Wednesday, 6 April 2011

ஏப்ரல் 13

ஏப்ரல் 13 . மிக முக்கியமான நாள்.. இங்கே தேர்தல் நடக்கவிருப்பதால் சொல்லவில்லை. இதே ஏப்ரல் 13 1919 .. ஜாலியன் வாலாபாக்..

வாக்களிக்க செல்லும் முன்பு அந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை ஒரு நிமிடமாவது நினைக்க வேண்டும்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணமாக தாகூர் தனக்கு வழங்கப்பட்ட KnightHood பட்டத்தை துறந்தார்

அப்போது வைசிராய் அவர்களுக்கு தாகூர் ஒரு கடிதம் எழுதினார்

"The time has come when badges of honour make our shame glaring to their incourageous context by humiliation, and I for my part, wish to stand shorn of all special distinction by the side of those my countrymen who for their so-called insignificance , are liable to suffer
degradations not fit for human beings and these are the reasons which have painfully compelled me to ask Your Excellency with due deference and regret, to release me of my title knighthood"

பிரிகேடியர் ஜெனரல் டயர் ஆணைக்கு இணங்க நடந்த அந்த கொடூர சம்பவத்தை அப்போதைய பஞ்சாபின் லெப்டினட் கவர்னர் மைக்கேல் ஓட்வையர் சரிதான் எனச் சொன்னது தான் கொடூரத்தின் உச்சம்

ஒட்வைர் vs நாயர் எனும் புகழ் பெற்ற வழக்கிலே ஹௌஸ் ஆஃப் லார்ட்ஸ்ம் நீதிபதி மெக்கார்டியும் டயர் செய்த்தது சரிதான் என சொல்லிவிட்டார்கள்

ஆனால் ப்ரிடிஷ நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்கிவித் இந்த சம்பவம் நாட்டின் மிக கொடூரமான மனிதாபிமானமன்ற செய்கை எனச் சொன்னார்

ஓட்வயரின் செய்கையைனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நாயர் : சேட்டூர் சங்கரன் நாயர். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குறைஞராகவும் பின்னர் நீதிபதியாகவும் இருந்தவர்

பஞ்சாப் பல்கலைக்கழகம் ஏப்ரல் 13 , 1969 அன்று ஒரு ஆய்வு அறிக்கை வெளியிடுகிறது (ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 50 ஆண்டுகள் கடந்து) அதில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கான திட்டம் லாகூரில் ஏப்ரல் 8, 1919 அரசு மாளிகையில் ஓடைவயர் முன்னிலையில் பல ப்ரிடிஷ் அதிகாரிகள் முன்னிலையில் தீட்டப்பட்டது எனவும் அதை baishakshi day எனும் நாளில் நிகழ்த்தினால் பஞ்சாப் முழுவதும் பயம் விளைவிக்க ஏதுவாகும் எனவும் விவாதிக்கப்பட்டது என சொல்லப்பட்டுள்ளது

இந்த ஓட்வயர் உத்தம் சிங் எனும் இந்திய இளைஞரால் சுட்டுக் கொல்லப்பட்டான்

அதற்காக தூக்கிலிடப்பட்டான்

உத்தம் சிங் பெயரில் உத்ரகாண்ட் மாநிலத்திலே ஒரு மாவட்டம் இருக்கு

அம்மாவட்ட நிர்வாகத்தின் சுட்டி

http://usnagar.nic.in/

Sunday, 3 April 2011

கூடுமாயில் பிரமசரியம் கொள்


மதராஸ் பட்டணத்தை சுற்றிப் பார்க்கவென வரும் வெளியூர் ஜனங்கள் தப்பாமல் வரும் இடம் எக்மோர் ம்யூசியம் கட்டிடம். பக்கத்தில் இருக்கும் கன்னிமரா நூலகத்திலே புத்தகம் யாசித்துப் பெற்று திரும்பினேன். வாகன நிறுத்துமிடத்தை நெருங்கின போது,

"ஓய் இங்கே வாரும் என 'அதட்டல்'" கேட்டது. வலப்புறம் திரும்பிப் பார்த்தேன். அங்கே தூரத்தில் முண்டாசு.

"உங்களுக்கு மூக்கு வேர்ப்பது எனக்கு புதிததல்ல"

"அது சரி பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே, என பட்டினத்துப் பிள்ளை சொன்னதைப் படித்திருப்பீரே"

"அது தான் நான் என்ன யோசித்திருந்தேன் என யூகித்து விட்டீர்களே"

" நீர் யூகித்ததும் யூகித்த வழி போய் உத்திரம் காணாது குழம்பியதும் தெரிந்த பின் மேலுலகில் என்ன வேலை என இங்கே வந்து விட்டேன். தென்னந்தோப்பும், கிணறும் கேட்டு பாட்டுக் கலந்திடவென் பத்தினிப் பெண் எனத் தானே கேட்டேன்
வெறுமனே பெண் எனக் கேட்டிருந்தால் இன்றைக்கு இன்றைக்கு நாகரீகக் கேடாக இளைஞரும் யுவதியும் களிப்பு என்ற பெயரில் கலாச்சார சீரழிவு செய்வதற்கு ஒப்பாக ஆகியிருக்குமே"

"எல்லாம் சரிதான் ; நேரடியாகவே பாடலுக்கு வருகிறேன்.

கூடுமாயில் பிரமசரியம் கொள்.
கூடுகின்றிலதெனில் பிழைகள் செய்து
ஈடழிந்து நரக வழிச்செல்வாய்
யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண்

இது தான் எனக்கு ஐயம் தந்த பாடல். கலியாணம் செய்து பிள்ளைகள் பெற்ற தகப்பன் எழுதும் பாடலா இது"

" ஹோ ஹோ ஹோ !!!!!! பராசக்தி பராசக்தி...இது தானா உமது ஐயம்"

"சிரிக்காமல் விஷயத்துக்கு வாருங்கள்"

" வீடு உறா வணம் யாப்பதை வீடு என்பர்
மிக இழிந்த பொருளை பொருள் என்பார்
நாடும்கால் ஓர் மணமற்ற செய்ய செய்கையை
நல்லதோர் மணம் ஆமென நாட்டுவார்

இப்படி நாட்டுவார்களை குறித்து பாடிய பின் தான் இம் மணம் என குறிப்பிட்டு உரைத்தேனயல்லாது பொதுவில் மணம் செய்யாதே எனவா பாடினேன்"

" நான் உங்களை நமஸ்கரிக்கிறேன். என்னை ஆசிர்வாதம் செய்யணும்"

சாஷ்டாங்கமாக விழுந்தேன்.

முண்டாசு பாடினான். பாடினான். பாடியபடியே விண்ணளவு உயர்ந்தான்.

அப்படியே சொல்லிவிட்டேன் ஐயோ திருவுளத்தில் எப்படி நீர் கொள்வீரோ யானறியேன்.. ஆரியரே

காதலருள் புரிவீர் காதல் இல்லையென்றிடிலோ சாதல் அருளி தமது கையாற் கொன்றிடுவீர் எனக் குயிலும் எனது கையில் வீழ்ந்தது காண் !!!!!!

என் கண்ணிலிருந்து மறைந்தான்

Saturday, 2 April 2011

ராயர் மெஸ்‍- சாரு நிவேதிதா


நான் சாருவை எதிர்த்தே எழுதுவதாகவும் ஏன் என்றும் "அன்புடன்" என்னை அவரின் அபிமானிகள் விசாரிப்பதால் இந்தப் பதிவை எழுதியே தீருவது எனத் தீர்மானித்து விட்டேன்

அது ராயர் மெஸ் . சுமார் எழுபது வருடங்களுக்கு மேலாக இயங்கி வருது. முன்பு கச்சேரி ரோடு போலிஸ் ஸ்டேஷன் சமீபத்தில் இருந்தது. இப்போது அருண்டேல் தெருவில் இயங்குது. போஸ்டாஃபீஸ் சமீபம்

தொபே எண் : 24670519 உரிமையாளர்கள் மோகன், குமார் ., மொபைல் எண் 9382118126
No 13/1, Near Kutchery Road Post Office, Arundale Street, Mylapore, Chennai - 600004

உரிமையாளர்களின் போட்டோவை இங்கே தந்திருக்கேன்

ஒரு சரித்திர ஆராய்ச்சிக்கு உதவிய‌ திருப்தியோடு நிறைவு செய்கிறேன்

சக பயணி- 2


நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் என் சட்டை பாக்கெட்டில் இருந்த பேனாவைப் பார்த்துக்

கொண்டிருந்தார். அந்த பேனாவில் காந்தியாரின் உருவம் பதித்திருந்தார்கள்

" சார் இந்தப் பேனா எனக்கு நான் பணியாற்றிய அலுவலகத்தில் எனக்கு அன்பு பரிசாக வழங்கியது. காந்தி குறித்து நீங்கள் என்னிடம் வினவியதற்கு இந்த பேனா காரணமாக இருக்கும் என யூகிக்கிறேன்"

" உங்கள் யூகம் மிகச் சரியானது. இது போன்ற பரிசுகளில் பெரும்பாலும் சாமி படங்கள் மதப் பெரியவர்களின் படங்கள் இருக்கும். முதன் முறையாக காந்தி படம் பதித்த கிஃப்ட் பேனாவைப் பார்க்கிறேன். உங்களுக்கு காந்தியின் மீது ஈடுபாடு இருக்கும் பட்சத்தில் தான் இப்படி வைத்துக் கொண்டிருக்க முடியும் என யூகித்து உங்களிடம் அப்ப்டி ஒரு கேள்வி கேட்டேன். நீங்கள் பதிலுக்கு என்னைக் கேள்வி கேட்டதால், உள்ளுக்குள் விஷயங்களை கோர்வைப்படுத்திக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன். அதுவுமல்லாது காந்தி சிற்சில விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தாலும் பொதுவில் He is a symbol of good அதனால் உங்கள் மேல் ஒரு நல்மதிப்பு வரும் அதற்காக இதை வைத்துக் கொண்டிருக்கலாம் எனவும் யோசித்துக் கொண்டிருந்தேன்"

"நல்லது சார். நான் உங்களை பதிலுக்கு கேள்வி கேட்டது என்னை நான் தயார் செய்து கொள்ள ஒரு சிறிய அவகாசம்; நீங்கள் யூகம் என சொன்னதை நான் மித் (Myth) என சொல்வேன்.. எனது கருத்து இந்த விஷயத்தில் மிகவும் காரமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு என் வருத்தங்கள் ஆனால் என் கருத்துக்கான விளக்கம் சொல்ல நீங்க்ள் எனக்கு அனுமதி அளிப்பீர்கள் என கருதுகிறேன்"

"தாரளமாக சொல்லுங்கள்"

"யூகம் என்றும் அனுமானம் என்றும் சொல்லப்படுபவை ஒருவரின் நம்பிக்கை கட்டமைப்பில் (Belief Structure) ஒரு ஸ்தானம் எனச் சொல்லுவேன்"

"எனக்கு முழுமையாகப் புரியவில்லை சார்"

"ஒருவரின் நம்பிக்கை கட்டமைப்பு Opinions, Desires, Convictions, Values என அடுக்குகள் கொண்டவை என நான் கருதுகிறேன். இதில் கீழடுக்கு ஒப்பீனியன் எனக் கொண்டால் மேலான அடுக்கு வேல்யூஸ் என பொருள் கொள்ள் வேண்டும்."

"இதை இந்த தருணத்தில் ஏன் சொல்கின்றீர்கள் என தெரிந்து கொள்ளலாமா"

"சொல்கிறேன் சார். காந்தி படம் வைத்துக் கொண்டால் அது நல்லவர் எனும் அடையாளத்துக்கு உதவும் என நீங்கள் யூகிப்பதாக சொன்னீர்கள் அல்லவா. அதன் பொருட்டு இதைச் சொன்னேன்"

"ஆம் அப்படித்தான் யூகித்தேன். இப்போது கோர்ட் ஹாலில் எல்லாம் காந்தி படம் மாட்டப்பட்டுள்ளது. எதற்க்காக ? இங்கே நல்லது நடக்கும் ; உண்மை இருக்கும் என ஒரு உணர்வைத் தோற்றுவிப்பதற்க்காக. அது மட்டுமல்லாது அவர் தேசப் பிதா எனும் அடையாளம் பெற்று விட்டார் என்பதற்க்காவும்; He is mere a convention there என்பது என் எண்ணம்”


"மிக எளிமையாக அல்ல அல்ல மிக சாதாரணமாக சொல்லிவிட்டீர்க்ள். இதில் எனது கருத்தினை பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். எனக்கு உதவியாக இருக்கும் என கருதுவதால் எனது மடிக் கணிணியை உயிர்ப்பித்து உபயோகித்துக் கொள்ளலாமா"

"தாரளமாக சார்.. அதற்கு முன்னால் ஒரு கப் காஃபி அருந்தலாமா"

"செய்யலாம். நான் காஃபியில் சர்க்கரை சேர்த்துக் கொள்வதில்லை.. இதோ காந்திக்கு மீண்டும் வருகிறேன்

உண்மை என்பது வெறும் பொய் தவிர்ப்பது எனும் நிலையில் காந்தியார் இருக்கவில்லை. அதை எப்போதும் தவிர்ப்பது எனும் நிலையில் இருந்தார். நீங்கள் இராகவன் நரசிம்மன் அய்யர் என்பவர் குறித்து அறிந்திருப்பீர்கள்... ?"

"இல்லை சார்"

"இராகவன் அய்யர் எழுதிய The Moral and Political Thought of Mahatma Gandhi நூலில் காந்தியாரை மேற்கோள் காட்டி சொல்லியதை சுட்டினால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்

As truth is the sbstance of morality , man is a moral agent only to the extent that he embraces and seeks the truth. By truth is not merely meant the absstention from lies, not just the prudential conviction that honesty is the best policy in the long run , but even more that we must rule our life by this law of truth at any cost. We must say No when we mean NO , regardless of the consequences

இதில் நீங்கள் ஒன்றைக் கவனிக்கலாம். உண்மை உரைப்பது என மேலோட்டமாக இல்லாமல் உண்மையை தேடுவது என ஆழமாக் சொல்லப்பட்டிருக்கின்றது. இப்படியான தேடலினால் தான் காந்தியார் படம் நீதிமன்ற கூடங்களில் மாட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்"

"காந்தியாரே ஒரு பாரிஸ்டர்.. ஆனால் அவரால் இப்படி ஒரு உண்மைத் தேடலில் வெற்றி கொள்ள இயன்றதா "

"நீங்கள் காந்தியாரை கருப்பு அங்கி அணிந்து கொண்டு. கட்சிக்காரரை சட்டத்தின் பார்வையில் இருந்து காப்பாற்ற அல்லது சட்டத்தின் பார்வையில் வேண்டும் எனும் அளவுக்கு நிவாரணம் பெற்றுத் தரும் வக்கீல் / பாரிஸ்டர் அளவில் பார்த்தீர்கள் என்றால் இந்த சங்கதியினைப் புரிந்து கொள்வதில் சற்று சிரமம் இருக்கும்"

"ஓ அப்படியா .. வேறு எப்படி புரிந்து கொள்ள வேண்டும்"

"மேலும் தொடர்வதற்குள் இதோ காஃபி வந்து விட்டது.. அருந்திய பின் தொடரலாம்"

(பயணம் தொடரும்)

Wednesday, 30 March 2011

சக பயணி-1

சுமார் 400 கி.மீ தூரத்தை பகல் நேரத்தில், இரயில் பயணத்தில் அதுவும் கோடை தொடங்கிய நேரத்தில் பயணித்துக் கடக்க வேண்டிய சந்தர்ப்பம். சக பயணிகள் இது மாதிரியான தருணங்களில் பொழுது போக்க மிகவும் உதவுவார்கள். கையில் வைத்திருக்கும் வார, மாத சஞ்சிகைகள், நாளிதழ்கள் கைமாறும். அரசியல், சினிமா, சமூக அவலங்கள், சமூக அக்கறைகள் என உரையாடல்களும் களம் மாறி மாறி நேரம் நழுவும்.


மிக அருகில் அமர்ந்திருக்கும் ஒரு சக பயணி சமூகம் சார்ந்த அவரது கருத்தை நிறுவிடவும், நாம் அதனுடன் ஒத்துப் போவதும் இல்லை முரண்படுவதுமாக பல சமயம் இலக்கில்லாது., பற்பல சந்தர்ப்பங்களில் உரையாடும் கருத்துக்கு நம் தரப்பிலோ அல்லது அவர் தரப்பிலோ வலுவற்ற சான்றுகள் ஏதுமே இல்லாது உரையாடல் அந்த இரயில் வண்டியை விட வேகமாக பயணிக்கும். முரண்பட்ட கருத்துக்களே ஆயினும் இருவருக்கும் இடையே ஒரு மெல்லிய கண்ணியம் ஒட்டிக் கொண்டிருக்கும். அது ஒருவரை ஒருவர் முதன் முறை அறிந்துள்ளோம் என்பதால்.

எனக்கு இப்படியான பயணத்தில் வாய்த்த சக பயணி., அந்தப் பயணம் முழுமைக்கும் ஒரே சங்கதியைப் பற்றி உரையாடி வந்தது எனக்கான ஆச்சரியம். அவருக்கு 70 வயது கடந்திருக்கும் ஏன் 80 கூட இருக்கலாம். பாசஞ்சர் லிஸ்டில் பார்த்திருந்தால் தெரிந்து இருக்கும்.. அவர் தான் உரையாடலைத் தொடங்கினார்

“உங்களுக்கு காந்தியக் கொள்கைகள் மீது நம்பிக்கை இருக்கின்றதா”

நான் இந்தக் கேள்விக்கு எப்பவுமே உற்சாகமாக ஆமாம் என தலையாட்டி விடுவேன் அன்றைக்கு என்னவோ பதில் கேள்வி கேட்டேன்

“காந்தியக் கொள்கைகள் என திட்டவட்டமாக எதைச் சொல்லுகின்றீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா”

(பயணம் தொடரும்)

Tuesday, 29 March 2011

தேசிகனுக்குப் போட்டியாக

தலைப்பைப் பார்த்து விட்டு அவர் என்னவோ தேர்தலில் போட்டியிடுவது போலவும் நான் அதே தொகுதியில் மனு தாக்கல் செய்திருப்பது போலவும் அர்த்தம் செய்ய வேண்டாம்

பல நாள் முன்பு தேசிகன் மாயாஜாலக் கட்டம் என அவருடைய வலையில் வேதாளம் மூலமாக சொல்லியிருந்தார் http://desikan.com/blog/?p=213

அதே போல் இன்னொன்னு அமைக்க இயலுமானு கேட்டிருந்தார்

ஒன்றென்ன இரண்டு அமைத்து விட்டேன் தேசிகன்.



8

19

18

25

15

5

12

11

22


Eight (5)

Nineteen (8)

Eighteen (8)

Twenty five (10)

Fifteen (7)

Five (4)

Twelve (6)

Eleven (6)

Twenty two (9)





118

122

105

102

115

128

125

108

112





One hundred and eighteen (21)

One hundred and twenty two (22)

One hundred and five (17)

One hundred and two(16)

One hundred and fifteen(20)

One hundred and twenty eight(24)

One hundred and twenty five(23)

One hundred and eight(18)

One hundred and twelve(19)









Monday, 28 March 2011

யார் மாதிரி ஆளுக்கு ஓட்டுப் போடணும்


காமராஜருக்கு நிகரான தொண்டுள்ளமும், நேர்மையும், கண்ணியமும், தேசப் பற்றும் , எளிமையும் உள்ளவரா உங்களிடம் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர் என சிந்தியுங்கள். இல்லையெனில் நிராகரியுங்கள்.

Saturday, 26 March 2011

துக்ளக் 30 மார்ச் 2011


பொங்கரில் நுழைந்து வாவிபங்கயம் துழாவி
பைங்கடி மயிலைமுல்லை மல்லிகைப் பந்தர்தாவி
கொந்தலர் மணம் கூட்டுண்டு குளிர்ந்து
மெல்லென்று தென்றல் அங்கங்கே கலைகள்தேரும்
அறிவன்போல் இயங்கும் அன்றே'


இந்த திருவிளையாடல் புராண பாடலுக்கும் இந்தப் பதிவின் தலைப்புக்கும் என்ன தொடர்பு இருக்கும்

பாடல் ஓர் அறிவன் எப்படி அறிவைத் தேடுவான் என்பதைக் குறித்து. தென்றல் எப்படி பல மலர் வாசனை , குளத்தின் குளிர்ச்சி இதெல்லாம் தேடி வந்து வீசுதோ அது போல அறிவன் இயங்குவான். இது அறிவனுக்குப் பொருந்தும்.

அதாவது தேடிப் பெறுவது

கூகிளில் தேடிக் கிடைக்கவில்லை என சாருநிவேதிதா துக்ளக்கில் சொல்லியிருக்கிறார்

என்ன கிடைக்கவில்லையாம். இதோ 1983 ம் வருடம் மறைந்த வைணவப் பெருந்தகை பிரதிவாதம் பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் பற்றிய விபரம் கிடைக்கவில்லையாம்.. அதற்கு இரண்டு நாள் சிரமப்பட்டதாக வேறு சொல்லியிருக்கிறார்

இதோ இந்த சமீபத்திய காலத்தில் மறைந்த ஒருவரின் விபரம் கிடைக்காமலா போகும்.. கூகிளில் நீங்கள் என்ன தேடுவீர்களோ அது தான் கிடைக்கும் என என் நண்பர் நலம் பெறுக அடிக்கடி கூறுவார்.

இந்த சுட்டியில் அன்னார் ஜூன் 21 1983 அன்று திருநாடு ஏகினார் எனும் தகவல் முதல் தேடலிலேயே கிடைக்கிறது


http://www.acharya.org/acharya/pba/Vaibhavam-PBA-TSR.htm

அன்னார் 1207 புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என மிகத் துல்லியமாக தேடித் தகவல் பெற இயன்றவருக்கு அன்னார் பிறந்தது, இறந்தது தேதி விபரங்களை தேடிப் பெற முடியவில்லையா ? ஆச்சரியம் தான்

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் அவர்களின் பேட்டி மார்ச் 1979 கீதாச்சாரியான் இதழில் வெளியாகியிருக்கிறது. துக்ளக்கில் சாருவின் கட்டுரையில் காணப்படும் தகவல்கள் அங்கே முழுவதும் இருக்கு

http://thiruvonum.wordpress.com/2010/11/01/an-interview-with-pba-swamy-1979/

எங்கே கிடைக்கும் அரிய பொக்கிஷம் என வேறு கேட்டிருக்கிறார். ரொம்ப தேடிக் களைத்தவருக்கு உதவிட வேண்டாமோ

http://www.maransdog.org/document/

இந்த சுட்டியில் டிசிஏ வெங்கடேசன் ஸ்வாமி என்பவர் தொகுத்திருக்கிறார் பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரின் வியாக்கானங்கள் அனைத்தும் இங்கே பிடிஎஃப் கோப்பாக கிடைக்கிறது

இந்த சுட்டியில் உள்ள ஓர் உப சுட்டியில் அண்ணங்கராச்சாரியாரின் சுயசரிதை (அவரது மொழியில் தன் சரிதை) சுமார் 23 எம்பி அளவில் பிடிஎஃப் கோப்பாக இலவச டௌன் லோடுக்கு கிடைக்கிறது

இந்த சுய சரிதை 1956ல் முதல் பதிப்பாகவும் 1970 ல் மறு பதிப்பாகவும் வந்திருக்கிறது

உப சுட்டி :http://www.maransdog.org/doc/VEDICS/TSS-PBA.zip

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரை குறித்து எழுத ஆசை எனச் சொல்லியிருந்தால். துக்ளக் ஆசிரியர் சோ. இராமசாமி அவர்களிடமே நிறைய குறிப்புதவிகள் கிடைத்திருக்கும்

இந்து மஹா சமுத்திரம், மஹாபாரதம் பேசுகிறது, வால்மீகி இராமாயணம் என நூல்களில் பல ரெபரென்ஸ் மூலம் தனது அத்தாரிட்டேட்டிவ் ரைட்டிங்கை மீண்டும் நிரூபித்திருக்கும் திரு சோ. ராமசாமி தனது பத்திரிக்கையில் வெளிவரும் ஒரு கட்டுரையின் தரம் குறித்து கவலைப்ப்டமாட்டாரா. அப்படி ஒரு கட்டுரை மிகவும் சரியான தகவல்களுடன் இருக்க வேண்டும் என நினைக்க மாட்டாரா ?

கண்டிப்பாக நினைப்பார் என நம்பிக்கை கொள்கிறேன்.

இந்தப் பதிவு குறித்த தகவலை அவருக்கு மின்னஞ்சல் செய்கிறேன்

Tuesday, 22 March 2011

34TH BOOK FAIR -CHENNAI - PART 5


சரித்திரம் புத்தகங்கள் வழியாக அறியப்படுவதை விட சினிமாவின் வழியாக அதிகம் அறியப்படுகிறது. விஷுவல் மீடியாவுக்கு இருக்கும் பலம். அதிலே சொல்லப்படுவது மிகைப்படுத்தலானாலும்., சரிவர சான்றுகள் சரி பார்த்து காட்சிகள் அமைக்கப்படாவிடினும் அல்லது சினிமாவுக்கான வியாபார நோக்கத்தில் செய்யப்படும் சமரசங்களில் சரித்திரம் திரிந்து போகவும் வாய்ப்புண்டு.. ஆனாலும் சரித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர்கள் அதற்கான முத்திரையைப் பெற்று விடுகிறார்கள்

நான் அரசு சார்ந்த பணியில் இருந்த காலம். எங்கள் துறையின் தலைமை நிர்வாக அலுவலரின் மாமனார் இசபெல் மருத்துவமனையில் குடல் நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை நடந்திருந்தது. அவரைப் பார்ப்பதற்காக நான் சென்றிருந்தேன். அவர் திரைப்படத் துறையில் புகழ் பெற்ற ஸ்டில் போட்டாகிராபர் ; ஸ்டில் சாரதி.. சிவாஜி , எம்.ஜி.ஆர் காலத்து திரை ஆசாமி

அவரைக் காண தயாரிப்பாளர் பாலாஜியும் வந்திருந்தார். சாரதி அவர்கள் என்னைக் காட்டி பாலாஜியிடம், " சார் சிவாஜி சாரின் பரம ரசிகர் " என அறிமுகம் செய்து வைத்தார்

நான் பாலாஜியிடம் ஒரு சம்ப்ரதாயக கேள்வி கேட்டேன், " நீங்க நடிச்சதிலேயே உங்களுக்கு பிடிச்ச கேரக்டர் என்ன?"

"கப்பலோட்டிய தமிழனில் வாஞ்சிநாதன் காரக்டர்'

வாஞ்சிநாதன் இத்தனை குண்டாக இருந்திருப்பாரா என்ற என் சந்தேகம் ரொம்ப நாள் கழித்து தீர்கிறது

காலச்சுவடு பதிப்பகம்‍ ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும் எனும் புத்தகத்தால்

இந்தப் புத்தகம் வாங்க மேற்சொன்ன நிகழ்ச்சி மட்டும் காரணமல்ல.

ஆஷ் படுகொலையினை பாரதி ஒரு தனிமனித கொலையாக கண்டு வெறுத்தான் என்பதும் தான். அது எனக்கு உடன்பட்ட கருத்தும் தான்

இது குறித்து பாரதி ஒரு நீண்ட ஆங்கிலக் கட்டுரை எழுதியிருந்தான். அதனை முன்பே படித்திருக்கிறேன். அது இந்த நூலில் மிகச் சிறப்பாக பதியப்பட்டுள்ளது

பாரதி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதியுள்ளார் என்பதை ஒரு ரிலவன்ட் ரெஃபெரென்ஸாகத்தான் இங்கே குறிப்பிடுகிறேனேயல்லாது சர்வதேச அளவில் விருது வாங்க ரொம்ப சீரியசாக கனவு கண்டு கொண்டிருப்போரின் பொது அறிவு குறித்து நான் மறைமுகமாக ஏதும் குறிப்பிடவில்லை எனத் தெளிவு கொள்க‌

ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் என்ற ஆக்கத்திற்காக நான் அதன் ஆசிரியர் திரு ஆ. சிவசுப்ரமணியன் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாகிறேன்.

இது போன்ற ஆக்கங்களில் எத்தனை எளிமை கை கூட வேண்டுமோ அத்தனை எளிமையினையும்., எத்தனை கட்டுக் கோப்பு அவசியமோ அதனையும் சேர்த்து கொடுத்துள்ளார். சான்றுகளை மிகக் கோர்வையாக வரிசைப்படுத்தி தந்துள்ளார்

இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். பேசும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை சென்ற போது எனது நண்பர் மு. பாண்டியன் என்னை ஆஷ் துரையின் கல்லறைக்கு அழைத்துச் சென்ற சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டேன்.

இங்கே நான் தந்துள்ள படம் ஆஷ் கல்லறையின் படம்

அந்த கல்லறை அமைந்துள்ள தேவாலயத்திற்கு Christ Church என பெயர் இருந்தாலும் அது இங்கிலீஷ் சர்ச் என்றே அழைக்கப்படுகிறது

அங்கே இன்றளவும் ஆங்கிலத்தில் தான் சர்வீஸ் நடக்கிறது என்ற தகவலை திரு. சிவசுப்ரமணியன் சொன்னார்.

எனது பள்ளிக் காலத்தில் எங்கள் பள்ளிக்கு பக்கத்து வீட்டில் தான் வ.உ. சிதம்பரம் அவர்களின் புதல்வர் திரு வாலேசுவரன் வசித்தார் எனச் சொல்லி அப்போது பள்ளிப் பருவம் ஆதலால் அவருடன் உரையாடி வ.உ.சி அவர்களைக் குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்திருக்கவில்லை என சொன்னபோது,

"நீங்கள் அதிகம் ஒன்றும் தவறவிடவில்லை . வ.உ.சி மறைந்த போது திரு. வாலேசுவரன் அவர்கள் மிகவும் இளம் பிராயத்தவர்தான்" என்ற யதார்த்தத்தையும் சொன்னார் திரு .சிவசுப்பிரமணியன்

நான் இந்தப் புத்தகத்தை அதிகம் சிலாகித்துக் கொண்டே பின்னட்டையினைக் கவனித்தேன்.

சரித்திர சான்றுகளைச் சார்ந்த புனர்நிர்மாணம் என்ற அறிவுலக ஒழுக்கத்திற்கு இது ஒரு அபூர்வ உதாரணம். முன்னெண்ணங்களிலிருந்து முற்றாக பெற்ற விடுதலையும் விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சியில் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்ட உதாரணம்

இப்படி சொல்ல வேறு யாரால் முடியும் .. சாட்சாத் சுந்தர ராமசாமி தான்

Saturday, 19 March 2011

பக்கம் பக்கமாய் 5


எனக்கு "அ"னாவுக்கும் ராசி அதிகம். இந்த ராசியில் அநிருத்தன்,அனானிமஸ் கமென்ட்டர்கள், அனாமதேயங்கள் போன்றவையும் அடக்கம். கவனிக்க இங்கே.

இதல்லாமல் "அ"னாவோடு அற்புதம், அம்சம், அட்டகாசம் என்பதான சுபச் செய்திகளும் உண்டு.. இந்தப் பதிவு சுபச் செய்தி குறித்து.

எப்போதோ அங்கும் இங்குமாய் வாசித்து அனுபவித்த அசோகமித்திரன் அவர்களின் கட்டுரைகளின் அருமையான தொகுப்பு . இது இரண்டாம் பாகம். முழு தொகுப்பையும் இங்கே சிலாகித்துக் கொண்டிருந்தால்.. அதற்கு மட்டுமே நேரம் முழுமையும் தேவைப்படும்.

சில சில இடங்களைத் தொட்டுக் காட்டினால் படிப்பார்வம் உள்ளவர்க்ள் தேடிப் போய் வாங்கி வந்து படித்துவிடுவார்கள்..

மிகத் தீவிரமான சங்கதிகளைக் கூட எளிமையாகச் சொல்ல இயலும் என்பதற்கு அசோகமித்திரன் அவர்கள் ஒரு எடுத்துக்காட்டு.. இன்னும் அழுத்தமாகச் சொல்லப்போனால் தீவிரம் என்பதாக சிலர் ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எளிமையாகத் தான் சொல்லவேண்டும் என்பது அவர் மறைமுகமாக உரைக்கும் சங்கதி

வில்லியம் ஃபாக்னர் குறித்த கட்டுரையில்

ஃபாக்னர் இறுதி வரையில் தம்முடைய நாவல்களில் குரூரமும் விபரீதச் சேர்க்கையும் பாப உணர்ச்சியும் பயங்கரமும் திசையற்ற மனநிலையும் பற்றியே அதிகம் எழுதினார். ஆனால் மிகவும் சூட்சுமமான பார்வை கொண்டு மனித வாழ்கையின் அடித் தளத்தையே பிரதிபலிக்க எழுதினார் என்பதும் எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடியது. மனிதப் பிறப்பின் அபத்த நிலையும், இன்றைய சூழ்நிலையை எதிர்க்க சக்தியற்றவனாக மனிதன் இருப்பதுவும் தான் அவர் எழுதியதன் சாரம் என்பார்கள் (The absurdity of the human condition and moder man's inability to cope with existence)

விமர்சனம் எழுதுவதற்கு முன்பு நிறைய உழைக்க வேண்டும் என்பது என் சித்தாந்தம். தகவல்கள் அளவிலும் . கோணம், பர்சப்ஷன் என்பதிலும் ஒரு தேர்ந்த வாதத்தின் கல்யாண குணங்கள் கொண்டு விமர்சனத்தில் ஸ்ருதி கூட வேண்டும். இதில் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை என ஒரு பிடிவாதம் வைத்திருக்கிறேன்.

நான் படித்த ப்ரேமித்த விமர்சனங்களில் க.நா.சு அவர்களுடையதை முதன்மையானதெனச் சொல்லலாம்

க.நா.சு அவர்கள் குறித்த அசோகமித்திரன் அவர்களது கட்டுரைகளிலிருந்து சில வரிகளைக் கவனிக்கலாம்.

அவர் அறிவுபூர்வமாக தன் கணிப்புகளை எடுத்துக் கூறுவது அதற்கு மறுப்பு கூற இடமில்லாமல் அவர் வாதங்கள் இருப்பதால் எவ்வளவோ பேருக்கு கோபமூட்டியிருக்கிறது. கோப மூட்டுகிறது


க.நா.சு வின் பரிஷார்த்த முயற்சிகள் குறித்து அசோகமித்திரனின் வரிகள்

எவ்வளவு எளிமையாகவும் ஆழமானதும் என கவனியுங்கள்

ஒருவர் முதன் முதலாக ஏதோ கூறியிருக்கிறார் என்பதால் மட்டும் அது நித்ய சத்யமாக ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை. ஆனால் ஒருவர் எடுத்துக் கூறுவதால்தான் அப்பொருள் குறித்து மேற்கொண்டு பரிசோதனை நடத்த ஒரு தளம் அமைகிறது. ஆதலால் முதன்முதலாக ஒன்றைப் பற்றி ஒருவர் கூறும் கருத்தும் கணிப்பும் முக்கியத்துவமும் மதிப்பும் பெறத்தான் செய்கின்றன‌

கிழக்குப் பதிப்பகத்தை பாராட்டுகிறேன். நேர்த்தியான அச்சு. மிகச் சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழில் இன்டெக்ஸ் அமைத்து புத்தகங்கள் வருவதில்லை. ஆனால் இந்த புத்தகம் மிகச் சிறப்பாக இன்டெக்ஸ் செய்யப்பட்டுள்ளது. ரெஃப்ரன்ஸ்க்கு மிகவும் வசதியாக இருக்கும்.

வெல்டன் கிழக்கு

சுஜாதாவின் கணையாழி கடைசிப் பக்கத் தொகுப்பின் முன்னுரையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் சொன்னது நினைவுக்கு வருகிறது

சுஜாதா இந்தப் பத்திகளில் எத்தனை விதமான பொருள்கள் குறித்தும், ஆளுமைகள் குறித்தும் , படைப்புகள் குறித்தும் பேசியிருக்கிறார் என ஒரு பொருளடைவு தயாரித்தால் அது மிகவும் பிரமிப்பூட்டுவதாக இருக்கும்,


அது போல அசோகமித்திரனின் கட்டுரைகளின் தொகுப்பில் உள்ள இன்டக்ஸைக் கவனிக்கும் போது பிரமிப்பும் மதிப்பும் உண்டாகிறது.