Saturday 19 November 2011

ஒரு தட்டும் அதில் இட்லி ஒன்றும் இருந்தது

இதனை எழுத ஆரம்பிக்கும் போது மணி இரவு 7.25 காண்பிக்கின்றது, என் வீட்டு ஹாலில் இருக்கும் சுவர்கடிகாரம்

அன்றைக்கும் இப்படி இரவு 7.25 ஆகியிருந்தது.. இரவு ட்யூட்டிக்கு அப்பாவைக் கவனித்துக் கொள்ள வர வேண்டிய நர்ஸ் இன்னும் வந்திருக்கவில்லை

போன் செய்த போது, கோடம்பாக்கம் சமீபத்தில் வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்.

டிராபிக் ஜாம் சார்.. அதான் லேட்டாகுது.. பஸ் நகர மாட்டேங்குது சார்

என்னங்க எத்தனை தரம் சொல்லிருக்கேன்.. ஆட்டோ புடிச்சு வாங்க.

நர்ஸ் வருவதற்கு எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகிவிடலாம்..

தானே டியூப் ஃபீடிங் செய்வதாக என் மனைவி சொல்லி, அப்பாவுக்கு மூக்கு வழியே பொருத்தப்பட்ட குழாய் வழி அந்த திரவ உணவினை வார்த்தாள். அப்பாவின் வயிற்றில் அது சென்று விழும் சப்தம் தெளிவாகக் கேட்டது.

அளவுக் குவளையில் இருந்த உணவு முழுவதும் மூக்கு வழி சென்று முடிந்தது

நான் அப்பாவின் கால்பக்கத்தில் நின்று கொண்டு கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நவம்பர் 20, 2008, இரவு 7.40 அப்பா கடைசி மூச்சை இழுத்து விட்டார்

தகனம் முடிஞ்சு வீட்டுக்கு போறதுக்கு முன்னாலே , ஷவரம் செய்துண்டு போகணும்..

வீட்டுல போய் செய்துக்கலாமா

இல்லை வேண்டாம்.. சலூன்லே செய்துண்டு போங்க‌

நானும் என் அண்ணனும், அந்த சலூனின் பக்கத்து பக்கத்து இருக்கைகளில், வெள்ளை ஏப்ரான்கள் போர்த்தப்பட்டு, கன்னங்களில் கத்தி உறவாடிக் கொண்டிருந்த்து

சின்ன வயசில் நான் முடிவெட்டிக் கொள்ள ரொம்பவே அடம்பிடிப்பேன்.. அப்பா என்னை சைக்கிளின் பின்னால் வைத்துக் கொண்டு ஏசியா சலூனுக்கு கொண்டு போவதற்குள் அழுது
அழுது சட்டைக் காலர் நனைந்திருக்கும்.

அன்றைக்கு சாயங்காலம் க்ருஷ்ணபவன் ஹோட்டலில் இட்லி வாங்கித் தருவாதாக அப்பா சத்தியம் செய்தபின்பு தான் தான் சலூன் நாற்காலியிலேயே உட்காருவேன்..

வாசலில் கால் அலம்பிக் கொண்டு வீட்டிற்குள் வந்தேன்.

ராத்திரிக்கு இட்லி..

ஹாலின் மூலையில் ஒரு விளக்கு வைத்திருந்தார்கள்.. அதன் முன்பு ஒரு தட்டும் அதில் இட்லி ஒன்றும் இருந்தது

நாளைக்கு இந்த வருஷத்தின் நவம்பர் 20.

3 comments:

Geetha Sambasivam said...

ஆழ்ந்த இரங்கல்கள். :(

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

மதுரை வந்து சென்ற பின்னர் - சென்னையில் அப்பாவின் நினைவு வந்து ........ அவர் வாங்கித் தரும் இட்லி நினைவிற்கு வந்து - ........... அவர் இவ்வுலகை வீட்டுப் பிரிந்த நாள் நினைவிற்கு வந்து ....... என்ன மறு மொழி இடுவது மௌளி ......

Anonymous said...

en fatherkum edhe poll dan maranam erpathadhu, en manam kanathuvittadhu,