஆன முதல் பாட புஸ்தகம் அதுதான். அதுவரை நான் பார்த்துப் பழகிய பாட புஸ்தகங்கள் எல்லாம் ரொம்பவுமே ஒல்லியானவை.

THERMAL ENGINEERING என்று தலைப்பிட்டு A. S SARAO என்ற மஹானுபாவன் எழுதிய அந்த மெகா சைஸ் புத்தகத்தில் எது பாடம் எது படம் என்று தெரியாமல் சிரத்தையாக குழம்பியிருக்கிறேன். இந்த புஸ்தகத்தில் காணப்படும் குறியீடுகளை கிரேக்க தேசத்தில் கூடப் பார்ர்க முடியாது என்று இன்னமும் நம்புகிறேன்.

இந்த பாடத்தில் தெர்மோடைனமிக்ஸ் முதல் விதி, இரண்டாம் விதி, கெல்வின் பிளாங் ஸ்டேட் மெண்ட், பெர்ப்பெட்சுயல் மோஷன் என்று சில சங்கதிகள் உண்டு. படித்த மூணு வருஷமும் இந்த மூன்று சங்கதிகள் பாடய்ப்படுத்தின. கட கட என மனப்பாடம் செய்து வரி பிசகாமல் பரிட்சையில் எழுதி நல்ல மார்க்கில் பாஸ் செய்தேனே ஒழிய சத்தியமாய் ஒன்றும் புரியவில்லை. அந்த வாத்தியாரும் இதனை சொல்லித்தர ரொம்பவும் பிரயத்தனப்ப்டவில்லை.

1986 ல் படிப்பு முடிந்து உடனே வேலைக்கும் சேர்ந்துவிட்டேன். ஆறு வருஷம் கழித்து சுஜாதவின் “ஏன் எதற்கு எப்படி” படித்தேன். அதில் குமாரி பூமா வைரமணி, போடி நாயக்கனூர் கேள்வி : நிலையான இயக்கம் (PERPETUAL MOTION) என்றால் என்ன?


சுஜாதா, பர்பெட்சுயல் மோஷனில் நடந்த நடந்து கொண்டிருக்கும் பல வருஷ ஆராய்ச்சி சுவாரசியங்களை சொல்லிவிட்டு.

“நிலையான இயக்கம் என்பது விஞ்ஞான விதிகளின் படி சாத்தியமே இல்லை. தெர்மோடைனமிக்ஸில் இரண்டு விதிகள் தாம் சதி செய்கிறன” என எழுதி விட்டு சரியாக 42 சொற்களில் தெர்மோடைனமிக்ஸ் முதல் விதி, இரண்டாம் விதி, கெல்வின் பிளாங் ஸ்டேட் மெண்ட் மூன்றையும் விளக்கியிருந்தார்.

சுளீரென்று புரிந்தது. மூணு வருஷம் தண்ணி காட்டிய சங்கதிகள் !!

உடனே அந்தப் பக்கத்தை அப்படியே XEROX செய்து நான் படித்த அந்த பாலிடெக்னிக் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினேன். பத்து நாளில் பதில் வந்தது,

“ நன்றி .. உடனே "ஏன் எதற்கு எப்படி" வாங்கி படிக்கிறேன். Science ஐ இத்தனை simple ஆக சொல்ல முடியுமானால் ஆசிரியர்கள் எல்லோரையுமே முயற்சி செய்யச் சொல்லுகிறேன் ”

Sunday 4 May 2008

கிராமர் கிருஷ்ணமூர்த்தி-2


உள்ளே போனபோது கிராமர் கிருஷ்ணமூர்த்தி சில நூறு கல்யாணப் பத்திரிகைகளை முன்னே அடுக்கி வைத்திருந்தார்.

“என்ன சார் ஏதாவது பிரிண்டிங் பிரஸ் ஆரம்பிக்கப் போறேளா ?”

“இந்த கிண்டல் தானே வேணாங்கறது.. உன்னோட கல்யாணப் பத்திரிக்கை கொண்டு வரச்சொன்னேனே எங்க?

“ அது சார். இப்ப தானே வீடு மாத்தினேன். அதனால கல்யாண ஆல்பம், பத்திரிக்கை இதெல்லாம் எந்த பெட்டில இருக்குனு தெரியல.. என்ன விஷயம் சொல்லுங்கோ”

“இத பாத்தியா.. சுமார் அறுபது வருஷ காலத்திய கல்யாணப் பத்திரிகைகள்.. எல்லா பிரிவு ஜனங்களோடதும் இருக்கு.. இதுல விதி விலக்கில்லாம எல்லாரும் ஒரு தப்பு பண்ணியிருக்கா”

உள்ளே சமையல் கட்டிலிருந்து மாமி, “ சந்துரு யார் தப்பு பண்ணாளோ இல்லியோ நான் தப்பு பண்ணியிருக்கேன். இந்த கல்யாணப் பத்திரிக்கை தப்பை இந்த மனுஷன் லென்ஸ் வச்சி கண்டுபிடிச்சது கூட தப்பிதம் இல்லை. அந்த மனுஷாளுக்கெல்லாம் இதை கடுதாசி போட்டுச் சொல்றார். அவாள்லாம் இப்ப போன் பண்ணி கேக்றா”

“கடுதாசி போட்டா என்ன தப்பு... நீ வாயை மூடு.. இத பார் சந்துரு.. கல்யாணப் பத்திரிக்கை எதுக்கு அடிக்கிறோம். இன்னாருக்கு இன்னாரை கல்யாணம் பண்ணி வைக்கப் போறோம். நீங்க வந்து நடத்திக் குடுங்கோ அப்டினு கூப்பிடத்தானே”

மேஜை டிராயரிலிருந்து சுருட்டி வைத்திருந்த போர்டை எடுத்து சுவற்றில் பொருத்தினார்.

“இப்ப பாரு.. பொண்ணைப் பெத்தவாளோ.. பையனை பெத்தாவாளோ.. வித விதமா கல்யாணம் சொல்றா பாரு”

கிருஷ்ணமூர்த்தி நிஜமான ஆராய்ச்சி ஆசாமிதான்.. போர்டில் வரிசையாக எழுதியிருந்தார்.

XXXXX என்கிற வரனை YYYYY என்கிற கன்னிக்கு திருமணம் செய்வதாய்
YYYYY என்கிற கன்னியை XXXXXX என்கிற வரனுக்கு திருமணம் செய்வதாய்
எனது குமாரத்தி YYYYY ஐ XXXXXX க்கு கன்னிகாதானம் செய்து கொடுப்பதாய்
எனது குமாரன் XXXXXX க்கு சௌபாக்கியவதி YYYY ஐ பாணிக்கிரகணம் செய்து கொள்வதாய்

“இப்படி எல்லா இடத்திலையும் ” க்கு” தான் யூஸ் பண்ணியிருக்கு. ஆனா இங்கிலீஷ்ல



We cordially invite you on the occasion of the marriage of my son / daughter

With

XXXX

போட்டு ‘வித்” யூஸ் பண்றா.. இது ரொம்ப பிசகு இந்த இடத்தில்

We cordially invite you on the occasion of the marriage of my son / daughter

to

XXXX

இப்படித்தான் போடணும்.


என் மகள் / மகனுக்கு இன்னாருடன் நடக்கும் திருமண வைபவம் .. இப்படி சொல்லக் கூடாது

என் மகள் / மகனுக்கும் இன்னாரின் மகன் / மகளுக்குமான திருமண வைபவம் இப்படித்தான் சொல்லணும்

இங்கிலீஷின் preposition க்கும் தமிழின் வேற்றுமை உருபுக்கும் கையாளறதுல நிறைய வித்தியாசம் இருக்கு வழக்கு இருக்கு.. தமிழில் கூட தொல்காப்பியர்

ஐ ஒடு கு இன் அது கண் என்னும்
அவ் ஆறு என்ப வேற்றுமை உருபே

இப்படி சொன்னதில் கூட ‘உடன்’ அர்த்தம் வர்ற with இல்ல பாரு.

நியாயம் தான் என நினைத்துக் கொண்டேன்.

ஆனால் இதை அந்த பழைய கல்யாணப் பத்திரிக்கை குடும்பத்தாருக்கு போஸ்ட் கார்ட் எழுதி சொல்வது நியாயக் கணக்கில் சேர்த்தி இல்லை தான்.

நல்லவேளை ஜவஹர்லால் நேரு கல்யாணப் பத்திரிக்கை இவருக்கு கையில் கிடைக்கவில்லை. இவர் அதை வைத்து 10, ஜன்பத் நியூ டெல்லிக்கு கடுதாசி போட்டுவிட்டால் பிரச்சனை பார்லிமெண்ட் வரை போய்விடும்.

Thursday 1 May 2008

சபாஷ் ISRO



இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஏப்ரல் 28ம் தேதி பத்து சாட்டிலைட்டுகளை ஒரே வாகனத்தில் விண்ணில் செலுத்தியுள்ளது

CARTOSAT-2A என்ற ரிமோட் சென்சிங் சாடிலைட், IMS-1 என்ற மினி சாட்டிலைட், 8 பிற தேச நானோ சாட்டிலைட்கள் என்ற 820 கிலோ எடையைத் தூக்கிக் கொண்டு PSLV-C9 என்ற வாகனம் ஜிவ் என்று வானத்தில் எவ்விக் கிளம்பியது. அந்த குழு விஞ்ஞானிகள் இன்ஜினியர்கள் எல்லாம் கழுத்தைப் பின்னுக்கு வளைத்து கொஞ்ச நேரம் திக் திக் என்று பார்த்துவிட்டு பின்னர் சந்தோஷமாக கை குலுக்கி ஆராவரித்தார்கள்


சில சமயம் இந்த சாட்டிலைட்கள் நம்பிக்கை துரோகம் செய்துவிடும். கொஞ்ச தூரம் சமத்தாய் வானத்தில் போய்விட்டு அப்புறம் திசைமாறி தொபுக்கடீர் என்று விழுந்துவிடும். நல்லவேளை PSLV-C9 அப்படியெல்லாம் செய்யாமல் நல்லபிள்ளையாய் நடந்து கொண்டது

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் மையத்திலிருந்து ராக்கெட் கிளம்பி சுமார் 885 செகண்டில் 637 கிலோமீட்டர் தொட்டது. அங்கே CARTOSAT-2A அதன் பின்பு IMS-1 அப்புறம் 8 நானோ சாட்டிலைட்டுகள் எல்லாம் விண்வெளி வாகனத்தில் இருந்து பிரிந்தன. Polar Sun Synchronous Orbit ல் பொறுத்தப்பட்டன

அதாவது இந்த சாட்டிலைட்டுகள் பூமியில் அமைந்துள்ள சில குறிப்பிட்ட இடங்களை தினமும் ஒரே நேரத்தில் கடக்கும். இது பூமியில் அந்த குறிப்பிட்ட இடங்களில் பகல் வெளிச்சம் படும் நேரம் இந்த சாட்டிலைட் அந்த இடத்தைப் படம் எடுக்கும். தொடர்ச்சியான படங்கள்


CARTOSAT-2A ல் உள்ள PANCHROMATIC CAMERA (PAN) ரொம்ப சாமர்த்தியமானது. சுமார் ஒரு மீட்டருக்கு கழுத்தைச் சாய்த்து/ சுழற்றி சுமார் 10 கீ. மீ விஸ்தீரணத்தை ஒரு ஸ்ட்ரோக்கில் கபளீகரமாய் படமெடுக்கும்.
இந்த காமிரா பார்க்கும் திசையில் நான் வசிக்கும் மாம்பலம் பிளாட் மொட்டை மாடி வருகிறதா என விசாரிக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்த நேரத்தில் சிவப்பு சட்டை சிவப்பு பாண்ட் அணிந்து கொண்டு மாடியில் நின்று கையாட்ட உத்தேசித்துள்ளேன்.

நேரம் காலம் இல்லாமல் மொட்டை மாடியில் நடந்தபடி காதுக்குள் செல் போனை ஒளித்தமாதிரி வைத்துக் கொண்டு பேசும் எதிர் பிளாட் பெண் என்னை செவ்வாடையில் பார்த்து மிரண்டு ஓடிவிடக்கூடும். அதனாலென்ன. சாட்டிலைட் என்னை படம் பிடித்தால் சரி

IMS -1 ல் உள்ள காமிராக்கள் இரண்டும் இன்னும் விஷேசம்; ஒன்று 37 மீட்டர் சுழன்று 151 கிலோமீட்டர் தூரத்தை படம் எடுக்கும்; இரண்டாவது 506 மீ சுழன்று 130 கிலோமீட்டர் படமாக்கும்.

இந்த படங்களை கல்வி நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி நோக்கத்துக்கு வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளது ISRO


எட்டு நானோ சாட்டிலைட்டுகள் இரண்டு பிரிவாக உள்ளன. ஆறு நானோ சாட்டிலைட்டுகள் மொத்தமாக NLS-4 என்றும் மத்த இரண்டு NLS-5 ,RUBIN என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளன.


NLS-4 கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழக வடிவமைப்பு; இதில் உள்ள இரண்டு சாடிலைட்டுகள் ஜப்பானிலும் மிச்ச நாலு கனடா, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாண்ட்ஸ் என்று நாலு வேறு ஸ்தலங்களில் வடிவமைக்கப்பட்டவை

இந்த மாதிரி மகத்தான சாதனைகள் மக்கள் மனசில் தலைப்பு செய்தியாக முதல் பக்கத்தில் ஒரு நாள் வாழ்ந்துவிட்டு அப்புறம் மறைந்து போய்விடுவது ரொம்ப சோகம்.

சாமர்த்தியமாய் ராக்கெட் விட்டு கொண்டிருந்த ஒருத்தரை மடக்கிப் பிடித்து டெல்லிக்கு கூட்டிப் போய் ராஜ ஆஞ்ஞை பிறப்பிக்கும் உத்தியோகத்தில் சிக்கவைத்து வேடிக்கை பார்த்த நாம் கொஞ்சம் மாறத்தான் வேண்டும்