Sunday 4 May 2008

கிராமர் கிருஷ்ணமூர்த்தி-2


உள்ளே போனபோது கிராமர் கிருஷ்ணமூர்த்தி சில நூறு கல்யாணப் பத்திரிகைகளை முன்னே அடுக்கி வைத்திருந்தார்.

“என்ன சார் ஏதாவது பிரிண்டிங் பிரஸ் ஆரம்பிக்கப் போறேளா ?”

“இந்த கிண்டல் தானே வேணாங்கறது.. உன்னோட கல்யாணப் பத்திரிக்கை கொண்டு வரச்சொன்னேனே எங்க?

“ அது சார். இப்ப தானே வீடு மாத்தினேன். அதனால கல்யாண ஆல்பம், பத்திரிக்கை இதெல்லாம் எந்த பெட்டில இருக்குனு தெரியல.. என்ன விஷயம் சொல்லுங்கோ”

“இத பாத்தியா.. சுமார் அறுபது வருஷ காலத்திய கல்யாணப் பத்திரிகைகள்.. எல்லா பிரிவு ஜனங்களோடதும் இருக்கு.. இதுல விதி விலக்கில்லாம எல்லாரும் ஒரு தப்பு பண்ணியிருக்கா”

உள்ளே சமையல் கட்டிலிருந்து மாமி, “ சந்துரு யார் தப்பு பண்ணாளோ இல்லியோ நான் தப்பு பண்ணியிருக்கேன். இந்த கல்யாணப் பத்திரிக்கை தப்பை இந்த மனுஷன் லென்ஸ் வச்சி கண்டுபிடிச்சது கூட தப்பிதம் இல்லை. அந்த மனுஷாளுக்கெல்லாம் இதை கடுதாசி போட்டுச் சொல்றார். அவாள்லாம் இப்ப போன் பண்ணி கேக்றா”

“கடுதாசி போட்டா என்ன தப்பு... நீ வாயை மூடு.. இத பார் சந்துரு.. கல்யாணப் பத்திரிக்கை எதுக்கு அடிக்கிறோம். இன்னாருக்கு இன்னாரை கல்யாணம் பண்ணி வைக்கப் போறோம். நீங்க வந்து நடத்திக் குடுங்கோ அப்டினு கூப்பிடத்தானே”

மேஜை டிராயரிலிருந்து சுருட்டி வைத்திருந்த போர்டை எடுத்து சுவற்றில் பொருத்தினார்.

“இப்ப பாரு.. பொண்ணைப் பெத்தவாளோ.. பையனை பெத்தாவாளோ.. வித விதமா கல்யாணம் சொல்றா பாரு”

கிருஷ்ணமூர்த்தி நிஜமான ஆராய்ச்சி ஆசாமிதான்.. போர்டில் வரிசையாக எழுதியிருந்தார்.

XXXXX என்கிற வரனை YYYYY என்கிற கன்னிக்கு திருமணம் செய்வதாய்
YYYYY என்கிற கன்னியை XXXXXX என்கிற வரனுக்கு திருமணம் செய்வதாய்
எனது குமாரத்தி YYYYY ஐ XXXXXX க்கு கன்னிகாதானம் செய்து கொடுப்பதாய்
எனது குமாரன் XXXXXX க்கு சௌபாக்கியவதி YYYY ஐ பாணிக்கிரகணம் செய்து கொள்வதாய்

“இப்படி எல்லா இடத்திலையும் ” க்கு” தான் யூஸ் பண்ணியிருக்கு. ஆனா இங்கிலீஷ்ல



We cordially invite you on the occasion of the marriage of my son / daughter

With

XXXX

போட்டு ‘வித்” யூஸ் பண்றா.. இது ரொம்ப பிசகு இந்த இடத்தில்

We cordially invite you on the occasion of the marriage of my son / daughter

to

XXXX

இப்படித்தான் போடணும்.


என் மகள் / மகனுக்கு இன்னாருடன் நடக்கும் திருமண வைபவம் .. இப்படி சொல்லக் கூடாது

என் மகள் / மகனுக்கும் இன்னாரின் மகன் / மகளுக்குமான திருமண வைபவம் இப்படித்தான் சொல்லணும்

இங்கிலீஷின் preposition க்கும் தமிழின் வேற்றுமை உருபுக்கும் கையாளறதுல நிறைய வித்தியாசம் இருக்கு வழக்கு இருக்கு.. தமிழில் கூட தொல்காப்பியர்

ஐ ஒடு கு இன் அது கண் என்னும்
அவ் ஆறு என்ப வேற்றுமை உருபே

இப்படி சொன்னதில் கூட ‘உடன்’ அர்த்தம் வர்ற with இல்ல பாரு.

நியாயம் தான் என நினைத்துக் கொண்டேன்.

ஆனால் இதை அந்த பழைய கல்யாணப் பத்திரிக்கை குடும்பத்தாருக்கு போஸ்ட் கார்ட் எழுதி சொல்வது நியாயக் கணக்கில் சேர்த்தி இல்லை தான்.

நல்லவேளை ஜவஹர்லால் நேரு கல்யாணப் பத்திரிக்கை இவருக்கு கையில் கிடைக்கவில்லை. இவர் அதை வைத்து 10, ஜன்பத் நியூ டெல்லிக்கு கடுதாசி போட்டுவிட்டால் பிரச்சனை பார்லிமெண்ட் வரை போய்விடும்.

2 comments:

cheena (சீனா) said...

சரியா தவறா தெரியவில்லை.
குடும்பத்தினருடன் வர வேண்டும் என்று சொல்வதில்லையா ? உடன் தமிழில் இருக்கிறதல்லவா ?

பழக்கத்தில் With பயன்படுத்துகிறோம் - To பயன் படுத்துவதில்லை. Practice Prevails over the law இல்லையா

மனதில் பட்டதை சொல்கிறேன் - விவாதம் இல்லை.

மங்களூர் சிவா said...

நல்ல வேளை நான் பத்திரிகை எதும் அடிக்காம கல்யாணம் பண்ணிகிட்டேன்

:)))))))))))))))))