தன் விதியைக் குறித்து நாரதர் சொன்னதும், கம்சனுக்கு முதலில் குப்பென்று வியர்த்து தான் போனது.
"நிறுத்துங்கள்.. இந்த ஆட்டம் கொண்டாட்டம் , சங்கீதம் எல்லாம் நிற்கட்டும்.. யாரங்கே "
கிட்டத்தட்ட முழங்கினான் என்றே தான் சொல்ல வேண்டும்.
நாரதர் வந்ததையோ, அவர் கம்சனின் மரணம் குறித்து சொன்ன செய்தியையோ , அந்த சபா மண்டபத்திலே இருந்த இன்னொருத்தரும் கேட்டிருக்கவில்லை.. எல்லோருக்கும் கம்சனின் கோபம் கொப்பளிக்கும் கண்களின் மீது கவனமாக இருந்தது.
சிலர் கம்சனை நெருங்கி, என்னவென விசாரிக்கலாம் எனத் தலைப்பட்டார்கள். அவர்களை கம்சன் நிமிர்ந்து உற்று நோக்கி பார்வையாலேயே , "நில்லுங்கள்" என்று சொல்வது போல் பார்த்தான்.
கம்சனின் தந்த உக்கிரசேனன் கம்சனை நெருங்கி, " குழந்தாய்.. கம்சா.. ஏன் இந்த பதற்றமும் , கோபமும் .. என்ன நடந்தது.."
"விபரமாகச் சொல்ல வேண்டுமா.. கையிலே தம்பூர் வைத்துக் கொண்டு, எப்போது பார்த்தாலும் நாராயண நாமம் சொல்லிக் கொண்டு லோகமெல்லாம் சுற்றிவருவாரே.. தேவரிஷி நாரதர்ர்ர்ர்ர்ர்ர்ர், அவர் என் முன்னே தோன்றி, இதோ இந்த யது குல திலகம் வசுதேவனை மணந்து கொண்டு உல்லாசமான வாழ்க்கைக்குத் தயாராக இருக்கிறாளே உங்கள் ஆசை மகள் தேவகி, இவர்களின் எட்டாவது குழந்தை என்னைக் கொன்று விடுமாம் ... சொல்லிவிட்டு அதோ அந்த வானத்திலே கரைந்து போனார் அந்த தேவ ரிஷி"
கம்சனின் கை சென்ற திசையிலே உக்கிரசேனனின் கண் ஒரு தரம் அரண்மனை முற்றத்தின் வழியே , மிக சொற்பமாக தெரிந்த ஆகாசத்தைப் பார்த்து திரும்பியது..
அவரது முதுமைக்கு கம்சனின் இந்த ஆவேசம் கொஞ்சம் அதிகமானதாகத்தான் இருக்க வேண்டும்.. பக்கத்திலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டு, நிற்கவும் முடியாமல் தடுமாறினார்.. ஒரு சேவகன் விரைந்து வந்து, ஆசனம் ஒன்றை போட்டுவிட்டு, " பிரபோ.. அமர்ந்து கொள்ளுங்கள் " என்று சேவித்து நின்றான்.
அந்த கோலாகலமான விருந்து அப்படியே நின்று போயிருந்தது.. மீண்டும் உக்கிரசேனன் புதல்வனைப் பார்த்து கேட்டார்,
"குழந்தாய் கம்சா.. நாரதர் சொன்னது எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது.. தேவரிஷி வேறெந்த விபரமும் சொல்லவில்லையா"
இவர்கள் இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரம் , தேவரிஷி, வைகுண்டத்தில், ஶ்ரீ ஹரியின் தரிசனத்துக்கு காத்திருந்தார்.
அக்கறையாக துவாரபாலகர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார், " என்றைக்கும் பெருமான் என்னைக் காக்க வைத்தது கிடையாது.. என்றைக்கும் இல்லாத அதிசயமாக இன்றைக்கு நீங்கள் என்னைக் காத்திருக்க வைத்திருக்கின்றீர்கள்"
"மன்னிக்க் வேண்டும் தேவரிஷி,, நாங்களாக எதுவும் சொல்வதில்லை, பரமாத்மாவின் ஆணையினை நிறைவேற்றுகின்றோம்"
'ம்ம்ம் புரிகிறது.. நான் அதோ அப்படி நிற்கின்றேன்.. ஆணை வந்ததும் சொல்லுங்கள்"
"ப்ரபோ.. இதென்ன விளையாட்டு.. நாரதன் வந்திருக்கிறான்.. உங்களைத் தரிசிக்க அவனை அழைத்து ஆசிர்வதிக்காமல் காத்திருக்க வைத்திருக்கின்றீர்கள்"
" மஹாலஷ்மி.. இதில் என்னுடைய காரியம் எதுவுமில்லை.. இதோ நம்மிருவரையும் மெத்தை போலத் தாங்கி, குடை பிடித்துக் கொண்டிருக்கின்றானே.. சேஷன். இவன் செய்யும் வேலை இது"
"ப்ரபோ.. இதென்ன உங்கள் லீலைகளுக்கு என்னைக் காரணம் சொல்லுகின்றீர்கள்....பாருங்கள் மாதா என்னை சந்தேகமாகப் பார்க்கின்றார்கள்"
"ஆதிசேஷா.. நீ தானேயப்பா கிரஹங்கள், அவை நல்கும் பலாபலன்களை வைத்து அன்றைக்கு என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாய்"
"ப்ரபோ.. இதென்ன.. நீங்களும் சேஷனும்.. என்னை விட்டு விட்டு நிறைய விஷயங்கள் பேசுகின்றீர்கள் போலிருக்கிறதே"
" மஹா லஷ்மி, சேஷா நீங்கள் சற்று காத்திருங்கள்.. இதற்கு நாரதன் தான் சரியான விளக்கம் சொல்லக் கூடும்.. அவனை அழைக்கிறேன்"
(தொடரும்)
No comments:
Post a Comment