Wednesday, 11 January 2012

தாஜுதீன்


இன்றைக்கு என் பெண் தனது ஸ்கூல் எக்ஸ்கர்ஷன் முடித்துக் கொண்டு மைசூர் எக்ஸ்பிரசில் வந்தாள்

அவளை ஸ்டேஷனில் இருந்து அழைத்துக் கொண்டு வருவதற்காக காலை ஆறுமணிக்கெல்லாம் ஸ்கூட்டரில் நானும் என் மனைவியும்

கிளம்பினோம். நல்ல பணி. ஹிகின்பாதம்ஸ் சமீபத்தில், அந்த கணத்துக்காக காத்திருந்தாற் போல பின் சக்கர ட்யூபின் மௌத் படீரென விட்டது. வண்டி நிலை தடுமாறி பூம்புகார் தாண்டி இடப்புறம் ப்ளாட்பாரம் ஒட்டி நிறுத்தினேன். வந்த ஆட்டோவை வழி மறித்து நிறுத்தி,
மனைவியை சென்ட்ரலுக்கு அனுப்பி விட்டு, பஞ்சர் ஒட்டும் வழியினை யோசித்தேன்

அந்த வயதானவர் அழைத்தார், " தம்பி பக்கத்துல பஞ்சர் கடை இருக்கு . நீங்க இங்கேயே இருங்க நான் போய் அந்தாளை கூட்டிட்டு வரேன்"

மூடப்பட்ட கடையொன்றின் வாசல்படி பளபளப்பான மொசைக்கில் இருந்தது.உட்கார்ந்தேன். ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கும் போது படிக்கலாம் என எடுத்துப் போன 'தாயர் சன்னதி' பிரித்தேன்.

அந்தப் பெரியவர் திரும்ப வந்து விட்டார், ' அந்தப் பையன் இப்பதான் கடை திறந்திட்டு இருக்கான். சொல்லிட்டு வந்திருக்கேன். இப்ப வந்துருவான்.. டீ சாப்பிடறீங்களா"

பர்ஸ் பிரித்து பணம் எடுத்துக் கொடுத்து, 'நீங்களும் டீ சாப்பிடுங்க"

இரண்டு பேப்பர் கப்பில் டீ வாங்கி வந்தார். "அது என்னங்க புத்தகம்" . அவரிடம் புத்தகம் தந்தேன்.

'இவரு திருநெல்வேலிக் காரரா'

"எப்படி சொல்றீங்க"

'அவங்க தான் திருநவேலி னு சொல்வாங்க.. இந்தியாவிலே முதல் முதலா கொடும்பாவி எரிச்சது யார் தெரியுமா"

இப்போது பஞ்சர் கடைப் பையன் பின் சக்கரத்தைக் கழற்றிக் கொண்டிருந்தான்

'நீங்க சொல்லுங்க"

'அக்பர் சக்ரவர்த்தி தான். மதன் எழுதின வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்திலே கிட்டத்தட்ட நடுவிலே படம் கூட வரைஞ்சிருக்கும்..நீங்க படிச்சிருக்கீங்களா

இப்படித் தொடங்கி, அக்பரைப் பற்றி இன்னும் ஏராளமான விபரங்களைச் சொல்லிக் கொண்டே , அதைத் தொடர்ந்து கபாலீசுவரர் கோவிலுக்கு நிலப் பட்டா, தீன் இலாஹி, தன்னுடைய சௌதி பயணம், மெக்கா மசூதி வரலாறு, அங்கே பாலைவனம் எப்படி யாத்திரிகர்களுக்கு இடைஞ்சல், அங்கே இருக்கும் பேரிச்சைக்கும் இங்கே இந்திய பேரிச்சைக்கும் இருக்கும் வித்தியாசம் , பாலஸ்தீன வரலாற்றினை பா. ரா அவர்களின் நிலமெல்லாம் ரத்தத்திலிருந்து மேற்கோள், தேசிங்கு ராஜன் சம்பந்தமாக கன்னிமரா பழைய லைப்ரரியில் இருக்கும் இரண்டு புத்தகங்கள்.. மீண்டும் சௌதிக்கு திரும்பிய அவரது பேச்சு அங்கே இருக்கும் ஆடுகளுக்கு எப்படி தீனி போடுவார்கள். அங்கே கொய்யா எப்படி விளைவிக்கின்றார்கள். மௌன்ட் ரோடில் சில வருஷங்களுக்கு முன்பு இருந்த ட்ராபிக்.. கெட்டி பொம்மு பத்தின நாட்டுப் பாடல், 'வெல்லுவதற்காக கொல்லுதல் ' நடந்தது எனும் அந்த கால கலக நியாயம்'

பையன் பஞ்சர் பார்த்து சக்கரத்தைப் பொறுத்திக் கொண்டிருந்தான்

அவனுக்கு பணம் தந்து விட்டு கிளம்பும் முன்பு, 'உங்க பேர் என்னங்க'

"தாஜுதீன்'

'என்ன வேலை செய்றீங்க'

'நிரந்தரமா ஏதும் இல்லீங்க தம்பி.. இங்கே இருக்கும் எல்லா பிரியாணி ஓட்டலிலும் வேலை பார்ப்பேன்.. காசு தருவாங்க சோறு போடுவாங்க.. ராத்திரியான பூம்புகார் வாசலிலே படுத்துக்குவேன். கால்ல நல்லா அடிபட்டிருக்கு ரொம்ப வலிக்குது. உங்க ஃபோன் நம்பர்
இருந்தா தாங்க தம்பி..

என்னுடைய பிசினஸ் கார்ட்டும் கொஞ்சம் பணமும் தந்தேன்

மறுத்துக் கொண்டே," உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம். பணம் வேண்டாம்.. போன் செய்றேன். என்னை ஒருதரம் புக் ஃபேருக்கும் லைப்ரரிக்கும் கூட்டிட்டுப் போக முடியுமா"

'அவசியம் செய்றேன். பணம் தந்ததை தப்பா நினைச்சுக்காதீங்க .. உங்களுக்கு 80 வயதிருக்கும் என நினைக்கிறேன். எங்கப்பா இறக்கும் போது அந்த வயசு தான்.. உங்க பையன் தந்த மாதிரி நினைச்சிட்டு வாங்கிக்கங்க"

என் பிசினஸ் கார்டை பார்த்தவாறு என்னிடம் பேசினார்.. Your guess is wrong mowlee. I am just 62 years old... சரளமான

ஆங்கிலத்தில், க்ளோபல் வார்மிங்.. ஏஜிங் என தொடந்தார்.

மனசில்லாமல் அங்கிருந்து சென்ட்ரல் போய் லேட்டாக வந்த ரயிலுக்கு காத்திருந்து... மகளை வரவேற்று, மனைவியுடன் ஆட்டோவில் அனுப்பி வைத்து ஆபிஸ் போய் மிக முக்கியமான முடிவுகள் இரண்டு இன்றைக்கு எடுத்து.. வீடு திரும்பி

இந்த நிமிஷம் வரை எனக்கு பிரமிப்பு அடங்கவில்லை.. அந்த பிரமிப்பை சொல்வதற்கு எனக்கு பிரமிப்பு என்ற வார்த்தை தவிர வேறு தெரியவில்லை

இந்த போட்டோவில் இருப்பவர் தான் அந்த தாஜுதீன்

11 comments:

Ramachandranwrites said...

உண்மைதான் மௌலி
இப்படி வெளியில் தெரியாமல் பல ரத்தினங்கள் இந்த நாடு முழுவதும் இறைந்து உள்ளது. சில நேரங்களில் சிலர் நம் கண்ணில் பட்டு விடுகின்றனர்.

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - நம்முடன் அவர்களாகப் பேச வந்து பேசுபவர்களுடன் நாமும் பேச ஆரம்பித்தால் நட்பு வளரும். அதே நேரத்தில் அவர்களின் திறமையும் எளீமையும் வெளிப்படும். ஒதுக்கித் தள்ளாமல் பொறுமையுடன் துவங்கி ஆர்வத்தினுடன் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் விடை பெற்று ....மௌளி - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வெங்கட் சாமிநாதன் said...

அதிர்ஷ்டம் வாய்ந்த மனிதர் நீங்கள். பகவான் இப்படிப்பட்ட மனிதர்களையும் உங்கள் வழியில் கொண்டு வந்து நிறுத்துகியிருக்கிறாரே. அந்த தாஜ்ஜுதீன் தான் எவ்வலவு உயர்ந்த மனிதர். தௌஹீத் ஜமாத்தும், திராவிட அரசியலும் இன்னும் அவரைக் கெடுத்துவிடவில்லை என்பதும் ஆச்சரியம் தான். 60 வய்தில் 80 வய்து முதுமையை அடைந்துவிட்ட இந்த ப்ளாட்ஃபார்ம் வாசிக்கு வாழ்க்கைமீதும், சுற்றியிருக்கும் மனிதர்மீதும் கசப்பையும் வேதனையும் கொட்ட நிறைய இருக்கும். இதையெல்லாம் மீறி அவர் இன்னும் ஒரு உயர்ந்த மனிதராக இருக்கிறாரே. ஆச்சரியம் தான்.

Mukhilvannan said...

அன்புமிக்க சந்திரமௌளீஸ்வரன்,
மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள். எதிர்பார்க்காத ஒன்றை நாம் அடைந்தால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ அந்த மகிழ்ச்சி எனக்கு உண்டாகிற்று. உங்கள் எழுத்தில் வசிய சக்தி இருக்கிறது. நுண்ணிய ரசனைவேறு மணம் கூட்டுகிறது. டி.கே.சி. சொல்லுவதுபோல “ஒரே உல்லாசம்! ஆனந்தம்.”
என் இதயம்கனிந்த ஆசீர்வாதங்கள்.
கிருஷ்ணமூர்த்தி

ஸ்ரீராம். said...

இருக்குமிடம், உருவத்தை வைத்து எடை போடுவது எவ்வளவு தவறு இல்லை?

வடிவேல் கன்னியப்பன் said...

உண்மைதான்! இது போன்று பல நவமணிகள் வெளியே தெரியாமல் இருக்கின்றனர். அப்படிப்பட்ட மாணிக்கத்தை தரிசிக்கவும் உரையாடும் வாய்ப்பைப் பெற்ற தாங்கள் ஒரு உண்மையான அதிர்ஷ்டசாலி! அதனை எங்களுக்கு கட்டுரைமூலம் தெரியப்படுத்திய தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

Ganpat said...

எந்தரோ மஹாநுபாவுலு
அந்தரீக்கி வந்தனமு!

அப்பாதுரை said...

wow!

சேக்காளி said...

//நிரந்தரமா ஏதும் இல்லீங்க தம்பி.. இங்கே இருக்கும் எல்லா பிரியாணி ஓட்டலிலும் வேலை பார்ப்பேன்.. காசு தருவாங்க சோறு போடுவாங்க.. ராத்திரியான பூம்புகார் வாசலிலே படுத்துக்குவேன்//
என்ன ஒரு அழகான பிஸினெஸ் கார்ட்

ஜா.முஹையத்தீன் பாட்ஷா said...

இப்படி எதார்த்தமாக வாழ்வில் இடைப்படும் அறிவுஜீவிகளை பலர் நம்மை வெகுவாக ஆச்சர்யப்படுத்திவிடுவர். என்ன செய்ய அறிவாளிகள் பெரும்பாலும் தாஜுதீன்களாகவே உலாவுகின்றனர்.

R. Jagannathan said...

My first visit to your site. Congrats on getting a good breakfast this morning (from Idly vadai!)

Mr. Tajuddin seems to be an interesting character. Sure you might have visited him again. Or, did he call you? Hope you will share your interactions with him.

-R. Jagannathan