Thursday, 20 October 2011

டைரிக் குறிப்பு -2

இப்படி டைரி எழுத ஆரம்பித்ததை நினைத்துப் பார்க்கின்றேன். இப்போதும் டைரி எழுதாமல் தூங்கப் போவதில்லை. இப்போதெல்லாம் மின் டைரி என்பதாக மென்பொருள் வந்துவிட்டபடியால்.. எழுதி வைத்து இடத்தை அடைத்துக் கொண்டில்லாமல் இருக்கிறது..

இடத்தை அடைத்துக் கொள்வதாக இருந்தாலும், அந்தப் பழைய டைரிகள்.. நானா இப்படிச் செய்தேன் என்பதாயும்.. அட இவர் இப்படியல்லவா என்பதான சுவாரசியங்கள் நிறைந்தவை அல்லவா..

ராஜா... இவர் இப்படியல்லவா என்று நினைக்க வைக்கும் நபர்.. இன்றைக்கு மிகக் காலையிலேயே கண்ணில் பட்ட ஒரு பழைய நாள்..

அதிலிருந்து..

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மார்க்கத்தில் இருக்கும் ஒரத்தநாட்டில் அதே மார்க்க சாலையில் புதூர் மேன்ஷன் என அறியப்பட்டதான , என்னையொத்த கலியாணமாகாத பிரம்மச்சாரிகள் தங்கியிருக்கும் கட்டிடத்தில், இரண்டாவது மாடியில் என் ரூமுக்கு எதிரே இருக்கும் சொற்ப இடத்தில், சின்னதான மடக்கு நாற்காலியினைப் போட்டுக் கொண்டு, சாலையினை வேடிக்கை பார்த்தவாறு உட்கார்ந்திருந்தேன்.

வேடிக்கை பார்க்க என்ன இருக்கிறது.. ஐந்து நிமிஷத்திற்கு ஒரு தரம் தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் பஸ் ஒன்று புழுதிக் கிளப்பிக் கொண்டு ராஜேந்திரன் டீ கடைக்கு எதிரே நிற்கும். அதிலிருந்து இறங்குபவரெல்லாம் தன் கடையில் டீ குடிக்க வருவார்களா என அவன் ஏக்கமாகப் பார்க்கிறான் என நினைத்துக் கொள்வேன். ஆனால் எதிர் சாரியில் மறு மார்க்கத்தில்

பார்த்திருக்கின்றேன்.ஒரு பஸ் வந்து இவன் கடைக்கு சற்று முன்பே நிற்கும் போது, அதிலிருந்து இறங்குபவரில் சிலர் இவன் கடைக்குள் நுழைவதை பார்த்திருக்கின்றேன்


அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமையாதலால் இந்த ரஸ்தாவிலே நடந்து போகும் ஜனங்களைக் கூட அதிகம் காணோம். காலையில் தஞ்சாவூருக்கு போய் சினிமா பார்த்து விட்டு வந்ததற்கு பதில் ஃபர்ஸ்ட் ஷோவுக்கு போயிருந்திருக்கலாம்..

அதோ ரோட்டிலே பாண்டி ஆடிக் கொண்டு போகும் பெண் எத்தனை தரம் நொண்டி அடித்துப் போகிறாள் என்பதை விரல் விட்டுக் வேறு எண்ணிக் கொண்டிருக்கின்றேன்

பாய்லரை விட்டு அகன்று, கடை வாசலுக்கு வந்து பீடி பற்ற வைத்த ராஜேந்திரனை கை தட்டி அழைத்து சைகை செய்தேன். டீ அனுப்புகிறேன் என பதிலுக்கு அவனும் சைகை செய்தான்.

சரி தான் ஒரு புத்தகத்தை எடுத்து விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்குவோம் என நினைத்து, ரூமுக்குள் நுழையலாம் என எழுந்தேன். வதங்கிப் போன கத்திரிக்காய் நிறத்தில் அந்த அம்பாசிடர் கார், கட்டிடத்தின் முன்பு வந்து நின்றது. அந்த கலரில் லோகத்தில் ராஜா ஒருத்தர்தான் கார் வைத்திருப்பார் என்பது என் தீர்மானம்

அந்தக் காரின் பானட்டின் மீது, ஆளும் கட்சிக் கொடி பறப்பதால், இவர் இன்ன கட்சியைச் சார்ந்தவர் என தெரிந்து கொள்ளலாம்.

சொன்னது போலவே ராஜா ஆளும் கட்சியில் உள்ளூரில் மிகப் பிரபலம்

வாரம் தவறாமல் தஞ்சாவூரில் முகாம் இடும் இந்த ஜில்லாவின் மந்திரிகள், இவரைப் பார்த்து அண்ணே என்று விளிப்பதை நானும் பார்த்திருக்கிறேன்.

கட்டிடத்தின் கீழ்த் தளத்திலே இரண்டு கடைகள். ஒன்று வெண்புரவி என்று ஷோக்காக பெயர் கொண்ட சலவைக் கடை. இன்னொன்று காதி வஸ்திராலாயம். அடிக்கடி காந்தி என்றும், சத்திய சோதனை என்றும் சொல்லுகின்ற நான் கூட அந்த காதி வஸ்திராலயத்தில் எதுவும் வாங்குவதில்லை.. அங்கு பழைய சோப்புக் கட்டிகளைத் தவிர ஏதுமில்லை என நினைக்கின்றேன்.

வெண்புரவி கடையின் ஓனரிடம் தான்.. ராஜா பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்த மனுஷன் டக்கென தலையினை உசத்தி மேலே பார்த்து, அதோ என்று என்னைக் காட்ட அங்கிருந்தே ராஜா என்னைப் பார்த்து சிரித்து, " சார் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.. கீழ வரீங்களா"

சட்டை மாட்டிக் கொண்டு வருவதாகச் சொன்னேன்.

"இல்லை இல்லை.. சட்டை ஃபான்டு போட்டுகிட்டு வாங்க ஒரு முக்கியமான வேலையாக வெளில போறம்.. அப்படியே தஞ்சாவூர் போய்ட்டு சாப்பிட்டு வந்துடலாம்"

'எங்க போறம்னு சொல்லாம வந்தா என்ன அர்த்தம்.. அப்படி என்ன சஸ்பென்ஸ்"

" அங்க போன பின்னாலே தெரிஞ்சுக்கப் போறீங்க"

நான் பேசாமலே இருந்தேன். காரின் நிறம் தான் சரியில்லையே தவிர, நல்ல கண்டிஷனில் தான் வைத்திருந்தார். தஞ்சாவூர் மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தோம்

பெரிய காம்பவுண்ட் உள்ளே தென்னை மரங்கள் கொண்டதான அந்த தோப்பு வீட்டின் உள்ளே காரைச் செலுத்தினார் டிரைவர்.

"ஏங்க நிஜமாகவே இங்க தான் வந்திருக்கமா சொல்லுங்க ராஜா"

கார் இதற்குள் அந்த தோப்பிற்குள் இருந்த ஒரு பழைய காலச் சாயல் கொண்ட வீட்டின் பொர்ட்டிகோவுக்கு வந்து விட்டது.

வெராண்டாவை ஒத்த அமைப்பு கொண்ட இடத்தில், திண்ணை மாதிரி இருந்த இருக்கையில் இருந்தவர் எங்களைப் பார்த்து சிரித்து வாங்க என்றார்

அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அது சூரக்கோட்டை பண்ணையில் அவரது வீடு.

என்னை அவருக்கு ராஜா அறிமுகம் செய்த விதத்திலிருந்தே, இருவரது சிநேகிதம் குறித்தும் ராஜா ரொம்ப நாளாக சொல்லி வந்தது நிஜம் என்பதை மனதுக்குள் எழுதிக் கொண்டேன்

வீட்டுக்குள் போனதும், நான் நடிகர் திலகத்திடம் அவரது நடிப்பை சிலாகித்து பேசிக் கொண்டே இருந்தேன்.

'அப்பு.. ரொம்ப சந்தோஷம்.." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் ராஜாவை ஏக்கமாகப் பார்த்தேன்

"என்ன தயக்கம்.. கேளுங்க அவருகிட்ட... அதொன்னுமில்ல கணேசா, உன் நடிப்பை இப்ப நீ நடிச்சுப் பார்கணுமாம்"

'இதுக்கா இத்தினி தயக்கம்.. சொல்லுங்க எந்த படம் என்ன் சீன்"

"கர்ணன் படத்துல, உங்க மகனைக் அர்ஜுனன் கொன்ன பின்னாலே தரையை உதைச்சிட்டு கோபமா பேசுவீங்களே ..."

அவரால் மட்டுமே செய்ய முடியும் அந்தக் காட்சியை.

மீசையில்லாமல்.., ஆடை அலங்காரமில்லாமல், கர்ஜித்த கர்ணனைக் கண்டது நானும் ராஜாவும் மட்டும் தான்

எப்போதும் கல கலப்பாக பேசும் ராஜாவிடம் ஒரு பிரமிப்பு தொற்றிக் கொண்டிருந்தது..அங்கிருந்து தஞ்சாவூர் சென்று , டிபன் சாப்பிட்டு திரும்பி வரும் வரைக்கும் ராஜா சில வார்த்தைகளே சொல்லியிருந்தார்

"நீங்க சொல்றது சரி தான் சார்.. இந்த கணேசன் பய ஒரு அதியசம்தான்"

3 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - சற்று முன்னர் தான் முதல் பாகம் படித்தேன் = இளையராஜாவின் பாடல் அவரே நேரில் பாடிக் கேட்டசர். இப்பொழுது நடிகர் திலகமா ? கர்ணன் ப்ட வசனம் - நேரில் பார்த்த்து - ம்ம்ம்ம் - பெரிய ஆளய்யா நீர். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

D. Chandramouli said...

Nice to read your interesting encounter with Sivaji Ganesan. It's unfortunate that he was born in Tamil Nadu. Sivaji could easily be ranked with the top notch actors of the world. I'm awe-struck whenever I watch any of his old black & white color movies. With all the technical expertise and modern make up gadgets, the current crop of actors can still not reach Sivaji's caliber. We lost a gem indeed.

Unknown said...

Very Well said, Mr.Chandramouli. He was a colossus and unparalleled. He had so many subtlities which had gone unnoticed while his overactiong, sorry, so called over acting, was blown out of proportion. How many could even attempt to come nearby his violent role in JKs, Kaavam Deivam,the simple facial expressions while singing with Kamal the child in Paarthaal pasi theerum, the laming gait in a song in the same film