Sunday 18 December 2011

திருப்பாவைத் திறன்

இதனை மார்கழி தொடக்க நாளில் எழுதிட வேண்டும் என்றே குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன். நேற்றைக்கு முதலியார் குப்பம் படகு சவாரி, ஆலம்பாறைக் கோட்டை, மாமல்லபுரம் என குடும்பத்துடன் சென்றபடியால் ஒரு நாள் தாமதம்.

இறை நம்பிக்கை இல்லாதவர்களிடம் பேச்சுக் கொடுப்பதில் அனுகூலங்களும் இருக்கத் தான் செய்கின்றன‌

சில வருடங்களுக்கு முன்பு இப்படியாக ஒருவரிடம் உரையாடும் சந்தர்ப்பத்தில், பேச்சு பெரியாழ்வார் குறித்தும், அப்படியே ஆண்டாள் குறித்தும் திசை கொண்டது.

ஆண்டாளின் "மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்" எனும் வைராக்கியத்தை அவர்," ஏங்க நான் கடவுளைத் தான் கலியாணம் செய்து கொள்வேன் என்பதாக ஒரு பொண்ணு சொன்னா, அவங்க அப்பா அதை நினைத்து பெருமைப்படுவாரா.. நானாயிருந்தா டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போவேன்" என்று சொல்லிவிட்டு, என்னை மூலையில் மடக்கிக் கொண்டுபோய் நிறுத்திவிட்டு , அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர முடியாது அஸ்திரத்தால் கட்டி வைத்து விட்ட சந்தோஷத்துடன் சிரித்தார்.

அவரிடம் இனிமேல் இந்த சப்ஜெக்டில் பேசும் போது, அவர் என்னைக் கட்டிவைத்த அஸ்திரங்களைச் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட பின்பு தான் பேசணும் என நினைத்துக் கொண்டேன்

வருடங்கள் சில கடந்தன, நான் அந்த சப்ஜெக்டை மறக்காமல் அஸ்திரங்களைக் கட்டுடைக்க அவ்வப்போது தேடிப் படித்துக் கொண்டிருந்தேன்

எனது முயற்சியின் போதாமை காரணமாக் என்னால், ஆண்டாளின் பாசுரங்களில் Bridal Mysticism, Austerity , Apocryphal என்ற அளவிலேயே சுற்றிக் கொண்டிருந்தேன்.

பெருமாளுக்கு, என்மீது விஷேஷ ப்ரீதி இருக்கின்றதென நினைக்கின்றேன்.

வெள்ளிக் கிழமை 9 டிசம்பர் 2011, ஆபிசில் வழக்கமான வேலைகளில் இருந்தேன்.. பகல் சுமார் 2.30 மணியிருக்கும்.. போனில் என்னை இறையன்பு அவர்கள் அழைத்தார்.

"மௌளீ.. கடைசி நேரத்தில் அழைக்கின்றேன் என தவறாக நினைக்க வேண்டாம்.. நாளை மாலை தி. நகர், பி.டி தியாகராசர் மன்ற அரங்கில் , எனது புத்தகங்கள் வெளியீட்டு விழா இருக்கின்றது.. நீங்க அவசியம் கலந்து கொள்ள வேண்டும். விழா 5.30 மணிக்கு.. உங்களை 5.00 மணிக்கே எதிர்பார்க்கின்றேன்"

இதே வருஷம் மே மாதம், நான் காஞ்சிபுரத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். காமாட்சி கோவிலில் அன்றைக்கு கூட்டம் அதிகம் என்பதாலும், அதில் முண்டிச் செல்வதில் எனக்கு இருக்கும் சாத்தியங்களை ஆராய்ந்து பார்த்துவிட்டு , குடும்பத்தினரை மட்டும் உள்ளே போகச் சொல்லி விட்டு, நான் காரிலேயே இருந்த போது இறையன்பு அவர்கள் என்னை அழைத்தார்.

அவர் முதன் முதலில் என்னிடம் பேசின சந்தர்ப்பம். என் பதிவுகளை அவர் படிக்கின்றார் என்பதில் தொடங்கி, அவற்றில் அவர் விரும்பிப் படித்த சிலவற்றை குறிப்பிட்டு பேசினார். அதன் பின்பு பல முறை என்னிடம் பேசி எனது பதிவுகள் குறித்துப் பேசி எனக்கு ஊக்கம் தந்திருக்கின்றார்.

10 டிசம்பர் 2011 என்னைக் கட்டி வைத்திருந்த அஸ்திரங்கள் செயலிழந்த நாள்.

புத்தக வெளியீட்டு விழாவுக்கு 4.30 மணிக்கே சென்று விட்டேன்.. வாசலில் நின்று எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.. நான் தான் இன்னார் என்று சொன்னபோது மிகவும் சந்தோஷமாக வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்.

அவரது புத்தகங்கள் காட்சிக்கு வைத்திருந்தார்கள்

நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் , திருப்பாவைத் திறன், Ancient Yet Modern ; Management Concepts in Thirukkural என்ற புத்தகங்களை வாங்கி, அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டு அரங்கத்துள் சென்று அமர்ந்தேன்..

விழா தொடங்க இன்னும் நேரமிருக்கின்றது.. கையிலோ புத்தகங்கள்

மாபெரும் இயற்கையாக கண்ணனைக் கண்டாள் ஆண்டாள் என்பதை, எப்போதும் போல தகவல்கள், சுவாரசியங்கள், புதிய சிந்தனைத் தூண்டல் என்பதாக பல தளங்களில் பயணித்து இறையன்பு சொல்லி, என்னை பலவருடங்களாக கட்டியிருந்த அஸ்திரத்தின் கட்டவிழ்த்தார்
காலை உணவை ஏன் சாப்பிடுகின்றீர்கள் என்ற வியட்நாமின் புத்த துறவி Thích Nhat Hạnh குழந்தைகளைக் கேட்ட கேள்வி போல, நண்பர் ஒருவர் வால்டேருடன் நடத்திய உரையாடல் போல ... நான் சொல்லிக் கொண்டே போகலாம்.

மார்கழியின் மூன்றாம் நாள் (நாளைக்குத் தான் இந்த வருஷத்து மார்கழியின் மூன்றாவது நாள்) பாடும் கோதையின் ,

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!

எனும் பாசுரத்தினை அனுபவிக்கும் இறையன்பு அவர்கள் ஆண்டாளின் பாடல், தனியொரு மனிதனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் அவாவில் பிறக்கவில்லை என்பதை சொல்லி,, அதனையே புத்தகம் முழுவதும் சொல்லியிருக்கின்றார்

பக்தி என்பது லீவு நாளில் கார் எடுத்துக் கொண்டு கோவிலுக்குப் போகின்றதென்பதான ஒரு பயணத்தினைக் குறிப்பது அல்ல..

எம் எஸ் சுப்புலஷ்மி அவர்களின் பஜ கோவிந்தம் இசைக் தட்டில் முகவுரையில் , ராஜாஜி சொல்வார், When Knowledge become fully matured it becomes Bakthi.. இதனை மிகவும் எளிமையாக புரிய வைக்கின்றது திருப்பாவைத் திறன்

5 comments:

ஆனந்தன் said...

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!// பாசுரம் வேண்டுவது எல்லோருக்குமாகத் தான் என்பது தெளிவு. அருமை அண்ணா.நன்றி!

Shobha said...

அருமை. ஆண்டாள் தமிழை ஆண்டாள் , நம் எல்லோரையும் இப்பவும் ஆண்டாள்

Nanda Nachimuthu said...

sir, i expected some posts from u for this margazhi season...very nice citation...nanda nachimuthu

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - உண்மை உண்மை மௌளி - இத்றையன்பின் புத்தகங்கள் சிலவற்றைத் தான் படித்திருக்கிறேன் - இன்னும் படிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன. சந்தர்ப்பம் எப்பொழுது அமையுமோ - தெரிய வில்லை. நல்வாழ்த்துகள் மௌளி - நட்புடன் சீனா

Anonymous said...

வழக்கம் போல கருத்து செறிவை சுவாரஸ்யத்துடன் கோர்த்து சொல்லி இருக்கிறீர்கள்.

திருப்பாவை நம் எல்லோரையும் சொக்க வைக்கின்ற கிரந்தமே. அன்பும் ஆர்வமும் மிகுத்து நம் எல்லோருக்குமே அதைப் போஷித்து போற்ற முனைப்பு ஏற்பட்டுவிடுகிறது. அந்த அனுபவத்தின் முழுமை ஒரு உள்வட்டதை சேர்ந்தவர்களிடமே காணக்கிடைக்கும் - ஏனென்றால் இது வெறும் ஸ்தோத்ர கிரந்தம் அன்று; இது (திராவிட) வேதத்தின் அங்கம் ஆகும். ஆதலால், இது பிரமாண வாக்கியம் ஆகி விடுகிறது.

எம்பெருமானார் தரிசனத்தின் unique differentiators என்கிற prism வழியாக பார்கின்ற போது, இந்தப் பாவை கிரந்தம், ஸ்ரீ விசிஷ்ட அத்வைத சித்தாந்தம், சாரீரக சாஸ்திரம், சரணாகதி தத்வம், அர்ச்சைத்திருமேனி, ஆசார்ய வர்கங்கள், திராவிட வேதம் என்கிற ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து இருக்கிற தனித்துவ கூறுகள் கொண்டு அனுபவிக்கப் பெறும் போதே முழுமை பெறுகிறது. கவிநய அனுபவம் இதன் ஒரு aspect மாத்ரமே.

ஒரு சோற்றுப்பதமாக சொன்னால் - 30 பாசுரங்களுமே உம்மாச்சியின் பெருமையை அல்லாமல் முக்கோல் பகைவர்களான ஸ்ரீவைஷ்ணவ ஆக்ரேசர்களை போற்றுவதாகக்கூட வ்யாக்யனங்கள் சொல்லும்.

-- ராம்