தினசரி காலையில் டிபன் சாப்பிடும் போது, டிவி ஆன் செய்து கலைஞர் டி வி சானலை வைத்து விடுவாள் என் மனைவி. அது ஒன்று சுப.வீ.பா நிகழ்ச்சியாக இருக்கும் அல்லது தேனும்பாலும் என்ற சினிமா பாடல் நிகழ்ச்சியாக் இருக்கும்.. இன்றைக்கு தே.பா
கமல், ரஜினி படங்களில் இருந்து கலர் கலராக பாடல்கள்.. பாடல்களில் ஒரு பொது அம்சங்கள் இருந்தன.. தரையெங்கும் கண்ணாடி.. அவற்றின் பின்னாலே பச்சை , சிவப்பு, மஞ்சள் என விளக்குகள்.. இப்படி அப்படி எரிந்து கொண்டிருந்தன.. லோகத்தில் இருக்கும் அனைத்து ஜிகினாக்களையும் சேகரித்துக் கொண்டு வந்து நடன மங்கைகளின் உடைகளில் பொருத்தி ஆடவிட்டிருந்தார்கள்.. அந்த மங்கைகளில் சிலருக்கு மட்டும் க்ளோசப் பாக்கியம் கிடைத்திருந்தது.. சிலருக்கு முகம் க்ளோசப்பில் காட்டப்படவில்லையென்றாலும், குனிந்து நடனமிடுவது போல் காட்சி அமைத்து, அவர்களே சொற்ப துணியில் ரவிக்கை போன்றதான ஒன்றினைக் கொண்டுமறைத்து வைத்திருக்கும், மேலழகினை காமிராவுக்கு சில மில்லி மீட்டர்கள் சமீபத்தில் கொண்டு வந்து விலக்கிப் போனார்கள்
நாயகர்களாகப்பட்ட ரஜினி / கமல் உடன் ஆடும் இரண்டு நடன மாதுக்கள்.. அவர்களின் காஸ்ட்யூமில் வித்தியாசம் இருந்தது.. இன்ன பிற நடன மாதுக்கள் அணிந்திருக்கும் துணியின் மொத்தப் பரப்பில் சுமார் 70 சதவீதம் கழிவு செய்து இவர்கள் துணி அணிந்திருந்தார்கள்.. இவர்களுக்கு இரண்டு விதமான க்ளோசப் பாக்கியங்களும் அனுக்கிரஹம் ஆகியிருந்தன.
ஏதாவது ஒரு காஸ்ட்யூம் மாறும் சந்தர்ப்பத்தில் ரஜினி / கமல் ப்ரௌன் கலரில் தோலினாலான வஸ்திரம் தரித்து அபத்தமாக ஆடினார்கள்.. பின்னனிக் குரல் மலேசியா வாசுதேவன்,, இல்லெயன்றால் கட்டைக் குரலில் எஸ் பி பாலசுப்ரமண்யன்..
இப்படியாகப் போய்விடுமா நாள்.. இல்லை இல்லை
உங்களைப் பார்க்க விரும்புகிறேன்.. என்பதான் அந்த செலிபிரிட்டியின் அழைப்பினை ஏற்று இன்றைக்கு சென்று பார்த்து வரலாம் என நினைத்து அவருக்குப் ஃபோன் செய்தேன்.. இடம் தெரிந்து கொண்டேன்
கே. கே நகர் வழியாக விருகம்பாக்கம் செல்லும் மார்க்கத்தில் எல்லா ரோடும் குறைந்த பட்சம் 80 அடி விஸ்தீரணம் இருக்கின்றது.. அதிலே சினிமாவுக்கு அவுட்டோர் ஷூட்டிங்கிற்கு உபயோகம் ஆகும் வாகனங்கள்.. சாஃப்ட்வேர் கம்பெனியில் ஊழியம் செய்பவர்களை காலையில் கவர்ந்து சென்று அகால நேரத்தில் இறக்கிவிடும் கம்பெனிப் பேருந்துகள்.. வடியாமல் இருக்கும் மழைத் தண்ணீர்.. அதற்குள் நின்று கொண்டிருக்கும் ஆட்டோ.. ஹெல்மெட் வியாபாரிகள்.. திராவிட / காங்கிரஸ் கட்சிகளில் தலைவர்கள் நினைவாக எழுப்பப்பட்டுள்ள் பஸ் பயணியர் நிழற்குடை.. ரோடு போட்டுவிடுவார்கள் என்பதான அபத்த நம்பிக்கையூட்டும் தார் கலக்கும் எந்திர வாகனங்கள்.. அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்பதாக ஜெயலலிதாவுக்கு வயசாகி விட்டதை நினைவுபடுத்தும் பளபள பேனர்கள்.. என்பதான பல ரூப ஆக்கிரமிப்புகள் போக என்பது அடியில் எட்டு அடிதான் வாகன போக்குவரத்துக்கு மிச்சமிருக்கின்றது..
அதிலே மிகுந்த கனத்த ஆகிருதி கொண்ட என்னைப் போன்ற ஆசாமிகளைச் சுமந்து கொண்டு 90 சி.சி ஸ்கூட்டர் சுலபமாகப் போய் வரலாம்..
அந்த தெருவின் மொத்தமான சொற்ப அகலத்தில் 60 சதவீதம் எதற்காகவோ முந்தின இரவு தோண்டப்பட்டிருந்தது.. அதனை இன்றைக்கு காலையிலே அப்டேட் செய்திருந்த கூகிள் மேப்ஸை வியந்து கொண்டேன்..
இரண்டாவது மாடியில் வீடு.. காலிங் பெல் அடித்தேன்..
வாங்க மௌளீ என்று சொல்லி உள்ளே அழைத்துப் போனார்.. பாரதி மணி சார்
சுமார் இரண்டு மணி நேரம்.. பேசிக் கொண்டிருந்தோம்..
பொதுவில் எனக்கு என்னிலும் வய்தானவர்கள் தான் நட்பு வட்டத்தில் ஜாஸ்தி.. ஆனால் அவர்களில் யாரும் என் தந்தை வயதுக்கு இருந்ததில்லை. எனக்கு முந்தைய தலைமுறையின் ஒருவரால் என்னை இப்படி வசீகரமாகப் பேச்சினைக் கவனிக்க வைக்க இயலும் என்பதை இத்தனை சமீபத்தில் அமர்ந்து கேட்பது என்பது அபூர்வமானதொரு சந்தர்ப்பம்
அப்போதைய சி. என் அண்ணாதுரை எம்.பி ஆக இருந்த போது, "மணி ஒரு நல்ல ஐயர் ஹோட்டலாக அழைத்துப் போங்க. காஃபி சாப்பிடணும்'னு சொன்னாராம்
இவரும் அவரை கரோல்பாக்கில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு சொன்னாராம், "இந்த ஹோட்டல் அய்யர் ஹோட்டல்.. ஆனால் அவர் நல்ல ஐயரா இல்லையானு எனக்குத் தெரியாது"னு சொன்னாராம்
இப்படி சொல்லும் போது அவரே தயாரித்த காஃபியினை எனக்கு தந்துவிட்டு சொன்னார்.
அவரது டெல்லி வாழ்க்கை, நாடகங்கள், அவரது பெர்சனல் வாழ்க்கை, சமைக்கும் திறமை,, மிகக் குறிப்பாக ஆவக்காய் ஊறுகாய், பைப்பில் திணிக்கப்படும் பல நாட்டு புகையிலை, அவரது மாமனார் பெரியவர் கா.நா.சு அவர்கள் , இன்னும் பல புத்தகங்கள், நாஞ்சில் நாடன் வந்து தங்கியிருந்தது என சஞ்சரித்து இன்னும் மிச்சமிருக்கின்றது என சொன்னாலும்..
நான் கிளம்பலாம் என யத்தனித்தேன்..
தனது ம்யூசிக் கலெக் ஷனில் இருந்து மதுரை மணி அய்யரை விட்டு என்னை நகரவிடாமல் செய்தார்.
நீளமானதொரு ஆலாபனை இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே இன்ன ராகம் என கேட்பவ அடையாளம் காணத்தக்க்தாய்ப் பாடும் அபார மேதமை மதுரை மணி அய்யருக்கு உண்டு
ஸ்ரீ ரஞ்சனி
ஸொக ஸுகா ம்ருத ங்க தானமு ஜத கூர்ச்சி நிநு
ஜொக்க ஜேயு தீ ருடெ வ்வோடோ
நிக மசிரோர்த் த்த மு கல் நி க
நிஜவாகுலதோ ஸ்வரசு த முதோ
யதி விச்ரம ஸத் ப க்தி வி
ரதித் ராஷாரஸ நவரஸ
யுத க்ருதிசே ப ஜியிஞ்சே
யுக்தி த்யாகராஜூநி தரமா ஸ்ரீ ராமா
வேதங்களின் முடிவாகிய உபநிஷதங்களின் பொருள் நிறைந்து உண்மையான வாக்குடன் ஸ்வரசுத்தத்துடன் சொகுசாக ம்ருந்தங்க தாளம் சேர்த்து உன்னை மயங்கச் செய்யும் தீரன் எவனோ
எதுகை , விச்ரமம் ( ஓய்வு), உத்தம பக்தி, பத வாக்கியங்களின் முடிவில் விச்ராந்தி, திராட்சையின் ருசி, நவரசங்கள் இவற்றுடன் கூடிய க்ருதிகளால் உன்னை பஜனை செய்யும் சாமர்த்தியம் இந்த தியாகராசனுக்கு சாத்தியமா ராமா
எதிரே பேச்சுக் கேட்டுக் கொண்டு இருப்பவனுக்கு இப்படி ஒரு நவரசம் தர பாரதி மணி அவர்களுக்கு ரொம்பவே சாத்தியம்
இன்னும் ஜாஸ்தி கேட்டுக் கொண்டிருக்கவும்.. அவர் தயாரிப்பில் ஆவக்காய் ஊறுகாய் ( சார் 3 பாட்டிலாவது .. ப்ளீஸ்) வாங்கவும் மறுபடியும் போக வேணும்
அவர் தான் எழுதிய பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகத்தை கையொப்பமிட்டுத் தந்தார்..
விடைபெற்று வீட்டுக்கு வந்து ஒரு க்ளான்ஸ் படித்தேன்.. அவர் எழுத வேண்டியதில் மிகக் கொஞ்சம் தான் எழுதியிருக்கின்றார் எனத் தோன்றுகிறது
அடுத்த வால்யூம்கள் எப்போது பாரதி மணி சார்..
6 comments:
ஆவக்காய் ஊறுகாய்க்காகவும், மதுரை மணி அய்யர் பாட்டுக்காகவும், இந்த மார்கழியில், பாரதிமணி அவர்களை சந்திக்கலாம் என்று இருக்கின்றேன்.
மூச்சு விடாமல் படிக்க வைக்கிறீர் !!!
அருமையான பகிர்வு... நன்றி
சந்திரமெளளீஸ்வரனும் இப்போதெல்லாம் நிறையா பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டார்! வேறென்ன சொல்ல?
அன்பின் மௌளி - நட்பு வட்டத்தின் சிறப்பு இது மாதிரி சந்திப்புகளினால் மேலும் சிறப்புறும். ஒருவரைச் சந்தித்து அவருடன் அள்வளாவி ( சென்றதென்னவோ ஆவக்காய் ஊருகாய்க்கு ) வந்த நிகழ்வினை இவ்வளவு அழகாக நேர் முக வர்ணனை செய்ய மௌளியால் மட்டும் தான் இயலும். ஆமாம் அவரின் மறு மொழி பார்த்தீர்களா ? அடுத்த தடவை ஆவக்காய் கிடையாதாம்......
நல்வாழ்த்துகள் மௌளி - நட்புடன் சீனா
quite interesting
Post a Comment