முந்தைய தலைமுறை பாரதி மணி அவர்களைச் சந்தித்த பின் வீடு வந்து, மதிய சாப்பாடு, வார விடுமுறை நாள் தூக்கம் அதன் மத்தியில் கரண்ட் கட் , எலெக்ட்ரிசிட்டி போர்ட்டை மனதாரா வாழ்த்திக் கொண்டு.. கடந்து சென்ற மதிய நேரம்..
எனது தலைமுறைக்கு அடுத்த தலைமுறையில் எங்கள் குடும்பத்தில் கலியாணங்கள் வரிசையாக நடக்கத் தொடங்கியுள்ளன.. அதில் ஒன்றின் ரிசப்ஷனுக்கு செல்வதற்காக கிளம்பினேன்.
மௌண்ட் ரோடில் நிறைய வரவேற்பு பளபளப்புகள்.. கனிமொழி ஜாமீனில் வந்து சென்னை வருகிறார் என்பதை சென்னையில் எல்லோருக்கும் தெரிவிக்கும் விசுவாச ஊழியத்தினை இரண்டு பேர் குத்தகை எடுத்திருக்கின்றார்கள் போலும்.. அவர்கள் பெயர் தாங்கி.. வித விதமான காப்ஷனுடன்..
அந்த பேனர்களைப் பார்ப்பவர்களில் பலருக்கு என்ன மாதிரி உணர்ச்சிகள் உருவாகும் என்பது தெரிந்திருக்கும்.. இதனையும் தாண்டி இது மாதிரி பேனர்கள் வைப்பதன் சைக்காலஜி என்னவென்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே.. சாலை கடக்கும் பாதசாரிக் கூட்டம் என்னைக் கவனிக்க வைத்தது
இந்த பெடஸ்ட்ரியன்ஸ் அந்த அந்த இருப்பிடங்களின் கலாச்சார அடையாளம் என ஒரு சித்தாந்தம் வைத்திருக்கின்றேன்.. அந்தக் கூட்டத்தைக் கவனிப்போம்.
பலர் செல்போனில் பேசியபடியே கடக்கின்றனர். பொதுவில் எல்லோருக்கும் அடுத்து சிவப்பு விழுவதற்குள் ரோட்டின் அந்த் மூலையினை அடைந்து விட முடியும் என்கிறதான் தீர்மானம் அவர்கள் நடையின் நிதானத்தில் தெரிகிறது; எல்லா சிக்னலிலும் கடந்து செல்பவர்களில் இரண்டு பேராவது கர்ப்ப ஸ்திரீக்களாக இருக்கின்றனர். அப்படியானவர்கள் கூட நடந்து வருபவர்களிடம் பேசுவது சிக்னலுக்கு காத்திருக்கும் போது முன்வரிசை கிடைக்கும் போதெல்லாம் கேட்கிறது.. அந்தப் பேச்சுகளில் அவர்களின் மத்திய தர வாழ்க்கை இருக்கின்றது.. அவர்கள் அரசியல் பளபள பேனர்களை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதில்லை
அந்தப் பெண்களின் உலகத்தில் சம்பந்தப்பட்ட எல்லா அம்சங்களும் உடன் வேலை செய்யும் சகாக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.. இந்தப் பகிர்தலின் காரணமாக உசுப்பேத்துதல் , ஆறுதல் செய்வது என இரண்டும் கலந்தே இருக்கின்றன.. இந்த மாதிரியான வாழ்க்கைச் சூழல் கொண்ட டிவி நாடகங்கள் சக்கை போடு போடுகின்றன.. இந்த நாடகங்களின் புரவலர்களாக சோப்பு, ஷாம்பு, பைனாஸ், கூல் டிரிங்க்ஸ் ... இத்தியாதி இத்தியாதி கம்பெனிகள் இருக்கின்றன
ஆறு மணிக்கு மேல் சிக்னல் முன் வரிசையில் ஸ்கூல் யூனிபார்ம், மிகவும் லகுவான எடை கொண்ட சைக்கிளில் விழப்போகும் பச்சைக்கு காத்திருந்து , அந்தக் காத்திருப்பில் பக்கத்து சைக்கிள் சகாவிடம் சச்சின் டென்டுல்கர் , மஹேந்திர சிங்க் தோனி எனப் பேசும் பசங்கள் ட்யூஷன் முடிந்து திரும்புகிறார்கள்
கோட்டூர்புரம் ரிவர் வ்யூ ரோடில் இருக்கிறது அந்த கலியாண மண்டபம்.. நான் போவதற்குள் கையில் பளபள் பேப்பர் சுற்றி சின்னதும் பெரிசுமாய் டப்பாக்களை வைத்துக் கொண்டு, கிஃப்ட் தந்துவிட க்யூ கட்டிக் கொண்டிருந்தார்கள்
நடப்பது எனது பெரியப்பா மகளின் மகனின் திருமண ரிசப்ஷன் என்கிறதான் ப்ரத்யேக சலுகை எடுத்துக் கொண்டு மேடையேறி, சுள் சுள் என அவர்கள் போட்டோ வீடியோ எடுக்க திரும்பி வந்து இரண்டாம் வரிசை நாற்காலியில் அமர்ந்தேன்.
எனது சொந்தக்காரர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு இரண்டு சங்கதிகள் நன்றாகத் தெரிந்திருக்கின்றது
"ஏன்டாப்பா நீ என்னமோ ப்ளாக் எழுதிண்டு இருக்கியாமே"
"சுகர் கண்ட்ரோல்ல இருக்கோல்லியோ"
சில சொந்தங்கள் எத்தனை வருஷம் கழித்துப் பார்த்தாலும் ஒரே மாதிரி உடல்வாகு கொண்ட்வர்களாக இருந்தார்கள்
சிலருக்கு அந்த லாவகம் கை கூடவில்லை என்பது உத்திரவாதமாகத் தெரிந்தது.. அவர்கள் நடந்து வரும்போது சுவற்றுக்கும், சைடில் முதல் நாற்காலி வரிசைக்கும், இடையிலான அகலம் போதவில்லை.. நாற்காலிகளை வரிசையாக நகர்த்திக் கொண்டே வந்து,
"நீ மதராசிலே தான் இருக்கியான்னே சந்தேகமாக இருக்கு.. எங்காத்துக்கல்லாம் வரதேயில்லை " என புகார் படிக்கின்றார்கள்.. போனால் போகிறதென அவர்கள் வசிக்கும் பிராந்தியத்திற்கு சென்னை பின்கோடு வரிசையில் இடம் தந்திருக்கின்றார்கள் எனச் சொன்னால்
"சோழிங்க நல்லூர் என்ன அத்தனை தூரமா” என்றும் கேட்கின்றார்கள்
"ஏம்பா மொபைல் நம்பர் மாத்திட்டியா"
"இல்லையே மாமா.. நான் இன்னும் ரென்டு ஜென்மாவிற்கு ஏர்டெல் கம்பெனியாருடன் ஒப்பந்தம் போட்டிருக்கேன்.. ஆமா என்னோடதுன்னு நீங்க என்ன நம்பர் வச்சிருக்கீங்க"
இந்தக் கேள்விக்கு பதில் தேடிப் போன மாமா நான் மண்டபத்தை விட்டு கிளம்பும் வரை காணவில்லை
ஏகதேசம் போன வருஷத்தில் இது போன்றதொரு முகூர்த்த சீசனில் கலியாணம் செய்து கொண்டவர்கள், புதுசாக பிறந்த நாட்கள் / சில மாசங்கள் வயதே உடைய தங்கள் புதுகுழந்தைகளை வீட்டில் பெரியவர்களிடம் விட்டுவிட்டு வந்திருக்கின்றார்கள் . ஆனால் நீலக் கலரில் டர்க்கி டவலில் சுற்றி, பொக்கை வாய் சிரிப்பை தங்கள் ப்ளாக்பெர்ரியில் பத்திரப்படுத்தி, வயதான பெரியவர்களிடம் காட்டி சந்தோஷப்படுகிறார்கள் & சந்தோஷப்படுத்துகிறார்கள்
எழுபது வயது கடந்து, இது போன்றதான் சந்தர்ப்பங்களில் கலந்து கொள்பவர்களிடம் இருப்பதான் பொதுத் தன்மையினை உணரமுடிகின்றது.. நேரடி, ஒன்று விட்ட என்பதான் மிகப்பெரிய பேரக்குழந்தைகளின் சாம்ராஜ்யத்தில் எல்லா இளவரசர்களையும் இளவரசிகளையும் பார்த்துப் பேசி அவர்கள் கைபிடித்து ஆசிர்வதிக்கின்றார்கள்
கனகாரியமாக என்னிடம் மெயில் ஐடி வாங்கும் சொந்தங்கள், அதைத் தொலைத்துவிட்டு, அடுத்த ரிசப்ஷனுக்கு அதே கேள்வியை பத்திரமாக ரிசர்வ் செய்து வைத்திருப்பார்கள்
நின்று கொண்டே சாப்பிடும் இந்த பஃபே நாகரீகம் எனக்கு ஒத்து வருவதில்லை.. அங்கே இருக்கும் சொற்ப நாற்காலிகளுக்கும் சீனியர் சிட்டிசன் எண்ணிக்கைக்கும் சம்பந்தமேயில்லை
முகலாய கிட்சன்அடையாளங்கள், இது போன்ற விருந்துகளில் நுழைந்து விட்டதை கவனிக்க முடிகின்றது
ருமாலி ரொட்டி...
இந்த ரொட்டிக்கும் டிஷ்யூ பேப்பருக்கும் அதிக வித்தியாசம் தெரிவதில்லை..
அநியாயத்துக்கு மெல்லிசாக இருக்கும் இந்த ஐட்டத்தினை மட்டும் சாப்பிட்டு பசியாறி விட்டதாக ஒரு மாமி சொல்லிக் கொண்டிருந்தார்
வீட்டுக்கு வந்த உடன் மனைவியிடம் கேட்டேன்.. அடுத்த ரிசப்ஷன் என்னிக்கு
2 comments:
அன்பின் மௌளி
ஒரு திருமண வரவேற்பு விருந்தில் கலந்து கொண்ட பொழுது நடந்த நிகழ்வுகளை அப்படியே படம் படித்து - தங்களுக்கே உரிய நடையில் பதிவாக ஆக்கியமை நன்று. மிக மிக இரசித்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
sujathaaish..:)
Post a Comment