Monday, 15 June 2009

நிற்பதுவே


பாண்டிச்சேரியில் ஈஸ்வரன் தர்மராஜன் கோவில் தெருவிலே கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வீட்டின் மாடியிலே ஏறி எதிர் வீட்டு மொட்டை மாடியை டிஜிட்டல் காமிராவுக்குள்ளே கொண்டு வரும் முயற்சியிலே நானும் கார்த்தியும்...

திருப்தியாய் வந்த்தா படம்

.. தலையாட்டினார்

சரி கீழே இறங்கலாம் என திரும்பினால் .. “ஓய் ஸ்வாமி... இப்படி வாரும் எனக் குரல் கேட்டது

அந்த எதிர் வீட்டு மொட்டை மாடியிலே சமையல் கட்டு புகை போக்கி போலிருந்த மேடை ஒத்த இட்த்தின் மீது முண்டாசு கட்டிய பாரதி..


அவன் 10 வருஷம் குடியிருந்த அந்த வீட்டு மொட்டை மாடியில் இப்போது அவனைப் பார்க்க எனக்கு ஆச்சரியமில்லை.. அங்கிருந்தபடியே எங்களை அழைத்தான்..


“இந்தப் பக்கம் வாருமேன்


அந்த வீட்டிலே மொட்டை மாடிக்குப் போகும் வழிக் கதவு சாத்தப்பட்டிருப்பதை கார்த்தி என் காதிலே முணு முணுத்தார்.


“நண்பர் உமது காதிலே எதோ உபதேசம் செய்கிறாரே


“அது ஒன்னுமில்லை.. உங்க வீட்டிலே மொட்டைமாடிக்கு வரும் வழியிலே ஒரு கதவு இருக்கிறதல்லவா அது மூடியிருக்கு அதை சொல்றார்


“அது குறித்து நீர் கவலையுற வேண்டாம். நான் கீழே இறங்கி வருகிறேன். நீங்கள் அங்கே வந்துவிடுங்கள்.


எதிர் கொண்டு எங்களை வரவேற்று உள்ளே அழைத்துப் போனான்..


“இவர் கார்த்தி.. இவர் ருத்ரபிரசாத் என் நண்பர்கள்.. இங்கே அரவிந்தர் வாழ்ந்த வீடு உங்க வீடு இரண்டையும் பார்த்துவிட்டுப் போகலாம் என வந்தோம்

வீட்டின் உள்ளே பார்த்து குரல் கொடுத்தான் முண்டாசு , “செல்லம்மா. நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இன்று இங்கேதான் போஜனம்..”.. சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான்..


“பழக்க தோஷம்என சொல்லிவிட்டு எங்களைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினான்


நீங்க தான் யுக புருஷன். 100 வருஷம் தாண்டியும் எங்களோட பேசிண்டிருக்கேள்.. செல்லம்மாவும் அப்படியா


“நல்ல கேள்விதான். ஆனால் என்னைப் போல கிறுக்கனை சமாளித்தாள் எனும் வகையிலே செல்லம்மா என்னிலும் மேலானவள்.. அது கிடக்கட்டும் அது என்ன நண்பர் கார்த்தி உங்கள் காதிலே எதோ சொல்கிறாரே


“அது ஒன்னுமில்லை.. நீங்க பேனாவும் பேப்பருமாய் அமர்ந்த உடன் கவிதை தங்கு தடையில்லாம வருமானு வியப்பாகக் கேட்கிறார்


“எனக்கென்ன தெரியும்... அதெல்லாம் பராசக்தி வேலை.. அவளிடம் தான் கேட்க வேண்டும் சட்டையிலே எதையோ தொங்கவிட்டிருக்கின்றீர்களே அது என்ன


“அது பாடல் கேட்கும் கருவி.. இதோ நீங்களும் கேட்டுப்பாருங்கள்..எம்பி3 ப்ளேயரை இயக்கி முண்டாசை லேசாக நீக்கிவிட்டு ஸ்பீக்கரை காதிலே பொறுத்தினேன்.. நிற்பதுவே பாட்டைத்தான் வைத்திருந்தேன்


அற்புதம்... அற்புதம்... என் பாடலை ரொம்ப வருடம் கழித்துக் கேட்பதிலே

பரமான்ந்தம்..


எங்கள் மூவரையும் மாறி மாறிப் பார்த்தான்.. நீங்கள் மூவரும் சமீபத்திலே அத்வைதம் குறித்துக் கதைத்தீரல்லவா.. இந்த பாடலில் அத்வைதம் தான் சொல்லிருக்கேன்..


நீங்கள் அரவிந்தர் இல்லத்துக்குப் போய் வாருங்கள்.. நான் கடற்கரை வரை சென்று வருகிறேன்


காண்பதெல்லாம் மறையும் என்றால்.. மறைவதெல்லாம் காண்பமன்றோ


அடுத்த முறை சந்திக்கும் போது கேட்டுக் கொள்ளலாம் என விட்டு விட்டோம்

1 comment:

cheena (சீனா) said...

படித்து விட்டேன் - பிறகு கருத்துச் சொல்கிறேன் நண்பரே !