Thursday, 17 November 2011

அப்பா என்ற உன்னதம்

நவம்பர் 3, 2008 , என் அப்பா மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம்.. தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் போதிய முன்னேற்றம் கிடைக்காதமையால் 11 நவம்பர் 2008 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அழைத்து வந்தோம். குழாய்களின் வழியாக உணவு.. படுத்த படுக்கையாக எந்த அசைவும் இன்றி இருந்தார்.. 20 நவம்பர் 2008 ல் நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தபடி அவர் உயிர் பிரிந்தது

பேச்சின்றி, அழைத்த குரலுக்கு அவர் பதிலின்றி இருக்கும் போது, என் சகோதர சகோதரிகளுக்கு 18 நவம்பர் 2008 ல் எழுதிய மெயில்

--------

அப்பா என்ற உன்னதம்

இது இயற்கை- இதில் நாம் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை

அவர் தனது கடமை எல்லாம் முடித்துவிட்டார். அவர் செய்தே ஆக வேண்டியதென ஒன்றும் இல்லை

நம்மை நன்றாக படிக்க வைத்தார்.

நாம் விரும்பியவாறே கல்யாணம் செய்து வைத்தார்.

பிறருக்கு தீங்கு நினைக்காத வாழ்க்கை வாழ்ந்திருக்கார்.

இதை நமக்கும் சொல்லிக் கொடுத்திருக்கார்.

நாம் எந்த தவமும் செய்யாமல் கிடைத்த வரம் அவர் பிள்ளை நாம் என்ற நிலை.

இதை விட அவர் நமக்கு என்ன செய்ய வேண்டும்.

அவருக்கு நாம் தான் எதுவும் செய்ய முடியாது.

நம்முள் அப்பா எத்தனை வியாபித்திருக்கார் என்பதனை நாம் முழுமையாக புரிந்து கொள்ள ஒரு சோகமான சந்தர்ப்பத்தை அவரே நிறுவிக் கொண்டிருக்காரோ என நினைக்கிறேன்.

நமக்கு இன்னமும் ஒரு 40 ஆண்டு வாழ்வு என உத்தேசமாக கணக்கு வைத்தாலும் அவர் அத்தனை காலமும் நமக்கு பக்கத்தில் இருந்த வழி நடத்தினாலும் எனக்கு ஆசை அடங்காது.

ஆனால் இயற்கை அப்படி ஒரு தளர்ந்த நிலைக் கணக்கை எப்போதும் எழுதுவதில்லை.

இத்தனை புத்தகம் படிக்க சொல்லிக் கொடுத்த அவர் நடத்தும் கொஞ்சம் கஷ்டமான பிராக்டிகல் வகுப்பு இது.

நாம் பாஸ் பண்ணும் போது அவர் இருக்க மாட்டார்.

அவர் சபாஷ் என சொல்வது கேட்காது.ஆனால் கண்டிப்பாக சபாஷ் என சொல்லிருப்பார்.எப்பவும் நேரடியாகப் பாராட்டமாட்டாரே.இப்பவும் அப்படித்தான் செய்யப் போகிறார்.செய்யட்டுமே அப்பாதானே.

அவர் நம்மை விட்டுப் பிரிவதில்லை என்பது சம்பிரதாயமான வார்த்தைகள் இல்லை.

தந்தை என்பது வெறும் உயிர் தந்த உறவில்லை.


அது நமது ஞானம்


என்றும் நம்மோடு உடன் வரும் ஞானம்

இன்றே புறப்பட்டுப் போய் நாளை என் பிள்ளை வருவான், பெண் வருவாள் அவாளுக்கு இப்படி இது பிடிக்கும் என பெருமாளிடம் வாதாடி நமக்கென மீண்டும் புத்தேளிர் உலகில் ஒரு கிளாஸ் ரூம் வைத்துக் கொண்டு காத்திருப்பார். அவரிடம் வாதாடி ஸ்ரீபாலாஜி தோற்றுத்தான் போவான்

அவர் அப்படியான ஓர் உன்னதம்


சும்மா மூன்றே எழுத்தில் இந்த உன்னதத்தை அப்பா எனச் சொல்கிறோம். அப்படிக் கூப்பிட்டால் எப்பவுமே என்ன எனத் திரும்பிப் பார்ப்பார்

இப்ப பார்க்காம இருக்கார்

8 comments:

snkm said...

நெகிழ வைத்தது, என் அப்பாவை நினைத்து. நன்றி.

சம்பத் குமார் said...

வணக்கம் நண்பரே..

தளத்தில் முதல் வருகை..

படித்ததும் ஓர் கணம் மனது வலிக்கிறது..

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - அப்பா எப்பொழுதும் உன்னதம் தான். அவருக்கும் நமக்கும் இடையே உள்ள பொருள் பொதிந்த மௌன மொழி அவருக்கும் நமக்கும் தான் தெரியும். அவர் வாயினால் பாராட்ட வேண்டியதில்லை - அவர் பாராட்டுகிறார் என்பது தன்னால் நமக்குத் தெரியும் - நாம் உணர்வோம். அதுதான் அப்பா . நல்வாழ்த்துகள் மௌளி - நட்புடன் சீனா

BalHanuman said...

அன்பின் மௌளீ,

கண்கலங்க வைத்து விட்டீர்கள். உங்களைப் பெற்றதற்கு உங்கள் அப்பா நிச்சயம் பெருமைப்படலாம்.

பாரதி மணி அவர்கள் கூறுவது போல் நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும்.

D. Chandramouli said...

//இன்றே புறப்பட்டுப் போய் நாளை என் பிள்ளை வருவான், பெண் வருவாள் அவாளுக்கு இப்படி இது பிடிக்கும் என பெருமாளிடம் வாதாடி நமக்கென மீண்டும் புத்தேளிர் உலகில் ஒரு கிளாஸ் ரூம் வைத்துக் கொண்டு காத்திருப்பார். அவரிடம் வாதாடி ஸ்ரீபாலாஜி தோற்றுத்தான் போவான்

அவர் அப்படியான ஓர் உன்னதம்//
Very touching. When my father died in 1991, I could reach the village only after on the third day, as I was away abroad. For six months after his demise, my sorrow lingered on almost every day.
It is amazing how he provided for our large family.
Father's loss is irreplaceable as that of mother's. In our society, father's role is often taken for granted. Only fathers know what love and affection that they have towards the family members, and what kind of sacrifices he makes for the family.

பாரதி மணி said...

சத்தியமான வார்த்தைகள்! மீண்டும் சொல்கிறேன்....எழுத்து உங்களுக்கு வசப்பட்டிருக்கிறது. நீங்கள் நிறைய, நிறைய எழுதவேண்டும்.

பாரதி மணி

Samurai of love said...

super article sir... i lost my dad..2 yrs back...could connect your article to my experience..

bandhu said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். என் அப்பாவின் மரணத்திற்கு பிறகும் (1997) பலமுறை என் கனவில் வந்து கொண்டே இருக்கிறார். அப்பா என்பது ஒரு உன்னதமான ஸ்தானம். பிள்ளைகளை எப்போதும் அப்பாவை நினைக்கும்படி செய்வதே அந்த ஸ்தானத்திற்கு கொடுக்கும் மரியாதை. உங்கள் அப்பா அதை அழகாக செய்திருக்கிறார். என் அப்பாவும்!