Saturday, 22 January 2011

34TH BOOK FAIR -CHENNAI - PART 3




கிழக்கு பதிப்பகம் ஹரன் பிரசன்னாவின் கவிதை தொகுப்பு நிழல்கள் (தடம் வெளியீடு)

நான் திருத்துறைப்பூண்டிக்கு ட்ரான்ஸ்பர் ஆனவுடன் அங்கே பாச்சுலர் ஜாகைக்கு ஆரம்பத்தில் சிரமப்பட்டேன். வேதாரண்யம் சாலையில் ஒரு மான்ஷன் இருக்கிறது என ஆபிசிலே சொன்னார்கள் என மிக தைரியமாக சாமான்களுடன் அங்கே சென்றேன். அது லாட்ஜா அல்லது மான்ஷனா என குழப்பமான கட்டிடம். வெளிச்சமே வராத அறைகள். எப்படியோ சில மாதங்கள் சமாளித்தேன். அங்கே இராகவேந்திரன் என்ற பி.டபிள்யூ.டி இன்ஜினியர் அறிமுகம் ஆனார். அவர் மூலமாகத்தான் முத்துப்பேட்டை ரோட்டிலே புதுசாக அம்சமாக ரூம்கள் தயாராகி வருவதாக அறிந்து அங்கே புலம் பெயர்ந்தேன்.

அந்த புது ரூமைக் குறித்து இப்படி விஸ்தரிப்பதற்கு காரணம் அங்கே தான் கவிதை எனும் பார்மாட்டினை சுவைக்க தொடங்கினேன். கணையாழி படிக்க ஆரம்பித்ததும் அங்கே தான். கணையாழியின் கடைசி பக்கத்தில் ஒருதரம் என்னைக் குறித்து சுஜாதா எழுதியதும் அந்த கால கட்டத்தில் தான்.

புது அறையிலிருந்து அலுவலகம் செல்ல இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று மெயின் ரோட்டுக்கு வந்து கடைகளை வேடிக்கை பார்த்தபடி நடப்பது. இன்னொன்று ஊருக்கு குறுக்கே ஓடிய ஒரு கால்வாயின் மீது கட்டப்பட்ட சின்ன பாலத்தை கடந்து செல்வது. நான் பெரும்பாலும் இரண்டாவது வழிதான் செல்வேன்.

பாலத்தை தாண்டி அந்தக் கரைக்கு போனபின்பு கரையிலேயே கொஞ்ச தூரம் போனால் தான் தார் ரோடு வரும். அப்படி கரையிலே போகும் போது உடைந்த வளையல் துண்டுகள், உதிர்ந்த மல்லிகைப் பூக்கள் என தவறாமல் பார்ப்பேன். முந்தைய தினம் இரவில் நடந்திருந்த ஒரு தப்புக் காரியத்தின் சாட்சிகள் அந்த ஊரைக் குறித்து நினைக்கும் நாளெல்லாம் வரும்.

அங்கிருந்து ட்ரான்ஸ்பர் ஆன பின்பு என்ன காரணமோ கவிதைகளை தேடிப் படிக்கும் பழக்கம் போய்விட்டது.

நெடுநாட்களுக்கு பின்பு இணையத்தில் உலவும் போது

வழுக்கும் வரப்பில் கால்குத்தி நிறுத்திய கண்ணாடி வளையலின் ஒரு துண்டு ...

என ஹரன்பிரசன்னாவின் வரிகள் கண்ணில்பட்டன. என்னை மீண்டும் திருத்துறைப்பூண்டிக்கும் கவிதைகளின் பக்கமும் இழுத்து வந்தன‌

வழுக்கும் வரப்பில்

கால்குத்தி நிறுத்திய

கண்ணாடி வளையலின் ஒரு துண்டு

- கால்கள் பின்னியிருந்ததை

- வெம்மை பரிமாறப்பட்டதை

- வெற்றுடல்களின் போர்வையாய் இருள் இருந்ததை

நேற்றிரவுக்குள் தள்ளுமுன்

நினைத்தேன்-

கண்ணுள்ள பானைத்தலை

கந்தல் வெள்ளையாடை

வெக்கங்கெட்ட சோளக்காட்டு பொம்மை

கண்மூடியிருக்காது என

5 comments:

cheena (சீனா) said...

அன்பின் சந்திரமௌளீஸ்வரன்

கொசுவத்தி சுத்தினீங்களாக்கும். பலே பலே ! நானும் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி எல்லாம் சுத்தி இருக்கேன். சொந்தக்காரங்க இருந்தாங்க. கவிதை சூப்பர் - கற்பனை வளம் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் சந்திர மௌளீஸ்வரன், எனது செல்ல மகள் - இளைய மகள் - கணையாழியில் கதை எழுதிய காலமும் உண்டு. நினைத்துப் பார்த்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

BalHanuman said...

அன்புள்ள சந்திரமௌளீஸ்வரன்,

இது உங்கள் கவிதையா அல்லது ஹரன் பிரசன்னாவின் கவிதையா ? குழப்பத்திற்கு மன்னிக்கவும்.

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

//இது உங்கள் கவிதையா அல்லது ஹரன் பிரசன்னாவின் கவிதையா ? குழப்பத்திற்கு மன்னிக்கவு//

ஹரனுடையது.. பதிவில் அதை தெளிவாக சொல்லிருக்கேன். குழப்பம் ஏன்

Essex Siva said...

சுஜாதா உங்களைப்பற்றி கணையாழியில் எழுதினது பற்றி தெரிந்து கொள்ளலாமா?
நன்றி!

Essex சிவா