பொது ஜனம் என்ற அப்பாவி எதைச் சொன்னாலும் நம்பிவிடுவான். அவனுக்கும் வேறு வழியில்லை. ஐபிஎல் கிர்கெட் மாட்சுக்கு நடுவே டிவி ஸ்கிரீன் கீழ் மூலையில் இந்த செய்தி எப்படியும் வல இடமாக ஜிலு ஜிலு என ஓடும். பதினேழு ரூபா ஏறிவிடும் என்று எதிர்பார்த்தால் 2 ரூபாயோ 3 ரூபாயோ உசந்திருக்கும். ஆஹா பரவாயில்லை என சமாதானம் ஆகிவிடுகிறோம்.
”லெப்ட் பார்டிகள் விடமாட்டார்கள் பாரேன்” என்று அசட்டுத்தனமாய் நம்பிக் கொண்டு இருக்கிறோம்
பெட்ரோலியப் பொருள் விலையேற்றம் எப்படி ஏன் நடக்கிறது. வித விதமாய் படம் போடுகிறார்கள்
பெட்ரோலியப் பொருள் தாராளமாய் கிடைத்து ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஒரு சங்கம் வைத்துள்ளன. அதாவது OPEC (Organization of the Petroleum Exporting Countries ) அல்ஜீரியா, அங்கோலா, ஈக்வடார், ஐக்கிய அரபு தேசம், இரான், இராக், சௌதி அரேபியா, குவைத், கத்தார், வெனின்சுலா, நைஜீரியா ஆகிய நாடுகள் அங்கத்தினர். இவர்கள் உலக் பெட்ரோலிய உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கை வைத்திருக்கும் கனவான்கள், இவர்கள் தவிர மெக்சிகோ வளைகுடாவில் கொஞ்சம், பழைய சோவியத ரஷ்யா பக்கம் கொஞ்சம் எண்ணெய் வருகிறது.. ஆக எண்ணெய் சாம்ராஜ்யம் OPEC தயவில் தான். ஆனால் இந்த அமைப்பு எண்ணெய் விலை எங்கள் கையில் இல்லை. ஆனால் மூன்றில் இரண்டு பங்கு எங்கள் கையில் இருப்பதால் நாங்கள் நினைத்தால் உற்பத்தியை கூட்டவோ குறைக்கவோ செய்வோம் என சொல்கிறார்கள்.
இந்த மாதிரி திடுக் திடுக் என்று விலை ஏறுவதற்கு எல்லாரும் சொல்லும் காரணம் தேவைக்கு ஏற்ற உற்பத்தி இல்லை.. காசு ஜாஸ்தி தந்தால் எப்படி உற்பத்தி ஜாஸ்தியாகிறது என்று யாரும் கேட்கக் கூடாது.. காசை கையில் ஜாஸ்தி வாங்கிக் கொண்டு தோண்டினால் பூமி மாதா, “சரியான காரியவாதிப்பா நீ.. சமயம் பார்த்து ஜாஸ்தி வாங்கிட்டியேனு” சிலாகிச்சு ஜாஸ்தி எண்ணை தருவாளா என்ன
வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருளை கொஞ்சம் மான்யம் தடவி (பெட்ரோல் லிட்டருக்கு சுமார் 17 ரூபாய் மான்யம்) நமது டெல்லி சர்க்கார் ஜனங்களுக்குத் தருவதாகவும் இனியும் மான்யம் தடவித்தர வழியில்லை.. விலையேற்றம் நிச்சயம் என்று சொல்லிவிட்டார்கள். அதுவும் மே 31ம் தேதி என்று அதற்கு சுப முகூர்த்தம் சொல்லியிருக்கிறார்கள். ஆக 31ம் தேதி பெட்ரோல் பங்குகாரர்கள் ”ஸ்டாக் இல்லை”என்று சின்னதாய் ஒரு காலண்டர் அட்டையில் எழுதி ஏற்கனவே வாங்கிய பெட்ரோலையும் டீசலையும் ஒளித்து வைத்து (பதுக்கி என்று சொன்னால் கோபித்துக் கொள்வார்கள்) ஒரே நாளில் சில ஆயிரங்களை பார்த்துவிடுவார்கள். இந்த பகல் கொள்ளையை ரெகுலேட் செய்ய மத்திய் சர்க்கார் ஒரு துரும்பைக் கூட அந்தண்டை இந்தண்டை நகர்த்தாது..
பின்னே என்ன ஸ்வாமி நாட்டில் இருக்கும் எல்லா பெட்ரோல் பங்குக்கும் பங்க் ஒன்றுக்கு ஒரு ஆள் போட்டு ”இந்தாப்பா உன்னோட பெட்ரோல் பங்கில் இன்னி தேதிக்கு இத்தனை லிட்டர் பெட்ரோல் இத்தனை லிட்டர் டீசல் இருப்பு இருக்கு.. இதெல்லாம் நீ பழைய விலைக்கு வாங்கினாய்.. இதை நீ பழைய விலைக்கு தான் வித்தாகணும்.. இனி புதுசா வாங்ற ஸ்டாக்கைத்தான் புது விலைக்கு விற்கலாம்” என சொல்ல சர்க்காருக்கு எத்தனை சிரமம்; எவ்வளவு ஆள் பலம் வேண்டும்..
இருக்கிற போலிஸ் பூராவும் முக்கியஸ்தர் பந்தோபஸ்துக்கே பத்த மாட்டேங்றது
பொது ஜனத்துக்காக இதை ஏன் செய்ய வேண்டும் ? அவர் தான் எதற்கும் கேள்வி கேட்கப் போவதில்லையே.
சர்க்கார் என்பதே பொது ஜனத்துக்குத்தான் என்று யாராவது சொன்னால்தான் அவருக்கே தெரியும். எல்லா சுமையும் அவர் தலையில்தான். அவர் தான் எல்லா வீக்கத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு சின்ன திறப்பு விழா .. அதில் கலந்து கொள்ள டெல்லியில் இருந்து ஸ்பெஷசல் ஏர்கிராப்டில் வந்து சின்னதாய் ஒரு பொத்தானை அழுத்திவிட்டு அரை பக்க அறிக்கை ஒன்றை இரண்டு தடவை நிமிர்ந்து பார்த்து படித்துவிட்டு போவதற்கு பாதுகாப்பு செலவு உட்பட பல கோடி செலவாகிறது. ”இதெல்லாம் என்னோட காசுப்பா. இப்படி விரயம் பண்றேளே “ அப்படினு என்னிக்காவது பொது ஜனம் கேட்டிருக்காரா.
வெயில், குளிர், மழை காலம் இப்படி எல்லா காலத்திலேயும் பார்லிமெண்டைக் கூட்டிவிட்டு , சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் நடுஹாலில் வந்து நின்று கொண்டு ஹர்த்தால் பண்ணி, ஒத்தி வச்சு முக்கியமான விஷயம் பேசாமலேயே தப்பாமல் அலவன்சு மட்டும் வாங்கிண்டு போறதை டிவில பார்த்துட்டு என்னிக்காவது பொது ஜனம் தலையில் அடிசிண்டுருக்காரா. இல்லை “அதெல்லாம் என்னோட காசு என்னோட காசுன்னு” புலம்பிருக்காரா
இவா அவாளோட சகவாசம் வச்சிண்டு அப்புறம் அவா இவாளோட சகவாசம் வெச்சிண்டானு சொல்லிட்டு திடீர்னு ஆதரவு வாபஸ் ,” வா எலக்ஷன்ல உன்னைப் பார்த்துக்றேன்னு “ சவால் விட்டுட்டு தேமேன்னு இருக்ற பொது ஜனத்துக்கிட்ட ,” இதோ பார்ப்பா கொள்கை பிரச்ச்னையால திருப்பி தேர்தல் வந்துடுத்து இப்ப எனக்கு ஓட்டு போடுனு” வந்து கேக்றப்போ அதையும் நம்பிண்டு காலம் கார்த்தால ஏழு மணிக்கே போய் ஓட்டுப் போட்டுட்டு வர்றாரே பொது ஜனம்; “ஏம்பா இப்படி என் காசைக் கரியாக்றேள்னு” என்னிக்காவது கேட்டிருக்கிறாரா.
”இதோ பாருங்க டீசல் விலை ரெண்ட்ரூவா ஏறிடுச்சு அதனால இனிமே சவாரி குறைஞ்சது 40 ரூபா ஆகும் “ என்ற குரலுக்கு தன்னை பழக்கிக் கொண்டவர்தானே பொது ஜனம்.. “ஏம்பா லிட்டருக்கு 2 ரூபாதானேப்பா ஏறிருக்கு 20 ரூபாய்க்கு வந்த தூரத்துக்கு இன்னிக்கு டபுளாக்கி கேக்றியேப்பானு “ என்னிக்காவது பொது ஜனம் கேட்டிருக்காரா. இல்லை போலிஸ் ஸ்டேஷன் போய், ”இதை என்னனு சித்த விசாரிங்கோனு” பிராது கொடுத்திருக்காரா.
”டீசல் பெட்ரோல் விலையெல்லாம் ஏறிடிச்சி இனிமே கிலோ இத்தனை கொடுத்தாத்தான் கட்டுபடியாகும்” என்று சொல்லும் போதும் ,”ஆஹா பேஷா செய்துடலாம்னு தானே” சொல்றார் பொது ஜனம்.
மிகச் சாதாரணமான பொது ஜனம், கெடு தேதி தவறாமல் வரி செலுத்தி விட்டு சமத்தாய் வீட்டுக்கு வந்து டீவி போட்டுக் கொண்டு சர்க்காரின் எல்லா விழாவையையும் தவறாமல் பார்க்கிறார். “ஏம்பா இந்தாள் இத்தனை கோடி ரூபா வரி பாக்கி தரணும்னு சொல்றாளே.. இவாளுக்கெல்லாம் இப்படி உசந்த அவார்டா தரேளேனு “ என்னிக்காவது சொல்லிருக்காரா
இப்படியும் இன்னும் பலவிதமாயும் அபார சகிப்புத்தன்மை கொண்ட இந்த அப்பாவி பொது ஜனத்துக்காக பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டெர் விலையில் இன்னும் கொஞ்சம் மான்யம் தடவித்தரலாகாதா..
டெல்லியில் நார்த், சௌத் இன்ன பிற பிளாக்குகளில் கோலோச்சும் கோட்டு சூட்டு போட்ட, வெள்ளை வேட்டி சட்டை அணிந்த, ஷெர்வாணி அணிந்த சம்பந்தப்பட்ட இலாக்காக்களில் உசந்த பொறுப்பிலிருக்கும் பெரியோர்களிடம் ஒரு விண்ணப்பம். இப்படி ஒரு சகாயம் நீங்கள் இந்த பொது ஜனத்துக்கு செய்தால் அவர் கொஞ்ச நேரம் நம்ப மாட்டார். அப்புறம் உத்சாகத்தில் தேம்பி தேம்பி அழுவார்.. நம்பிக்கையில்லை என்றால் செய்துதான் பாருங்களேன்