Wednesday, 14 May 2008

ஜெயகாந்தன்
நான் ஒவ்வொரு முறை மதுரைக்குப் போகும் போதும் தவறாமல் சர்வோதய இலக்கியப் பண்ணை புத்தகக் கடைக்குச் செல்வேன். எல்லா முறையும் மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்ட ஜெயகாந்தன் அவர்களின் படைப்பு ஏதாவது வாங்கி வருவேன். அது என்னவோ அவரது புத்தகங்களை அங்கே வாங்கினால் தான் ஒரு திருப்தி வருகிறது. இப்போது சென்னையில் இருந்தாலும் எப்போது மதுரை போய் புத்தகம் வாங்குவோம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன்

முன்னுரை படித்துவிட்டு சில நாட்கள் கழித்துதான் கதைக்குள்ளே போவது வழக்கம். காரணமிருக்கிறது. முன்னுரையில் கதையில் சொல்லாத சொல்ல முடியாத ஆனால் கதை வலுப்பெற சொல்லியே தீர வேண்டிய சங்கதிகளை முன்னுரையில் சௌகர்யமாகச் சொல்லலாம் என “பிரம்மோபதேச ” முன்னுரையில் சொல்கிறார்

பிரம்மோபதேசம் வெளியானது 1963ல். அப்போது அவருக்கு வயது 29. நான் பிறக்கவேயில்லை. நான் பிரம்மோபதேசம் முதலில் படித்தது 1994ல் அதாவது அந்த கதை வந்து 31 வருஷம் கழித்து. அப்போது எனக்குக் வயது 26. முதலில் படித்த போது நான் நினைத்துக் கொண்டேன். இந்த மனுஷன் இதை எழுதும் போது சுமார் நம் வயசுதான்; இவருக்கு மட்டும் இப்படி ஒரு பொறி எப்படி என்ற வியப்பு இன்று வரை சாஸ்வதமாய் இருக்கிறது.. பிரம்மோபதேசத்தில் இந்த வரிகளைப் பாருங்கள்,

“ஒரு சிறந்த மனிதன் தன்னைச் சுற்றி தானே அமைத்துக் கொள்ளும் அந்த வேலிக்குள் வளர்ந்து செழிக்கும் அவனது தனித்துவம் தான் பிற்காலத்தில் சமூகத்தையே ஆள்கிறது. சமூகத்தின் அழுகலிலிருந்து காப்பற்றப்படும் அந்த நெறியே பிறகு சமூகத்தின் சொத்தாகிறது”

ஒருவேளை தன்னைப் பற்றிதான் சொல்கிறாரோ எனத்தோன்றும். பிசகில்லை. ஒவ்வொரு அட்சரமும் அவருக்கு பொருந்தவே செய்கிறது

"ஒவ்வொரு கூரைக்கும் கீழே" யின் முன்னுரையில்

“சென்னை போன்ற வளர்ந்து வரும் தமிழகத்துப் பெருநகரங்களில், கூடி வாழ்தல் என்னும் பெரு நாகரிகத்தின் அடிப்படை போன்ற ஒண்டு குடித்தனக்காரர்களின் வாழ்கையை நான் வியந்து பயின்றிருக்கிறேன்”

அவருக்கு வயசாகிவிட்டது என்று சொல்கிறார்கள். இருக்கலாம். அந்த முறுக்கு மீசை இப்போது வெள்ளையாகிவிட்டது. கேசமும் தான்.

ஆனால் அந்த அகலமான கண்ணாடி அப்படியே. அதானால் அவர் பார்வையும் அப்படியே அகலமாய்த்தான் இருக்கும். அவர் இப்போது Active வாக எழுதுவதில்லை சுமார் 15 வருஷம் ஆகிவிட்டது என செய்தியாகச் சொல்கிறார்கள். லாபம் எனச் சொல்லலாம். பின்னே என்ன அவரை விட்டால் அவர் இன்னும் மெருகுடன் எழுதிக்கொண்டிருப்பார் அவருடன் யார் போட்டி போடுவது. அவர் தானாகத்தான், ”போதும் .. இளம் எழுத்தாளர்கள் கொஞ்சம் பயிற்சி எடுக்கட்டும் ” என எழுதுவதற்கு ரெஸ்ட் விட்டிருக்கிறார். ஒய்வில் இருக்கும் சிங்கத்தை ஆதர்சமாக பாருங்கள். சிங்கம் இப்படி நடக்க்கும், இப்படி கர்ஜிக்கும் என நாமும் கர்ஜிப்பது /நடப்பது எப்படி என பழகிப் பார்ப்போம். சிங்கத்தை சீண்டிவிட்டால் அது மீண்டும் வேட்டைக்கு கிளம்பினால்.. மற்றவர்களுக்கு ஏதாவது மிஞ்சுமா?

ஜேகே சார்... ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து கர்ஜித்து காமிங்க சார்

2 comments:

சி.தவநெறிச்செல்வன் said...

ஜெ.கே யைப்பற்றி எழுதியது, பழய நினைவுகளை கிளறியது. நிஜமாகவே ஒரு சிங்க கர்ஜனை தேவைப்படுகிறது இன்னொரு முறை.

cheena (சீனா) said...

அன்பின் மௌளீ - ஜெயகாந்தனின் புத்தகங்கள் அவ்வளவாக அறிமுகம் இல்லை - நான் புத்த்கம படிக்கும் வழக்கம் இல்லாதவன். சுஜாதா புத்தகங்கள் பல படித்திருக்கிறேன் - 1975 வாகில் ( என நினைக்கிறேன் ) ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு என்ற புத்தகம் தான அவருடையதில் நான் படித்த புத்தகம்.

அவருடைய மருமகன் எனது நண்பர் - பதிவர் - தொழிற்சங்கத் தலைவர் - பாண்டியன் கிராமிய வங்கியில் பணி புரிகிறார்.

நட்புடன் சீனா