என்னோடு தொடர்பில் இருக்கும் மனிதர்களை வகைப்படுத்துவது என்பது சிக்கலான சங்கதி என்றாலும், இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டேன்.
1. நான் உதவி கேட்பவர்கள் அல்லது நான் நாடிச் சென்று விபரம் கேட்பவகள்
2. என்னிடம் உதவி கேட்பவர்கள் அல்லது என்னை நாடி வந்து விபரம் கேட்பவர்கள்
இந்த வியாஜ்யம் 2 வது வகையினரைப் பற்றியது. முதல் வகையில் பிராதன இடத்தில் என் மனைவி இருப்பதால் அந்த வகையினரைக் குறித்து எழுதப் போய் உண்டாகும் சிக்கல்களைத் தவிர்க்கவே இப்படி ஏற்பாடு.
என்னிடம் உதவி கேட்பவர்கள் அல்லது என்னை நாடி வந்து விபரம் கேட்பவர்களை இன்னும் சின்ன சின்ன உப பிரிவுகளாக பிரித்துக் கொள்கிறேன்
1. நான் மனித வள மேம்பாட்டுத் துறையில் இருப்பதால் தனது, அல்லது தெரிந்தவர்களின், அல்லது உறவினர்களின் கரிகுலம் விட்டே தந்து இவனுக்கு / இவளுக்கு ஒரு நல்ல வேலை இருந்தா பாரேன்... இப்படியானவை
2. என் தம்பி பையன் + 2 படிக்கிறான்.. உனக்குத் தெரியுமே ...படிப்பிலே கவனமே இல்லை...உன்னண்டை அழைச்சிண்டு வரேன். கொஞ்சம் கௌன்சிலிங் செய்யணும்.. அதுவரை என்னிடம் திரிஷா, சமீரா என பேசிக் கொண்டிருந்த அந்த தம்பி பையனை தர்ம சங்கடப்படுத்தும் அண்ணன்கள்
3. என் மச்சினி ரயில்வே பரிட்சை எழுதறா வரும் ஞாயித்துக் கிழமை பரிட்சை. ந்யூமரிக்கல் எபிலிட்டி, லாஜிக்கல் ரீசனிங் இதுக்கெல்லாம் க்ளாஸ் எடுக்கிறாய் உங்கிட்ட ட்ரெயினிங் எடுத்தால் நல்லது என சாமிநாதன் சொன்னான், என அந்த ஞாயிற்றுக் கிழமைக்கு முந்தின வெள்ளிக்கிழமை நடு ராத்திரி போன் செய்பவர்கள்
4. என் ஆத்துக்காரியோட பெரியப்பா.. ரிட்டயர் ஆய்ட்டார் .. அவருக்கு பென்ஷன் நிர்ணயம் ஆனதிலே நிறைய குழப்பம். ஏஜிஎஸ் ஆபிசிலே சரியாகவே பதில் சொல்ல மாட்டேங்கறா . ஒரு பெட்டிஷன் தயார் செய்யனும். அல்லது ஒரு ரிட் பெட்டிஷனே போட்டாலும் தேவலை என ஹை கோர்ட்டை லீசுக்கு எடுக்கும் உத்தேசத்துடன் வரும் அழைப்புகள்
5. என்னிடம் புத்தகங்கள் குறித்து பேசுபவர்கள்
கரிகுலம் விட்டே தந்து வேலை கேட்பவர்களை முதலில் கவனிக்கலாம்
என்னிடம் வரும் விண்ணப்பங்களின் மீது கராறான பார்வை கொண்டவன் என்பது இப்படி ககுவி தருபவர்களுக்கு முதலில் தெரிவதில்லை. இந்த சமரசம் இல்லாத என் குணம் , என் வேலையினைப் பத்திரப்படுத்திக் கொள்வதிலும் இருக்கிறது. வரிசையாகச் சொன்னால் புரிந்துவிடும்
காலேஜ் வாசல் விட்டு வெளியே வந்த உடன், கம்பெனி வாசலுக்கு வேலைக்குப் போகும் உத்தேசம் உள்ள இளைஞர்களை, சந்திரமௌளீக்கிட்ட சொல்லிருக்கேன். நீ போய் பாரு என அனுப்பி வைக்கின்றார்கள். இப்படியானவர்களை, என்னை, ஆபிசிலே வந்து பாருங்கள் என சொன்னால் கேட்க மாட்டேன் என அழிச்சாட்டியமாக ஞாயிற்றுக் கிழமை மத்தியானம் மிகச் சரியாக 3 மணிக்கு, என் வீட்டுக்கு வந்து டிங் டாங் என காலிங் பெல் அடிக்கிறார்கள். என் ப்ளாட்டில் காலிங் மணி வைத்தவர் போன ஜென்மாவிலே கோவிலில் மணி அடிக்கும் வேலை செய்திருக்கனும். கொஞ்ச வால்யூமில் அழைப்பு மணி அடிப்பதன் சாத்தியத்தினைத் தெரியாமலே இருந்தவரால் தான் , ரூமைப் பூட்டிக் கொண்டு, தூங்குபவனிக் காதுக்குப் பக்கத்திலும் அதிக டெசிபலில் மணி சத்தம் கேட்க வைக்க முடியும்
(தொடரும்)
4 comments:
அண்ணா, இதில் நான் எந்த ரகம்? சீக்கிரம் அடுத்த பகுதியும் போடுங்க..
அன்பின் மௌளி - அன்புத் தொல்லை என்பது இதுதான். தவிர்க்க் இயலாது - முடிந்த வரை உதவ முயலவும். இயலாதெனில் முதல் சந்திப்பிலேயே இயலாது எனக் கூறி விடவும். நம்பிக்கைச் சொற்கள் முகதாட்சன்யத்திற்காகக் கூற வேண்டாம். நட்பு முறியும் எனத் தெரிந்தாலும் இயலாது எனக்கூறவும் மன தைரியத்தினை வளர்த்துக் கொள்ளவும். நல்வாழ்த்துகள் மௌளி - நட்புடன் சீனா
அண்ணா, ஐந்தில் கடைசி நான்கில் எப்படியும் நானும் சேர்ந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். முழுதாகப் படித்துவிட்டு பிறகு திருத்திக்(என்னை) கொள்கிறேன்.
அன்பின் மௌளி,
மிகவும் நொந்து போயிருக்கிறீர்கள் என்று புரிகிறது. நண்பர் சீனாவின் அறிவுரைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
Post a Comment