Saturday, 16 October 2010

ரகசி-PART1


"என்ன ப்ரொபசர் அவசரமா வாடானு போன் பண்ணிட்டு நான் வந்தது கூடத் தெரியாம.. அப்படி என்ன பார்த்துண்டு இருக்கேள்"

"வாடா பாஸ்கி., நீ வந்தது கவனிக்காம இல்லை.. இந்த சிப்பை சரி பார்த்துண்டு இருந்தேன்.. அது இருக்கட்டும் ஒன்னோட அமெரிக்கா ட்ரிப் எப்படி இருந்தது.. விஸ்தாரமா சொல்லு"

"அமெரிக்கா எங்கே ஓடிப் போறது.. நீங்க என்னவோ புது ப்ராஜெக்ட்லே இறங்கிருக்கேள்.. அதைப் பத்தி சொல்லுங்கோ"

"ஆமாடா.. இது பேரு ரகசி..இது விஷேச சர்ச் எஞ்சின்"

"கூகிள் மாதிரியா"

"இல்லை கூகிள் டெஸ்க்டாப் சர்ச் மாதிரி.. நீ கோபர்நிக் பத்தி கேள்விப்பட்டிருக்கியா"


" யெஸ் ப்ரொபசர்.. கேள்விபட்டிருக்கேன் .. நல்ல பிரபலமான டெஸ்க்டாப் சர்ச்"

"அது என்ன செய்யறது சொல்லு"

" ஒரு கம்ப்யூட்டரில் இருக்கும் எல்லாத் தகவலையும் இன்டெக்ஸ் செய்து வச்சிக்கிறது.. ஒரு சின்ன டெக்ஸ்ட் கொடுத்து தேடினாலும் அந்த வார்த்தை இருக்கும் ஃபைல் எங்கே இருக்குனு தேடி எடுத்துத் தரும்"

"நம்ம ரகசி அப்படித்தான்.. ஆனா இது மனுஷாளோட மெமரிலே தேடும். அதுக்கு தான் இந்த சிப். இந்த சிப்பை மனுஷாளோட நெர்வ்ஸ்லே கனெக்ட் செய்துட்டு இன்னொரு முனையிலே ஒரு கம்யூட்டரைக் கனெக்ட் செய்துடனும். கம்யூட்டரில் தேட வேண்டிய வார்த்தையைத் ரகசி சாஃப்ட்வேர்லே கொடுத்தா அந்த வார்த்தை சம்பந்தமா அந்த மனுஷனோட மெமெரிலே பதிவாகி இருக்கிற எல்லா விபரமும் அப்படியே ஸ்க்ரீன்லே தெரியும்"

"என்ன ப்ரொபசர் எந்திரன் சினிமா பார்த்து எதானும் ஆய்டுத்தா"

" அட கஷ்டகாலமே .. நான் சொன்னதை நீ நம்பலைனு தோண்றது.. உன்னை வச்சே இதை ப்ரூப் செய்துடறேன்"

"நான் நம்பறேன் ப்ரொபசர்.. நிச்சயமா நம்பறேன்.. நீங்கபாட்டும் என் இமெயில் பாஸ்வேர்ட்ல்லாம் தெரிஞ்சிண்டு அப்பாலே என்னைக் கேலி செய்வேள்"

"அதெல்லாம் இல்லை .. உன்னோட ப்ரைவசி பத்தி நீ பயப்பட வேணாம்.. நம்ம ரகசி அதை கண்டுபிடிக்கும் ஆனா இப்ப இந்த டெஸ்டிங்கிற்கு நீ தான் இன்புட் தரப் போற"

பாஸ்கியை பின்புறம் திரும்பி நிற்க வைத்தான் சடகோபன். பின் கழுத்திலே சலூனில் செய்வது போல ஒரு ஜில்லான திரவத்தை தடவினான்

"நெளியாதடா இப்ப ஒன்னோட நெர்வ் சிஸ்டத்திலே இந்த சிப்பை இந்த டேட்டா கார்ட் வச்சி கனெக்ட் செய்யப் போறன். குத்தும் போது லேசா வலிக்கும்"

" ஆ... ப்ரொபசர் லேசா வலிகும்னேள் .. இப்படி கடுக்கறதே"

"கொஞ்சம் பொறுத்துக்கோ.. இதோ ஆய்டுத்து.. இப்ப இந்த ஸ்கீரின்லே தெரியற டெக்ஸ்ட் பாக்சிலே எதானும் வார்த்தை கொடுத்து பாரு"

"என்ன வார்த்தை தரலாம்னு யோசிக்கிறேன்"

"ஒன்னோட ஆத்துக்காரி பேர் தாயேன்.. இரு நானே தரேன்"

"அய்யோ அது வேணாம் சொன்னாக் கேளுங்கோ"

பாஸ்கி மறுத்து முடிப்பதற்குள்.. சடகோபன் டைப் அடித்து என்டர் கீயும் அழுத்தியிருந்தான் ..

ஸ்கிரீனில் தகவல்கள் வரி வரியாக வரத் தொடங்கியது...

தொடரும்

Saturday, 9 October 2010

திமிர்


"எங்கே இந்தப் பக்கம் ".. மெரினாவிலே அதிகாலை நடந்து போகையில் பின்னாலிருந்து குரல். மிகப் பக்கத்திலே கேட்ட குரல்.. அதிலிருந்த கம்பீரம்..

யாரது முண்டாசுவா..

அவனே தான்..

ஸ்நேகிதமாகப் புன்னகைத்தேன்..

"என்னைக் குறித்து தான் ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கின்றீர் என யூகம்"

"நீங்கள் அறியாத டெவில் பழமொழியா.."

"சொல்லுமையா என்ன ஐயம் இப்போது"

"உங்களுக்கு திமிர் அதிகம் என சொல்வார்களா.. உங்கள் காலத்தில்"

"இருக்கலாம்.. ஆனால் நான் இல்லை எனச் சொல்வேன்"

"புரியலை"

"என் பாடல் ஒன்றைக் கொண்டே விளக்கலாம். உமக்கு மிகவும் பிடித்த எனது கவிதை ஒன்றைச் சொல்லும்"

"இது என்ன கேள்வி.. உங்கள் கவிதை எல்லாமே அந்த ரகம் தான் எனக்கு"

"அதில்லை ஸ்வாமி.. அடிக்கடி சொல்வீரே .. இது தான் முண்டாசுவின் மாஸ்டர் பீஸ் என அந்தப் பாடலைச் சொன்னேன்"

"அதுவா

தேடிச் சோறு நிதந்தின்று _பல‌
சின்னஞ்சிறு கதைகள் பேசி _ ம‌ன‌ம்
வாடித் துன்ப‌ம் மிக‌ உழ‌ன்று‍ பிற‌ர்
வாட‌ப்ப‌ல‌ செய‌ல்க‌ள் செய்து‍_ந‌ரை
கூடிக்கிழப் ப‌ருவ‌மெய்தி‍ _கொடுங்
கூற்றுக் கிரையென‌ப்பின் மாயும்_ப‌ல‌
வேடிக்கை ம‌னித‌ரைப் போலே_ நானும்
வீழ்வேன் என்று நினைத்தாயோ


"இப்படியான் வேடிக்கை மனிதரிடம் இருக்கும் திமிரையும் எனக்கான செருக்கையும் ஒப்பிட எப்படித் துணிந்தீர்"

"அப்படியானால் வேடிக்கை மனிதரிடம் செருக்கு இருக்காதா.. "

"உமது கால திரைப்பட பாணியில் சொல்வதானால் எனக்கு சொல்ல நா எழவில்லை ஆனாலும் சொல்லாமால் செல்ல மனமில்லை"

"சொல்லிவிடுங்கள்"

"இப்படியான வேடிக்கை மனிதரிடம் கிறுக்கு தான் இருக்கும் செருக்கு இருக்காது"

அந்த யுக புருஷன் மிகத் தைரியமாக கடல் அலைமீது நடந்து மறைந்தான்

Sunday, 3 October 2010

எந்திரன்‍ ‍‍- சமூக பலவீனம்


இந்த கட்டுரை எந்திரன் திரைப்படம் குறித்த எனது விமர்சனமோ கருத்தோ அல்ல. நான் இன்னும் அந்த திரைப்படத்தினைப் பார்க்கவில்லை. எப்போது பார்ப்பேன் அல்லது பார்க்காமல் விடுவேனா எனவும் தெரியாது. நான் அப்படி ஒன்றும் சினிமாவை விரும்பிப் பார்ப்பவனாக இருந்ததில்லை.

எந்திரன் திரைப்படம் வெளியீடு குறித்து சன் டிவியில் வந்த வந்து கொன்டிருக்கும் விளம்பரங்கள் இந்த கட்டுரையினை எழுதத் தூண்டியது என சொல்லலாம்.

திரைப்படத்தின் முதல் நோக்கம் அதனால் வரும் வியாபார வருமானம் என்பதில் யாரும் கருத்து வேறுபாடு கொண்டிருக்க இயலாது. எந்திரனும் அதற்கு விதி விலக்கல்ல. எந்திரன் வெளிவருவதற்கு முன்பே அதன் வியாபர வெற்றி நோக்கி செய்த விளம்பரங்கள், அதீத அளவில் இருந்தன என்பது என் கருத்து.

திரைப்படம் வெளியான பின்பு அதனை ஒட்டியும் சன் டிவியில் நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன‌

அது தயாரிப்பாளர்களின் உரிமை.. அவர்களின் வியாபார வெற்றி மீதான கண்ணோட்டம் அவர்களுக்கு இருக்கும் சமூக கடமையினை மறக்கடிக்கச் செய்து விட்டது.

திரைப்படம் உலகெங்கும் வெளியானதை ஒட்டிய நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு நிகழ்ச்ச்சி வெளிவருவதாக முன்னோட்டம் சன் டிவியில் இரண்டு நாட்களாக காணப்படுகிறது.

ஒரு திரையரங்கின் முதல் காட்சி கதவுகள் திறக்கப்படுகின்றன மந்தையென மக்கள் கட்டின்றி ஒழுங்கின்றி ஓடிப் பிரவகித்து உள் நுழையும் காட்சி

திரையரங்கம் ஒன்றின் வெளியே திரைப்படத்தின் விளம்பரமாக வைக்கப்பட்டுள்ள பேனர் அதில் ரஜினி காந்த். அதற்கு ரசிகர்களின் பாலாபிஷேகம்

திரைப்படத்தின் ப்ரிண்ட் திரையரங்கம் ஒன்றிற்கு கொண்டு வரப்படும் காட்சி. யானை மீது வைத்து ஊர்வலம். ஊர்வலத்தில் ஒருவர் அலகு குத்திக் கொண்டும் வருகிறார். தீச்சட்டி ஒத்த ஒரு அமைப்பினை சுமந்து வருவதாகவும் தெரிகிறது.. நிறைய பால்குடங்கள் சுமந்து பெண்கள் ஆண்கள் ஊர்வலம்

ரசிகர்கள் திரைப்படத்தின் வெளியீடு குறித்து மொட்டை அடித்துக் கொள்வதும் காட்டப்படுகிறது. எந்திரன் என தங்கள் சிகையின் ஊடே அலங்காரம் செய்து கொள்வதாகவும் காட்சிகள் வருகின்றன‌

திரைப்பட கதையின் நாயகன் ரஜினி காந்தும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் உற்சாகம் கொப்பளிக்கும் சிரிப்பினை சுமந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுகின்றனர். படம் வியாபார ரீதியில் வெற்றி பெற்றதன் அடையாளமாக அந்த தழுவலையும் சிரிப்பையும் கருதலாம்.

ஆனால் அவர்களும் பலரும் கவனிக்கத் தவறியது இப்படி சினிமா மோகம் எத்தகைய சமூக பலவீனம் என்பதே.

பாலாபிஷேகம் செய்வதும், பால்குடம் தூக்கிவருவதும், அலகு குத்திக் கொண்டும், யானை மீதும் ஊர்வலம் வருவது யார் யார்...

இந்த சமூகத்தின் அடையாளம் என கருதப்படும் இளைஞர்கள்..

அவர்கள் ஒரு சாதாரண வியாபார சினிமாவின் வெளியீட்டுக்கு இப்படி மோகித்து.. இப்படியான செய்கைகளில் ஈடுபடுவார்கள் அவர்களின் ரசனையும், பகுத்தறிவும், மெச்சூரிட்டியும் இந்த அளவுதான்

இப்படியான பலவீனத்தைத்தான் அந்த சினிமா எந்திரன் குழுவும் விரும்புகிறது. இப்படியான இளைய சமூகத்தின் பலவீனத்தின் மீது தான் எந்திரனின் வியாபார வெற்றி எழுப்பப்பட்டுள்ளது.

திரைப்படம் வெளியான அன்று விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் அலாராம் வைத்த விழிப்பினைச் சுமந்து திரையரங்க வாசல் அடைந்து, அங்கிருந்தபடியே அங்கு தன்னைப் போலவே பிரஞ்ஞையுடம் வந்திருக்கும் ஏராளனமானவர்களின் எண்ணிக்கையினை எஸ். எம் .எஸ் , டுவிட்டர், இமெயில் என எல்லா நவீன சாதனங்களின் உதவியுடன் உலகிற்கு சொல்லி சமூக சேவை செய்தவர்கள்

முதல் காட்சி கண்ணுற்று வெளிவந்த கணம் முதல் மனதுக்குள் வாக்கியங்களை தட்டச்சு செய்தபடி விரைந்தோடி வந்து கணிணி முன் அமர்ந்து விமர்சனம் எழுதிய பதிவர்கள் .. இதில் கவிதை மட்டுமே எழுதுபவர்கள், திருப்புகழ்/ கந்தரலங்காரம் விளக்கம் என ஆத்திகம் மட்டுமே எழுதுபவர்கள் கூட விதிவிலக்கில்லாமல் ஒரு பெரும் கோஷ்டி முதல் விமர்சனம் எழுதி கட்டாயம் பார் என பரிந்துரைக்கும் நல்ல காரியம் செய்தவர்கள்

இப்படியான சமூக பலகீனங்களின் அடையாளம் எந்திரன்.. அதன் வியாபார வெற்றி இப்படியான பல்கீனத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளது. அதன் தொடர் வியாபார வெற்றி இப்படியான பலவீனங்கள் மேலும் பலவீனமடைவதின் அறிகுறி

தமிழ் சார்ந்த ஊடகங்களின் பிதாமகனான சன் டிவிக்கு ஒரு வேண்டுகோள் .. நீங்கள் திரைப்படம் எடுப்பதை நான் சாடவில்லை. அதற்கு விளம்பரம் செய்வதையும் நான் ஒன்றும் சொல்லவில்லை. அந்த நிகழ்ச்சிகளில்,, பாலாபிஷேகம், பால்குடம், யானை ஊர்வலம், அலகு குத்தி ஊர்வலம் வருதல்,
இதெல்லாம் நிஜமாகவே உங்களுக்கு பலமாகத் தெரிகிறதா..

மனம் தொட்டு சொல்லுங்கள்

இதெல்லாம் சமூக பலவீனமாகத் தெரியவில்லையா..

இப்படியான சமூகத்தினையா நம் சமூகம் என அடையாளம் காட்ட விழைகின்றீர்கள்..

இப்படியான பலவீனத்தையா நம் சமூகம் என தொலைக்காட்சியில் உலகெங்கும் ஒளி/ஒலி பரப்ப இருக்கின்றீர்கள்

இது தான் நம் சமூகத்தின் கலை ரசனை என சொல்லப் போகின்றீர்களா