பகவத் கீதை இந்திய தத்துவ மரபில் மிக உயர்ந்த இட்த்திலிருக்கும் ஒரு உபதேசம். அதற்குக் காரணம் அது ஸ்ரீ க்ருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்ட்தாக நாம் அர்த்தம் செய்து கொள்வதால்.
ஸ்ரீ க்ருஷ்ணனின் உபதேசம் அர்ஜுனனுக்கு மட்டுமில்லை. தடுமாறுகின்ற எல்லோருக்கும் தான்.
நம்முடைய சாதாரண அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ தடுமாற்றங்கள். சிலவற்றில் நமக்குத் தெரிகின்ற அளவில் முடிவெடுக்கிறோம். சிலவற்றில் முடிவெடுக்காமலே விடுகின்றோம். சிலவற்றில் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்கிறோம். ஆனால் எப்போதும் அந்தத் தடுமாற்றங்களை நிரந்தரமாக தள்ளிவைக்க முடியவில்லை
ஸ்ரீ க்ருஷணரின் உபதேசம் முழுமையும் அந்த தடுமாற்றத்தைப் பற்றிய ஆராய்ச்சி தான். அந்த தடுமாற்றத்தின் மூலத்தை நோக்கிய பார்வை தான்.
தடுமாற்றத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறவன் , ஒரு நிலையில் அந்த தடுமாற்றமே வராத நிலையினை எய்துகிறான். அப்படியான ஒரு நிலை எப்படி இருக்கும் !!! அதை முயன்று தெரிந்து கொள்ள ஒரு சிறிய முயற்சிதான் இந்த குருஷேத்திரம்
இதற்காக நான் அன்றாடம் நிகழும் சம்பவங்களையே உதாரணமாகக் கொண்டிருக்கிறேன். ஸ்ரீ க்ருஷ்ணர் இங்கே பஞ்சாயுதம் தாங்கி, துளசி மாலை அணிந்து வரப்போவதில்லை. அவருக்கு அந்த யுனிபார்மிலிருந்து கொஞ்சம் ஓய்வு தந்து அவரை நாம் தினசரி சந்திக்கும் ஒரு சராசரி மனுஷனாக காண்பிக்க முயற்சிக்கிறேன். அவரே தான் நான் எல்லாவற்றிலும் வியாபித்திருப்பவனே என்று சொல்லி எனக்கு இப்படி ஒரு சுதந்திரத்தை சமைத்துக் கொடுத்திருக்கிறாரே.
இந்தத் தொடரை வாரம் ஒன்று , இரண்டு வாரம் ஒன்று , மாசம் ஒன்று என்று எந்த கால அளவு நிர்ணயம் செய்தும் வெளியிட எண்ணமில்லை. எப்போதெல்லாம் ஸ்ரீ க்ருஷ்ணமந்திரம் கேட்பதாக எனக்குத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒரு பதிவு.
பிரபல இதழாளர் ஞானி 49 ஓ பற்றி முழங்கியது கேட்டிருப்பீர்கள்
விவரமாகக் கேட்க விழைபவர்கள் அவரது வலைமனைக்கு சென்று பார்க்கவும்
http://www.gnani.net/
எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை நமக்கு இந்தப் பிரிவு கொடுத்திருக்கிறது. வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைக்கபட்ட பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று நாம் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்தாக வேண்டும். இதுதான் தேர்தல் விதிகள் (1961)ன் 49 (ஓ) பிரிவு. வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.
எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்தவேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது.
ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் தரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி - 49 ஓ.
49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.
ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.
மேலே உள்ளது ஞானியின் கட்டுரை
ஞானியின் கூற்று பாதி தான் சரி
49 ஓ வின் படி ஒரு வாக்காளர் யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை என்றூ பதிவு செய்ய இயலும். இது அவரது வாக்கினை வேறொருவர் போடாத நிலையில் இனி ஒருவரும் போடாதிருக்க மட்டுமே பயன் படும்
49 ஓவின் படி ஒருவர் தனக்கு வாக்களிக்க விருப்பமில்லை என்ற தகவலையே பதிவு செய்கிறார். இது வாக்காகாது
அதனாலேயே இந்த 49 ஓ ஆப்ஷன் வாக்குச் சீட்டிலோ வாக்கு இயந்திரத்திலோ இடம் பெறவில்லை ஒரு தொகுதியில் குறைந்த பட்சம் இத்தனை வாக்குகள் அல்லது இத்தனை வாக்குகள் பதிவாக வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது
பதிவான வாக்குகளில் அதிகம் பெற்றவர் வெல்கிறார்
தேர்தல் என்பதே People Representative யார் என்பதை தெரிந்து கொள்ள யாரைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது தான் Representation of People Act ன் Doctrine
யாரை நிராகரிக்கிறோம் என்பதல்ல
ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதால் மற்றவர்கள் நிராகரிக்கப்படுகின்றனர் . This is supplementary not the prime cause
49 ஓவின் படி ஒரு வாக்காளர் பதிவு செய்யும் தகவல் வாக்கு என்ற அந்தஸ்த்தினை பெறாமல் இருப்பது இந்தக் காரணங்களால் தான்.
இந்த 49 ஓ வில் பதிவாகும் கருத்து வாக்கு அந்தஸ்த்து பெறாது
யார் 49 ஓ வின் கீழ் வாக்களிக்க விருப்பமில்லை என பதிவ செய்கிறாரோ அவர் பெயருடன் தகவல் பதிவு செய்யப்படுகிறது
Representation of Peoples Act பிரிவு 94 ந் படி ஒருவர் யாருக்கு வாக்களிக்கிறார் என்ற தகவல் ரகசியமாக இருக்க வேண்டும்
இதன் காரணமாகவும் இந்த யார்க்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற ஆப்ஷன் வாக்கு என்ற அந்தஸ்த்தினைப் பெறவில்லை
வாக்கு இயந்திரம் வந்த பின் செல்லாத ஒட்டு போட வழியில்லை. ஞானி செல்லாத ஒட்டு மாதிரி ஒன்றை கொண்டு வர ரொம்பவே பிரயத்தனப்படுகிறார் அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
இது மாதிரி கூட்டம் சேரும் இடத்தில் அதற்கான சம்பிரதாய கடலை வண்டிகள், பஞ்சு மிட்டாய் என்று திருவிழா சம்பிரதாயங்களை கிரமாமாக வாசலிலேயே காண முடிந்தது. குடை ராட்டினம் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். ஏமாற்றம்.
டூ வீலர் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு நண்பர் கார்த்தி வர காத்திருந்த சொற்ப நேரத்தில் நல்ல சுவாரசியம்
இத்தனை பாக்கெட் வைத்து சொக்காய் மார்க்கெட்டில் கிடைக்கிறது என்று அங்கு வந்த சிலர் போட்டுக் கொண்டிருந்த சட்டையைப் பார்த்த பின் தான் தெரிந்தது.
இது மாதிரி இடங்களுக்கு டூ வீலரில் வரும் பெரும்பாலனவர்கள் தவறாமல் செய்யும் காரியங்கள்
1.பார்க்கிங் பராமரிப்பில் இருக்கும் அப்பாவி சிறுவர்கள் காட்டும் இடத்தில் வண்டியை நிறுத்தாமல் எட்டிப் போய் வண்டியை நிறுத்துவது
2.வண்டியில் இருந்து இறங்காமலே சைட் ஸ்டாண்டை ஸ்டைலாக போட்டுவிட்டு இறங்குவது.
3.இறங்கிய உடன் பக்கத்தில் நிறுத்தியிருக்கும் டூவிலரின் கண்ணாடியை உரிமையாக சரக்கென்று திருப்பி அதைப் பார்த்து சீப்பால் தலை வாருவது. வாரிய தலையை கையால் கோதி விடுவது. முகத்தை கர்ச்சீப்பால் துடைப்பது. உதட்டை பல தடவை ஈரப்படுத்திக் கொள்வது
4.இந்த அலங்கார ஆயத்தங்கள் முடிந்த உடன் டக்கென்று பாக்கெட்டில் கைவிட்டு செல் போனை எடுத்து நம்பர் ஒத்தி, “ நான் புக் ஃபேருக்கு வந்திருக்கேன். அப்புறமா உங்கிட்டே பேசறேன்” என்றுயாரிடமோ தகவல் சொல்வது
5.மனைவி குழந்தையுடன் வந்தால் தான் வருடா வருடம் வருவதை ஏகப்பட்ட டெசிபலில் சொல்வது
நல்லவேளை எனது லிஸ்டில் இன்னும் சேர்ப்பதற்கு முன்னால் கார்த்தி வந்துவிட்டார். இவர் எனது புத்தகப் பிரேமையை ஜாஸ்தியாக்கவே அவதாரம் செய்தவர் என்றே சொல்லலாம்
நான் வீட்டிலிருந்து கிளம்பும் போது, என மனைவியிடம் மன்றாடி வாங்கிக் கொண்டுவந்த சொற்ப காசைப் பற்றி இவரிடம் சொல்லியிருக்கணும். சொல்லாமல்விட்டது தப்பிதமாகி விட்டது.
ஏறக்குறைய எல்லா ஸ்டால்களிலும் ஒரு புத்தகம் வீதம் வாங்க வேண்டும் என்று சங்கற்பம் செய்து கொண்டே அரங்கத்தினுள் பிரவேசம் செய்தார்
I am not a man of one book or of a few select books. That is to say, there are no favourite books to which I recur again and again for inspiration or pleasure என்று சில்வர் டங் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் சொன்னதை அட்சரம் பிசகாமல் கடைபிடித்தார்.
அவர் பொஸ்தகம் வாங்க வாங்க எனக்கு ஒரே கவலை. காரணம் பெங்களூரூ ( இதானா அபிஷியல் பேரு) போன பின்னால் ஒரே ராத்திரியில் அத்தனையும் படித்துவிட்டு மறு நாள் கூகிள் டாக்கில் , “ அண்ணா இந்த பொஸ்தகத்தில் அவர் ஏன் அப்படி சொன்னார்” என்று கேள்வி எழுப்புவார். அதற்கு பதில் சொல்ல எனக்கு அந்த பொஸ்தகம் படிக்க வேணும்.
கார்த்திக்கு முதல் முறையாக புத்தகம் சிபாரிசு செய்யும் வாய்ப்பு கிடைத்தை சந்தோஷத்தில் கலைஞரின் பொன்னர் சங்கர், அண்ணாவின் கம்பரசம் என ஒரு லிஸ்ட் தந்தேன். ஒரு நிமிஷத்தில் லட்சத்தில் ஒரு பங்கு நேரம் கூட யோசிக்காமல் வாங்கி விட்டார். இனிமேல் சாட்டில், “ தமிழரின் பெருமைகளை பறை கூறும் இது போன்ற காவியங்கள் வேறேதும் உளவா” என்று டைப் செய்வார் என எதிர்பார்க்கலாம்
அவரை ஸ்டீபன் கோவே படிக்க சொல்லி ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருந்தேன் . இந்த முறை வசமாக மாட்டினார். 7 Habits of Effective People வாங்க வைத்தேன். இந்த பொஸ்தகத்தை சுஜாதா கற்றதும் பெற்றதுமில் சிலாகித்திருப்பது தெரிந்தால் கார்த்தி ஒரே மூச்சில் செவன் ஹாபிட்ஸை உள்வாங்கி விட்டு கூகிள் சாட்டில் என்னை பதம் பார்ப்பார் என்பது நிச்சயம்
இத்தனை வருஷங்களாக மௌண்ட் ரோட் ஆர்ட்ஸ் காலேஜ் மைதானத்தில் நடந்த இந்த காட்சி 2008 வருஷம் முதல் செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேநிலைப் பள்ளி மைதானத்தில் நடக்கிறது.
அரங்க அமைப்புகளுக்காக ஆர்க்கனைசர்களை பாராட்டியே ஆக வேண்டும். தரையில் மரப்பலகைகளால் சமமாக தளம் போட்டு அதை சிவப்பு கம்பளம் வைத்து நீவி மூடி... நடப்பதற்கு சுலபமாக இருந்தது
மௌண்ட் ரோடு காலேஜில் அப்படியே மணல் மீது கம்பளம் விரித்திருப்பார்கள். தடுக்கி விழாமல் நடப்பவர்களுக்கு 101 வகை சட்னி செய்வது எப்படி என்ற புத்தகம் அனுதினம் பரிசளிப்பார்கள்
இந்த புத்தகக் காட்சியில் ஒரு இம்சையும் இருக்கிறது. தினப்படி அறிஞர் ஒருத்தரை சாயங்காலம் 6 மணிக்கு பேச வைப்பார்கள். நான் போன தினம் இந்த இம்சையைச் செய்தது வைரமுத்து. ஏகப்பட்ட அடைமொழி சொல்லி அவரைப் பேச அழைத்தார்கள். முத்தமிழ் அறிஞர், தமிழ், தமிழன், தமிழனே என்ற சில வார்த்தைகளை வைத்தே அவர் சுமார் 40 நிமிஷம் மூச்சு விடாமல் பேசினார். அகில இந்தியாவில் எங்கேயும் இந்த மாதிரி புத்தகக் காட்சிகள் நடப்பதில்லை ஆகவே தமிழன் பெருமைப்பட வேண்டும் என்று தனது Ignorance ஐ முழங்கி காமெடி செய்தார்.
ஒரு வழியாக கைநிறைய ப்ளாஸ்டிக் பைகள் சகிதம் வெளியே வந்து ஆளாளுக்கு வாங்கின பொஸ்தகங்களைப் பிரித்துக் கொண்டோம்.
வீட்டுக்கு வந்து சமத்தாய் உப்புமா சாப்பிட்டுவிட்டு வாங்கி வந்த பொஸ்தகங்களை வண்டி பாக்ஸில் இருந்து எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்து பெருமையுடன் மனைவியிடம் கணக்கு ஒப்பித்தேன். ” எதுக்கு இப்படி பொஸ்தகமா வாங்கி அடுக்கறேள் என்பதற்கு எல்லாம் ஒரு Knowledge Improvement க்குத் தான் என்று மழுப்பினாலும்
ஜெயமோகனின் ரப்பர் நாவலின் முன்னுரையில் சொன்ன , ” அந்தரங்கமாய், எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலிமையுடன் இருக்க விழையும் என் அகங்காரம் தான் என அறிகிறேன்” என்ற வாசகம் தான் பொருத்தமாக இருக்கும் என்று என் மனசாட்சி சொல்கிறது
நான் இப்படியான உருக்கமான கடிதம் வாசித்ததேயில்லை எனச் சொல்லலாம். இனிமேலும் வாசிப்பேனா என்பதும் சந்தேகம்தான். அந்தக் கடிதம் வார்த்தை வார்த்தையாக இன்னதென்று எனக்குத் தெரியாது. ஆனால் யார் யாருக்கு எது பற்றி எழுதினார் எனத் தெரியும்
ஒரு சின்னப்பையன். புகைபிடித்தது தப்பென்று மனசுக்குப்பட்டதால், தன் அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டு எழுதுகிறான். அதுவும் படுத்த படுக்கையாக இருக்கின்ற அப்பாவிடம். அவரின் ரியாக்ஷனிலிருந்து அந்தக் கடிதம் எப்படியானதொரு மனோபாவத்தை அந்த அப்பாவுக்கு சொல்லியிருக்கலாம் என யூகிக்கலாம். அந்தச் சிறுவனே எழுதுகிறான் :
”அவர் முழுவதும் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கண்களில் கண்ணீர்....... “
அந்தக் கண்ணீர் தன்னை அப்பா மன்னித்துவிட்டதை உணர்த்தியதாக எழுதும் சிறுவன் இன்னும் சொல்கிறான்..
“இவ்விதமான் உயர்வான மன்னிக்கும் குணம் என் தந்தைக்கு இயல்பானதன்று; கோபமடைவார். கடும் சொற்களைக் கூறுவார். தலையில் அடித்துக் கொள்வார் என்றெல்லாம் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவரோ அவ்வளவு அற்புதமாக அமைதியுடன் இருந்தார். மறைக்காமல் எல்லாவற்றையும் நான் ஒப்புக்கொண்டதே இதற்கு காரணம் என நம்புகிறேன். மன்னிப்பு அளிக்க உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தை செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்கு சரியான வகையில் வருத்தப்படுவதாகும். என் குற்றத்தை நான் ஒப்புக் கொண்டுவிட்டது என்னைப் பற்றி கவலை இல்லை என்று என் தந்தையை உணரும்படி செய்தது என்பதை அறிவேன்” அந்த சின்னப் பையனுக்கு இன்றை தேதிக்கு 139 வயசாகி விட்டது. ஆனாலும் அவன் கடிதமோ அந்த எழுத்தோ அந்த சிந்தனையோ இன்னும் இளமையாகத் தான் இருக்கு.
இப்படியாக ஒரு தலைப்பை வைத்து ப்ளாக்கில் இலவசமாக வெப்பன் கலாச்சாரம் வளர்க்கிறேன் என பிராது வராது என நம்புகிறேன்.
இருந்தாலும் ஆயுத பூஜை சமீபத்தில் வருவதால் தமிழ் வாசகர்களுக்கு சில தேவையான ஆயுதங்களை சிபாரிசு செய்துவிட்டால் தேவைப்படுபவர்கள் யூஸ் பண்ணலாம் அல்லவா
ஆயுதம் 1
நல்ல முறுக்கான கயிறு. ஒரு பத்தடி நீளம் இருந்தால் சிலாக்கியம். இது பொதுவான கயிறன்று. எங்கே எதற்கு எதிராக பிரயோகம் செய்யலாம் என்ற லிமிட்டேஷன் கொண்டது. “குட்டிக் கதைகள்” என்ற பெயரில் உசத்தியான ”பாரிலே” போய் குடிப்பதைப் பற்றியே பிரஸ்தாபம் செய்து வருவதிலிருந்து தடுக்க. குடிகாரன் என ஊருக்கே தெரிந்த பிறகு அதை சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை எனச் சொல்லி கையைக் கட்டிப் போட வைத்துக் கொள்ள வேண்டும். கட்டிப் போட்டு விட்டால் வாய் சும்மா இருக்குமா அதனால் .
ஆயுதம் 2
ஒரு பெரிய சைஸ் பிளாஸ்திரி
என்னை தினசரி 21 தேசத்திலிருந்து 20 ஆயிரம் கல்லூரி மாணவ மாணவிகள் சந்த்தித்து வருகின்றனர். நான் அவர்களுடன் பேசவில்லை என்றாலோ அவர்களுக்கு லெட்டர் எழுதவில்லை என்றாலோ அவர்களுக்கு ஒரு மாதிரி பசலை நோய் வந்துவிடும் என்கிறதான அபாராமான சித்தபிரம்மை உளறலை நிறுத்த..
பைத்தியத்துக்கு தான் பைத்தியம் என்பதும் தெரியாது. பைத்திய நிலையிலேயே கட்டிப்போட்ட கையோடு, மூடப்பட்ட வாயோடு எப்படி ஜீவனம் செய்யும். சாப்பாட்டுக்கு காசு வேண்டும் எனக் கேட்க முடியாது. அதனால் அதும் பக்கத்திலேயே ஒரு உண்டியலை வைத்து விட்டால் யாசகம் ரொம்பவே சுலபமாகிவிடும்..
ஆயுதம் 4
ஒரு பெரிய சைஸ் பிளாஸ்டிக் சுத்தியல்
இதென்னடா பிளாஸ்டிக் சுத்தியல் என யோசிக்க வேண்டாம். முகம் பார்ர்கும் கண்ணாடியில் பைத்தியம் தன்னையே பார்த்து வியந்து கொள்ளும் போது இன்னும் நிறைய பிம்பம் இருந்தால் அதீத சந்தோஷமாகும். அதனால் அந்தக் கண்ணாடியையே சுக்கலாக உடைத்தால் ஒவ்வொரு துண்டிலும் தன் மூஞ்சி தெரியுமல்லவா
இத்தனை ஆயுதம் வாங்க காசு வேண்டுமே. என்ன செய்வது. யாராவது பைத்தியங்களை போஷிக்கும் நல்லிதயமாக தேடவேண்டியது தான்
துன்ப மிலாத நிலையே சக்தி தூக்க மிலாக் கண் விழிப்பே சக்தி அன்பு கனிந்த கனிவே சக்தி ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி எண்ணத் திருக்கு மெரியே சக்தி முன்புநிற் கின்ற தொழிலே சக்தி முக்தி நிலையின் முடிவே சக்தி பாடி முடித்து தீபத்தை ஒற்றியெடுக்க குனிந்தேன். தீபச் சுடரளவு ஜாஸ்தியாகி வளரத் தொடங்கிற்று
”என்ன இன்றைக்கு சக்தி வ்ழிபாடு ரொம்பவுமே அதிகமாக இருக்கிறது ?“ என்ற கேள்வியுடன் அந்த ஜ்வாலை முண்டாசு கட்டிய பாரதியாக மாறி இருந்தது.
எனக்கு இந்த திடீர் பிரசன்னத்தால் பிரமிப்போ தூக்கிவாரிப் போடுதலோ இல்லை. என்னவோ ரொம்ப காலம் எதிர்பார்த்த சம்பவம் மாதிரி சௌஜன்யத்தில் தான் இருந்தேன்.
“என்ன ஸ்வாமி பதிலே காணோம். இன்றைக்கு மட்டும் என்ன என் பராசக்தியிடம் இத்தனை உருக்கம்”
”என்னது உங்க பராசக்தியா; விட்டா நானே சிருஷ்டித்தேன் என்றே சொல்லுவீங்களே”
“நன்றாக யோசித்துப் பாரும். நானின்றி நீர் அறிந்தனையோ பராசக்தியை ?”
அவனைப் போலவே அவன் கேள்வியும் நிதர்சனமாய் எதிரே. ஒரு கணம் அந்தக் கேள்வியை முழுசாக உள்வாங்கி மூச்சை இழுத்துப் பிடித்துப் பார்த்தேன். எதிரே இருந்த அவன் ஒரு கணம் சுடராக நெடிந்து வளர்ந்து மீண்டும் மனித ரூபமாகவே தெரிந்தான்.
“பதில் சொல்ல முடியாத கேள்வியா கேட்டேன்”
“ இப்ப நான் உங்களைக் கேள்வி கேட்கலாமா”
“ ம் கேளுமே . என்ன தயக்கம். சரஸ்வதி தேவிக்கு லஜ்ஜை அதிகம்னு நான் எழுதியது இன்று வரை சத்தியமாகவே இருக்கிறது”
”இது அச்சமில்லை அச்சமில்லை பாட்டைப் பத்தி”
“என்னவோ உம் ஐயம்”
“ அதில்லை உலகம் எதிர்த்து நின்றால், யாரவது மதிக்கலேன்னா, வறுமை வந்தா, எல்லாம் இழந்து போண்டியானா, நண்பர் விஷம் கொடுத்தாக் கூட, படையே வந்தாலும், வானம் இடிந்து விழ்ந்தாலும் இதுக்கெல்லாம் அச்சமில்லைனு பாடினீங்க சரி. அதென்ன கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் அச்சமில்லை டக்குனு எங்கேயோ சறுக்கின மாதிரி தெரியறதே. சும்மா எதுகையும் சந்தமும் வரணும்னு இச், துச் நச்னு எழுதி கச் னு எழுதிட்டீங்களா”
என்னையே தீர்க்கமாக பார்த்தான்.
“ ஒருவருக்கு அச்சம் எப்போது உதிக்கும்—சொல்லுமே”
“ அறியாமையால். அதாவது ஏதாவது புரியலேன்னா அதோட சம்பந்தப்படுத்திக்ற சந்தர்ப்பத்தில் அச்சம் வரும். அறிந்தால் அச்சம் நீங்கும்”
‘நன்று சொன்னீர் ஸ்வாமி – இப்போது நீர் அடுக்கடுக்காக எம் பாட்டிலிருந்து கேட்டீரல்லவா அதனை ஒவ்வொன்றாய் நினைவு கொள்க. இந்த அவகாசத்தில் நான் தாம்பூலம் தரித்துக் கொள்கிறேன் ”
“ஆச்சுங்க”
"உலகம் உன்னை அறியாமையால் அல்லது நீ உலகை அறியாமையால் உலகம் உன்னை எதிர்த்து நிற்கும் சூழல், உன்னை பிறர் அறியாமையாலேயே உம்மை துச்சமாக எண்ணி தூறு செய்வர், வாழும் வகை அறியாமையால்லேயே பிச்சை வாங்கும் நிலை தோன்றும், பொருளே வாழ்வு எனும் அறியாமையாலேயோ அன்றி அதனை மீண்டும் ஈட்டும் வலுவுண்டு என்பதனை அறியாமையாலேயோ தான் பொருளை இழந்தால் அச்சம் தோன்றும், உன்னை அவனோ அவனை நீரோ அறியாமையாலேயே நண்பன் விடமிட முன் வருவான், உன்னுள் இருக்கும் ஐந்து உணர்ச்சியும் படை அதனை அறியாமை அச்சம் தருவதே, வாழ்வின் உயர்வின் இலக்கு இதுவே என்று வானத்தை சொல்வர். அப்படி ஒரு இலக்கே இல்லாது இடிந்ததென வாழ்வு நோகும் அறியாமை- இந்த சூழலையே நான் அச்சப்பட வேண்டாத சூழல். அச்சமின்றி அறிவன அறிந்தால் அச்சம் அகலுமென்றே சொன்னேன். அன்றி வானம் இடிந்து தலை மீது வீழுமென்ற வீண் கற்பனையோ அல்லது நீர் கூறீனீரே இச் கச்சென்ற சந்தமும் எதுகையும் என் நோக்கமில்லை. சொற்கள் நான் பிரயோகிக்க தவமிருக்கும் என்று ஒருமுறை நீரே என் திருவல்லிக்கேணி வீட்டிலுள்ள விருந்தினர் பதிவேட்டில் எழுதியிருக்கிறீர். நினைவிருக்கட்டும்”
“அதெல்லாம் சரி; நான் கேட்ட கேள்விக்கு இன்னும் விடை வரவில்லையே. நீங்க சொன்ன விளக்கத்தில் எல்லாம் இருக்கு அந்த ஒரு இடம் மட்டும் விட்டுட்டு தாவிட்டீங்களே”
“ஹ்ம். உமக்கு எல்லாம் புளி போட்டு விளக்க வேண்டும். எனக்கு இப்போது வேதபுரத்துக் கடற்கரையில் ஒரு சிறு பணி அதனை முடித்து திரும்புகிறேன். அடுத்த முறை சந்திக்கையில் அதற்க்கும் விளக்கம் தருகிறேன். அதற்குள் உமக்கே புரிந்தாலும் புரிந்து விடும்”
ஒரு முதியவர். உடல் நிலை சரியில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர் மருந்துகள் எழுதித் தந்தார். முதியவரின் வேலையாள் மருந்து வாங்கி வர புறப்பட்டார். இரவு நேரம். வேலையாள் ஒரு மருந்து கடை திறந்திருப்பதைக் கண்டார். மருந்து வாங்கினார். மருந்துகளின் மொத்த விலை 80 ரூபாய் வேலையாள் 100 ரூபாய் தாளைத் தந்தார்.
”என்னிடம் சில்லறை இல்லியேப்பா.. மிச்சம் 20 ரூபா நாளை காலேல வந்து வாங்கிக்றீயா”
” சரிங்க “ என்று புறப்பட்ட வேலையாள் அந்த மருந்து கடை எதிரில் ஓர் எருமை மாடு நிற்பதைப் பார்த்தான் அதையே இந்தக் கடையிருக்கும் இடமாக அடையாளமாக மனதில் பதிய வைத்துக் கொண்டான்
மறுநாள் காலை அந்த தெருவுக்கு வந்தான் . அப்போது எருமை மாடு நின்று கொண்டிருந்த இடத்துக்கு எதிரில் இருந்த கடையில் நுழைந்தான்
“ஏங்க நான் இரவு மருந்து வாங்கினேன் 20 ரூபா பாகி தரணும் நீங்க”
கடைக்காரர், “ நீங்க கடை மாறி வந்திட்டீங்க. இது மளிகைக் கடை. மருந்து கடையில்லை”
“ அட யார்யா இது.. இது ரொம்ப வருஷமா மளிகைக் கடை தான். நேத்தி ராத்திரி நீ என்னையா பார்த்தே”
“இத பார்யா. நீ தாடி ஒட்டி வச்சிகிட்டு வேஷம் போட்டாலும் என்னை ஏமாத்த முடியாது. எடு 20 ரூபாயை”
“இது என்னடா வம்பு. நான் பல வருஷமா தாடி வச்சிருக்கேன்யா. இது நிஜ தாடி. நம்புயா. ராத்திரி நீ இங்க வரலையா. அது வேற கடையா இருக்க்கும் நல்லா யோசிச்சு பாருயா”
வேலையாள் திடீரென பாய்ந்து கடைக்காரரின் தாடியைப் பிடித்து இழுத்தார். தாடி கையோடு வரவேண்டும் என்பது அவரது நம்பிக்கை. வரவில்லை ஆனாலும் ,
“ இத பாருங்க நீங்க 20 ரூபா தர வேணாம். ராத்திரியோட ராத்திரியா மருந்துக் கடையை மளிகைக் கடையா மாத்தினது எப்படினும் சொல்ல வேண்டாம். ஆனா ஒரே ராத்திரி எப்படி இப்படி தாடி வளர்த்தீங்க அத மட்டும் தயவு செஞ்சி சொல்லிடுங்க”
ஸ்ரீநிவாசனாகிய எனக்கு மகிழ்ச்சி ஜாஸ்தியாகத்தான் இருக்கிறது. இந்த பதவி உயர்வு எதிர் பார்த்து வந்தது தான். இது வரை ஏக்கமாகப் பார்த்த ”பச்சை மைக் கையெழுத்தை” தானே போட முடியும். அதான் கெஜெட்டட் ஆபிசர். இப்பெல்லாம் யார் ப்ரமோஷனும் கெஜெட்டில் வர்றதில்ல. ஆனாலும் அந்த பேர் அப்படியே இருக்கு.
இன்னிக்கே போற வழில ஒரு நல்ல பேனா வாங்கணும். பச்சை இங்க் வாங்கணும். என்ன இந்த ப்ரமோஷன் உள்ளூரிலிருந்தால் வீட்டு வாசலுக்கு ஜீப் வந்து கூட்டிண்டு போகும். இப்ப என்னடாண்ணா தினம் அறுபது கிலோமீட்டர் பஸ்ஸில தினம் பிரயாணம் பண்ணனும். இருக்கட்டும் இப்போ போய் ஜாயிண் பண்ணிடலாம் அப்புறமா மெள்ள டிரான்ஸ்பர் வாங்கிண்டு வந்திடலாம். இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரில் வர்ற ஜோசியக் காலம் பலிக்றது.. பீட்டர் வைடால் இப்பத்தான் ரெண்டு வாரம் முன்னால எழுதினான். இதோ ப்ரமோஷன் வந்திடுத்தே. ஆனாலும் இந்த ராமுடு சுத்த மோசம். இதுக்கெல்லாம் மெட்ராஸ் போகணும் மந்திரியப் பாக்கணும். டைரக்டரை சேவிக்கணும் அப்படி இப்படினு பயம் காட்டிட்டானே. இன்னும் எல்லாம் சீனியாரிட்டிப்படி தானே நடக்கிறது. இதோ நிதர்சணமாத் தெரியறதே. நான் யாரையும் போய்ப் பார்கலே; குழையலே, பைசா தரலே.. ஆட்டோமேடிக்கா வந்துடுத்தே. என் சர்வீஸ் புக் க்ளியர். ஒரு மெமோ கிடையாது.. எல்லா டிபார்ட்மெண்ட் டெஸ்டும் கிரமமா பாஸ் பண்ணிருக்கேன். நான் வேலை பார்த்த எல்லா இட்த்திலேயும் பி. ஆர் வாங்கிப் பாருங்கோ. கண்லே ஒத்திக்ற மாதிரி இருக்கும். டிபார்ட்மெண்ட் ரூல்ஸ் எல்லாம் எனக்கு அத்துப் படி.
ஒரு விசை கவர்னர் எங்க டிபார்ட்மெண்ட் எக்சிபிஷனை பார்க்க வந்திருந்தார். நான் தான் அவரோட பயண ஏற்பாடெல்லாம் கலெக்டர் ஆபிசோட கோஆர்டினேட் பண்ணினேன். அப்பத்தி கலெக்டர் என்னைப் பத்தி சிலாகிச்சி கவர்னரண்டையே ஒரு வார்த்தை சொன்னார். அதை குறிச்சிக்க சொல்லி கவர்னர் தன்னோட காரியதரிசிகிட்ட சொன்னார். ஒரு வாரம் இருக்கும் கவர்னர்கிட்டேயிருந்து ஒரு கடிதாசி வந்த்து. என்னைப் பாராட்டி புகழ்ந்து ஒரு அஞ்சாறு வரி எழுதி கவர்னரே கையெழுத்துப் போட்டிருந்தார். இந்த மாதிரி பாராட்டு வந்தா சர்வீஸ் பொஸ்தகத்திலே பதியனும். அப்ப இருந்த ஈ.ஓ பொறாமைப்பட்டுண்டு கண்டுக்கலை. ஏதாவது சென்ஷியூர், சார்ஜ் மெமோன்னா உடனே அதை காரியமா எழுதுவார் அவர். அப்படி ஒரு நல்ல மனசு.. ஆனா நான் அதை லேசிலே விடலை.. ஒரு விசை கலெக்டர் இன்ஸ்பெக்ஷன் வர்றச்சே நைசா அவருக்கு தேங்க்ஸ் சொல்ற மாதிரி இந்த விஷயத்தை ஞாபகப்படுத்தினேன். அவரே ஈ.ஓ கிட்டே இதெல்லாம் உடனே சர்வீஸ் பொஸ்தகத்தில எழுதணும் தள்ளிப் போடப்பிடாதுனு சொல்லிட்டார். இப்ப அதெல்லாம் பேசிருக்கு அதான் எனக்கு நியாயமான முறையில டர்ன் படி ப்ரமோஷன் கிடைச்சிருக்கு
பேனா வாங்கியாச்சு பச்சை மையும் வாங்கியாச்சு. புது போஸ்ட்லே ஜாயின் பண்ணின உடனே அங்கேயும் ஒரு பாட்டில் மை வாங்கி வச்சிடணும். இங்கே இருக்ற மாதிரி எல்லாரண்டையும் லேசா இருக்கப் பிடாது. கொஞ்சம் கரார் சேத்துக்கணும். அந்த ஜி செக்ஷன் சோம சுந்தரம் மாதிரி. அவனும் என் ரேங்க்தான். ஆனா என்னை மாதிரியில்லியே. மிடுக்கா இருப்பான். அவன் செக்ஷன் ஆளுங்க எல்லாம் சூப்பிரண்ட் சார் சூப்பிரண்ட் சார்னு பவ்யமா இருப்பாளே. அவனும் நானும் ஒரே பேட்ச் ஒரே நாள் ஜாயினிங் டேட் ஆனா இந்த ப்ரமோஷன் அவனுக்கு வரல. அவன் ஒரு டிபார்ட்மெண்ட் டெஸ்ட் எழுதவேயில்லை. நானும் சொல்லிப் பார்த்தேன். அவன் கேக்கலை அவன் எழுதி பாஸ் பண்ணிருந்தான்னா இப்ப அவனும் என்ன மாதிரியே பச்சை மை ஊத்தி பேனாவை ஜோபில சொருகிக்கலாம்.
இன்னிக்கு கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ணனும். அந்தப் பிள்ளையார் சக்தி வாஞ்சவரா இருக்கார். இந்தப் பச்சை மைப் பேனாவை அவர் பாத்த்திலே வச்சி வாங்கணும்.
புது ஆபிஸ் நல்ல இடம் தான். பக்கத்திலே ஒரு நல்ல காபி கிடைக்குமானு விசாரிக்கணும். இவாள்ளாம் ப்ரு காபிதான் போடுவா. டிகாஷன் காப்பியே சாப்பிட்டு நாக்கு பழகிப் போச்சி. அதும் ருசி வேறதுக்கும் வராது. அதும் ‘ஏ’ கிரேட் கொட்டை வாங்கிப் பதமா வறுத்து மெஷின்ல போட்டு மெதுவா கையாலே சுத்தி பொடியோட சிக்கரி சேர்த்து... சிக்கரினோன்ன ஞாபகம் வர்றது. இன்னிக்கி திரும்பிப் போறச்சே வாங்கணும்.
என்ன இந்த ஆபிஸ்ல ஃபைல் மூவ்மெண்ட் தாமதமா இருக்கு. ஆசையா முழு கையெழுத்து ஸ்ரீநிவாசன் அப்படினு ஒரு பைல்ல கையெழுத்துப் போடணும்னு நம நமனு இருக்கு.
நான் எல்லாம் கிரம்மா செய்யணும்னு நினைக்கிறவன். ஜாயினிங்க் ரிப்போர்ட்லே நான் நீலக் கலர் மைலதான் கையெழுத்துப் போட்டேன். காரணம் இருக்கு; இங்க ஜாயின் ஆனதுக்கப்புறம் தானே ஆபிசர். அப்புறம் தான் பச்சை மை. ஆபிஸ் சூப்பிரண்டெண்டெண்ட் ( இப்படித்தான் சொல்லனும் சூப்பிரண்ட் அப்படின்னா என்னவோ கெட்ட வார்த்தை மாதிரி இருக்கு) கிட்டே சொன்னேன். முதல் பைல் அக்கப்போரா ஒண்ணைக் கொண்டு வந்து அப்ரூவ் பண்ணுனு சொன்னா நான் பண்ண மாட்டேன்னு. நல்ல விதமா ஒரு ஆபிஸ் நோட் எழுதி எடுத்துண்டு வந்தா கூட அதுல இனிஷியலுக்குப் பதிலா முழு கையெழுத்து விஸ்தாரமா போடறதுன்னு தயாரா இருக்கேன். இதுக்கோசரம் வெத்து வெள்ளைப் பேப்பர்ல இது வரை ஒரு அம்பது தரம் போட்டுப் பார்த்திருப்பேன். அதெல்லாம் நீலக் கலர் தான். முதல் பச்சை மைக் கையெழுத்து அரசாங்க காகித்த்துல தான். அதும் நல்ல சங்கதியா இருக்கணும்.
மேஜை கண்ணாடிக்குக் கீழே ஸ்வாமி படங்கள் இருக்கு. பரவாயில்ல நாமும் நாளைக்கு ஒரு பிள்ளையார் படம் கொண்டு வந்து வைக்கணும். கண் மூடி நினைச்சிண்டேன். இந்தப் பேனாவினால யாருக்கும் உபத்திரவம் தர்ற் மாதிரி ஒரு மெமோ, சார்ஜ் மெமோ, இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட் இப்படி எதுவும் கையெழுத்துப் போடற மாதிரி வரப்பிடாது. எல்லாம் சுப காரியமாவே இருக்கணும். சாத்தியமில்ல தான். இருந்தாலும் நல்லதே நினைப்போமே.
இதோ என் காபின் கதவை தட்றாளே- முதல் பைல் வந்திடுத்து.
“என்ன சூப்பிரண்டெண்டெண்ட் பஞ்சாபகேசன் சார். நான் சொன்ன மாதிரி ஒரு நல்ல விஷயமான பைல் தானே “ னு கேட்டுண்டே நாடாவை நாசுக்கா பிரிக்கிறேன்.
நான் இந்த டாட்டன்ஹாம் சிஸ்ட்த்தில எத்தனை வருஷம் இருந்திருக்கேன் அப்படினு நான் பைலோட டேப்பை அவிழ்க்ற வித்த்திலேயே தெரிஞ்சிக்கலாம். இருங்கோ முதல் பச்சை மைக் கையெழுத்து. என்ன சப்ஜெக்ட்னு படிக்கிறேன்.
என்ன இது கோர்ட் ஆர்டர் மாதிரின்னா இருக்கு
படிச்சிட்டு பஞ்சாபகேசனை நிமிர்ந்து பாத்தேன்
‘’ ஆமாம் சார். இந்தக் கட்டிடம் வாடகைக் கட்டிடம். இதோட ஓனர். இதைக் நாம காலி பண்ண என்னென்னெவோ செஞ்சார். நாம சரியா நடந்துக்கல. அப்புறம் கோர்ட்டுக்குப் போனார். நாமளும் கௌர்மெண்ட் ப்ளீடர் சொன்னதாலா வாய்தா வாய்தாவா வாங்கி இழுத்தடிச்சிருக்கோம். நான் இங்க வந்தே ஒரு ஆறு வருஷம் இந்த இழுத்தடிப்பைப் பார்த்திருக்கேன். கடைசில கோர்ட் அவருக்கு சாதகமா தீர்ப்பு சொல்லி நாம போன வருசமே காலி பண்ணிருக்கணும். கோர்ட் கெடு தேதி கூட வச்சிருந்த்து. இதுக்கு முன்னே இங்க இருந்த ஈ.ஓ அதை சரியா டிபார்ட்மெண்ட்டுக்கு கன்வே பண்ணலை. இத்தனைக்கும் இந்த வழக்கில நம்ம டிபார்ட்மெண்ட் டைரக்டரும் ஒரு பிரதிவாதி. அவர் தரப்பில ஒரு கௌண்டர் கூட தாக்கல் ஆகிருக்கு. காலி பண்ண கெடு தேதி சொல்லியும் காலி பண்ணாத்தால கட்டிட ஒனர் கோர்ட்டை மூவ் பண்ணி ஜப்தி ஆர்டர் வாங்கிட்டார். இப்ப கோர்ட் ஸ்டாப், போலிஸ் சகிதம் வெளில ஹால்லே உக்கார வச்சிருக்கேன். இதிலே நீங்க உங்க முன்னாடி தான் இந்த ஆபிஸ் ஜப்தி ஆச்சினு கையெழுத்துப் போட்டுத் தரணும். நாம இப்ப ஒண்ணும் பண்ண முடியாது. மேல் கொண்டு அப்பீல் செய்யலாம். அவாள்ளாம் வெயிட் பண்றா”
ஸ்ரீநிவாசன் என்ற என் சின்னப் பெயரை அந்த கோர்ட் காகித்த்தில் தினத்தந்தி தலைப்பு செய்தி அளவில் பச்சை மையில் விஸ்தாரமாய் நான் ஏன் கையெழுத்திடுகிறேன் எனப் புரியாமல் பார்க்கிறார் பஞ்சாபகேசன்
J Krishnamurthy என் ஆதர்சங்களில் ஒருவர். அவரது எளிமையான எழுத்துக்கள் என்னை வசீகரிக்கும் நீண்ட நாள் ஆச்சரியங்கள். அவரின் Sri Lanka Talks ம் Letters to Schools ம் என் புத்தக சேமிப்பில் பொக்கிஷம் என்றே சொல்லுவேன்
கிருஷ்ணமூர்த்தி தான் தொடங்கிய பள்ளியின் மாணவர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுதி.
முன்னுரை பாருங்கள்:
இந்தக் கடிதங்கள் நீங்கள் ஆயாசமாக் இருக்கும் போது படிப்பதற்கல்ல; இவற்றை நான் சிரத்தையுடன் எழுதினதைப் போலவே, சிரத்தையுடன் படியுங்கள். ஒரு பூவை அதன் இதழ், வர்ணம், மணம் கூடிய அழகை பார்த்துப் பயிலுவது போல இந்தக் கடிதங்களையும் பயிலுங்கள்
ஜனவரி 15 1982ல் எழுதப்பட்ட கடிதம் :
I think it is important to learn the art of thinking together. The scientists and the most uneducated human beings think. They think according to their profession, specialization and according to their belief and experience. We all think objectively or according to our own particular inclination, but we never seem to think together, to observe together. We may think about something, a particular problem or experience but this thinking does not go beyond its own limitation.
இப்படியாகத் தொடரும் இந்தக் கடிதத்தை
I am in stream with that which is godness, compassion and intelligence. That intelligence is acting, confronting the madness of the present world. That intelligence will be acting where the ugly is
நான் படித்த காதல் கதைகளிலே மிகவும் சுவாரசியமானதென ”ஸ்வர்ணகுமாரி” யைச் சொல்லலாம். ஸ்வதந்திர போராட்ட காலத்திய கதை. பாரதியார் சுபாவமாகவே ரசனை கொஞ்சம் ஜாஸ்தியான பேர்வழிதான் என நம்பத் தகுந்த மாதிரியான கதை.
கதையின் க்ளைமாக்ஸ் ஒரு கடிதம். ஸ்வர்ணகுமாரி எழுதும் கடிதம்
அதை அப்படியே தருகிறேன்..
“எனது காதலாராயிருந்த மனோரஞ்சனுக்கு,
நெடுங் காலமாக உறங்கி நின்ற நமது சுதேச மாத இப்போது கண் விழித்திருக்கிறாள். நமது நாடு மறுபடியும் பூர்வகால மஹிமைக்கு வருவதற்குரிய அரிய முயற்சிகள் செய்து வருகின்றது. இம் முயற்சிகளுக்கு விரோதமிழைக்கும் கூட்டத்திலே நீயும் சேர்ந்து விட்டாயென்று கேள்வியுற்றவுடனே எனது நெஞ்சம் உடைந்தே போய்விட்டது. இனி உன்னைப் பற்றி வேறு விதமான பிரஸ்தாபம் கேட்கும்வரை உன் முகத்திலே விழிக்க மாட்டேன். பெற்ற தாய்க்கு சமானமான தாய்நாட்டின் மீது அன்பு செலுத்தாத நீ, என் மீது என்ன அன்பு செலுத்தப் போகிறாய்?. நமது வாலிப எண்ணங்களைப் பற்றி நீ திருந்திய பிறகு யோசனை செய்து கொள்ளலாம். நான் காசியிலே என அத்தை வீட்டிற்கு சென்று ஒரு வருஷம் தங்கியிருக்கப் போகிறேன். அங்கே வந்து நீ என்னைப் பாராதிருக்கும்படி பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.”
இந்தச் சின்னக் கடிதம் மட்டுமே மொத்தக் கதையையும் ஓரளவு யூகிக்க வழி செய்யும்படியாக எழுதினது தான் பாரதியின் சாமர்த்தியம்.
இந்தக் கதையை எனது 12 ம் பிராயத்திலிருந்து தொடங்கி இதோ இப்போது வரை எத்தனையோ தடவை படித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் என் கற்பனையில் கதை மாந்தரை சில நடிகர் நடிகைகளாக உருவகப்படுத்தி மனதுக்குள் ஒரு சின்னத் திரை வெள்ளோட்டம் விட்டிருக்கிறேன்