Sunday 5 June 2011

கவர்னர் உரை‍ 1

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜீன் 3 அன்று கவர்னர் ஆற்றிய உரையிலிருந்து இரண்டு அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த சிறிய தொடர் பதிவினை பகிர்ந்து கொள்ள உத்தேசிக்கின்றேன்

முதல் அம்சம் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்பட்டு மோனோ ரயில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

அது என்ன மெட்ரோ அது என்ன மோனோ என கவனிக்கலாம். புரிந்து கொள்ளும் வசதிக்காக எளிமைப் படுத்தி சொல்வதெனில் ஒற்றைத் தண்டவாளத்தைக் கவ்வியபடி இயங்கும் ரயில் வண்டியினை மோனோ என சொல்லலாம். மெட்ரோ ரயிலுக்கும் சாதாரண ரயிலுக்கும் வித்தியாசமில்லை என சொல்லலாம். மோனோ என்பது 'ஒற்றை" என்பதைக் குறிக்கும் சொல். மோனோவோ மெட்ரோவோ இரண்டும் தரையில் இயங்குவதாலோ அல்லது உயரமாக்கப்பட்ட ப்ளாட்பாரத்தில் இயங்குவதாலோ வேறுபட்டதல்ல. தண்டவாளம் எனும் Rail தான் வித்தியாசம்

அமைய உள்ள மோனோ ரயில் மெட்ட்ரோ ரயிலுக்கான மாற்று என்பதாக கவர்னர் உரையில் தொனிக்கப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில் தொடர்பான சில விபரங்களைச் சொல்வது பொருத்தமாக இருக்கும்

சென்னையில் தினசரி அதிகரித்துக் கொண்டே வரும் போக்குவரத்து தேவைகளைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டம் வடிவம் பெற்றது. இந்த திட்டம் ஏனைய போக்குவரத்து கட்டமைப்புகளான பேருந்து, நடைமுறையில் இருக்கும் சப் அர்பன் ரயில்கள், பறக்கும் ரயில் என செல்லமாக அழைக்கப்படும் எம்.ஆர்.டி எஸ் இவற்றுடன் தேவையான அளவு இன்டகெரெட் செய்துகொள்ளும் வண்ணமாக இருக்கும்படி வடிவம் கொண்டது
இந்த திட்டம் வடிவமைப்பு பெறும் ஆரம்ப கட்டத்திலேயே மோனோ ரயில் அமைப்பும் பரிசீலிக்கப்பட்டு மோனோ ரயில் அமைப்பு உத்தேசிக்கப்பட்ட தடத்தில் ஒரு மணி நேரத்தில் 10000 பயணியரை மட்டுமே சுமந்து செல்ல இயலும் ஆனால் மெட்ரோ ரயில் 30000 பயணியரை சுமந்து செல்ல இயலும் என்ற ஆய்வு முடிவின் காரணமாக மெட்ரோ ரயில் முறை தேர்வு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தினை செயல்படுத்திட தமிழக அரசு Chennai Metro Rail Limited எனும் நிறுவனத்தினை கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்து டிசம்பர் 3 2007 அன்று தொடங்கியது .

பின்னர் இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு இரண்டும் சேர்ந்து நிர்வகிக்கும் நிறுவனமாக மாற்றப்பட்டது . மத்திய , மாநில அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் பொறியியல் வல்லுநர்கள் இதன் தலைமை நிர்வாகப் பொறுப்பில் உள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஆலோசகராக அதாவது கன்சல்டன்ட்டாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்புக் கொண்டு அதற்கான முறையான நிர்வாக ஆவணங்களும் பதிவாகின.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு பகுதிகளாக நடைமுறைப் படுத்த திட்டம் வடிவமைக்கப்பட்டது இதனை காரிடார் 1 என்றும் காரிடார் 2 என்றும் பெயர் கொடுத்தனர்.

காரிடார் 1 : வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை 23.1 கி மீ தூரமுள்ள தடமாகவும்

காரிடார் 2 : சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து செயின் தாமஸ் குன்று வரை 22 கி மீ தூரமுள்ள தடமாகவும் திட்டமிடப்பட்டது

இரண்டு காரிடார்களிலும் தடம் தரைக்கு கீழேயும், உயர்த்தப்பட்ட தளத்தில் இயங்கும் வகையிலும் திட்டமிடப்பட்டது திட்டம் பொறியியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தயாரிக்கப்பட்டு நவம்பர் 7 2007 அன்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு அதன் பின்னரே சென்னை மெட்ரோ ரயில்
நிறுவனமும் அமைக்கப்பட்டது

இந்த திட்டத்தினை 28 ஜனவரி 2009 அன்று மத்திய அரசு அங்கீகரித்தது . திட்டத்தின் மொத்த மதிப்பீடு 14000 கோடி என மதிப்பிடப்பட்டு இதில் தமிழ் நாடு அரசும் மத்திய அரசும் கூட்டாக 41 % சதவிகிதம் ஏற்பது எனவும் மீத தொகையினை Japan International Cooperation Agency (JICA). கடனாக வழங்க சம்மதித்து . இந்திய அரசுக்கும் அந்த ஜப்பான் நிறுவனத்திற்கும் இடையே 28 நவம்பர் 2008 அன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடன் ஒப்பந்தம் கையொப்பமானது

இந்த திட்டத்தினை செயல்படுத்த டென்டர் விடப்பட்டு கீழ்கண்ட நிறுவனங்களுக்கு

M/s. Soma Enterprise Limited
M/s Consolidated Construction Consortium Limited
M/s Tantia Construction Limited
M/s. Larsen & Toubro Limited (L&T)
M/S Transtonnelstroy-Afcons JV
M/S Metro Tunnelling Chennai L&T-SUCG JV
M/s Alstom Transport S.A & Alstom Projects India Ltd Consortium
M/S Gammon-OJSC Mosmetrostroy JV
M/S Siemens, AG and Siemens India Limited Consortium
M/S Voltas Ltd
THE Nippon Signal Co Ltd
M/S Emirates Trading Agency LLC, Dubai and ETA Engineering Private Limited, India Consortium

தரைக்கு கீழே உள்ள நிலையங்களுக்கு ஏர்கண்டிஷன் செய்வது, தானியங்கி டிக்கெட் வழங்கும் மெஷின்கள் அமைப்பது பராமரிப்பது, குகைப் பாதைக்கான காற்று வசதி மற்றும்

வென்டிலேஷன் வசதி அமைப்பது பராமரிப்பது,சிக்னல் சிஸ்டம் அமைப்பது பராமரிப்பது, தண்ட்வாளங்கள் அமைப்பது பராமரிப்பு, ரயில் பெட்டிகள் வழங்குவது, மின்சார அமைப்புகள் அமைப்பு பராமரிப்பு இது போன்ற திட்டத்தில் தொடர்புடைய பல பணிகளுக்கு டெண்டர் மூலம் முடிவு செய்யப்பட்டு ஆர்டர் வழங்கப்பட்டு ஆங்காங்கே பணி நடைபெற்று வருகிறது

இந்த திட்டம் மாநில அரசின் திட்டம் மட்டுமல்ல மத்திய மாநில அரசுகளின் கூட்டு செயலாக்கம். அதன்றி ஜப்பானில் உள்ள நிறுவனம் மத்திய அரசிடம் செய்து கொண்ட கடன் ஒப்பந்தத்தின் மூலம் கடனாகப் பெறும் தொகையில் வடிவம் பெறும் திட்டம். மத்திய அரசும், ஜப்பானிய நிறுவனமும் திட்டத்தின் மதிப்பீடுகள், திட்டத்தில் தொடர்புடைய பொறியியல் , வருவாய், நிதி, முதலிய அம்சங்களை கவனத்தில் கொண்ட பின்பு தான் இதற்கான ஒப்புதலை வழங்கவும், உரிய முதலீட்டைச் செய்யவும் , கடனை வழங்கவும் சம்மதித்துள்ளன .
அப்படியான நிதியினை வழங்கியுமுள்ளன .

அதன் அடிப்படையிலேயே திட்டம் செயலாக்கம் பெற கட்டுமானம் மற்றும் பிற பணிகளுக்கு டென்டர் விடப்பட்டு பல உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்டர் பெற்று பணி தொடங்கியுள்ளன‌

இப்போது மெட்ரோ மோனோ ரயிலாகும் என்ற அறிவிப்பினால உண்டாகும் கேள்விகள்

1. மெட்ரோ ரயில் அமைப்பு முழுவதும் கைவிடப்பட்டு மோனோ என்பதாகுமா

2. அதே வழித் தடங்களா இல்லை புதியனவா

3. இந்த மாற்றத்திற்கு இந்த் திட்ட செயலாக்கத்தின் இணை பொறுப்பாளரான மத்திய அரசின் அனுமதி ஒத்துழைப்பு எவ்வாறு அமையும். காரணம் மத்திய அரசில் திமுக வகிக்கும் பங்கு

4. . தனது உத்திரவாதத்தின் மீது ஜப்பானிய நிறுவனம் வழங்கியுள்ள கடன் தொகைக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டாமா

5. ஆர்டர் பெற்று இது வரை பணி செய்துள்ள நிறுவனங்கள் என்ன செய்யும் ; தமிழக் அரசு என்பது ஜெயலலிதாவுக்கோ அல்லது கருணாநிதிக்கோ சொந்தமானதல்ல ; TamilNadu Government Functions in a Common Seal and has perpetual succession எனும் தார்மீக சட்டம் சார்ந்த கோட்பாடு அந்த நிறுவனங்களுக்குத் தெரியாதா

மெட்ரோ அல்ல மோனோ ரயில் எனும் மாறுதல் அறிவிப்பு வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல . அல்லது இரண்டு தண்டவாளம் அல்ல ஒரே தண்டவாளத்தில் இயங்கும் மோனோ ரயில் எனும் ஜஸ்ட் லைக் தட் அறிவிப்பும் இல்லை. இதனுடன் இணைந்து Engineering related Plans, நிர்வாகம், நிதி, வருவாய், மத்திய அரசு, அதனுடன் உறவு, அதன் முதலீடு, ஜப்பான் நிறுவனம், அது வழங்கிய கடன், வேலை தொடங்கிய கம்பெனிகள், அவற்றின் நிதி, வருவாய் என்பதன்றி சட்டம் சார்ந்த பல அம்சங்கள் கொண்டது.

காத்திருப்போம். இந்த புது (! ?) திட்டம் எத்தனை எதிர்ப்புகள சந்தித்த பின் வடிவம் பெற வேண்டும் என்பதை நினைக்கும் போது இன்னும் எத்தனை காலம். அந்த காலத்திற்கு இத்தனை தொகைக்கு என்ன வட்டி எனும் கேள்விகள் உதிக்கின்றன‌

(அடுத்த பதிவில்)

3 comments:

Amirthanandan said...

சென்னையின் மக்கள்தொகை வளர்ச்சிக்கு இரண்டு திட்டமும் தேவைப்படுகிறது. "மோனோ" செலவில் மட்டுமல்ல, பராமரிப்பு மற்றும் இடவசதியிலும் சாதகமானது. ஆனால் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டத் திட்டத்தைப் பாதியில் கைவிடுவது என்பதற்கான சரியான காரணம் சொல்லாத போது, நம் உட்கட்டமைப்பிற்கான வளர்ச்சியில் வெளிநாட்டின் உதவி தடைபடும். முக்கியமாக நம்பகத்தன்மை கெட்டுவிடும். உடனடியாக மோனோரயில் திட்டத்தை செயற்படுத்தி விட்டு, மெட்ரோவை சற்று தாமதமாகவேனும் செயற்படுத்தியே ஆகவேண்டும்.

"வழக்கம் போல் அருமையான தகவல்களுடன்" பகிர்ந்தமைக்கு நன்றி சகோ!

ஸ்ரீனி said...

இப்படி ஏன் பாகம் பாகமா போட்டு மண்டைய காய விடுறீங்க? டெக்னாலாஜி எங்கே போயிடுச்சி .. இன்னும் பழைய வார இதழ் கணக்கில் தொடர்கள் தேவையா?

நன்றாக எழுதுறீங்க. ஒரே பாகமா எழுதுங்களேன். :((((((((((

snkm said...

மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப் படும் என்று சொல்லப் படவில்லை, மெட்ரோ ரயிலுடன் மோனோ ரயில் திட்டமும் செயல் படுத்தப் படும் என்று சொல்லப் பட்டுள்ளது. மோனோ ரயில் தனக்குத் தேவையான சக்தியை தானே தயாரித்துக் கொள்ளும் வல்லமை படைத்தது. மெட்ரோவிற்கு மின்சாரம் தேவைப்படும். நன்றி!