இன்றைக்குத்தான் புதுசாக ஒன்றைக் கவனித்தேன். ஷேவ் செய்யும் போது மீசையிலே இரண்டு வெள்ளை முடிகள். நரை...
சரி வயசாகிவிட்ட்தோ என நினைத்து சமாதானம் ஆகிவிட்டேன். ஆமாம் ஏன் நரை முடி... என் டாக்டர் சிநேகிதனைக் கேட்டேன்
நம் ஒவ்வொரு முடியின் வேரும் Tissue Tube ஒன்றால் கவர் செய்யப்பட்டுள்ளது. இதுக்கு பாலிக்கிள் என்று பெயர். இதிலே நிறைய பிக்மெண்ட் செல்கள் இருக்கின்றன இந்த பிக்மெண்ட் செல்கள் மெலனின் எனும் ஒரு ரசாயனத்தை உற்பத்தி செய்து கொண்டே இருக்குமாம். இந்த மெலனின் தான் கேசத்தின் நிறத்துக்குக் காரணமாம்.
வயசு ஏற ஏற மெலனின் உற்பத்தி சொற்பமாகி, கலர் சப்ளை நின்று போய் கேசத்திலே வெள்ளை அடிக்க ஆரம்பமாகிறதாம். இதே மெலனின் தான் நமது தோலின் நிறத்துக்கும் காரணமாம்.
மெலனின் பற்றாக்குறைக்கு அல்பினிசம் என்று பெயராம். இந்த அல்பினிசத்துக்கும் காது கேட்காமல் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக சொல்லி லேசாக பயம் காட்டினான்
மெலனின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துகொள்ள ஏதாவது மாத்திரை, டானிக் இருக்கிறதா எனக் கேட்டேன். ”அதான் நிறைய டை வந்திருக்கே” என்றான்.
டை அடித்துக் கொண்டு முடியைக் கறுப்பாக்கிக் கொண்டு உலாவும் கனவான்கள் ஒன்றைக் கவனித்திருப்பார்களா தெரியவில்லை. முன் மண்டையிலே பிசிரில்லாமல் நேர்த்தியாக கருப்படித்திருப்பார்கள். அந்த நேர்த்தி பெயிண்டிங் கேசம் மாதிரி இருக்கும். உடனே இது டை அடித்த தலை என சந்தேகம் இல்லாமல் சொல்லிவிடலாம்
மெலனின் அபரிமிதமாக சுரப்பதும் உண்டாம். அதுக்கு மெலனோஜெனசிஸ் என்று பெயராம். இப்படி மெலனின் அளவு கடந்து சுரப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டேன். ”எல்லாம் ஹெரிட்டரி” சிம்பிளாகச் சொல்லிட்டு போய்ட்டான் ஆனால் இதுக்கு ஒரு நல்ல ஆன்சர் புறநானூற்றிலே பிசிராந்தையார் சொல்லிருக்கார் பாருங்கள்
“யாண்டு பலவாக நரையில் ஆகுதல்
யாங்கு ஆகியர் ? என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்;
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதந்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே”
(புறநானூறு :191 பாடியவர் பிசிராந்தையார்)
எனக்கு அன்பான மனைவி.. மிக்க அன்பான குழந்தைகள்.. கடமை பெரிதென உழைக்கும் ஊழியர்கள். எல்லாவற்றிலும் மேலாக குற்றம் செய்யாத என் அரசன். அதைவிட மேலாக கொள்கையால் சிறந்த சான்றோர்கள் நிறைந்த ஊரிலே நான் குடியிருக்கிறேன். அது தான் ஆண்டுகள் பல ஆகியும் எனக்கு கேசம் நரைக்கவில்லை