
எனது பணியின் காரணமாக என்னைத் தொடர்பு கொள்பவர்கள் அதிகம் பேர்..அவர்களில் என்னை நினைவு வைத்துக் கொண்டே இருப்பவர்கள் குறைவு.
அவர்களுக்கு அவர்களது Curriculum Vitae க்குத் தகுதியானதொரு வேலையினை அமர்த்திக் கொடுத்தவன் எனும் ரீதியில் சந்தோஷமும், நினைவுகளின் ஏதாவது ஓரத்தில் சில சதவீதங்கள் நன்றியும் இருக்கலாம்.. நானில்லாவிட்டால் இன்னொருத்தர் அந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம்
சில வருஷங்களுக்கு முன்பு ஒருவர் ... Phone ல் கேட்டார்
'என் பெயர் சங்கரன். உங்களை சந்திக்க விழைகின்றேன் அப்பாய்ன்ட்மென்ட் கிடைக்குமா"
சராசரியானதொரு உயரம்.. என்னைப் போன்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு ஒல்லி. சிரித்த முகம்.. சிரிப்பிற்கிடையில் போனால் போகிறதென வார்த்தைகளைச் சேர்த்துக் கொண்ட உரையாடல். முதல் சந்திப்பில் ஒரு கேண்டிடேட்டை அணுகும் மனித வள மேம்பாட்டுத்துறை ஆசாமியாகத் தான் நானிருந்தேன். ஆனால் அவர் அப்படியில்லை.
அவரது அந்த முதல் கரிகுலம்விட்டே இன்றைக்கும் என் மெயில் பாக்ஸில் இருக்கின்றது.. அதன் பிறகு அவருக்கு பணி வாய்ப்புகளுக்கு தகுதியாக அந்த கரிகுலம்விட்டேயினைப் பட்டை தீட்டிக் கொடுத்திருக்கின்றேன். அதெல்லாம் கடந்து என் குடும்பத்தில் ஒருவர் போல மாறினார் சங்கரன்
நான் மாற்று வேலைக்காக ஒரு முறை கேண்டிடேடாக நேர் காணலுக்கு சென்ற் போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, " இத்தனை வருஷம் .. நீங்கள் இந்தத் துறையில் இருக்கின்றீர்கள்.. நீங்கள் என்ன காரியத்தினை மிகவும் பெருமையாக நினைக்கின்றீர்கள்"
"தான் வேலை மாற்றத்தினை விரும்புவதாகவும், நல்ல வாய்ப்பு வந்தால் அதனைத் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டு ஒருவர் என்னிடம் கேண்டிடேட்டாக வந்தார்.. ஆனால் அவர் இன்றைக்கு மிக நெருங்கிய நண்பராக , ஏன் ஒரு சகோதரர் போல ஆகிவிட்டார்.. இதனை எனது பழகும் தன்மைக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்"
"இதென்னங்க பிரமாதம் இது எல்லாருக்கும் ஃப்ரென்ட் கிடைக்கின்ற மாதிரி தானே"
"எனது தந்தை 2008 ல் நவம்பர் 3 ம் தேடி அதிகாலை 2.30 மணிக்கு பேச்சு மூச்சு இல்லாமல் நினைவிழந்த போது.. நான் முதலில் அவரைத் தான் துணைக்கு அழைத்தேன்.. எனது வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் தூரம் அதிகம்.. நேரமோ அகால நேரம்.. ஆனால் அவர் மனைவியுடன் என் இல்லத்துக்கு வரும் போது மணி 3.30.. ஆஸ்பத்திரிக்கு செல்வது, அங்கே அதன் அவசரங்களைச் சமாளிப்பது இதை அனைத்தினையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்.. அவர் மனைவி எங்கள் வீட்டில் இருப்பவர்கள் யாரையும் சமைக்க விடாமல் தானே எல்லாவற்றையும் செய்து கொடுத்தார்.. சங்கரன் அப்போது பன்னாட்டு வங்கி ஒன்றில் மிகவும் முதுநிலைப் பொறுப்பில் இருந்தார்.. எனக்காக 10 நாளும் லீவு போட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கும் இன்ன பிற இடங்களுக்கும் அலைந்தார். எனது தந்தையின் மரணத்தின் போதும் அவர் தான் எல்லாவற்றிற்கும் அலைந்தார்; ஆஸ்பத்திரியின் ஆரம்ப நாளை நினைத்தால் என் கண்களில் நன்றிப் பெருக்கில் நீர் தளும்ப நிற்கிறது’
என்னைக் காட்டிலும் என்னை இன்டெர்வ்யூ செய்தவருக்கு சங்கரனை மிகவும் பிடித்துப் போனது போலும்.. அந்த இன்டெர்வ்யூவில் நான் தேர்வாகவில்லை என்பது தனி சங்கதி
ஆனால் என்னை இன்டெர்வ்யூ செய்தவர் என்னை அடிக்கடி தொடர்பு கொண்டே இருந்தார்..
இரண்டு நாட்களுக்கு முன்னால் என்னை போனில் அழைத்தார்.
"மௌளீ எப்படி இருக்கீங்க.. மிஸ்டர் சங்கரன் எப்படி இருக்கிறார்"
"எப்போதும் போல மாமனிதனாக இருக்கிறார் சார்"
"நீங்க சொல்வதையெல்லாம் வைத்துப் பார்த்தால் I think you owe him a lot and you could not repay him”
"ஆமாம் சார்.. என்னால் திருப்பித் தர இயலவே இயலாது.. சின்ன ஆசையுண்டு.. அவரைப் பத்தி உங்க கிட்ட சொன்ன மாதிரி இன்னும் நிறைய பேரிடம் சொல்லனும்னு"
அந்த ஆசையினை இன்றைக்கு ஓரளவு பூர்த்தி செய்து கொள்கிறேன்
நட்பை நட்பு கொண்டே சொல்லிக் கொடுத்த சங்கரன் எனும் மாமனிதன்