Friday, 21 October 2011

டைரிக் குறிப்பு-3


அரசு சார்ந்த பணியில் இருக்கும் போது எத்தனையோ நிகழ்வுகளில், மிகவும் சோர்ந்து போயிருக்கின்றேன். இந்த ஒரு நிகழ்வில் நான் கற்றுக் கொண்டது ஒன்றை..

இந்த நிகழ்வினைத் என் டைரியிலிருந்து தேடிப் பதிவு செய்கிறேன்

நாம் எந்த தேசத்தில் இருந்தாலும், ஒருவரின் திருமணத்தில் மற்றொருவர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். மற்றொருவருக்கு திருமணம் ஆகியிருந்தால் அவர் மனைவியுடன் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும்.. எனக்கு என் பள்ளித் தோழன் குமரவேலுவுக்கும் இடையே 8 ம் வகுப்பில் உடன்படிக்கை. அந்த நாளில் அவன் தந்தைக்கு வங்கிப் பணியில் ப்ரமோஷன் கிடைத்து

வட இந்தியாவுக்கு குடிபெயர்ந்து , அங்கேயே பல வருஷம் இருந்தான். அவனும் வங்கிப் பணியில் சேர்ந்து விட்டான், அவனுக்குத் தான் கலியாணம். எனக்கு கலியாணம் ஆகி என் பெண்ணுக்கு ஒரு வயதும் பூர்த்தியாகிவிட்டது

தன் கலியாணத்தை திங்கட்கிழமை சென்னையில் வைத்திருந்தபடியால், ஒரு நாள் காஷுவல் லீவு தாருங்கள் என எனது செயற்பொறியாளரிடம்மன்றாடி சாங்கஷன் வாங்கியிருந்தேன்

வெள்ளிக்கிழமையன்றும் திங்கட்கிழமையன்றும் லீவு போடுகிறவன் வேலைக்கு லாயக்கான்வன் இல்லை என்பது அவரது அபிப்ராயம்.

நான் அவர் சொல்பேச்சுக் கேட்காத பிள்ளை என்று அவருக்கே ஓர் அபிப்ராயம் (அதில் ஓரளவு உண்மை இருக்கின்றதென என் மனசாட்சி சொல்கிறது). திங்கட்கிழமை லீவு கேட்டேன் என்பதால் என்னை சனிக்கிழமை நடுராத்திரி வரை ஆபிசில் இருக்க வைப்பார் எனத் தெரியும். அது போலவே செய்தார்

ஞாயிறு ராத்திரி, திருச்சியிலிருந்து ராக்போர்ட் எக்ஸ்பிரசில் சென்னைக்கு செல்ல எனக்கு, என் மனைவிக்கு டிக்கட் வாங்கியிருந்தேன்.

இந்த ட்ரெயினில் பிரயாணிக்கிறேன் என்பதை எனக்கு லீவு சாங்ஷன் செய்த அதிகாரியிடம் ஏன் சொல்ல வேண்டும்.. ஆனாலும் சொல்லியிருந்தேன்..

திட்டமிட்டபடி ராக்ஃfபோர்ட் எக்ஸ்பிரசில் எங்களது பயணம் தொடங்கிவிட்டது.

நட்ட நடு நிசியில் என்னை டிக்கெட் பரிசோதகர் எழுப்பினார். குறைந்த விளக்கு வெளிச்சத்தில் டயம் பார்த்தேன். நள்ளிரவு தாண்டி 1.30 என்றது கைக்கடிகாரம்.
என்ன்வென்று கேட்டேன். வண்டி விழுப்புரத்தில் நிற்பதாகவும், மிகவும் அவசரம் என்று சொல்லி என்னைக் கேட்டுக் கொண்டு , ராதாகிருஷ்ணன் என்று ஒருவர் ப்ளாட்பாரத்தில் நிற்பதாகவும் சொன்னார். எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. ஜன்னல் ஷட்டரை உயர்த்தி, வெளியே பார்த்தேன். எங்கள் டிபார்ட்மெண்ட் விழுப்புரம் யூனிட் ஜூனியர் என்ஜிநியர் நின்று கொண்டிருந்தார். அந்த அர்த்த ஜாம வேளையிலும், “வணக்கம் சார்.. ஒன்னும் பதட்டப்படாதீங்க.. உங்க ஃபேமிலியில் எல்லாரும் நலம். இது ஆபிஸ் விஷயம்..”

சங்கதி இது தான்.. நான் வேலை செய்யும் டிபார்ட்மெண்ட் மூலம் , நான் தலைமை ஏற்றுள்ள யூனிட் பொறுப்பெடுத்து நடந்து வரும் மிகப் பிரபலமான ப்ராஜெக்ட் ஸ்தலத்துக்கு, அந்த துறையின் மந்திரி விஜயம் செய்கிறார். ஆகவே நான் உடனே எனது ஹெட்குவார்ட்டர்ஸ் திரும்பச் சொல்லி மங்களச் செய்தி. பிரயாணத்தைத் துறந்து, மனைவி, கை குழந்தை சகிதம் விழுப்புரம் ஸ்டேஷனில் நிற்கிறேன்.

”சார், புதுக்கோட்டை ஈ.ஈ தான், இந்த ட்ரெயினில் நீங்க சென்னை போறதா சொல்லி, ராதாகிருஷ்ணன், எப்படியும் மௌளீயைக் கண்டுபுடிச்சி அவரை திருப்ப புதுக்கோட்டை அனுப்புங்க. அவர் காலைல பத்து மணிக்கு சைட்ல இருந்தாகனும். மினிஸ்டர் விசிட்னு சொல்லி, நீங்க விழுப்புரத்தில் இறங்கின உடனே, அவர் வீட்டு நம்பருக்கு உங்களை போன் செய்யச் சொன்னார்.. அதோ எஸ்.டி.டி பூத்”

“சார் மௌளீ பேசறேன். விழுப்புரத்திலிருந்து”
“மௌளீ .. ரொம்ப சாரி.. இப்படி உன்னைத் தொந்தரவு செய்றதுக்கு.. மினிஸ்டர் புதுக்கோட்டைக்கு ஒரு கல்யாணத்துக்கு வரதா ராத்திரி 11 மணிக்குதான் கலெக்டர் கேம்ப் க்ளார்க் போன் செய்தார்.. உடனே மினிஸ்டர் பி ஏ கிட்ட நானே போன் செய்து பேசினேன். மினிஸ்டர் ப்ராஜக்ட் சைட்டுக்கு வர சான்ஸ் இருக்கிறதா சொன்னார்”

“சார்... உங்களுக்குத் தெரியாதா.. அந்த ப்ராஜக்ட் சைட்லே நிறைய டிஸ்ப்யூட் இருக்குனு. அதனாலே வேலை நடக்காம நிக்குது.. அந்த இடம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தம்னு முன்சீப் கோர்ட்லே ஸ்டே வாங்கிருக்காங்க. அந்த சைட்டுக்கு ஏன் மினிஸ்டர் வரணும்”

“ இதெல்லாம் நடுராத்திரி மினிஸ்டர் பி ஏ கிட்ட சொல்ல முடியுமா. அதுவுமில்லாம, ஸ்டே வாங்கினவங்க கிட்ட மினிஸ்டர் பேசினாக் கூட அவங்க கேஸ் வாபஸ் வாங்க சான்ஸ் இருக்கு.. நீங்க திரும்பி வாங்க.. பஸ்லே வந்து சிரமப்பட வேண்டாம். ராதாகிருஷ்ணன் கிட்ட சொல்லிருக்கேன்.. டாக்சி ஏற்பாடு செய்யச் சொல்லி.. நான் காலைல 8 மணிக்கெல்லாம் ட்ராவலர்ஸ் பங்களாவிலே இருப்பேன்.. நீங்க அதுக்கு முன்னாலே வந்தா என் வீட்டுக்கு வந்துடுங்க.. சேர்ந்து போய்டலாம்.. மினிஸ்டருக்கு சால்வை.. மத்த பார்மாலிட்டஸ் எல்லாம் நான் ஏற்பாடு செய்துடறேன்”

என் மனைவிக்கு ஒன்றுமே புரியவில்லை.

“சார் மணி 2 ஆகுது.. பக்கத்துல தான் என் வீடு.. நீங்க ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு 3 மணிக்குப் புறப்பட்டாலும் 7 மணிக்குள்ள புதுக்கோட்டை போய்டலாம்”

“இல்லை ராதாகிருஷ்ணன்.. இப்பவே புறப்படறேன்.. நீங்க டாக்சி கொண்டு வாங்க”

“டாக்சி எடுத்துட்டேன் சார். ஸ்டேஷன் வாசல்ல நிக்குது.. ஈ.ஈ எனக்கு போன் செய்த உடனே டாக்சி எடுத்துட்டு தான் வந்தேன் .. போற வழில தான் என் வீடு நான் இறங்கிக்கிறேன்.. நீங்க புதுக்கோட்டை போய் இறங்கி காருக்கு பணம் ஏதும் தரவேண்டாம்.. நான் பார்த்துக்கிறேன்”

ராதாகிருஷ்ணன் மனைவி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். கையிலே ப்ளாஸ்க்.. பிஸ்கெட் பாக்கெட்டுகள், வாழைப்பழம்

“ராத்திரி நேரம்.. முழிச்சிருந்தா பசிக்கும். வழில நிறுத்தினா லேட்டானாலும் ஆகும் அதான் சார் .. ஒன்னும் தயங்காம வாங்கிக்குங்க”

”தாங்க்ஸ் ராதாகிருஷ்ணன்”

விழுப்புரம் நகர எல்லை தாண்டும் வரை என் மனைவி எதுவும் பேசவில்லை.. நன்றி மீண்டும் வருக விழுப்புரம் நகராட்சி என்ற நட்பு பாராட்டிய போர்டு தாண்டியதும் பிடித்துக் கொண்டாள்

“ ஒன்னுமே பேசாம.. எல்லாத்துக்கும் ஒத்துகிட்டு இப்படி வரீங்களே.. முடியாது.. நான் மெட்ராஸ் போய்த்தான் ஆகணும்னு சொன்னா அந்த மந்திரி என்ன செய்வார்”

“ஒன்னும் செய்ய மாட்டார் தான்.. ஆனா சில சமயம் .. நம்ம விருப்பங்களை பொது வேலைக்காக விட்டுக் கொடுக்க வேண்டி வரும்.. இதும் அது மாதிரி தான்”

“என்ன பொது வேலையோ.. அடுத்த முறை இப்படி ஆச்சு நான் ட்ரெயினை விட்டு இறங்க மாட்டேன் ஆமா”

இது போல இன்னும் ஒரு முறை , மந்திரி வருகைக்காக நாம் ரயில் வண்டி விட்டு நடுராத்திரி இறங்கி, மடை திருப்பிய வெள்ளமாக திசை மாறி பயணிப்போம் என நினைக்கின்றாயா என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

ரோஸ் லேண்ட் (Rose Land) என்று வசீகரப் பெயர் கொண்டதும்.. ஒரு ரோஜாச் செடி கூட தனது காம்பவுண்டுக்குள் இல்லாததுமான புதுக்கோட்டையின் ட்ராவலர்ஸ் பங்களா.

அமைச்சர் இன்றைக்கு வருவது நேற்று நடு நிசியில் தான், எங்கள் செயற்பொறியாளருக்குத் தெரிந்திருக்கு.. ஆனால் கட்சிக்காரர்கள் எப்படி வரவேற்பு போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஒட்டினார்கள் என தெரியவில்லை..

ஹெட்குவார்டஸ் டெபுடி தாசில்தார், புன்னகையுடன் கையைப் பற்றிக் கொண்டார்.. ‘ மெட்ராஸ் போய்ட்டு இருந்து பாதில வந்துட்டீங்கனு உங்க ஈ.ஈ சொன்னார்”

“எப்ப வரார் மினிஸ்டர் .. எங்கேர்ந்து வரார்.. “

“அவர் ஊர்லேர்ந்து தான் வரார்.. இன்னும் அங்கேர்ந்து புறப்படலையாம்”

”அவர் ஊரிலிருந்து இப்ப புறப்பட்டாலும் 5 மணி நேரம் ஆகுமே. மணி இப்பவே 8 ஆச்சு. பகல் 1 மணிக்கோ .. 2 மணிக்கோ தான் வருவார் ”

“என்ன செய்ய.. மாவட்டம் நேரா கலெக்டருக்கு போன் செய்துட்டார். கலெக்டர் என்னைக் கூப்பிட்டு , நீங்க போய் ரோஸ் லேண்ட்ல ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு வாங்கனுட்டார்.. அதான் இத்தனை சீக்கிரம் வந்தேன்.. எந்த டிபார்ட்மெண்ட் மந்திரி வந்தாலும் ரெவினியூ டிபார்ட்மெண்ட் ஆசாமிங்க தலை தான் உருளும்.”

ஈ.ஈ என் பக்கத்திற்கு வந்து என்னவோ பேச ஆரம்பித்தார். நான் முறைக்கத் தொடங்கியவுடன் அமைதியானார்.

அங்கும் இங்கும் நடமாடிய கட்சிக்காரர்கள் ஓரிரு வார்த்தைகள் பேசினார்கள்.

நானே வலுவில் ஈ.ஈ யிடம் பேசினேன், “ சார் மணி 11.30 ஆச்சு.. கலெக்டர் ஆபிசுக்கு போன் செய்து கேளுங்க.. மினிஸ்டர் எப்ப புறப்பட்டார்னு.. டயம் தெரிஞ்சா.. நாம லஞ்ச் முடிச்சுட்டு கூட வந்து வெயிட் செய்யலாம்”

‘அதும் சரி தான்.. இங்கே இருக்கும் போன் எப்பவும் கட்சிக்காரங்க கைலே இருக்கும்; வா.. அப்படி கோர்ட் வாசல்ல நல்ல டீ குடிச்சிட்டு.. அப்படியே ஃபோன் செய்யலாம்”

ஆஸ்திரேலியாவில் ஒரு மங்கையைக் கலியாணம் செய்து, அதன் வழி சிட்னி தொண்டைமான் , என ஒரு வாரிசு கொண்ட புதுக்கோட்டை மன்னர் பரம்பரையின் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் கோர்ட் கட்டிடங்களுக்கு வெளியே உயரமான பீடத்தில் சிலையாக நின்று நாங்கள் டீ குடிப்பதை கேலியாகப் பார்க்கின்றார்.

பக்கத்தில் இருந்த டெலிபோன் பூத்துக்குள் ஈ. ஈ சென்றார்.. இன்னும் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டுமோ என நினைத்து , நான் குமுதம், ஆனந்த விகடன் என வாங்கினேன்


“சார் நான் குழந்தைவேலு ஈ.ஈ பேசறேன்.. வணக்கம் நல்லாருக்கீங்களா...” பூத் கதவைச் சாத்திக் கொண்டார்.

சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்தார்.
“மௌளீ.. மினிஸ்டர் வரலையாம்.. விசிட் கான்சலாம் என்னமோ அர்ஜெண்ட் வேலையாம். மெட்ராஸ் போறாராமாம்.. கலெக்டர் கிட்ட போன் செய்து சொன்னாராமாம்”
------
என் டைரியின் அந்த தினப் பக்கத்தில் குத்தி வைக்கப்பட்ட அந்த பழைய அட்டை டிக்கெட்டை என் மனைவியிடம் காட்டி இன்றைக்கும் திட்டு வாங்கினேன்

8 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - அரசுத்துறைகளில் இதெல்லாம் தவிர்க்க இயலாது - செய் என்றால் செய்தே ஆக வேண்டும் - எவ்வளவு செல்வானாலும் சரி - எவ்வளவு சிரமங்கள் இருப்பினும் சரி - செய்ய வேண்டும். வேறு வழி இல்லை. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

RVS said...

அபாரமான விவரிப்பு சார்! உங்க கூடவே வந்தா மாதிரி இருந்தது. :-)

தக்குடு said...

இப்ப படிக்கர்துக்கு தமாஷா இருந்தாலும் உங்க தங்கமணி கிட்ட நல்ல 'கொடை' வாங்கியிருப்பேள்னு நல்லாவே புரியர்து! ஊர்ல இருக்கரவா "உங்களுக்கு என்ன சார் கவர்மண்ட் சர்வண்ட்"னு ஈசியா சொல்லிடலாம் நாற்காலில உக்காசுண்டு பாத்தா தான் அதோட சுக/துக்கங்கள் தெரியும்! அருமையான விவரிப்பு!! :)

Ramani said...

அரசுப்பணியில் இதையெல்லாம் நானும் பட்டிருக்கிறேன்
அதுதான் அரசுத்துறையில் வேலை பார்ப்பவர்கள்
ஒரு பழமொழி சொல்வார்கள்
"ஓடினவனுக்கு 9இல் குரு
அகப்பட்டவனுக்கு அட்டமத்தில் சனி "என்று
அரசு குடியிருப்பில் வாடகை கம்மி என குடிபோவது
நியாயமாக நடந்து கொள்கிறோம் என நமது மூவ்மெண்ட்டை சொல்வது
என்பதெல்லாம் கொள்ளிக் கட்டை கொண்டு தலை சொரிவது மாதிரி
அருமையான பதிவு மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
தொடர வாழ்த்துக்கள்

Ganpat said...

அன்பின் மெளலி ஜி,

இளையராஜா உங்களுக்கென்று பிரத்யேகமாக பாடிவிட்டார்!

சிவாஜிகணேசன் உங்களுக்கென்று பிரத்யேகமாக நடித்துவிட்டார்.

அடுத்த குறிப்பு(பதிவு) என்ன?

ஜெயகாந்தன்,உங்கள் பேனாவை உபயோகித்து,அக்னிப்ரவேசம் கதையை ஒரு பத்தி எழுதியது பற்றியா

அல்லது

சச்சின் உங்கள பெளலிங்கில் ஒரு ஓவர் ஆடியது பற்றியா?

மிகவும் கொடுத்துவைத்தவர் நீங்கள்!!

ம்ம்ம்... நானும்தான் இருக்கிறேன்...

இதோ என் டைரிக் குறிப்பு...
இன்று ஆவின் பால் வரவில்லை ஆரோக்கியாதான்!

and

இதோ என் டயரிகுறிப்பு...
இன்று 23C இல் ஒரே கும்பல்..
கண்டக்டர் வேறு பத்து ரூபாயிற்கு சில்லறை இல்லையென கடுப்படித்தார்!!

வாழ்த்துக்கள்.

சற்றே பொறாமை கலந்த அன்புடன்,
Ganpat

சந்திரமௌளீஸ்வரன் said...

Ganpat

ஜே கே அக்னிப் பிரவேசம் எழுதி முதலில் ஆனந்த விகடனில் வெளியான தேதி 20 நவம்பர் 1968

எனது பிறந்த நாள் 25 ஜூலை 1968 .. ஆக ஐந்து மாதக் குழந்தையாக என்னால் அவருக்கு கதை எழுதப் பேனா தந்திருக்க இயலாதென அறிக.. ஆனால் அவரோட இரண்டு முறை நேரில் சந்தித்து பேசிருக்கேன்

கிரிகெட்டில் என் காலத்து ஹீரோக்களுடனான ( கவாஸ்கர், விஸ்வநாத்,கபில் தேவ். ஸ்ரீகாந்த், விவியன் ரிச்சர்ட்ஸ் ... இன்னும் பல) சம்பவங்கள் டைரில இருக்கு

Ganpat said...

மெளலி ஜி,
ஜெயகாந்தன்,உங்கள் பேனாவை உபயோகித்து,அக்னிப்ரவேசம் கதையை ஒரு பத்தி "மீண்டும்" எழுதியது பற்றியா
என்றிருக்கவேண்டும்..
அதாகப்பட்டது சிவாஜி நீங்கள் பிறப்பதற்கு முன் நடித்த ஒரு காட்சியை உங்களுக்காக "மீண்டும்" நடித்துக்காட்டியது போல!

மற்ற சந்திப்புகளைப்பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்

Amirthanandan said...

மக்களுக்காகத் தான் மந்திரிகள் என்று சொன்னார்களே? உங்கள் ஈஈ மேல் கடுங் கோபம் வந்துவிட்டது. சொல்லி வைங்க அண்ணா என் கையில சிக்கிடாம இருக்க...ஒரு வயது குழந்தையை நடு ராத்திரியில் அலைக்கழிக்கிறோம் என்ற உணர்வு கூட இல்லாத மனிதருக்கு உயர் பதவி எதற்கு?