Saturday, 9 July 2011

விக்கிரமாதித்யன் வேதாளம் முதல் கதை


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் அந்த பிரம்மாண்டமான மரத்தினை அணுகி வேகமாக அதன் கிளைகளின் வழியே ஏறி, தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தினை பற்றி இழுத்து, தன் முதுகில் சுமந்து கொண்டு அந்த அடர்ந்த வனத்திலே நடக்கத் தொடங்கினான். வழக்கத்திற்கு மாறாக வேதாளம் மௌனமாக இருந்தது.

"என்ன வேதாளமே ! என்ன பேச்சையே காணோம். இந்த முறை கதையும் வினாவும் இல்லையா"

" அது எப்படி ! நிச்சயம் உண்டு; கவனமாகக் கேள்

புண்ணிய தேசமென்றே பெயர் கொண்ட நாடு அது. அது பல குறுநில இராஜ்ஜியங்களைச் சேர்த்து அமைந்த ஒரு பரந்த தேசம். அந்த தேசத்தினை மனமோகன் என்ற ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஆலோசனை சொல்ல குறு நிலத்து அரசர்கள் தங்கள் பிரதிநிதிகளாக அமைச்சர்களை அனுப்புவது வழக்கம். அப்படியாக தென் பகுதி குறுநில மன்னன் தட்சிணா மூர்த்தி தன் சார்பாக இரண்டு பிரதிநிதிகளை மனமோகனுக்கு ஆலோசனை சொல்லும் அமைச்சர்களாக அனுப்பியிருந்தான். ஒருவன் பெயர் பெரம்பலூரன் மற்றொருவன் பெயர் சூரியப்பேரன்.


அந்த் நாட்டில் நீண்ட நாட்களாக ஒரு வழக்கம் இருந்தது. மக்கள் தாங்கள் தகவல் அனுப்ப தேவையான புறாக்களை இராஜ்ஜியத்திடம்வாடகைக்குப் பெற வேண்டும். இந்நிலையில் சில வர்த்தகர்கள் தாங்களும் புறாக்கள் வளர்ப்பதாகவும் செய்தி சுமக்கும் புறாக்களாக அவை இருப்பதாகவும் அவற்றினையும் மக்கள் வாடகைக்கு துய்த்து பயன் பெறச் செய்தால்

இராஜ்ஜியத்திற்கு மிகவும் உதவியாக இருக்குமெனவும் கருத்து சொல்லியிருந்தனர். இதனை ஏற்பதால் இராஜ்ஜிய கஜானாவுக்கு வருமானம் தடைப்படும் என மனமோகன் யோசித்தான்.

அமைச்சனான சூரியப் பேரன் மனமோகனிடம், "அரசே வர்த்தகர்கள் தங்கள் புறாக்களையும் செய்தி சுமக்கும் பணியில் அமர்த்தினால் கஜானாவுக்கு ஆபத்து உண்டாகும் என தாங்கள் அஞ்ச வேண்டாம். இதற்கு ஒரு உபாயம் இருக்கிறது. தாங்கள் ஆணையிட்டால் நான் விளக்குகிறேன்"

இந்த அணுகுமுறை மனமோகனுக்கு மகிழ்சி தருவதற்குப் பதில் கலக்கத்தையே தந்தது. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தட்சிணாமூர்த்தி அனுப்பும் பிரதிநிதிகள் கஜானா எனும் சொல்லை உச்சரிக்கும் போதே அவர்கள் கண்களில் ஒரு ரகசிய வெறி தெரிவதை மனமோகன் பல முறை கண்டிருக்கின்றான்.

அதுவும் புண்ணிய தேசத்தின் கடல்பரப்பில் பெருங்கப்பல்கள் வந்து செல்ல புது திட்டம் என அந்த மதுக்கூரன் எனும் அமைச்சர் கொண்டு வந்த திட்டமும் அதில் கஜானா பட்ட பாட்டையும் மனமோகனால் மறக்க இயலவில்லை.

ஆனாலும் தட்சிணாமூர்த்தியின் தயவு மனமோகனுக்கு அவசியமாக இருந்தது.

சரி சொல சூரியப் பேரா என சொல்லிவிட்டான்.

அரசே வர்த்தகர்கள் தங்கள் புறாக்களை இராஜ்ஜியத்திடம் தத்து தந்து விடட்டும். அவர்கள் புறா வழி மக்கள் செய்திகளை அனுப்புவதற்கு ஒரு கட்டணம் நிர்ணயம் செய்வோம். அதில் கணிசமான பங்கினை நாம் எடுத்துக் கொண்டு மீதியை வர்த்தகர்களுக்குத் தருவோம். உங்கள் சம்மதம் மட்டும் போதும் என்னிடம் பொறுப்பை தாருங்கள் நான் இதனை செம்மையாக நடத்துகிறேன் என்றான் சூரியப் பேரன்

அவன் செம்மையாக என அழுத்திச் சொன்னது மனமோகனுக்கு மிகவும் கலக்கமாக இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.

மனமோகன் ராஜாங்கத்துக்கு ஒரு இராஜ மாதா இருந்தார். அவள் மனமோகனின் தாயார் இல்லை. மனமோகன் ராஜ்ய பரிபாலனப் பொறுப்பினை ஏற்பதற்கு பல வருடங்களுக்கு முன்பு புண்ணிய தேசத்தினை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவனது தர்ம பத்தினி தான் இப்போதைய இராஜ மாதா. அந்த மன்னன் காலமானபின்பு அவனின் தர்மபத்தினிக்கு மன்னனின் விதவை எனும் மரியாதை இருந்து வந்தது. அவளும் இராஜாங்க காரியங்களில் சில சமயம் தலையிட்டு வந்தாள். ஆனால் இடையில் ராஜாங்கத்தில் ஏற்பட்ட சில குழப்பங்களால்
அவள் இராஜா மாதா ஆவது தான் சிறந்தது என சில ஜோதிடர்கள் சொல்லி விட்டனர். அவளும் இராஜ மாதா ஆகிவிட்டார். இப்போது மனமோகன் பெயருக்குத் தான் மன்னன். அவனை ஆட்டுவிப்பது இந்த இராஜ மாதா தான் என அரண்மனையின் முற்றம் தொடங்கி தேசத்தின் தென் கோடி எல்லையில் இருக்கும் சாமான்யன் வரை எல்லோரும் சில சமயம் அரசல் புரசலாகவும் பல முறை பட்டவர்த்தனமாக வெளிப்படையாகவும் பேசிக் கொண்டனர். இதில் ஓரளவு உண்மையும் இருந்தது. மனமோகன் சூரியப் பேரனின் பேச்சைக் கேட்டு புறாக்கள் திட்டத்தை செயலாக்கி விட்டால் இராஜ மாதாவிற்கு யார் பதில் சொல்வது என்ற கலக்கம் தான் மனமோகனுக்கு ; இதனை சமாளிக்க மனமோகன் ஒரு யுத்தி செய்தான். தென்பகுதி குறுநில மன்னன் தட்சிணா மூர்த்தி, தான், சூரியப் பேரன், இராஜ மாதா இவர்கள் சந்தித்துப் பேசுவது எனவும் அவர்களுக்குள் இந்த புறாத் திட்டம் தொடர்பாக ஒரு சமரச ஒப்பந்தம்
செய்வது எனவும் திட்டமிட்டான். அப்படியே சந்திப்பும் நடந்தேறியது. சமரச ஒப்பந்தமும் உண்டானது.

வர்த்தகர்கள் தங்கள் புறாக்களை மக்கள் பயன்படுத்த ஏதுவாக புறாக்களை வழங்குவது., மக்களிடம் இதற்காக வசூலிக்கப்படும் கட்டணத்தில் கஜானாவிற்கு இவ்வளவு, புறா வழங்கிய வர்த்தகர்களுக்கு இவ்வளவு என விகிதாச்சாரமும் முடிவானது. இதனை மேற்பார்வை செய்யும் பொறுப்பு சூரியப் பேரனுக்கு வழங்கப்பட்டது.

இந்த திட்டம் செயலுக்கு வந்த உடன் புதிது புதிதாக புறா வளர்க்கும் வர்த்தகள் புற்றீசல் போல முளைத்தனர். தங்களையும் இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ள அவர்கள் சூரியப் பேரனின் அரண்மனையினை மொய்க்கத் தொடங்கினர். சூரியப் பேரன் தன்னை அமைச்சனாக்கிய தட்சிணா மூர்த்திக்கு நன்றிக் கடன் பட்டவன். ஆகவே புதிய வர்த்தகர்களை திட்டத்தில் சேர்த்துக் கொள்ள அவர்கள் தட்சிணா மூர்த்தியின் கருணைக்குப் பாத்திரமானால் மட்டுமே சாத்தியம் என சொல்லி விட்டான். இதனால் தட்சிணா மூர்த்திக்கு புறா வளர்க்கும்
வர்த்தகர்கள் மத்தியில் செல்வாக்கு பல மடங்கு பெருகியது. அதனை அவனும் செம்மையாக பயன்படுத்திக் கொண்டான். சூரியப் பேரனாகப் பட்டவன் தட்சிணா மூர்த்தியின் உறவினனுமாவான். இவர்கள் குடும்ப உறவில் ஒரு சிக்கல் உதித்தது. சூரியப் பேரன் தட்சிணா மூர்த்தியின் அன்பை இழந்தான். அவனுக்கு இந்த புறாத் திட்டம் கண்காணிக்கும் பொறுப்பும் கை நழுவியது.

தட்சிணாமூர்த்தியிடம் நீண்ட காலம் விசுவாசமாக் ஓர் அடிமை போல உழைத்த பெரம்பலூரனுக்கு தட்சிணா மூர்த்தியின் கடைக் கண் கருணை கிட்டியது. புறாத் திட்டப் பொறுப்பு பெரம்பலூரன் வசம் வந்தது

புண்ணிய தேசத்தின் நீதி பரிபால முறையில் ஒரு நல்ல அம்சம் இருந்தது. நீதி வழங்க அமர்த்தப்படும் குருமார்கள் அரசுக்கோ அரசனுக்கோ கட்டுப்பட்டவர்கள் அல்லர்.அவர்களுக்கு அரசனையே கேள்வி கேட்கவும் ஏன் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது புண்ணிய தேசத்தில் ஒரு புகழ்பெற்ற விதூஷகன் இருந்தான் . அவன் பெயர் சேவல்கொடி. அவன் பேச்சைக் கேட்டால் கோமாளி போலத் தோன்றும் ஆயினும் மிகச் சிறந்த அறிஞன். அவனுக்கு இந்தப் புறாத் திட்டத்தில் சூரியப் பேரன், மனமோகன், இராஜ மாதா, பெரம்பலூரன், தட்சிணா
மூர்த்தி,எல்லோரும் கஜானவுக்கு வரும் வருமானத்தில் ஏதோ சூது செய்வதாக ஐயம் தோன்றிவிட்டது. கொஞ்சமும் அச்சமின்றி மனமோகனையே நீ தானே அரசன் புறாத் திட்டத்தில் இராஜ்ஜியத்திற்கு வர வேண்டிய வருமானம் எங்கோ களவு போகிறது போல சந்தேகம் கொள்கிறேன். உண்மையைச் சொல் எனக் கேட்டு விட்டான். மனமோகனுக்கு உள்ளூர கலக்கம்.

ஆயினும் காட்டிக் கொள்ளாமால், அப்படியெல்லாம் ஏதுமில்லை நீ உளறுகிறாய் எனச் சொன்னான். சேவல் கொடி பிடிவாதமாக சூரியப் பேரனையும் பெரம்பலூரனையும் விசாரித்துப் பார் எனச் சொன்னான். மனமோகனின் கலக்கம் அதிகமானது. ஆனாலும் அவன் தனது பிடி வாதத்தில் தளரவில்லை.

சேவல்கொடி பொறுத்துப் பார்த்து ஒரு நாள் நீதிபரிபாலன குருமார்களிடமே முறையிட்டு விட்டான்.

குருமார்கள் இதனை என்னவென்று விசாரியுங்கள் என இராஜாங்கத்தின் பிரத்தியேக காவலர்களுக்கு ஆஞ்ஞை செய்தார்கள்.

பிரத்தியேகக் காவலர்கள் ஆய்ந்து விசாரணை செய்து

புறா வழங்க வர்த்தகர்கள் தேர்வானதில் சூது
புறா கட்டணம் வசூலில் சூது என இதில் பலவாறாக சூது நடந்திருக்கிறது என சொன்னார்கள்

மனமோகன் கலக்கமடைந்து சூரியப் பேரனையும், பெரம்பலூரனையும் காரக்கிருஹத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என காவலர்களிடம் சொல்லிவிட்டான்.

காரக்கிருஹம் செல்வதற்கு முன்பு இருவரும் ஆலயத்திற்கு சென்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள் . அப்போது அங்கே கூடியிருந்த ஜனங்களைப் பார்த்து சொன்னார்கள்

நாங்கள் என்ன செய்தாலும் அதை அரசனிடமும் இராஜ மாதாவிடமும் சொல்லி விட்டுத்தான் செய்தோம். அவர்களுக்கு தெரியாமல் ஏதும் செய்யவில்லை

இப்போது விக்கிரமாதித்யா உனக்கு கேள்வி. அரச தர்மம் , இராஜ நீதி இதில் எல்லாம் சிறந்தே நீ உஜ்ஜையினியில் நீ இராஜ்ய பரிபாலனம் செய்கிறாய் ஆதலினால் இந்த கேள்வி கேட்கிறேன். பதில் சொல். இராஜ்யத்தில் பரிபாலனம் செய்யும் அமைச்சர், தளபதிகள், சேனாதிபதிகள் இவர்களின் தவறுகளில் இராஜ்யாதிபதிக்கு பங்கு இருக்கிறதா. இங்கே இந்தக் கதையில் மனமோகன் நடந்து கொண்டது சரியா. இதற்கு சரியான விடை தெரிந்தும் உரைக்காது இருப்பாய் என்றாலும் அல்லது தவறான விடை சொன்னாலும் உனது சிரம் சுக்கல் நூறாக வெடிக்கும்"

விக்கிரமாதித்யன் பதிலுரைக்கத் தொடங்கினான்

" இராஜ்ஜியத்திற்கு துன்பம் என வரும் போது அரசனாகப்பட்டவன் பிறரை விடுவித்து தனனை இரையாக்கவும் தயங்கலாகது. ஒரு கப்பலில் படையினர் பயணம் செய்கையில் கப்பல் மூழ்கிவிடும் எனம் அபாயக் காலத்தில் கப்பலின் தலைவனானவன் பிறரை தப்பிக்க வைத்து தான் மிகக் கடைசியாகவே தப்பிக்க முயல வேண்டும். தேவையெனில் பிராணத் தியாகம் செய்யவும் சித்தமாக இருக்க வேண்டும்.

இராஜ்ஜிய பரிபாலத்தில் பிழை என்றும் ஒழுங்கில் குறை எனவும் வருமேயாயின் அதன் முதல் பொறுப்பினை அரசனே ஏற்பது இராஜ தர்மம் ஆகும். தனது சேனையினைச் சேர்ந்தவர், மந்திரிமார்கள் பிழையிழைத்தாலும் அதன் பொறுப்பு அரசனுக்கே உரியது. அரசனை ஒட்டிதான் இராஜ்ஜிய பரிபாலனம் நிகழ்கிறது. அரசனே சேனைகளை வழி நடத்துகிறான். அமைச்சர்களை கவனிக்கிறான், கண்கானிக்கின்றான். பிரஜைகள் அரசனை தங்களை துன்பத்திலிருந்து ரட்சிக்கும் தெய்வமாகவே மதிக்கின்றார்கள். ஆகவே ஒரு இராஜ்ஜியாதிபதிக்கு
சாதாரண பிரஜையினைக் காட்டிலும் இராஜ்ஜிய சேவையில் பொறுப்பு அதிகமாகிறது. அதன் பொருட்டே அவனையும் அவனது குடும்பத்தாரையும் காத்து நிற்கும் சேனைகளும் சேவகர்களும் அரசனுக்கு ஆபத்து வரும் போது பிராணத் தியாகம் செய்தும் அரசனைக் காக்கின்றார்கள்.

இராஜ்ஜியத்தின் பொறுப்பு என நோக்கும் போது மனமோகன் தனது அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு பொறுப்பேற்பதே முறையாகும். அவனுக்கு அரசனாக பொறுப்பில் தொடர்ந்து இராஜ்ஜிய பரிபாலனம் செய்ய அருகதை இல்லை என்றே சொல்கிறேன். அவனுக்கு நீதி பரிபாலனம் செய்யும் குருமார்கள் இதனையே புத்திமதியாகச் சொல்லியிருக்க வேண்டும். அன்றி மனமோகன் குருமார்கள் மீது மதிப்பு வைத்திருப்பானேயாகில் தானே முன் வந்து முடி துறக்க வேணும்"

விக்கிரமாதித்தியனின் இந்த சரியான பதிலால் உவகை அடைந்த வேதாளம் அவனது முதுகை விட்டு அகன்று பறந்து மீண்டும் அதே மரத்தில் தொங்கியது

13 comments:

Ramachandranwrites said...

அற்புதம் மௌலி,

அரசன் முடி துறப்பதோடு முடியாது. அவனும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும், அப்போதுதான் புண்ணிய தேசம் உண்மையில் புண்ணிய தேசம் என்று அறியப்படும்.

Ramachandranwrites said...

If things have happened with his knowledge, the king is unethical, if it happened without his knowledge, then he is unfit to rule.

He has to be removed and put behind the bars for whole of his life time.

Geetha Sambasivam said...

அற்புதம். அரசன் முடி துறப்பான் என்றும் சொல்ல முடியாது. தண்டனை அடைவான் என்றும் சொல்ல முடியாது. மக்களாய்ப் பார்த்து அடுத்த தேர்தலில் தண்டனை அளித்தால் தான். :((((((( நம்மால் முடிந்தது நீதி பரிபாலனம் செய்யும் குருமார்கள் இப்படியே இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனைகள் செய்வது ஒன்றே.

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - அருமை அருமை - கதை அல்ல உரை எழுதும் நயமிக்க திறமை பளிச்சிடுகிறது. அரசன் அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். நடக்கும் . ஆனால் நடக்காது. இரஜா மாதாவினை எதற்கும் பொறுப்பாளி ஆக்க இயலாது. ம்ம்ம்ம் என்ன செய்வது - பாவம் பொது மக்கள் - நல்வாழ்த்துகல் மௌளி -- நட்புடன் சீனா

Anonymous said...

Dear Mouli
Aha! Arpudham !! Vedhalathkku inru nadappathu enro theinthu irukkirathey !! innum ennenna kadhaigal sollappokiradho Vedhalam.
Avaludan
Rajagopal

Ganpat said...

அருமை அருமை
பிடியுங்கள் வாழ்த்தை!
ஆமாம் அது என்ன அரசருக்கு மட்டும் நாமகரணம் இல்லை??

Pushparagam said...

ஆமாம் இவ்வளவு நடந்தும் - மக்களின் மற்ற ஏனைய பிரதிநிதிகள் ஏன் ஒற்றுமையுடன் செயல்படவில்லை -
அந்த மன்னனை ஆட்சியிலிருந்து நீக்கமுடியவில்லை.

ராகவன்

D. Chandramouli said...

Beautiful, my namesake! Excellent narration - hilarious to the core. The names selected were appropriate. One cannot put the country's pathetic situation any better. Whether the King was aware or not, he should take full responsibility for the mess and TAKE ACTION to put things in order. If because of the circumstances he is 'placed', thanks to Raj Mata, he should at least relinquish his thorny crown and join the masses led by the likes of like Anna.

சேக்காளி said...

மிக அருமையாக இருக்கிறது.ஆனா பாருங்க இத சுடப்போறேன்.மன்னிச்சுகிடுங்க.

கார்த்திக் said...

Mowlee sir,

Simply superb. Could see the shades of 'Cho'.

Karthik

BalHanuman said...

அன்புள்ள மௌளி,

மிக மிக அருமை. உங்கள் நற்பணி தொடரட்டும்.

M Arunachalam said...

Sir,

I stumbled upon this blog-post today & it was a nice read. Keep going.

BTB, I have also written a "Vikramadhithan & Vedhaalam" story 2 years back in July, 2009, in my blog "Kurattai Arangam". Request you & other friends to go thru the same and give your comments in my blog. Kindly bear in mind that I wrote that blog post BEFORE the onslaught of CAG Report on 2G scam or Nira Radia tapes.

The link to my blog post is here:

http://hereisarun.blogspot.com/2009/07/blog-post.html

Regards

Arun

அப்பாதுரை said...

ரொம்ப ரசித்துப் படித்தேன். serious intellect.