Sunday 11 September 2011

கத்தும் குயிலோசை


அது எந்த மலை எனத் தெரியவில்லை. அங்கே தனிமையாக இருந்த சமயம். ஒரு வேளை பெங்களூரு லால் பாக் தோட்டத்துள் இருக்கும் சின்னக் குன்று போலவே இருக்கின்றது. அங்கே நான் அமர்ந்த நிகழ்வு கனவு போலவும் நிஜம் போலவும் இருக்கின்றது

ஒற்றைப் பாதையில் முண்டாசு ஏறி வந்து என் பக்கம் அமர்ந்தான்

" என்ன ஏதோ பலமான யோசனை போலிருக்கின்றது.. முகமும் மிகவும் வாட்டமாக இருக்கின்றது"

"அதெல்லாம் ஒன்றுமில்லை; நீங்கள் திடீரென வந்ததை நினைத்துக் கொண்டிருக்கின்றேன்"

"உங்களுக்கு பொய் உரைக்க வாராதே ஏன் கஷ்டப்படுகின்றீர். ஒன்றுமில்லை என நீர் உரைப்பதும் , நான் தீடீரென வந்ததாய் சொல்வதும் பொய். நான் இது வரை உம்மை நாடி வந்ததருணங்களையெல்லாம் நினைவு கூர்ந்து பார்க்கலாம்"

சிரித்துக் கொண்டே, " உங்களிடம் பொய் சொல்லி அதை நிறுவ இயலுமோ; நீர் மனிதராய்ப் பிறந்த பராசக்தியே தான்"

" ஹா ஹா ... சரி உமக்கு ஐயம் வர வழைத்த பாடலைப் பாடும் கேட்போம்"

காணி நிலம் வேண்டும் பராசக்தி

காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் அந்தக்
காணி நிலத்தினிடையே ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் அங்கு
கேணியருகினிலே தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு தென்னைமரம்

பக்கத்திலே வேணும் நல்ல
முத்துச் சுடர்போலே நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே அங்கேயொரு

பத்தினிப் பெண்வேணும் எங்கள்
கூட்டுக் களியினிலே கவிதைகள்
கொண்டுதர வேணும் அந்தக்
காட்டு வெளியினிலே அம்மா! நின்றன்
காவலுற வேணும், – என்றன்
பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.


நல்லதொரு குரல் வளம் தந்தாள் அந்த சக்தி உமக்கு.. எமை மறந்தோம் சில கணம். என்ன உமக்கு ஐயம்"

"குயில் கூவும் என்று தானே இருக்க வேண்டும். எதுகைக்கு இசைந்து வர வேண்டும் என கத்தும் என சமைத்திருக்கின்றீரோ என ஐயம்"

"எதுகைக்குப் பாட்டெழுதும் உங்கள் சினிமாக் கவிஞர் என நினைத்தீர் போலும் என்னை"

" விளக்கம் சொன்னால் சமாதானம் ஆகின்றேன்.. எதிர் கேள்வி ஏன் கேட்கின்றீர்"

வந்ததையா அவனுக்குப் கோபம். குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி பேசினான்

”நீர் இசைத்தீரே அந்தப் பாடல் அதில் இரவு நேரம் என்பதை சொல்லியதைக் கவனிக்கவில்லையோ நீர். மூடரே உமக்குப் புரியவைக்க வேண்டும் என்பதற்காகவே நிலவின் ஒளி முன்பு வர வேண்டும் என சொல்லியிருக்கின்றேன்.

குயிலினம் பகற்பொழுதில் குரல் எழுப்ப்பவதிலும் இரவில் குரல் எழுப்புவதிலும் இருக்கும் வேறுபாடு உமக்கு தெரிந்திருக்கின்றதா என எனக்குத் தெரியவில்லை. பகலில் அதன் குரல் அது இருக்குமிடம் தனது என பறை சாற்றவும் , தன் துணையினை அழைக்கவும் வெளிப்படும். அது குழலோசைக்கு ஒத்து இருப்பதால் கூவும் என சொல்கின்றோம்.. நீர் இரவு என்றாவது குயிலின் குரலைக் கேட்டதுண்டா .. அது பகலில் எழுப்பும் குரல் போலவே இருக்காது , மிகவும் வேறுபட்டு இருக்கும் என தெரியுமா"

ஓரளவு அவனுக்கு கோபம் குறைந்தது தெரிந்தது

" சரி சரி விளக்கியதும் புரிந்தது இதற்கு ஏன் கோபம்.."

"உமது ஒரு ஐயத்துக்கு விளக்கம் சொன்னோம். உமக்கு இன்னொரு சங்கதி கேட்க வேணும்.. நீரே சொல்லுகின்றீரா அல்லது நானே சொல்லவா"

"உங்களிடம் மறைக்க இயலுமா. ஏமாற்றம் ஒன்று.. மனது சஞ்சலம் கொண்டது.. கண்ணனை நினைத்தும் மனம் சலிப்பிலிருந்து மீள்வதாயில்லை"

"கண்ணனை என்னவாய் நினைத்துக் கேட்டீரோ தெரியவில்லை.. கண்ணனைத் தாய் என்று நினையும்.. உமது உள்ளத்தே எரியும் தீயை அணையும்

இன்பமென சில கதைகள்  எனக்
கேற்றமென்றும் வெற்றியென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் கெட்ட‌
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்
என்பருவம் என்றன் விருப்பம் எனும்
இவற்றினுக் கிணங்க வென்னுள மறிந்தே
அன்போடவள் சொல்லி வருவாள் அதில்
அற்புத முண்டாய்ப் பரவச மடைவேன்

கண்ணன் உரைப்பது கதைகள்.. அதனை அவனேயறிவான்..

ஓம் ஓம் ஓம் என்று குரல் தந்து காற்றிலே கலந்தான்

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - முண்டாசுக்கரான் - மீசைக்காரன் கிட்டே இவ்வளவு நெருக்கமாப் பேசறதுகெல்லாம் கொடுத்து வைத்தவர் அய்யா நீங்கள். நல்லாவே இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா