Saturday, 5 July 2008

வைகுண்ட பிரவேசம்-1(மீண்டும் சுஜாதா)


ஒரு நீளமான டிரெயின் மாதிரி வாகனத்தில் சுஜாதா தனது கணேஷ், வசந்த் சகிதம் பிரயாணம். மேக மண்டலங்களில் அசாத்திய வேகத்தில் அந்த வாகனம் பிரயாணிக்கிறது...

சற்று நேரத்தில் ஒரு உயர்ந்த கட்டிடத்தின் வாசலில் அந்த வண்டி நிற்கிறது.. ரயில்வே ஸ்டேஷன் போலவே பலர் இறங்குகின்றனர். பிளாட்பாரம் இல்லை.. எல்லாம் அப்படியே அந்தரத்தில் நிற்கின்றனர்.

“பாஸ் இது என்ன இடம்.. ராத்திரி பத்தரை மணிவாக்கில சுஜாதா சார் கூப்பிட்டாரேனு டிவில பாலமுரளிகிருஷ்ணா கச்சேரியைக் கூட தியாகம் பண்ணிட்டு வந்தேன்.. மேக மேகமா வந்ததே”

“வசந்த் நீ ராத்திரி என்ன மாதிரி டிவி ப்ரோகிராம் பார்ப்பேனு எல்லாருக்கும் தெரியும்.. பேசாம வா”

“எல்லாம் என் நேரம் பாஸ். சார் எழுதி எழுதி வசந்த ஒரு சோக்காளியாவே தெரியறான் இல்ல.. இது என்ன இடம்.. எதுவும் புது கேஸ் எடுத்திண்டிருக்கேளா.. சொன்னா என்ன கொறஞ்சா போய்டுவேள்”

“ஏம்பா வசந்த் இன்னும் புரியலையா. எனக்கு பூமில ஆயுசு முடிஞ்சது.. இது மேலோகம்.. என்னால படைக்கப்பட்ட நீங்க ரெண்டு பேரும் கூட வந்திருக்கேள்.. கணேஷைக் கூப்பிட போகும் போது அவன்கிட்ட விபரம் சொல்லிட்டேன்.. உன் கிட்ட சொல்லாம கூட்டிண்டு வந்தது தப்புதான்”

“சரிதான்.. கதையில தான் பாஸ் எல்லாத்தியும் முன்னயே தெரிஞ்சிண்டு பலியாடு மாதிரி சில எடத்துக்கு என்ன அனுப்புவார்.. அதையே மெயிண்டய்ன் பண்றாரு”

வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் சகிதமாக அங்கே ஒருவன் வந்தான்..

‘எல்லோரும் வரிசையில் நில்லுங்கள்.. இது தான் மேலுலக முன்றில்.. இன்னும் சற்று நேரத்தில் கதவுகள் திறக்கப்படும்”

“இந்தோ பார்ப்பா இந்த சாருக்குதான் தமிழ் ப்ரீத்தி ஜாஸ்தி.. ஒரு நாலு வார்த்தை கொடுத்து இதில எது தமிழ் வார்த்தை இல்லை இப்படியெல்லாம் கேள்வி போடுவார்.. முன்றில் னா என்ன”

“நான் சொல்றேன் வசந்த்.. முன்றில் னா கிட்டத்தட்ட ரிசப்ஷன் மாதிரி..

கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக்,
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்

அப்படினு புறநானுறில் வருது”


“அடடா இங்கே வந்தும் கற்றதும் ... பெற்றதும் மாதிரி ஆரம்பிச்சுட்டார்”

”வசந்த் ... என்ன இது சார்கிட்டே போய்... பேசாமா வா”

“ ஓகே பாஸ்”

சற்று நேரத்தில் அந்த மாபெரும் கதவு கொஞ்சம் கூட சப்தமில்லாமல் மெதுவாகத் திறந்தது...

உள்ளே......

1 comment:

cheena (சீனா) said...

படிப்பது சுஜாதாவின் கதையா மௌளியின் கதையா - தெரியவில்லை - சுஜாதாவின் தாக்கம் நிறையவே இருக்கிறது - தவிர்க்க முடியாதது.

கனேஷையும் வசந்தினையும் சுஜாதா விருப்பப்படியே படைத்திருப்பது நன்று.

தொடர்க நல்வாழ்த்துகள்