சரித்திரம் புத்தகங்கள் வழியாக அறியப்படுவதை விட சினிமாவின் வழியாக அதிகம் அறியப்படுகிறது. விஷுவல் மீடியாவுக்கு இருக்கும் பலம். அதிலே சொல்லப்படுவது மிகைப்படுத்தலானாலும்., சரிவர சான்றுகள் சரி பார்த்து காட்சிகள் அமைக்கப்படாவிடினும் அல்லது சினிமாவுக்கான வியாபார நோக்கத்தில் செய்யப்படும் சமரசங்களில் சரித்திரம் திரிந்து போகவும் வாய்ப்புண்டு.. ஆனாலும் சரித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர்கள் அதற்கான முத்திரையைப் பெற்று விடுகிறார்கள்
நான் அரசு சார்ந்த பணியில் இருந்த காலம். எங்கள் துறையின் தலைமை நிர்வாக அலுவலரின் மாமனார் இசபெல் மருத்துவமனையில் குடல் நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை நடந்திருந்தது. அவரைப் பார்ப்பதற்காக நான் சென்றிருந்தேன். அவர் திரைப்படத் துறையில் புகழ் பெற்ற ஸ்டில் போட்டாகிராபர் ; ஸ்டில் சாரதி.. சிவாஜி , எம்.ஜி.ஆர் காலத்து திரை ஆசாமி
அவரைக் காண தயாரிப்பாளர் பாலாஜியும் வந்திருந்தார். சாரதி அவர்கள் என்னைக் காட்டி பாலாஜியிடம், " சார் சிவாஜி சாரின் பரம ரசிகர் " என அறிமுகம் செய்து வைத்தார்
நான் பாலாஜியிடம் ஒரு சம்ப்ரதாயக கேள்வி கேட்டேன், " நீங்க நடிச்சதிலேயே உங்களுக்கு பிடிச்ச கேரக்டர் என்ன?"
"கப்பலோட்டிய தமிழனில் வாஞ்சிநாதன் காரக்டர்'
வாஞ்சிநாதன் இத்தனை குண்டாக இருந்திருப்பாரா என்ற என் சந்தேகம் ரொம்ப நாள் கழித்து தீர்கிறது
காலச்சுவடு பதிப்பகம் ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும் எனும் புத்தகத்தால்
இந்தப் புத்தகம் வாங்க மேற்சொன்ன நிகழ்ச்சி மட்டும் காரணமல்ல.
ஆஷ் படுகொலையினை பாரதி ஒரு தனிமனித கொலையாக கண்டு வெறுத்தான் என்பதும் தான். அது எனக்கு உடன்பட்ட கருத்தும் தான்
இது குறித்து பாரதி ஒரு நீண்ட ஆங்கிலக் கட்டுரை எழுதியிருந்தான். அதனை முன்பே படித்திருக்கிறேன். அது இந்த நூலில் மிகச் சிறப்பாக பதியப்பட்டுள்ளது
பாரதி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதியுள்ளார் என்பதை ஒரு ரிலவன்ட் ரெஃபெரென்ஸாகத்தான் இங்கே குறிப்பிடுகிறேனேயல்லாது சர்வதேச அளவில் விருது வாங்க ரொம்ப சீரியசாக கனவு கண்டு கொண்டிருப்போரின் பொது அறிவு குறித்து நான் மறைமுகமாக ஏதும் குறிப்பிடவில்லை எனத் தெளிவு கொள்க
ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் என்ற ஆக்கத்திற்காக நான் அதன் ஆசிரியர் திரு ஆ. சிவசுப்ரமணியன் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாகிறேன்.
இது போன்ற ஆக்கங்களில் எத்தனை எளிமை கை கூட வேண்டுமோ அத்தனை எளிமையினையும்., எத்தனை கட்டுக் கோப்பு அவசியமோ அதனையும் சேர்த்து கொடுத்துள்ளார். சான்றுகளை மிகக் கோர்வையாக வரிசைப்படுத்தி தந்துள்ளார்
இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். பேசும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை சென்ற போது எனது நண்பர் மு. பாண்டியன் என்னை ஆஷ் துரையின் கல்லறைக்கு அழைத்துச் சென்ற சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டேன்.
இங்கே நான் தந்துள்ள படம் ஆஷ் கல்லறையின் படம்
அந்த கல்லறை அமைந்துள்ள தேவாலயத்திற்கு Christ Church என பெயர் இருந்தாலும் அது இங்கிலீஷ் சர்ச் என்றே அழைக்கப்படுகிறது
அங்கே இன்றளவும் ஆங்கிலத்தில் தான் சர்வீஸ் நடக்கிறது என்ற தகவலை திரு. சிவசுப்ரமணியன் சொன்னார்.
எனது பள்ளிக் காலத்தில் எங்கள் பள்ளிக்கு பக்கத்து வீட்டில் தான் வ.உ. சிதம்பரம் அவர்களின் புதல்வர் திரு வாலேசுவரன் வசித்தார் எனச் சொல்லி அப்போது பள்ளிப் பருவம் ஆதலால் அவருடன் உரையாடி வ.உ.சி அவர்களைக் குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்திருக்கவில்லை என சொன்னபோது,
"நீங்கள் அதிகம் ஒன்றும் தவறவிடவில்லை . வ.உ.சி மறைந்த போது திரு. வாலேசுவரன் அவர்கள் மிகவும் இளம் பிராயத்தவர்தான்" என்ற யதார்த்தத்தையும் சொன்னார் திரு .சிவசுப்பிரமணியன்
நான் இந்தப் புத்தகத்தை அதிகம் சிலாகித்துக் கொண்டே பின்னட்டையினைக் கவனித்தேன்.
சரித்திர சான்றுகளைச் சார்ந்த புனர்நிர்மாணம் என்ற அறிவுலக ஒழுக்கத்திற்கு இது ஒரு அபூர்வ உதாரணம். முன்னெண்ணங்களிலிருந்து முற்றாக பெற்ற விடுதலையும் விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சியில் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்ட உதாரணம்
இப்படி சொல்ல வேறு யாரால் முடியும் .. சாட்சாத் சுந்தர ராமசாமி தான்
1 comment:
பயங்கரவாதக் கலாசாரத்தைப் பற்றி பாரதி என்ன நினைத்தான்?
பயங்கரவாதக் குழந்தை இறந்தே பிறந்தது என்று தெரிவிக்கிறான். கணவனும் மனைவியுமாக கலெக்டர் ஆஷும் அவன் மனைவியும் விடுமுறைக்காகச் சென்றுகொண்டிருக்கையில், தங்களுக்குள் அன்பு பாராட்டிக் கொண்டிருக்கையில் இப்படிக் கொன்றதில் தனக்கு உடன்பாடில்லை என்று சந்தேகத்திற்கிடமில்லாமல் The Political Evolution in the Madras Presidency என்ற கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கிறான்:
"Now this was a tragedy, which quite apart from its terrible political consequences, had pathetic traits from the social and human points of view also, Collector Mr. Ashe of Tinnevelly who as travelling with none but his wife in his company, was taking a pleasure trip to Kodaikanal, a famous sanatorium situated in the adjacent District of Madura. Again an outrage to the Hindu religion; for the murdered had his wife by his side. They were a young, and to all appearance, a loving couple. They were having a pleasure trip in each other's company. A scene like that would very profoundly appeal to the heart of the devout Hindu.......
............For let a man and woman but sincerely love each other, you will find them a very edifying and solemn spectacle while in each other's company...."
இது போலவே, ஸ்பெயின் அரசர் அல்போன்ஸாவும்,விக்டோரியா மஹாராணியின் பேத்தி ஏனாவும் திருமணம் செய்துகொண்டு அவர்கள் மீது Anarchistகளால் குண்டுவீசப்பட்ட செய்தியைக் கேட்டு வருந்தி, அதனைத் தனது கட்டுரையிலும் கீழ்க்கண்டவாறு வெளியிட்டான் பாரதி.
"இந்த விவாகத்தின்போது வெடிகுண்டு எறிந்த மாத்யூ மாரல் என்பவன் தன்னைப் பிடிக்க வந்த போலிஸ் சேவகனைச் சுட்டுக் கொன்ற பிறகு தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துபோய்விட்டான். உயிரை வெறுத்து இந்தக் கூட்டத்தார் இப்படி ஓயாமல் பெரும் பாதகங்கள் செய்வதன் காரணம் என்ன என்பது யோசனைக்குரிய விஷயம்." இதற்குப் பிறகு அனார்கிஸ்டுகளுடைய நியாயத்தை விளக்குகிறான்.
"இவர்களுடைய நினைப்பு ஒருவேளை நியாயமாயிருந்த போதிலும் இவர்களது செய்கை மிகவும் மிருகத்தனமானது என்பதில் தடையில்லை."
வாஞ்சிநாதனும் இதைப்போன்றே ஆஷ் துரையைக் கொன்ற உடன், தற்கொலை செய்துகொண்டது தெரிந்த விஷயம்.
பகத்சிங்க் கூட, Anarchism மற்றும் Marxism மீது மிகுந்த ஈடுபாடு உடையவனாக புத்தகங்கள் சொல்கின்றன.இந்த இடத்தில், பகத்சிங்கைப் பற்றி சொல்லக் காரணம்,பகத்சிங்க் இறந்த நாள் 23-மார்ச்-1931.அதாவது, இன்று பகத்சிங்கின் நினைவுநாள்.
மதன்லால் திங்ரா என்றொரு இளைஞன் லன்டனில் கர்சன் விலியைக் கொன்றான். மதன்லால் திங்ரா தூக்கிலிடப்பட்டு சிறைச்சாலையிலேயே புதைக்கப்பட்டான். இதற்குச் சில நாட்கள் கழித்து கிளாஸ்கோவில் ஒரு பருத்தி ஆலை தீ விபத்துக்குள்ளாகி பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. மதன்லால் திங்ராவின் உடலைக் கொடுக்க மறுத்ததால் அக்னி பகவான் சீற்றமுற்று இவ்வாறு செய்தார் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் வ.வே.சு. ஐயர் இந்தியா பத்திரிக்கைக்குச் செய்தி எழுதினார். இதனை வெளியிட்ட அடுத்த வாரம் பாரதி இவ்வாறு எழுதினான்,
"அற்பத்துக்கெல்லாம் சந்தோஷித்துப் பழி வாங்கும் இழிவான குணம் ஆர்யர்களுடையதல்ல. நமது நாட்டில் ஒரு நாளும் கேட்டிருக்க முடியாத வெடிகுண்டு முதலிய செயல்கள் அநாகரிமானவை."
இதுபோன்ற வெடிகுண்டுக் கலாச்சாரங்களைப்பற்றிப் பேசுகையில் அதை அடியோடு மறுத்த காந்தியைக் குறிப்பிடாமல் இருக்க இயலவில்லை
அதிதீவிரவாதியான வ.வே.சு. ஐயர் காந்தியைச் சந்தித்த பின் தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார். காந்தியைப் போலவே பாரதி கொலைவழியை மறுத்தார்.
”பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனினும் திறன்பொதுடைத்தாம்
அருங்கலைவாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்றுநீ யறிந்தாய்”.
என்று காந்தியை பாரதி புகழ்வதன் காரணமும் அதுவே.
அஹிம்சையைப் பெருங்கொலை என்கிறான் பாரதி.
Post a Comment