Saturday, 5 November 2011

டைரிக் குறிப்பு-4

“இத்தனை பொஸ்தகத்தையும் தூசி வராத, க்ளீனா வச்சிருக்கேன். எப்ப எந்த பொஸ்தகம் கேட்டாலும் கரெக்டா எடுத்துத் தரேன். ரொம்ப முக்கியமா இந்த பழைய டைரியெல்லாம், வரிசையா அடுக்கி வச்சிருக்கேன். என்னவெல்லாமோ எதைப் பத்தியெல்லாமோ டைரில எழுதி வச்சிருக்கீங்க., இத்தனை வருஷம் என்னை லவ் பண்ணிக் கலியாணம் பண்ணிக்கிட்டீங்க.. என்னைப் பத்தி இந்த டயரிலெ எங்கயாவது எழுதிருக்கீங்களா”

ஒரு குறிப்பிட்ட நாளைச் சொல்லி, "அன்னிக்கு நான் பெங்களூருவுக்கு வந்து உன்னைப் பார்த்துவிட்டு கிளம்பிச் சென்றேன் நினைவிருக்கா.. மறுநாள் டைரியில் என்ன எழுதிருக்கேன்னு படிச்சுக் காட்டறேன்.. டைரியை எடுத்துட்டு வா”

ஆசையாக அவள் எடுத்து வந்த டைரியிலிருந்து :

முழு ராத்திரி பஸ்ஸில் உடகார்ந்து கொண்டு பயணித்து வருவது, ரொம்பவுமே ஆயாசத்தை உண்டாக்குகின்றது.. இன்றைக்கு ஆபிசுக்குப் போகவில்லை.. பகல்பொழுதிலே தூங்கி கழித்து, சாயங்காலம் வெளி வெராண்டாவிலே நாற்காலியினைப் போட்டுக் கொண்டு, ரோட்டைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்..

அப்போது தான் இதனை எழுதுகிறேன். கிராமத்துப் பக்கத்தில் இரண்டு வேளை குளிப்பார்கள் என்பதனை தினசரி ஊர்ஜிதம் செய்து கொள்கிறேன். குளித்து முடித்து ஈர உடையுடன் பெண்கள் அந்த ரோட்டின் வழியே நடந்து போகின்றார்கள்.. பக்கத்திலே இருக்கும் பிள்ளையார் கோவில் குளத்து ஸ்நானமாக இருக்க வேணும்.. இப்படி தினசரி நங்கையர்கள் மட்டும் குளித்து விட்டு வீடு போகின்றார்களே.. இவர்கள் வீட்டு ஆண்பிள்ளைகள் குளிக்க மாட்டார்களா

இதென்ன நேற்றைக்கான பக்கம் எழுதுவுமே எழுதாமல் காலியாக இருக்கின்றதென்பதை

அப்போது தான் கவனித்தேன்.. சரி நேற்றைக்கு என்ன செய்தோம்.. பெங்களூருவில் இருந்தமையால் டயரி எழுதவில்லை..

ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்று திரும்பி வரும்போது, தலை வலிக்கிறதாகச் சொல்லி மாத்திரை கேட்டாள், வாங்கிக் கொடுத்தேன்.. தலை நோவு சரியானதா எனக் கூட விசாரிக்கவில்லை.. பஸ்ஸுக்கு நேரமானதால்,, அவசரமாக கிளம்பி வந்தேன்.. இன்றைக்கு ஒரு போஸ்ட் கார்ட் எழுதிப் போடலாம்.. தலைவலி விசாரணைக்கு போஸ்ட் கார்ட் போதும்

இப்போது புதுசா சில பெண்கள் அடுத்த தெரு பிள்ளையார் கோவில் குளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். இத்தனை நாள் இந்தப் பெண்களை நான் கவனித்ததில்லை.. இந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆகிவந்தவர்களாக இருப்பார்களா?

சரி புதுசாக ஜெண்டில்மேன் என ஒரு படம் வந்திருக்கின்றதாகவும், அது நன்றாகவும் இருப்பதாகவும், பக்கத்து அறைகளில் வாசம் செய்யும் எல்லோரும் பொதுவாகப் பேசிக் கொள்கிறார்கள்.. இன்றைக்கு மாலை ஆட்டத்திற்கு செல்ல நேரமிருக்கின்றதா.. தாராளமாக இருக்கின்றது.. கொஞ்ச நேரத்திலேயே அந்த சினிமா ஆசையினைத் துறந்தேன்.

காரணமிருக்கின்றது…

இப்போது புதுசாக நாலு பெண்கள், குளத்துப் பக்கத்திலிருந்து வருவது தெரிகிறது..

“நீங்க எனக்கு படிச்சு காட்டினது போதும்”.. வெடுக்கென கையிலிருந்த டைரியினைப் பறித்தாள்

(2011 வருஷத்திய டைரியினை மட்டும், வெளியில் விட்டு வைத்து, எனது பிற டைரிகள் அனைத்தினையும், தனது பீரோவில் பூட்டி வைத்து விட்டாள் என் மனைவி)

3 comments:

Amirthanandan said...

ரொம்பத்தான் லொள்ளுண்ணா உங்களுக்கு... ஆனாலும் அந்த ஊடலில் ஒரு அழகிருந்தது.

Anonymous said...

என் அநுதாபங்களை தெரிவிக்கவும் உங்கள் மனைவியிடம்.
Uma jayaraman.

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - அடுத்தவர் நாட்க்குறிப்பினைப் படிக்கக் கூடாது. இருப்பினும் இரசித்தேன். ஊடுதல் இல்லா வாழ்க்கை இரசிக்காது. அத்தனை நாட் குறிப்புகளூம் பூட்டிய அலமாரியிலா - மீண்டும் அசை போட்டு இரசிக்கக் கூடாதென்னும் நல்ல எண்ணத்தில் துணைவியார் செய்த செயல் நன்று. நல்வாழ்த்துகள் மௌளி - நட்புடன் சீனா